Wednesday, 19 May 2010

எழுத்தாளர் அனுராதா ரமணன்


எழுத்தாளர் அனுராதா ரமணனை சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சந்தித்திருக்கிறேன் என்றாலும் அவருடன் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருக்கிறேன். முதன் முதலில் அவரிடம் பேசியது இன்னும் நினைவிருக்கிறது. நான் திருச்சி ஹலோ பண்பலையில் அவரை தொலைபேசியிலேயே தொலைகாணல் செய்திருந்தேன். (நேரில் கண்டால்தானே நேர்காணல்). அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும் அவரது படைப்புகளுக்கும் எனக்கும் அவ்வளவு பரிச்சயமில்லை. ஆதலால் எழுத்தாளர் ஆங்கரை பைரவியிடம் அவரைப் பற்றிய விஷயங்களை சேகரித்துக் கொண்டேன். அனுராதா ரமணன் பத்து நிமிடமே பேசுவதாக ஒத்துக் கொண்டவர் அரைமணி நேரம் பேசினார். அதில் பல கேள்விகளுக்கு நல்ல பதிலைத் தந்திருந்தார். ஆனால் இப்போது அவர் பேசியதில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒரு பகுதி அழிந்துவிட்டது. நேர்காணலைத் தொகுப்பதற்கான வேலையில் ஈடுபட்ட போது முதலில் அவருடைய பேச்சைத்தான் ஒலி வடிவிலிருந்து எழுத்து வடிவிற்கு மாற்றினேன். நேர்காணலைப் புத்தகமாகக் கொண்டு வரும் திட்டமிருந்ததால் அவரிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்டு பதில் பெற வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நேர்காணலை எழுதி முடித்த இரண்டாம் நாள் அந்த துயரச் செய்தி என் தோழியின் மூலம் வந்தடைந்தது. இதோ அவரது பேச்சின் எழுத்துப்பதிவு..

உங்களுடைய ‘மன ஊஞ்சல்’ கதை நன்றாக இருக்கும். உங்களுக்கு ஊஞ்சலென்றால் மிகவும் பிடிக்குமா?
ஊஞ்சல் என்னுடைய தாத்தா பாட்டி வீட்டுல நான் வளர்ந்த காலத்துல இருந்தது. எனக்கு ஊஞ்சல்ங்றது படகு மாதிரி. கல்கியோட பொன்னியின் செல்வன் படிக்கிறச்ச படகுல போற மாதிரி போவேன். அதுலயே படுத்துட்டு தூங்குவேன். அதுலயே உக்காந்து சாப்பிடுவேன். அந்த மாதிரி எனக்கு எல்லாத்துக்குமே ஊஞ்சல்தான். குதிரைல போற மாதிரி நினைச்சுக்குவேன். யானை மேல அம்பாரி போறேன்னு நினைச்சுட்டு ஊஞ்சல்ல ஏறுவேன். அந்த மாதிரி ஊஞ்சல் என் வாழ்க்கைல எல்லாமுமாகவும் இருந்தது. ஆனா இதெல்லாம் கடந்து மனசுக்குள்ள ஒரு ஊஞ்சல் ஆடிட்டே இருக்கும். அதைத்தான் ‘மன ஊஞ்சல்’னு சொல்லிட்டு கதையா எழுதினேன். அது பின்னாடி காலத்தை நினைக்கும். எனக்குள்ள மட்டும் இல்ல. எல்லாருக்குள்ளயும் ஊஞ்சல் இருந்துட்டேதான் இருக்கு. உத்துப் பாத்தோம்னா ஊஞ்சல் ஆடுறது தெரியும். பின்னால போற சமயத்துல நம்ம வாழ்க்கைல நடந்ததெல்லாம் வரும். முன்னாடி போற சமயத்துல நம்ம எதிர்காலத்துல நடக்குற விஷயங்களெல்லாம் வரும். நடுவுல நிக்கும் போது ஏதாவது ஒரு சம்பவத்தோட அது வந்து அப்படியே ஒரு தியானம் பண்ற மாதிரி நிக்கும். இதுஓரு அழகான கற்பனை.

எல்லாருக்கும் பள்ளிப்பருவங்றது மறக்க முடியாத அனுபவமா இருக்கும். உங்க பள்ளிப்பருவ அனுபவம் எப்படி இருந்தது?

