திரைக்குப் பின்னிருக்கும் கலைஞர்களில் முக்கியமானவர்கள் படத் தொகுப்பாளர்கள். அவர்களது படத்தொகுப்பில்தான் ஒரு படத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. படத்தொகுப்பு என்பது தேவையில்லாத பகுதியை வெட்டி எடுப்பதும், பின் இணைப்பதும் என நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். உண்மை அதுவல்ல.
‘’எடிட்டிங்’ என்றால் என்ன? தேவையில்லாத பகுதிகளை நீக்குதல் என்று அகராதியில் பொருள் அறியலாம். கட்டுரையொன்றை எடிட்டிங் செய்யும் தலைமைப் பத்திரிக்கை ஆசிரியர் தான் பிரசுரிக்க விரும்பாத சொற்களையும், வாசகங்களையும் எல்லாம் நீக்கி விடுவாவரல்லவா? கிட்டத்தட்ட அதே முறையில் குறைபாடு உள்ளதோ, மோசமாகவோ உள்ள காட்சிகளை நீக்குதல் என்ற அர்த்தத்தில்தான் பலரும் ‘ஃபிலிம் எடிட்டிங்’ என்ற செயலை விளங்கியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் காட்சிகளை தொகுப்பது, இணைப்பது மட்டுமேதான் ‘எடிட்டருடைய’ பணி என்கிற எண்ணத்திலேதான் இங்கு யாரோ ‘படத்தொகுப்பு’ என்கிற பதத்தை பிலிம் எடிட்டிங்கின் மொழிபெயர்ப்பாக வழங்கியிருக்கக்கூடும்.
ஆனால் ஒரு திரைப்படத்தின் சரியான அர்த்தத்திலான ‘எடிட்டிங்’ தொடங்குவது தேவையற்றதும், குறைபாடானதுமான காட்சிகளையெல்லாம் நீக்கி முடித்தபிறகு, கதையின் சொல்லாடலுக்கேற்ப தேவையானவற்றை இணைத்த பிறகேதான் ‘ரஃப் கட்’ என்றழைக்கப்படுகிற இந்த முதல்கட்ட நிலையின் மொழிபெயர்ப்பாக இருக்கக்கூடிய தகுதி மட்டுமேதான் ‘படத்தொகுப்புக்கு’ உண்டு. ‘ஃபிலிம் எடிட்டிங்’ என்ற ஆங்கிலப் பதத்தின் மொழிபெயர்ப்பே இங்கு காட்சி இணைப்பு என்கிற சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.’’ என்று மலையாள இயக்குனர் அடூர்கோபாலகிருஷ்ணன் (தமிழில் - இயக்குனர் மீரா கதிரவன்) தனது நூலில் எடிட்டிங் பற்றி குறிப்பிடுகிறார். எனவே காட்சி இணைப்பு என்றே எடிட்டிங்கை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எடிட்டிங் என்பது ஒரு படத்தின் வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் கூடிய நுட்பம் வாய்ந்தது. ஒரு திரைக்கதையை பலவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் படத்தொகுப்பாளரால் முடியும். காட்சிகள் நகரும் கால அவகாசம் படத்தொகுப்பின் பஙக்ளிப்பால் நீளமாகவோ, குறைவாகவோ மாறும். அப்படி மாறும் போது அந்தக் காட்சி உணர்த்தும் அர்த்தமும் மாறும் எனலாம்.
படங்களை பார்த்த்தும் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது திரைக்கதை, பிண்ணனி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, நடிப்பு போன்ற நுட்பங்களைத்தான். ஆனால் சமீபகாலமாக படத்தொகுப்பு, இடத்தேர்வு (கலை), சண்டைக்காட்சிகளில் புதிய உத்திகள், க்ராஃபிக்ஸ் காட்சிகள் ஆகியவற்றையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் திரைக்குப் பின்னிருக்கும் கலைஞர்களை கண்டுகொள்ளும் போக்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். திரைக்கு முன்னிருப்பவர்களை விட திரைக்குப் பின்னிருப்பவர்களின் உழைப்பும், நேரமும் கூடுதலானது. ஆனால் சம்பளம் என்று பார்த்தால் சிலரைத் தவிர பலருக்கும் மிகக் குறைவாகவே உள்ளது என்பது சினிமா வட்டாரங்களிலிருந்து வெளிவரும் வேதனையான தகவல்.
