Friday, 5 September 2008

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
நானாகவும் கற்றுக் கொண்டேன் ..
நீயாகவும்
சொல்லிக் கொடுத்தாய்..
(ஒன்றை தவிர)
உன்னைப் பிரிந்தால்
எப்படி தாங்கிக் கொள்ள வேண்டும்
என்பதை தவிர..

ஸ்பரிசம்-7


ஒரு நிகழ்வை உங்களிடம் சொல்ல பிரியப்படுகிறேன்.புதிதாய் திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது.

கணவன் சொல்கிறான்..மூன்றாவது இரவில்.. ஒரு முக்கியமான
அலுவலக வேலை காரணமாக வெளியூர் போக வேண்டும் என்று..
அந்த மூன்று நாட்களில் மனைவியின் மனதில் தோன்றும் அந்த எண்ண்ம் இருக்கிறதே..அந்த உணர்வு இருக்கிறதே..அதை எப்படி ஒரு பெண் சொல்கிறாள் தெரியுமா?..


"தொட்டுவிட்டு நீயும் சொல்ல
மொட்டு விட்ட ஆசைகளை
கட்டுக்குள்ளே வைக்க நானும் கஷ்டப்படுகிறேன்..


வேண்டாம் என்று வாயும் சொல்ல
வேண்டுமென்று உள்ளம் ஏங்க
தீண்டும் இன்பம் வேண்டித்தானே இஷ்டப்படுகிறேன்..


விட்டகுறை தொட்டகுறை வட்டமிட்டு சுத்திவர
விட்டுவிட்டு போனதென்ன ஆசை நிலவே..
இன்னும் என்ன தாமதமோ
உண்மை யாவும் சொல்லிடவே
உச்சிக்குள்ளே பச்சைக்கிளி கூச்சலிடுதே.."
என்று தன் ஸ்பரிச உணர்வுகளைக் கொட்டுகிறாள்

ஸ்பரிசம்-6

கண்ணில் காட்சிகள் பலவும் மோதும்
கற்பனை சிறகுகள் காதில் ஓதும்..
உறவுகள் இறக்கி வைக்கும் மனதின் பாரம்
உணர்வுகள் உலா வரும் உன்னத நேரம்..

அன்பானவர்கள் எல்லோரும் அருகில் இருப்பதில்லை
அருகில் இருப்பவர்கள் எல்லோரும் அன்பானவர் இல்லை
என்று சொல்வார்கள்..

ஆனால் உங்களுடைய இதயத்துக்கு அன்பாகவும்,
இமைகளுக்கு அருகாகவும் அமைந்திருக்கிறது ஸ்பரிசம்...
நம் மனத்திரையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை..
மயக்கும் ஸ்பரிசத்திற்கு மகிழாத நெஞ்சமில்லை..
இன்னும் தேடல் தொடரும்..
தொடர்ந்து இணைந்திருக்க நினைவு சாரல் உதவும்..

ஸ்பரிசம்-5

எங்கும் பேச்சு எதிலும் பேச்சு என்று சொல்லும் அளவுக்கு
பேச்சுதான் உலகத்தில் பல விஷயங்களை மாற்றியிருக்கிறது.
நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல்
இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அதிலும் கணவன் மனைவியிடையே கேட்கவே வேண்டாம்.
அவர்கள் பேச்சு இதமாக,பதமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
அதிலும் காதோடு காதாக பேசுகிற விஷயம் இருக்கிறதே அது சுகமானது..இரகசியமானது..

என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும்
கணவனுக்கு மனைவிதான் முதல் குழந்தை..
மனைவிக்கு கணவன்தான் முதல் குழந்தை..

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்..நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்..
உனக்கேற்ர துணையாக எனை மாற்ற வா-என்று
கேட்கும் மனது இருக்கிறதே அது தாய்மையின் உச்சம்..
காதோடு வருடி மனதோடு பேசும் ஸ்பரிசம் தொடரும்

Wednesday, 3 September 2008

ஸ்பரிசம்-4


காமமில்லாத காதலும்
அலையில்லாத கடலும்
சாத்தியமில்லை ...


ஒவ்வொன்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது
அந்த எல்லையை புரிந்துகொள்வதற்கு விலை இருக்கிறது ..


பார்வையின் உச்சம் காதல்
காதலின் உச்சம் மோகம்


மோகம் தலை தூக்கும் போது பார்வைகள் பேசும்
வார்த்தைகள் மூர்ச்சையாயிடும்..
நேற்றுவரை சேர்த்துவைத்த ஆசையெல்லாம்
வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விடும்.
ஈருடல் ஓருயிர் என்று சொல்வார்களே
அதற்கான அஸ்திவாரம்தான் இது..

ஸ்பரிசம்-3

உடலுக்கு வாசல் கண்கள்
காதலுக்கு வாசலும் கண்கள்தான்..