படிக்கிறத தவிர மத்ததெல்லாம் நல்லா பண்ணுவேன். நல்லா வரைவேன். அதனால ஸ்கூல்ல சாட்டெல்லாம் என்னைய தான் வரைய சொல்வாங்க. அதே மாதிரி பாட்டும் எழுத சொல்வாங்க. பள்ளி ஆண்டு விழாவுல என்னோட பங்களிப்பு இருக்கும். ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல ஏதாவது மெசேஜ் சொல்லணுமே. அதுக்கு ஏதாவது படம் வரைஞ்சு அன்னைக்கு வந்த சினிமா படங்கள் இருக்கே. அதுல இருக்குற பாடல்கள எடுத்து எழுதுவேன். அதாவது உதாரணத்துக்கு குச்சி மிட்டாய்க்காரன வரைஞ்சிட்டு அவனை சுத்தி நிறைய குழந்தைகள் இருக்குற மாதிரி போட்டுடுவேன். கமலஹாசனுடைய ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ பாட்டுல இருந்து ‘ஈயெறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ங்ற வரிகளை எடுத்து எழுதியிருப்பேன். நிறைய மெசேஜ் சொல்வேன். அப்புறம் ‘பாலிருக்கும், பழமிருக்கும்’ பாட்டுல இருந்து ‘பஞ்சணையில் கொசுக்கள் வரும், தூக்கம் வராது’னு எழுதி இருப்பேன். அதுகேத்த மாதிரி ஒரு படம் வரைஞ்சிருப்பேன். அதனால ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாருக்கும் என்னைய ஏதாவது செய்ய சொல்றதுனா ரொம்ப பிடிக்கும். எனக்கு ‘டிஸ்லெக்ஷியா’னால எழுத்துதான் சரியா வராதேயொழிய இந்த மாதிரியெல்லாம் நிறைய பண்ணிட்டு இருப்பேன். நான் சென்னைல தாத்தா வீட்டுல வளர்ந்ததால எனக்கு கிராமங்கள் அதிகம் தெரியாது. ஆனா அப்ப கிராமப்புறத்த பத்தி, ஜீசஸ பத்தி பாட்டெல்லாம் எழுதச் சொல்வாங்க. ட்யூன் கொடுத்துடுவாங்க. ட்யூனுக்கு ஏத்த மாதிரி எழுதிக் கொடுப்பேன்.

‘வலையோசை’ங்ற பத்திரிக்கை 92ல நடத்தியிருக்கீங்க. அதைப் பத்தி சொல்லுங்க.
வலையோசைங்றது எனக்கு லட்சியப் பத்திரிக்கையா இருந்தது. அது வந்து ஒரு பெண்களுக்கான நாவலா கொண்டு வரணும்னுதான் கொண்டு வந்தேன். ஆனா ஒரு எழுத்தாளரா இருந்து கணக்கு வழக்கெல்லாம் பாத்து நடத்தவேண்டியதா இருந்தது. அதனால அது நின்னுப் போச்சு.

உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
சிறையில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது. அதுல பால்காரி கதை என்னோடது. சின்ன சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்த படத்துல அந்த பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன். என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்ப்டிப் பண்ணிட்டாரு.

பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்க கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க. ‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன். நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்த கார்ட எடுத்துக்கிட்டு அந்த பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம். அந்த்ஃஅ பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது. அப்புறம் அவங்களுக்கு என்ன் கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்த பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன். இனி எந்த பெண்ணிஅயும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.

-இவள் தேவதை பாரதி
படங்கள் - நன்றி 'தேவதை' மாதமிருமுறை பெண்கள் இதழ்

Thursday, 25 February 2010

வாசகங்கள் & வாகனங்கள்


நாம் யாரென்பதை வெளிப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் சமயங்களில், இடங்களில் அதை வெளிப்படுத்தியபடிதான் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் விரும்பியோ, விரும்பாமலோ நம்மை பிரதிபலித்தபடிதான் இருக்கிறோம்.

