Showing posts with label நேர்காணல்கள். Show all posts
Showing posts with label நேர்காணல்கள். Show all posts

Monday, 13 September 2010

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்


உங்க சின்ன வயசுல சினிமாவுக்கான ஆர்வம் இருந்ததா?
சின்ன வயசுல சினிமா பாக்குற ஆர்வம் இருந்தது. நிறைய படங்கள் அம்மாவோட போய் பார்ப்பேன். அப்ப சினிமாங்றது வேற உலகம். கடவுள் மாதிரி இருந்தது. இவங்களுக்கெல்லாம் பசிக்குமா? அந்த மாதிரி ஒரு பயங்கரமான பிரமிப்பு இருந்துச்சு. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்த துறையில நுழைஞ்சா எப்டி இருக்கும்ங்ற ஆர்வம் வந்தது. நான் ஏழாவது, எட்டாவது படிக்கும் போது எனக்கு கதை எழுத முடியும்னு நினைச்சேன். அந்த நேரத்துல அம்புலிமாமா மாதிரி கதைதான் எழுதுவேன். அத எங்கேயும் அனுப்பியது கிடையாது. அப்டி தோணவும் இல்ல. அம்புலி மாமா, பாலமித்ராக்கு ரெகுலரா ரைட்டர்ஸ் இருப்பாங்க. யார் அதுக்கு முதலாளியோ அவங்களே அந்த கதைலாம் எழுதுவாங்கன்னு நினைச்சுட்டிருந்தேன். பின்னால அது ரைட்டர்ஸ் எழுதுவாங்கன்னு தெரியும் போது அந்த வேலைக்குப் போகனும்னு ஆசைப்பட்டேன். அத விட பிரம்மாண்டமான ஒரு உலகம் சினிமா உலகம்னு தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா இதுக்கு வந்துட்டேன்.

சினிமாவுல எப்படி நுழைஞ்சீங்க?
நான் ரைட்டர் கலைமணி சார்கிட்ட டயலாக் அஸிஸ்டென்ட்டா இருந்தேன். அவரோட கொஞ்ச நாள் வேலை பாத்தேன். அப்புறம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாகிட்ட குஷி படத்துல கொஞ்சம், பிரவின் காந்த் கிட்டயும் வேலை பாத்தேன். தவசி படம் பண்ண உதயசங்கர் இப்டி எல்லார்கிட்டயும் கொஞ்ச கொஞ்ச நாள் வேலை பண்ணேன். ஆனா யாருகிட்டயும் முழுசா வேலை செய்யல. அதுல இருந்து கத்துக்கிட்டேன்.
நீங்க முதல் படம் 2001ல தீனா கொடுத்தீங்க. ரவுடியிசம் சார்ந்த படம். திட்டமிட்டுதான் அந்த ப்டம் எடுத்தீங்களா?
திட்டமிட்டுதான் எடுத்தேன். ஆனா அந்த திட்டம் வேற மாதிரி இருந்தது. அந்த நேரங்கள்ல தொடர்ந்து பொயட்டிக்கான படங்கள்தான் வந்துட்டு இருந்தது. ஒரு ஹிடார், வண்ணத்துப் பூச்சி, பாட்டு, லவ், பூ இந்த மாதிரியே சினிமா போயிட்டிருந்தது. அதுல இருந்து சடார்னு மக்கள திருப்பி வேற மாதிரி காட்டணும்ங்றதுக்காக ஒரு கவன ஈர்ப்புக்காக பண்ணேன்.

தீனா & அடிதடி, ரமணா & தேசப்பற்று, கஜினி & கமர்ஷியல் அப்டினு ஒண்ணுக்கொண்ணு ஒற்றுமை இல்லாம மூணு படமுமே வித்தியாசமா பண்ணிருக்கீங்களே.
ஆமா. ஒரு ரெகுலரான லைஃப் வாழக்கூடாதுனுதான் சினிமாவுக்கு வந்தேன். இல்லைனா அப்பா மாதிரி மளிகைக்கடை திறந்து, இல்ல மாசம் ஒண்ணாம் தேதியானா சம்பளம் வாங்கிட்டு வேலை பாக்குறதோ, ஒரு ஆஃபிஸ்ல வொர்க் பண்றதோ வேண்டாம்னு நினைச்சுதான் சினிமா பண்றோம். அதுலயும் ஒரே மாதிரி வொர்க் பண்ணா திரும்ப அது போரடிக்கும். ஒரே மாதிரி வேலை செய்யும் போது ஒரே ஊர்ல இருக்குற ஃபீல்தான் கிடைக்கும். அதுக்காகத்தான் அந்த மாதிரி வச்சுக்கிட்டது.

ரமணாவுல விஜயகாந்த சார் கூட வொர்க் பண்ண அனுபவம் பத்தி?
அவரைப் பொறுத்த வரைகும் அவரு எதுலயும் இன்வால்வ் ஆகல. அப்டி இன்வால்வ் ஆனா அது இதுனு இன்டர்ஃபியர் ஆவாங்க. முதல் தடவை மூணு மணி நேரம் கதை சொன்னேன். படம் எந்தளவுக்கு ஓடுமோ, அந்தளவுக்கு கதை சொன்னேன். கதைய முழுசா கேட்டுட்டு ‘எதுவும் இதுல சேஞ்ச் பண்ண வேணாம்’னு ஷூட்டிங் போய்ட்டாரு. எந்த விதமான தலையீடும் இல்லாம சுதந்திரமா இயக்குனேன்.

2005ல வந்த கஜினி ரொம்ப லேட் இல்லையா?
ஒரு படம் முடிச்சுட்டு ‘மிரட்டல்’னு ஒரு ஸ்கிரிப்ட் நடிகர் விக்ரமுக்கு ரெடி பண்ணது. விக்ரமுக்கு புடிக்கலைனு சொல்லிட்டாரு. பிடிக்க்லைனு சொன்னவுடனே எனக்கு என்ன பண்றதுனே தெரியல. மைன்ட் அளவுல நான் அந்த கதைய செட் பண்ண பிறகு வேற ஹீரோக்கிட்ட போனாலும் அவங்களும் பிடிக்கலைனு சொல்லிட்டாங்க. ஒரு ஹீரோ பிடிக்கலைனு சொன்னவுடனே அதே மாதிரியே குருட்டுத்தனமா எல்லாரும் பிடிக்கலைனு சொல்லிட்டாங்க. எல்லாரும் பிடிக்கலைனு சொன்னதும் எனக்கும் பிடிக்காம போச்சு. 4 தடவை நல்லா இல்லைனு சொன்னதும் நான் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அஜித்த வச்சு கஜினினு பண்ண ஆரம்பிக்க நினைச்சேன். அவரு நான் கடவுள் பண்ணிட்டு, பண்றேன்னு சொன்னாரு. என்னோட படத்துக்கு மொட்டை போடணும். நான் கடவுளுக்கு முடி வளர்க்கணும். ஒண்ணுக்கொண்ணு ஒத்து வரல. அந்த படம் முடிச்சு முடி வளத்து மொட்டை அடிக்கிறதுக்கு சரி வராதுன்னு சொல்லிட்டு சூர்யாகிட்ட போக வேண்டியதாயிடுச்சு. அதான் காலதாமதமாயிடுச்சு.

ஹிந்தியில கஜினிய கொண்டு போக எப்டி யோசிச்சீங்க.?
ஒளிப்பதிவாளர் ஜீவாகிட்டதான் முதல்ல இந்த கதைய சொன்னேன். அவர் இது ஹிந்திக்கு நல்லா இருக்கும்னு சொன்னாரு. அதுக்கப்புறம் அவர் பண்ண முடியாம போனாலும் அவர் சொன்னபடி ஹிந்தி வாய்ப்பு இருக்காது. இன்னைக்கு ஒரு உலக அளவுல கஜினி பாராட்டப்பட்டிருக்குன்னா அது ஜீவா சார் சொன்ன வார்த்தைதான்னு நம்புறேன்.

கஜினி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் பத்தி சொல்லுங்க.
நான் அவரோட தீவிர ரசிகன். அவர் ஒளிப்பதிவுல ஒரு படமாவது டைரக்ட் பண்ணணும்ங்றது என்னோட ஒரு ஆசை. அப்டி ஒரு வாய்ப்பு அமையுமானு நினைச்சேன். அவர் ஹிந்தியில பண்றாரு. நான் தமிழ்ல பண்றேன். எப்பவாவது ஒரு நாள் உங்களுக்குப் போரடிச்சா தமிழ்ல படம் பண்ணலாம்னு தோணுச்சுனா என் படம் பண்ணுங்க சார்னு சொல்லி வச்சிருந்தேன். அதுக்கு தகுந்த மாதிரி நான் ஹிந்தி படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. ஹீரோ அமீர்கான். அவரோட விஷுவலா ஸ்கோர் பண்றதுக்கு நிறையெ ஸ்பேஸ் இருக்குனு அவரும் ஒத்துக்கிட்டாரு.

உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
எனக்கு ஹிந்தி தெரியுது. ஆனா புரிஞ்சுக்குவேன். பேச தான் கத்துக்கல. எனக்கு ஹிந்திதான் தெரியாதேயொழிய டைரக்ஷன் தெரியுமே.

உங்களுடைய அடுத்த படம் எப்படி இருக்கும்?
அடுத்த கதை ரொமாண்டிக் ப்ளஸ் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்.

ஒரு வெற்றி கிடைச்ச பிறகு அடுத்த ஒரு முயற்சி தாமதாகும். அந்த வெற்றிய ரசிக்கணும் அல்லது சுவைக்கணும்னு சொல்வாங்க. நீங்க எப்படி?
இல்ல. எனக்கு ரிலாக்ஸ் பண்றது பிடிக்காது. ரிலீஷுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால எப்படி இருக்கேனோ அப்டிதான் ரிலீஷுக்கு அப்புறமும் இருப்பேன். இதுவரை 5 படங்கள் பண்ணியிருக்கேன். எல்லாமே ஹிட்தான். இருந்தாலும் கூட எனக்கு ரிலாக்ஸ் பண்ற பழக்கம் கிடையாது. ஒரு படம் ஹிட்டுனு சொன்னதும் அடுத்த நாளும் இப்டி இருக்கணும். யாரும் தப்பு சொல்லிடக் கூடாது. சண்டே நல்லா ஓடுனா மண்டேவும் இப்டி இருக்கணுமேனு ஒரு எண்ணம் இருக்கும். ட்யூஸ்டேல 50 டிக்கெட் ப்ரேக்னு சொன்னதும் அடுத்த நாளும் இப்டி இருக்கணும்ணு தோணும். மார்னிங் ஷோ ஒரு இடத்துல ஃபுல்லாகும். வேற இடத்துல நைட் ஷோ ப்ரேக் ஆகும். இப்டி போய்ட்டே இருக்கும். அதுக்குள்ள ப்டம் சூப்பர் ஹிட்டுனு சொல்வாங்க. திரும்பிப் பாத்தா ஒன்றரை மாசம் ஆகியிருக்கும். அப்புறம் அடுத்த படம் பண்ணனுமேனு டென்ஷன் வந்துடும். எப்பவும் டென்ஷன்தான்.

ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையை மாற்றிச் செல்வதுதான் ஓய்வு அப்டினு சொல்வாங்க. நீங்க ஓய்வு நேரத்துல என்ன செய்வீங்க?
புத்தகம் படிப்பேன், படங்கள் பார்ப்பேன். மக்களத் தொடர்பு கொள்வேன். எப்பவாவதுதான் வெளியே போவேன்.

திருச்சியில படிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்களேன்.
திருச்சி பிஷப் ஹீபர்ல படிச்சேன். நான் நல்ல வளர்ச்சி அடைஞ்சதுக்குக் காரணம் திருச்சினு சொல்லலாம். எனக்கு மறக்க முடியாத ஊர். நான் இருந்தது 3 வருஷம்தான். திருச்சிக்குள்ள நுழைஞ்சாலே காதலிய பாக்குற அனுபவம் மாதிரியே இருக்கும். அப்ப கோ&எஜுகேஷன் கிடையாது. ஆனா திருச்சியில இருக்குற எல்லா காலேஜ் கல்சுரல்ஸ்லயும் கல்ந்துருக்கேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல கல்சுரல்ஸ் மெம்பரா இருந்தேன். என்.சி.சிலயும் இருந்தேன். நிறைய பேர் என்னைய மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். எல்லா இடத்துலயும் நண்பர்கள், ஹாஸ்டல் எல்லாமே மறக்க முடியாத அனுபவம். தமிழ் பேராசிரியர் ஐயா பூரணச் சந்திரன் ரிடையர்மென்ட்க்கு முன்னாடி ஒரு காலேஜ் டே ஃப்ங்கஷனுக்கு நான் வரணும்னு ஆசைப்பட்டாங்க. எல்லா வேலையையும் தூக்கிப் போட்டுட்டு வந்தேன். அவரை கௌரவ படுத்த வேண்டியது என் கடமைனு நினைச்சேன்.
----------to be continued

Thursday, 26 August 2010

திரைப்படப்பாடலாசிரியர் & நடன இயக்குனர் பிரபுதேவா



ஒரு நடன இயக்குனரா இருந்து இப்ப திரைப்பட இயக்குனரா மாறியிருக்கீங்க. இந்த வளர்ச்சிய எப்டி எடுத்துக்கிறீங்க?
அதுவா எல்லாம் படிப்படியா அமைஞ்சிருச்சுங்க. திரைத்துறை ஒரு கடல். அதுல நானும் ஒரு சிறுநதியா ஓடி அந்த கடலத் தொட்டுட்டு இருக்கேன். அவ்ளோதான்.

உங்களை நீங்க எப்டி பாக்குறீங்க? ஒரு நடிகரா? ஒரு இயக்குனரா? ஒரு இயக்குனரா இந்த மாதிரி..
நீங்க சொன்ன எல்லாமே என்னுடைய வேலை. வேலைய வேலையாதான் பாக்குறேன். அதுக்கு மேல என்ன இருக்கு.

உங்களோட பலம் என்ன?
என்னோட கடினமான உழைப்பு.

உங்க நடிப்புல உங்களுக்கு பிடிச்ச படம்?
ஏழையின் சிரிப்பில், மின்சார கனவு

என்ன காரணம்?
‘மின்சார கனவு’ வரைக்கும் எப்டி கைய வச்சுக்கனும்னு கூட தெரியாது. மின்சார கனவுலதான் கொஞ்சம் தேறிட்டேன்னு நினைச்சேன். ‘ஏழையின் சிரிப்பில்’ படத்துல் அந்த கேரக்டர் ரொம்ப பிடிக்கும்ங்க. ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரி கேரக்டர். அந்த கேரக்டர பாத்தாலே பாவமா இருக்கும்.

உங்களுடைய குழந்தை பருவம் எப்டி இருந்துச்சு?
நார்மலா ஒரு மிடில் க்ளாஸ் ஃபேமிலில எப்டி இருந்துச்சோ அப்டிதான் இருந்துச்சு. அண்ணன், தம்பிக்குள்ள சண்ட, ஸ்கூல் போறதுனு ஜாலியா இருந்துது.

