யாருமற்ற நெடுஞ்சாலையில்
தனித்து நடக்கிறேன்..
எங்கிருந்தோ பின் தொடர்ந்த மேகம்
அனுப்பி இருக்கிறது...மழையை..
**********
புனைவற்ற புன்னகையாய்
பூத்துக் கொட்டுகிறது
மழை...
**********
மழை இரவு
வீட்டில் உன் இருப்பு
வேறென்ன வேண்டும்?
**********
கை நிறைய கவிதைகளை
மழை தருகிறது
கதவடைப்பு செய்து
காகிதத்தோடு அமர்ந்திருக்கிறேன்..
**********
மண் மீது மழைத்துளி
என்ன எழுதி எழுதி
அழிக்கிறதோ?
**********
நொடிநேரப் பூந்தொட்டிகளை
படைக்கிறது
ஒவ்வொரு மழைத்துளியும்...
**********
குடை தவிர்த்து
நடக்கலாம்
கேள்வி கேட்பவர்களுக்கு
விடை சொல்ல இந்த
மழை இருக்கிறது..
**********
இந்த மழையில்
கொஞ்சம் நனைந்து கொள்ளலாம்
நம்மை நனைக்கும் துளிகளாவது
சங்கமமாகட்டும்..
**********
ஒவ்வொரு துளிகளையும்
முடிச்சிட முயன்று
தோற்றுப் போகும் மழை...
**********
மேகத்தையே
வானமாகக் காட்டும்
சாகச மழை ...
**********
தொணதொணக்கும் மழை
முனுமுனுக்கும் இலை
என்னதான் பேசித் தீர்க்கிறது?
**********
மௌனத்தை உடைக்க
முயற்சிக்கிற இந்த மழையை
என்ன செய்வது?
**********
வீட்டிற்குள் வருமிந்த காற்று
மழைத்துளிகளை பொறுக்கி
எடுத்து வருகிறது...
**********
விடாது தூறும் மழை
எதை விமர்சிக்கிறது?
**********
நில் மழையே
சொல் மழையே
யாரை சந்திக்க வந்தாய்?
**********
சில்லென்ற மழை
சில நேரங்களில் பிழை..
**********
மாலை நேரமும்
மழைக்கால நாட்களும்
அள்ளி தந்த கவிதைகளை
தள்ளி வைத்து விட்டு
காத்திருப்பு தொடர்கிறது
சாரல் காற்றினூடே...
***********
No comments:
Post a Comment