Thursday, 7 April 2011
பஞ்ச பூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான்
உறங்கா நகரம் - சமன் செய்யப்பட முடியாத இரவுகளின் துயரம்
இரவுகள் பற்றி எண்ணற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன..
அன்றைய தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் தொடங்கி, அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, மையக்கிழக்கு நாடுகளிலும், தெற்காசியாவையும் சேர்ந்தஎழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள், ஜா.மாதவராஜின் சாலைப்பணியாளர்களின் வாழ்க்கை சாலைக்கே வந்துவிட்ட கொடுமையைச் சொல்லும் ஆவணப்படமான இரவுகள் உடையும், கவிஞர் மதுமிதாவின் படைப்பாளிகளின் இரவு அனுபவங்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட கட்டுரை நூலான இரவு வரையான ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. இத்தனை படைப்புகளும் வித்தியாசமான படைப்புகள் தான். உறங்காநகரமும் வித்தியாசப்பட்டிருக்கிறது. காரணம் சக மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் தனித்துவம் பெறுகிறது.
குங்குமம் வார இதழில் தூங்கா நகரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உடல் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வாக்குசொல்லிகள், ஊர்க்காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கை போடுபவர்கள், பி.பி.ஓக்களில் வேலை செய்பவர்கள், உணவகத்தில் சமைப்பவர்கள், தபால் ஊழியர்கள், பால் வியாபாரிகள் இப்படி 27 தொழில்களின் இரவு நேரத்தை மிக இயல்பாகவும், அதே சமயம் இறுக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
இரவு ஓய்விற்கான நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இரவு உற்பத்தியின் களம். படைப்புகளின் மூலம். சற்று நேரத்தில் விழிக்க இருக்கும் விடியலுக்கு நடை பாதை அமைத்துக் கொடுக்கும் பெருஞ்சாலை.
இரவின் பனிக்குடத்தில் பிறக்கக் கூடிய ஏராளமான கருக்களை உணரத்தவறிய அல்லது கண்டு கொள்ளாது ஒதுங்கி நிற்கும் மனிதர்களை பின்னந்தலையில் அடித்து இங்கே பார்.. ’உனக்காக உறக்கத்தை தொலைத்து அலையும் மனித வாழ்க்கையை’ என்று சொல்லக் கூடியதாக இந்நூலை பார்க்கிறேன்.
விழித்து எழுந்தவுடன் எப்போதோ தாமதமாகும் ஒருநாளில் இன்னும் பேப்பர் வரவில்லையா? பால் வரவில்லையா? என்று எரிச்சல் படுமுன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இதற்குப் பின்னாலிருக்கும் பேருழைப்பின் விஸ்வரூபம் புரியவரும்.
நான் பண்பலையில் பணியாற்றும் போதும் சரி, பத்திரிக்கையாளராக இருக்கும் போதும் சரி சாலைகளைக் கடக்கும் போது சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைக் காணும் போது அவர்கள் எப்படி இரவில் மட்டும் வேலை செய்கிறார்கள் என்று பலமுறை யோசித்துள்ளேன். இரவு நிகழ்ச்சி முடித்து 12 மணிக்கு தாமதமாக வீடு திரும்பும் போது ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்புகள், காலை நிகழ்ச்சிக்காக ஐந்து மணிக்கே அலுவலகம் வரும் போது மாறியிருக்கும்.
எட்டுமணி நேரத் தூக்கத்தின் அவசியம் பற்றி ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கும் வேளையில் நின்று பேசக் கூட நேரமின்றி இரவுகளை நகர்த்திக் கொண்டு ஓடுகிற மனித வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார். இரவுகள் விற்பனைக்கு என்று சொல்லாமல் சொல்லும் இவர்களின் பெரும் துயரம் கவிந்த வார்த்தைகள் ஈரமுள்ள எந்த நெஞ்சையும் தாக்கக் கூடியவை. சிலரைத் தவிர ஏனையோர் பொருளாதாரத்தின் சிறு பகுதியைக் கூட ஈட்ட முடியாமல் படும் வேதனைகள் இந்தக் கட்டுரைகளில் உச்சமாகத் தெரிகின்றன.