பள்ளியில நடந்த மறக்க முடியாத சம்பவம்னா எத சொல்வீங்க?
பள்ளியினா எனக்கு பயம். அதனால கலாட்டாலாம் பண்ணதில்ல. என்ன நிறைய விளையாடுவேன். ஃபுட்பால்னா ரொம்ப பிடிக்கும்.

திரைக்கு பின்னால இருந்து இயங்குறவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க?
நான் திரைக்கு முன்னாலயும், பின்னாலயும் இருக்குறதால பிரிச்சுப் பேச முடியல.

நடிக்க வந்த புதுசுல எந்த மாதிரியான எண்ணங்கள் மேலோங்கி இருந்துச்சு?
எப்டியாச்சும் இதுல இருந்து தப்பிச்சுடணும்னு தோணுச்சு.

உங்கள புதுப்பிக்கிற விஷயமா எதப் பாக்குறீங்க?
வேலை எதுவா இருந்தாலும் அது என்னப் புதுப்பிக்கிற விஷயம்தான். ஏன்னா வேலை இருந்தா க்ரியேட்டிவா இருக்கோம்னு அர்த்தம்.

சமீபத்திய சாதனையா எதைப் பாக்குறீங்க?
சென்னைல ட்ராஃபிக்ல வண்டி ஓட்டுறது.

உங்களுக்கு பிடிச்ச நேரம் எது?
எனக்கு பொதுவா சாயந்திரம் நேரம் 4 & 7 பிடிக்கும். ஏன்னா ஸ்கூல் டேஸ்ல இருந்து அப்பதான் விளையாட டைம் கிடைக்கும்.

உங்கள சந்திக்க வர்றவங்ககிட்ட உங்க அணுகுமுறை எப்டி இருக்கும்?
தெரிஞ்சவங்களா இருந்தா ஜாலியா பேசிட்டிருப்பேன். தினமும் சந்திக்கிறவங்களதான சந்திச்சிட்டு இருக்கோம். புதுசா சந்திச்சா அவங்ககிட்ட நல்லா பழகுவேன்.

உங்க பொழுதுபோக்கு?
டிவி பார்ப்பேன். விளையாடப் பிடிக்கும்.

நீங்க அடிக்கடி உபயோகிக்கிற ஒரு வார்த்தை?
ஜாலியா இருக்கணும்.

நட்புக்கு என்ன முக்கியத் தேவைனு நினைக்கிறீங்க?
எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது.

ஒரு படத்தோட வெற்றி யாரால நிர்ணயிக்கப் படுதுனு நினைக்கிறீங்க?
மக்களாலதான்.

காதல்ங்றது என்ன?
டேஞ்சரஸ்

இந்த உலகத்துல ரொம்ப பிடிச்ச விஷயம்?
நடனம்.

உங்க சகோதரர்கள் பத்தி..
ராஜூ அண்ணன் அவர் ரொம்ப டேலண்ட். பிரசாத் தம்பி. சினிமாவுல ட்ரை பண்ணிட்டிருக்காரு.

ஒரு கலைஞனுக்கான தகுதிகள்?
கடின உழைப்பு

பிரபலம்ங்றது உங்க பார்வையில்..?
அது ஒரு பார்ட். பிரபலம்னு நினைச்சுட்டே இருக்காம நம்ம லைஃப நாம வாழ்ந்துட்டு போகனும்.

நீங்க ஒரு ரேடியோ ஜாக்கியா (நிகழ்ச்சி தொகுப்பாளர்) இருந்தா எந்த மாதிரி நிகழ்ச்சி செய்ய விருப்பம்?
யாரையாச்சும் கூப்பிட்டு இந்த பாட்டு எப்டி பண்ணீங்கன்னு பேட்டி எடுப்பேன்.

நீங்க சொன்ன முதல் பொய்?
நிறைய சொல்லியாச்சுங்க. அதனால ஞாபகத்துல இல்ல.

அழகுங்றது என்ன?
எனக்கு மைக்கேல் ஜாக்சன் தான் அழகு. அவர் ஆடுற ஸ்டைல்.

புத்தகங்கள் படிக்கிற பழக்கம் உண்டா?
முதல் பக்கம் படிக்கும் போதே தூக்கம் வந்துடும். ஸ்கூல்லயே படிக்கததாலதான் நடிக்கவே வந்தேன்.

உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
எதப்பத்தியும் கவலைப்படாதீங்க. ஜாலியா இருங்க.

- இவள் பாரதி

கவிஞர் அறிவுமதி



உங்க சிறு வயது அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்.
விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள தூக்கினனூர் என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்தவன். மணிமுத்தாறு என்ற வெள்ளிமலையிலிருந்து இறங்கி வருகிற ஆற்றில் 14 ஆண்டுகள் குளித்த அந்த ஈரம் தான் மணிமுத்தாறு என்கிற அந்த அம்மாவின் ஈரம்தான் இன்னும் என் விரல் வழியே கவிதைகளாக, எழுத்துக்களாக கசிந்து வந்து கொண்டிருக்கின்றன என்று கருதுகிறேன். ஆறு ஓடினாலும் எனது ஊர் ஒரு புன்செய்க் காடாகத்தான் இருந்தது. அங்கே கம்பு, நெல், கேழ்வரகு, பச்சைப் பயறு, தட்டைப்பயறு, சாமை, திணை என என்தாய் மடிகணக்க விதைகளை அள்ளி அள்ளித் தெளித்து பயிர் வைத்து வாழ்ந்த அந்த வயல்வெளிகளில் நான் ஓடித் திரிந்தேன்.

அந்த காலக்கட்டங்களில் என்னுடைய உழைக்கும் அந்த தாய்கள், தந்தைகள், பாட்டன்கள், பாட்டிகள் அள்ளிக் கொடுத்த நாட்டுப்புறப் பாடல்கள்தான் என் காதுகள் வழியே உள் நுழைந்து என் இதயம் நிறைய அது கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து சிறகடிக்கிற பறவைகளாகத்தான் இன்று என் எழுத்துக்களாக இருந்தாலும், பாடல்களாக இருந்தாலும், சிந்தனைகளாக இருந்தாலும் அனைத்தும் அந்த புன்செய் காட்டு என் மூதாதையர்கள் போட்ட பிச்சை அல்லது பரிசு என்றுதான் சொல்வேன்.

புதிதாக எழுத வருகிறவர்களுக்கும், புரிதலோடு எழுத வருகிறவர்களுக்கும் ஒரு தமிழ்ப் பாலமாய் விளங்குகிற நீங்கள் கவிஞராயிருந்து பாடலாசிரியராய் வளர்ந்த பயணம் பற்றிச் சொல்லுங்கள்.
என்னுடைய உழைக்கும் மக்களுடைய பாடல்களை உள்வாங்கி வைத்திருந்தேன். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், வெள்ளை வரனார் போன்ற பழம்பெரும் பேராசிரியர்கள் எனக்கு அள்ளிக் கொடுத்த தமிழ் செம்மையோடும்தான் சென்னைக்குச் சென்றேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘முருகன் நடுகல் வீரனே’ என்கிற முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளனாகத்தான் அங்கே சென்றேன். ஆனால் திரைப்பட உலகில் இயக்குனர்கள் பாக்யராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் நான் ஏறக்குறைய 10, 15 படங்களுக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன்.

அந்த காலகட்டத்தில் நான் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் அந்த திரையுலகத்திற்குள் நுழைந்தேன். என்னுடைய ஆண் தாய் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் உள்ளத்தில் ஊடுருவியிருக்கும் பாரதிராஜா அவர்களுடைய 16 வயதினிலே என்கிற திரைப்படம்தான் என்னையும், என்னைப் போன்றவர்களையும் நீங்களும் திரைப்பட இயக்குனர்களாக வரலாம். திரைக்கதை எழுதலாம், பாடல் எழுதலாம் என்கிற நம்பிக்கை ஊட்டிய படம். அதுவரையிலும் திரைப்பட உலகம் என்பது தமிழர்களுக்கு அதுவும் அடிநிலைத் தமிழர்களுக்கு ஒரு இரும்புக் கோட்டையின் சுவர் எப்போது திறக்கும், திறக்காது என்கிற அவநம்பிக்கையிலேயே இருந்த தமிழர்களுக்கு அந்த இரும்புக்கதவை உடைத்து எங்களையும் உள்நுழைய வைத்த உணர்வுகளுக்குக் காரணமானவர் எம் ஆண் தாய்கள் இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர். அப்போது அந்த தளத்தில் என் நண்பர்கள் ஆங்காங்கே நீ எழுது, எழுது என்று சொன்ன போது நான் இயக்குனராக வேண்டும் என்பதற்காக மறுத்து வந்தேன்.

அந்த காலகட்டத்தில் தான் ‘கிழக்குச் சீமையிலே’ என்கிற படத்தில் பாரதிராஜா அவர்களோடு இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த என் உணர்வுகளைக் கவனித்த அண்ணன் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ‘நான் சிறைச்சாலை என்கிற ப்ரியதர்ஷனின் படத்தின் தமிழ்மொழியை எடுக்கிறேன். அதில் உரையாடல்கள், பாடல்கள் அறிவுமதி என்று போடப் போகிறேன். என்ன சொல்கிறாய்’ என்று கேட்க நான் மறுக்காமல் சரியென்று சொல்லிவிட்டேன். சிறைச்சாலை என்கிற படத்தில் இசைஞானியின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்கள்தான் ‘செம்பூவே பூவே’, ‘மன்னன் கூறைச்சேலை’, ‘சுட்டும் விழிச் சுடர் பார்வையிலே’, ‘ஆலோலங்கிளி தோப்பிலே’, ‘இது தாய் பிறந்த தேசம்’, என்கிற 5 பாடல்கள். அது உலகத் தமிழர்கள் அனைவரின் இல்லத்திற்கும் அழைத்துச் சென்று அவர்களுடைய செல்லப் பிள்ளையாக என்னை அறிமுகம் செய்து வைத்தன.

திரைத்துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது?
இப்போது திரைப்படத்துறையின் அகப்போக்கு சரியானதாக, திருந்தியதாக தெரியவில்லை. ஆனால் புறப்போக்கு என்று பார்க்கிற போது தமிழ் இன உணர்விற்கும், உலகத்தில் எங்கே தமிழன் காயப்பட்டாலும் அதற்கு மருந்து தடவ நாங்களும் தயாராக இருக்கிறோம் என்கிற உணர்வுகளை இன்றைக்கு திரைப்படத்துறை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் திரைப்படத்துறை என்பது பல்வேறு வகையான இன் மக்களுடைய கூத்துப்பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டுகள், தெம்மாங்குகள், ஒப்பாரிகள், அவர்களுடைய கூத்து அடவுகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு நவீன துறைதான். அந்த தமிழ்த்திரைத்துறை என்பது தமிழர்களுக்கானத் திரைத்துறையாக இன்னும் முழுமையாக ஒரு வெற்றியைக் காட்டவில்லை.

தமிழில் எடுக்கப்படுகிற திரைப்படங்களாக இருக்கின்றன. ஆனால் தமிழர்களுக்கான திரைப்படங்களாக இருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்லலாம். எனவே இந்தப் போக்கு அதாவது தமிழர்களுக்காக எடுக்கப்படுகிற 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், உதிரிப்பூக்கள், பருத்திவீரன் போன்ற தமிழர்களுடைய முகங்கள், தமிழர்களுடைய கதாபாத்திரங்கள், தமிழர்களுடைய வாழ்வியலினுடைய பல்வேறு வகையான தளங்களை இன்னும் முழுமையாக திரைக்கதையாக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

அதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை எடுத்து அலசுகிற திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வருமானால் அந்த நாளில்தான் இது செழித்த திரைப்படத்துறையாக, தமிழர்களுக்கான கலைத்துறையாக நான் ஏற்றுக் கொள்வேன். அதற்கான முயற்சிகளில் இன்றைக்கு பல்வேறு வகையான என்னுடைய இளைய தம்பிகள் இயக்குனர்களாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை விதை ஆங்காங்கே முளை விட்டுக் கொண்டிருக்கின்றன.

திரைத்துறையில் பாடலாசியருக்கான மதிப்பு எப்படி இருக்கிறது?
இன்றைக்குப் பாடலாசிரியருக்கான மரியாதை என்பது ஏறக்குறைய அனைத்து மக்களும் யார் எழுதிய பாடல் என்று தெரிவதற்கு ஊடகங்கள் இன்னும் உதவி செய்யாத ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த ஊடகத்தின் வாயிலாகவும் பதிவு செய்கிறேன். இசையமைப்பாளர் பெயர்களைச் சொல்கிறார்கள், எந்த படம் என்று சொல்கிறார்கள், இதை எழுதியவர் யார் என்று மட்டும் சொல்வதில்லை.

ஆனாலும் பாடலாசிரியர்கள் தளத்தில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி என்று அதீதமாக தெரிந்து கொள்ளப்பட்ட முகங்களை, பெயர்களைத்தான் சொல்கிறோமே தவிர, ஆலங்குடி சோமு, தேவநாதன், சுரதா, மாயவனார், மருதகாசி, பூவை.செங்குட்டுவன், புலமைப் பித்தன், யுகபாரதி, கபிலன், தாமரை, தேன்மொழி என்று வரிசை கட்டி 10 பாடல்கள் எழுதினாலும் அந்த பாடல்களுக்குள்ளாகவும் சிறப்பாகத் தமிழை நிறுத்துகிறார்கள் என அறிமுகப்படுத்த தவறுகின்றன என்ற குற்றச்சாட்டினை இங்கே முன் வைக்கிறேன்.

‘73, அபிபுல்லா சாலை’ நிறைய படைப்பாளிகளை தமிழுலகுக்குக் கொடுத்திருக்கிறது. இது தாங்கள் திட்டமிட்டு செய்த பணிதானா?

‘73, அபிபுல்லா’ சாலை இன்று ‘181 அபிபுல்லா’ சாலையாக மாறியிருக்கிறது. எண்தான் மாறியிருக்கிறதே தவிர என்னுடைய எண்ணங்கள் மாறவில்லை. என்றைக்கும் தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்குகளிலிருந்து வருகிற இளைஞர்களுக்கும் ஒரு தாய்மைக் கூடாக இருந்து பல படைப்பாளிகளைத் திரைத்துறைக்கு வார்த்தெடுக்கக் கிடைத்த ஒரு தமிழ்க்கூடாகத்தான் பார்க்கிறேன். இன்றைக்கு அந்த சூழல் இருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கேதான் பழநி பாரதி, முத்துக் குமார், யுக பாரதி, கபிலன் என பாடலாசிரியர்களான என் தம்பிகள், இதைப் போலவே இயக்குனர்களான சுந்தர்.சி, சீமான், செல்வ பாரதி, கவிதா பாரதி, ஜெயா என வரிசை கட்டி பல தம்பிகள் இங்கே தான் வளர்ந்தார்கள். என்னுடைய வளர்ச்சி அல்லது வளர்த்தெடுத்தேன் என்று சொல்வதை விட அந்த புன்செய்காட்டில் வளர்ந்த சூழல்தான் காரணம் என நினைக்கிறேன்.

