Wednesday, 4 August 2010

பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ்


சிறுவயசுல எப்படி இருந்தீங்க?
இப்படியேதான். இவ்வளவு உயரம் இல்லை. இவ்வளவு சைஸ் இல்லை. இப்ப எப்படி ஜாலியா இருக்கேனோ அது மாதிரிதான் அப்பவும் இருந்தேன்.

திரைத்துறையில் வாரிசுகளுடைய வருகை அதிகமாயிருக்கு. இதை எப்படி பாக்குறீங்க?
இருக்கலாம். ஆனா அதை விட செகண்ட் ஜெனரேஷனை சேர்ந்தவங்க, டோட்டலி ஃப்ரெஷர்ஸ் நிறைய வந்திருக்காங்க. உண்மை என்னனா எங்களை மாதிரி ஆட்களுக்குத்தான் இன்னும் கஷ்டம். என்னோட அப்பா வந்து எனக்கு இன்ட்ரடக்ஷன் கொடுத்து இந்த இன்டஸ்ட்ரிக்குள்ள வரல. என்னைத் தேடி வந்த வாய்ப்புகள சரியா பயன்படுத்திட்டுத்தான் வந்திருக்கேன்.

உங்களோட ஃப்ர்ஸ்ட் ரெக்கார்டிங் பத்தி சொல்லுங்கள்..
என்னோட ஃபர்ஸ்ட் ரெக்கார்டிங் வித்யா சாகர் மியூசிக்ல ஒரு மலையாளப் பாட்டு. தமிழ்ல ஃப்ர்ஸ்ட் ரெக்காடிங் தேவா சார்கிட்டதான். ஃப்ர்ஸ்ட் ரிலீஸ்னு பாத்தீங்கன்னா இளையராஜா சார் கிட்ட ஃப்ரண்ட்ஸ் படத்துல 'வானம் பெரிசு'தான் பாட்டு. இது அருண்மொழி, எஸ்.பி.பி, நான் மூணு பேரும் சேர்ந்து பாடிய பாடல். அதுலயே 'ருக்கு ருக்கு ரூபிக்யா'ங்ற பாட்டுதான் ஹிட்டாச்சு.

ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம் இருக்கும். உங்களுக்கு மறக்க முடியாத விஷயம்?
ஜனவரி 21. என்னோட ஃப்ர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரி. அன்னைக்கு என்னோட மலையாளம் சாங்குக்கு ஒரு அவார்டு கிடைச்சது. இது முழுக்க முழுக்க மக்களால இன்டர்நெட் மூலமா ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப் பட்டது. அந்த பாட்டை பாடுனவங்க, இசையமைச்சவங்க, எழுதுனவங்க எல்லாருக்குமே கிடைச்சது. அன்னைக்கு என் மாமனார், மாமியார், அப்பா, அம்மா எல்லாரும் கூட இருந்தாங்க. பொதுவா நேஷனல் அவார்டு, ஸ்டேட் அவார்டு எல்லாம் ஜூரி செலக்ட் பண்ற மாதிரிதான் இருக்கும். அது மோஸ்ட்லி பாப்புலர் சாங்காவும் இருக்காது. ஆனா ஒரு மோஸ்ட் பாப்புலர் சாங்க மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. அந்த சாங்குக்கு கேரளா ஸ்டேட் அவார்டும் கிடைத்தது. அது பெரிய சந்தோஷம். மறக்க முடியாத விஷயம்.

முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டீங்களா? இல்ல அப்பாகிட்ட இருந்து வந்ததா?
அப்பாகிட்ட இருந்து வந்ததானு தெரியாது. ஆனா இப்பதான் முறைப்படி கத்துக்கிட்டிருக்கேன். கத்துக்கிட்டாதான் இம்ப்ரூவ் பண்ண முடியும். நமக்கு ஒரு டைமண்ட் கிடைச்ச பிறகு அத இன்னும் பட்டை தீட்டுற மாதிரிதான்.

உங்களுக்கு பிடிச்ச ராகம் எது?
கீரவாணி, தோடி, பகாடி.

உங்களைக் கவர்ந்த பாடகர்கள் யார்?
என்னோட அப்பா, சுஜாதா அக்கா, பி.சுசீலா அம்மா, சமீபமா சங்கர் மகா தேவன் சார். அவரோட ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் ரியலி அமேஸிங்.

ஏதாவது ஒரு பாட்டு இது நமக்குக் கிடைச்சிருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சதுண்டா?
அப்டிலாம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட பாடல்கள பாடணும்னு ஆசைப்பட்டதும் இல்ல. எல்லா சாங்கும் நம்ம பாடினா எப்டி இருக்கும்?னு யோசிப்பேன். அப்டி யோசிச்ச பாட்டுனா வெயில் படத்துல 'உருகுதே மருகுதே' பாடல்தான்.

பிறமொழிப்பாடகர்கள் குறித்து உங்க கருத்து என்ன? மற்ற மொழிகள்ல இருந்து தமிழ் மொழிக்கு பாட வர்றவங்கள பத்தி கேக்குறேன். நீங்களும் இதில் அடக்கம் தானே..
கண்டிப்பா. அதுல நானு ஒரு ஆளுதான். நான் வளந்தது எல்லாமே சென்னையில தான். நானும் ஒரு அவுட்சைடு சிங்கர் தான். அப்பா நிறைய பாடியிருக்கார். ஸ்ரேயா கோஷல், சோனா நீகம் இவங்கள்லாம் தமிழ்ல பாடும் போது அசிங்கமா பாட மாட்டாங்க. தி மேக் ஸ் பெர்ஃபக்ட். ஈவன்தோ மியூஸிக் டைரக்டர் வொர்க்கிங் வித் தெம். நிறைய இம்ப்ரூவ் பண்ணிதான் பாடுறாங்க. அது மாதிரி எல்லாரும் பண்றாங்க. ஆனா நாம ஹிந்தில பாடும்போது ஏத்துக்க மாட்டாங்க. அதே மாதிரி நாமளும் எஃபர்ட் எடுத்து சவுத் இன்டியன் அக்சன்ட் இல்லாம பாடுனா அக்சப்ட் பண்ணுவாங்க.

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
பேசுறதுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி அவ்ளோதான் தெரியும். பாடுறதுக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச்.

உங்க அப்பா பாடிய பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்சது?
அது ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பாட்டு பிடிக்கும்.

ஆங்கில வார்த்தைகளில் கலப்போடு பாடுவதை எப்படி உணருகிறீர்கள்?
அது நல்லபடியா வந்தா சரிதான். ஒரு நல்ல ஆங்கிலப் பாடல் சவுண்ட் எப்படி இருக்கணுமோ அப்டி இருக்கும் போது நல்லாதான் இருக்கும். ஆனா சில நேரங்கள்ல தேவையில்லாம வந்தா நல்லா இருக்காது. என்னோட 'தாவணி போட்ட தீபாவளி' பாடல்ல கடைசில 'ஆனாலும் நீ ஏஞ்சலு'னு வரும். அப்டி ஒரு வார்த்தைய யூஸ் பண்ணா பரவாயில்ல. ரைமிங்கா நல்லா இருக்கும். சில பாடல்ல இங்கிலீஷ் ஃபுல்லா வரும் போது நல்லா இருக்கும். டிஃபரண்ட் டைப் ஆஃப் சவுண்ட் வரணும்னா அதுமாதிரிதான் இருக்கணும். மோஸ்ட்லி எவிரிபடி கரெக்ட்டா பண்றாங்க. யுவன், மணிசர்மா, ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாருமே நல்லா பண்றாங்க. வலுக்கட்டாயமா வராம இயல்பா வந்தா பரவாயில்லை.

உங்களை மூத்த பாடகர்கள் யாராவது பாராட்டியதுண்டா?
சமீபத்துல நாம் ஃப்ளைட்ல போகும் போது பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை ரெண்டு தடவை பாத்தேன். ஏர்போர்ட்டுல தொடர்ந்து ரெண்டு நாளா பாக்குற வாய்ப்பு கிடைச்சது. அப்ப ‘உன்னைப் பாத்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு. வெஸ்டர்ன் மியூஸிக் கத்துக்க. ரொம்ப முக்கியம் அது. நம்ம இன்டஸ்ட்ரியில வெஸ்டர்ன் நிறைய இருக்கு. ஆனா வெஸ்டர்ன்ல நம்ம மியூஸிக் அவ்ளோ இல்ல. இந்தியர்கள் வெஸ்டர்ன்ஸ நல்லா யூஸ் பண்ணிருக்கோம். வெஸ்டர்ன் ஆல்பம்ல அங்க இங்க நம்ம மியூஸிக் வந்துட்டு போகும். நம்ம மியூஸிக் இவ்ளோ ஹைலெவல்ல இருக்கும் போது ஏன் மத்தவங்கள ஃபாலோ பண்ணனும்.’னு சொன்னாரு. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

உங்க துறையில நீங்க என்ன புதுமை செய்ய விரும்புறீங்க?
நம்ம செய்ற விஷயத்த சிறப்பா செய்யணும். எல்லாருமே புதுமை புதுமைனு சொல்லி ரொம்ப அதிகமா யூஸ் பண்றாங்க. இது புதுசா இருக்கும், வித்தியாசமா இருக்கும்னு சொல்றோமே தவிர நிறைய பேர் பண்றதில்ல. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலத்துல யுவன் வந்தாரு. டி.எம்.எஸ். காலத்துல கூட அப்பா, எஸ்.பி.பி அங்கிள் வந்தாங்க. இப்ப எல்லாத்துக்கும் ஒரு எக்ஸ்போர்ஷர் இருக்கு. டிவி. ரேடியோ அப்டினு நிறைய ஸ்பேஸ் இருக்கு. முன்னாடி அப்டி கிடையாது. நிறைய பேர் இருக்குறதால போட்டி அதிகமாக இருக்கு. ஆரோக்யமான போட்டிதான். அது இருந்தாதான் நல்லா இருக்கும்.

நீங்க பாடகரா இல்லாட்டா யாரா மாறியிருப்பீங்க?
தெரியாது. ஒருவேளை நடிகரா ஆகியிருப்பேன். அதுக்கு அழகு மட்டும் போதாதுல. நடிக்கவும் தெரியணுமே.

உங்களுடைய பொழுது போக்குகள்?
ஸ்போர்ட்ஸ், டிவி, மியூஸிக் கேக்குறது, படம் பாக்குறது.

உங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
எப்பவும் எல்லா விஷயத்திலயும் பாஸிட்டிவ் திங்கிங் உண்டு. ரொம்ப நல்ல விஷயங்களைப் பத்தித்தான் அதிகம் யோசிப்பேன். மத்தவங்கள்ல கூட தப்பு பாக்குறது ரொம்ப கம்மி. ஒருத்தவங்கள பத்தி மத்தவங்க தப்பா சொன்னா கூட நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். நம்மளோட தவற நாம சரி பண்ணிக்கணும். எனக்கு புறம் பேசுறது பிடிக்காது. எனக்கு ரெண்டு, மூணு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை. அதனால ரெண்டு பேரையும் தனித்தனியா சந்திக்க வேண்டியதிருக்கு. மத்தவங்கள குறை சொல்லிட்டே இருக்கக்கூடாது. நம்ம பெர்ஃபக்ட்டானு பாக்கணும். அப்படி யாராலும் இருக்க முடியாது.

உங்களுடைய தனித்துவமா எதை நினைக்கிறீங்க?
அப்படி ஒண்ணுமில்ல. வாழ்க்கைய முழுமையா அனுபவிச்சு வாழ்றதுதான் என்னோட தனித்துவம்.

ஃபாஸ்ட் சாங் பிடிக்குமா? மெலடி பிடிக்குமா?
ஸ்டேஜ்ல அதிகமா ஃபாஸ்ட் சாங்தான் பாடுற மாதிரி இருக்கும். எனக்கு ரெண்டுமே பிடிக்கும். வித்யாசாகர், யுவன், இளையராஜா இவங்களோட ஃபாஸ்ட் சாங்ஸ் பிடிக்கும். ரஜினி சாரோட பொதுவாக எம்மனசு தங்கம் பாட்டுல லேசா மெலடியும் இருக்கத்தான் செய்யும். பீட் மட்டும் இருந்து ரிதம் ஒண்ணுமே இல்லனா பிடிக்காது.

உங்க அப்பாவுக்கு பிடிச்ச பாடல்?
எனக்கு தெரியல. ஒருவேளை 'உன்னிடம் மயங்குகிறேன்' பாடல்.

உங்க அப்பா பாடல்கள உங்களுக்கு பிடிச்சது?
அப்பாவும் நானும் சேர்ந்து பாடுன ராம் படப்பாடல் 'மனிதன் சொல்கின்ற நியாயங்கள்'. தனித்தனியா ரெக்கார்டிங் பண்ணப்பட்ட பாடல்தான் அது. அதுல அப்பாவோட 'ஆராரிராரோ' எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்துல நான் தனியா பாடுனது 'நிழலினை நிஜமும் கடந்திடுமா?'.

இந்த மாதிரி ரெண்டு பேர் பாட வேண்டிய பாடல தனித்தனியா பாடும் போது அந்த ஃபீல் இருக்குமா?
ஒண்ணா பாடும் போது சில டைம்ல கன்டினியுட்டி இருக்காது. அதுமட்டுமில்ல அவங்கவங்க ஃப்ரீ டைம்ல வந்து பாடிட்டு போறது வசதியா இருக்கு.

உங்க பாடல்களைப் பாடும் போது அதில் இருக்கும் வரிகளை ரசித்ததுண்டா?
'எனக்குப் பிடித்த பாடல்' மாதிரி பாடல்ல வரிகளை ரசித்ததுண்டு. அதுல எவ்ளோ இருக்கு. மியூஸிக்கும், லிரிக்ஸும் சேரும் போது அதுல அவ்ளோ ப்யூட்டி இருக்குது. அந்த மாதிரி 'சிவாஜி' படத்துல 'சஹாரா பூக்கள் பூக்குதோ' பாடலும் ரொம்ப பிடிக்கு. 'நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது'.