நாம் கடந்து செல்கிற மனிதர்களின் வாழ்க்கைப் பதிவாக உறங்கா நகரம் இருக்கிறது. இரவுகளில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர், சாலைகளைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள், பேப்பர் போடுபவர்கள், பால்காரர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், வாட்ச்மேன்கள், மீனவர்கள் இப்படி தன்னால் முடிந்தவரை அனைத்துத்துறையினரையும் பதிவு செய்திருக்கிறார்.
’கீழ்வானம் சிவக்கிறது. நகரம் தன் சுயமுகத்தை தரித்துக் கொண்டு விடியலை உணர்த்த, பச்சையம்மா முகம் இருண்டு கிடக்கிறது.’
’நின்று பேசிய நேரத்தை சமன் செய்வதற்காக மேலும் வேகம் கூட்டுகிறது சிலம்பரசனின் சைக்கிள்’
’நொடிப்பொழுதில் சைரன் சத்தம் தேய்ந்து மறைய, சோகம் தோய்ந்த கனமான நிசபதம் அசோக் நகரைக் கவ்வுகிறது’
’பனி தகிக்கிறது’
போன்ற வார்த்தை பிரயோகங்கள் நீலகண்டனின் ஆளுமையை எடுத்தியம்புகின்றன. நீலகண்டனின் மொழிநடையும், அவர் கையாண்டிருக்கும் வார்த்தைகளும் இந்த கட்டுரைகளில் உலவும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மேலும் வலுவைக் கொடுத்திருக்கின்றன. இதில் மக்கள் பேசும் மொழிகளும் பேச்சு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சந்தியா பதிப்பகத்தின் அழகிய வடிவமைப்பு வாசகர்களை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.
இயந்திரகதியாக, இயங்கியல் விதியாக பகல்களாக இரவுகளை மாற்றிக் கொள்ள நேர்ந்திருப்பது பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பகல்கள் இரவாகி விடுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. எப்போதும் இயங்கி ஆக வேண்டிய இந்த மக்களுக்கு இரவும் அதனூடான இசையுமே துணையிருக்கிறது.
இதில் இன்னொரு விடயமாக நான் பார்ப்பது என்னவெனில பெரும்பாலான இரவு நேரப் பணியிடத்திலும் பண்பலை கேட்பதைக் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் பண்பலையின் இரவு நேர தொகுப்பாளர்களை எப்படி தவறவிட்டார் என்பது தெரியவில்லை.
தூக்கத்தை விற்று காசாக்குகிற பி.பி.ஓவில் பணிபுரியும் கங்கா, தூக்கத்தைத் தொலைத்துவிடுகிற ஊர்க்காவல் படையின் ஊழியர் ரமேஷ்ராஜ், படிப்பை விலையாகக் கொடுக்கும் பத்திரிக்கை போடும் பள்ளிச் சிறுவன் சிலம்பு இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்மை அசைத்துப் பார்க்கின்றன.
இதற்காக நீலகண்டன் எத்தனை இரவுகளை செலவழித்திருப்பார் என்று பார்க்க முற்படுகையில் அந்த இரவுகளின் சேமிப்பாக இந்த நூலை காண்கையில் அவர் அந்த செலவினை சமன் செய்துவிடுவதாகக் கொள்ளலாம்.
இவள் பாரதி
Thursday, 10 March 2011
உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்
காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள். சாதா ரண மக்களுக்கான அனைத்து நியாங்களும் கிடைக்க வேண்டி அசாதாரண வாழ்க்கை முறையை வாழ முன்வருகிறார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கக்கூடிய பலனை மக்களுக்கே அளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற உரிமைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அடிகோலுகிறார்கள்.
தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.
வங்காரி மாதாய் - சுற்றுச்சூழல் பாதுகாவலர்
2004ல் உலக நாடுகள் உற்றுக் கவனித்த பெயர். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி. நிலைத்த மேம்பாடு மற்றும் அமைதிப் பணிக்காக இவ்வுயரிய விருதைப் பெற்ற மாதாய் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, கென்யா நாட்டைச் சேர்ந்த இவர் எம்.பியாகவும் இரண்டு வருடங்கள் சேவையாற்றிருக்கிறார்.