முருங்கை மரத்தில் ஏறி காய்பறிக்கச் சொல்கிற கைகள் நான் இருபதோ, முப்பதோ பறித்துக் கொடுத்தால் முதலில் பதினைந்து காய்களை ‘அந்த அத்தை வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, மாமா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, சித்தப்பா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, பெரியப்பா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா’ என்று பல வீடுகளுக்கு அந்த முருங்கைக்காய்களை பறித்த என் கைகளாலேயே கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்து நான்கு முருங்கைக்காய்களைத்தான் என்னுடைய வீட்டுக்குள் எடுத்துச் செல்ல என்னை அனுமதிப்பார்கள்.

எனவே நமக்குக் கிடைத்த ஒன்றை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிடுத்தான் நாம் ருசி பார்க்க வேண்டும் என்று சொன்ன என் அம்மாவின், என் மூதாதையர்களின் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாட்டுத் தளத்தினுடைய வெற்றியாகத்தான் இந்த 73, அபிபுல்லாசாலையை பார்க்கிறேனே தவிர தனித்த அறிவுமதியினுடைய ஒரு குணமாகப் பார்க்கவில்லை

73 அபிபுல்லா சாலை நிறைய படைப்பாளிகளைத் திரையுலகுக்குத் தந்திருக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. 73 அபிபுல்லா சாலை மட்டும்தான் ஆலமரம் என்பது அல்ல. என் தம்பிகள் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஆலமரமாகி அவர்களும் என்னைப் போலவே பல படைப்பாளிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தோப்பாக இந்த தனிமரம் வளர்ந்து செழித்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை உள்ளம் நெகிழ பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போதும் அந்த வழிகாட்டுதல்கள் தொடர்கிறதா?
வழிகாட்டுதல் தொடர்கிறது. ஆனால் வருகிறவர் இதுதான் பாலாவை நான் பாலுமகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினேன் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு மேம்போக்காக வருகிறார்கள். அதற்கான திறமையும் அடையாளப் பதிவுகளும் இல்லாமல் என்னை வந்து பார்த்துவிட்டால் திரைப்பட உலகிற்குள் நுழைந்துவிடலாம் என்கிற ஆசையோடு வருகிறார்களே தவிர அவர்களுடைய அந்த திறமையின், முயற்சியின், வலிகளின் அடையாளங்களை எனக்கு காட்டியவங்களாக பெரும்பகுதி வரவில்லை என்பது ஒரு சோகமாத்தான் நான் பார்க்கிறேன்.

திடீர்னு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே ஏன்?
16 வயது வரை எந்த வாழ்க்கையை வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் வளர்ந்தேனோ அங்கே இப்போது சென்றிருக்கிறேன். விவசாயக் குடும்பங்களின் பண்பாட்டில் ஊறி வளர்ந்த நான் இதுதான் திணை, சாமை, வரகு, என்று என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அந்த மண்ணில் அந்த பயிர்கள் விளையவில்லை. எல்லாம் செயற்கையாகி விட்டது. 40, 50 மாடுகள் வளர்த்த குடும்பத்தில் இன்று ஒரு மாடு கூட இல்லை என்ற சோகம் எனக்குள் எப்போதும் இருந்துவருகிறது. இப்போதுதான் அதை உறைப்பாக உணர்ந்தேன்.

நம்முடைய அடையாளங்களை இழந்துவிட்டு, நமது மொழியை இழந்துவிட்டு, தமிழினம், தமிழன் என்று சொல்வதற்கு நமக்கு உரிமையே கிடையாது. அதனால்தான் மறுபடியும் எனது ஊருக்கு வந்திருக்கிறேன். அங்கே என்னுடைய மண்ணில் மண்புழுக்களே இல்லாத வயல்வெளிகளைப் பார்க்கிறேன். மறுபடியும் எனது மண்ணில் மண்புழுக்களை நெளிய விடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதைப் போலவே என்னுடைய மரபு சார்ந்த மரங்களை நட்டு வைத்திருக்கிறேன். செயற்கை உரம் போடாமல் இயற்கை உரத்திலேயே விளைகிற காய்கறிகளை இப்போது என் தோட்டத்தில் போய் நான் பறித்து சாப்பிட தொடங்கியிருக்கிறேன்.

தமிழில் ஆங்கிலம் கலப்பது எவ்வளவு கொடுமையானதோ அப்படித்தான் நம்முடைய மண்ணில் நம் இனம் சாராத அந்த தைல மரங்களை நடுவதும் என்கிற உணர்ச்சியை என் மண் இப்போது எனக்குச் சொல்லியிருக்கிறது. என் மண் என்பது என் தாய். அந்த தாயைக் களங்கப்படுத்தக் கூடாது. அவளை மறுபடியும் கழுவிக் குளிப்பாட்டி அவள் முகத்தில் ஒரு ஆதிப் புன்னகையை மீண்டும் நான் பார்க்க வேண்டும் என்கிற பசிதான் ஒரு எழுத்தாளன் விவசாயியாக மாறக்காரணம். ஒரு மண்ணில் ஒரு விதையை நட்டு, முளைவிட்டு அதிலிருந்து பசுமை பார்க்கிறவன்தான் எழுதுவதற்கே லாயக்குள்ளவன் என்கிற உணர்ச்சியை என் மண்தாய்தான் எனக்கு ஊட்டி வைத்திருக்கிறாள்.

நீங்கள் திரைத்துறையிலிருந்து விலகக் காரணம்?
திரைத்துறையிலிருந்து நான் விலகவில்லை. இப்போதும் நான் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடல் எழுதியதிலிருந்து விலகியது என்பது இன்றைக்கு வருகிற பாடல்கள் அனைத்தும் பெண்களை உடல்ரீதியாக வர்ணிக்கச் சொல்கிற பாடல்களாகவே பெரும்பகுதி இருக்கின்றன. அத்தகைய சூழலில் பெண்களைக் கொச்சை செய்யும் பாடல்களை உடல் உறுப்புகளை
வர்ணிக்கிற பாடல்களை எழுதிவிடக்கூடாது என்ற உணர்வோடுதான் நான் அதை மறுத்தேன்.

அதுமட்டுமல்ல தங்கள் உடலுறுப்புகளை இழந்தபிறகும் கூட தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக பொறுப்புணர்வுகளை இழக்காத தம்பி, தங்கைகள் போராட்டக் களத்திலே போராடிக் கொண்டிருக்கிற தமிழ் வாழ்வியல் சூழலில் அந்த தங்கைகளுடைய உடல் உறுப்புகளை வர்ணித்துதான் நான் காசு வாங்கி என் பிள்ளைகளுக்கு உடைகள் வாங்கித் தர வேண்டும் என்றால் அது கேவலமான வாழ்க்கை என்றுணர்ந்தே இந்த முடிவை எடுத்தேன்.

ஒரு கவிஞனுக்கு நிம்மதி எது?
உலகம் எந்தவித அணுஆயுத சோதனைகளும் இல்லாமல் எந்தவித போருமில்லாமல் அனைத்து மக்களுக்குமான, போர்க்குண்டுகள் விழாத வானத்தை என்றைக்கு அவன் உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞனுக்கு அமைதி. ஏனென்றால் கவிஞன் என்பவன் உண்டு, களித்து ஏதோ மிதப்பவனாகத்தான் சமூகமே கருதுகிறது. அல்ல அல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி காய்மபட்டாலும் கூட அதற்கு மருந்து தடவ வேண்டும் என்ற தேடல் உள்ளவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்ற தளத்தில் சொல்கிறேன்.

எந்த மண்ணிலும் போர்கள் இருக்கக் கூடாது. எந்த மக்களையும், எந்த வல்லாதிக்க உணர்வுகளும் நசுக்கக் கூடாது. குருதி கசிவு கூடாது. கண்ணீர் கசிவு கூடாது. போர் அமைதி, போர் நிறுத்தம் என்கிற நிம்மதியை உலகம் முழுதும் என்றைக்கு ஒவ்வொரு இனத்திற்கும் உரிமையாக்குகிறதோ, நான் இன்னொருவனுக்கு அடிமை இல்லை. இன்னொருவனை அடிமையாக்கவும் மாட்டேன் என்று நினைக்கிற சமூகத்தை என்றைக்கு உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞன் நிம்மதியடைவான்.

கவிஞனுக்கான தகுதிகளாக எதைச் சொல்வீர்கள்?
இயற்கையின் பிள்ளையாய், காயத்திற்கான மருந்தாய் தன்னை உணர வேண்டும், உணர்த்த வேண்டும். அதுதான் அவனுடைய தகுதிகளாக நான் பார்க்கிறேன்.

நட்புக்காலத்தின் வெற்றி எதிர்பார்த்ததுதானா? நட்புக்காலம் & 2 என்று ஏன் கொண்டு வரவில்லை?
நான் ஏறக்குறைய ஒரே இரவில் 60, 70 கவிதைகள் எழுதினேன். அந்த கவிதைகளைத்தான் இன்றைக்கு நீங்கள் நட்புக்காலமாகப் பார்க்கிறீர்கள். இந்த நட்புக்காலம் எழுதிமுடித்துவிட்ட பிறகு தம்பி பழநிபாரதி, தபு சங்கர் போன்றவர்களும் நானும் உட்கார்ந்துதான் கவிதைகள் எது எது அச்சுக்கு வரலாம், எதுயெது வேண்டாம் என்று முடிவு செய்து இந்த 40 கவிதைகளாக முதலில் வெளியிட்டோம். அதை வெளியிடுகிற போது இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை.

ஏராளமான காதல் கவிதைகளே வந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான ஒரு நட்பைச் சொல்லுகிற அந்த முயற்சி எனக்கு அன்றைக்கு புதிதாக இருந்தது. அதனை எனது திரைப்பட இயக்குனர்களான தம்பிகள் பலரும் படித்து விட்டு இந்த சிந்தனையே சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அந்த சூழலில் தமிழக மக்களும், உலகத தமிழர்களும் இவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால் இந்த வரவேற்பு என்பதெல்லாம் அறிவுமதிக்கான வரவேற்பாக நான் கருதவில்லை. இது புஞ்சைக் காட்டு வெளிகளிலே என்னோடு பழகிய தோழியர், தோழர்கள் இவர்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை.

ஆண், பெண் என்ற பிரிவில்லாமல் ஆற்றிலே ஆடைகளைக் களைந்து விட்டு நாங்கள் முழுநிர்வாணமாக குளித்துக் கரையேறியவர்கள். அங்கே எந்த பால் முரண்பாடுகளையும் உணர்ந்ததில்லை. அது போலவே சோளக்காடுகளின் அந்த பரண்களால் ஏறி அமர்ந்து கொண்டு அவர்கள் முந்தானைகளில் வைத்து அடித்துக் கொடுத்த காக்கைச் சோளத்தை வாங்கித் தின்ற அந்த பால் பருவத்திலும் பால் முரண்பாடுகள் வந்ததில்லை. எனவே நட்புக்காலத்தின் வெற்றியும், வரவேற்பும் வாழ்த்தும் என்னுடைய அந்த புன்செய் காட்டின் அழுக்குப் படாத அந்த நட்பு வாழ்க்கை, நட்பு உறவுகள், நட்பு தோழிகள் அவர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

Wednesday, 4 August 2010

பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ்


சிறுவயசுல எப்படி இருந்தீங்க?
இப்படியேதான். இவ்வளவு உயரம் இல்லை. இவ்வளவு சைஸ் இல்லை. இப்ப எப்படி ஜாலியா இருக்கேனோ அது மாதிரிதான் அப்பவும் இருந்தேன்.

திரைத்துறையில் வாரிசுகளுடைய வருகை அதிகமாயிருக்கு. இதை எப்படி பாக்குறீங்க?
இருக்கலாம். ஆனா அதை விட செகண்ட் ஜெனரேஷனை சேர்ந்தவங்க, டோட்டலி ஃப்ரெஷர்ஸ் நிறைய வந்திருக்காங்க. உண்மை என்னனா எங்களை மாதிரி ஆட்களுக்குத்தான் இன்னும் கஷ்டம். என்னோட அப்பா வந்து எனக்கு இன்ட்ரடக்ஷன் கொடுத்து இந்த இன்டஸ்ட்ரிக்குள்ள வரல. என்னைத் தேடி வந்த வாய்ப்புகள சரியா பயன்படுத்திட்டுத்தான் வந்திருக்கேன்.

உங்களோட ஃப்ர்ஸ்ட் ரெக்கார்டிங் பத்தி சொல்லுங்கள்..
என்னோட ஃபர்ஸ்ட் ரெக்கார்டிங் வித்யா சாகர் மியூசிக்ல ஒரு மலையாளப் பாட்டு. தமிழ்ல ஃப்ர்ஸ்ட் ரெக்காடிங் தேவா சார்கிட்டதான். ஃப்ர்ஸ்ட் ரிலீஸ்னு பாத்தீங்கன்னா இளையராஜா சார் கிட்ட ஃப்ரண்ட்ஸ் படத்துல 'வானம் பெரிசு'தான் பாட்டு. இது அருண்மொழி, எஸ்.பி.பி, நான் மூணு பேரும் சேர்ந்து பாடிய பாடல். அதுலயே 'ருக்கு ருக்கு ரூபிக்யா'ங்ற பாட்டுதான் ஹிட்டாச்சு.

ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம் இருக்கும். உங்களுக்கு மறக்க முடியாத விஷயம்?
ஜனவரி 21. என்னோட ஃப்ர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரி. அன்னைக்கு என்னோட மலையாளம் சாங்குக்கு ஒரு அவார்டு கிடைச்சது. இது முழுக்க முழுக்க மக்களால இன்டர்நெட் மூலமா ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப் பட்டது. அந்த பாட்டை பாடுனவங்க, இசையமைச்சவங்க, எழுதுனவங்க எல்லாருக்குமே கிடைச்சது. அன்னைக்கு என் மாமனார், மாமியார், அப்பா, அம்மா எல்லாரும் கூட இருந்தாங்க. பொதுவா நேஷனல் அவார்டு, ஸ்டேட் அவார்டு எல்லாம் ஜூரி செலக்ட் பண்ற மாதிரிதான் இருக்கும். அது மோஸ்ட்லி பாப்புலர் சாங்காவும் இருக்காது. ஆனா ஒரு மோஸ்ட் பாப்புலர் சாங்க மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. அந்த சாங்குக்கு கேரளா ஸ்டேட் அவார்டும் கிடைத்தது. அது பெரிய சந்தோஷம். மறக்க முடியாத விஷயம்.

முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டீங்களா? இல்ல அப்பாகிட்ட இருந்து வந்ததா?
அப்பாகிட்ட இருந்து வந்ததானு தெரியாது. ஆனா இப்பதான் முறைப்படி கத்துக்கிட்டிருக்கேன். கத்துக்கிட்டாதான் இம்ப்ரூவ் பண்ண முடியும். நமக்கு ஒரு டைமண்ட் கிடைச்ச பிறகு அத இன்னும் பட்டை தீட்டுற மாதிரிதான்.

உங்களுக்கு பிடிச்ச ராகம் எது?
கீரவாணி, தோடி, பகாடி.