வசூலில் சாதனை படைத்த பிரபல ஹிந்தி படமான ஷோலேவில் எடிட்டராக பணியாற்றிய ஷிண்டே வெறும் 2000ரூபாய்தான் பெற்றிருக்கிறார். மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை எடிட் செய்த அவர் இன்று தாராவியில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வருகிறார். ஏழ்மையில் வாசம் செய்யும் அவரை திரையுலகம் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை.
வெற்றியை மட்டும் ருசிக்கிற திரையுலகம் அதற்கு பின்னிருக்கும் உழைப்பை ஏனோ கொண்டாட திட்டமிட்டு மறந்துவிடுவது உண்மைதான் போலும். விருதுகளும், சாதனைகளும் ஏழ்மையைப் போக்கிவிடுவதில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. ஒரு படத்திற்கு தரத்தையும், அர்த்தத்தையும் தந்த ஒரு எடிட்டரின் வாழ்வு, இவை இரண்டுமற்று போய்விடுவது கரிபூசப்பட்ட காலத்தின் முகத்தைக் காட்டுகிறது.
ஒரு காட்சியின் அர்த்தத்தை மாற்றுவதில் படத்தொகுப்பாளரின் பங்கு மிக முக்கியமானது. ஒரு படத்தின் கதை படத்தொகுப்பு மேசையில்தான் முடிவாகிறது என்று ஹாலிவுட் பேட்டிகளில் சொல்வார்களாம். இது போல பரீட்சார்த்த முயற்சிகள் இந்திய அளவில் மிக குறைவு. தமிழில் ஆரண்யகாண்டம் கதை உத்தியில் பேசப்பட்டதற்கு படத்தொகுப்பு முக்கிய காரணம்.
தமிழ்சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எடிட்டர்கள் சிலரைப் பார்க்கலாம்.
தானே தயாரித்து இயக்கி பெருவெற்றி பெற்ற நாடோடி மன்னன் படம் குறித்து எம்.ஜி.ஆர். எழுதிய நூலில் எடிட்டர் ஜம்புவைப் பற்றி ‘திரு.ஜம்பு அவர்கள் கடைசி நேரத்தில் செய்த பணிக்கும் அவருடைய நேர்மைக்கும் கிடைத்த பெரும் வெற்றி இது. இந்தக் காலத்தில் யாரும் செய்யாத தியாகத்தைச் செய்து தொகுப்பவர்களின் ஒற்றுமைக்கும், கடமை பெரிது ; விளம்பரமல்ல என்பதற்கும் வெற்றி தேடிந்தந்தவர் திரு.ஜம்பு அவர்கள.’ என்று பாராட்டியுள்ளார். அத்துடன் ‘படத்தின் உயிர்நாடி எடிட்டிங் (வெட்டி ஒட்டி இணைத்தல்) கதை,வசனம், பாடல்கள், நடிப்பு, காட்சி சோடனைகள் மற்றும் எல்லாம் எவ்வளவுதான் திறம்பட இருந்தாலும் எடிட்டிங் சரிவரச் செய்யாமற் போனால் படத்தின் தோல்வி நிச்சயமாகி விடும்.
ஆரம்பத்தில் திரு.ஆறுமுகம் என்பவர் இருந்தார். அவர் சில காரணத்தால் விலகினார். அதன் பிறகு திரு.பெருமாள் அந்தப் பொறுப்பை ஏற்றார். படத்தின் முடிவு நேரத்தில் அவரால் வேலை செய்ய முடியாமற் போன காரணத்தால் வேறொருவர் துணைக்கு நியமிக்கப்பட்டார். அவரும் அதில் தோல்வியுறவே, கடைசியாக வண்ணப்பகுதிகளில் பெரும் பகுதியை எடிட் செய்து கொடுக்கும் பொறுப்பைத் திரு.ஜம்பு அவர்கள் ஏற்றார். அவருடைய விருப்பத்தின் படியும் வற்புறுத்தலின் படியும் தான் அவருடைய பெயரைப் படத்தில் வெளியிடவில்லை.’ என்று ஜம்பம் இல்லாத எடிட்டர் ஜம்பம் குறித்து கூறியிருக்கிறார்.