நமக்கு முன்னே செல்லும் வாகனங்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களையும், அந்த மனிதர்களின் எண்ணங்களையும் சாலைகளில் தினமும் பார்க்கலாம். பேருந்திற்குள்ளும் பயணச்சீட்டைக் கேட்டு வாங்கவும் என்ற அறிவிப்பையும், இல்லையென்றால் என்ன விளைவு ஏற்படும், எந்த சட்டம் பாயும் என்ற எச்சரிக்கையையும் பார்க்கிறோம். இன்னும் எந்த வசதியும் இல்லாத குக்கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பல வருடங்களாய் எழுதப்பட்டுக் கிடக்கும் திருக்குறளும் நாம் கண்டறிந்ததே. அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களில், வார்த்தைகளில் வெளிப்படுவது அவரவர்களின் உணர்வுகளும், எண்ணங்களுமே.

வாசகங்கள் வாழ்க்கையினைச் சொல்வதாகவும், தொழிலைக் குறிப்பதாகவும், மனநிலையைப் பிரதிபலிப்பதாகவும், தான் சார்ந்த மதத்தினை சொல்வதாகவும், அவரவர்க்குள்ள ஈடுபாட்டை பறைசாற்றுவதாகவும் மாறிப் போயிருக்கிறது என்பது நிதர்சனமே.

சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னலில் நமக்கு அருகிலோ, முன்னோ செல்லக் கூடிய அல்லது நிற்கக் கூடிய பல நூறு வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை நிச்சயம் கவனித்திருப்போம். அதில் இருக்கக்கூடிய வாசகங்கள் நம்மிடம் சிறு கவனிப்பை எப்படியோ பெற்று விடுகின்றன. இருசக்கர வாகனங்களின் பின்னால் ‘இது எனது தந்தையின் பரிசு’, ‘என்னைப் பின் தொடராதீர்கள்’, ‘நான் கெட்ட பையன்’ போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதை கண்ணுற்றிருப்போம். சிலவற்றில் அவர்கள் எந்த துறையைச் சார்ந்தவர்கள் என்பதும் புலப்படும்.

அரசு வாகனங்களில் தமிழில் ‘அ’ என்றும் ஆங்கில எழுத்தில் ‘ஜி’ என்றும் எழுதப்பட்டிருக்கும். ஊடகத்துறையைச் சார்ந்தவர்களின் வாகனங்களில் ‘ப்ரெஸ்’ என்ற வார்த்தையையும், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் இப்படி அவரவர் துறை சார்ந்த அடையாளங்களையும், குறியீடுகளையும் இட்டு வைத்திருகின்றனர்.

இவை நமக்கு முன்னே செல்லும் வாகன ஓட்டியை யாரெனச் சொல்வதாக அமைகிறது. ஆனால் இவைதான் நமக்கான அடையாளங்களா? என்ற கேள்வியினூடே இவை எதற்காக என்றும் யோசிக்க வைக்கிறது. ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் தான் யாரென்பதை வெளிப்படுத்த வேண்டும், பிறர் மதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலே இதற்கு காரணமாக இருக்கும்.

மூன்று சக்கர வாகனமான ஆட்டோவில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் பிரசவத்திற்கு இலவசம், பெண்ணின் திருமண வயது 21 என்பதையும் கடந்து காதல் பற்றிய சில வரிகளையும், சில பொன்மொழிகளையும் தாங்கி உலவுகிறது.
‘இழப்பதற்கு ஒன்றுமில்லை
பெறுவதற்கு இவ்வுலகமே இருக்கிறது’
என்று எழுதப்பட்டு முன்னே செல்லும் வாகனத்தின் வாசகத்தைப் பின்னால் செல்லும் வாகன ஓட்டி படிக்கையில் அவனது மனநிலையும் சிறு அசைவைக் காண்கிறது. விரக்தியிலோ, தோல்வியிலோ, சோர்வுற்ற மனநிலையிலோ செல்லும் ஒருவனை சில நொடிகளேனும் சிந்திக்க வைக்கிறது. இது போன்ற உந்துதல் வாசகங்களை எழுதி வைப்பது பிறரை முன்னேற்றுவதாகவும் பொது நல நோக்காகவும் அமையும். அல்லது அந்த வாசகம் எழுதப்படிருக்கும் வாகன ஓட்டியின் மனநிலையாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்மையும் வெளிப்படுத்தி, பிறரையும் சிந்திக்க வைக்கும் வாசகங்கள் குறைவாகவே உலா வருகின்றன.

