என் முகம் பார்த்து
கண்ணாடி ரசம்போய் விட்டதென
சொல்லிப் போனாய்...
எண்ணிப்பார்க்கிறேன்
ரசத்துக்கு உப்பு,மிளகு போதுமாவென
யோசித்தே
என் சிந்தனை மழுங்கிப்
போனதை அறியாயோ?
பிடித்த புத்தகத்தை
படிக்க விரித்த மாத்திரத்திலே
பிடுங்கி வைக்கும் உன்
செயலும் ரசம் போனதுதான்...
படுக்கை விரிப்பை சுருட்டி
வைப்பதில் தொடங்கும் என் காலை
படுக்கை விரிப்பை விரிக்கும்
என் இரவு வரை
உனக்காகவே செய்யப்படும்..
என் செயலும் ரசம் போனதுதான்...
ரசம்போன செயல்களில்
ரசம்போன வார்த்தைகளில்
ரசம்போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
No comments:
Post a Comment