வார்த்தை வெளிப்படுத்த முடியாத விஷயங்களை
கண்கள் உணர்த்திவிடும்.அதே போல
வார்த்தைகள் கூட புரியவைக்க முடியாத
பல விஷயங்களை மெளனம் சொல்லிடும்.

மெளனம் வலிமையானது.. அதே சமயம் எளிமையானது
சில நேரம் கொடுமையானது.. சில நேரம் இனிமையானது..

மெளனத்தோட பேச ஒரு சிலருக்குத்தான் தெரியும்
மெளனத்தின் அசைவுகளை வைத்தே
வலிகளையும் சந்தோஷத்தையும் உணரமுடியும்...

நீங்க எப்போதாவது மெளனமா இருந்திருக்கீங்களா?
அப்போது அந்த மெளனத்தை யாராவது புரிந்து கொண்டார்களா?

இல்லையென்றால் நீங்க யாரோட
மெளனத்தையாவது புரிந்துகொள்ள முயன்றதுண்டா?
என்ன மெளனமாக யோசனை செய்கிறீர்களா?
பார்வையால் மட்டுமல்ல மெளனத்தாலும் பேசிக்கலாம்...

சோகமும் சுகமும்

சோகத்தை சொல்லிவிட்டால்
மன வேகமது மட்டுப்படும்...
அந்த சோகத்தை சொல்லுதற்கும்
சொந்தமாய் ஒரு நட்பு வேண்டும்...

நட்பே..
சோகங்கள் எல்லாம் சுமைகளல்ல
சுகங்கள் சிலவும் தாங்கக்கூடியதல்ல
சோகத்திற்கும் சுகத்திற்கும் உள்ள உறவு
கடலுக்கும் கரைக்குமான உறவு
இரண்டும் சந்திக்கும் புள்ளியில்தான்
அலைபாய்கிறது
மனமும்..அலையும்..

கேள்வியும் பதிலும்

கேள்விகள் கேட்கத்தான்
காத்திருக்கிறது
எல்லா நாவுகளும்...

பதில்களை கேட்பதற்கு
எந்த காதுகளும்
தயாராயிருப்பதில்லை...

பதிலுக்கு காத்திருக்காத
கேள்விகளால்
யாதொரு பயனுமில்லை...

கேள்விகளை உள்வாங்காத
பதில்களாலும் கூட...

நட்புக்கு

சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே....

ஸ்பரிசம்-1

சாதாரணமா வீசுற காத்து கொஞ்சம்
இதமா வருடிப் போனா அதுக்கு பேரு தென்றல்...
அது எப்ப வரும்னு யாருக்குத் தெரியும்?
அது மாதிரிதான் காதலும்...

சாதாரணமா பழகிகிட்டு இருக்குற
யாருகிட்டயோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல
லேசா தலைதூக்க ஆரம்பிச்சுடும்
இந்த காதல்(தென்றல் மாதிரி)..

இதோட அறிகுறிகள் என்னனு நினைக்குறீங்க?
எப்படா பாக்கலாம்?
எப்படா பேச சந்தர்ப்பம் கிடைக்கும்?
எப்ப நாம பேசுறத கேக்க வைக்கிறது?
இப்படி ஏராளமான விஷயங்களை
நம்ம மனசு கேக்க ஆரம்பிச்சுடும்..இல்லனா
தேட ஆரம்பிச்சுடும்...

ஏதோ ஒரு தருணத்துல சும்மா
விடைபெறும் போது கூட..
கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி பாத்தா
மனசு சிறகடிச்சு பறக்கும்..

உங்க மனசு சிறகடிச்ச சந்தர்ப்பத்த நீங்க
உணர்ந்திருக்கீங்களா?..
அந்த உணர்வு எல்லாரையும் தொட்டுட்டு
போயிருக்கும் அப்டிங்றதுல எந்த சந்தேகமுமில்லை...
அப்படித்தானே?

Friday, 29 August 2008

ஸ்பரிசம்-2

ஜன்னல்களை வருடிப் போகும் தென்றலைத்
தண்டிக்க ஜன்னலுக்கு உரிமை இருக்கிறதா?
இல்லை- ஆனால் நம்மை நேசிக்கிற
ஒரு ஜீவனுக்கு மறுப்பு
சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது...எப்படி?

காதலைச் சொல்ல யாருக்கும்
உரிமை இருப்பது போல மறுப்பதற்கு
நமக்கும் உரிமை இருக்கிறது..
யாராவது நம்மகிட்ட காதலை சொல்லும் போது
நாம மறுக்கிற சந்தர்ப்பத்தை போல..

நம்ம காதல் நிராகரிக்கப்படும்போது
அதை ஏத்துக்குற பக்குவம் வேணும்..
இவங்க நமக்கு வாழ்க்கைத் துணையா
வந்தா நல்லாயிருக்கும்னு நம்ம மனசுக்கு தோணும்..
ஆனா அவங்களுக்கும் தோணனுமே?..