சில தான் சார்ந்திருக்கிற கட்சிக் கொடியின் சின்னம், கட்சியின் தலைவர் என்று பந்தாவோடு செல்வதும், வீட்டிலிருக்கும் குழந்தைகளின் பெயர்களைத் தாங்கியும் இருக்கின்றன. குழந்தைகளுக்கு தனது பெயர் எழுதப்பட்டிருக்கும் வார்த்தையைத் தொட்டுப் பார்க்க ஆசையாய் இருக்கும். பெரியவர்களுக்கே சாலையின் இருமருங்கிலும் எழுதப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையில் தனது பெயரையோ, தனக்கு பிடித்தமானவர்களின் பெயரையோ காண நேரும் போது ஒரு கணம் சிந்தனை மேல் எழும்பி அடங்குவதை உணர முடியும்.

‘இது பள்ளி வாகனம், எச்சரிக்கை தேவை’ என்பது போன்ற அறிவிப்போடு செல்லும் பள்ளி வாகனங்கள், எரிபொருளை நிரப்பிச் செல்லும் வாகனங்கள், பால் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இவையெல்லாம் தனது வாகனத்தில் பயணப்படுகிற பொருளை அல்லது மனிதர்களை அறிய வைக்கிறது. சாலைகளில் சைரன் எழுப்பி வரும் அவசர ஊர்திகள், ஆம்புலன்ஸ்கள், காவல் துறை வாகனங்களும் நமது கவனத்தை திசை திருப்புகின்றன. அந்த வாகனங்களுக்கு வழி விட்டுச் செல்லும் பழக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தற்போது அப்படி வழிவிடாமல் இடையூறாக இருப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

வாகனங்கள் வாசகங்களை எந்த ஒரு எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இன்றி சுமந்தே செல்கின்றன. வாசகங்கள் வெறும் எழுத்துக்கள் அல்ல. தனது அடையாளம். மனதின் பிரதிபலிப்பு. அவற்றை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். மற்றவரை சந்தோஷப்படுத்தி தானும் மகிழ்வுறும் போது வாசகங்கள் வாழ்க்கையாகும்.

Sunday, 28 June 2009

கேள்விகள்...பதில்கள்..

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நிச்சயமாய் பிடிக்கும் .. நானே வைத்துக் கொண்ட பெயர்தான் பாரதி ..நான் ஹலோ பண்பலையில் 'இவள்' என்ற நிகழ்ச்சியினை தயாரித்து வழங்கியதால் இவள் பாரதி என்ற பெயர் பரவலாகி... என்னையும் பற்றி கொண்டது..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நேற்று இரவு.. அம்மாவினை நினைத்து அழுது தீர்த்தேன்.. இந்த உலகில் எந்த நிபந்தனையும் நிர்பந்தமும் இன்றி nesikkum உயிர் அம்மா மட்டும்தான்..
அவளின் இழப்பினை சில பாடல்களும் காட்சிகளும் நினைவூட்டும் சமயங்களில் பீறிட்டெழும் அழுகையினை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்..என்னுடைய கையெழுத்து என் மன நிலையினை பிரதிபலிப்பதாக இருக்கும்.. எனக்கு மனம் உற்சாகமாக இருந்தால் கையெழுத்து அழகாகவும்,மனம் சோர்வுற்று இருந்தால் சுமாராகவும், பேட்டி எடுக்கும் சமயங்களில் அடுத்தவர்க்கு புரியாத வகையிலும் இருக்கும்..


4).பிடித்த மதிய உணவு என்ன?