உங்களைக் கவர்ந்த பாடகர்கள் யார்?
என்னோட அப்பா, சுஜாதா அக்கா, பி.சுசீலா அம்மா, சமீபமா சங்கர் மகா தேவன் சார். அவரோட ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் ரியலி அமேஸிங்.

ஏதாவது ஒரு பாட்டு இது நமக்குக் கிடைச்சிருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சதுண்டா?
அப்டிலாம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட பாடல்கள பாடணும்னு ஆசைப்பட்டதும் இல்ல. எல்லா சாங்கும் நம்ம பாடினா எப்டி இருக்கும்?னு யோசிப்பேன். அப்டி யோசிச்ச பாட்டுனா வெயில் படத்துல 'உருகுதே மருகுதே' பாடல்தான்.

பிறமொழிப்பாடகர்கள் குறித்து உங்க கருத்து என்ன? மற்ற மொழிகள்ல இருந்து தமிழ் மொழிக்கு பாட வர்றவங்கள பத்தி கேக்குறேன். நீங்களும் இதில் அடக்கம் தானே..
கண்டிப்பா. அதுல நானு ஒரு ஆளுதான். நான் வளந்தது எல்லாமே சென்னையில தான். நானும் ஒரு அவுட்சைடு சிங்கர் தான். அப்பா நிறைய பாடியிருக்கார். ஸ்ரேயா கோஷல், சோனா நீகம் இவங்கள்லாம் தமிழ்ல பாடும் போது அசிங்கமா பாட மாட்டாங்க. தி மேக் ஸ் பெர்ஃபக்ட். ஈவன்தோ மியூஸிக் டைரக்டர் வொர்க்கிங் வித் தெம். நிறைய இம்ப்ரூவ் பண்ணிதான் பாடுறாங்க. அது மாதிரி எல்லாரும் பண்றாங்க. ஆனா நாம ஹிந்தில பாடும்போது ஏத்துக்க மாட்டாங்க. அதே மாதிரி நாமளும் எஃபர்ட் எடுத்து சவுத் இன்டியன் அக்சன்ட் இல்லாம பாடுனா அக்சப்ட் பண்ணுவாங்க.

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
பேசுறதுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி அவ்ளோதான் தெரியும். பாடுறதுக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச்.

உங்க அப்பா பாடிய பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்சது?
அது ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பாட்டு பிடிக்கும்.

ஆங்கில வார்த்தைகளில் கலப்போடு பாடுவதை எப்படி உணருகிறீர்கள்?
அது நல்லபடியா வந்தா சரிதான். ஒரு நல்ல ஆங்கிலப் பாடல் சவுண்ட் எப்படி இருக்கணுமோ அப்டி இருக்கும் போது நல்லாதான் இருக்கும். ஆனா சில நேரங்கள்ல தேவையில்லாம வந்தா நல்லா இருக்காது. என்னோட 'தாவணி போட்ட தீபாவளி' பாடல்ல கடைசில 'ஆனாலும் நீ ஏஞ்சலு'னு வரும். அப்டி ஒரு வார்த்தைய யூஸ் பண்ணா பரவாயில்ல. ரைமிங்கா நல்லா இருக்கும். சில பாடல்ல இங்கிலீஷ் ஃபுல்லா வரும் போது நல்லா இருக்கும். டிஃபரண்ட் டைப் ஆஃப் சவுண்ட் வரணும்னா அதுமாதிரிதான் இருக்கணும். மோஸ்ட்லி எவிரிபடி கரெக்ட்டா பண்றாங்க. யுவன், மணிசர்மா, ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாருமே நல்லா பண்றாங்க. வலுக்கட்டாயமா வராம இயல்பா வந்தா பரவாயில்லை.

உங்களை மூத்த பாடகர்கள் யாராவது பாராட்டியதுண்டா?
சமீபத்துல நாம் ஃப்ளைட்ல போகும் போது பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை ரெண்டு தடவை பாத்தேன். ஏர்போர்ட்டுல தொடர்ந்து ரெண்டு நாளா பாக்குற வாய்ப்பு கிடைச்சது. அப்ப ‘உன்னைப் பாத்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு. வெஸ்டர்ன் மியூஸிக் கத்துக்க. ரொம்ப முக்கியம் அது. நம்ம இன்டஸ்ட்ரியில வெஸ்டர்ன் நிறைய இருக்கு. ஆனா வெஸ்டர்ன்ல நம்ம மியூஸிக் அவ்ளோ இல்ல. இந்தியர்கள் வெஸ்டர்ன்ஸ நல்லா யூஸ் பண்ணிருக்கோம். வெஸ்டர்ன் ஆல்பம்ல அங்க இங்க நம்ம மியூஸிக் வந்துட்டு போகும். நம்ம மியூஸிக் இவ்ளோ ஹைலெவல்ல இருக்கும் போது ஏன் மத்தவங்கள ஃபாலோ பண்ணனும்.’னு சொன்னாரு. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

உங்க துறையில நீங்க என்ன புதுமை செய்ய விரும்புறீங்க?
நம்ம செய்ற விஷயத்த சிறப்பா செய்யணும். எல்லாருமே புதுமை புதுமைனு சொல்லி ரொம்ப அதிகமா யூஸ் பண்றாங்க. இது புதுசா இருக்கும், வித்தியாசமா இருக்கும்னு சொல்றோமே தவிர நிறைய பேர் பண்றதில்ல. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலத்துல யுவன் வந்தாரு. டி.எம்.எஸ். காலத்துல கூட அப்பா, எஸ்.பி.பி அங்கிள் வந்தாங்க. இப்ப எல்லாத்துக்கும் ஒரு எக்ஸ்போர்ஷர் இருக்கு. டிவி. ரேடியோ அப்டினு நிறைய ஸ்பேஸ் இருக்கு. முன்னாடி அப்டி கிடையாது. நிறைய பேர் இருக்குறதால போட்டி அதிகமாக இருக்கு. ஆரோக்யமான போட்டிதான். அது இருந்தாதான் நல்லா இருக்கும்.

நீங்க பாடகரா இல்லாட்டா யாரா மாறியிருப்பீங்க?
தெரியாது. ஒருவேளை நடிகரா ஆகியிருப்பேன். அதுக்கு அழகு மட்டும் போதாதுல. நடிக்கவும் தெரியணுமே.

உங்களுடைய பொழுது போக்குகள்?
ஸ்போர்ட்ஸ், டிவி, மியூஸிக் கேக்குறது, படம் பாக்குறது.

உங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
எப்பவும் எல்லா விஷயத்திலயும் பாஸிட்டிவ் திங்கிங் உண்டு. ரொம்ப நல்ல விஷயங்களைப் பத்தித்தான் அதிகம் யோசிப்பேன். மத்தவங்கள்ல கூட தப்பு பாக்குறது ரொம்ப கம்மி. ஒருத்தவங்கள பத்தி மத்தவங்க தப்பா சொன்னா கூட நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். நம்மளோட தவற நாம சரி பண்ணிக்கணும். எனக்கு புறம் பேசுறது பிடிக்காது. எனக்கு ரெண்டு, மூணு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை. அதனால ரெண்டு பேரையும் தனித்தனியா சந்திக்க வேண்டியதிருக்கு. மத்தவங்கள குறை சொல்லிட்டே இருக்கக்கூடாது. நம்ம பெர்ஃபக்ட்டானு பாக்கணும். அப்படி யாராலும் இருக்க முடியாது.

உங்களுடைய தனித்துவமா எதை நினைக்கிறீங்க?
அப்படி ஒண்ணுமில்ல. வாழ்க்கைய முழுமையா அனுபவிச்சு வாழ்றதுதான் என்னோட தனித்துவம்.

ஃபாஸ்ட் சாங் பிடிக்குமா? மெலடி பிடிக்குமா?
ஸ்டேஜ்ல அதிகமா ஃபாஸ்ட் சாங்தான் பாடுற மாதிரி இருக்கும். எனக்கு ரெண்டுமே பிடிக்கும். வித்யாசாகர், யுவன், இளையராஜா இவங்களோட ஃபாஸ்ட் சாங்ஸ் பிடிக்கும். ரஜினி சாரோட பொதுவாக எம்மனசு தங்கம் பாட்டுல லேசா மெலடியும் இருக்கத்தான் செய்யும். பீட் மட்டும் இருந்து ரிதம் ஒண்ணுமே இல்லனா பிடிக்காது.

உங்க அப்பாவுக்கு பிடிச்ச பாடல்?
எனக்கு தெரியல. ஒருவேளை 'உன்னிடம் மயங்குகிறேன்' பாடல்.

உங்க அப்பா பாடல்கள உங்களுக்கு பிடிச்சது?
அப்பாவும் நானும் சேர்ந்து பாடுன ராம் படப்பாடல் 'மனிதன் சொல்கின்ற நியாயங்கள்'. தனித்தனியா ரெக்கார்டிங் பண்ணப்பட்ட பாடல்தான் அது. அதுல அப்பாவோட 'ஆராரிராரோ' எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்துல நான் தனியா பாடுனது 'நிழலினை நிஜமும் கடந்திடுமா?'.

இந்த மாதிரி ரெண்டு பேர் பாட வேண்டிய பாடல தனித்தனியா பாடும் போது அந்த ஃபீல் இருக்குமா?
ஒண்ணா பாடும் போது சில டைம்ல கன்டினியுட்டி இருக்காது. அதுமட்டுமில்ல அவங்கவங்க ஃப்ரீ டைம்ல வந்து பாடிட்டு போறது வசதியா இருக்கு.

உங்க பாடல்களைப் பாடும் போது அதில் இருக்கும் வரிகளை ரசித்ததுண்டா?
'எனக்குப் பிடித்த பாடல்' மாதிரி பாடல்ல வரிகளை ரசித்ததுண்டு. அதுல எவ்ளோ இருக்கு. மியூஸிக்கும், லிரிக்ஸும் சேரும் போது அதுல அவ்ளோ ப்யூட்டி இருக்குது. அந்த மாதிரி 'சிவாஜி' படத்துல 'சஹாரா பூக்கள் பூக்குதோ' பாடலும் ரொம்ப பிடிக்கு. 'நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது'.

ஒரே குடும்பத்துல உருவ ஒற்றுமை சகஜம்தான். ஆனா குரல் ஒற்றுமை உங்க அப்பாக்கும், உங்களுக்கும் இருக்கே எப்படி?
அவர் கண்டிப்பா என்னோட அப்பாதான்னு ப்ரூஃப். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சில சமயங்கள்ல பாடும் போது அப்பா மாதிரி வரும். பிரேம்ஜி ஒருதடவை அப்பா மாதிரியே பாடுறேன்னு சொன்னாரு. எல்லா சாங்கும் அந்த மாதிரி வராது.

ரொம்ப பிடிச்ச பண்டிகை எது?
அமெரிக்காவுல கிறிஸ்துமஸ் ட்ரெடிஷனலா கொண்டாடுவாங்க. அது எனக்குப் பிடிக்கும். அங்க பெரிய பெரிய வீடுகள்ல அலங்காரம் பண்ணுவாங்க. அதுவும் ரொம்ப பிடிக்கும்.

--இவள் பாரதி

Tuesday, 3 August 2010

திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார்


பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி..
‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு.

‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல்லுங்கள்..
இது ‘7ஜி ரெயின் போ காலனி’யில வந்த பாட்டைதான் தலைப்பா வச்சிருக்கேன். பாடல்கள் பற்றிய அனுபவக் கட்டுரை இது. பாடல் பிறந்த கதை பத்தி ஜாயித் அக்தர் பண்ணிருக்காரு. தமிழ்ல இதுவரை யாரும் பண்ணல. அப்படியே பண்ணிருந்தாலும் ஏழு, எட்டு வரிகளுக்குள்ளயே அந்த அனுபவத்த அடக்கிட்டாங்க. ஆனா ஆங்கிலத்தில நிறைய பண்ணிருக்காங்க. என்னோட ஒரு பாடலுக்குள்ள ஒரு வரி வருதுனா உதாரணமா 'ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ'னு தேரடி வீதி பாட்டுல எழுதிருப்பேன். அந்த வரி எங்கிருந்து வந்தது. அந்த வரிக்கு பின்னால மிகப் பெரிய கதை இருக்கு. அது எப்டி என்னுடைய வாழ்க்கை முறையோட சம்பந்தப்பட்டிருக்கு. இந்த மாதிரியான விஷயங்கள பதிவு பண்ணத் தோணுச்சு. அப்ப நான் வாரம் ஒரு பாடல்னு கிட்டத்தட்ட 25 பாடல்கள் எழுதிருக்கேன். அது மக்கள் மத்தியில பெரிய வரவேற்பை பெற்று ஏழு, எட்டு பதிப்புகள் வந்துருக்கு.

இதுவரை எத்தனை கவிதை தொகுதிகள் எழுதிருக்கீங்க?
பட்டாம்பூச்சியை விற்றவன், தோசிகன், நியூட்டனுன் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா, பச்சையப்பன் கல்லூரி, குழந்தைகள் படித்த வீடுனு ஆறு கவிதை தொகுதிகளும், ஜப்பான் காதல் கவிதைகளை மொழிபெயர்த்து ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’னு நான்கு தொகுப்புகளும், கண்பேசும் வார்த்தைகள், கிராமமும் நகரமுமான நகரம், பால காண்டம்னு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் சேர்த்து 13 புத்தகங்கள் வந்திருக்குங்க.

உங்களுடைய அடுத்த படைப்பு பற்றி..
ஆங்கிலத்துல ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது முடியுற நிலையில இருக்கு. அதுக்குத்தான் என்னோட முழு நேரத்தையும் செலவிடுறேன்.

உங்களுடைய அன்றாட பணியின் 5 முக்கியமான விஷயங்களாக எதைச் சொல்வீங்க?
எல்லாமே முக்கியம்தான். முதன்மைப் படுத்த வேண்டியதுனா பாடல் எழுதுறதுதான். கடந்த 5 ஆண்டுகளா அதிகப் பாடல்கள் எழுதுன பெருமை கிடைச்சிருக்கு. தொடர்ந்து அத தக்க வச்சுக்கிறதுக்கு ரொம்ப ஓட வேண்டியிருக்கு.

அதிக பாடல்கள் எழுதுற பாடலாசிரியர்ங்ற பேர் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாக்குறீங்க?
தொடர்ந்து 5 வருடமா நிறைய பாடல்கள் எழுதுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அத தக்க வச்சுக்கணும்னு நினைக்கிறேன். எண்ணிக்கை முக்கியமில்ல. எண்ணங்கள்தான் முக்கியம்னு சொல்வாங்க. நல்ல பாடல்கள தொடர்ந்து தமிழ் சமூகத்துக்கு கொடுக்கனும்ங்ற பொறுப்புணர்வு என் தோள்கள்ல ஏறி அமர்ந்திருக்கு.

