Monday, 16 July 2012

11,500 ஆண்டுகள் பழைமையானதா பூம்புகார்?




இவள் பாரதி


புகார் கடலாராய்ச்சியில் புகார் மேல் புகார்


சமீப நாட்களாக கடல்கொண்ட பூம்புகார் பற்றிய ஆய்வு குறித்த மின்னஞ்சல் ஒன்று பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது. கிரகாம் ஹான்காக் என்ற ஆய்வாளர் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்து பூம்புகார் 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த மின்னஞ்சல், கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வின் அடிப்படையை ஏற்காமல் இன்னும் பூம்புகாரை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏன் பாடப்புத்தகங்களில் குறிப்பிட வேண்டும்?   இதுகுறித்து அக்கறை கொள்ளாமல் தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் என்ன செய்கிறது? கடலில் மூழ்கிய தமிழக நகரங்கள் பற்றிய ஆராய்ச்சி ஏன் தீவிரமடையவில்லை என்றும் அது சூடான சிந்தனைகளை முன்வைக்கிறது. கிரஹாம் ஹான்காக்கின் ஆய்வு குறித்து புதுச்சேரி, திராவிடப் பேரவையின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் தனது வலைத்தளத்தில் எழுதிய கட்டுரைதான் அப்படி மின்னஞ்சலாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் பூம்புகார் கடலாய்வில் நடந்து வருவதென்ன?


நந்திவர்மன்

நந்திவர்மனைச் சந்தித்து கடல் கொண்ட பூம்புகாரின் கடலாய்வு குறித்தும் தொன்மை குறித்தும் கேட்டோம்.


"இணையதளத்தில் கூகுள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். இந்தியாவைச் சுற்றியிருக்கும் கடலோரப் பகுதி சில மைல் தூரம் வெளிர்நீல நிறத்திலும் அதைத்தாண்டிய பகுதிகள் கருநீல நிறத்திலும் இருக்கும். வெளிர்நீலப் பகுதிகள் ஆழம் குறைவானவை. அங்கே நிலம் மூழ்கியுள்ளது என்பதற்கு இன்று கூட பெரிய சான்று இருக்கிறது.
தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச், 8,9ல் கடலில் மூழ்கியவர்கள் இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். எஸ்.ஆர்.ராவ் தலைமையில் வானகிரி பக்கத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்புடைய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கூகுள் மேப்பில் வெளிர் நீலம்



 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட  வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புழுதியும் சேறுமாக மூடப்பட்டிருந்தது.  பின்னர் நிதிப்பற்றாக்குறையால் அகழாய்வு தடைபட்டது.





 உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர்  தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ICE AGE எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி கிளன் மில்னே, ‘கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் பார்க்கும்போது பூம்புகார்  9,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்’ என்று உறுதி செய்தார்.



கிரஹாம் ஹான்காக்
 கிரஹாம், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர். ஆனால், இவரது ஆய்வு, அண்டர் தி வேர்ல்டு என்ற தலைப்பில் அமெரிக்க சேனல்களில் ஒளிபரப்பானது.நம்மவர்கள் பலர் கரையில் இருந்துகொண்டே கடலைப் பற்றி ஆய்வு நோக்கில் எழுதிவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டவர்கள் கடலுக்குள் சென்று வந்துதான் கடலைப் பற்றியே எழுதுவார்கள்" என்கிறார் நந்திவர்மன்.


செல்வராஜ்
தேசியக் கடலாராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, அவருக்கு உதவியாளராக அப்போது மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளராக இருந்தவர் செல்வராஜ். தமிழக அரசு கடலாய்வுக்காக ஒதுக்கிய பணத்தை செலவழிக்க வேண்டுமானால் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத்தோடு தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று கூறவே, முறையான பயிற்சி கொடுத்து செல்வராஜ் இந்த ஆராய்ச்சியில் நீருக்குள் மூழ்கி கடலாய்வு செய்திருக்கிறார். "1983 முதல் 1996 வரை நான்கு கட்டங்களாக ஆய்வு செய்தோம். திருமுல்லைவாயிலிலிருந்து தரங்கம்பாடி வரை எங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். தேசியக் கடலாராய்ச்சி நிறுவன விஞ்ஞானி வோரா தலைமையில் நடந்த முதல் கட்ட ஆய்வில் கடற்கரையோரம் ஐந்து கி.மீ. தூரம் வரை நடந்து போனோம். அதில் பல உறைகிணறுகளைக் கண்டறிந்தோம்.


இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வு, கடல் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குளோபல் ப்ராஸசிங் சிஸ்டம் எனப்படும் ஜி.பி.எஸ். உட்பட ஐந்து வகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. Side scan sonar Fisher என்ற கருவியின் மூலம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பில் என்ன இருக்கிறது என்பதையும் (கட்டடம், மண் படிவங்கள், கப்பலின் சிதைந்த பகுதிகள் போன்றவை), Eco மூலம் அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும், –Mini Ranger  மூலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்யமுடியும்.

கடைசியாக எஸ்.ஆர்.ராவ் தலைமையில் கடலுக்கு அடியில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த டைவர்ஸ் (கடலில் மூழ்குபவர்கள்) உடன் நானும் டைவிங் செய்தேன்.

இந்தக் கடலாய்வின்போது கடலுக்கு அடியில் 45 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் தூரத்தில் மண்படிவங்களைக் கண்டறிந்தோம். ஒரு படிவத்தை ஆய்வு செய்தபோது, அது 2 மீட்டர் சுற்றளவுக்குப் புழுதிகளால் மூடப்பட்டிருந்தது. கரையிலிருந்து நாலரை கி.மீ. தூரத்தில் 67 அடி ஆழத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் இருக்கின்றன. செம்பூரான் கற்களை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடங்கள் அப்போது கண்டறியப்பட்டன. எங்களது ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழக கடலாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது" என்கிறார் தொல்லியல் நிபுணர் செல்வராஜ்.

ஒரிஸா பாலு
தமிழர்களின் தொன்மை குறித்தும், கடல் மீன் வளம் குறித்தும், பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் போன்ற கடலில் மூழ்கிய நகரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருபவர் ஒரிஸா பாலு. இவர், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை நிறுவி, கடல் சார்ந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியையும் இதன் கீழ் ஒருங்கிணைத்து வருகிறார்.

ஒரிஸா பாலு கூறும்போது,  "தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் கார்பன் 14 ஆய்வு அடிப்படையில் கடலுக்கு அடியில் இருக்கும் பூம்புகார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்கின்றது. கிரஹாம் கடல்மட்ட உயர்வின் அடிப்படையில் 9,500 ஆண்டுகள் பழமையானது. கடலுக்குள் இருக்கும் கட்டடங்கள், உடைந்து போன கப்பல்களின் பகுதிகள் போன்ற இடங்களில்தான் அதிகமான மீன் வளங்கள் இருக்கின்றன. ஏனெனில் இடிபாடுகளுக்கிடையேதான் மீன் குஞ்சுகள் பெரிய மீன்களிடமிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்பதுடன், அந்தப் படிவங்கள் மீது முட்டையிடவும், மீன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும் முடியும்.
பூம்புகாரிலும் இது போன்ற இடங்கள் இருக்கின்றன. கடல் பற்றி அதிகமாக மீனவர்களுக்குத்தான் தெரியும். அதனால், மீனவர்களின் துணையோடு எனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். இதுபோல பூம்புகாரிலும்  கடலில் மூழ்கும் குளியாளிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்த உள்ளோம்" என்றவர், சமீபத்தில் பூம்புகாரில் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