எடிட்டர் லெனின் உதவி எடிட்டராக பல ஹிந்தி படங்களில் பணியாற்றி பின் தமிழில் காதலன் படத்திற்காக தேசியவிருது பெற்றவர். அஞ்சலி, ஜென்டில் மேன், இந்தியன், காதல் தேசம், ரட்சகன், வாலி, முதல்வன், குஷி, தில், 12பி, உள்ள்ம் கேட்குமே, தவமாய் தவமிருந்து, சென்னை 28, உச்சிதனை முகர்ந்தால் போன்ற தமிழின் மிக முக்கிய படங்களில் மட்டுமில்லாமல் தூவான தும்பிகள், டெய்ஸி, சீசன், தாழ்வாரம் போன்ற மலையாள படங்களிலும் பணியாற்றியவர். இவரும் எடிட்டர் வி.டி.விஜயனும் சேர்ந்து பல படங்களை எடிட் செய்துள்ளார்கள்.
இவர்களை எடிட்டிங் இரட்டையர்கள் என்றும் சொல்வதுண்டு. அதிலும் நல்ல படங்களை மட்டுமே எடிட் செய்வேன் என்று தற்போது குறும்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் லெனின். இவரியக்கிய ஊருக்கு நூறு பேர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர்.
எடிட்டிங் அறையில் இயக்குனரும் இருக்க வேண்டும், அப்போதுதான் சில சமயங்களில் காட்சிகளை முன் பின்னாக இணைப்பதில் ஃப்ளாஷ்பேக் உத்திகள் போன்றவற்றை நன்கு கொண்டுவர முடியும். ஆயிரத்தில் ஒருவன் சரியும் தவறுமாய் ஆனதற்கு, இரண்டு - மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை எடிட்டிங்கில் உட்கார்ந்து கவனிக்காமல், எடிட்டர் கோலா பாஸ்கரையே பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, டைரக்டர் செல்வராகவன் விக்ரம் நடிக்க அடுத்து தான் இயக்கும் மெகா பட்ஜெட் படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டதுதான் காரணம் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.
கோலா பாஸ்கரும் மிகச் சிறந்த எடிட்டர். செவன்ஜி ரெயின்போ காலனி, போக்கிரி, யாரடி நீ மோகினி, வில்லு, குட்டி, மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்தவர்.
இயக்குனரின் நடிகர் என்று சிலரைச் சொல்வதைப் போலவே இயக்குனரின் படத்தொகுப்பாளர் என்றும் சிலரைச் சொல்லலாம். இது போலவே அந்த காலத்தில் எஸ்.பி முத்துராமனுக்கு ஆர் விட்டல், பி வாசுவுக்கு பி மோகன் ராஜ், கே.எஸ் ரவிகுமாருக்கு கே.தணிகாசலம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்தவகையில் எடிட்டர் ஆண்டனி இன்றைய பிரபல இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார்.
காக்க காக்க, கஜினி, வேட்டையாடு விளையாடு, சிவாஜி, பீமா, வாரணம் ஆயிரம், அயன், ரேனிகுண்டா, எந்திரன், மதராசப்பட்டினம், பையா, ஏழாம் அறிவு, தெய்வத்திருமகள், நண்பன் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் வேலை செய்தவர். வேகம் என்றால் ஆண்டனிதான் என்று சொல்லும் அளவுக்கு இவருடைய எடிட்டிங்கில் திறமையைக் காட்டியவர். கெளதம் மேனனின் ஆஸ்தான எடிட்டர். கெளதம் தான் இவரை காக்க காக்க படம் மூலம் அறிமுகப்படுத்தியவர்.