ஒரே குடும்பத்துல உருவ ஒற்றுமை சகஜம்தான். ஆனா குரல் ஒற்றுமை உங்க அப்பாக்கும், உங்களுக்கும் இருக்கே எப்படி?
அவர் கண்டிப்பா என்னோட அப்பாதான்னு ப்ரூஃப். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சில சமயங்கள்ல பாடும் போது அப்பா மாதிரி வரும். பிரேம்ஜி ஒருதடவை அப்பா மாதிரியே பாடுறேன்னு சொன்னாரு. எல்லா சாங்கும் அந்த மாதிரி வராது.

ரொம்ப பிடிச்ச பண்டிகை எது?
அமெரிக்காவுல கிறிஸ்துமஸ் ட்ரெடிஷனலா கொண்டாடுவாங்க. அது எனக்குப் பிடிக்கும். அங்க பெரிய பெரிய வீடுகள்ல அலங்காரம் பண்ணுவாங்க. அதுவும் ரொம்ப பிடிக்கும்.

--இவள் பாரதி

Tuesday, 3 August 2010

திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார்


பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி..
‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு.

‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல்லுங்கள்..
இது ‘7ஜி ரெயின் போ காலனி’யில வந்த பாட்டைதான் தலைப்பா வச்சிருக்கேன். பாடல்கள் பற்றிய அனுபவக் கட்டுரை இது. பாடல் பிறந்த கதை பத்தி ஜாயித் அக்தர் பண்ணிருக்காரு. தமிழ்ல இதுவரை யாரும் பண்ணல. அப்படியே பண்ணிருந்தாலும் ஏழு, எட்டு வரிகளுக்குள்ளயே அந்த அனுபவத்த அடக்கிட்டாங்க. ஆனா ஆங்கிலத்தில நிறைய பண்ணிருக்காங்க. என்னோட ஒரு பாடலுக்குள்ள ஒரு வரி வருதுனா உதாரணமா 'ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ'னு தேரடி வீதி பாட்டுல எழுதிருப்பேன். அந்த வரி எங்கிருந்து வந்தது. அந்த வரிக்கு பின்னால மிகப் பெரிய கதை இருக்கு. அது எப்டி என்னுடைய வாழ்க்கை முறையோட சம்பந்தப்பட்டிருக்கு. இந்த மாதிரியான விஷயங்கள பதிவு பண்ணத் தோணுச்சு. அப்ப நான் வாரம் ஒரு பாடல்னு கிட்டத்தட்ட 25 பாடல்கள் எழுதிருக்கேன். அது மக்கள் மத்தியில பெரிய வரவேற்பை பெற்று ஏழு, எட்டு பதிப்புகள் வந்துருக்கு.

இதுவரை எத்தனை கவிதை தொகுதிகள் எழுதிருக்கீங்க?
பட்டாம்பூச்சியை விற்றவன், தோசிகன், நியூட்டனுன் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா, பச்சையப்பன் கல்லூரி, குழந்தைகள் படித்த வீடுனு ஆறு கவிதை தொகுதிகளும், ஜப்பான் காதல் கவிதைகளை மொழிபெயர்த்து ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’னு நான்கு தொகுப்புகளும், கண்பேசும் வார்த்தைகள், கிராமமும் நகரமுமான நகரம், பால காண்டம்னு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் சேர்த்து 13 புத்தகங்கள் வந்திருக்குங்க.

உங்களுடைய அடுத்த படைப்பு பற்றி..
ஆங்கிலத்துல ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது முடியுற நிலையில இருக்கு. அதுக்குத்தான் என்னோட முழு நேரத்தையும் செலவிடுறேன்.

உங்களுடைய அன்றாட பணியின் 5 முக்கியமான விஷயங்களாக எதைச் சொல்வீங்க?
எல்லாமே முக்கியம்தான். முதன்மைப் படுத்த வேண்டியதுனா பாடல் எழுதுறதுதான். கடந்த 5 ஆண்டுகளா அதிகப் பாடல்கள் எழுதுன பெருமை கிடைச்சிருக்கு. தொடர்ந்து அத தக்க வச்சுக்கிறதுக்கு ரொம்ப ஓட வேண்டியிருக்கு.

அதிக பாடல்கள் எழுதுற பாடலாசிரியர்ங்ற பேர் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாக்குறீங்க?
தொடர்ந்து 5 வருடமா நிறைய பாடல்கள் எழுதுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அத தக்க வச்சுக்கணும்னு நினைக்கிறேன். எண்ணிக்கை முக்கியமில்ல. எண்ணங்கள்தான் முக்கியம்னு சொல்வாங்க. நல்ல பாடல்கள தொடர்ந்து தமிழ் சமூகத்துக்கு கொடுக்கனும்ங்ற பொறுப்புணர்வு என் தோள்கள்ல ஏறி அமர்ந்திருக்கு.

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
அத நீங்கதான் சொல்லணும். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை என்னோட பாடல்கள பாடிட்டுருக்காங்க. அவங்கள பாடல்களோட எளிமை தான் ஈர்க்குதுனு நினைக்கிறேன். உயர்ந்த விஷயங்களை எளிமைப்படுத்தி சொல்றது, வாழ்க்கைல இருந்து வார்த்தைகள எடுக்குறது, நவீன இலக்கியத்த தொடர்ந்து வாசிக்கிறது, உலக சினிமாக்களின் பரிச்சயம், தொடர்ந்து பயணங்கள் இப்டி நிறைய சொல்லிட்டே போகலாம்.

உங்களின் புதிய சிந்தனைக்கான களமா எதைச் சொல்வீங்க?
என்னோட ஒவ்வொரு படைப்பும் புதிய சிந்தைனைக்கான களம்னு சொல்வேன். அது கவிதை, கதை, கட்டுரை, திரைப்படப்பாடல் எதுவா இருக்கட்டும். அது வந்து அதனுடைய வடிவத்த தேர்ந்து எடுத்துட்டு வெளியே வரும் போது புதிய படைப்பா இருக்கும்.

உங்களிடம் முரண்படும் விஷயம் அல்லது செயல்?
முரண்படுற விஷயம் நிறையவே இருக்கு. நான் ஒரு எழுத்துச் சோம்பேறி. பாடல்னா நிறைய எழுதுவேன். இலக்கியம்னா கொஞ்சம் ஊறப் போட்டு 6 மாசத்துக்கு ஒரு தரம் தான் எழுதுவேன். தொடர்ந்து நிறைய எழுதனும்னு ஆர்வம் இருக்கு.

பிரபலம்ங்றத எப்டி பாக்குறீங்க?
சுதந்திரத்துக்கு கொடுக்குற விலைன்னுதான் நினைக்கிறேன்.

திரைப்படப்பாடல்களின் தற்போதைய வரவு குறித்து என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. கண்ணதாசனுக்குப் பிறகு அதனுடைய பாதை கொஞ்சம் மாறி பட்டியல் போடுறது வந்தது. இது ஒரு 15 வருஷம் இருந்துச்சு. இப்ப எதார்த்தமா எழுதுறது, இது எனக்கு நடந்ததுனு எழுதுறதுனு எழுதுறாங்க. நிறைய படங்கள் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, புதிய புதிய முயற்சிகள் வந்துட்டே இருக்கு. கதைக்களமும், பாடலுக்கான சூழலும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதனால எழுத நிறைய களம் இருக்கு. அதான் தேரடி வீதி, முதல் மழை என்னை நனைத்தது, சூ சூ மாரி, வெயிலோடு விளையாடி, உனக்கென இருப்பேன், காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும்னு எழுத முடியுது. மக்கள் மொழியில அவங்கள நேரடியா சென்று சேர அளவுக்கு கொஞ்சம் அவங்க இதயத்த தொடும் அளவுக்கு திரைப்பட மொழி மாறிருக்குனு நினைக்கிறேன்.

புதிய பாடலாசிரியர்கள் அவங்கள தக்க வச்சுக்க என்ன பண்ணனும்?
பாடலாசிரியர்கள் மட்டுமில்லாம எந்த படைப்பாளியும் நிறைய படிக்கணும். புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கணும். கனவுகளை மட்டும் வைத்துக் கொண்டு எதிலயும் காலடி வைக்கக் கூடாது. தங்களைத் தயார்படுத்திக்கிட்டு திறமையோட சேர்ந்த கனவும், அதற்கான உழைப்பும் இருந்தாதான் தக்கவச்சுக்க முடியும்.

உங்களை உயர்த்திய இலக்கியத்துக்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?
இலக்கியத்த யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. எழுத்தாளர் வண்ணதாசன் சொல்ற மாதிரி ‘வாழ்க்கை ஒரு மகாநதி. கண் முன்னால ஓடிட்டிருக்கு. நான் என் கரையோரம் நின்னு என் கண்ணுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். அது மாதிரிதான். என் கண்ணுக்குப் படும் விஷயங்களையும், என் உள்ளங்கையில் அள்ளிக் குடிக்கும் தண்ணீரையும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய புதுமையான முயற்சிகள் பத்திச் சொல்லுங்களேன்..
எல்லா முயற்சியுமே புதுமையான முயற்சிதான். பழைய முயற்சி எதுவும் இல்ல.

வித்தியாசமான முயற்சி ஏதாவது?
செய்வது எல்லாமே வித்தியாசம்தான்.

ஒரு கவிஞனுக்கான முகவரியாக எதை பார்க்கிறீர்கள்?
கவிஞனுக்கான முகவரி அவனோட படைப்புகள்தான்.

உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் பற்றி..
நிறைய பேர் இருக்காங்க. தமிழ்ல எடுத்துக்கிட்டா 2000 வருஷம் பாரமப்ரியம் கொண்டது. சங்க இலக்கியத்துல தொடங்கி இன்றைக்கு இருக்குற நவீன கவிஞர்கள் வரை பட்டியல் போடலாம். உடனே ஞாபகத்துக்கு வர்றதுனா கவிஞர் கலாப்ரியா, விக்ரமாதித்தன், பசுவய்யா, கல்யாண்ஜி, ஆத்மநாம், நகுலன்னு சொல்லிட்டே போகலாம். சினிமாவுல எழுதுறவங்க மட்டும் கவிஞர்கள் இல்ல. சினிமாவுக்கு வெளியேயும் நிறைய நல்ல கவிஞர்கள் இருக்காங்க. தொடர்ந்து வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கணும்.

இப்ப என்னென்ன புத்தகங்கள் படிச்சிட்டிருக்கீங்க?
நான் ஆங்கில நாவல்கள் அதிகமா படிப்பேன். எஸ்.ராவோட யாமம், சேத்தன் பகத்தோட நாவல்கள் படிச்சிட்டிருக்கேன்.

ஒரு படைப்பாளி கவிஞனா இருந்து சிறுகதை நாவல்னு அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் வளர்ச்சியா? அதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லாமே இலக்கியத்துல ஒரு பகுதிதான். அது கவிதையாக, கதையாக, நாவலாக எதுவாக இருந்தாலும் சரி, நாம எழுதும் கருப்பொருள்தான் அத தீர்மானிக்குது. நானே கவிதையும், கதையும், கட்டுரையும் எழுதிருக்கேன். பாடலாவும் மாறியிருக்கு. அனுபவம் தான் அத தீர்மானிக்கும்.

உங்களுக்கு பிடிச்ச நாள்?
எல்லா நாளுமே திருநாளுதாங்க.

நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்?
அப்டி யாரும் இல்லங்க. வாழ்க்கை ஒரு கம்பளம் மாதிரி. தினம் தினம் புதிதாய் விரிக்கப்படுகிறது. அடுத்து யாரை சந்திக்கப் போறோம்னு தெரியாத வரைதான் சுவாரஸ்யமா இருக்கும்.

உங்களுடைய தனித்தன்மையாக எதைச் சொல்வீர்கள்?
அத நீங்கதான் சொல்லனும்.

உங்களுடைய கவிவரிகள்னு நினைக்கிறோம். நீங்க யாருக்காவது காத்திருந்ததுண்டா?
வாழ்க்கையே ஒரு காத்திருப்புதான்.

வார்த்தைகள்தான் உங்களுக்காகக் காத்திட்டு இருக்கு. அந்த அளவுக்கு உங்க உவமைகள் இருக்கு. உங்களைக் கவர்ந்த பாடல் வரிகள்னா உடனே எதைச் சொல்வீங்க?
அங்காடித்தெரு படத்துல ‘புல்லும் பூண்டும் வாழும் உலகம், நீயும் வாழ்ந்திட வழியில்லையா? பூமியில் ஏழையின் ஜனனம், அது கடவுள் செய்த பிழையில்லையா? இது மிகக் கொடுமை, இளமையில் வறுமை. பசிதான் மிகப்பெரும் மிருகம், அதை அடக்கிட இங்கு வழியில்லையா? கண்ணீர்தான் மிகப்பெரும் ஆழம், அது கடலை விடவும் பெரிதில்லையா?’னு எழுதிருப்பேன். அது எனக்குப் பிடித்த வரிகள்.

கண்ணீர்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. தநா 07 படத்துல ‘கண்ணீரைப் போல வேறு நண்பன் இல்லை’னு எழுதிருப்பீங்க?
ஆமா உண்மைதான். கண்ணீரைப் போல வேறு நண்பன் இல்லை, கற்றுக் கொள் துன்பம் போல பாடம் இல்லை.

இளமையை எப்படிக் கொண்டாடலாம்னு நினைக்கிறீங்க?
இளமையை மட்டுமில்ல ஒவ்வொரு கணத்தையும் நமக்கான கணம்னு நினைக்க ஆரம்பிச்சாலே முதுமையும் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஓஷோ சொல்வது போல் அந்தக் கணத்தில் வாழ்வதுதான் சந்தோஷமளிக்கும்.