புலவர்.தியாகராசன்

இந்தக் கலந்தாய்வில் மீனவர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர் தியாகராசன், ‘பூம்புகாரின் வரலாற்று எச்சங்கள்’ எனும் அரிய ஆய்வு நூலை எழுதியவர். இவர் பூம்புகாரில் ஆய்வு மேற்கொள்ள வரும் தொல்பொருள்துறை, அகழாய்வுத் துறை அறிஞர்கள் அத்துணை பேருடனும் தொடர்பில் இருந்தவர். "இந்தக் கடலை அறுபது வருஷமா பாத்துட்டு இருக்கேன். நான் பார்த்த காலத்திலிருந்து கடல் இப்போ ரொம்ப உள்ளே வந்திருக்கு. அம்பது வருஷத்துக்கு முன்னாடி கடல் காலையில் உள்வாங்கி அந்தியில் வெளியே வரும். அப்போ அங்கே இருந்த கோயிலில் மக்கள் சாமி கும்பிட்டு வருவாங்க. காலையில் உள்வாங்கும்போது, மெதுவாகவும் வெளிவரும்போது வேகமாகவும் வரும். இப்போ இருக்கிற இந்தக் கண்ணகி சிலை மூன்று முறை இடம் மாறிடுச்சு" என்று கலந்தாய்வில் பேசினார்.
பேரா.தியாகராஜன்





மற்றொரு பேராசிரியர் தியாகராஜன், "பெரும்பாலும் வரலாறு சார்ந்த ஆய்வுகளை செய்வதும், மேற்கொள்ள தூண்டுவதும் தமிழ்த்துறை பேராசிரியர்களே. ஏனெனில் இலக்கியத்தில் இருக்கும் வரலாற்றின் உண்மையை தேடுபவர்கள் எங்களைப் போன்றவர்களே" என்றார்.





ஜெகன்
அடுத்து பேசிய மீனவர் ஜெகன், "கடலுக்குள் 65 இடங்கள்ல பார் (மீன் இனப்பெருக்கம் செய்யக் கூடிய இடிபாடுகள், தீவு போன்ற பகுதிகள்) இருக்கு. கிட்டத்தட்ட எல்லா இடங்கள்லயும் ஆழம் ரொம்பக் குறைவாகத்தான் இருக்கு. இந்த பார்கள்லதான் நாங்க போய் மீன் பிடிப்போம். ஒவ்வொரு பாருக்கும். காவிரி பார், பூம்புகார் பார்னு பேர் இருக்கும். எங்ககிட்ட இருக்கிற கருவி மூலம் ஒவ்வொரு பாரும் எவ்வளவு ஆழத்துல எவ்வளவு நீளத்துல எவ்வளவு பெரிசா இருக்குனு பாக்க முடியும். கிட்டத்தட்ட கடலில் 21 கி.மீ. வரை இந்த மாதிரி நிறைய பார்கள் இருக்கு" என்றார்.
இரா. கோமகன்

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடற்புறப் பிரிவில் பணியாற்றிய பொறியாளர் இரா.கோமகன், "1998ம் ஆண்டு 45 மீட்டர் தூரத்தில் கடல் இருந்தது. 2009ல் 60 மீட்டர் கடல் ஊடுருவியது. தற்பொழுது மேலும் 10 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பால் கரை பாதிப்படைந்துள்ளது. மொத்தத்தில் வானகிரி கடற்கரை 70 மீட்டர் அரிப்புக்குள்ளாகியுள்ளது. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின்படி பூம்புகார் 5 கிலோமீட்டர் கடல் கொண்ட பகுதி. ஒன்று மட்டும் உறுதியாகிறது, புகாரின் கரை விழுங்கும் கடலின் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை" என்கிறார்.

இந்த ஆய்வுக்காக முதலில் ஒதுக்கிய இரண்டரை கோடியில் 50 லட்சம் மட்டுமே ஆய்வுக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. மிச்சம் என்ன ஆனதென்று தெரியவில்லை. தகுதியான கடலாராய்ச்சி நிபுணர்கள் இல்லாததும் இதுவரை நடந்து முடிந்திருக்கும் பூம்புகார் கடல் ஆய்வுகளைச் சரியான முறையில் அங்கீகரிக்காததும் இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள் என்று கூறியவர்கள், கடலுக்கடியில் இருக்கும் நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இப்போது பூம்புகார்

ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். இப்போது குப்பைகள் குவியும் மண்மேடாக மாறியிருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் வார நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளால் பிளாஸ்டிக்கால் நிரம்பி வழிவதும் கண்ணகி சிலையிருக்கும் கட்டடப் பகுதியில் சுற்றுலா வருபவர்கள் தங்களது பெயரினைப் பொறித்து விளையாடியிருப்பதும் ஒருபக்கம் வேதனையளிக்க, மறுபக்கம் பூம்புகாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வானகிரியில் அனல்மின் நிலையம் வர இருப்பது அந்தப் பகுதி மக்களை கவலையடைய வைத்திருக்கிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால் கடலில் இருக்கும் மீன் வளம் குறைந்துபோகும் அபாயமும் இருக்கிறது. 




நன்றி: புதிய தலைமுறை,  ஜூலை, 5 2012, (பக்கம் 54 - 56)
இவள் பாரதி

ரோட்டில் காரும் ஓட்டலாம்... வீட்டில் சோறும் ஆக்கலாம்!




பொடிசி


சாலையில் காரை இயக்கவும், சமையலறையில் மாவை அரைக்கவும், சூரிய ஒளியால் முடியுமென்றால் அது ஆச்சர்யம்தானே...சூரிய ஒளியால் இயங்கக்கூடிய காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியே வீட்டிலிருக்கும் மின்விசிறி, மின்விளக்கு, கிரைண்டர், மிக்ஸி, டி.வி.ஆகியவற்றையும் இயக்குகிறது.

சோலார் காரை கண்டுபிடித்த ராஜசேகரிடம் பேசியபோது, "மின்தட்டுப்பாடு, பெட்ரோல் விலையேற்றம்னு பல பிரச்சினைகள் நம்மை சிரமப்படுத்துது. இதுக்கு என்ன தீர்வுனு ஓர் ஆறு மாசமா செஞ்ச முயற்சியிலதான் சூரிய ஒளியில ஓடக் கூடிய காரை கண்டுபிடிச்சேன். இன்னும் சில வேலைகள் அதுல செய்ய வேண்டியிருக்கு. ஆனாலும் இதை இப்பவே ஓட்டிட்டுதான் இருக்கேன். இந்த காரோட மேற்கூரையில சோலார் தகடு பொருத்தியிருக்கேன். இது 25 வருஷத்துக்கு பழுதாகாது. இதன் மூலமா பேட்டரியில சேமிக்கப்படுற மின்சாரத்துல 30 கி.மீ. வேகத்துல 50 கிலோமீட்டர்ல இருந்து 200 கிலோமீட்டர் வரை காரை ஓட்டலாம். வீட்டுல கரண்ட் இல்லாத நேரத்துல இதுல இருக்கிற பேட்டரியில கனெக்‌ஷன் கொடுத்து ஒரே நேரத்துல டி.வி., ஃபேன், ட்யூப்லைட், மிக்ஸி  போட்டுக்கலாம். ஆனா, கிரைண்டர் யூஸ் பண்ணும்போது வேற எதுவும் போடக் கூடாது. சூரிய ஒளியில ஒருநாள்லசேகரிக்கிற மின்சாரத்துல இதை எல்லாம் செய்ய முடியும்" என்று அவர் சொல்லும்போதே, ‘வர இருக்கும் மழைக்காலத்தில் இது எப்படி இயங்கும்?’ என்ற கேள்வி எழ... அதற்கும் பதில் தயாராய் இருக்கிறது ராஜசேகரிடம்.
"மழைநேரத்துல அல்லது மேகமூட்டம் மாதிரி சூரிய ஒளி கிடைக்காத சமயங்கள்ல வீட்டுல இருக்கிற கரண்ட்ல செல்போனுக்கு சார்ஜ் போடுற மாதிரி இந்த பேட்டரியையும் சார்ஜ் போட்டுக்கலாம். இது ஒருத்தர் மட்டும் உட்கார்ந்து 30 கி.மீ. வேகத்துல செல்லக் கூடியது. அதனால, இதுக்குத் தனியா லைசென்ஸ்வாங்கத் தேவை இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாடும் இல்லை. இதைத் தயாரிக்க 45,000 ரூபாய் செலவாகிறது. அடுத்ததாக, இரண்டு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய காரை வடிவமைக்கப் போறேன்" என்றார்.