நாற்பத்தைந்து பேருடன் பதினைந்து பிரதேசங்களுக்குச் சென்று மண் மற்றும் காலநிலைகளில் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். பல கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டையும் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். முப்பது மில்லியன் மரக்கன்றுகளை நட்டு ஆப்பிரிக்க மண்ணிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்திருப்பவர். பூமிக்கு புதிய சுவாசப்பையை நிர்மானித்தவர். சரியான திட்டமிடுதலும், தொலை நோக்குப்பார்வையும், எதிர்ப்புகளை சமாளிக்கும்
திறனும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.
உலகமே முட்டாள்கள் தினம் என்று கொண்டாடும் தினத்தில் தான் 1940-ல் பிறந்தார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த காடுகளின் தாய். தற்போது எழுபது வயதாகும் வங்காரி மாதாய் தன் செயல்பாடுகளால் தனக்குப் பின்னும் இயங்கக்கூடிய ஒரு வலுவான சூழலை மக்களிடம் விதைத்திருக்கிறார். பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெறாமல் ஆகப் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை இவரது செயல்பாடு தெளிவாக்குகிறது.
வங்காரி மாதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்குக் காயத்திற்கு பதிலாக இன்னும் உதவேகமாக செயலாற்றும் தன்மையை வழங்கியிருக்கிறது. ''வங்காரி மிகவும் வலிமையான பெண். இவரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுகிறேன்'' என்று வங்காரியின் கணவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தியவுடன் Mathai என்ற பெயரில் a சேர்த்து Maathai என்று வைத்துக் கொண்டார். மணவிலக்கு பெற்றபின் எக்கனாமிக் கமிஷனில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையில் ஆப்பிரிக்க நாடு முழுக்க பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தனது இரு குழந்தைகளையும் தனது முன்னாள் கணவரிடம் ஐந்து வருடங்கள் ஒப்படைத்துவிட்டு தனது பணியை தொய்வின்றி செய்ய ஆரம்பித்தார்.
கென்ய பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தவர் அம்மக்களிடம் இருக்கும் படைப்பார்வத்தையும், தேவைகளையும் கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதென தீர்மானித்து வனத்துறை அதிகாரிகளை நாடியிருக்கிறார். அதிகாரிகள் என்றாலே அகராதியில் காரியவாதிகள் என்று பொருள் போலும். முதலில் மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக ஒத்துக் கொண்டவர் பின்னர் பணம் கொடுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மக்கள் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. தாங்களே மரக்கன்று பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடி வளர்ந்ததும் அந்த மரக்கன்றுகளை நட்டு அது பிழைத்தபிறகு பசுமைப்பட்ட இயக்கம் ஒன்றை ஊருவாக்கி அதிலிருந்து சிறு தொகையை அம்மக்களுக்கு வழங்கினர். ஒரு மரக்கன்றுக்குக் கொடுக்கப்படும் தொகை சிறிதுதானெனினும் அது பல மடங்காகப் பெருகும் போது அந்த பணம் பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கும், பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவதற்கும் பேருதவியாக இருந்தது. இப்படி மக்களை ஈடுபடுத்தி நிலைத்த மாற்றத்திற்கான ஒரு பாதையை ஏற்படுத்தினார்.
இன்று ஆப்பிரிக்க மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகக் கிடைத்தவைதானெனினும் இந்த மாற்றத்தை முன்னெடுத்த வங்காரியின் உழைப்பு பெருமைப்படுத்தப்படவும், வணங்கக்கூடியதாகவும் இருக்கிறது.
குடிநீர் இல்லை, சரியான சாலைவசதி இல்லை, கட்டுமானப் பொருட்கள் இல்லை, உணவு இல்லை, மண்வளமில்லை என்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றனர் வங்காரி மாதாவின் தலைமையிலான ஆப்பிரிக்க மக்கள். சுற்றுச் சூழலைப் பேணாத சமூகம் அல்லது நாடு எல்லாவற்றிருக்கும் கையேந்தி நிற்கும் நிலைமையைத்தான் பெறக் கூடும். இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்களை அழித்தெடுத்துவிட்டு சாலை நடுவினில் அழகுச் செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்ற ஒரு வாகனத்தையும், அலுவலரையும் நியமித்து நாம் சாதித்தது கார்பன் மோனாக்சைடை அதிகப்படுத்தியதும் , சிறுவிலங்குகளையும், பறவையினங்களையும் அழித்ததுதான்தான்.
