ஏணியின் உச்சியை
தொடும் வேளையில்
பாம்பொன்று கொத்தி
சடாரென விழுகிறேன்..
நட்பென்னும்
பரமபதத்தில்
வீழ்வதும் எழுவதும்
உருட்டப்படும் கட்டைகளின்
தாயத்தை பொறுத்தமையும்..
தயங்களும் காயங்களும்
எப்போது விழுமென்று
யாராலும் யூகிக்க
முடிவதில்லை..
வெற்றி பெறவோ
தோல்வியுறவோ
தயாரான நிலையில்
பூச்சியத்திலிருந்து
ஆட்டத்தை துவங்குகிறேன்
மீண்டும்...
உனது காதலின்
எல்லைகள் விரிவடைந்தபடி...
எனது காதலோ
எல்லைக்குள்ளே...
உலகின்
ஒவ்வொரு மூலையிலிருந்தும்
தொடங்கிய உன்
காதல் பயணம்
கரைசேரும் நேரமென்றாய்..
முந்தைய உனது
காதலின் எச்சங்கள்
எனது காதலை
தின்று தீர்க்கிறது...
அறிதலுக்காய்
திறந்திருக்குமென்
ஜனக்குழி
ஒருபோதும் மூடியதில்லை..
உன் வருகை யறிந்து...
நீ
விழுந்தெழுந்த
குழிகள் பற்றி
கவலை இல்லை எனக்கு..
என்னிலும் அதற்கான
தடயங்கள் உண்டு என்பதாலே..