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
அத நீங்கதான் சொல்லணும். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை என்னோட பாடல்கள பாடிட்டுருக்காங்க. அவங்கள பாடல்களோட எளிமை தான் ஈர்க்குதுனு நினைக்கிறேன். உயர்ந்த விஷயங்களை எளிமைப்படுத்தி சொல்றது, வாழ்க்கைல இருந்து வார்த்தைகள எடுக்குறது, நவீன இலக்கியத்த தொடர்ந்து வாசிக்கிறது, உலக சினிமாக்களின் பரிச்சயம், தொடர்ந்து பயணங்கள் இப்டி நிறைய சொல்லிட்டே போகலாம்.

உங்களின் புதிய சிந்தனைக்கான களமா எதைச் சொல்வீங்க?
என்னோட ஒவ்வொரு படைப்பும் புதிய சிந்தைனைக்கான களம்னு சொல்வேன். அது கவிதை, கதை, கட்டுரை, திரைப்படப்பாடல் எதுவா இருக்கட்டும். அது வந்து அதனுடைய வடிவத்த தேர்ந்து எடுத்துட்டு வெளியே வரும் போது புதிய படைப்பா இருக்கும்.

உங்களிடம் முரண்படும் விஷயம் அல்லது செயல்?
முரண்படுற விஷயம் நிறையவே இருக்கு. நான் ஒரு எழுத்துச் சோம்பேறி. பாடல்னா நிறைய எழுதுவேன். இலக்கியம்னா கொஞ்சம் ஊறப் போட்டு 6 மாசத்துக்கு ஒரு தரம் தான் எழுதுவேன். தொடர்ந்து நிறைய எழுதனும்னு ஆர்வம் இருக்கு.

பிரபலம்ங்றத எப்டி பாக்குறீங்க?
சுதந்திரத்துக்கு கொடுக்குற விலைன்னுதான் நினைக்கிறேன்.

திரைப்படப்பாடல்களின் தற்போதைய வரவு குறித்து என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. கண்ணதாசனுக்குப் பிறகு அதனுடைய பாதை கொஞ்சம் மாறி பட்டியல் போடுறது வந்தது. இது ஒரு 15 வருஷம் இருந்துச்சு. இப்ப எதார்த்தமா எழுதுறது, இது எனக்கு நடந்ததுனு எழுதுறதுனு எழுதுறாங்க. நிறைய படங்கள் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, புதிய புதிய முயற்சிகள் வந்துட்டே இருக்கு. கதைக்களமும், பாடலுக்கான சூழலும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதனால எழுத நிறைய களம் இருக்கு. அதான் தேரடி வீதி, முதல் மழை என்னை நனைத்தது, சூ சூ மாரி, வெயிலோடு விளையாடி, உனக்கென இருப்பேன், காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும்னு எழுத முடியுது. மக்கள் மொழியில அவங்கள நேரடியா சென்று சேர அளவுக்கு கொஞ்சம் அவங்க இதயத்த தொடும் அளவுக்கு திரைப்பட மொழி மாறிருக்குனு நினைக்கிறேன்.

புதிய பாடலாசிரியர்கள் அவங்கள தக்க வச்சுக்க என்ன பண்ணனும்?
பாடலாசிரியர்கள் மட்டுமில்லாம எந்த படைப்பாளியும் நிறைய படிக்கணும். புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கணும். கனவுகளை மட்டும் வைத்துக் கொண்டு எதிலயும் காலடி வைக்கக் கூடாது. தங்களைத் தயார்படுத்திக்கிட்டு திறமையோட சேர்ந்த கனவும், அதற்கான உழைப்பும் இருந்தாதான் தக்கவச்சுக்க முடியும்.

உங்களை உயர்த்திய இலக்கியத்துக்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?
இலக்கியத்த யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. எழுத்தாளர் வண்ணதாசன் சொல்ற மாதிரி ‘வாழ்க்கை ஒரு மகாநதி. கண் முன்னால ஓடிட்டிருக்கு. நான் என் கரையோரம் நின்னு என் கண்ணுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். அது மாதிரிதான். என் கண்ணுக்குப் படும் விஷயங்களையும், என் உள்ளங்கையில் அள்ளிக் குடிக்கும் தண்ணீரையும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய புதுமையான முயற்சிகள் பத்திச் சொல்லுங்களேன்..
எல்லா முயற்சியுமே புதுமையான முயற்சிதான். பழைய முயற்சி எதுவும் இல்ல.

வித்தியாசமான முயற்சி ஏதாவது?
செய்வது எல்லாமே வித்தியாசம்தான்.

ஒரு கவிஞனுக்கான முகவரியாக எதை பார்க்கிறீர்கள்?
கவிஞனுக்கான முகவரி அவனோட படைப்புகள்தான்.

உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் பற்றி..
நிறைய பேர் இருக்காங்க. தமிழ்ல எடுத்துக்கிட்டா 2000 வருஷம் பாரமப்ரியம் கொண்டது. சங்க இலக்கியத்துல தொடங்கி இன்றைக்கு இருக்குற நவீன கவிஞர்கள் வரை பட்டியல் போடலாம். உடனே ஞாபகத்துக்கு வர்றதுனா கவிஞர் கலாப்ரியா, விக்ரமாதித்தன், பசுவய்யா, கல்யாண்ஜி, ஆத்மநாம், நகுலன்னு சொல்லிட்டே போகலாம். சினிமாவுல எழுதுறவங்க மட்டும் கவிஞர்கள் இல்ல. சினிமாவுக்கு வெளியேயும் நிறைய நல்ல கவிஞர்கள் இருக்காங்க. தொடர்ந்து வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கணும்.

இப்ப என்னென்ன புத்தகங்கள் படிச்சிட்டிருக்கீங்க?
நான் ஆங்கில நாவல்கள் அதிகமா படிப்பேன். எஸ்.ராவோட யாமம், சேத்தன் பகத்தோட நாவல்கள் படிச்சிட்டிருக்கேன்.

ஒரு படைப்பாளி கவிஞனா இருந்து சிறுகதை நாவல்னு அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் வளர்ச்சியா? அதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லாமே இலக்கியத்துல ஒரு பகுதிதான். அது கவிதையாக, கதையாக, நாவலாக எதுவாக இருந்தாலும் சரி, நாம எழுதும் கருப்பொருள்தான் அத தீர்மானிக்குது. நானே கவிதையும், கதையும், கட்டுரையும் எழுதிருக்கேன். பாடலாவும் மாறியிருக்கு. அனுபவம் தான் அத தீர்மானிக்கும்.

உங்களுக்கு பிடிச்ச நாள்?
எல்லா நாளுமே திருநாளுதாங்க.

நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்?
அப்டி யாரும் இல்லங்க. வாழ்க்கை ஒரு கம்பளம் மாதிரி. தினம் தினம் புதிதாய் விரிக்கப்படுகிறது. அடுத்து யாரை சந்திக்கப் போறோம்னு தெரியாத வரைதான் சுவாரஸ்யமா இருக்கும்.

உங்களுடைய தனித்தன்மையாக எதைச் சொல்வீர்கள்?
அத நீங்கதான் சொல்லனும்.

உங்களுடைய கவிவரிகள்னு நினைக்கிறோம். நீங்க யாருக்காவது காத்திருந்ததுண்டா?
வாழ்க்கையே ஒரு காத்திருப்புதான்.

வார்த்தைகள்தான் உங்களுக்காகக் காத்திட்டு இருக்கு. அந்த அளவுக்கு உங்க உவமைகள் இருக்கு. உங்களைக் கவர்ந்த பாடல் வரிகள்னா உடனே எதைச் சொல்வீங்க?
அங்காடித்தெரு படத்துல ‘புல்லும் பூண்டும் வாழும் உலகம், நீயும் வாழ்ந்திட வழியில்லையா? பூமியில் ஏழையின் ஜனனம், அது கடவுள் செய்த பிழையில்லையா? இது மிகக் கொடுமை, இளமையில் வறுமை. பசிதான் மிகப்பெரும் மிருகம், அதை அடக்கிட இங்கு வழியில்லையா? கண்ணீர்தான் மிகப்பெரும் ஆழம், அது கடலை விடவும் பெரிதில்லையா?’னு எழுதிருப்பேன். அது எனக்குப் பிடித்த வரிகள்.

கண்ணீர்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. தநா 07 படத்துல ‘கண்ணீரைப் போல வேறு நண்பன் இல்லை’னு எழுதிருப்பீங்க?
ஆமா உண்மைதான். கண்ணீரைப் போல வேறு நண்பன் இல்லை, கற்றுக் கொள் துன்பம் போல பாடம் இல்லை.

இளமையை எப்படிக் கொண்டாடலாம்னு நினைக்கிறீங்க?
இளமையை மட்டுமில்ல ஒவ்வொரு கணத்தையும் நமக்கான கணம்னு நினைக்க ஆரம்பிச்சாலே முதுமையும் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஓஷோ சொல்வது போல் அந்தக் கணத்தில் வாழ்வதுதான் சந்தோஷமளிக்கும்.

குழந்தைகளிடம் பிடித்த விஷயம்?
குழந்தைகளே பிடிச்ச விஷயம்தான். பூவுல எந்த பகுதி பிடிச்சதுன்னு கேக்குற மாதிரி இருக்குது.

உங்களைப் பெருமைப்படுத்தியதா நீங்க நினைக்கிற நிகழ்வு..?
நிறைய இருக்கு. இப்ப உங்க கூட பேசிட்டு இருக்குறது கூடத்தான்.

நினைக்கும் போதெல்லாம் இனிக்கிற விஷயம்?
சர்க்கரைனுதான் சொல்லனும்.

உங்க பாடல்களைக் கேட்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?
அந்த பாடல் எழுதின சூழல்தான் ஞாபகம் வரும். அது பெரிய சந்தோஷம் தந்ததில்லை. ஏன்னா எந்தப் பாட்டக் கேக்கும் போதும் அது எழுதும் போது பட்ட கஷ்டங்களும், அந்த வரிகளுக்கான முயற்சியும் தான் எனக்கு ஞாபகம் வரும்.

வெயில் படத்துல ‘வெயிலோடு உறவாடி’ பாடல் எழுயிருப்பீங்க. அது உங்க அனுபவமா?
ஆமா. அந்த பாடல் முழுக்க என்னோட அனுபவங்கள்தான். குழந்தை பருவத்துல நான் விளையாடின விளையாட்டுக்கள் எல்லாமே கலந்ததுதான் அந்த பாடல். குறிப்பா ‘புழுதிதான் நம்ம சட்டை’ அந்த வரியை கவிஞர் வாலி ரொம்ப பெருமையா சொல்வார். மத்த வரிகளைக் கூட வேற கவிஞர்கள் எழுதிடலாம். அந்த ஒருவரிய எழுதத்தான் முத்துக்குமார் வேணும்னு சொன்னார். அந்த பாடலுக்குத்தான் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைச்சது.

‘கனவெல்லாம் பலிக்குதே’ பாடல் ஒரு தந்தை தன் மகனைப் பார்த்து பெருமைப்படுற மாதிரி வர்ற பாடல். உங்களுடைய தந்தை அந்த மாதிரி ஒரு அனுபவத்தை அடைஞ்சிருக்காரா?
கண்டிப்பாக, குறிப்பா அந்தப் பாட்டை என் தந்தைக்காகத்தான் எழுதுனேன். என்னை வளர்த்தது முழுக்க என் தந்தைதான். அந்த பாடலை எழுதும் போது என் அப்பாவை நினைச்சுதான் எழுதுனேன். குறிப்பா அந்த பாடல் வந்த பிறகு நிறைய தந்தைகள் என்னைத் தொடர்பு கொண்டு அவங்க மன உணர்வுகள பிரதிபலிச்சதா சொன்னாங்க. அதுலயும் முத்தாய்ப்பா அந்த அப்பா கேரக்டர்ல ராஜ்கிரண் நடிச்சாரு. அவர் இந்த பாட்டக் கேட்டுட்டு ஒரு இரவு நேர ஷூட்டிங் அப்ப சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்ப என்னையக் கட்டிப் பிடிச்சுக் கண்கலங்கிட்டாரு. அந்த பாடல் கேட்டதும் அவருக்கு அவங்க அப்பா, அம்மா ஞாபகம் வந்துடுச்சுனு. அந்த பாடலுக்கு இன்னைக்கும் நிறைய ரசிகர்கல் இருக்காங்க.

ம்ம். அதே மாதிரிதான் ‘புண்ணாக்குனு சொன்னா கூட கவலை இல்லைடா. ஒரு புள்ளையத்தான் வஞ்சிடாத அப்பன் யாருடானு’ எழுதியிருந்தீங்க?
ஆமா. அப்பா திட்டுறத ஏத்துக்கணும்னு எழுதியிருப்பேன். அந்த பாட்ட ஸ்டுடியோவுல 20 நிமிஷத்துல எழுதினேன். அந்த பாட்டுல வடிவேல் இருக்குறதால காமெடியாவும், அதே நேரத்துல சீரியஸாவும் இருக்கணும்னு சொன்னாங்க. அந்த மாதிரி எழுதிய பாடல்தான் அது. அப்புறம் வேப்பமரம் புளியமரம்னு சாமி படத்துல அப்பா பாடுற மாதிரி ஆரம்பிச்சு கதாநாயகன் பாடுற மாதிரி முடியும். டைரக்டர் ஷங்கருக்கு சாமில பிடிச்ச பாட்டு அதுதான்னு சொல்வாரு.

‘ஆழியிலே முக்குளிக்கும் அழகே’னு வர்ணிக்கிற வார்த்தைகளைப் போட்டு எழுதியிருக்கீங்களே.
கர்னாடக இசையில் அமைந்த அருமையான மெட்டு. அந்த மெட்டைச் சிதைக்காம வார்த்தைகள் போடணும்னு தோணுச்சு. நான் எப்பவும் ரியலிஸ்ட்டிக்காதான் எழுதுவேன். ஃபேன்டஸியா எழுத மாட்டேன். ஒரு பாட்டு கொஞ்சம் ஃபேன்டஸியா ட்ரை பண்ணலாமேனு முயற்சி பண்ணேன். பொதுவா பெண்ணையோ, ஆணையோ உடல் சார்ந்த வர்ணனைகள் தவிர்த்துதான் எழுதுவேன். அதுல ஒண்ணு ரெண்டு விதி விலக்குல ஆழியில முக்குளிக்கும் அழகும் ஒண்ணு. ‘நீயா? நானா?’ கோபிநாத் ஒரு பண்பலைல இருக்கும் போது இந்த பாடலை ஒளிபரப்பும் போது முத்துக்குமாருக்கு காத்துல ஒரு மோதிரம் போடுறேன்னு சொல்வாராம். நான் கால்ல கையில போடுங்கன்னு சொன்னேன். பாராட்டுதானங்க சிறந்த மோதிரம்.

கவிஞர்கள் புனைப்பெயர் வச்சுக்குற கலாச்சாரம் இருக்கு. நீங்க புனைப்பெயர் வச்சுக்கலயா? இனிஷியலோட உங்க பேர வச்சிருக்கீங்க.?
என் பேரே நல்லாதான இருக்கு. அதுமட்டுமில்லாம எனக்கு முன்னாலயே மு.மேத்தா, நா.காமராசன்னு இனிஷியலோடதான் வச்சிருக்காங்க. என் பேர் அழகாத்தானே இருக்கு. அதனால புனைப் பெயர் வச்சுக்கல.