குழந்தைகளிடம் பிடித்த விஷயம்?
குழந்தைகளே பிடிச்ச விஷயம்தான். பூவுல எந்த பகுதி பிடிச்சதுன்னு கேக்குற மாதிரி இருக்குது.

உங்களைப் பெருமைப்படுத்தியதா நீங்க நினைக்கிற நிகழ்வு..?
நிறைய இருக்கு. இப்ப உங்க கூட பேசிட்டு இருக்குறது கூடத்தான்.

நினைக்கும் போதெல்லாம் இனிக்கிற விஷயம்?
சர்க்கரைனுதான் சொல்லனும்.

உங்க பாடல்களைக் கேட்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?
அந்த பாடல் எழுதின சூழல்தான் ஞாபகம் வரும். அது பெரிய சந்தோஷம் தந்ததில்லை. ஏன்னா எந்தப் பாட்டக் கேக்கும் போதும் அது எழுதும் போது பட்ட கஷ்டங்களும், அந்த வரிகளுக்கான முயற்சியும் தான் எனக்கு ஞாபகம் வரும்.

வெயில் படத்துல ‘வெயிலோடு உறவாடி’ பாடல் எழுயிருப்பீங்க. அது உங்க அனுபவமா?
ஆமா. அந்த பாடல் முழுக்க என்னோட அனுபவங்கள்தான். குழந்தை பருவத்துல நான் விளையாடின விளையாட்டுக்கள் எல்லாமே கலந்ததுதான் அந்த பாடல். குறிப்பா ‘புழுதிதான் நம்ம சட்டை’ அந்த வரியை கவிஞர் வாலி ரொம்ப பெருமையா சொல்வார். மத்த வரிகளைக் கூட வேற கவிஞர்கள் எழுதிடலாம். அந்த ஒருவரிய எழுதத்தான் முத்துக்குமார் வேணும்னு சொன்னார். அந்த பாடலுக்குத்தான் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைச்சது.

‘கனவெல்லாம் பலிக்குதே’ பாடல் ஒரு தந்தை தன் மகனைப் பார்த்து பெருமைப்படுற மாதிரி வர்ற பாடல். உங்களுடைய தந்தை அந்த மாதிரி ஒரு அனுபவத்தை அடைஞ்சிருக்காரா?
கண்டிப்பாக, குறிப்பா அந்தப் பாட்டை என் தந்தைக்காகத்தான் எழுதுனேன். என்னை வளர்த்தது முழுக்க என் தந்தைதான். அந்த பாடலை எழுதும் போது என் அப்பாவை நினைச்சுதான் எழுதுனேன். குறிப்பா அந்த பாடல் வந்த பிறகு நிறைய தந்தைகள் என்னைத் தொடர்பு கொண்டு அவங்க மன உணர்வுகள பிரதிபலிச்சதா சொன்னாங்க. அதுலயும் முத்தாய்ப்பா அந்த அப்பா கேரக்டர்ல ராஜ்கிரண் நடிச்சாரு. அவர் இந்த பாட்டக் கேட்டுட்டு ஒரு இரவு நேர ஷூட்டிங் அப்ப சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்ப என்னையக் கட்டிப் பிடிச்சுக் கண்கலங்கிட்டாரு. அந்த பாடல் கேட்டதும் அவருக்கு அவங்க அப்பா, அம்மா ஞாபகம் வந்துடுச்சுனு. அந்த பாடலுக்கு இன்னைக்கும் நிறைய ரசிகர்கல் இருக்காங்க.

ம்ம். அதே மாதிரிதான் ‘புண்ணாக்குனு சொன்னா கூட கவலை இல்லைடா. ஒரு புள்ளையத்தான் வஞ்சிடாத அப்பன் யாருடானு’ எழுதியிருந்தீங்க?
ஆமா. அப்பா திட்டுறத ஏத்துக்கணும்னு எழுதியிருப்பேன். அந்த பாட்ட ஸ்டுடியோவுல 20 நிமிஷத்துல எழுதினேன். அந்த பாட்டுல வடிவேல் இருக்குறதால காமெடியாவும், அதே நேரத்துல சீரியஸாவும் இருக்கணும்னு சொன்னாங்க. அந்த மாதிரி எழுதிய பாடல்தான் அது. அப்புறம் வேப்பமரம் புளியமரம்னு சாமி படத்துல அப்பா பாடுற மாதிரி ஆரம்பிச்சு கதாநாயகன் பாடுற மாதிரி முடியும். டைரக்டர் ஷங்கருக்கு சாமில பிடிச்ச பாட்டு அதுதான்னு சொல்வாரு.

‘ஆழியிலே முக்குளிக்கும் அழகே’னு வர்ணிக்கிற வார்த்தைகளைப் போட்டு எழுதியிருக்கீங்களே.
கர்னாடக இசையில் அமைந்த அருமையான மெட்டு. அந்த மெட்டைச் சிதைக்காம வார்த்தைகள் போடணும்னு தோணுச்சு. நான் எப்பவும் ரியலிஸ்ட்டிக்காதான் எழுதுவேன். ஃபேன்டஸியா எழுத மாட்டேன். ஒரு பாட்டு கொஞ்சம் ஃபேன்டஸியா ட்ரை பண்ணலாமேனு முயற்சி பண்ணேன். பொதுவா பெண்ணையோ, ஆணையோ உடல் சார்ந்த வர்ணனைகள் தவிர்த்துதான் எழுதுவேன். அதுல ஒண்ணு ரெண்டு விதி விலக்குல ஆழியில முக்குளிக்கும் அழகும் ஒண்ணு. ‘நீயா? நானா?’ கோபிநாத் ஒரு பண்பலைல இருக்கும் போது இந்த பாடலை ஒளிபரப்பும் போது முத்துக்குமாருக்கு காத்துல ஒரு மோதிரம் போடுறேன்னு சொல்வாராம். நான் கால்ல கையில போடுங்கன்னு சொன்னேன். பாராட்டுதானங்க சிறந்த மோதிரம்.

கவிஞர்கள் புனைப்பெயர் வச்சுக்குற கலாச்சாரம் இருக்கு. நீங்க புனைப்பெயர் வச்சுக்கலயா? இனிஷியலோட உங்க பேர வச்சிருக்கீங்க.?
என் பேரே நல்லாதான இருக்கு. அதுமட்டுமில்லாம எனக்கு முன்னாலயே மு.மேத்தா, நா.காமராசன்னு இனிஷியலோடதான் வச்சிருக்காங்க. என் பேர் அழகாத்தானே இருக்கு. அதனால புனைப் பெயர் வச்சுக்கல.

அப்ப புனைப்பெயர் வச்சிருக்கிறவங்க எல்லாம் அவங்களுக்குப் பிடிக்கலைனு வச்சிருக்காங்களா?
தெரியலையே. அத அவங்ககிட்டதான் கேக்கணும்.

‘நேரம் பொறந்திருச்சு ஏலே’ பாட்டுல சிவப்பு சிந்தனை வரிகள் இருக்குதுனு நான் பாக்குறேன். நீங்க என்ன சொல்றீங்க.?
அந்த வடிவத்த உருவாக்குனது ரஹ்மான் சார்தான். மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் சமூக சிந்தனை, சுற்றுச்சூழல் பத்திதான் இருக்கும். அதுமாதிரி தமிழ்ல முயற்சி பண்ணலாமேனு ‘கருப்பு கலரு ஜூஸ் வேண்டாம், கரும்பு, இளநீர் வாங்கிக் குடிப்போம், காரைவிட்டு சைக்கிள் ஏறிப் பறப்போம்’னு எழுதிருப்பேன். அது ரஹ்மான் சார் கொடுத்த சுதந்திரம் தான்.

நீங்க பாடல் நல்லா எழுதுறீங்க சரி, பாடுவீங்களா?
இல்ல பாடமாட்டேன். சும்மா முணுமுணுப்பேன். நான் இப்ப அடிக்கடி முணுமுணுக்குற பாடல் பையா படத்துல “துளித்துளி மழையாய் வந்தாளே” அங்காடித்தெருவுல ‘உன் பேரைச் சொல்லும் போதே’ இந்த ரெண்டு பாடலும்தான்.

உங்க வாசகர்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
அடுத்த தலைமுறைய வாசிக்கிற தலைமுறையா உருவாக்க நீங்க நிறைய வாசிங்க. புத்தகத்தின் மீதான காதலை அதிகப் படுத்துங்க. அறிமுகப்படுத்துங்க.

இந்த நேரத்துல யாருக்காவது நன்றி சொல்ல விரும்புறீங்களா?
என்னைய உருவாக்குன என் அம்மா அப்பவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

--- இவள் பாரதி

Monday, 2 August 2010

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியுடன் (அன்னையர் தினத்தை முன்னிட்டு) ஒரு நேர்காணல்..

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..
கணவர் கான்ட்ராக்டரா இருக்கார். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்தான். பொண்ணக் கட்டிக் கொடுத்து ஒரு பேரப் பிள்ளை இருக்கான். பையன் இன்ஜினியரா இருக்கான். ரொம்ப சந்தோஷமான குடும்பம்.


ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற அடையாளம் தவிர ஒரு அன்னையாய் உங்கள் குழந்தைகளிடம் உங்கள் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
ஒரு கனரக வாகன ஓட்டுநர் நம்ம அம்மா அப்டினு சந்தோஷப் படுறாங்க. அதுமட்டுமில்லாம இவ்ளோ கஷ்டமான வேலை செய்திட்டும் பிள்ளைங்கள ஒழுங்கா பார்க்க முடியுது. ஒரு அம்மாவா இருக்கும் போது அப்பாவ விட கூடுதலா பொறுப்பும், கஷ்டமும் இருக்கும். அம்மாவுக்குத்தான் பிள்ளைங்களை நல்வழிப்படுத்தி வளர்க்குறதுக்கு பெரிய கடமை இருக்கு. காலையில வேலைக்குப் போய்ட்டு குழந்தைகளை கவனிச்சுக்குறது கஷ்டம் தான். விடா முயற்சியோட பிள்ளங்களை தன்னம்பிக்கையோட வளக்கணும்னு நினைச்சேன். அவங்க படிக்கிறதுக்கு உறுதுணையா இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு கன ரக வாகன ஓட்டுநரா மட்டுமில்லாம ஒரு அம்மாவாவும் சிறப்பா இயங்குறேன்.

உங்கள் அம்மாவைப் பற்றிக் கூறுங்களேன்.
என்னுடைய ஒன்றரை வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. அதனால அம்மாவோட அம்மாதான் வளத்தாங்க.

நீங்கள் அம்மா இல்லாமல் வளர்ந்த பெண், சிறந்த அம்மாவாக இருக்கும் பெண். இந்த நிலையை எப்படி உணருகிறீர்கள்?
ஒரு அம்மாவா ரொம்ப சிறப்பா உணருறேன்.

தமிழ்நாட்டுல எத்தனை பேர் இந்த கனரக வாகனம் ஓட்டிட்டு இருக்காங்க?
என்னை அப்பாயின்ட் செஞ்சு 6 வருஷத்துக்குப் பிறகு கன்னியாகுமரியில இன்னொரு பொண்ண அப்பாயின்ட் பண்ணாங்க. அதுக்குப் பிறகு சென்னையில ரெண்டு பேர ஏ18 பஸ்ல அப்பாயின்ட் பண்ணாங்க.

இந்த துறைக்கு வர வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது?
பெண்கள் பெரும்பாலான வேலைகள் பாத்தீங்கன்னா டீச்சர் வேலை, ஆஃபிஸ் வேலை இப்டிதான் செய்திட்டு இருக்காங்க. அவங்கள கஷ்டமான வேலைகளை செய்ய விடுறதும் இல்ல. பெண்களும் முயற்சி செய்றதும் இல்லை. முடியாதுனு ஒண்ணு கிடையாதுனு சொல்வாங்க. அந்த மாதிரி நான் முயற்சி பண்ணேன். எங்க அண்ணன் முயற்சியால முதல்ல லைட் வெகிக்கிள் ஓட்டுனேன். இது எனக்கு ஈஸியா வந்தது. சுலபமா இருக்கேனு ஹெவி வெகிக்கிள் ஓட்டுனா என்னனு ஒரு எண்ணம். ஆனா லேடிஸால முடியாதுனு சொன்னாங்க. ஆனா என்னால முடியும்னு கத்துக்க ஆரம்பிச்சேன்.

வீட்டுல உள்ளவங்களோட ஒத்துழைப்பு கிடைச்சதா?
பொண்ணாச்சேனு வீட்டுல எல்லாரும் பயந்தாங்க. வீட்டுல ஒத்துழைப்பு கிடைக்கல. பயத்தால எதிர்த்தாங்க. ஆம்பிளைகளே இந்த வேலைக்கு கஷ்டப்படும் போது பொம்பளையால முடியாது. பின்னால வேதனைப்படாதனு பாசப்பிணைப்புல தடுத்தாங்க. ஆனா அவ்ளோ கஷ்டமானு பாக்கலாம்னு ஒரு வீராப்போடதான் களமிறங்கினேன். பயந்தா உலகத்துல வாழ முடியுமா? என்னால முடியும்னு நான் நினைச்சதால இதுவரை எந்த விபத்தும் இல்லாம ஓட்டிட்டு இருக்கேன்.


இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லையா?
இதுவரை இல்லங்க.

வாழ்த்துகள். வாகன ஓட்டுனர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
எப்பவுமே கவனமா இருக்கனும். ஒரு கண்ணத் தட்டி முழிக்கிறத விட கொஞ்சம் கூட தட்டி முழிச்சம்னா அந்த நேரத்துல விபத்து நடந்திடும். அதனால போதையில வண்டி ஓட்டாம சிக்னல்ல கவனிச்சு, எதிர்க்க வர்ற வண்டிய கவனிச்சு சைடுல ஓவர் டேக் பண்றாங்களானு சைடு மிரர் கவனிச்சு ஓட்டுனா விபத்து வர்றதுக்கு வாய்ப்பு இல்ல. நம்மள மாதிரி எதிரே வர்றவங்களும் கவனத்தோட ஓட்டுனாங்கன்னா 80சதவீதம் விபத்துக்கள தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் விபத்துக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு வாகனம் ஓட்டுவதை தவிர வேறு என்ன காரணம்?
சாலை வசதி சரியில்லை. 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரிதான் இப்பவும் சாலை வசதி இருக்கு. அன்னைய விட இன்னைக்கு வாகன நெருக்கடி அதிகம். இதுவும் விபத்துக்கு ஒரு காரணமா இருக்கு.