"என் காதலை உங்கிட்ட சொல்லிட்டேன்..
நல்ல பதிலா சொல்லுனு" நமக்கு பிடிச்சவங்க
இல்லனா நெருக்கமா இருக்குறவங்க கோரிக்கை
வைக்கும்போது மனசு பதைக்கும்..
படபடக்கும்..என்ன பண்றது?

அது மட்டுமில்ல..
"நீ முடியாதுனு சொன்னா அந்த வார்த்தைய
தாங்கிக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேணும்"
அப்டின்னா என்ன புரியுது?
இன்னொரு ஜென்மம்னா இந்த ஜென்மத்துல
செத்தாதானே முடியும்..

என்ன சொல்றது?
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லைனு சொல்லிடலாமா?
ஆனா வாழ்க்கைனா காதலும் சேந்ததுதானே?
சரி அப்டினா?
"நினைவுகளோட வாழ்ந்திடு"னு
வாழ்த்தலாமா?
அதை சொல்ல நாம யாரு?

வியப்பின் உச்சம்

வியப்பின் உச்சம் ...

வியர்வையின் விலாசம் ...

விழிகள் விரியும் பரவசம் ...

Thursday, 28 August 2008

அழகின் ஓவியம்..


அழகின் ஓவியம்..
மணலின் கதை..
மனதின் திரை..
வசீகரிக்கும்......

எது பிரிவு?

எது பிரிவு?
பேசாமல் இருப்பதா?
பார்க்காமல் இருப்பதா?
நினைக்காமல் இருப்பதா?

எது பிரிவு?
விலகி செல்வதா?
விரும்பி செல்வதா?
கடிந்து போவதா?

எது பிரிவு?
பார்த்தும் பார்க்காமல் செல்வது..
பார்த்தும் பேசாமல் செல்வது ..
விரும்பியே விலகி நடப்பது..

Wednesday, 27 August 2008

தோள் கொடு

என் ரணங்கள்
என் குணங்கள்

என் நிபந்தனை
என் சிந்தனை

என் வேகம்
என் தாகம்

என் வழி
என் வலி

என் முனைப்பு
என் நினைப்பு

என் சொற்கள்
என் அமைதி

என் முகவரி
என் எழுத்து

யாவும் அறிந்தவன்
நீ
மறுக்கவில்லை...

என் ஆசை ஒன்றை
சொல்கிறேன்..
செய்வாயா?

உன் தோளில் சாய்ந்தபடி
இந்த உலகம் அறிய வேண்டும்..

உன் தோள் சாயும் போது
என் கண்ணீர் உதிர வேண்டும்..

உன் தோள் போதும்
என் துயரம் துடைத்தெறிய..
என் உயரம் எட்ட..

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டுமே புரியக்கூடிய
சில தேவைகள்..

உன்னால் மட்டும் ஆற்றக்கூடிய
சில காயங்கள்..

உன்னால் மட்டுமே உணரக்கூடிய
சில எல்லைகள்...

எதுவும் எனக்கு உற்சாகம் தான்..
ஏனெனில்
நண்பா
உனக்கு மட்டுமே தெரியும்
எனக்கான வலிகள்..

நீ மட்டுமே அறிவாய்
என்னையும்...
என் உலகையும்...

காத்திருப்பு

உனக்காக நானும்
எனக்காக நீயும்
காத்திருந்த பொழுதுகள்
சுகமானவை ...

மழைநாளில் உன்னொடு
நனைந்த நினைவுகள்
இதமானவை...

ஒரு மத்திய நேரத்தில்
பேசப்பட்ட அந்த வார்த்தைகள்
மிதமானவை ...

உன்னாலும் என்னாலும்
சந்திக்க முடியாத நொடிகள்
வலியானவை ....

விமர்சனம்

என்னைக் காயப்படுத்துவதாய்
எண்ணி உன்னால் உதிர்க்கப்பட்ட
விமர்சனங்கள் எல்லாம்
என்னை சோர்வடைய செய்ய வில்லை
நட்பே
உற்சாகப் படுத்தி இருக்கிறது
என் தவறுகள் கவனிக்கப்படுகிறது
என்பதே என் வளர்ச்சியின் அறிகுறிதானே .......

நட்பு

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது
தோழா

Tuesday, 26 August 2008

பொன்மொழிகள்

சோம்பேறிகள் காலத்தை மதிப்பதில்லை .
காலம் சோம்பேறிகளை மதிப்பதில்லை .

தோல்வியை கண்டு அஞ்சுபவரிடம் இருந்து வெற்றி விலகி விடுகிறது.

மிக பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால்
அல்ல.விடா முயற்சியினால் மட்டுமே .

பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதைவிட ,பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவதே மேல்.

காலத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பு உங்களுக்கு தெரியும் .

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?