மரமின்றி மழையில்லை என்பது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே தெரியும். ஒரு மரம் வெட்டப்படுகிறதெனில் அதற்கு பதிலாக ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் எனும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்திருந்தால் இன்று நமது சாலைகளின் இருமருங்கும் பசுமையின் பயணிப்பு தொடர்ந்திருக்கும். இனி நாம் மழை நீர் சேகரிக்க வெறும் தொட்டிகளைக் கட்டிவிட்டு மழைக்காக காத்திருக்க வேண்டியதுதான். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க காடுகள் அவசியம். காடுகள் மனிதகுலத்தின் நாகரீகத்தை மேம்படுத்தும் என்பதை உலகம் மெதுவாக உணரத் துவங்கியிருக்கும் வேளையில் அதைச் செயல்முறைப்படுத்தியிருக்கும் வங்காரி மாதாய் வணங்கத்தக்கவர் மற்றும் பின்பற்றப்பட வேண்டியவர்.
இசைப்ரியா - ஊடகவியலாளர்.
உலகத் தமிழர்களிடையேயும், ஊடகத்துறையினரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர். புலிகளின் பெண் போராளியும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியா கடைசிக்கட்ட போரில் தனது கணவரையும், ஆறு மாதக் குழந்தையையும் இழந்து சிங்கள இராணுவத்தால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதை ஐ.நா.வும் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு போரளியாக தன்னை இய க்கத்தில் இணைத்துக் கொண்ட இசைப்ரியா குரல்வளமிக்கவராகவும், கலைத்துறைக்குப் பொருத்தமானவராகவும் அறியப்பட்டு செய்திவாசிப்பாளரானார். 2006-ல் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதியான ஸ்ரீராமைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலி என்ற குறும்படத்தில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழும் ஒரு பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘கட்டுமரம் மேலே ஏறி’ என்ற ஒரு மெல்லிசைப் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலுக்குப் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இப்படி பல கலைகளைக் கற்று செயல்படுத்தி வந்தவர்.
பெண்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சிங்கள ராணுவம் தன் கையில் ஏந்தியிருக்கும் குரூர ஆயுதம் வன்புணர்வு. இந்த ஆயுதத் தாக்குதலுக்கு இசைப்ரியாவும் இரையாகியிருக்கிறார். இதனை செல்ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்டது. பார்ப்பவர்களைக் கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர். வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் அறிவரசன் இரண்டு வருடங்கள் ஈழத்தில் தமிழ் பணியாற்றியவர். அவர் (2010 ஜனவரி 6) நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ‘மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் 'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.
துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.
அப்போது அவரிடம், "இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே..." என்றேன். அதற்கு அவர், 'இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.
இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன்.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்ற எண்ணத்தை வளரவிடாமல் செய்பவர்கள் கலைத்துறையினரே. கலை கலைக்காக அல்ல. மக்களுக்காக. என்று செயற்பட்டு வந்த இனப் போராளிகளில் ஒருவரான இசைப்ரியா கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. எத்தனையோ இசைப்ரியாக்கள் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் இன்றும் கண்டும் காணாமல் இருக்கும் இனம் வரலாறு கூறும் பழிச்சொற்களில் இருந்து தப்பமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
சோமாலி மாம் - மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
கம்போடியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இவர் .
சோமாலியிடம் தான் பிறந்தற்கான எந்த அத்தாட்சிப் பத்திரங்களோ, ஆதரங்களோ இருக்கவில்லை. அவளது நினைவிலும் அது பற்றி தெரியவில்லை அவள் 1970 அல்லது 1971 இல் பிறந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிலில் கம்போடியமிது Khmer Rouge கொண்ட பயங்கரவாதம் பல மக்களை கிராமப் புறங்களுக்கு தள்ளியது. அந்த நிலையில் அவள் தன் பெற்றோரை Phnong என்ற கிராமத்தில் அவள் தவற விட்டாள். அநாதை ஆகினாள். ஒரு மனிதன் அவளை அவளது தகப்பனைக் கண்டுபிடித்து தருவேன் என சொல்லி அழைத்துக் செல்லும் வரை அவள் அந்த அநாதை இல்லத்திலேயே வாழ்ந்தாள். அவள் அங்கு அவனின் அடிமை என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டாள். அவனை தாத்தா என அழைக்குமாறு பணிக்கப்பட்டாள்.