அப்ப புனைப்பெயர் வச்சிருக்கிறவங்க எல்லாம் அவங்களுக்குப் பிடிக்கலைனு வச்சிருக்காங்களா?
தெரியலையே. அத அவங்ககிட்டதான் கேக்கணும்.

‘நேரம் பொறந்திருச்சு ஏலே’ பாட்டுல சிவப்பு சிந்தனை வரிகள் இருக்குதுனு நான் பாக்குறேன். நீங்க என்ன சொல்றீங்க.?
அந்த வடிவத்த உருவாக்குனது ரஹ்மான் சார்தான். மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் சமூக சிந்தனை, சுற்றுச்சூழல் பத்திதான் இருக்கும். அதுமாதிரி தமிழ்ல முயற்சி பண்ணலாமேனு ‘கருப்பு கலரு ஜூஸ் வேண்டாம், கரும்பு, இளநீர் வாங்கிக் குடிப்போம், காரைவிட்டு சைக்கிள் ஏறிப் பறப்போம்’னு எழுதிருப்பேன். அது ரஹ்மான் சார் கொடுத்த சுதந்திரம் தான்.

நீங்க பாடல் நல்லா எழுதுறீங்க சரி, பாடுவீங்களா?
இல்ல பாடமாட்டேன். சும்மா முணுமுணுப்பேன். நான் இப்ப அடிக்கடி முணுமுணுக்குற பாடல் பையா படத்துல “துளித்துளி மழையாய் வந்தாளே” அங்காடித்தெருவுல ‘உன் பேரைச் சொல்லும் போதே’ இந்த ரெண்டு பாடலும்தான்.

உங்க வாசகர்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
அடுத்த தலைமுறைய வாசிக்கிற தலைமுறையா உருவாக்க நீங்க நிறைய வாசிங்க. புத்தகத்தின் மீதான காதலை அதிகப் படுத்துங்க. அறிமுகப்படுத்துங்க.

இந்த நேரத்துல யாருக்காவது நன்றி சொல்ல விரும்புறீங்களா?
என்னைய உருவாக்குன என் அம்மா அப்பவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

--- இவள் பாரதி

Monday, 2 August 2010

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியுடன் (அன்னையர் தினத்தை முன்னிட்டு) ஒரு நேர்காணல்..

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..
கணவர் கான்ட்ராக்டரா இருக்கார். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்தான். பொண்ணக் கட்டிக் கொடுத்து ஒரு பேரப் பிள்ளை இருக்கான். பையன் இன்ஜினியரா இருக்கான். ரொம்ப சந்தோஷமான குடும்பம்.


ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற அடையாளம் தவிர ஒரு அன்னையாய் உங்கள் குழந்தைகளிடம் உங்கள் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
ஒரு கனரக வாகன ஓட்டுநர் நம்ம அம்மா அப்டினு சந்தோஷப் படுறாங்க. அதுமட்டுமில்லாம இவ்ளோ கஷ்டமான வேலை செய்திட்டும் பிள்ளைங்கள ஒழுங்கா பார்க்க முடியுது. ஒரு அம்மாவா இருக்கும் போது அப்பாவ விட கூடுதலா பொறுப்பும், கஷ்டமும் இருக்கும். அம்மாவுக்குத்தான் பிள்ளைங்களை நல்வழிப்படுத்தி வளர்க்குறதுக்கு பெரிய கடமை இருக்கு. காலையில வேலைக்குப் போய்ட்டு குழந்தைகளை கவனிச்சுக்குறது கஷ்டம் தான். விடா முயற்சியோட பிள்ளங்களை தன்னம்பிக்கையோட வளக்கணும்னு நினைச்சேன். அவங்க படிக்கிறதுக்கு உறுதுணையா இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு கன ரக வாகன ஓட்டுநரா மட்டுமில்லாம ஒரு அம்மாவாவும் சிறப்பா இயங்குறேன்.

உங்கள் அம்மாவைப் பற்றிக் கூறுங்களேன்.
என்னுடைய ஒன்றரை வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. அதனால அம்மாவோட அம்மாதான் வளத்தாங்க.

நீங்கள் அம்மா இல்லாமல் வளர்ந்த பெண், சிறந்த அம்மாவாக இருக்கும் பெண். இந்த நிலையை எப்படி உணருகிறீர்கள்?
ஒரு அம்மாவா ரொம்ப சிறப்பா உணருறேன்.

தமிழ்நாட்டுல எத்தனை பேர் இந்த கனரக வாகனம் ஓட்டிட்டு இருக்காங்க?
என்னை அப்பாயின்ட் செஞ்சு 6 வருஷத்துக்குப் பிறகு கன்னியாகுமரியில இன்னொரு பொண்ண அப்பாயின்ட் பண்ணாங்க. அதுக்குப் பிறகு சென்னையில ரெண்டு பேர ஏ18 பஸ்ல அப்பாயின்ட் பண்ணாங்க.

இந்த துறைக்கு வர வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது?
பெண்கள் பெரும்பாலான வேலைகள் பாத்தீங்கன்னா டீச்சர் வேலை, ஆஃபிஸ் வேலை இப்டிதான் செய்திட்டு இருக்காங்க. அவங்கள கஷ்டமான வேலைகளை செய்ய விடுறதும் இல்ல. பெண்களும் முயற்சி செய்றதும் இல்லை. முடியாதுனு ஒண்ணு கிடையாதுனு சொல்வாங்க. அந்த மாதிரி நான் முயற்சி பண்ணேன். எங்க அண்ணன் முயற்சியால முதல்ல லைட் வெகிக்கிள் ஓட்டுனேன். இது எனக்கு ஈஸியா வந்தது. சுலபமா இருக்கேனு ஹெவி வெகிக்கிள் ஓட்டுனா என்னனு ஒரு எண்ணம். ஆனா லேடிஸால முடியாதுனு சொன்னாங்க. ஆனா என்னால முடியும்னு கத்துக்க ஆரம்பிச்சேன்.

வீட்டுல உள்ளவங்களோட ஒத்துழைப்பு கிடைச்சதா?
பொண்ணாச்சேனு வீட்டுல எல்லாரும் பயந்தாங்க. வீட்டுல ஒத்துழைப்பு கிடைக்கல. பயத்தால எதிர்த்தாங்க. ஆம்பிளைகளே இந்த வேலைக்கு கஷ்டப்படும் போது பொம்பளையால முடியாது. பின்னால வேதனைப்படாதனு பாசப்பிணைப்புல தடுத்தாங்க. ஆனா அவ்ளோ கஷ்டமானு பாக்கலாம்னு ஒரு வீராப்போடதான் களமிறங்கினேன். பயந்தா உலகத்துல வாழ முடியுமா? என்னால முடியும்னு நான் நினைச்சதால இதுவரை எந்த விபத்தும் இல்லாம ஓட்டிட்டு இருக்கேன்.


இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லையா?
இதுவரை இல்லங்க.

வாழ்த்துகள். வாகன ஓட்டுனர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
எப்பவுமே கவனமா இருக்கனும். ஒரு கண்ணத் தட்டி முழிக்கிறத விட கொஞ்சம் கூட தட்டி முழிச்சம்னா அந்த நேரத்துல விபத்து நடந்திடும். அதனால போதையில வண்டி ஓட்டாம சிக்னல்ல கவனிச்சு, எதிர்க்க வர்ற வண்டிய கவனிச்சு சைடுல ஓவர் டேக் பண்றாங்களானு சைடு மிரர் கவனிச்சு ஓட்டுனா விபத்து வர்றதுக்கு வாய்ப்பு இல்ல. நம்மள மாதிரி எதிரே வர்றவங்களும் கவனத்தோட ஓட்டுனாங்கன்னா 80சதவீதம் விபத்துக்கள தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் விபத்துக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு வாகனம் ஓட்டுவதை தவிர வேறு என்ன காரணம்?
சாலை வசதி சரியில்லை. 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரிதான் இப்பவும் சாலை வசதி இருக்கு. அன்னைய விட இன்னைக்கு வாகன நெருக்கடி அதிகம். இதுவும் விபத்துக்கு ஒரு காரணமா இருக்கு.

சிறு வயதில் தைரியசாலியாக இருப்பீர்களா?
சின்னப்பிள்ளைல நான் ரொம்ப கோழையாவும், பயந்தவளாவும் இருந்தேன். பிறகு ஒவ்வொரு ஸ்டேஜிலயும் சமூகத்தைப் பாத்து பாத்து தைரியம் வந்துச்சு.

கனரக வாகம் ஓட்டுறதால உங்க உணவு முறைகள்ல மாற்றம் செஞ்சிருக்கீங்களா?
சாப்பாடுல ஒண்ணும் வித்தியாசம் இல்ல. ரெகுலரான சாப்பாடுதாங்க.

மகளிர் மட்டும் படத்துல நிஜமான பெண் ஓட்டுநரா வந்திருப்பீங்க. உங்க ஓட்டுநர் வாழ்க்கையில சக பயணிகள் எப்படிப் பாக்குறாங்க. சக ஆண் ஓட்டுநர்கள் எப்படி பார்வையில வேறுபாடு இருக்குதா?
இப்ப நாகர்கோவில் டூ திருவனந்தபுரம் ஃபாஸ்ட் பஸ் ஓட்டிட்டு இருக்கேன். நம்ம இடத்த விட கேரள மக்கள் வித்தியாசமா இருப்பாங்க. சின்னச் சின்ன ரூட்டுல டிராஃபிக்ல சைடு கொடுக்க முடியாத போது அவங்க வேணும்னு சைடு தர மாட்டேங்றாங்கனு நினைப்பாங்க. அப்ப ஆம்பிளைனு நினைச்சு முன்ன வருவாங்க. லேடி டிரைவர்னு தெரிஞ்சதும் ரொம்ப அன்பாவும், மதிப்பாவும் நடந்துக்குவாங்க. எனக்கு நல்ல கோ&ஆபரேஷன் தர்றாங்க. ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் சொல்றதும் நடக்கும். சின்னக் குழந்தைக்குக் கூட அவங்க அம்மா "அந்தா டிரைவர் ஆன்ட்டி வர்றாங்க டாட்டா சொல்லு"னு சொல்வாங்க. அதனால எனக்கு உற்சாகமா செயல்பட முடியுது.

அந்தக் காலத்துலேயே டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி படிக்கக் கூடாதுனு சொல்லி அவங்க அம்மா தடை பண்ணினாங்க. அவங்க அப்பாதான் அவங்கள வெளிய கொண்டு வந்தாங்க. அந்த மாதிரி இப்பவும் சில அம்மாக்கள் இருக்கத்தான் செய்றாங்க. அவங்களுக்கு சிறந்த அன்னையான நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
அப்படி பெண் பிள்ளைகள அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாதுனு தடுக்குற அம்மாக்களுக்கு என்ன சொல்ல விரும்புறேன்னா மகள் தவறான வழியில போனா தவறான செயல் செஞ்சா அத தடுக்கணுமே தவிர ஒரு நல்ல காரியம் செய்யும் போது நல்லா படிக்கனும்னு சொல்லும் போது அத தடுக்கக் கூடாது. பெண்கள் தைரியமா இறங்கி வெளி வேலை செய்யும் போது அத இந்த சமுதாயம் கொச்சைப்படுத்துது. ஆனா அவங்க இனிவரும் காலங்கள்ல மாறிடுவாங்க. எல்லா வேலையிலயும் சம உரிமை இருக்கு. அதனால பெண்கள தட்டிக் கொடுத்து முன்னுக்குக் கொண்டு வரணும்னு இப்ப உள்ள தாய்மார்களுக்கு சொல்லிக்கிறேன். தன்னோட குழந்தைகள் மேல் நம்பிக்கை வச்சு எந்த செயலையும் செய்ய அனுமதிக்கணும்.

பெண்கள பலவீனமானவங்கன்னு சொல்றாங்களே..
அவங்கள வளர்க்குற முறையிலதாங்க இருக்கு. வெளியே போகாத, வெயிட்ட தூக்காதேனு வச்சிருக்குறதால பெண்களுக்கு முயற்சி பண்றதுக்குள்ள சந்தர்ப்பமே கிடைக்கல. அதனாலதான் பெண்கள வீக்னஸ் ஆனவங்கன்னு சொல்றாங்க. நம்ம முயற்சி பண்ணி பாக்குற போதுதான் அது முடியும்னு தெரியும். தன்னம்பிக்கையும், முயற்சியும் பெண்கள்கிட்ட இருந்தா அவங்களால முடியாதது எதுவுமே இல்ல. சின்னப் பிள்ளைல கனவு கண்டாக்கா ஒரு பஸ்தான் என்னைத் துரத்தும். பஸ்னா எனக்கு பயம். நான் ஓடி ஒளிஞ்சிக்கிட்டே இருப்பேன். அது கனவில. இப்ப ஆப்போஸிட்டா நான் பஸ்ஸ அடக்கிக் கொண்டு போறேன். நம்ம பயத்த பலமா மாத்திடனும்.

மக்களுக்கு சொல்ல விரும்புறது..
நம்மால முடியாதுனு ஒதுங்கி இருக்காம தன்னம்பிக்கையோட முயற்சி செய்யனும். கோழையா இருக்கக் கூடாது. நிறைய பெண்கள் எனக்கு அது செய்ய முடியாது, இது எனக்கு தெரியாதுனு சொல்றத ஸ்டைலா நினைக்கிறாங்க. அது நமக்கு லைஃப்ல பெரிய அடியா இருக்கும். இப்ப தகப்பனாரோட, சகோதரர்களோட அரவணைப்புல இருக்கலாம். ஆனா நாம சமூகத்துல சாதிச்சுக் காட்டணும்னா நிறைய அனுபவப்படனும். எல்லாம் தெரிஞ்சுக்கனும். தெரியாததோ, முடியாததோ முயற்சி பண்ணிக் கத்துக்கிட்டா முடியும். அப்டி பெண்கள் வாழ்ந்து காட்டணும்.

--இவள் பாரதி

Friday, 21 May 2010

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்


இன்று குழந்தைகள் தினம் என்பதற்காக மட்டுமின்றி இந்தக் கேள்விய கேக்கல. ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது மிக முக்கியமானது. உங்கள் குழந்தைப் பருவம் அனுபவம் எப்படியிருந்தது.?
விருதுநகர் மாவட்டம் சாத்துப்பட்டி பக்கத்துல இருக்குற நென்மேனிங்ற கிராமத்துல தான் கழிஞ்சது. அது என்னுடைய அப்பாவுடைய ஊர். அங்கதான் முதல் வகுப்புல இருந்து 11ம் வகுப்பு வரை படிச்சேன். அம்மா, அப்பா எங்க கூட இல்லை. அவங்க வேலை நிமித்தமா வெவ்வேறு ஊர்கள்ல வாழ்ந்திட்டுருந்தாங்க. அதனால தாத்தா பாட்டி கூட இருந்தேன். அது ஒரு பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா கூட பொறந்த அத்தைகள் எல்லாரும் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்துல நான் இருந்தேன். அப்புறம் என் தம்பி இளங்கோ. எழுத்தாளர் கோணங்கினு அறியப்பட்டவர். அவனும் என் கூட வந்து சேர்ந்தான். ரெண்டு பேரும் அந்த கிராமத்துலதான் 10,15 வருஷம் இருந்தோம். 2 வயசுல இருந்து நான் அந்த ஊர்ல இருந்தேன். அப்பா, அம்மா கூட இல்லாத ஏக்கத்தோடயேதான் என்னுடைய காலம் முழுவதும் கழிஞ்சது. தாத்தா பாட்டியுடனிருந்த சந்தோஷமும், அப்பா, அம்மா கூட இல்லாத வருத்தமும் கலந்திருந்தது என் குழந்தை பருவம்.