சிறு வயதில் தைரியசாலியாக இருப்பீர்களா?
சின்னப்பிள்ளைல நான் ரொம்ப கோழையாவும், பயந்தவளாவும் இருந்தேன். பிறகு ஒவ்வொரு ஸ்டேஜிலயும் சமூகத்தைப் பாத்து பாத்து தைரியம் வந்துச்சு.

கனரக வாகம் ஓட்டுறதால உங்க உணவு முறைகள்ல மாற்றம் செஞ்சிருக்கீங்களா?
சாப்பாடுல ஒண்ணும் வித்தியாசம் இல்ல. ரெகுலரான சாப்பாடுதாங்க.

மகளிர் மட்டும் படத்துல நிஜமான பெண் ஓட்டுநரா வந்திருப்பீங்க. உங்க ஓட்டுநர் வாழ்க்கையில சக பயணிகள் எப்படிப் பாக்குறாங்க. சக ஆண் ஓட்டுநர்கள் எப்படி பார்வையில வேறுபாடு இருக்குதா?
இப்ப நாகர்கோவில் டூ திருவனந்தபுரம் ஃபாஸ்ட் பஸ் ஓட்டிட்டு இருக்கேன். நம்ம இடத்த விட கேரள மக்கள் வித்தியாசமா இருப்பாங்க. சின்னச் சின்ன ரூட்டுல டிராஃபிக்ல சைடு கொடுக்க முடியாத போது அவங்க வேணும்னு சைடு தர மாட்டேங்றாங்கனு நினைப்பாங்க. அப்ப ஆம்பிளைனு நினைச்சு முன்ன வருவாங்க. லேடி டிரைவர்னு தெரிஞ்சதும் ரொம்ப அன்பாவும், மதிப்பாவும் நடந்துக்குவாங்க. எனக்கு நல்ல கோ&ஆபரேஷன் தர்றாங்க. ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் சொல்றதும் நடக்கும். சின்னக் குழந்தைக்குக் கூட அவங்க அம்மா "அந்தா டிரைவர் ஆன்ட்டி வர்றாங்க டாட்டா சொல்லு"னு சொல்வாங்க. அதனால எனக்கு உற்சாகமா செயல்பட முடியுது.

அந்தக் காலத்துலேயே டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி படிக்கக் கூடாதுனு சொல்லி அவங்க அம்மா தடை பண்ணினாங்க. அவங்க அப்பாதான் அவங்கள வெளிய கொண்டு வந்தாங்க. அந்த மாதிரி இப்பவும் சில அம்மாக்கள் இருக்கத்தான் செய்றாங்க. அவங்களுக்கு சிறந்த அன்னையான நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
அப்படி பெண் பிள்ளைகள அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாதுனு தடுக்குற அம்மாக்களுக்கு என்ன சொல்ல விரும்புறேன்னா மகள் தவறான வழியில போனா தவறான செயல் செஞ்சா அத தடுக்கணுமே தவிர ஒரு நல்ல காரியம் செய்யும் போது நல்லா படிக்கனும்னு சொல்லும் போது அத தடுக்கக் கூடாது. பெண்கள் தைரியமா இறங்கி வெளி வேலை செய்யும் போது அத இந்த சமுதாயம் கொச்சைப்படுத்துது. ஆனா அவங்க இனிவரும் காலங்கள்ல மாறிடுவாங்க. எல்லா வேலையிலயும் சம உரிமை இருக்கு. அதனால பெண்கள தட்டிக் கொடுத்து முன்னுக்குக் கொண்டு வரணும்னு இப்ப உள்ள தாய்மார்களுக்கு சொல்லிக்கிறேன். தன்னோட குழந்தைகள் மேல் நம்பிக்கை வச்சு எந்த செயலையும் செய்ய அனுமதிக்கணும்.

பெண்கள பலவீனமானவங்கன்னு சொல்றாங்களே..
அவங்கள வளர்க்குற முறையிலதாங்க இருக்கு. வெளியே போகாத, வெயிட்ட தூக்காதேனு வச்சிருக்குறதால பெண்களுக்கு முயற்சி பண்றதுக்குள்ள சந்தர்ப்பமே கிடைக்கல. அதனாலதான் பெண்கள வீக்னஸ் ஆனவங்கன்னு சொல்றாங்க. நம்ம முயற்சி பண்ணி பாக்குற போதுதான் அது முடியும்னு தெரியும். தன்னம்பிக்கையும், முயற்சியும் பெண்கள்கிட்ட இருந்தா அவங்களால முடியாதது எதுவுமே இல்ல. சின்னப் பிள்ளைல கனவு கண்டாக்கா ஒரு பஸ்தான் என்னைத் துரத்தும். பஸ்னா எனக்கு பயம். நான் ஓடி ஒளிஞ்சிக்கிட்டே இருப்பேன். அது கனவில. இப்ப ஆப்போஸிட்டா நான் பஸ்ஸ அடக்கிக் கொண்டு போறேன். நம்ம பயத்த பலமா மாத்திடனும்.

மக்களுக்கு சொல்ல விரும்புறது..
நம்மால முடியாதுனு ஒதுங்கி இருக்காம தன்னம்பிக்கையோட முயற்சி செய்யனும். கோழையா இருக்கக் கூடாது. நிறைய பெண்கள் எனக்கு அது செய்ய முடியாது, இது எனக்கு தெரியாதுனு சொல்றத ஸ்டைலா நினைக்கிறாங்க. அது நமக்கு லைஃப்ல பெரிய அடியா இருக்கும். இப்ப தகப்பனாரோட, சகோதரர்களோட அரவணைப்புல இருக்கலாம். ஆனா நாம சமூகத்துல சாதிச்சுக் காட்டணும்னா நிறைய அனுபவப்படனும். எல்லாம் தெரிஞ்சுக்கனும். தெரியாததோ, முடியாததோ முயற்சி பண்ணிக் கத்துக்கிட்டா முடியும். அப்டி பெண்கள் வாழ்ந்து காட்டணும்.

--இவள் பாரதி

Friday, 21 May 2010

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்


இன்று குழந்தைகள் தினம் என்பதற்காக மட்டுமின்றி இந்தக் கேள்விய கேக்கல. ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது மிக முக்கியமானது. உங்கள் குழந்தைப் பருவம் அனுபவம் எப்படியிருந்தது.?
விருதுநகர் மாவட்டம் சாத்துப்பட்டி பக்கத்துல இருக்குற நென்மேனிங்ற கிராமத்துல தான் கழிஞ்சது. அது என்னுடைய அப்பாவுடைய ஊர். அங்கதான் முதல் வகுப்புல இருந்து 11ம் வகுப்பு வரை படிச்சேன். அம்மா, அப்பா எங்க கூட இல்லை. அவங்க வேலை நிமித்தமா வெவ்வேறு ஊர்கள்ல வாழ்ந்திட்டுருந்தாங்க. அதனால தாத்தா பாட்டி கூட இருந்தேன். அது ஒரு பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா கூட பொறந்த அத்தைகள் எல்லாரும் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்துல நான் இருந்தேன். அப்புறம் என் தம்பி இளங்கோ. எழுத்தாளர் கோணங்கினு அறியப்பட்டவர். அவனும் என் கூட வந்து சேர்ந்தான். ரெண்டு பேரும் அந்த கிராமத்துலதான் 10,15 வருஷம் இருந்தோம். 2 வயசுல இருந்து நான் அந்த ஊர்ல இருந்தேன். அப்பா, அம்மா கூட இல்லாத ஏக்கத்தோடயேதான் என்னுடைய காலம் முழுவதும் கழிஞ்சது. தாத்தா பாட்டியுடனிருந்த சந்தோஷமும், அப்பா, அம்மா கூட இல்லாத வருத்தமும் கலந்திருந்தது என் குழந்தை பருவம்.

உங்களுடைய எழுத்தாற்றல் குழந்தை பருவத்துலயே ஆரம்பிச்சுடுச்சா?
அம்மாவுடைய அப்பா அந்த காலத்துலயே புகழ்பெற்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர், சுதந்திர போராட்டத்துல பங்கெடுத்துக்கிட்டவர். தமிழ்சினிமாவின் பேசும்படத்துக்கு முதல் பாடல், வசனம் எழுதியவர். அப்பா வீட்டுல இருந்து அம்மா வீட்டுக்கு விடுமுறை காலங்கள்ல போவோம். அங்க புத்தகங்கள் இருக்கும். அப்பவே ரேடியோ இருக்குற வீடா இருந்துச்சு. எங்க ஊர்ல ரேடியோ இல்லாத சமயம் அது. அம்மா வீட்டுல தாத்தாவுக்குத் தனி ரூம் இருந்துச்சு. அது ரேடியோ ரூம். எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல அவர் இறந்துட்டாரு. அவர் வீடு பூரா புத்தகங்கள் இருக்கும். அப்புறம் எங்க அப்பா எழுதுவாங்க. எழுத்துங்றது எங்க குடும்பத்துல அதுவும் வாழ்க்கைல ஒரு பகுதி என்ற உணர்வு சின்ன வயசுலயே ஏற்பட்டதுக்கு குடும்ப சூழல் ஒரு காரணம். எங்க வீட்டுல அப்பா, சித்தப்பா, தாத்தா இப்படி எல்லாரும் எழுதுவாங்க. அதனால எழுதுவது வாழ்க்கையின் ஒரு பகுதிங்ற எண்ணம், புரிதல் சின்ன வயசுலயே வந்துடுச்சு.

‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ங்ற குழந்தைகளுக்கான படைப்பு குறித்து சொல்லுங்களேன்.
அது ரொம்ப பின்னாடி இப்ப எழுதுனது. குழந்தைகளுக்கான சமூகவியல் சார்ந்த கட்டுரைகள். பொதுவா தமிழில் வந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான கட்டுரைகள், கதைகள் மீது பெரிய அசூயை எனக்கு உண்டு. எதுவும் குழந்தைகளுக்கான உலகத்தோடு குழந்தைகள் மொழியில் இல்லாமல் இருக்கிறது. காக்கா, கீக்கி, கூக்கூ னு இதான் குழந்தைகளுக்கான இலக்கியம்னு உண்டாகி வச்சிருக்காங்க. அது ரைமிங்கா இருக்கு சரிதான். ஆனா குழந்தைப்பருவம்ங்றது 14 வயசு வரை இருக்கு. ஆறாவதுக்கு மேல படிக்கிறவங்க சமூக நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கிறாங்க. அவங்களுக்கு சமூகம் பற்றிய கேள்விகள் இருக்கும். எங்க ஊர்ல 96&97ல சாதிக் கலவரம் நடந்துச்சு. சாதினா என்னங்ற கேள்வி அந்த வயசுக் குழந்தைகள்கிட்ட இருக்கு. ஆனா பாடப்புத்தகத்துல இல்ல, எங்கேயுமே இல்ல, அந்த மாதிரி, சாதி குறித்த, சமூகம் குறித்த குழந்தைகளுக்கான கட்டுரை எழுத வேண்டும்ங்ற உணர்வு ஏற்பட்டது. அதுக்காக சோதனை முயற்சியா எழுதுனதுதான்.


குழந்தைகளுக்கான படைப்புகள் பெருகியிருக்குன்னு நினைக்கிறீங்களா?
குழந்தைகளுக்கானப் புத்தகங்கள்னு பேர் போட்டு வர்ற புத்தகங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கு. அதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடையாது. இந்த புத்தகங்கள்தான் என்னைக்கும் வந்துட்டே இருக்கே. அது சரியில்லைங்றதுதானே. குழந்தைகளுடைய உலகத்தில் குழந்தைகளோடு நின்று பேசுகிற மொழியில் வருகிற புத்தகங்கள் ரொம்ப குறைவு. குழந்தைகளை நோக்கி இப்ப மாமா கதை சொல்லப் போறேன் கேளுங்கனு போதிக்கிற அறிவுரை சொல்கிற தகவல்களை சொல்கிற புத்தகங்கள்தான் அதிகமிருக்கு. இதுதான் குழந்தைகள் புத்தகங்களாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட புத்தகங்கள் வேஸ்ட்.

குழந்தைகளுக்கான படைப்புகள்னு நீங்க எதை சொல்வீங்க?
அது குழந்தைகளும், எழுதுபவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய எழுத்து. இருட்டு எனக்கு பிடிக்கும்ங்ற என்னோட புத்தகமே நான் கட்டுரை எழுதி குழந்தைகள் மத்தியில வாசித்து அவங்களையும் வாசிக்கச் சொல்லி, அதுல அவங்க நிறைய கேள்விகள் கேட்டு, புரியாத வார்த்தைகளை நீக்கி கொண்டு வந்தது. அவங்க இந்த கட்டுரை நல்லா இல்லைனு சொல்லி நிறைய ரிஜெக்ட் பண்ணாங்க. அதயெல்லாம் போடாம அப்புறம் அவங்க சொன்னத எல்லாம் சேத்து திரும்ப எழுதி அப்புறம் கொண்டு வந்தேன். அப்டினாலும் 8 கட்டுரை எழுதினதுல் 4தான் எனக்கு திருப்தியா வந்திருக்கு. இது குழந்தைகளுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப் பட வேண்டியது. இது மாதிரி குழந்தைகளோடு சேர்ந்து உழைத்து உருவாக்கணும்.


‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ற நூல் யாருக்காக எழுதப்பட்டது?
‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ங்ற புத்தகம் வந்து தூத்துக்குடியில இருக்குற துறைமுகத் தொழிலாளிகளுக்காக எழுதுனது. அங்க இருக்கக்கூடிய 5000 தொழிலாளர்கள் அங்க இருக்கக்கூடிய தொழிற்சங்கங்கள்ல இருக்காங்க. ஆனா அவங்களுக்கு அரசியல்னா என்னனு தெரியாது. அவங்களுக்கு ஒரு கல்வி புகட்டுவதற்கான ஒரு வாசிப்பு புத்தகமா எழுதுனேன். எல்லாருக்கும் அது பிடிச்சதா இருந்தது. அதனால ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் புத்தகங்கள் போட்டு இன்னும் மறுபதிப்பு போயிட்டு இருக்கு.

உங்க புத்தகங்களோட தலைப்புகள பாத்தீங்கன்னா ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’, ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’னு இருக்கு. இந்த தலைப்புகள் இயல்பா வந்ததா? இல்ல நீங்க ரொம்ப நாளா யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தீங்களா?
புத்தகத்தை எழுதி முடிச்சுட்டுதான் நாம தலைப்பு வைக்கிறோம். புத்தகத்துல இருக்குற பொருள் சார்ந்துதான் அந்த தலைப்பு இருக்கும். அதே சமயம் புத்தகச் சந்தைல அல்லது புத்தகங்கள் பட்டியல்ல வாசகர்கள் பாக்கும் போது அவங்கள ஈர்க்கணும்ங்றது என்னோட கருத்து. எல்லா புத்தகங்களுக்கும் ஈர்ப்பாதான் தலைப்பு வச்சிருப்பேன்.

உங்களுடைய ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் பத்தி சொல்லுங்களேன்.
அது ரெண்டு பதிப்பு வச்சிருக்கு. முதல் பதிப்புல ‘ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்’னு வந்தது. இரண்டாவது பதிப்பு ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ அப்டிங்ற பேர்ல வந்திருக்கு.

இந்த மாதிரி விஷயங்களை எழுதனும்னு எப்டித் தோணுச்சு?
சமைப்பது ஆண்களுடைய வேலைனு நான் நினைக்கிறேன். சமைப்பது பெண்களுடைய வேலைனு யாருக்கும் சந்தேகம் இல்லாததாக நமது சமூகம் இயங்கிக்கிட்டு இருக்கு. இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று.

கொஞ்சம் தெளிவுபடுத்தி சொல்லுங்களேன்.
பெண்கள் வேட்டையாடிய காலத்துல இருந்தே உலகத்த, மனித சமூகத்தை பராமரிக்க வந்தாங்க. ஆண்கள் வேட்டைக் காலத்ஹ்டுல இருந்தே சும்மா காடுகளைச் சுத்துபவனாக, ஊரைச் சுத்துபவனாக இருந்திருக்கான். ஆகவே வெளி என்பது ஆணுக்கானதாவும், எல்லாரையும் கவனிக்கிற, பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு பெண்ணுக்கானதாவும் வேலைப் பிரிவினை வரலாற்றுல ஏற்பட்டுச்சு. இதுல சுமைகளெல்லாம் பெண்ணுக்கும், சுதந்திரமெல்லாம் ஆணுக்கும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நியாயமில்லாத நிலை வந்துடுச்சு. ஆகவே இந்த விஷயம் மனசாட்சியை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன். திட்டமிட்டு எழுதப்பட்டதுதான் இது. கவிதை, கதை மாதிரி தன்னெழுச்சியா வந்தது இல்ல. அது ஒரு அரசியல் நடவடிக்கை.

நீங்க ஒரு ஆணாக இருந்து கொண்டு சொல்லக் கூடிய இந்தக் கருத்துக்கு ஆண்கள் மத்தியில வரவேற்பு இருந்ததா?
இல்ல. நான் வந்து ஆணாக இல்லை. ஆனாக இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். உடல்ரீதியாக நன் ஒரு ஆண். மனரீதியாக ஆணுக்கு என்னன்ன குணங்கள் இருக்கோ அதெல்லாம் அதெல்லாம் தேவையில்லைனு நினைக்கிறேன். இது எனக்கு நானே கண்டுபிடிச்சது இல்ல. ஆணாதிக்கம் என்பதுதான் ஆணினுடைய குணம். அது மட்டுமில்ல. ஆண்மை என்பதற்கான சில அர்த்தங்கள் இருக்கு. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் கட்டமைக்கப் பட்டவை. ஆகவே எனக்கு அந்த உணர்வு அப்பப்ப வரும். அதை உடனே உடனே போராடி நான் ஒரு ஆண் இல்லைன்னு போயிட்டே இருக்கேன். நான் ஒரு மனுஷி அல்லது மனிதன் அல்லது ரெண்டும்னே வச்சுக்கலாம். அதனால எனக்கு அந்த உணர்வு இல்லை. ஒரு மனிதனா இருந்து பாக்கும் போது இதெல்லாம் அநியாயம்னு தோணுது. எதெல்லாம் அநியாயம்னு தோணுதோ அதை பத்திதான் பேசணும், எழுதணும்ங்றது என்னுடைய உயிரியல் நடவடிக்கையா நினைக்கிறேன்.

ஆண்களுக்கான சமையல் பத்தி எழுதியிருக்கிற நீங்க வீட்டுல எப்பவாவது சமைச்சிருக்கீங்களா?
நான் வீட்டுல இருக்குற எல்லா நாட்கள்லயும் சமையலறையில் என்னுடைய மனைவியை அனுமதிப்பதில்லை. திருமணமான ஓராண்டு இருவரும் சேர்ந்து சமைச்சோம். அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 25 வருடமா நான்தான் சமைக்கிறேன். முதல்ல அவங்க கொஞ்சம் தயங்குனாங்க. இப்ப அவங்களுக்கும் பழகிப்போச்சு. அவங்க காலை எந்திரிச்சு பேப்பர் படிப்பாங்க. வேலைக்குப் போற தயாரிப்புல இருப்பாங்க. நான் சமையல் முடிப்பேன். நானும் கிளம்புவேன். அவங்களும் கிளம்புவாங்க.

நல்ல விஷயம்தான். உங்களைப் பாத்து யாராவது மாறியிருக்காங்களா?
மனசாட்சி உள்ளவர்கள் தாங்களே மாறுவார்கள். அத நாம சொல்லணும்னு அவசியமில்ல. நிறைய ஆண்கள் இன்னைக்கு சந்தோஷமா சமைக்கத் துவங்கியிருக்காங்க. வேலைகளைப் பகிர்ந்துக்கிறாங்க. ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் பின்பற்றுவது அவ்வளவு அதிகமா நடக்காது. என்னோட பழகுற சிலருக்கே இந்த மாதிரி இருக்குறது அவங்க மனச உறுத்துது.

ஆண்கள் சமைப்பதை விமர்சன நோக்கோடு பார்க்கிற பார்வை இருக்கே.
அது குறைஞ்சுக்கிட்டே வருது. நகர்ப்புறங்கள்ல ஏன் கிராமப்புறங்கள்லயும் கூட ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ல அந்த மாற்றம் வந்துடுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கிட்டாதான் வேலைக்குப் போக முடியும்ங்ற சூழல் இருக்கு. இந்த மாற்றங்கள் காலத்தின் சந்தர்ப்பத்தால் வந்திருக்கு. நான் என்ன சொல்றேன்னா, அத ஏன் மனப்பூர்வமா செய்யக்கூடாது. பல ஆண்கள் சமையல்ல உதவி செய்றாங்க. அத உதவினு நினைச்சு செய்றாங்க. உதவினு நினைச்சாலே அது பெண்களுடைய வேலைனு வருது. அது ஆண்களுடைய வேலைனு நினைச்சாதான் மாற்றம் வரும்.

ஆண்டாண்டு காலமா கட்டமைக்கப்பட்ட மூளை, மரபணுக்களில் எல்லாம் திடீர்னு இந்த மாற்றங்களை கொண்டு வந்துடுமா என்ன?
மரபணுக்கள்னு சொன்னா அது இயற்கைன்னு அர்த்தம் வந்துடும். மரபணுக்கள்ங்றது உடம்புல இருக்குற ஒண்ணு. இந்த வேலைப் பிரிவினைங்றது உடல் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்தது. சமூகம் திணித்தது. இது கற்பனையானது, பொய்யானது, அராஜகமானது, அறிவியலுக்கு புறம்பானது. இதுக்கு மரபணுக்கள் காரணமில்ல. பழக்கத்துல வந்ததுதான். பழக்கத்த மாத்திக்கலாம்.

பெண்ணியம் குறித்து பேசுகிற எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
எல்லாரும் ஒரே குரல்ல ஒரே புரிதலோட பேசுறதில்ல. பெண்ணியத்துக்கான அர்த்தமும் நிரந்தரத்துவமுடைய ஒன்றல்ல. அதனுடைய அர்த்தமும் காலத்திற்கு காலம் மாறிட்டே வருது. ஒரு காலத்துல அதாவது 1900ல புருஷன் செத்தா அவன் கூட சேத்து வச்சு கொளுத்துனாங்க. ராஜாராம் மோகன்ராய் மாதிரியானவர்கள் போராடி உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினாங்க. வாழும் உரிமை தேவை என்பது அன்றைய பெண்ணியமா இருந்தது. அடுத்த கட்டமா கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று கேட்டது பெண்ணியமா இருந்தது. அதற்கடுத்த கட்டமா பெண்ணுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்டது அமெரிக்கா உட்பட பல நாடுகள்ல இயக்கமாவே நடந்தது. அது அன்றைய பெண்ணியமா இருந்தது. அது காலத்துக்கேற்ப மாறுபடுது. பெண்ணியம்னா என்ன ஆணுக்கு சமம் என்கிற சிந்தனையும், அதற்கான சமூக உத்திரவாதத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற குரல்தான் பெண்ணியம்னு சொல்றோம். அதை உண்மையாகப் பேசுபவர்களை எப்போதும் மதிக்கிறோம்.

ஒரு படைப்பாளிக்கான சமூக அக்கறையாக எதை சொல்வீர்கள்?
எல்லா மனிதர்களுக்கான சமூக அக்கறை எதுவோ அதுதான் படைப்பாளிக்கும். படைப்பாளிக்கு எது சமூக அக்கறையாக இருக்க முடியும்னா அவன் வாழுகிற சமூகம் ஏற்றத்தாழ்வு இல்லாததாக, பால் பேதமற்றதாக, சாதி, மத பேதமில்லாததாக, சமத்துவம் நிறைந்ததாக எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதான அவா, அதை நோக்கிய பயணமும், அதற்கான உழைப்பும் செலுத்துவதுதான் சமூக அக்கறை. ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு சாத்தியமான வழிகள்ல செய்றாங்க. படைப்பாளிங்றவன் அதை எழுதுறான். இவன் மனசாட்சியோட தொடர்புடையவன். ஆகவே இவன் மனங்கள நோக்கிப் பேசுகிறவன். தகவமைக்கிறவன். அதனால இவனுக்குக் கூடுதலான பொறுப்பிருக்கு. மத்தவங்க பேசுற மாதிரி இவனுடைய வார்த்தைகள் இருக்க முடியாது. இன்னும் கூடுதல் பொறுப்புள்ள வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுகிற அவசியம் இவனுக்கு இருக்கிறது.

ஒரு படைப்பாளி சம்பாதிக்க வேண்டிய விஷயமா எதைப் பாக்குறீங்க?
எல்லாவிதமான அனுபவங்கள். படைப்பாளி எழுத்தாளனாக இருந்தால் மொழியின் மீதான ஆளுமை. தமிழ்ல எழுதக்கூடிய படைப்புகள் சங்க இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள்ல இருக்கக்கூடிய எல்லாவிதமான மொழி பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் உள்வாங்கணும். ஒரு நாட்டியக் காரராக இருந்தால் அவர் எல்லாவிதமான நாட்டிய அடவுகளையும் கற்றவனா இருக்கணும். ஏனா மொழி என்பது ஊடகம். அதனூடாகத்தான் சமூகத்திடம் பேசப் போகிறோம். உறவு கொள்ளப் போகிறோம். அதனால இதெல்லாத்தையும் சம்பாதிக்கணும்.

நவீன படைப்புகள் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் இருக்கிறது. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க.?
மக்கள் என்பவர்கள் ஒரே தரமான கூட்டமல்ல. இப்ப பள்ளியில படிக்கிறாங்க. அதுல ஒண்ணாப்புக்கு, அஞ்சாப்புக்கு, பத்தாப்புக்குனு தனித்தனி பாடங்கள் இருக்கு. அதே மாதிரி எழுத்தாளர்கள்ல ஒண்ணாப்புக்கு எழுதுறவங்களும் இருக்காங்க. 12ம் வகுப்பு எழுதுறவங்களும் இருக்காங்க. நீங்க அஞ்சாப்பு படிச்சிட்டு 12ம் வகுப்பு புத்தகத்த வாங்கிப் படிச்சுட்டு புரியலனா அது எழுத்தாளனோட குற்றமல்ல. தன்னை வளர்த்துக் கொள்வதில் வாசகனுக்கும் பங்கு இருக்கு. அது போல எல்லாருக்கும் புரியும்படியான சென்று சேரும் படியான எழுத்துக்களும் இருக்கு. அதனால இதுல வாசகர்கள் எழுத்தாளர்கள் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு.

‘வெயிலோடு போய்’ங்ற உங்க சிறுகதை திரைப்படமாக்கப்பட்டது பற்றி..
5,6 வருஷத்துக்கு முன்னால சசி திரைப்படமாக்குறேன்னு கேட்டாரு. தயாரிப்பாளர் கிடைக்க தாமதமானதால ‘பூ’ங்ற பேர்ல 2009 வெளியானது.