14 வயதிருக்கும் போது வளர்த்தவராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்ட சோமாலி யாரோ ஒருவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்டார். அவருடைய கணவரிடமும் கொடுமை அனுபவித்த மாம் தினமும் ஆறேழு பேருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தப்பட்டார். மறுத்தால் பாம்புகளும், தேள்களும் விடப்பட்ட அறையில் அடைக்கப்படுவார். இப்படியான வன்முறைக்குள் வீழ்த்தப்பட்ட சோமாலி தெருவில் நின்று தானே ஆள் கூப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட சரியான சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
கம்போடியாவிலிருந்து தப்பித்த சோமாலி மாம் 1993ல் ஃபிரான்சுக்கு வந்தார். பின் பாரிஸ் சென்ற அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு அவர் கண்ட உண்மை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிறைய பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு 1996ல் AFESIPஅமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றினார். தாய்லாந்த், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 4000 பெண்களைக் காப்பாற்றியுள்ளார். 2007ல் சோமாலி மாம் பவுண்டேஷன் ஒன்றை நிறுவி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்.
அந்த வயதில் நடந்த சம்பவங்களை ஒருநாளும் இரவுகளில் நினைக்காமலிருக்க முடியவில்லை. நினைத்துவிட்டால் என்னைக் கத்தியால் குத்துவதைப் போன்ற உணர்வும், கெட்ட கனவுகளும் வரும். இது தினமும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து விடுபட இயலவில்லை. பாலியல் அடிமைகளாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ரணமாக இருக்கும். வாழ்வது பெரும் போராட்டத்திற்குறியதாகவும் இருக்கும். வலிகளோடு இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றவுணர்வும், தனிமையும் சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது அவசியம். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ முன்வர மாட்டார்கள். அவர்களை நேசிக்கவும், உதவி செய்யவும் முன் வந்து அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொண்டு வாழும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவது என் நோக்கமாக இருக்கிறது.
என்னுடைய அம்மா, அப்பா யாரென்று எனக்கு தெரியாது. எனது வயது தெரியாது, சோமாலிதான் எனது பெயரா என்றும் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம் வலி, வேதனை, சோகம். இதைப் போல பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் பேசாமலே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் இதயத்திலிருந்து சிரிப்பைக் கொண்டு வருவது மிகப் பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். என்று சோமாலி நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். 'The Road of Lost Innocence' என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றோடு கம்போடிய நாட்டு அடிமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
சோமாலி தனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது மிகப்பெரும் சாதனை ஒரு அடிமையான தன்னை மீட்டெடுத்து அதே போல பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டெடுத்து வருவதுதான்.
சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களை அழித்தெடுத்து புதிய மாற்றங்களையும், உரிமைகளையும் பெற போராடும் இவர்களைப் போன்றவர்களை பார்த்தாவது, படித்தாவது நமது செயல்பாட்டையும் சமூகத்தில் முன்னெடுத்தோம் எனில் அதுவே மனிதம் இன்னும் இருப்பதற்கான அடையாளமாகும்.
- இவள் பாரதி
நன்றி - தடாகம் இணைய இதழ்
Monday, 13 September 2010
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

Thursday, 26 August 2010
திரைப்படப்பாடலாசிரியர் & நடன இயக்குனர் பிரபுதேவா

இயக்குனர் & நடிகர் மௌலி

கவிஞர் அறிவுமதி

உங்க சிறு வயது அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்.
புதிதாக எழுத வருகிறவர்களுக்கும், புரிதலோடு எழுத வருகிறவர்களுக்கும் ஒரு தமிழ்ப் பாலமாய் விளங்குகிற நீங்கள் கவிஞராயிருந்து பாடலாசிரியராய் வளர்ந்த பயணம் பற்றிச் சொல்லுங்கள்.
திரைத்துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது?