உங்களுடைய எழுத்தாற்றல் குழந்தை பருவத்துலயே ஆரம்பிச்சுடுச்சா?
அம்மாவுடைய அப்பா அந்த காலத்துலயே புகழ்பெற்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர், சுதந்திர போராட்டத்துல பங்கெடுத்துக்கிட்டவர். தமிழ்சினிமாவின் பேசும்படத்துக்கு முதல் பாடல், வசனம் எழுதியவர். அப்பா வீட்டுல இருந்து அம்மா வீட்டுக்கு விடுமுறை காலங்கள்ல போவோம். அங்க புத்தகங்கள் இருக்கும். அப்பவே ரேடியோ இருக்குற வீடா இருந்துச்சு. எங்க ஊர்ல ரேடியோ இல்லாத சமயம் அது. அம்மா வீட்டுல தாத்தாவுக்குத் தனி ரூம் இருந்துச்சு. அது ரேடியோ ரூம். எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல அவர் இறந்துட்டாரு. அவர் வீடு பூரா புத்தகங்கள் இருக்கும். அப்புறம் எங்க அப்பா எழுதுவாங்க. எழுத்துங்றது எங்க குடும்பத்துல அதுவும் வாழ்க்கைல ஒரு பகுதி என்ற உணர்வு சின்ன வயசுலயே ஏற்பட்டதுக்கு குடும்ப சூழல் ஒரு காரணம். எங்க வீட்டுல அப்பா, சித்தப்பா, தாத்தா இப்படி எல்லாரும் எழுதுவாங்க. அதனால எழுதுவது வாழ்க்கையின் ஒரு பகுதிங்ற எண்ணம், புரிதல் சின்ன வயசுலயே வந்துடுச்சு.

‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ங்ற குழந்தைகளுக்கான படைப்பு குறித்து சொல்லுங்களேன்.
அது ரொம்ப பின்னாடி இப்ப எழுதுனது. குழந்தைகளுக்கான சமூகவியல் சார்ந்த கட்டுரைகள். பொதுவா தமிழில் வந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான கட்டுரைகள், கதைகள் மீது பெரிய அசூயை எனக்கு உண்டு. எதுவும் குழந்தைகளுக்கான உலகத்தோடு குழந்தைகள் மொழியில் இல்லாமல் இருக்கிறது. காக்கா, கீக்கி, கூக்கூ னு இதான் குழந்தைகளுக்கான இலக்கியம்னு உண்டாகி வச்சிருக்காங்க. அது ரைமிங்கா இருக்கு சரிதான். ஆனா குழந்தைப்பருவம்ங்றது 14 வயசு வரை இருக்கு. ஆறாவதுக்கு மேல படிக்கிறவங்க சமூக நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கிறாங்க. அவங்களுக்கு சமூகம் பற்றிய கேள்விகள் இருக்கும். எங்க ஊர்ல 96&97ல சாதிக் கலவரம் நடந்துச்சு. சாதினா என்னங்ற கேள்வி அந்த வயசுக் குழந்தைகள்கிட்ட இருக்கு. ஆனா பாடப்புத்தகத்துல இல்ல, எங்கேயுமே இல்ல, அந்த மாதிரி, சாதி குறித்த, சமூகம் குறித்த குழந்தைகளுக்கான கட்டுரை எழுத வேண்டும்ங்ற உணர்வு ஏற்பட்டது. அதுக்காக சோதனை முயற்சியா எழுதுனதுதான்.


குழந்தைகளுக்கான படைப்புகள் பெருகியிருக்குன்னு நினைக்கிறீங்களா?
குழந்தைகளுக்கானப் புத்தகங்கள்னு பேர் போட்டு வர்ற புத்தகங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கு. அதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடையாது. இந்த புத்தகங்கள்தான் என்னைக்கும் வந்துட்டே இருக்கே. அது சரியில்லைங்றதுதானே. குழந்தைகளுடைய உலகத்தில் குழந்தைகளோடு நின்று பேசுகிற மொழியில் வருகிற புத்தகங்கள் ரொம்ப குறைவு. குழந்தைகளை நோக்கி இப்ப மாமா கதை சொல்லப் போறேன் கேளுங்கனு போதிக்கிற அறிவுரை சொல்கிற தகவல்களை சொல்கிற புத்தகங்கள்தான் அதிகமிருக்கு. இதுதான் குழந்தைகள் புத்தகங்களாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட புத்தகங்கள் வேஸ்ட்.

குழந்தைகளுக்கான படைப்புகள்னு நீங்க எதை சொல்வீங்க?
அது குழந்தைகளும், எழுதுபவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய எழுத்து. இருட்டு எனக்கு பிடிக்கும்ங்ற என்னோட புத்தகமே நான் கட்டுரை எழுதி குழந்தைகள் மத்தியில வாசித்து அவங்களையும் வாசிக்கச் சொல்லி, அதுல அவங்க நிறைய கேள்விகள் கேட்டு, புரியாத வார்த்தைகளை நீக்கி கொண்டு வந்தது. அவங்க இந்த கட்டுரை நல்லா இல்லைனு சொல்லி நிறைய ரிஜெக்ட் பண்ணாங்க. அதயெல்லாம் போடாம அப்புறம் அவங்க சொன்னத எல்லாம் சேத்து திரும்ப எழுதி அப்புறம் கொண்டு வந்தேன். அப்டினாலும் 8 கட்டுரை எழுதினதுல் 4தான் எனக்கு திருப்தியா வந்திருக்கு. இது குழந்தைகளுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப் பட வேண்டியது. இது மாதிரி குழந்தைகளோடு சேர்ந்து உழைத்து உருவாக்கணும்.


‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ற நூல் யாருக்காக எழுதப்பட்டது?
‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ங்ற புத்தகம் வந்து தூத்துக்குடியில இருக்குற துறைமுகத் தொழிலாளிகளுக்காக எழுதுனது. அங்க இருக்கக்கூடிய 5000 தொழிலாளர்கள் அங்க இருக்கக்கூடிய தொழிற்சங்கங்கள்ல இருக்காங்க. ஆனா அவங்களுக்கு அரசியல்னா என்னனு தெரியாது. அவங்களுக்கு ஒரு கல்வி புகட்டுவதற்கான ஒரு வாசிப்பு புத்தகமா எழுதுனேன். எல்லாருக்கும் அது பிடிச்சதா இருந்தது. அதனால ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் புத்தகங்கள் போட்டு இன்னும் மறுபதிப்பு போயிட்டு இருக்கு.

உங்க புத்தகங்களோட தலைப்புகள பாத்தீங்கன்னா ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’, ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’னு இருக்கு. இந்த தலைப்புகள் இயல்பா வந்ததா? இல்ல நீங்க ரொம்ப நாளா யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தீங்களா?
புத்தகத்தை எழுதி முடிச்சுட்டுதான் நாம தலைப்பு வைக்கிறோம். புத்தகத்துல இருக்குற பொருள் சார்ந்துதான் அந்த தலைப்பு இருக்கும். அதே சமயம் புத்தகச் சந்தைல அல்லது புத்தகங்கள் பட்டியல்ல வாசகர்கள் பாக்கும் போது அவங்கள ஈர்க்கணும்ங்றது என்னோட கருத்து. எல்லா புத்தகங்களுக்கும் ஈர்ப்பாதான் தலைப்பு வச்சிருப்பேன்.

உங்களுடைய ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் பத்தி சொல்லுங்களேன்.
அது ரெண்டு பதிப்பு வச்சிருக்கு. முதல் பதிப்புல ‘ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்’னு வந்தது. இரண்டாவது பதிப்பு ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ அப்டிங்ற பேர்ல வந்திருக்கு.

இந்த மாதிரி விஷயங்களை எழுதனும்னு எப்டித் தோணுச்சு?
சமைப்பது ஆண்களுடைய வேலைனு நான் நினைக்கிறேன். சமைப்பது பெண்களுடைய வேலைனு யாருக்கும் சந்தேகம் இல்லாததாக நமது சமூகம் இயங்கிக்கிட்டு இருக்கு. இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று.

கொஞ்சம் தெளிவுபடுத்தி சொல்லுங்களேன்.
பெண்கள் வேட்டையாடிய காலத்துல இருந்தே உலகத்த, மனித சமூகத்தை பராமரிக்க வந்தாங்க. ஆண்கள் வேட்டைக் காலத்ஹ்டுல இருந்தே சும்மா காடுகளைச் சுத்துபவனாக, ஊரைச் சுத்துபவனாக இருந்திருக்கான். ஆகவே வெளி என்பது ஆணுக்கானதாவும், எல்லாரையும் கவனிக்கிற, பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு பெண்ணுக்கானதாவும் வேலைப் பிரிவினை வரலாற்றுல ஏற்பட்டுச்சு. இதுல சுமைகளெல்லாம் பெண்ணுக்கும், சுதந்திரமெல்லாம் ஆணுக்கும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நியாயமில்லாத நிலை வந்துடுச்சு. ஆகவே இந்த விஷயம் மனசாட்சியை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன். திட்டமிட்டு எழுதப்பட்டதுதான் இது. கவிதை, கதை மாதிரி தன்னெழுச்சியா வந்தது இல்ல. அது ஒரு அரசியல் நடவடிக்கை.

நீங்க ஒரு ஆணாக இருந்து கொண்டு சொல்லக் கூடிய இந்தக் கருத்துக்கு ஆண்கள் மத்தியில வரவேற்பு இருந்ததா?
இல்ல. நான் வந்து ஆணாக இல்லை. ஆனாக இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். உடல்ரீதியாக நன் ஒரு ஆண். மனரீதியாக ஆணுக்கு என்னன்ன குணங்கள் இருக்கோ அதெல்லாம் அதெல்லாம் தேவையில்லைனு நினைக்கிறேன். இது எனக்கு நானே கண்டுபிடிச்சது இல்ல. ஆணாதிக்கம் என்பதுதான் ஆணினுடைய குணம். அது மட்டுமில்ல. ஆண்மை என்பதற்கான சில அர்த்தங்கள் இருக்கு. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் கட்டமைக்கப் பட்டவை. ஆகவே எனக்கு அந்த உணர்வு அப்பப்ப வரும். அதை உடனே உடனே போராடி நான் ஒரு ஆண் இல்லைன்னு போயிட்டே இருக்கேன். நான் ஒரு மனுஷி அல்லது மனிதன் அல்லது ரெண்டும்னே வச்சுக்கலாம். அதனால எனக்கு அந்த உணர்வு இல்லை. ஒரு மனிதனா இருந்து பாக்கும் போது இதெல்லாம் அநியாயம்னு தோணுது. எதெல்லாம் அநியாயம்னு தோணுதோ அதை பத்திதான் பேசணும், எழுதணும்ங்றது என்னுடைய உயிரியல் நடவடிக்கையா நினைக்கிறேன்.

ஆண்களுக்கான சமையல் பத்தி எழுதியிருக்கிற நீங்க வீட்டுல எப்பவாவது சமைச்சிருக்கீங்களா?
நான் வீட்டுல இருக்குற எல்லா நாட்கள்லயும் சமையலறையில் என்னுடைய மனைவியை அனுமதிப்பதில்லை. திருமணமான ஓராண்டு இருவரும் சேர்ந்து சமைச்சோம். அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 25 வருடமா நான்தான் சமைக்கிறேன். முதல்ல அவங்க கொஞ்சம் தயங்குனாங்க. இப்ப அவங்களுக்கும் பழகிப்போச்சு. அவங்க காலை எந்திரிச்சு பேப்பர் படிப்பாங்க. வேலைக்குப் போற தயாரிப்புல இருப்பாங்க. நான் சமையல் முடிப்பேன். நானும் கிளம்புவேன். அவங்களும் கிளம்புவாங்க.

நல்ல விஷயம்தான். உங்களைப் பாத்து யாராவது மாறியிருக்காங்களா?
மனசாட்சி உள்ளவர்கள் தாங்களே மாறுவார்கள். அத நாம சொல்லணும்னு அவசியமில்ல. நிறைய ஆண்கள் இன்னைக்கு சந்தோஷமா சமைக்கத் துவங்கியிருக்காங்க. வேலைகளைப் பகிர்ந்துக்கிறாங்க. ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் பின்பற்றுவது அவ்வளவு அதிகமா நடக்காது. என்னோட பழகுற சிலருக்கே இந்த மாதிரி இருக்குறது அவங்க மனச உறுத்துது.

ஆண்கள் சமைப்பதை விமர்சன நோக்கோடு பார்க்கிற பார்வை இருக்கே.
அது குறைஞ்சுக்கிட்டே வருது. நகர்ப்புறங்கள்ல ஏன் கிராமப்புறங்கள்லயும் கூட ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ல அந்த மாற்றம் வந்துடுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கிட்டாதான் வேலைக்குப் போக முடியும்ங்ற சூழல் இருக்கு. இந்த மாற்றங்கள் காலத்தின் சந்தர்ப்பத்தால் வந்திருக்கு. நான் என்ன சொல்றேன்னா, அத ஏன் மனப்பூர்வமா செய்யக்கூடாது. பல ஆண்கள் சமையல்ல உதவி செய்றாங்க. அத உதவினு நினைச்சு செய்றாங்க. உதவினு நினைச்சாலே அது பெண்களுடைய வேலைனு வருது. அது ஆண்களுடைய வேலைனு நினைச்சாதான் மாற்றம் வரும்.

ஆண்டாண்டு காலமா கட்டமைக்கப்பட்ட மூளை, மரபணுக்களில் எல்லாம் திடீர்னு இந்த மாற்றங்களை கொண்டு வந்துடுமா என்ன?
மரபணுக்கள்னு சொன்னா அது இயற்கைன்னு அர்த்தம் வந்துடும். மரபணுக்கள்ங்றது உடம்புல இருக்குற ஒண்ணு. இந்த வேலைப் பிரிவினைங்றது உடல் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்தது. சமூகம் திணித்தது. இது கற்பனையானது, பொய்யானது, அராஜகமானது, அறிவியலுக்கு புறம்பானது. இதுக்கு மரபணுக்கள் காரணமில்ல. பழக்கத்துல வந்ததுதான். பழக்கத்த மாத்திக்கலாம்.