அந்த சிறுகதை பற்றி சொல்லுங்களேன்.
ஒரு கரிசல் கிராமத்தில் சொந்த அத்தைப் பயன், மாமாப் பொண்ணுக்கும் இடையில ஏற்படக்கூடிய அனுபவங்கள்தான் கதை. சிறு வயசுல இருந்து ஒண்ணா விளையாடி, ஒண்ணா பேசி வரக்கூடிய கட்டத்துல அந்த குறிப்பிட்ட அன்புங்றது காதலா இருக்காது. அந்த வயசுல அது அன்பு, அக்கறையா இருக்கும். எதையும் அவனோடு இல்ல அவளோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய உந்துதல் இருக்கும். அது பருவ வயதில் காதலா மாறுது. அது ஒரு பக்கமா இருக்கு. அவனுக்கு இந்த காதல் இல்லை. ஆனா அவளைக் கல்யாணம் செய்யமுடியாத சூழல்ல இருப்பான். ரெண்டு பேருக்கும் வெவ்வெறு இடத்துல திருமணமாகுது. திருமணமானவுடனே காதல் கட்டாயிடணும். அது இருக்கக்கூடாது. அதான் இங்க இருக்கக்கூடிய விதி. இந்த கதை அதை மீறுது. திருமணத்துக்குப் பின்னாலும் தன்னுடைய மச்சான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறா அவ. அப்டி இருக்குறது சரியா தப்பாணு கேட்டா அவளுக்கு சரி. தப்பெல்லாம் தெரியாது. அதே சமயம் தன்னுடைய கணவனிடமும் அன்னியோன்யமா இருக்கக்கூடியவ. இதுதான் அந்த கதையின் மையம்.

‘வெயிலோடு போய்’ அப்டிங்ற 4 பக்க சிறுகதைய எப்டி ரெண்டரை மணி நேர திரைப்படமா கொடுக்க முடியும்?
அதாவது ரெண்டு கதைய ஒண்ணாக்குனோம். ‘அசோக வனங்கள்‘ங்ற கதை பால்ய காலத்தையும், ‘வெயிலோடு போய்’ங்ற கதை வெவ்வேறு இடங்கள்ல திருமணமான பிறகு சந்திக்கும் போது நடக்குறதையும் சொல்றது. கதையே ஒரு நாள்ல நடக்குறதுதான். ஊருப் பொங்கலுக்கு மச்சானும், மச்சான் சம்சாரமும் வர்றாங்கன்னு கேள்விப்பட்டு பக்கத்து ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போகலாம்னு வந்திருப்பா. வந்து பாத்துட்டு மச்சான் நல்லா இல்லைனு தெரிஞ்சதும் அவ மனசு உடைஞ்சு திரும்புறா. இதுல ஃப்ளாஷ் பேக்ல அவங்க பால்ய காலம் வரும்.

முழுக்க முழுக்க ‘பூ’ படத்த உங்களோட அப்டைப்புனு சொல்ல முடியுமா?
கதை என்னோடது. சினிமா அவருடையது. திரைக்கதைல கொஞ்சம் சேத்துருக்காரு.

திரைக்கதைல உங்க பங்களிப்பு இனி தொடருமா?
அது என்னோட கையில இல்லை. யாராவது நல்ல இயக்குனர் கேட்டா கொடுக்கலாம்.

ஒரு படைப்பாளிக்கான விருதுங்றது அங்கீகாரம்தானே..
எனக்கு ஒவ்வொரு வேலையும் முக்கியம். அது மாதிரி எழுதுறங்றது முக்கியமான வேலை. இத தனிச்சுப் பாக்கல. அதனால இந்த படைப்புக்கு இவ்ளோ அங்கீகாரம் வந்திருக்கணுமேனு நினைக்கல. ஒரு வாளிக்கு அங்கீகாரம் வந்திருக்கணும். ஒரு வாளி இல்லை. அரை வாளிதான் வந்திருக்குனு ஒண்ணுமே கிடையாது. நாம எழுதுறோம். நாம எழுதியிருக்குறது சரியா இருக்கா? அதான் நம்ம கவலையா இருக்கணும். நான் பெரிய எழுத்தாளர். எழுதி முடிசுட்டேன். படிக்கிறதும், படிக்காததும் அவன் வேலைன்னு விட முடியாது. மக்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. உன் கதைய படிக்கிறது அவங்களுக்கு முக்கியமான வேலை கிடையாது. மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறது உட்பட அது எழுத்தாளர்களோட வேலைதான்.

ஒரு கட்டுரைல அக்கா கையால அடி வாங்காத ஏக்கத்தை வெளிப்படுத்துயிருப்பீங்க?
அக்கா என் காத திருகி, என் தலைல ஒரு கொட்டு வைக்கிறதுக்கு எனக்குனுவாழ்க்கைல எனக்கு வாய்ப்பு கிடைக்கல. எனக்குனு அக்கானு ஒருத்தி பொறந்தவ சின்ன வயசுலயே இறந்துட்டா. அக்கா கையால கொட்டு வாங்குறவங்க கொடுத்து வச்சவங்கனு எழுதியிருந்தேன். அக்கானு ஒருத்தி இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா உறவுகளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு. எனக்கு ஒரு அக்கா இல்லைங்ற ஏக்கம் இருக்கு. நான் பொறக்குற முன்னாடியே அக்கா பொறந்து இறந்துட்டதா வளரும் போது சொன்னாங்க. எனக்கு அக்கா பற்றிய நினைவுகள் சின்ன வயசுல இருந்து இருக்கு. மனிதனுக்கு எத்தனையோ ஏக்கங்கள் இருக்கு. அது மாதிரி எனக்கு அக்கா இலைங்ற ஏக்கம்.

ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கட்டுரை எழுத்தாளன், ஒரு சிறுகதை எழுத்தாளன் அப்டினு ஒண்ணும் யோசிக்கிறதில்ல. எந்த வடிவத்துல எழுத வருதோ அந்த வடிவத்துல எழுதிட்டுப் போக வேண்டியதுதான். ஒரு விஷயத்த சொல்றதுக்கான வடிவம் சரியாயிருக்குதானு அதன் உள்ளடக்கம்தான் தீர்மானிக்கணும். எந்த ஒரு எழுத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதும் அதன் உள்ளடக்கம் தான். நம்ம முகத்துல எவ்வளவு சதைகள், எவ்வளவு எலும்புகள் எந்தெந்த அளவுல இருக்குங்றத பொறுத்துத்தான் முக வடிவமிருக்கும். எழுத்தும் அதைப் போலானதுதான்.

சில நேரங்கள்ல எழுத்துக்கள் பிரச்சாரமா இருக்குங்ற விமர்சனத்த நீங்க எப்டி பாக்குறீங்க?
இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதே இல்லை. எழுத்துங்றது பிரச்சரத்துக்காகத்தானே. உலகத்துல எழுதப்பட்ட ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒன்றை இன்னொருவருக்குச் சொல்வதற்காக எழுதப்பட்டதுதான். பிரச்சாரம்னா என்ன? ஒரு கருத்தை இன்னொருவருக்குச் சொல்வது அல்லது இன்னும் பல பேருக்கு சொல்வது. எந்த எழுத்து யாருக்கும் சொல்லப்படாத எழுத்து. இது பிரச்சாரம், அது பிரச்சாரம்னு சொல்றவங்க அரசியல் செய்றாங்கன்னு அர்த்தம். அதெல்லாம் தூர வச்சிட்டு நாம எழுதிட்டு இருக்க வேண்டியதுதான்.

உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்னு யாரைச் சொல்வீங்க?
நிறைய பேர் இருக்காங்க. கு.அழகிரிசாமி, புதுமைப் பித்தன், தஸ்தாவெஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தர் பாதிச்சிருக்காங்க. பிரபஞ்சன், வண்ண நிலவன், வண்ணதாசன். சில எழுத்துக்கள் எல்லா வயசிலயும் பாதிச்சுட்டு இருக்கும்.

நீங்க அடிக்கடி படிக்கிற புத்தகம் பற்றி..
அது துறைசார்ந்ததா இருக்கு. ஈ.எஸ்.நம்பூதரி எழுதிய ஈன்டிஅ ஜீலன்னிங் இன் அரிசிச் அப்டினு எகனாமிக் புத்தகம். லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ இலக்கியத்துல கு.அழகிரிசாமியின் குறிப்பிட்ட சில கதைகள். இதெல்லாம் வெவ்வேறு காலகட்டத்துல நம்ம அனுபவங்கள விரிவுபடுத்தும். அந்த வாசிப்பனுவம் வேறுபடும். ஒரு சிறந்த படைப்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமா இருக்கும்.

உங்க இலக்கை அடைஞ்சதா நினைக்கிறீர்களா?
இதுவரை என்ன செஞ்சுக்கிட்டேருந்தேனோ அதான் இலட்சியம்னு வச்சுக்க வேண்டியதுதான். வாழ்க்கையில் இறுதி வரை இதை தொடர்ந்து நம்முடைய மக்களுக்காக சமூக நீதிக்காக எந்தெந்த வழியில் முடியுமோ அந்தந்த வழியில் உதவுவதுதான் இலட்சியமா இருக்க முடியும்ணு நினைக்கிறேன். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயமா எதை நினைக்கிறீங்க? சொந்தமா யோசிக்கணும். சொந்த வார்த்தைகளைப் பேசணும், நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே, நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே இருந்து எது வந்தாலும் அதை பார்த்து வியக்கக்கூடாது. அது நல்லதா? கெட்டதானு சீர்தூக்கிப் பார்த்துதான் ஏற்கணும். வெளியே இருந்து வருவதாலயே அதை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது நமக்கு சொந்த மரபை அபகரிக்காமல் இருக்குமாங்றத பாக்கணும். இன்றைக்கு இதுதான் அவசியம்னு நினைக்கிறேன்.

சொந்த மரபு என்பதன் அர்த்தம்?
சொந்த மரபு என்பது நமக்கான பாரம்பரியம். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளுக்கு பாரம்பரியம் இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த நாடுகள்ல இந்திய நாகரீகமும் ஒண்ணு.

Wednesday, 19 May 2010

கி.ரா.




தங்களது கரிசல் காட்டு ஞாபகங்கள் எப்படி இருக்கிறது?
முதலில் இருந்த தீவிரம், ஈடுபாடு அதெல்லாம் குறைந்திருக்கிறது. அதற்காக இல்லையென்று என்று அர்த்தம் இல்லை. அந்த நினைவுகள் இருக்கிறது. ஆனால் சற்று குறைந்திருக்கிறது.

‘கதை சொல்லல்’ எனும் கலை உங்களுக்குள் ஒரு விதையாக விழுந்த காரணம்?
அது ஒவ்வொரு மனுஷங்களுக்குள்ளேயும் இருக்கு. எனக்குள்ளயும் இருக்கு. உங்களுக்குள்ளயும் இருக்கு. ஆனால் வடிவங்கள் வித்தியாசமா இருக்கும். இப்ப வந்து நீங்க ஒரு ஊருக்குப் போயிட்டு வர்றீங்க. நீங்க பார்த்தத, கேட்டத, அங்க உள்ள சுவாரசியங்கள யார்கிட்டயாவது சொல்றீங்க இல்லையா. அது கதைதான். ஆனா கதை வடிவம் உண்டா அப்டினு கேக்கக்கூடாது. இப்ப ஒரு கதை விடுறதுனு சொல்வாங்க. அந்த மாதிரி கதை உண்டாகுறதுக்கு, கதையா வடிவமாறதுக்கு முன்னால ஒரு நிலை எதுனா கேட்டா அது சம்பவங்கள் தான். சம்பவங்கள்தான் பின்னால கதையாகுது. ஒரு விஷயம் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு நாக்குக்கு நாக்குக் கடந்து போயிட்டே இருந்தா அது கதையாகிக்கிட்டே போகும். கதையானதுக்கு அப்புறமும் கூட நீங்க வந்து அந்த கதையை திரும்பவும் சொல்லும் போது வித்தியாசப்படும். அது இன்னொரு இடம், இன்னொரு இடம்னு போகும் போது வித்தியாசப்படும். ஆகவே வடிவங்கள் வித்தியாசப்பட்டுக்கிட்டே போகும். எனவே, க்தை அப்டிங்றது நீங்க நினைக்கிற மாதிரி ஏதோ ஒரு வடிவத்துல கதைதான்னு நினைக்கப்படாது. அது எல்லா இடத்துலயும் நீக்க மற இருக்கு. அது வந்து நாட்டுப் புறத்துலதான் இந்த கதை இருக்கு. நகர்ப்புறத்துல இல்லை அப்டினு சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லாரிடத்திலும் இந்த கதை சொல்லலும், கதை கேட்டலும் இருந்துக்கிட்டேதான் இருக்கு.

கி.ரா.வுடைய எழுத்துக்கான அடையாளம் பற்றி..
ஒரு மனிதனிடமிருந்து ஒரு விஷயம் கதையாகவோ, சம்பவமாகவோ, நடப்பை சொல்வதாகவோ கிளம்புகிறது. அது எப்படி உள்ள வருதுனா முதலில் கி.ரா. நினைக்கிறார். அதுவே வெளியே வருதுனா நூத்துக்கு நூறு அப்டியே வெளியே வருதுனு சொல்ல முடியாது. சொல்லும் போதே திசை மாறும். வடிவம் மாறும் ஆகவே எப்படி சொல்கிறார் என்ன, ஏதுங்றது அந்த வினாடிதான் சொல்லும் போது நிர்ணயமாகும். எழுதும் போது நிர்ணயமாகும். இப்ப நான் வந்து ஒரு கதையில எழுதுறேன்னு வச்சுக்கங்க. முதல்ல நான் ஒரு கதை எழுதி முடிப்பேன். அல்லது ஒரு கட்டுரை எழுதி முடிப்பேன். அதன் நகல் பண்ணும் போது மாறிட்டே வரும். அசல் வராது. இது என் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் வேறுபடலாம். ஆகவே அது எப்டி வருது அப்டிங்றது வினாடிய பொறுத்த விஷயம்தான்.