இப்போது திரைப்படத்துறையின் அகப்போக்கு சரியானதாக, திருந்தியதாக தெரியவில்லை. ஆனால் புறப்போக்கு என்று பார்க்கிற போது தமிழ் இன உணர்விற்கும், உலகத்தில் எங்கே தமிழன் காயப்பட்டாலும் அதற்கு மருந்து தடவ நாங்களும் தயாராக இருக்கிறோம் என்கிற உணர்வுகளை இன்றைக்கு திரைப்படத்துறை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் திரைப்படத்துறை என்பது பல்வேறு வகையான இன் மக்களுடைய கூத்துப்பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டுகள், தெம்மாங்குகள், ஒப்பாரிகள், அவர்களுடைய கூத்து அடவுகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு நவீன துறைதான். அந்த தமிழ்த்திரைத்துறை என்பது தமிழர்களுக்கானத் திரைத்துறையாக இன்னும் முழுமையாக ஒரு வெற்றியைக் காட்டவில்லை.
திரைத்துறையில் பாடலாசியருக்கான மதிப்பு எப்படி இருக்கிறது?
இன்றைக்குப் பாடலாசிரியருக்கான மரியாதை என்பது ஏறக்குறைய அனைத்து மக்களும் யார் எழுதிய பாடல் என்று தெரிவதற்கு ஊடகங்கள் இன்னும் உதவி செய்யாத ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த ஊடகத்தின் வாயிலாகவும் பதிவு செய்கிறேன். இசையமைப்பாளர் பெயர்களைச் சொல்கிறார்கள், எந்த படம் என்று சொல்கிறார்கள், இதை எழுதியவர் யார் என்று மட்டும் சொல்வதில்லை.
‘73, அபிபுல்லா சாலை’ நிறைய படைப்பாளிகளை தமிழுலகுக்குக் கொடுத்திருக்கிறது. இது தாங்கள் திட்டமிட்டு செய்த பணிதானா?
‘73, அபிபுல்லா’ சாலை இன்று ‘181 அபிபுல்லா’ சாலையாக மாறியிருக்கிறது. எண்தான் மாறியிருக்கிறதே தவிர என்னுடைய எண்ணங்கள் மாறவில்லை. என்றைக்கும் தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்குகளிலிருந்து வருகிற இளைஞர்களுக்கும் ஒரு தாய்மைக் கூடாக இருந்து பல படைப்பாளிகளைத் திரைத்துறைக்கு வார்த்தெடுக்கக் கிடைத்த ஒரு தமிழ்க்கூடாகத்தான் பார்க்கிறேன். இன்றைக்கு அந்த சூழல் இருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை.
73 அபிபுல்லா சாலை நிறைய படைப்பாளிகளைத் திரையுலகுக்குத் தந்திருக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. 73 அபிபுல்லா சாலை மட்டும்தான் ஆலமரம் என்பது அல்ல. என் தம்பிகள் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஆலமரமாகி அவர்களும் என்னைப் போலவே பல படைப்பாளிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தோப்பாக இந்த தனிமரம் வளர்ந்து செழித்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை உள்ளம் நெகிழ பகிர்ந்து கொள்கிறேன்.
இப்போதும் அந்த வழிகாட்டுதல்கள் தொடர்கிறதா?
வழிகாட்டுதல் தொடர்கிறது. ஆனால் வருகிறவர் இதுதான் பாலாவை நான் பாலுமகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினேன் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு மேம்போக்காக வருகிறார்கள். அதற்கான திறமையும் அடையாளப் பதிவுகளும் இல்லாமல் என்னை வந்து பார்த்துவிட்டால் திரைப்பட உலகிற்குள் நுழைந்துவிடலாம் என்கிற ஆசையோடு வருகிறார்களே தவிர அவர்களுடைய அந்த திறமையின், முயற்சியின், வலிகளின் அடையாளங்களை எனக்கு காட்டியவங்களாக பெரும்பகுதி வரவில்லை என்பது ஒரு சோகமாத்தான் நான் பார்க்கிறேன்.
திடீர்னு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே ஏன்?