மீன் குழம்பு, ரசம் , பருப்பு கூட்டு, முருங்கை கீரை,கோழி , உருளை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் நட்பாயிருக்கிறேன் என்னை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருப்போர்களிடம்.. நான் என் நட்பை தொடர்கிறேன்... அவர்கள் எனக்கு எதிரிகளாவர்கள் என்ற புரிதல் இருந்த போதிலும்..(ஏனெனில் நண்பர்கள் வெற்றிக்கு துணையாய் இருப்பார்கள்.. எதிரிகள் வெற்றிக்கு காரணமாய் இருப்பார்கள்)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும் குளித்திருக்கிறேன்.. அருவியில் குளிக்க மிக பிடிக்கும்.. அருவியின் வீழ்ச்சி ஒரு எழுச்சி எனும் தத்துவத்திலும் பிடிக்கும்.. கடலில் கால்கள் நனைத்து விளையாட பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

உடல் மொழியையும், தோற்றத்தையும், பேச்சின் நோக்கத்தையும்..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எல்லோரிடமும் சகஜமாக பேசி விடுவது.. யார் என்ன சொன்னாலும் என் மனதுக்கு சரியான விஷயத்தை மட்டும் செய்வது.. எதையும் முயற்சி செய்து பார்த்து விடுவது..எனக்கு பிடித்த விஷயம்..


கொஞ்சம் சோம்பல், கொஞ்சம் கவன குறைவு, ஒருவரை பற்றிய கருத்தை அவரிடமே சொல்லி விடுவது எனக்கு பிடிக்காத விஷயம்...


யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் அம்மா.. என் வாழ்வில் இருந்து முற்றிலும் உள்ளார்ந்து உபயோகப்படுத்த முடியாமல் போனது அந்த மூன்றெழுத்து சொல்..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சம்பல் நிற ஜீன்சும், மயில் பச்சை நிற டாப்சும்..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்ய போகிறாய்..?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்..

14.பிடித்த மணம்?

வார்னிஷ் மணம், பெட்ரோல் மணம், மண் தொடும் மழை வாசம், என் அம்மாவின் கழுத்தில் எழும் மஞ்சள் வாசம், அவள் கடைசியாக உடுத்தி இருந்த சேலையின் வாசம்..குழந்தைகளின் மேல் எழும் பால் வாசம்.. (பக்கத்து வீட்டு ரோசிக்குரெண்டு வயசாகுது அவளோட வாசம்)

5. பிடித்த விளையாட்டு?

செஸ்

16.கண்ணாடி அணிபவரா?

இல்லை.. பார்ப்பது மட்டும்..

17.எப்படிப் பட்ட திரைப்படங்கள்.. பிடிக்கும்?

கதாநாயகர்களை மையப்படுத்தாமல் கதையை மயப்படுத்தி எடுக்கப்படும் சிறந்த திரைப்படங்கள்..

18.கடைசியாகப் பார்த்த படம்?

பேராண்மை

19.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்..

20. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் ..

கல்யாண்ஜி கவிதைகள்.. கி.ரா மற்றும் கழனியூரனின் மறைவாய் சொன்ன கதைகள்.. மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள் (மனோரமா பிஸ்வால் - ஒரிய மொழி பெயர்ப்பு கவிதைகள்.. )

21. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மெயில் பார்க்கும் போதெல்லாம்..

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காதசத்தம்?

பிடித்த சத்தம் : மழை, எனது அன்புக்குரியவரின் குறுஞ்செய்தியை சுமந்து வரும் அலைபேசி சத்தம்

பிடிக்காத சத்தம்: வெடி, ஹார்ன், ஸ்பீக்கர் சவுண்ட்

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

புது டெல்லி

24.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
presence of mind..

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்.

26.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்

27.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்கெங்கு நூலகமோ அங்கெல்லாம்..

28.எப்படி இருக்கணும்னு ஆசை?

நானாகவே..

29.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்ந்து பாருங்கள்.. அது ஒரு அழகிய கவிதை சில நேரம் பிழைகளோடு..

Saturday, 27 June 2009

ஸ்பரிசத்தின் மறுபெயர்...

"அணு அணுவாய் சாக
முடிவெடுத்த பின்
காதல் சரியான வழிதான்"..

என்ற கவிதையை காதலிக்காதவர்கள் இருக்க முடியாது...
காதலை பற்றி சொல்வதாகவே சிலர் சலித்துக் கொள்கிறார்கள்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை பற்றி பேசுவதில் தவறென்ன?
இருக்க முடியும் ?

உலகம் மிகப் பெரியது
உலகத்தை விட பெரியது காதல்..
மரணம்தான் மிக வலியானது..
மரணத்தை விட வலியானது காதல்..
அணுதான் மிக சிறியது..
அணுவிலும் சிறியது காதல்..