ராஜசேகரன், திட்டக்குடி

முன்பு பைக்!

38 வயதாகும் ராஜசேகருக்கு பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக், எலெக்ட்ரிக் போன்ற பல வேலைகள் தெரிந்திருப்பது இந்த காரை வடிவமைக்க பேருதவியாக இருந்துள்ளது. ராஜசேகர், திட்டக்குடியில்உள்ள ஒரு மெடிக்கலில் மருந்தாளுநராகவும், லேப் டெக்னீசியனாகவும் இருக்கிறார். இதற்கு முன் 2008ல் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பைக்கை வடிவமைத்திருக்கிறார். அந்த அனுபவமே இப்போது காரை வடிவமைக்கவும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.


நன்றி: புதிய தலைமுறை, ஜூலை 12, 2012 (பக்கம் 58) 
இவள் பாரதி

Friday, 15 June 2012


பணி செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணியத் தடையா?

அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் ஜீன்ஸ், டீசர்ட் போன்ற அநாகரிகமான உடைகளை அணியக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது

டைகள் பெண்களை அழகுபடுத்துபவை. ஆனால் நீண்டகாலமாகவே, ஆடை அணிவது தொடர்பான உத்தரவுகள் பெண்களைப் படுத்தி எடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியொரு சமீபத்திய உத்தரவாக அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் நாகரிகமான உடைகளையே அணிய வேண்டும். ஜீன்ஸ், டீசர்ட் போன்ற அநாகரிகமான உடைகளை அணியக் கூடாது. சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிவது சிறப்பானதாக இருக்கும்என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்.  அரியானா அரசின் முக்கியப் பொறுப்புகளில் பெண்களே பெருமளவு  இருக்கும் நிலையில், அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, அந்த மாநிலத்திலுள்ள அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கீதா புக்கல், "நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைப் போன்று சராசரிப் பெண்களும் குறிப்பிட்ட ஆடைகளையே அணிய வேண்டும் என்பது சரியல்ல, இதை அநாகரிகம் என்று கூறுவதும் முறையானதல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதற்காகத்தானே தவிர, அவர்களைக் கட்டுப்படுத்தி இயக்குவதற்கு அல்ல" என்று கருத்து தெரிவித்துள்ளார். அரியானா உத்தரவு சரிதானா என்று தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்புப் பெண்களிடம் கருத்துக் கேட்டோம்...பொரிந்து தள்ளிவிட்டனர்.


சுமதி, வழக்கறிஞர்
சுமதி (வழக்கறிஞர்)
"இது மிக முட்டாள்தனமான உத்தரவு. உலகம் நொடிக்கு நொடி உருமாறிக்கொண்டிருக்கும் வேளையில் ஜீன்ஸ் போடுவதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.பெண்கள்தான் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதுபோல பேசுவது அபத்தமானது. உடையணிவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். எனக்கு மிக வேண்டிய ஒருவருடைய திருமண வரவேற்பு. அன்று வேலையில் இருந்து சரியான நேரத்திற்குத் திரும்ப முடியவில்லை. வீட்டிற்குச் சென்று பட்டுப்புடவை கட்டி வருவதற்குள் நிகழ்ச்சியே முடிந்துவிடும். அதனால் ஜீன்ஸ் உடையிலேயே நான் நிகழ்ச்சிக்குசென்று வருகிறேன் என்றால் அதில் என்ன தவறு?சல்வாருக்குப் போடும் துப்பட்டாக்களை சில இளைஞர்கள் பிடித்து இழுப்பது, பேருந்தில் ஏறும்போது படியில் மற்றவர்கள் காலில் சிக்கி மிதிபடுவது, பைக்கில் செல்லும் போது துப்பட்டா வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது போன்ற பிரச்சினைகள் எதுவும் ஜீன்ஸ் அணியும்போது ஏற்படுவதில்லை. அதேபோல் உடலை முழுவதுமாக மூடுவதோடு, மிகப் பாதுகாப்பான ஆடையாகவும் இருப்பது ஜீன்ஸ் மட்டுமே."

