Wednesday, 18 February 2009

நேசத்திற்குரிய காதலனுக்கு...

என் நேசதிற்குரியவனே...
காதல் என்றாலே காத தூரம் ஓடும் எனக்குள்ளும் காதல் இருக்கிறது என்பதை உணர வைத்தவனே...சிரிப்பாய் இருக்கிறது சில சமயம்.. அழுகையாய் இருக்கிறது சில சமயம்...ஏன் என்றுதானே கேட்க நினைக்கிறாய்..சொல்கிறேன்...

காதல் பற்றி நான் படித்த கவிதைகளும், கதைகளும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..ஏனெனில் அந்த சமயங்களில் நான் காதலின் வருகைக்கு வேலியிட்டு இருந்தேன்..இப்போது நான் படிக்கிற கவிதைகளும்,பார்க்கிற உலகப் படங்களும் எனக்குள் உன் நினைவுகளை பாத்தி கட்டி செல்கின்றன..

ஒரு உதாரணம் சொல்கிறேன்..கேளேன்.. " இயற்கை " படத்தில் ஒரு வசனம் உண்டு..ஷேக்ஸ்பியர் சொன்னதாகா..

" காதலுக்கு காரணம் இருக்க முடியாது..
காரணம் இருந்தால் அங்கு காதல் இருக்க முடியாது"

என்ற வசனம் என்னை அடிக்கடி திரும்ப வைக்கும்... அதே போல் அறிவுமதியின் ஒரு கவிதையும்...

"அணு அணுவாய்
சாவதற்கு முடிவெடுத்தபின்
காதல்
சரியான வழிதான்..."

அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொள்ளும் ஆர்வத்தைபோல்
அவ்வப்போது இந்த இலக்கியங்கள் உன்னை எனக்குள் விதைத்த படி இருக்கிறது...

"எனக்குள்
இருக்கும்
காதலை
அறுவடை செய்ய முடியாது..
ஆயிரமாயிரம்
ஆண்டுகளான பின்னும் " ...


இந்த வார்த்தை என் காதலின் ஆழத்தை சொல்லும்...நமக்குள் ஏற்பட்ட
சந்திப்புகளை அடிக்கடி அழைத்து விசாரித்துப் பார்க்கிறேன்...
அவை உனக்குள் நானும் எனக்குள் நீயும் ஒளிந்து கொண்ட ரகசியங்களை பறைசாற்றி சிரிக்கிறது..புன்னகை புரிந்தவாறே யோசித்து கொண்டிருக்கிறேன்... ரசனையோடு நம் காதலைப் பற்றி....

No comments:

Post a Comment

please post your comment