Tuesday, 3 February 2009

புத்தகங்கள்- சிறுகதை

சிரித்தபடியே சொன்னான்...'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது. ..' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என்றபடி விடைபெற்று வந்துவிட்டேன்..

வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன்...நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? ..இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் என்னிடம் எனக்கு தெரிந்த யாரும் சொல்லவில்லை...சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா?.. அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல் என்னிடம் இல்லாமல் இருந்ததா?..இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது..?ஒரே குழப்பமாக இருக்கிறதே ..சரி அவன் நாளை சந்திப்பதாக சொல்லி இருக்கிறான்.. அவனிடமே கேட்டு விடலாம்..

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது..ஒரு சிறிய ஆனால் கனமான பையொன்றை என்னருகில் வைத்துவிட்டு தன்னுடைய கால்சட்டையை லேசாக தூக்கிக் கொண்டு மணலில் அவன் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்..

நான் கால்களை நீட்டியபடியிருந்தது அவனுக்கு எரிச்சல் தரவில்லையென்று
உணர்ந்தேன்..அவன் தந்த பையைத் திறந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தேன்... இதுவரை நான் கேள்விப்படாத எழுத்தாளர்கள் .. நாவல்களாக, கதைகளாக,கவிதைகளாக கைகளில் கனத்துக் கொண்டிருந்தனர்.. அவனே ஆரம்பித்தான்..

ஒவ்வொரு எழுத்தாளர்களின் செல்வாக்கு பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான்...அதுமட்டுமன்றி அந்த புத்தகங்களின் ஒரு சிறு சாராம்சத்தையும் பகர்ந்தான்..நான் விழிவிரிய
ஆச்சர்யத்துடன் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இவ்வளவு நாள் இவனைப் பற்றி அறியாமலிருந்து விட்டோமே என்ற ஏக்கத்தை தூவியபடி இருந்தது அவன் பேச்சு...

அவனிடம் கேட்பதற்கென்று சேர்த்து வைத்த கேள்விகளுக்கும் அவனது வார்த்தைகள் பதில் சொல்வதாக இருந்தது...அந்த பையை வீட்டுக்கு கொண்டு வந்து எனது அறையெங்கும் பரப்பி வைத்துக் கொண்டு ஆச்சரியங்களோடு பார்த்திருந்தேன் .. எவ்வளவு மிகப் பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்று என்னோடு..

ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்து லேசாக புரட்டி பார்த்து விட்டு பக்கத்திலேயே வைத்தபடி இருந்தேன்..சிறிது நேரத்தில் எனது அறையெங்கும் பரவி இருந்த புத்தகங்கள் ..என்னை சுற்றி அடுக்கப் பட்டிருந்தது போல இருந்தது.. ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் மிக நெருங்கிய நட்பை பெற்று விட்டேன்.. இப்படியே நாட்கள் நகர்ந்து போனது...நான் புத்தகங்களுக்கிடையில் ஊர்ந்து கிடந்தேன்..தீராத தாகத்துடன் வரிகளை வலிகளை விழுங்க கற்றுக் கொண்டு விட்டேன் ..அந்த அறையை விட்டு வெளியே எங்கும் நகர்ந்த பாடில்லை..யாரும் என்னைதொந்தரவும் செய்ய வில்லை.. பூட்டப்பட்ட அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே யாரவது முக்கியமான நபர்கள் எங்கள் வீட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்துக்
கொள்வதோடு சரி...

ஒரு கட்டத்தில் புத்தகங்களின் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தேன்.. சில தாள்களோடும் ..சில எழுதுகோல்களோடும் .. குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அந்த குறிப்புகள் ஒரு பக்கம் தாள்களாக பரவி ஒரு குவியலை உருவாக்கிஇருந்தது..இப்போது புத்தகங்கள் தன் எடையை இழக்க ஆரம்பித்தது.. நான் புரட்டிப் படித்த புத்தகங்கள் காற்றில் மிதந்தன..ஒரு காகிதத்தைப் போல.. இப்படியே அந்தரத்தில் நான் படித்த புத்தகங்கள் காகிதத்தை போல மிதக்க ..நான் எடுத்த குறிப்புகள் தரையோடு தரையாய் கிடந்தது..

புத்தகங்களோடு படுத்துக் கிடந்த இரவுகளில் பசியறியாது..
உடல் இயக்க வெளிப்பாடுகள் ஏதுமின்றி இருந்தது ஆச்சரியமாய் இருக்கிறது..

ஒருவேளை அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களோடு நானும் உண்டு , கழித்து ,ஊர் சுற்றியது காரணமாய் இருக்கலாம்..
சில நாட்கள் கழித்து எனக்கு புத்தகங்கள் பரிசளித்தவன் வந்தான்..என் அறையை திறந்து மூடினேன்.. உள்ளே வந்து பார்த்தவன் வியந்துபோனான்.. அப்போது அவன் தந்திருந்த புத்தகங்கள் காற்றில் மிதப்பதை விட்டு ஒவ்வொன்றாய் தரையில் விழ.. எனது குறிப்புகள் இப்போது அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது..

அவன் வேறு புத்தகங்கள் எதாவது கொண்டு வந்திருக்கிறானா என்றுக் கேட்க அவன் நூலகத்திலிருந்து வந்ததாக ஒரே ஒரு புத்தகத்தை நீட்ட அதையும் வாங்கி அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. எனது தாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததே யொழிய அடங்கவில்லை..எனது நாட்கள் இப்படியே நகர்வதை அருகிருந்து பார்த்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.. இப்படியே விட்டால் நான் பைத்தியமாகி விடுவேனென்று அவனிடம் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்லவும் அவன் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்..

தீராத தேடலுடன் படித்தபடி இருந்த என்னை தான் படிக்கப் போவதாக சொன்னான்.. அதிர்ச்சியுடன் நிமிர்ந்த போது எதையும் கண்டு கொள்ளாதவனாக வேக வேகமாக புரட்டினான்...

அதற்கு பிறகு நான் எதையும் படிப்பதே இல்லை..எங்கேயாவது எழுத்துக்கள் தெரிந்தாலே எரிச்சலைடைகிறேன்..என் பார்வையிலிருந்து எழுத்துகள் ஓடி ஒளிய வேண்டும் என விரும்புகிறேன்.. வீட்டிற்கு வாங்கி வரும் பொருட்களைச் சுற்றி இருக்கும் தாள்கள் கூட கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன.. அவன் இன்னும் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறான்......

No comments:

Post a Comment

please post your comment