’ஒரு நாள் கௌதம்மேனன் என்னிடம் அவசரமாக வந்து ஆடியோ ரிலீசுக்கு நேரமாச்சு ‘காக்க..காக்க’ படத்தில் வரும் ‘என்னை கொஞ்சம் மாற்றி’ பாடலை எடிட் செய்து தரும்படி கேட்டார். நானும் அதைச் செய்து கொடுத்தேன். அந்தப் பாடலில் இம்ப்ரெஸ் ஆயிட்டு ‘முழு படத்தையும் நீயே எடிட் செய்து கொடுத்துடேன்’னு கௌதம் சொன்னார். ஸோ… ‘காக்க… காக்க’ படம்தான் நான் எடிட்டிங் செய்த முதல் முழு படம்ன்னு சொல்லலாம். ‘காக்க காக்க’ ஆரம்பிச்சு இதுவரை அறுபது படங்கள் வரை பண்ணியாச்சு.’ என்று ஒரு நேர்காணலில் ஆண்டனி கூறியிருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான படத்தொகுப்பாளரும், "வேதம் புதிது' படத்திற்கு தேசிய விருது வாங்கியவருமான பி.மோகன்ராஜிடம் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த கிருத்திகா "உயிரின் எடை 21 அயிரி' படத்தின் மூலமாக முதல் பெண் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறார். அவர் கூறுகையில், ’கண்ணை உறுத்தாத எந்தப் படத்தொகுப்புமே சிறந்ததுதான். உலகளவில் மைக்கேல் கான், தெல்மா ஸ்கூன்மேக்கர், ரால்ஃப் டாஸன், பார்பரா மெக்லீன் போன்றவர்களை எனக்குப் பிடிக்கும்.
தியரிப்படி படத்தொகுப்பாளர் ஆண்டனி ("காக்க காக்க', "சிவாஜி', "எந்திரன்', "ஏழாம் அறிவு') தான் பணிபுரியும் படங்களின் படத்தொகுப்பில் கொடுக்கும் கட் எல்லாமே தவறானவைதான். அவர் படத்தொகுப்பு விதிகளை உடைத்துவிட்டு புதுவிதமான ஃபாஸ்ட் கட் என்னும் விதியை உருவாக்குகிறார். ஆனால், அது படத்தொகுப்பு விதியில் இடம்பெற்றிருக்கவில்லை. பாஸ்ட் கட் முறையை அவர் பயன்படுத்துவதால் அது படத்தில் தனித்து தெரிகிறது.
அதன் மூலமும் படத்தின் பார்வையாளனும் அந்த இடத்தில் கதையில் ஒன்றாமல் அந்தத் தொழில்நுட்பத்தில் ஒன்றிவிடுகிறான். இது தியரிப்படி தவறானதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளரை நோக்கிப் பார்வையாளனை ஆண்டனி நகர்த்தியிருப்பதால் அந்தத் தவறிலிருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார்’ என்று கிருத்திகா கூறுகிறார். இருந்தாலும் காட்சிகளை வேகப்படுத்திக் காண்பிக்கும் முறையை இன்றைய தலைமுறை விரும்புவதற்கு சாட்சியாக இருப்பவை இயக்குனர் ஹரியின் படங்கள்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மறைந்த பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன், சந்தோஷ் சிவன், ஷாஜி கருண், விஷால் பரத்வாஜ், ஃபர்ஹான் அக்தர் என பிரபல இயக்குனர்களுக்கு படங்களுக்கு இவர்தான் முதல் தேர்வு. எட்டு தேசிய விருதுகளும், ஐந்து கேரள அரசு விருதுகளும், இரண்டு நந்தி விருதுகளும், துபாய் சர்வதேச திரைப்பட விழா விருது என பல விருதுகளை தன் படத்தொகுப்பிற்காக பெற்றவர்.
ஒரு நேர்காணலின் போது "ஒரு எடிட்டர் வெளியே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நல்ல படத்தில் எடிட்டிங் வெளியே தெரியாது. இயக்குநரின் ரசனை, காட்சிப்படுத்துதல், அவர் சொல்ல விரும்பியதை, வேகமும் தரமும் குறையாமல் தருவதுதான் ஒரு எடிட்டரின் வேலை. கேரக்டரின் தன்மை, அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும் என்பது எடிட்டரின் கையில்தான் இருக்கிறது. சுருக்கமா, எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படத்தின் சரியான திரைக்கதை உருவாகும்!" என்று கூறியிருக்கிறார்.
