ஈரம் காயாத துணிகள்
மரம் குளிக்கும் காலம்
இல்லை பேசும் ரகசியம்
கோலம் காணாத வாசல்
தலை குளிக்காத காலை
மழையின் வரவில்...
**********************
எங்கோ இருக்கிறாய்
மழை விசாரித்துவிட்டுப்
போகிறது...
உன் அருகாமையை...
***********************
கரிகாலன் கலங்கி இருப்பான்
வீணாய் போகும்
மழை நீர் கண்டிருந்தால்..
**************************
இந்த மழைக்கு
கொஞ்சிப் பேசவும் தெரிந்து இருக்கிறது
மிஞ்சிப் போகவும் தெரிந்திருக்கிறது..
மனிதர்களைப் போல...
************************
மழையை
வழியனுப்பி விடாதீர்கள்...
நான் ஊன்றிய விதை
இன்னும் துளிர் விட வில்லை...
*********************************
மண்ணை மட்டுமல்ல
என்னையும் அரித்துப் போன
மழை நீ..
**********
என்னதான் சோகம்
கொஞ்சம் அழுவதை
நிறுத்தி விட்டுச் சொல்லேன்
மழையே....
*************
இந்த மழைத் துளிகளை
யாரும் மிதித்து விடாதீர்கள்..
உங்கள் பாதத்தை
கிள்ளி விடப் போகிறது...
****************************
No comments:
Post a Comment