இப்படி காதல் காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கிறது
ஆயினும் சுவாசத்தை தனித்து உணர்வதில்லை..
காதலும் அப்படித்தான்.. உணர்வதில்லை.. உணர்ந்தவர்கள் சரியாக வெளிப்படுத்துவதில்லை..

மழையில்லாத ஊரில் மட்டுமல்ல..
காதலில்லாத ஊரிலும்
கவிதை வெளிநடப்பு செய்துவிடும்..

காதல் மனக்கதவை தட்டியதும் திறந்துவிடாதீர்கள்..
பலமுறை தட்டுகையில் மூடியே வைத்திருக்காதீர்கள்..

காதலும் ஒரு அனுபவம்..
உணரத்தான் முடியும் அதன் வலியையும்..சந்தோசத்தையும்...

உணர்வோம்..காதலை காதலால்..
ஸ்பரிசத்தின் மறுபெயரும் அதுவே.
.

முகமூடி..

அன்று அவன்
குழப்பத்திலிருந்தான்
கையிலிருந்த
நான்கைந்து முகமூடிகளில்
எதை அணிவதென..?

எதேச்சையாய்
எதிர்கொள்ள நேரிட்டதில்
அவனது மனைவிக்கான
முகமூடியை அளித்து
தூவினான் சில சொற்களை..

முகமூடிகள் ஏதுமற்ற நிலையில்..
அவனிடமே கையளித்து
கடந்தேன் அவ்விடத்தை..

வழியினில் கிழிசலான
முகமூடிகள் சில காலில்
ஒட்டி கொள்ள
உதறியும் உதிராத அவைகளுடன்..
பேருந்தேறினேன்..

இரவு முத்தம்...

அவ்வளவு நிசப்தத்துடன்
நிகழ்த்தப்பட்ட முத்தத்தில்
இரவு மூர்ச்சையிழந்து
இருந்தது...

மீண்டும் நிகழ்ந்த
முத்தத்தின்
சிறு சத்தத்தில்
விழித்துக் கொண்டது இரவு..
.

காலியான இருக்கை...

ஞாயிற்றுக் கிழமையில்
நிரம்பியிருக்கும்
காலியான இருக்கைகளுடனான
பயணம் இதமானது..

எல்லா சன்னலோர
இருக்கையின் வழியேயும்
நானே தெரிகிறேன்..

வழித்தடங்களெங்கும்
விடுமுறையின் பிரதிபலிப்பு..
சிறுவர்களுக்கு விளையாட்டுகளாகவும்
பெரியவர்களுக்கு பேச்சாகவும்
பெண்களுக்கு எவ்வித மாற்றமின்றியும் ..

பண்பலை வரிசை
விரல்நுனியில் மாறிக்கொண்டிருக்க
என் காதுக்குள்
காற்று ஏதோ சொல்ல முயன்று
தோற்று கொண்டிருந்தது..

பேருந்து...

*உப்புப் பெறாத சண்டைக்கு
அதிகாலையில்
கோபித்து
காலியான
பேருந்தில் ஏறினேன்...

கண்கள் ஊறியது
அவன் தேடி வருவானென..?
நேரம் கரைந்தது..
பேருந்தின் சக்கரங்கள்
சுழன்றதில்
என் காதல் நசுங்கி உப்பியது.
.

என் உயிரின் பார்வைக்கு..

நலமாகத்தானிருந்தேன்..
உன்னை சந்திக்காத வரையில்..
பறந்து திரிந்து தானிருந்தேன்..
உன்னிடம் பழகாத வரையில்..
எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இருந்தேன் ..
உன்னை எதிர்கொள்ளாத வரையில்..

சிறகுகளை சுருக்கியதில்லை..
உன் நிழலை பார்த்திராத வரையில் ..
சிந்தனைகள் செரித்தபடிதானிருந்தன..
உன் அறிவை உண்ணாத வரையில்..
நினைவுகள் சலனமற்று இருந்தேன்....
உன்னை தரிசிக்காத வரையில்..

