Wednesday 19 May, 2010

எழுத்தாளர் அனுராதா ரமணன்


எழுத்தாளர் அனுராதா ரமணனை சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சந்தித்திருக்கிறேன் என்றாலும் அவருடன் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருக்கிறேன். முதன் முதலில் அவரிடம் பேசியது இன்னும் நினைவிருக்கிறது. நான் திருச்சி ஹலோ பண்பலையில் அவரை தொலைபேசியிலேயே தொலைகாணல் செய்திருந்தேன். (நேரில் கண்டால்தானே நேர்காணல்). அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும் அவரது படைப்புகளுக்கும் எனக்கும் அவ்வளவு பரிச்சயமில்லை. ஆதலால் எழுத்தாளர் ஆங்கரை பைரவியிடம் அவரைப் பற்றிய விஷயங்களை சேகரித்துக் கொண்டேன். அனுராதா ரமணன் பத்து நிமிடமே பேசுவதாக ஒத்துக் கொண்டவர் அரைமணி நேரம் பேசினார். அதில் பல கேள்விகளுக்கு நல்ல பதிலைத் தந்திருந்தார். ஆனால் இப்போது அவர் பேசியதில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒரு பகுதி அழிந்துவிட்டது. நேர்காணலைத் தொகுப்பதற்கான வேலையில் ஈடுபட்ட போது முதலில் அவருடைய பேச்சைத்தான் ஒலி வடிவிலிருந்து எழுத்து வடிவிற்கு மாற்றினேன். நேர்காணலைப் புத்தகமாகக் கொண்டு வரும் திட்டமிருந்ததால் அவரிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்டு பதில் பெற வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நேர்காணலை எழுதி முடித்த இரண்டாம் நாள் அந்த துயரச் செய்தி என் தோழியின் மூலம் வந்தடைந்தது. இதோ அவரது பேச்சின் எழுத்துப்பதிவு..

உங்களுடைய ‘மன ஊஞ்சல்’ கதை நன்றாக இருக்கும். உங்களுக்கு ஊஞ்சலென்றால் மிகவும் பிடிக்குமா?
ஊஞ்சல் என்னுடைய தாத்தா பாட்டி வீட்டுல நான் வளர்ந்த காலத்துல இருந்தது. எனக்கு ஊஞ்சல்ங்றது படகு மாதிரி. கல்கியோட பொன்னியின் செல்வன் படிக்கிறச்ச படகுல போற மாதிரி போவேன். அதுலயே படுத்துட்டு தூங்குவேன். அதுலயே உக்காந்து சாப்பிடுவேன். அந்த மாதிரி எனக்கு எல்லாத்துக்குமே ஊஞ்சல்தான். குதிரைல போற மாதிரி நினைச்சுக்குவேன். யானை மேல அம்பாரி போறேன்னு நினைச்சுட்டு ஊஞ்சல்ல ஏறுவேன். அந்த மாதிரி ஊஞ்சல் என் வாழ்க்கைல எல்லாமுமாகவும் இருந்தது. ஆனா இதெல்லாம் கடந்து மனசுக்குள்ள ஒரு ஊஞ்சல் ஆடிட்டே இருக்கும். அதைத்தான் ‘மன ஊஞ்சல்’னு சொல்லிட்டு கதையா எழுதினேன். அது பின்னாடி காலத்தை நினைக்கும். எனக்குள்ள மட்டும் இல்ல. எல்லாருக்குள்ளயும் ஊஞ்சல் இருந்துட்டேதான் இருக்கு. உத்துப் பாத்தோம்னா ஊஞ்சல் ஆடுறது தெரியும். பின்னால போற சமயத்துல நம்ம வாழ்க்கைல நடந்ததெல்லாம் வரும். முன்னாடி போற சமயத்துல நம்ம எதிர்காலத்துல நடக்குற விஷயங்களெல்லாம் வரும். நடுவுல நிக்கும் போது ஏதாவது ஒரு சம்பவத்தோட அது வந்து அப்படியே ஒரு தியானம் பண்ற மாதிரி நிக்கும். இதுஓரு அழகான கற்பனை.

