Friday, 1 August 2008

பிரிவு

சில நாட்களுக்கு
முன்பு வரை
என் நினைவுகளில்
கீதமிசைத்த பூபாளம்
இப்பொழுது முகாரியாய்....
இருட்டிலிருந்து
விடுதலையளித்தவளே
பாதாளத்திற்கு
பயணப்பட வைக்கிறாய்...

நீதிமன்றத்தில்
ஒத்திவைக்கப்படும்
வழக்கைப்போல்
மரண மன்றத்தில்
உன் பயணமும்
ஒத்தி வைக்கப்பட்டு...
யுரேனியத்தைப்
பிரயோகிக்கிறது
உன் பிரிவு!

நினைவுகள்

மலைக்கோட்டை உச்சி
மருத்துவமனை வளாகம்
பேருந்திற்கான காத்திருப்பு
பெருமழைக்கு ஒதுங்கிய மரம்
இன்னும் இன்னுமாய் ....

நாம் சென்ற இடங்களைக்
காணும் போது
நினைவோட்டிற்குள்
ஐம்புலன்களும்
சுருங்கிக் கொள்கின்றன..
திடீர் வெளிச்சத்தில்
தானாய் கண்கள்
சுருங்குவது போல..

இப்படியாய்
விளம்பரங்களுக்கிடையே
வந்து செல்லும்
நிகழ்ச்சிகளைப் போல
அன்றாட பணிகளினூடே
வந்து செல்கின்றன
உன் நினைவுகள்..

Friday, 18 July 2008

நினைவு

பசு தன் கன்றை
நாவால் தடவும் போதும் ...
கோழி தன் குஞ்சுகளை
சிறகுகளுக்குள் அரவணைக்கும் போதும்
குரங்கு குட்டி தன் தாயை
இறுக பற்றி தாவும் போதும்
உனது இழப்பின் வலி
இன்னும் அதிகமாகிறது...

பொழுது

உன் பிரிவிற்கு முன்னதாக
உன்னோடு நான் செலவழித்த
நாட்களையெல்லாம்
சேமித்தபடி இருக்கிறேன்
நினைவலைகளில் !
ஆயினும்
சேமிக்கும் பொழுதுகளும்
செலவழிக்கும் பொழுதுகளாய்.....

வேதனை

நமது பிரிவிற்குப் பின்
வேர் பிடிக்கா விதையின்
வேதனையுடன் கழிகிறது
வேனிற்காலமும்...
மழைக்காலமும்!

வேர்கள்

எனது நம்பிக்கையின்
வேர்கள்
பல இடங்களில் காயப்பட்ட போதும்
இரத்த கசிவில்லை...
வாக்குறுதிகளையும்
வாஞ்சையினையும்
நம்பிய நட்பின்
கன்னித்திரை கிழிபட்டது
உன் துரோகத்தால்...
இனிமேலதை தைக்க முடியாதுதான்
ஆனால் நிரந்தரமாய் மூடிக்கொள்ள
உன்னால் கற்றுக்கொண்டேன்
முன்னால் நண்பனே....

பழைய முத்தம்

அந்த
பழைய முத்தம்
இன்னும் பயமுறுத்துகிறது...
மாடிப்படிகளின் வளைவில்
திடீரென கன்னம் பற்றி
நிகோட்டின் மணத்தில்
நிலை தடுமாறச் செய்த
அந்த பழைய முத்தம்
பயமுறுத்ததான் செய்கிறது
பாம்பின் தீண்டுதலைப் போல...

குறுந்தகடு

பதிவு செய்த
குறுந்தகடு ஒன்றில்
உன் முகம் கண்டு
உள்ளம் சிலிர்த்தேன்...
பின் உன் முகம்
கூட்ட நெரிசலில்
கரைந்து போக
சிறு புள்ளியாகி
தேடிக் கொண்டிருக்கிறேன்
அலையினூடே
ஒளிச்சிதறலாய்....

அம்மா

அம்மா
நீ அழகிய மரபு கவிதை
உன் மரபில்
பூத்த புதுக்கவிதை நான்
இதோ என் மகள்
ஹைக்கூவாய்...

Tuesday, 17 June 2008

காணவில்லை உன்னை

அன்று
நீ தேடி வரும் போதெல்லாம்
நிமிர்ந்து பார்க்க நேரமின்றி தவித்தேன்..
இன்று
நான் காத்திருக்கிறேன்
நீ வருவாயென
ஆனால்
உன் சுவடுகளையும்
சுருட்டிக் கொண்டு எங்கே போனாயென
தெரியாமல் துடிக்கிறேன்..
ஒரே ஒரு வாய்ப்பு கொடு
மீண்டும் உன்னை ஒரு போதும்
தவற விட மாட்டேன்
என் நினைவிருக்கும் வரை!

காணவில்லை உன்னை


அன்று
நீ தேடி வரும் போதெல்லாம்
நிமிர்ந்து பார்க்க நேரமின்றி தவித்தேன்..
இன்று
நான் காத்திருக்கிறேன்
நீ வருவாயென
ஆனால்
உன் சுவடுகளையும்
சுருட்டிக் கொண்டு எங்கே போனாயென
தெரியாமல் துடிக்கிறேன்..
ஒரே ஒரு வாய்ப்பு கொடு
மீண்டும் உன்னை ஒரு போதும்
தவற விட மாட்டேன்
என் நினைவிருக்கும் வரை!

கா(ரி)யம்

காயங்களை காலம் கவனித்துக் கொள்ளும்
காரியங்களை மட்டும் கவனித்து செல்வோம்

Monday, 9 June 2008

ஹைக்கூ

அம்மா இங்கே வா வா
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?