என் பூமியில் மழையும் வெயிலும்
மாறி மாறித்தான் தழுவியது..
உன் சுற்றுவட்டப் பாதையில் நுழையாத வரையில்..
என் கதிர்கள் ஒளி பாய்ச்சியபடி தானிருந்தன..
உன் எண்ணங்கள் குறுக்கிடாத வரை..
என் இரவுகள் விடியலை நாடித்தான் இருந்தன..
உனது இமைகளுக்குள் உட்புகாத வரையில்..

எனதிரப்பைக்கு பசித்து தானிருந்தது..
உன் இதய நிழலில் இளைப்பாராத வரையில் ..
எனது பார்வைக்கு தடை இருந்ததில்லை..
உன் காட்சி கடந்து போகாத வரையில்..
எனது விரல்களுக்கு வலி தெரிந்ததில்லை..
உனது கைகளுக்குள் சிறைப்படாத வரையில்..

எனது நுரையீரலில் சுவாசம் தடைபட்டதில்லை..
உன்னிலிருந்து கசியும் மதுவின் வாசம்
நாசி துளைக்காத வரையில்..
என் கனவுகள் தேங்கி நின்றதில்லை
உன் வார்த்தைகளில் உறையாத வரையில்..
என் உயிர் சொட்டு சொட்டாய் உதிர்ந்ததில்லை..
உன் நிஜம் கண்டு திடுக்கிடாத வரையில்..

நானெப்போதும் என்னை நொந்ததில்லை..
உன் அன்பின் வெப்பம் சுடாத வரையில்..
நானெப்போதும் சோர்ந்ததில்லை..
உனது பதிலின் பதிவை பெறாத வரையில்..
நானெப்போதும் அழுததில்லை..
உனது ஆளுமையினில் அடிமையாகாத வரையில்..



ஆலமரம்..

இப்படியெல்லாம்
நடக்குமென்று தெரியாது..

அந்த
ஆலமரம் சரிந்த பின்னே
அதனின் நிழலில் இளைப்பாறிய
அந்த நான்கு பறவைகளும்
திசைமாறி போகுமென்று..

அவை முன்னர்
உணர்ந்ததுமில்லை..
ஆலமரத்தினால்
தான்
வேர்கொண்டுள்ளோமென..

இப்போது வருந்துகின்றன..
வேரினை இழந்த பின் ..
விதை தேடி..

என்னால் முடியாது..

எப்போதும் என்னால் முடியாது..
ஒரு துரோகத்திலிருந்து
நம்பிக்கையை பெற..
ஒரு ஏமாற்றத்திலிருந்து
எதிர்பார்ப்பை பெற..
எப்போதும் என்னால் முடியாது..

ஆனபோதிலும்
நம்பிக்கையின் பின்னே
ஒளிந்திருக்கும் துரோகத்தையும் ..
எதிர்பார்ப்பின் பின்னே
ஒளிந்திருக்கும் ஏமாற்றத்தையும்
என்னாலறிய முடிகிறது ..
அதை சூடி வரும்
நிஜங்களின் நிழல் பார்த்தே..

சொந்தமாக முடியாத உறவுதான் அது..

அந்த பறவைக்கும்
எனக்குமிருக்கும் புரிதலை
யாரால் புரிய முடியும்?

தன்னுணவினை
பகிரவும்
தன்னுணர்வினை
வெளிப்படுத்தவும்
யாரிடமிருந்து கற்றுக் கொண்டது?
மனிதனைப் போன்றவனிடம்
நிச்சயமாய் இருக்காது..

வெளிசெல்லுகையில்
நிழலாகவும்
உறங்கச் செல்கையில்
கட்டிலின் கீழாகவும்
எப்போதும் என்னை
வட்டமிடும் அந்த பறவை
சொந்தமாக முடியாத
உறவுதான்...

வைகை நதி..

கடல் போய்
சேர்வதற்குள்ளே
வற்றிவிடுகிற அல்லது
பயன்பட்டு விடுகிற
வைகையின்
கரையிலிருந்து
வந்தவள் நான்..

கனவுகளை
செயல்படுத்துகையில்
எதிர்ப்படுகிற
தடைகளால்
எண்ணங்களை வற்றிப்போகவோ
திரும்பப் பெறவோ
ஒருபோதும் சம்மதமில்லை..
அது சாத்தியமுமில்லை...

தான் உருவான இடத்திலேயே
கலக்கும் நதியாயின்றி
இந்த நதி
புது கடலையே உருவாக்கும்..
இன்னும் பிற நதிகளோடு..