சூர்யா

சூர்யா (படத்தொகுப்பாளர்)
"இது சுதந்திர நாடு. இங்கு பெண்கள் எப்படி உடுத்த வேண்டும் என்று ஓர் அரசு கூறுவது ஆரோக்கியமான விஷயமல்ல. எனக்கு எது வசதியான உடையோ, அதைத்தான் அணிய முடியும் என்று அரியானா மக்கள் சொல்ல வேண்டும். அரியானாவில் ஜீன்ஸ் அநாகரிகமான உடையென்றால் மற்ற ஊர்களில் ஜீன்ஸ் அணிபவர்கள் அநாகரிகமானவர்கள் என்கிறதா அந்த அரசு? சேலையை அணிந்துகொண்டு குனியவோ, நிமிரவோ முடியாது. பேருந்தில் ஏறும்போது தடுக்கி விடுகிறது. தூக்கிப் பிடித்துக்கொண்டு ஏறினால் முழங்கால் வரை தெரிகிறது. ஆனால் ஜீன்ஸ் அப்படியல்ல, பெண்களுக்கு கௌரவம் சேர்ப்பதோடு, கம்பீரத்தையும் தருகிறது."


சாந்தி
சாந்தி (எம்.பி.ஏ.மாணவி)
"சமீபத்தில் ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது அங்கு ஜீன்ஸ், டீசர்ட் அணிந்திருந்த பெண்களைவிட, கையில்லாத மேல்சட்டையும் சேலையும் கட்டியிருந்த ஒரு பெண்மணியின் ஒவ்வொரு அசைவும் அவர் உடுத்தியிருந்த ஆடையால் பலரது பார்வைக்கு இலக்காகி விட்டது. எந்த ஓர் உடையையும் நாகரிகமாகவோ, அநாகரிகமாகவோ உடுத்தலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம். மற்ற ஆடைகளை விட ஜீன்ஸ் விலையும் குறைவு. வசதியும் அதிகம். ஜீன்சுடன், லங் டாப், குர்தி போன்றவற்றை அணிவதில் கிடைக்கும் பாதுகாப்பும், திருப்தியும் வேறெந்த ஆடையிலும் இல்லை. வெளியூர் போகும்போது ஒரு ஜூன்ஸ், ரெண்டு டாப்ஸ் எடுத்து வைத்துக் கொண்டால் சுமையும் குறையும். சுகமும் கூடும்."
ஜெயகல்யாணி

ஜெயகல்யாணி (பண்பலைத் தொகுப்பாளர்)
"ஜீன்ஸும் ட்ரெண்டியான ஒரு டாப்சும் அணிந்திருக்கும்போது ஏற்படுகிற ஒரு மிடுக்கான தோற்றம் வேறெந்தவிதமான உடைகளிலும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஜீன்ஸ் அணிந்திருக்கும்போது தைரியமாக இருக்கிறது. நாகரிகம் வளர்ந்த இந்த நவீன காலத்தில் இப்படியொரு பித்துக்குளித்தனமான உத்தரவைப் போட்டிருக்கும் அரியானா அரசை என்னவென்று விமர்சிப்பது? அரியானா அரசு அலுவலகத்தில் சுடிதார் அனுமதிக்கிறார்கள். ஆனால் இத்தனை வசதியான ஜீன்ஸுக்கு மட்டும் தடை போடுவது பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கிறது."