எல்லாருக்கும் பள்ளிப்பருவங்றது மறக்க முடியாத அனுபவமா இருக்கும். உங்க பள்ளிப்பருவ அனுபவம் எப்படி இருந்தது?

படிக்கிறத தவிர மத்ததெல்லாம் நல்லா பண்ணுவேன். நல்லா வரைவேன். அதனால ஸ்கூல்ல சாட்டெல்லாம் என்னைய தான் வரைய சொல்வாங்க. அதே மாதிரி பாட்டும் எழுத சொல்வாங்க. பள்ளி ஆண்டு விழாவுல என்னோட பங்களிப்பு இருக்கும். ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல ஏதாவது மெசேஜ் சொல்லணுமே. அதுக்கு ஏதாவது படம் வரைஞ்சு அன்னைக்கு வந்த சினிமா படங்கள் இருக்கே. அதுல இருக்குற பாடல்கள எடுத்து எழுதுவேன். அதாவது உதாரணத்துக்கு குச்சி மிட்டாய்க்காரன வரைஞ்சிட்டு அவனை சுத்தி நிறைய குழந்தைகள் இருக்குற மாதிரி போட்டுடுவேன். கமலஹாசனுடைய ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ பாட்டுல இருந்து ‘ஈயெறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ங்ற வரிகளை எடுத்து எழுதியிருப்பேன். நிறைய மெசேஜ் சொல்வேன். அப்புறம் ‘பாலிருக்கும், பழமிருக்கும்’ பாட்டுல இருந்து ‘பஞ்சணையில் கொசுக்கள் வரும், தூக்கம் வராது’னு எழுதி இருப்பேன். அதுகேத்த மாதிரி ஒரு படம் வரைஞ்சிருப்பேன். அதனால ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாருக்கும் என்னைய ஏதாவது செய்ய சொல்றதுனா ரொம்ப பிடிக்கும். எனக்கு ‘டிஸ்லெக்ஷியா’னால எழுத்துதான் சரியா வராதேயொழிய இந்த மாதிரியெல்லாம் நிறைய பண்ணிட்டு இருப்பேன். நான் சென்னைல தாத்தா வீட்டுல வளர்ந்ததால எனக்கு கிராமங்கள் அதிகம் தெரியாது. ஆனா அப்ப கிராமப்புறத்த பத்தி, ஜீசஸ பத்தி பாட்டெல்லாம் எழுதச் சொல்வாங்க. ட்யூன் கொடுத்துடுவாங்க. ட்யூனுக்கு ஏத்த மாதிரி எழுதிக் கொடுப்பேன்.

‘வலையோசை’ங்ற பத்திரிக்கை 92ல நடத்தியிருக்கீங்க. அதைப் பத்தி சொல்லுங்க.
வலையோசைங்றது எனக்கு லட்சியப் பத்திரிக்கையா இருந்தது. அது வந்து ஒரு பெண்களுக்கான நாவலா கொண்டு வரணும்னுதான் கொண்டு வந்தேன். ஆனா ஒரு எழுத்தாளரா இருந்து கணக்கு வழக்கெல்லாம் பாத்து நடத்தவேண்டியதா இருந்தது. அதனால அது நின்னுப் போச்சு.

உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
சிறையில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது. அதுல பால்காரி கதை என்னோடது. சின்ன சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்த படத்துல அந்த பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன். என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்ப்டிப் பண்ணிட்டாரு.

பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்க கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க. ‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன். நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்த கார்ட எடுத்துக்கிட்டு அந்த பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம். அந்த்ஃஅ பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது. அப்புறம் அவங்களுக்கு என்ன் கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்த பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன். இனி எந்த பெண்ணிஅயும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.

-இவள் தேவதை பாரதி
படங்கள் - நன்றி 'தேவதை' மாதமிருமுறை பெண்கள் இதழ்

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?