பெண்ணியம் குறித்து பேசுகிற எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
எல்லாரும் ஒரே குரல்ல ஒரே புரிதலோட பேசுறதில்ல. பெண்ணியத்துக்கான அர்த்தமும் நிரந்தரத்துவமுடைய ஒன்றல்ல. அதனுடைய அர்த்தமும் காலத்திற்கு காலம் மாறிட்டே வருது. ஒரு காலத்துல அதாவது 1900ல புருஷன் செத்தா அவன் கூட சேத்து வச்சு கொளுத்துனாங்க. ராஜாராம் மோகன்ராய் மாதிரியானவர்கள் போராடி உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினாங்க. வாழும் உரிமை தேவை என்பது அன்றைய பெண்ணியமா இருந்தது. அடுத்த கட்டமா கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று கேட்டது பெண்ணியமா இருந்தது. அதற்கடுத்த கட்டமா பெண்ணுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்டது அமெரிக்கா உட்பட பல நாடுகள்ல இயக்கமாவே நடந்தது. அது அன்றைய பெண்ணியமா இருந்தது. அது காலத்துக்கேற்ப மாறுபடுது. பெண்ணியம்னா என்ன ஆணுக்கு சமம் என்கிற சிந்தனையும், அதற்கான சமூக உத்திரவாதத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற குரல்தான் பெண்ணியம்னு சொல்றோம். அதை உண்மையாகப் பேசுபவர்களை எப்போதும் மதிக்கிறோம்.

ஒரு படைப்பாளிக்கான சமூக அக்கறையாக எதை சொல்வீர்கள்?
எல்லா மனிதர்களுக்கான சமூக அக்கறை எதுவோ அதுதான் படைப்பாளிக்கும். படைப்பாளிக்கு எது சமூக அக்கறையாக இருக்க முடியும்னா அவன் வாழுகிற சமூகம் ஏற்றத்தாழ்வு இல்லாததாக, பால் பேதமற்றதாக, சாதி, மத பேதமில்லாததாக, சமத்துவம் நிறைந்ததாக எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதான அவா, அதை நோக்கிய பயணமும், அதற்கான உழைப்பும் செலுத்துவதுதான் சமூக அக்கறை. ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு சாத்தியமான வழிகள்ல செய்றாங்க. படைப்பாளிங்றவன் அதை எழுதுறான். இவன் மனசாட்சியோட தொடர்புடையவன். ஆகவே இவன் மனங்கள நோக்கிப் பேசுகிறவன். தகவமைக்கிறவன். அதனால இவனுக்குக் கூடுதலான பொறுப்பிருக்கு. மத்தவங்க பேசுற மாதிரி இவனுடைய வார்த்தைகள் இருக்க முடியாது. இன்னும் கூடுதல் பொறுப்புள்ள வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுகிற அவசியம் இவனுக்கு இருக்கிறது.

ஒரு படைப்பாளி சம்பாதிக்க வேண்டிய விஷயமா எதைப் பாக்குறீங்க?
எல்லாவிதமான அனுபவங்கள். படைப்பாளி எழுத்தாளனாக இருந்தால் மொழியின் மீதான ஆளுமை. தமிழ்ல எழுதக்கூடிய படைப்புகள் சங்க இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள்ல இருக்கக்கூடிய எல்லாவிதமான மொழி பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் உள்வாங்கணும். ஒரு நாட்டியக் காரராக இருந்தால் அவர் எல்லாவிதமான நாட்டிய அடவுகளையும் கற்றவனா இருக்கணும். ஏனா மொழி என்பது ஊடகம். அதனூடாகத்தான் சமூகத்திடம் பேசப் போகிறோம். உறவு கொள்ளப் போகிறோம். அதனால இதெல்லாத்தையும் சம்பாதிக்கணும்.

நவீன படைப்புகள் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் இருக்கிறது. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க.?
மக்கள் என்பவர்கள் ஒரே தரமான கூட்டமல்ல. இப்ப பள்ளியில படிக்கிறாங்க. அதுல ஒண்ணாப்புக்கு, அஞ்சாப்புக்கு, பத்தாப்புக்குனு தனித்தனி பாடங்கள் இருக்கு. அதே மாதிரி எழுத்தாளர்கள்ல ஒண்ணாப்புக்கு எழுதுறவங்களும் இருக்காங்க. 12ம் வகுப்பு எழுதுறவங்களும் இருக்காங்க. நீங்க அஞ்சாப்பு படிச்சிட்டு 12ம் வகுப்பு புத்தகத்த வாங்கிப் படிச்சுட்டு புரியலனா அது எழுத்தாளனோட குற்றமல்ல. தன்னை வளர்த்துக் கொள்வதில் வாசகனுக்கும் பங்கு இருக்கு. அது போல எல்லாருக்கும் புரியும்படியான சென்று சேரும் படியான எழுத்துக்களும் இருக்கு. அதனால இதுல வாசகர்கள் எழுத்தாளர்கள் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு.

‘வெயிலோடு போய்’ங்ற உங்க சிறுகதை திரைப்படமாக்கப்பட்டது பற்றி..
5,6 வருஷத்துக்கு முன்னால சசி திரைப்படமாக்குறேன்னு கேட்டாரு. தயாரிப்பாளர் கிடைக்க தாமதமானதால ‘பூ’ங்ற பேர்ல 2009 வெளியானது.

அந்த சிறுகதை பற்றி சொல்லுங்களேன்.
ஒரு கரிசல் கிராமத்தில் சொந்த அத்தைப் பயன், மாமாப் பொண்ணுக்கும் இடையில ஏற்படக்கூடிய அனுபவங்கள்தான் கதை. சிறு வயசுல இருந்து ஒண்ணா விளையாடி, ஒண்ணா பேசி வரக்கூடிய கட்டத்துல அந்த குறிப்பிட்ட அன்புங்றது காதலா இருக்காது. அந்த வயசுல அது அன்பு, அக்கறையா இருக்கும். எதையும் அவனோடு இல்ல அவளோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய உந்துதல் இருக்கும். அது பருவ வயதில் காதலா மாறுது. அது ஒரு பக்கமா இருக்கு. அவனுக்கு இந்த காதல் இல்லை. ஆனா அவளைக் கல்யாணம் செய்யமுடியாத சூழல்ல இருப்பான். ரெண்டு பேருக்கும் வெவ்வெறு இடத்துல திருமணமாகுது. திருமணமானவுடனே காதல் கட்டாயிடணும். அது இருக்கக்கூடாது. அதான் இங்க இருக்கக்கூடிய விதி. இந்த கதை அதை மீறுது. திருமணத்துக்குப் பின்னாலும் தன்னுடைய மச்சான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறா அவ. அப்டி இருக்குறது சரியா தப்பாணு கேட்டா அவளுக்கு சரி. தப்பெல்லாம் தெரியாது. அதே சமயம் தன்னுடைய கணவனிடமும் அன்னியோன்யமா இருக்கக்கூடியவ. இதுதான் அந்த கதையின் மையம்.

‘வெயிலோடு போய்’ அப்டிங்ற 4 பக்க சிறுகதைய எப்டி ரெண்டரை மணி நேர திரைப்படமா கொடுக்க முடியும்?
அதாவது ரெண்டு கதைய ஒண்ணாக்குனோம். ‘அசோக வனங்கள்‘ங்ற கதை பால்ய காலத்தையும், ‘வெயிலோடு போய்’ங்ற கதை வெவ்வேறு இடங்கள்ல திருமணமான பிறகு சந்திக்கும் போது நடக்குறதையும் சொல்றது. கதையே ஒரு நாள்ல நடக்குறதுதான். ஊருப் பொங்கலுக்கு மச்சானும், மச்சான் சம்சாரமும் வர்றாங்கன்னு கேள்விப்பட்டு பக்கத்து ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போகலாம்னு வந்திருப்பா. வந்து பாத்துட்டு மச்சான் நல்லா இல்லைனு தெரிஞ்சதும் அவ மனசு உடைஞ்சு திரும்புறா. இதுல ஃப்ளாஷ் பேக்ல அவங்க பால்ய காலம் வரும்.

முழுக்க முழுக்க ‘பூ’ படத்த உங்களோட அப்டைப்புனு சொல்ல முடியுமா?
கதை என்னோடது. சினிமா அவருடையது. திரைக்கதைல கொஞ்சம் சேத்துருக்காரு.

திரைக்கதைல உங்க பங்களிப்பு இனி தொடருமா?
அது என்னோட கையில இல்லை. யாராவது நல்ல இயக்குனர் கேட்டா கொடுக்கலாம்.

ஒரு படைப்பாளிக்கான விருதுங்றது அங்கீகாரம்தானே..
எனக்கு ஒவ்வொரு வேலையும் முக்கியம். அது மாதிரி எழுதுறங்றது முக்கியமான வேலை. இத தனிச்சுப் பாக்கல. அதனால இந்த படைப்புக்கு இவ்ளோ அங்கீகாரம் வந்திருக்கணுமேனு நினைக்கல. ஒரு வாளிக்கு அங்கீகாரம் வந்திருக்கணும். ஒரு வாளி இல்லை. அரை வாளிதான் வந்திருக்குனு ஒண்ணுமே கிடையாது. நாம எழுதுறோம். நாம எழுதியிருக்குறது சரியா இருக்கா? அதான் நம்ம கவலையா இருக்கணும். நான் பெரிய எழுத்தாளர். எழுதி முடிசுட்டேன். படிக்கிறதும், படிக்காததும் அவன் வேலைன்னு விட முடியாது. மக்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. உன் கதைய படிக்கிறது அவங்களுக்கு முக்கியமான வேலை கிடையாது. மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறது உட்பட அது எழுத்தாளர்களோட வேலைதான்.

ஒரு கட்டுரைல அக்கா கையால அடி வாங்காத ஏக்கத்தை வெளிப்படுத்துயிருப்பீங்க?
அக்கா என் காத திருகி, என் தலைல ஒரு கொட்டு வைக்கிறதுக்கு எனக்குனுவாழ்க்கைல எனக்கு வாய்ப்பு கிடைக்கல. எனக்குனு அக்கானு ஒருத்தி பொறந்தவ சின்ன வயசுலயே இறந்துட்டா. அக்கா கையால கொட்டு வாங்குறவங்க கொடுத்து வச்சவங்கனு எழுதியிருந்தேன். அக்கானு ஒருத்தி இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா உறவுகளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு. எனக்கு ஒரு அக்கா இல்லைங்ற ஏக்கம் இருக்கு. நான் பொறக்குற முன்னாடியே அக்கா பொறந்து இறந்துட்டதா வளரும் போது சொன்னாங்க. எனக்கு அக்கா பற்றிய நினைவுகள் சின்ன வயசுல இருந்து இருக்கு. மனிதனுக்கு எத்தனையோ ஏக்கங்கள் இருக்கு. அது மாதிரி எனக்கு அக்கா இலைங்ற ஏக்கம்.

ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கட்டுரை எழுத்தாளன், ஒரு சிறுகதை எழுத்தாளன் அப்டினு ஒண்ணும் யோசிக்கிறதில்ல. எந்த வடிவத்துல எழுத வருதோ அந்த வடிவத்துல எழுதிட்டுப் போக வேண்டியதுதான். ஒரு விஷயத்த சொல்றதுக்கான வடிவம் சரியாயிருக்குதானு அதன் உள்ளடக்கம்தான் தீர்மானிக்கணும். எந்த ஒரு எழுத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதும் அதன் உள்ளடக்கம் தான். நம்ம முகத்துல எவ்வளவு சதைகள், எவ்வளவு எலும்புகள் எந்தெந்த அளவுல இருக்குங்றத பொறுத்துத்தான் முக வடிவமிருக்கும். எழுத்தும் அதைப் போலானதுதான்.

சில நேரங்கள்ல எழுத்துக்கள் பிரச்சாரமா இருக்குங்ற விமர்சனத்த நீங்க எப்டி பாக்குறீங்க?
இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதே இல்லை. எழுத்துங்றது பிரச்சரத்துக்காகத்தானே. உலகத்துல எழுதப்பட்ட ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒன்றை இன்னொருவருக்குச் சொல்வதற்காக எழுதப்பட்டதுதான். பிரச்சாரம்னா என்ன? ஒரு கருத்தை இன்னொருவருக்குச் சொல்வது அல்லது இன்னும் பல பேருக்கு சொல்வது. எந்த எழுத்து யாருக்கும் சொல்லப்படாத எழுத்து. இது பிரச்சாரம், அது பிரச்சாரம்னு சொல்றவங்க அரசியல் செய்றாங்கன்னு அர்த்தம். அதெல்லாம் தூர வச்சிட்டு நாம எழுதிட்டு இருக்க வேண்டியதுதான்.

உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்னு யாரைச் சொல்வீங்க?
நிறைய பேர் இருக்காங்க. கு.அழகிரிசாமி, புதுமைப் பித்தன், தஸ்தாவெஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தர் பாதிச்சிருக்காங்க. பிரபஞ்சன், வண்ண நிலவன், வண்ணதாசன். சில எழுத்துக்கள் எல்லா வயசிலயும் பாதிச்சுட்டு இருக்கும்.

நீங்க அடிக்கடி படிக்கிற புத்தகம் பற்றி..
அது துறைசார்ந்ததா இருக்கு. ஈ.எஸ்.நம்பூதரி எழுதிய ஈன்டிஅ ஜீலன்னிங் இன் அரிசிச் அப்டினு எகனாமிக் புத்தகம். லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ இலக்கியத்துல கு.அழகிரிசாமியின் குறிப்பிட்ட சில கதைகள். இதெல்லாம் வெவ்வேறு காலகட்டத்துல நம்ம அனுபவங்கள விரிவுபடுத்தும். அந்த வாசிப்பனுவம் வேறுபடும். ஒரு சிறந்த படைப்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமா இருக்கும்.

உங்க இலக்கை அடைஞ்சதா நினைக்கிறீர்களா?
இதுவரை என்ன செஞ்சுக்கிட்டேருந்தேனோ அதான் இலட்சியம்னு வச்சுக்க வேண்டியதுதான். வாழ்க்கையில் இறுதி வரை இதை தொடர்ந்து நம்முடைய மக்களுக்காக சமூக நீதிக்காக எந்தெந்த வழியில் முடியுமோ அந்தந்த வழியில் உதவுவதுதான் இலட்சியமா இருக்க முடியும்ணு நினைக்கிறேன். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயமா எதை நினைக்கிறீங்க? சொந்தமா யோசிக்கணும். சொந்த வார்த்தைகளைப் பேசணும், நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே, நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே இருந்து எது வந்தாலும் அதை பார்த்து வியக்கக்கூடாது. அது நல்லதா? கெட்டதானு சீர்தூக்கிப் பார்த்துதான் ஏற்கணும். வெளியே இருந்து வருவதாலயே அதை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது நமக்கு சொந்த மரபை அபகரிக்காமல் இருக்குமாங்றத பாக்கணும். இன்றைக்கு இதுதான் அவசியம்னு நினைக்கிறேன்.

சொந்த மரபு என்பதன் அர்த்தம்?
சொந்த மரபு என்பது நமக்கான பாரம்பரியம். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளுக்கு பாரம்பரியம் இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த நாடுகள்ல இந்திய நாகரீகமும் ஒண்ணு.

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?