16 வயது வரை எந்த வாழ்க்கையை வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் வளர்ந்தேனோ அங்கே இப்போது சென்றிருக்கிறேன். விவசாயக் குடும்பங்களின் பண்பாட்டில் ஊறி வளர்ந்த நான் இதுதான் திணை, சாமை, வரகு, என்று என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அந்த மண்ணில் அந்த பயிர்கள் விளையவில்லை. எல்லாம் செயற்கையாகி விட்டது. 40, 50 மாடுகள் வளர்த்த குடும்பத்தில் இன்று ஒரு மாடு கூட இல்லை என்ற சோகம் எனக்குள் எப்போதும் இருந்துவருகிறது. இப்போதுதான் அதை உறைப்பாக உணர்ந்தேன்.
நீங்கள் திரைத்துறையிலிருந்து விலகக் காரணம்?
திரைத்துறையிலிருந்து நான் விலகவில்லை. இப்போதும் நான் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடல் எழுதியதிலிருந்து விலகியது என்பது இன்றைக்கு வருகிற பாடல்கள் அனைத்தும் பெண்களை உடல்ரீதியாக வர்ணிக்கச் சொல்கிற பாடல்களாகவே பெரும்பகுதி இருக்கின்றன. அத்தகைய சூழலில் பெண்களைக் கொச்சை செய்யும் பாடல்களை உடல் உறுப்புகளை வர்ணிக்கிற பாடல்களை எழுதிவிடக்கூடாது என்ற உணர்வோடுதான் நான் அதை மறுத்தேன்.
ஒரு கவிஞனுக்கு நிம்மதி எது?
உலகம் எந்தவித அணுஆயுத சோதனைகளும் இல்லாமல் எந்தவித போருமில்லாமல் அனைத்து மக்களுக்குமான, போர்க்குண்டுகள் விழாத வானத்தை என்றைக்கு அவன் உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞனுக்கு அமைதி. ஏனென்றால் கவிஞன் என்பவன் உண்டு, களித்து ஏதோ மிதப்பவனாகத்தான் சமூகமே கருதுகிறது. அல்ல அல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி காய்மபட்டாலும் கூட அதற்கு மருந்து தடவ வேண்டும் என்ற தேடல் உள்ளவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்ற தளத்தில் சொல்கிறேன்.
கவிஞனுக்கான தகுதிகளாக எதைச் சொல்வீர்கள்?
இயற்கையின் பிள்ளையாய், காயத்திற்கான மருந்தாய் தன்னை உணர வேண்டும், உணர்த்த வேண்டும். அதுதான் அவனுடைய தகுதிகளாக நான் பார்க்கிறேன்.
நட்புக்காலத்தின் வெற்றி எதிர்பார்த்ததுதானா? நட்புக்காலம் & 2 என்று ஏன் கொண்டு வரவில்லை?
நான் ஏறக்குறைய ஒரே இரவில் 60, 70 கவிதைகள் எழுதினேன். அந்த கவிதைகளைத்தான் இன்றைக்கு நீங்கள் நட்புக்காலமாகப் பார்க்கிறீர்கள். இந்த நட்புக்காலம் எழுதிமுடித்துவிட்ட பிறகு தம்பி பழநிபாரதி, தபு சங்கர் போன்றவர்களும் நானும் உட்கார்ந்துதான் கவிதைகள் எது எது அச்சுக்கு வரலாம், எதுயெது வேண்டாம் என்று முடிவு செய்து இந்த 40 கவிதைகளாக முதலில் வெளியிட்டோம். அதை வெளியிடுகிற போது இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை.
ஏராளமான காதல் கவிதைகளே வந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான ஒரு நட்பைச் சொல்லுகிற அந்த முயற்சி எனக்கு அன்றைக்கு புதிதாக இருந்தது. அதனை எனது திரைப்பட இயக்குனர்களான தம்பிகள் பலரும் படித்து விட்டு இந்த சிந்தனையே சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அந்த சூழலில் தமிழக மக்களும், உலகத தமிழர்களும் இவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால் இந்த வரவேற்பு என்பதெல்லாம் அறிவுமதிக்கான வரவேற்பாக நான் கருதவில்லை. இது புஞ்சைக் காட்டு வெளிகளிலே என்னோடு பழகிய தோழியர், தோழர்கள் இவர்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை.
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை