Thursday, 7 April 2011

உறங்கா நகரம் - சமன் செய்யப்பட முடியாத இரவுகளின் துயரம்

உறங்கா நகரம் - வெ. நீலகண்டனின் அற்புதமான பதிவு என்று ஒற்றைவார்த்தையில் தொலைக்காட்சியில் ஒரு படத்திற்கான விமர்சனத்தை சொல்வது போல் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் இதைப் போலான படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் அனுபவங்களே கற்பனைகளை விட உயர்ந்தவை என்ற மனப்பாங்கிலும் இந்நூல் குறித்து சில கருத்துகளை முன்வைக்கிறேன். கற்பனைகளை விட விசித்திரமானவை உண்மை.

இரவுகள் பற்றி எண்ணற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன..
அன்றைய தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் தொடங்கி, அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, மையக்கிழக்கு நாடுகளிலும், தெற்காசியாவையும் சேர்ந்தஎழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள், ஜா.மாதவராஜின் சாலைப்பணியாளர்களின் வாழ்க்கை சாலைக்கே வந்துவிட்ட கொடுமையைச் சொல்லும் ஆவணப்படமான இரவுகள் உடையும், கவிஞர் மதுமிதாவின் படைப்பாளிகளின் இரவு அனுபவங்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட கட்டுரை நூலான இரவு வரையான ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. இத்தனை படைப்புகளும் வித்தியாசமான படைப்புகள் தான். உறங்காநகரமும் வித்தியாசப்பட்டிருக்கிறது. காரணம் சக மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் தனித்துவம் பெறுகிறது.

குங்குமம் வார இதழில் தூங்கா நகரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உடல் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வாக்குசொல்லிகள், ஊர்க்காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கை போடுபவர்கள், பி.பி.ஓக்களில் வேலை செய்பவர்கள், உணவகத்தில் சமைப்பவர்கள், தபால் ஊழியர்கள், பால் வியாபாரிகள் இப்படி 27 தொழில்களின் இரவு நேரத்தை மிக இயல்பாகவும், அதே சமயம் இறுக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார்.

இரவு ஓய்விற்கான நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இரவு உற்பத்தியின் களம். படைப்புகளின் மூலம். சற்று நேரத்தில் விழிக்க இருக்கும் விடியலுக்கு நடை பாதை அமைத்துக் கொடுக்கும் பெருஞ்சாலை.

இரவின் பனிக்குடத்தில் பிறக்கக் கூடிய ஏராளமான கருக்களை உணரத்தவறிய அல்லது கண்டு கொள்ளாது ஒதுங்கி நிற்கும் மனிதர்களை பின்னந்தலையில் அடித்து இங்கே பார்.. ’உனக்காக உறக்கத்தை தொலைத்து அலையும் மனித வாழ்க்கையை’ என்று சொல்லக் கூடியதாக இந்நூலை பார்க்கிறேன்.

விழித்து எழுந்தவுடன் எப்போதோ தாமதமாகும் ஒருநாளில் இன்னும் பேப்பர் வரவில்லையா? பால் வரவில்லையா? என்று எரிச்சல் படுமுன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இதற்குப் பின்னாலிருக்கும் பேருழைப்பின் விஸ்வரூபம் புரியவரும்.

நான் பண்பலையில் பணியாற்றும் போதும் சரி, பத்திரிக்கையாளராக இருக்கும் போதும் சரி சாலைகளைக் கடக்கும் போது சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைக் காணும் போது அவர்கள் எப்படி இரவில் மட்டும் வேலை செய்கிறார்கள் என்று பலமுறை யோசித்துள்ளேன். இரவு நிகழ்ச்சி முடித்து 12 மணிக்கு தாமதமாக வீடு திரும்பும் போது ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்புகள், காலை நிகழ்ச்சிக்காக ஐந்து மணிக்கே அலுவலகம் வரும் போது மாறியிருக்கும்.