1958 ல சரஸ்வதியில எழுத ஆரம்பிச்ச நீங்க இன்னைக்கும் வரைக்கும் வெவ்வேறு பரிமாணங்கள்ல வாசகர்களோட நேரடித் தொடர்புல இருக்கீங்க. ஒரு வாசகனுடன் இவ்வளவு வருடங்கள் தொடர்பிலிருக்கும் நீங்கள் அவர்களுடைய எண்ணங்கள், அவதானிப்புகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்கிறீர்கள்?
மாறுபடுவதுங்றது இயல்பு. 57&58ல இருந்த மாதிரி இப்ப 2009ல இருக்க முடியாது. மனிதனுடைய வளர்ச்சியிலயும் மாறுதல், காலம் மாறுதல், உடல் மாறுதல், மனசு மாறுதல், சூழல் மாறுதல் இதெல்லாம் கொண்டுதான் விஷயங்கள் இருக்கும்.

படைப்பின் வடிவம் வேறுபடும் போது அது ஒருவருடைய தனித்துவம் என வைத்துக் கொள்ளலாமா?
ஆமா.. ஆதிமூலத்தைப் போல கோட்டோவியங்கள யாராலும் வரைய முடியாது. எல்லாரும் கோடு போடுறவங்கதான். கோட்டோவியக்காரர்கள்தான் ஆனா அவரை அடிச்சுக்க ஆளே இல்ல. எது செய்தாலும் அப்டி செய்வாரு. எம்.எஸ்க்கு ஒரு குரல், லதா மங்கேஷ்கருக்கு ஒரு குரல்னு இருக்குதானே. அது மாதிரி. இதுக்கு அவர்தான் ஆதி, அவர்தான் மூலம். அவருகிட்ட குழந்தைகள பத்தி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் குழந்தைகளா இருந்திருப்பாங்க இல்லையா? அவங்களோட வாழ்க்கைய கோட்டோவியங்களாக செய்யலாமேன்னு கேட்டேன். ரஷ்யா எழுத்தாளர்கள்லாம் எழுதியிருக்காங்க. தமிழ்ல யாரும் எழுதல. நீங்க சொன்ன பல விஷயங்களை ஆல்பமா பண்ணுங்கன்னேன். நல்ல யோசனைதான். ஆனா ‘நான் அந்த கோட்ட விட்டுட்டேன். அதை நிறுத்திட்டு கலருக்கு வந்துட்டேன். அதனால அத இனிமே செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டார்.

ஒரு படைப்பாளி தனது நிலையில் புதிய பரிணாமத்தை எட்டும் போது பழையதை விட்டுவிடுவார்களா?
நிச்சயமா.. ப்ரெஞ்ச்ல மஞ்சள் இருந்து பச்சைக்கு போனோன். பச்சைல இருந்து நீலத்துக்குப் போயிட்டாங்க அப்டினு சொல்வாங்க. அது மாதிரிதான்.

இது ஓவியங்களுக்கு மட்டும்தானா? எழுத்துக்கும் உண்டா? கவிதை, கதை, சார்ந்த படைப்புகளுக்கும் உண்டா?
இல்லை. கதையின் வடிவம் மாறுமே. அப்ப இருந்த சிறுகதையின் வடிவம் இப்ப கிடையாது. நாவலின் பழைய வடிவமும் கிடையாது. கவிதையின் பழைய வடிவமும் இப்ப கிடையாதுன்னு ஆகிப் போச்சே.

இடைச்சேவலில் விவசாயியாக இருந்ததுக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்துல பேராசிரியராக இருந்ததுக்குமான மாற்றங்களை எப்படி உணர்கிறீர்கள்?
முதலில் பல்கலைக்கழகத்தில் அழைப்பு வந்ததும் பயம் தான் வந்தது. என்னைப் பல்கலைக்கழகம் எப்படி கூப்பிட்டதுனா நாட்டுப்புறவியல் ஒன்னு தொடங்கனும்னு சொன்னாங்க. நாட்டுப்புறவியல் பத்தி ஓரளவு தெரிஞ்சவர்னு நினைச்சாங்க. எனக்கு தயக்கம் என்னன்னா நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமம். திடீர்னு பல்கலைக்கழகத்துல கூப்பிட்டதும் உடனே பதில் எழுதல. பொதுவா எனக்கு வரமுடியாதுனு காரணம் சொல்றதுக்காக எனக்கு உடல் நிலை சரியில்லைனு துணைவேந்தர்கிட்ட சொன்னேன். வயசாகிட்டுதுனு சொன்னேன். 66 வயசுல கூப்பிட்டாங்க. இப்ப 86 வயசாகுது. உடம்புக்கு என்ன செய்துனு கேட்டாரு. எனக்கு பி.பி. இருக்கு, டயாபிட்டீஸ் இருக்கு, சுகர் இருக்கு, அது, இதுனு சொன்னேன். அவரும் இதெல்லாம் எனக்கும் இருக்கு. ஆகவே நீங்க வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நோய்களை எதிர்ப்போம்னு சொன்னாரு. கல்லூரினாலே மாணவர்கள் பேராசிரியர்கள கிண்டல், கலாட்டா பண்றதுனு கல்லூரி நான் போகலைன்னாலும் நான் கேள்விப்பட்ட விஷயம் அப்டி. பல்கலைக்கழகத்துல சாஸ்தியா இருக்கும். நாம எப்படி குப்பைக் கொட்டுறது? அவர் சொல்றாரு உனக்கு பேராசியர் சம்பளம் கொடுப்போம்னு, ஆனா எனக்கு முன்னால க.நாசு. கெஸ்ட் லெக்சரரா இருந்தாரு. என்னை பேராசிரியராவேக் கூப்பிடுறாங்க. ‘நாட்டுப்புறவியல் தொடங்குறோம் அதுக்கு நீதான் பொறுத்தம்னு எங்களுக்கு தெரியுது. நீங்க அவசியம் வந்து இந்த வேலைல பொறுப்பேத்துக்கணும்‘னு சொல்றாங்க. எனக்கு பயம் வந்துடுச்சு. அப்ப சொந்தக்காரன் ஒருத்தன் ‘நீங்க ஒரு ரிசைன் லட்டர் எழுதி பாக்கெட்டுல வச்சுக்கங்க. பிடிக்கலைனா தேதி போட்டு கொடுத்துட்டு வந்துடுங்க. இதுக்கு ஏன் யோசிக்கிறீங்க’னு சொன்னான். இப்டி ஒரு வருஷம் ஓடிப் போச்சு. அப்புறம்தான் நான் இங்க வந்தேன். வந்து பாத்த பிறகுதான் தெரிஞ்சது. எம்.ஏ., எம்.ஃபில், பி.ஹெச்டி மாணவர்கள் எல்லாரும் இருக்குறதுதான் பல்கலைக்கழகம்னு. அப்பதான் துணை வேந்தர் ‘நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் கிடையாது. கல்லூரிலதான் கல்வி மற்ற விஷயங்கள் எல்லாம். இங்க எல்லாரும் ஆய்வு மாணவர்கள்தான்‘னு சொன்னாங்க. என்னைய வகுப்பெடுக்கச் சொல்லும் போதுதான் ‘அது என்னால முடியாது’னு சொன்னேன். ‘ நீங்க அவங்க பாடத்த வகுப்பெடுக்குறதுல அர்த்தம் இல்லை. வகுப்புங்றது ஒரு முக்கால் மணி நேரம். மாணவர்களோட பேசிட்டிருந்தா போதும்‘னு சொல்லவும் எதைப் பத்தி பேசனு கேட்டேன். உலகத்தப் பத்தி, கிராமத்தப் பத்தி, கதைகளப் பத்தி, சினிமாவப் பத்தி, அரசியல் பத்தி எதைப் பத்தியும் பேசலாம். தோணுனா கதைகள சொல்லுனு சொன்னாரு. அவர் சொல்றார் ‘ஒரு எளிய அனுபவம் உள்ள ஒரு வயசாலிய மாணவர்கள்கிட்ட பேச வைக்கிறது கிடையவே கிடையாது. மாணவர்கள் தன்னோட 25 வருடங்களப் படிப்புல செலவிடுறத வேடிக்கையா கிருபானந்தவாரியர் ‘காலேஜ்னா ‘கால் ஏஜ்’ எந்த விதமான அனுபவமும் மாணவர்களுக்கும் பயனில்லாம, படிப்புக்கும் பயனில்லாம போகுது’னு சொல்வாராம். அப்டி பயன்படாம இருக்குறவங்களுக்கு உன்னுடைய அனுபவங்கள் நீங்க பேசும் போது பயன் தரும்னு சொன்னாரு. இது வந்து ஒரு சுதந்திரமான பல்கலைக்கழகம். அதனால அந்த துணை வேந்தர் என்ன நினைக்கிறாரோ அதை செய்யலாம். அப்ப அவர்கிட்ட சில கேள்விகளை பொதுக் கூட்டத்துல வச்சு ‘இவர் என்ன டாக்டரேட் பண்ணாரா? எப்டி இவரை பேராசிரியரா நியமிச்சீங்க’ அப்டினு கேட்டாங்க. அதுக்கு அவர் ‘கம்பரையும், திருவள்ளுவரையும் நான் பேராசிரியா நியமிச்சிருக்கேன்னு வச்சுக்கங்க. அவங்க எங்க டாக்டரேட் பண்ணினாங்கன்னு கேட்க முடியுமா? அவங்கள வச்சு எத்தனை பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. அது மாதிரிதான் கி.ராவும். அவர் படைப்புகள பத்தி எத்தனையோ பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. இவர் எதுக்கு டாக்டரேட் படிக்கணும்‘னு சொன்னாரு. இரண்டு காரியங்கள் பண்ணினோம். ஒன்று புத்தகம் எழுதுவது. இன்னொன்று ஏதாவது திட்டத்தை ஆய்வு செய்வது. முதலில் ஆய்வுக்கு முன்னால இந்த மண்ணுல இருக்குற நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி ஒரு புத்தகம் கொண்டு வந்தோம். அப்புறம் ரெண்ணு செமினாரு நடத்துனோம். அதனால விவசாயிக்கும் பேராசிரியருக்கும் சம்பந்தமில்ல.

பல்கலைக்கழகத்துல வித்தியாசமான அனுபவம் உண்டா?
பல்கலைக் கழகத்து ஆய்வ எடுத்துப் படிச்சுப் பாத்தேன். அதுல ஒண்ணுமே இல்லை. எதையுமே கண்டுபிடிக்காம வெறும் புள்ளி விவரங்களா சொல்றதுக்கு எதுக்கு டாக்டரேட் கொடுக்கனும்? அதுலயும் கூறியது கூறல் குற்றம்னு சொல்வாங்க. முதல் அத்தியாயத்தில சொன்னதையே இரண்டாவது அத்தியாயத்துல சொல்றதுனு ரொம்ப கேவலமா இருந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சிய இருந்தது. அப்புறம் நான் துறைத்தலைவர்கிட்ட ‘என்னங்க இதுனு‘ கேட்டேன். ‘அதெல்லாம் அப்டித்தான்’னாரு.

உங்களுடைய பார்வையில் கல்வி என்பது என்ன?
கல்வி என்பது ஞானத்தை அடைவது, தேடுவது. இது இல்லைனா அது கல்வி கிடையாது. அது வேலைக்கான தயாரிப்புகளே.

உங்க அறையிலிருக்கும் மிகப் பெரிய மரத்தாலான எழுதுகோல் பற்றி..
அது என்னோட 70வது பிறந்த நாளில் நடிகர் பார்த்திபன் கொடுத்தது. அவர் எதையும் வித்தியாசமா செய்யக்கூடியவர். அதான் இந்த வித்தியாசமான பேனா.

உங்களுடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞர் இளவேனில் பத்தி சொல்லுங்களேன்.
மத்தவங்க படம் எடுத்தா ஒரு முகம் தான் வந்துட்டே இருக்கும். இவர் அப்டி இல்லை. கி.ராவுடைய பல முகங்களைக் கொண்டு வருவாரு. ஒரு படம் செய்தி சொல்லனும்னு விரும்புவாரு. படம்ங்றது இயக்கமா இருக்கனும்னு நினைக்கிறவரு.

ஒரு படைப்பாளிக்கான அங்கீகாரமா எதை நினைக்கிறீங்க.
சில பேர் நினைத்துக் கொள்வது மாதிரி எனக்கு வித்யா கர்வமோ, பெருமிதமோ கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் அப்டினு அதாவது தான் ஒரு ராஜானு நினைச்சுக்குற மாதிரி என்னை நினைச்சுக்கிறது கிடையாது. இயல்பாவே எனக்கு எந்த வித கர்வமும் கிடையாது. அது என்னோட இயல்பு.

-இவள் தேவதை பாரதி

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்



திரைத்துறையில் கால் பதித்து கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருப்பவர். சின்ன்ப் பூவை மெல்லப் பேசச் சொன்னவர். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். வானத்தைப் போல, பூவே உனக்காக இப்படி தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் பாடல்களைக் கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும்.

