Saturday 28 July, 2012

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு: இந்தியா!



இவள் பாரதி


பெண்கள்வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில்இந்தியாவுக்குக் கடைசி இடமே கிடைத்துள்ளது.


ஜி 20 நாடுகளில் உள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் முதலிடம் கனடாவிற்கு. ஆண் - பெண் இன வேறுபாட்டைக் களையும் அரசின்கொள்கைகள், வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள், உடல் ரீதியாகவும் தொழில்ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளைத்  தடுத்தல் போன்றவற்றால் கனடா, பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் இடத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

குழந்தைத் திருமணங்கள், அடிமைத்தனம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக  மிக மோசமான நாடு என இந்தியாவை ஆய்வு குறிப்பிடுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

தரவரிசைப் பட்டியலில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன்னதாக இடம்பெற்றுள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு  உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்தன. இந்தியா நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் சோமாலியாவும் இருந்தன.

சுகாதாரச் சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள், கலாசார ரீதியிலான வன்முறைகள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்கள், கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  செய்தி நிறுவனமான தாம்ஸன் ராட்டர்ஸின் பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வத் தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் (Global hub for women’s rights) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு இது.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள்  விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள். 20ம் நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெண் சிசுக்கொலை, கருச்சிதைவு  போன்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.

2009ம் ஆண்டு உலகில் நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவிகிதம் இந்தியாவிற்குள் நடந்தவையாகும். கட்டாயத் திருமணங்களும் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தேசியக் குற்றப்பதிவு மையம் (‡NCRB)  வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவிலிருக்கும் பெருநகரங்களில் டெல்லிதான் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இடம். 2011ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான  குற்றச் செயல்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 53 நகரங்களில் பாலியல் வன்கொடுமை 17.6 சதவிகிதமும் கடத்தல்கள் 31.8 சதவிகிதமும் வரதட்சணை இறப்புகள் 14 சதவிகிதமும் நிகழந்துள்ளன.

ஒட்டுமொத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் மீதான வன்முறை கடந்த ஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் தலைநகரில் காவல்துறைக்கு எதிராக 12,000 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது கூடுதல் தகவல். பாதுகாக்க வேண்டிய காவல்துறையாலேயே பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் நாட்டை, பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடு என அழைப்பதில் ஆச்சரியமில்லை.

இது ஒருபுறமிருக்க, இந்திய மாநிலங்கள் பலவும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு பெயர்போனவை. குழந்தைப்பேறு சமயத்தில் ரத்தசோகையால் இறக்க நேரிடும் பெண்களின் சதவிகிதம் மிக அதிகம். இன்னொருபுறம்  பெண்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்.

பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை இன்றும் இருந்துவருவதால் பெண்சிசுக் கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஆண் குழந்தையின் மீதான ஆசையில் தந்தையின் கொடுமையால் பலியான பெங்களூருவைச் சேர்ந்த மூன்றுமாதக் குழந்தை நேஹா அஃப்ரீனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.

ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலான பெண்கள் வாழ்கிற சூழ்நிலையில் ஆண்களுக்கு ஏற்படுகிற அனைத்துப் பிரச்சினைகளும், பெண்களையும் மனரீதியாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் நிகழும்  தற்கொலைகளில் 30 சதவிகிதம் பெண்கள் செய்து கொள்பவை.

இப்போது சொல்லுங்கள்: இந்தியா பெண்கள் வாழத் தகுதியான நாடுதானா?


பெண்சிசுக் கொலை
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண்சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம்.

நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் எண்பது லட்சம் பெண்சிசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- இவள் பாரதி

No comments:

Post a Comment

please post your comment