"மணிரத்னம் கூட 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'யுவா', 'குரு'ன்னு நிறையப் படங்கள் பண்ணியிருக்கேன். தான் கஷ்டப்பட்டு ஷூட் பண்ணினது எல்லாமே படத்தில் வரணும்னு மணி நினைக்க மாட்டார். ஆனா, அந்த ஃப்ளேவர் ரசிகர்களுக்குப் போய்ச் சேரணும்னு தீர்க்கமா இருப்பார்.
நந்திதா தாஸின் முதல் படம் 'ஃபிராக்'க நான்தான் எடிட் செய்தேன். நல்ல சினிமாக்கள் வெளியானால், 'அவசியம் பாருங்கள்'னு போன் செய்து சொல்வார்!" என தான் பணியாற்றிய இயக்குனர்களிடம் கிடைத்த அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.
பல படங்களை இணைந்து டைரக்ட் செய்த கிருஷ்ணனும், பஞ்சுவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பலரும் நினைப்பது போல் சகோதரர்கள் அல்லர். எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், சினிமாத்துறையில் சேர விருப்பம் கொண்டு, அன்றைய பிரபல டைரக்டர் ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றார். இந்தக் காலக்கட்டத்தில் கோவையில் கந்தன் ஸ்டூடியோ என்ற சினிமா ஸ்டூடியோ நடந்து வந்தது. இந்த ஸ்டூடியோவைத்தான் பிற்காலத்தில் ஸ்ரீராமுலு நாயுடு வாங்கி, "பட்சிராஜா ஸ்டூடியோ" என்ற பெயரில் நடத்தினார். கந்தன் ஸ்டூடியோவில் லேபரட்டரியில் பணியாற்றிய கிருஷ்ணனும், பஞ்சுவும் நண்பர்களானார்கள்.
அந்த நேரத்தில் ராஜா சாண்டோவின் டைரக்ஷனில் "ஆராய்ச்சி மணி" என்ற படம் மனு நீதி சோழனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வந்தது. இதில் கன்றை இழந்த பசு, கண்ணீர் விட்டபடி அரண்மனைக்கு ஓடிவந்து, ஆராய்ச்சி மணியின் கயிற்றை பல்லால் கடித்து இழுத்து, மணியை அடிக்கவேண்டும்.
இந்தக் காட்சியை பலமுறை எடுத்தும் சரியாக வரவில்லை. எடிட்டிங் துறையில் நன்கு பயிற்சி பெற்றிருந்த பஞ்சுவும், கிருஷ்ணனும் டைரக்டர் ராஜா சாண்டோவிடம் சென்று, அக்காட்சியை எப்படி படமாக்கலாம் என்பது குறித்து யோசனை தெரிவித்தனர். ராஜா அனுமதியளிக்க, பஞ்சுவும், கிருஷ்ணனும் தங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி டிரிக் ஷாட் (தந்திரக் காட்சி) மூலம் அந்தக் கட்டத்தை படமாக்கினர். மாடு கண்ணீர் வடிப்பது, கயிற்றை வாயினால் இழுத்து மணியை அடிப்பது ஆகிய காட்சிகள் தத்ரூபமாக அமைந்தன.