உங்களுடைய முதல் படமான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ வாய்ப்பு பற்றிச் சொல்லுங்களேன்.
பொதுவா எனக்கு அதிர்ஷடத்து மேல நம்பிக்கைக் கிடையாது. உழைப்புதான் மிகப் பெரிய வெற்றியை தரும். உழைப்புதான் மனித வாழ்வியலுக்கு மூலாதாரம் என்று நினைக்கிறேன். நான் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவன். எங்க அப்பா மேடைப் பாடகர். எனக்கும் அதனால பாரம்பரியமா இசை ஆர்வம் வந்துச்சு. ஆனா நான் சின்ன வயசுல திரைத்துறையில மிகப் பெரிய இயக்குனரா வரனும்னு ஆர்வமா இருந்தது. அதை நினைச்சுதான் ராபர்ட் ராஜசேகரிடம் உதவியாளரா சேர்ந்தேன். அவங்க என்கிட்ட இருக்குற இசைத்திறமையை கண்டறிந்து ‘இவன் இசைக்கு நல்லா வருவான் போலிருக்கே’னு முடிவு பண்ணி இசையமைப்பாளர் ஆக்கினாங்க. பொதுவா இது ஒரு விபத்தான விஷயம் வெற்றிகரமான ஒரு நிலையாக மாறிவிட்டது. இசையில எல்லாமே விபத்துதாங்க. ராகங்களே ஒரு சுரம் இன்னொரு சுரத்தோட சேரும் போது கிடைக்குறதுதானே. சுரமோடு அனுசுரம் ஜாயின்ட் பண்ணும் போது அத மியூசிக்கல் ஆக்ஸிடன்ட்னு சொல்வாங்க. அது போல என்னுடைய வாழ்க்கைல விபத்தா நடந்த விஷயம் நான் இசையமைப்பாளரா ஆனது. ஆனா எனக்கு கம்போஸ் பண்ற திறமை இருந்தாலும் அந்த நேரத்துல ஒரு வெற்றியாளனா வருவேன்னு நினைக்கல. ஏன்னா இளையராஜா நான் வரும் போது ரொம்ப பெரிய லெவல்ல இருந்தாங்க. ஒரு நூறு படம் வருதுனா அதுல 75 படம் இசைஞானி இசைல இருக்கும். அவர் இருக்கும் போது அவரைத் தாண்டி ஒருத்தர் வர்றதுங்றது நடக்கவே முடியாத ஒரு விஷயம்னு நான் அவநம்பிக்கையோட இருந்த நேரத்துல எனக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்து இன்று வரை வெற்றியாளனா வச்சிருக்கிற என் இயக்குனர் ராபர்ட் ராஜசேகர் அவர்களை இந்த நேரத்துல நன்றியோட நினைச்சுப் பாக்குறேன்.

அந்த படத்துல நீங்க ஒரு பாடல் கூட பாடியிருக்கீங்க இல்லையா? அத பத்தி சொல்லுங்களேன்.
ஆமா.. ‘ஏபுள்ள கருப்பாயி’ பாட்டு. அதாவது எல்லா பாட்டும் கம்போஸ் பண்ணோம். அப்ப வித்தியாசமா ஏதாவது பாட்டு இருக்கணும்னு சொல்லிட்டு ராஜசேகர் கேட்டாரு. அப்பதான் என்கிட்ட வித்தியாசமான நாட்டுப்புறப் பாட்டு இருக்குன்னு சொன்னேன். கானா பாடல்களுக்கு ஆரிஜின்னு சொல்லப்படுற சென்னை திருவல்லிக்கேணிதான் நான் பொறந்து வளர்ந்த இடம். அதனால நண்பர்களோட கடற்கரையில உட்கார்ந்திருக்கும் போது நிறைய பாடல்கள் எழுதி அந்த நேரத்துல அப்படியே பாடுறதுண்டு. அந்த மாதிரியான பாட்டுதான் ‘ஏ புள்ள கருப்பாயி’. அது ரொம்ப சோகமான சூழ்நிலைல எழுதின பாட்டு. அந்த பாட்ட நான் இயக்குனருக்குப் பாடிக் காண்பிச்சேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்தப் பாட்டைப் பாட வித்தியாசமான குரல் வேணும்னு சொல்லிட்டாங்க. நானும் அந்த நேரத்துல மலேசியா வாசுதேவன் பாடுனா நல்லா இருக்கும்னு ஏதேதோ சொன்னேன். அப்ப இயக்குனர் ‘நீயே பாடு. உன்னுடைய குரலே வித்தியாசமான இருக்குதுனு’ என்னுடைய பாடலை எனது முதல் படத்துலேயே நானே எழுதி இசையமைச்சுப் பாடுற வாய்ப்பை வழங்குனாரு. இன்னைக்கு வரை கேக்குற அளவுக்கு பாப்புலரான பாட்டா இருக்கு.

இயக்குனர்கள்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்து அந்த உதவி இயக்குனர் பின்னாள்ல பெரிய இயக்குனரா வர்ற மாதிரி இசைத்துறையில, உங்ககிட்ட உதவி இசையமைப்பாளரா இருந்து பெரிய ஆளா ஆகியிருக்காங்களா?
அப்படி சொல்ல முடியாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட என் இசைக்குழுவுல வாசிச்சவர்தான். ஹாரிஸ் ஜெயராஜ் என் மியூசிக்ல கீ&போர்டு வாசிச்சவர்தான். இசைக்குழுவுல சேர்ந்து அஸிஸ்டென்டா இருந்து வர்றவங்க ரொம்ப கம்மி. அதெல்லாம் பாரம்பரியமா ஒரு காலத்துல இருந்தது. ஜி.கே.வெங்கடேஷன்கிட்ட இளையராஜா உதவியாளரா இருந்தாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் சுப்பாராவ்ங்ற இசையமைப்பாளர்கிட்ட இருந்து வந்தவரு. அது நான் அறிமுகமாகுற காலகட்டம் வரை இருந்தது. ஆனா அதுக்கு பிறகு இல்லை. ஆனா பொதுவாக இன்னைக்கு நிறைய கீ&போர்டு ப்ளேயர்ஸ், மிருதங்கம் வாசிக்கிறவங்களா இருக்குறவங்க ஒரு வகைல நிறைய இசையமைப்பாளர்கிட்ட இருந்தவங்கதான். அவங்களும் எல்லா வித அனுபவங்களோடும் சேர்ந்துதான் வர்றாங்க. அதனால அஸிஸ்டென்டா இருந்து வர்ற பாரம்பரிய முறை இப்ப இல்லன்னாலும் சிலரிடம் வாசித்து விட்டுதாம் பிறகு பெரிய ஆளாகிருக்காங்க.


இடைக்காலப் பாடல்கள்னு சொல்லப்படுற 80க்கும் 90க்கும் இடையிலான பாடல்கள் இன்னைக்கும் கேக்குற அளவுக்கு இருக்கு. இன்னைக்கி திசை மாறிப் போன மாதிரி இருக்கு. ஏன்?
இதுக்கு காரணம் என்னனா நிறைய அவசரமான முடிவுகள்தான். ரொம்ப ஷார்ட் டைம் சிந்தனை. இன்னைக்கு வெற்றி கிடைச்சா போதும் என்கிற துரிதகதில தான் போய்ட்டிருக்கு. பாடல்ங்றது காலத்துக்கும் நிக்கக்கூடியது. படத்த தாண்டி ஒரு பாட்டு நிக்கனும். அந்த காலத்துல நிறைய பாடல்கள் வானொலில கேட்டீங்கன்னா அதுல யார் நடிச்சிருக்காங்கன்னு தெரியாது. நிறைய பாடல்கள எம்.ஜி.ஆர்., சிவாஜினு நினைச்சுட்டு இருப்போம். ஆனா அதெல்லாம், எஸ்.எஸ்.ஆர், அப்புறம் பெயர் தெரியாத பிற மொழி நடிகர்கள், முகம் தெரியாத நடிகர்கள் நடிச்சிருப்பாங்க. படம் பேர் கூட ஞாபகம் வராது. ஆனா அந்த பாட்டு உயிரோட இருக்கும். இதுக்கு காரணம் என்னனா பாடல்களுக்கு தனிகவனம் செலுத்தி கதையோட ஜீவன் இருக்குற மாதிரி அந்த காலத்துல பண்ணிட்டு இருந்தாங்க. எங்களுடைய ஆரம்ப காலமான 80&90கள்ல கூட அப்டிதான் பண்ணிட்டிருந்தேன். இன்னைக்கு வரைக்கும் நான் அப்டிதான் பண்ணிட்டிருக்கேன். ஆனா இப்ப அதை விட்டுட்டு நாம மாடர்னா இருக்கனும் அப்டிங்ற விஷயங்கள் மாத்திரம்தான் இருக்கு. மாடர்னா எந்த விஷயம் இருக்குனு எனக்கு உண்மையிலயே தெரியல. ஏனா மாடர்ன்ங்ரது வெஸ்டர்ன் கல்ச்சர். அந்த மாதிரி மேற்கத்தியமா யாராவது பண்றாங்கன்னா அதுவும் இல்லை. சில குறிப்பிட்ட சத்தங்கள், வாத்தியங்களுடைய காம்பினேஷன்ஸ்தான் இருக்கே தவிர மாடர்னாவும் பண்றாங்களான்னா ரொம்ப குறைவு. குறிப்பிட்ட சொல்ற மாதிரிதான் இருக்கு. ஒரு அவசரகதியில போய்ட்டிருக்கிறதாலதான் இப்டி இருக்குனு நினைக்கிறேன்.

உங்களுடைய பாடல்கள் பெரும்பாலும் மெல்லிசை ரகமானவை. சில பாடல்கள் அதிரடியானவை. இதில் உங்களுக்கு பிடித்தது எது?
நான் எல்லா பாட்டும் செய்துட்டுதான் இருக்கேன். நான் என்ன சொல்றேன்னா எனக்கு மெலடி மட்டும் தெரிஞ்சிருந்தா நான் கர்னாடக வித்துவான்னு நினைச்சுடக் கூடாதுல. நானும் எல்லாவிதமான பாடல்களும் டப்பாங்குத்துப் பாட்டு உள்பட பண்னியிருக்கேன். ஒரு பாட்டோட சூழல்தான் அது வெஸ்டர்ன, ஃபோக்கா, மெலடியானு இயக்குனர தீர்மானிக்க வைக்கும். கரெக்டா கம்போஸ் பண்ணி ஒரு வெரைட்டியா கொடுக்க முடிஞ்சதுனா அந்த பாட்டு காலத்த தாண்டி நிக்கும். அது மாதிரி நிக்கலனா அவங்க சரியா கவனம் செலுத்தலனு அர்த்தம்.

இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க?
தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு 200 படங்கள் பண்ணியிருக்கேன்.

உங்களுடைய இசையமைப்பில் பாடிய பாடகர்களில் யாருடைய குரல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் கே.ஜே.யேசுதாஸ் குரல்தான். என்னோட பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா? பாடலை ரொம்ப ஆசை தீர பாட வைச்சு ஹிட்டாக்குனேன். அதுக்கப்புறம் எஸ்.பி.பி. எனக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்காரு. அதே மாதிரி சித்ராம்மா எனக்கு நிறைய பாடியிருக்காங்க. ஆனா ஹரிஹரனோட வாய்ஸ் ரொம்ப வித்தியாசமானது. என்னுடைய பாடல்கள அவர் பாடும் போது அது ரொம்ப வித்தியாசமான பாடல்களாவே அமைஞ்சிருக்கு. ப்ரியமானவளே, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ இதெல்லாம் அவர் வாய்ஸ்ல நல்லா இருக்கும்னு பாட வச்சது. அதெல்லாம் மிகப் பெரிய வெற்றி.

பாடுறவங்களுக்கு தனி குரல் வளம் வேணுமா? இல்லை இசைஞானம் மட்டும் போதுமா?
குரல் வளம் ரொம்ப முக்கியம். இசை தெரிஞ்சுக்கிட்டுப் பாடுனா நல்லது. இசை தெரியலன்னா கூட குரல் வளம் இருந்தா பாட வச்சுடலாம். ஆனா பாடகர்களுக்கு இசை தெரிஞ்சுருக்க வேண்டியது அவசியம்.

நீங்க ஒரு கவிஞரும் கூட இல்லையா?
நான் அடிப்படைல ஒரு கவிஞன், அதற்கு பிறகுதான் இசையமைப்பாளர். முதல்ல கவிதை எழுததான் வரும். அதுக்கப்புறம் இசை கத்துக்கிட்டேன். என்னுடைய எழுத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

கவிதைத் தொகுதி போட்டிருக்கீங்களா?
இல்ல. ஆனா என்னுடைய பாடல்கள் எல்லாத்துலயும் அது யாரு எழுதியிருந்தாலும் சரி அதுக்குள்ள என்னோட கவிதை வரிகள் இருக்கும். அத என்னுடைய இயக்குனர்கள்கிட்டயும், பாடலாசிரியர்கள்கிட்டயும் கேட்டா தெரியும். பெரும்பாலும் என்னுடைய பாடல்களுக்கு பல்லவியில இருந்து அதோட மியூஸிக் வரைக்கும் என்னோட பங்களிப்பு இருக்கும். முதல்ல 25 படத்துக்கு நானே எழுதிட்டிருந்தேன். அதுக்கப்புறம் நாமளே எழுதிட்டு இருந்தா வேலைப்பளு சாஸ்தியாயிரும்னு விட்டுட்டேன். அப்புறம் டம்மியா ஏதாவது எழுதுறத சில பேர் பயன்படுத்தியிருக்காங்க. வானத்தைப் போல படத்துல காதல் வெண்ணிலா அப்டிங்ற பாட்டுல பல்லவி முழுக்க எழுதின பிறகுதான் சரணம் எழுதுனாங்க. இந்த கவிதை தாகம் இப்படியே போய்ட்டு இருக்கு. கவிதை நான் காதலிக்கிற பொண்ணு. வெளியில இன்னும் தெரியல அவ்ளோதான்.

உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க.
எனக்கு ஒரு மனைவி. ஒரு பொண்ணு, ஒரு பையன். இரண்டு பேரும் படிக்கிறாங்க. சங்கீதம்னாலே கொஞ்ச தூரம் ஓடிடுவாங்க. அந்தளவுக்கு படிப்புல ஆர்வம் அதிகம். பாட்டு கேக்குறதோட சரி. என்னுடைய வாரிசுகளா வரனும்னு விருப்பம் இல்லாதவங்க. பண்பாட்டை இழக்காமல் நம்ம வாழ்க்கையில முன்னேறனும் அப்டிங்ற விஷயத்த மட்டும் பண்பலை நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்.

-இவள் தேவதை பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?