எட்டுமணி நேரத் தூக்கத்தின் அவசியம் பற்றி ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கும் வேளையில் நின்று பேசக் கூட நேரமின்றி இரவுகளை நகர்த்திக் கொண்டு ஓடுகிற மனித வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார். இரவுகள் விற்பனைக்கு என்று சொல்லாமல் சொல்லும் இவர்களின் பெரும் துயரம் கவிந்த வார்த்தைகள் ஈரமுள்ள எந்த நெஞ்சையும் தாக்கக் கூடியவை. சிலரைத் தவிர ஏனையோர் பொருளாதாரத்தின் சிறு பகுதியைக் கூட ஈட்ட முடியாமல் படும் வேதனைகள் இந்தக் கட்டுரைகளில் உச்சமாகத் தெரிகின்றன.

நாம் கடந்து செல்கிற மனிதர்களின் வாழ்க்கைப் பதிவாக உறங்கா நகரம் இருக்கிறது. இரவுகளில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர், சாலைகளைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள், பேப்பர் போடுபவர்கள், பால்காரர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், வாட்ச்மேன்கள், மீனவர்கள் இப்படி தன்னால் முடிந்தவரை அனைத்துத்துறையினரையும் பதிவு செய்திருக்கிறார்.

’கீழ்வானம் சிவக்கிறது. நகரம் தன் சுயமுகத்தை தரித்துக் கொண்டு விடியலை உணர்த்த, பச்சையம்மா முகம் இருண்டு கிடக்கிறது.’

’நின்று பேசிய நேரத்தை சமன் செய்வதற்காக மேலும் வேகம் கூட்டுகிறது சிலம்பரசனின் சைக்கிள்’

’நொடிப்பொழுதில் சைரன் சத்தம் தேய்ந்து மறைய, சோகம் தோய்ந்த கனமான நிசபதம் அசோக் நகரைக் கவ்வுகிறது’

’பனி தகிக்கிறது’

போன்ற வார்த்தை பிரயோகங்கள் நீலகண்டனின் ஆளுமையை எடுத்தியம்புகின்றன. நீலகண்டனின் மொழிநடையும், அவர் கையாண்டிருக்கும் வார்த்தைகளும் இந்த கட்டுரைகளில் உலவும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மேலும் வலுவைக் கொடுத்திருக்கின்றன. இதில் மக்கள் பேசும் மொழிகளும் பேச்சு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சந்தியா பதிப்பகத்தின் அழகிய வடிவமைப்பு வாசகர்களை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

இயந்திரகதியாக, இயங்கியல் விதியாக பகல்களாக இரவுகளை மாற்றிக் கொள்ள நேர்ந்திருப்பது பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பகல்கள் இரவாகி விடுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. எப்போதும் இயங்கி ஆக வேண்டிய இந்த மக்களுக்கு இரவும் அதனூடான இசையுமே துணையிருக்கிறது.

இதில் இன்னொரு விடயமாக நான் பார்ப்பது என்னவெனில பெரும்பாலான இரவு நேரப் பணியிடத்திலும் பண்பலை கேட்பதைக் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் பண்பலையின் இரவு நேர தொகுப்பாளர்களை எப்படி தவறவிட்டார் என்பது தெரியவில்லை.

தூக்கத்தை விற்று காசாக்குகிற பி.பி.ஓவில் பணிபுரியும் கங்கா, தூக்கத்தைத் தொலைத்துவிடுகிற ஊர்க்காவல் படையின் ஊழியர் ரமேஷ்ராஜ், படிப்பை விலையாகக் கொடுக்கும் பத்திரிக்கை போடும் பள்ளிச் சிறுவன் சிலம்பு இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்மை அசைத்துப் பார்க்கின்றன.

இதற்காக நீலகண்டன் எத்தனை இரவுகளை செலவழித்திருப்பார் என்று பார்க்க முற்படுகையில் அந்த இரவுகளின் சேமிப்பாக இந்த நூலை காண்கையில் அவர் அந்த செலவினை சமன் செய்துவிடுவதாகக் கொள்ளலாம்.

இவள் பாரதி

நன்றி - தடாகம் இணைய இதழ், கவி ஓவியா மாத இதழ்

No comments:

Post a Comment

please post your comment