அதைப் பார்த்த ராஜா சாண்டோ, கிருஷ்ணனையும், பஞ்சுவையும் கட்டித் தழுவிக்கொண்டார். "இளைஞர்களாக இருந்தாலும் மிகத் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். இனி நீங்கள் உதவியாளர்களாக இருக்கவேண்டாம். இருவரும் சேர்ந்து டைரக்டர்களாக ஆகுங்கள். "பூம்பாவை" என்ற படத்தை டைரக்ட் செய்ய எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. தயாரிப்பாளரிடம் சொல்லி, அந்த வாய்ப்பை உங்களுக்கு வாங்கித் தருகிறேன்" என்றார். இந்தப்படம் 1944 ஆகஸ்டு மாதம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த "பராசக்தி", எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தக்கண்ணீர்", எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா" போன்ற படங்கள் பெருவெற்றியைத் தேடித்தந்தன. ஏவி.எம். ஸ்டூடியோவில் உருவான பல சிறந்த படங்கள் கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் உருவாயின. குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்த மனிதன், அன்னை, சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும் உள்பட பல படங்களை சிறப்பாக டைரக்ட் செய்தனர். கதையை திரைக்கதை ஆக்குவதில் கிருஷ்ணன் முக்கிய பங்கு எடுத்துக்கொள்வார். படப்பிடிப்பை சுறுசுறுப்பாக நடத்தி, "எடிட்டிங்" வேலைகளை கவனிப்பது பஞ்சுவின் பொறுப்பு. சிறந்த நட்புக்கு மட்டுமல்ல இயக்கமும், எடிட்டிங்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இவர்கள் உதாரணமாகத் திகழ்ந்தனர்.
பிரபல திரைப்பட இயக்குநர்களான பீம்சிங், மகேந்திரன், திருமலை மகாலிங்கம் ஆகியோரின் திரைப்படங்களில் எடிட்டராகப் பணியாற்றிய எடிட்டர் பால் துரைசிங்கம் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்கள் என மொத்தம் 150 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
ரோஜா, பம்பாய், தளபதி, இருவர், சேது, பிதாமகன், அமர்க்களம், சந்திரமுகி உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர், சுரேஷ் அர்ஸ். சிறந்த படத்தொகுப்புக்காக 2 முறை தேசிய விருது பெற்றவர். இவர் `மகான் கணக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் ஆகியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
சிலரது பெரும் உழைப்பு சிலரால் வெளிவரும். சிலரால் மறைந்துவிடும். அத்ற்கு காரணம் நாம் இயக்குனர்களையும், நடிகர்களையும் முன்னிருத்தி படத்தைப் பார்ப்பதுதான். உதாரணத்திற்கு சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து பெருவெற்றி பெற்ற பாட்ஷா படத்தின் எடிட்டர் கணேஷ்குமார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் எடிட்டிங்கும் ஒன்று என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.
பருத்திவீரனுக்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜாமுகமது இதுவரை தமிழ், மலையாளத்தில் 16 படங்களை முடித்துவிட்டார். இவர், யதார்த்தமான கதைகளுக்கு பட்த்தொகுப்பு செய்வதுதான் சவாலானது, கஷ்டமானதும் கூட என்கிறார்.
கமர்ஷியல் படங்களுக்கும், யதார்த்த படங்களுக்கும் கதைக்களத்தைப் போலவே படத்தொகுப்பு விஷயங்களும் மாறுபடும். இளா என்பவர் ஐஃபோன் காமிராவைக் கொண்டே ஒரு குறும்படத்தை முழுவதுமாக உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார். அந்த அனுபவங்களை அழகாக தொகுத்து அளித்திருக்கிறார். ’எப்படி காட்சிகளை அமைத்தாலும் வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம் எடிட்டிங் என்னும் பெரும் கலை கண்டு.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை’ என்ற கூற்று எடிட்டிங் பற்றிய இளைஞர்களின் பார்வையையும் பதிவு செய்கிறது. எல்லாத்துறைகளையும் போலவே சினிமா எடிட்டிங்கும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எந்தக் கலையையும் மதித்து உண்மையாக நேசித்து செய்தால் வெற்றியின் கதவு திறந்தே இருக்கும் என்பதற்கு மேற்கணட எடிட்டர்களே சாட்சி.
அந்தக் காலத்தைப் போலவே இன்னும் சில வருடங்களில் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொண்ட ஒருவரே திரைத்துறையில் ஜொலிக்க முடியும் என்ற நிலை வரலாம். அப்போது இன்னும் அதிகமாக தமிழ் திரையுலகம் சாதனை படைக்கும்.
இவள் பாரதி