காதலின் அடியில்..

யாவற்றிலிருந்தும்
மீட்டெடுக்க
வல்லமையுள்ள
உன்னால்தான்
இப்போது வீழ்ந்து கிடக்கிறேன்
யாதொன்றாலும்
மீட்டெடுக்க இயலாத
காதலின் அடியில்...

Saturday, 13 June 2009

ஒரு கொலைக்கான ஐந்து காரணங்கள்...

பாரதியின் அடுத்த கதை விரைவில்...........

Wednesday, 15 April 2009

பரமபதம்

ஏணியின் உச்சியை
தொடும் வேளையில்
பாம்பொன்று கொத்தி
சடாரென விழுகிறேன்..

நட்பென்னும்
பரமபதத்தில்
வீழ்வதும் எழுவதும்
உருட்டப்படும் கட்டைகளின்
தாயத்தை பொறுத்தமையும்..

தயங்களும் காயங்களும்
எப்போது விழுமென்று
யாராலும் யூகிக்க
முடிவதில்லை..

வெற்றி பெறவோ
தோல்வியுறவோ
தயாரான நிலையில்
பூச்சியத்திலிருந்து
ஆட்டத்தை துவங்குகிறேன்
மீண்டும்...

Friday, 3 April 2009

காதலின் தடயங்கள்...

உனது காதலின்
எல்லைகள் விரிவடைந்தபடி...

எனது காதலோ
எல்லைக்குள்ளே...

உலகின்
ஒவ்வொரு மூலையிலிருந்தும்
தொடங்கிய உன்
காதல் பயணம்
கரைசேரும் நேரமென்றாய்..

முந்தைய உனது
காதலின் எச்சங்கள்
எனது காதலை
தின்று தீர்க்கிறது...

அறிதலுக்காய்
திறந்திருக்குமென்
ஜனக்குழி
ஒருபோதும் மூடியதில்லை..
உன் வருகை யறிந்து...

நீ
விழுந்தெழுந்த
குழிகள் பற்றி
கவலை இல்லை எனக்கு..
என்னிலும் அதற்கான
தடயங்கள் உண்டு என்பதாலே..

Wednesday, 25 March 2009

சாம்பல் துகள்கள்..

சிறிது உலர்ந்த முத்தங்கள்
காய்ந்த கண்ணீர் சுவடுகள்
அப்போதுதான்
முளைவிட்ட காயங்கள்...
இவற்றோடு
உடைத்து போன
சில காதல் துண்டுகளையும்..
சேகரித்து வெளியேறுகிறேன்...

என் சுவடுகளெங்கும்
உன் பிம்பங்களே தெரிய
சேகரித்த யாவற்றையும்
எரிக்கிறேன் அந்நிலவொளியில்..
பேருந்து நிலையத்தின் பலத்த
சத்தங்களுக்கிடையில்..

சாம்பல் துகள்கள் மிஞ்சுமென
பார்த்திருக்க
வெந்தும்
வேகாததுமான
கட்டையாக
கிடக்கின்றன அவைகள்..

அங்கிருப்பவர்களின்
அதட்டலுக்கும்
அன்னியப் பார்வைக்கும்
கரையொதுங்கி
பாதி கரியான
கட்டையோடு தொடர்ந்து
சுழல்கிறது என் காலச்சக்கரம்,...

நிர்வாணம்...

நிர்வாணம்
நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...

குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...


பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..


தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்

தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..


என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...

துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...


காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....



அனுபவங்கள்..........

புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

குறுகிய கால
அனுபவமெனினும்
அதுபோதும்
வாழ்நாள்முழுமைக்கும்..

கசப்பானவையோ
இனிப்பானவையோ
அவை அனுபவங்கள்தான்..

உணர்வுகளையும்
உரிமைகளையும்
அடகு வைக்க நேருகிறது.
மீட்டெடுக்க முடியாத
நேரத்தில்....

இழப்புகளோடு
புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

புதிய வலிகளை
ஏற்றுக்கொள்வதிலும்
பழைய வலிகளோடு
ஒத்துப் போய் விடலாம்.. என
திரும்புகிறேன்
புறப்பட்ட இடத்திற்கே...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?