தமிழ்ச்செல்வி ( மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்)
"பொத்தாம்பொதுவாக இந்த மாதிரி தடை விதிப்பது தவறு. ஜீன்ஸைப் பலரும் துவைக்காமல் பல நாட்களாக உடுத்துவதால் தோல் நோய்கள் உட்பட குழந்தைப் பேற்றைப் பாதிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த மாதிரி ஆரோக்கியம் சார்ந்த காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. அப்படியென்றால், என்ன காரணத்திற்காக அரியானாவில் அலுவலகம் செல்லும் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாதென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? இதுகுறித்த பின்னணித் தகவல்களை முழுமையாக அறியாமல், நாம் மேலோட்டமாக கருத்துச் சொல்வது முறையாக இருக்காது. பொது இடங்களில் பணிபுரியும்போது மற்றவர்கள் கண்ணை உறுத்தும்படியான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை."

ஜீன்ஸ் பிறந்த கதை
1848ம் ஆண்டு கலிபோர்னியாவில் தங்கவேட்டை நடந்தது.பலர்  சுரங்கங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த லெவி ஸ்ட்ராஸ்என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார். சுரங்கத்தில் வேலை பார்க்கும்  அவரது வாடிக்கையாளர்கள் சுரங்கத்தில் கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாகப் புலம்பினார்கள்.

டெண்ட் அடிக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியிலேயே பேண்ட் தைத்தால் என்னவென்று யோசித்த லெவி, கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்தார். அந்தப் புதிய ரக கேன்வாஸ் பேண்ட்கள், சுரங்கத் தொழிலாளிகளை மிகவும் கவர, அவரது வாடிக்கையாளர்களாக மாறினர். அதன்பின் இத்தாலியிலிருந்து ஜென்னொஸ் என்ற நீல வண்ணத் துணியினை வாங்கி பேண்ட் தைத்தார். நாளடைவில் ஜீன்ஸ்என்ற பெயர் அதற்கு உருவானது. பிரான்சிலிருந்து நீம் என்றழைக்கப்பட்ட துணியை வாங்கித் தைத்ததால் டெனிம்என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவள் பாரதி 
நன்றி: புதிய தலைமுறை


பிளாஸ்டிக்கே ஓடு...  வழிகாட்டும் மாங்காடு


நூறு சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஒரு பேரூராட்சி நிர்வாகம்

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாக எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி தொண்டு நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோது, இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.  அத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் இப்படி எச்சரிக்கும் முன்னரே  பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்த முன்முயற்சி எடுத்திருக்கிறது ஒரு பேரூராட்சி. அந்தப் பேரூராட்சி சென்னைக்கு அருகில் உள்ள மாங்காடு.

பிளாஸ்டிக்கை அழிப்பதற்காக பல்வேறு இடங்களில் பலவாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. என்றாலும் அதற்குச் சொல்லிக்கொள்ளும்படியான பலனில்லை. இந்நிலையில் இப்போது நூறு சதவிகிதம் பிளாஸ்டிக்கை ஒழிப்பது என உறுதி எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது மாங்காடு பேரூராட்சி. ஒரு தொண்டு நிறுவனமும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுத்துச் செல்கின்றன.

மாங்காட்டுக்குள் நுழைந்து எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடைஎன்ற அறிவிப்பு. மாங்காடு பேரூராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக் கைப்பைகள், கப்புகள், கவர்கள் 01.03.2012 முதல் தடை செய்யப்படுவதாகவும், மேற்படி பொருட்களை கையில் வைத்திருந்தால் அபராதம் 500ம், பொது இடங்களில் வீசி எறிந்தால் 1,000மும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

"கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரூராட்சிகளைப் பார்வையிட்டு பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தின் நேரடியாக அறிந்துகொள்ள முடிவுசெய்து, மாங்காடு பேருராட்சித்தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர், பேரூராட்சிப் பணியாளர்கள், மாங்காடு வியாபாரிகள் இவர்களுடன் எங்களது ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனப் பணியாளர்களையும் சேர்த்து 60 பேர் கன்னியாகுமரி சென்றோம். அங்கு பார்வையிட்டபோது, வியாபாரிகளின் சந்தேகங்கள் பலவற்றுக்கு  நேரடியாக செயல் விளக்கம் கிடைத்தது" என்கிறார் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவா.

பேரூராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, "தற்போது கடைகளில் விநியோகிக்கப்படும் ஒருமுறையே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விற்பனையைக் கண்காணிக்க மைக்ரோமீட்டர் என்ற நவீனக் கருவியின் மூலம் 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகளை கைப்பற்ற இருக்கிறோம். அத்துடன் அபராரதமும் வசூலிக்கப்படும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் கொடுக்கப்படும் பைகள்தான் மிக மோசமான விளைவுகள் கொண்டவை. இதனால் சிலர் அதே தரம் மலிவான பைகளை பச்சை, மஞ்சள் என வேறு நிறங்களில் விற்பனை செய்ய துவங்குகின்றனர். எனவேதான் இந்த நவீனக் கருவியை வைத்து அந்த பிளாஸ்டிக் பைகளின் அளவை சோதிக்கிறோம். மற்ற பிளாஸ்டிக் பைகளும் ஓசியில் வழங்கப்படாமல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பெருநகரங்களில், பெரிய மால்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு 2 ரூபாயிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்" என்கின்றனர்.

"இப்போது பிளாஸ்டிக்கைத் தவிர்க்க மாற்றுப் பயன்பாட்டிற்காக நான் ஓவன் ஃபேக்ஸ்என்றழைக்கப்படும் பைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பைகள் அளவுக்குத் தகுந்த மாதிரி 4 ரூபாய் முதல் கிடைக்கின்றன. இதனை ஐந்து முதல் ஐம்பது தடவைகள் வரை பயன்படுத்தலாம். ஆனால், இதை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை பெருமளவு இது குறைப்பதால் தாராளமாக நான் ஓவன் ஃபேக்ஸைப் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்தையும் விட சிறந்த வழி, துணிப்பைகளைப் பயன்படுத்துவதுதான். இதற்காக துணிப்பைகளைத் தயாரித்து அதன்மேல், ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம், நான் பூமியின் நண்பனாக இருக்கிறேன்போன்ற வாசகங்களை அச்சடித்து விநியோகிக்க ஒரு திட்டம் உள்ளது. கோவையிலிருந்து இந்தப் பைகளை வாங்கி, கடைக்காரர்களை வாங்க வைக்கவும்  திட்டமிட்டுள்ளோம்."

இதெல்லாம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சில என்றாலும் அத்யாவசியப் பயன்பாட்டில் இருக்கிற பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது?

"அதற்கும் வழி உண்டு. காலையில் டூத்பேஸ்ட்டில் துவங்கி, இரவு கொசுக்களை விரட்டப் பயன்படுத்தும் கொசுமேட் வரை மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அதாவது மறுசுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை ஒவ்வொரு வீட்டிலும் தனியாக ஒரு பையில் சேமிக்க வைத்து, பசுமை நண்பர்கள் மூலம் அவை பெறப்படுகின்றன. இந்தப் பசுமை நண்பர்களே அந்த பிளாஸ்டிக் குப்பைகளை மக்களின் கண் முன்னே எடைபோட்டு அதற்கான விலையைக் குறிப்பிட்டு ரசீது கொடுக்கும் முறையையும் அறிமுகப்படுத்த உள்ளோம். பழைய பிளாஸ்டிக் கழிவுகளை எடைக்குப் போடுவது என்பது ஏற்கெனவே மக்களிடம் உள்ள பழக்கம்தான். அதனை முறைப்படுத்துவதற்காக இத்தகைய முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்" என்று கூறினார் பசுமை நண்பர்களில் ஒருவரான குமார்.

இவர்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. அது 1,000 வீடுகளில் 100 வீடுகளில்தான் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுக்கிறார்கள். மற்றவர்கள்  எல்லா குப்பையையும் ஒன்றாகக் கலந்தே கொடுக்கிறார்களாம். அதனை பசுமை நண்பர்களே பிரித்தெடுக்க வேண்டியுள்ளதாம். மக்களுக்குத் தாங்களே குப்பைகளைப் பிரித்துக் கொடுப்பது என்ற பொறுப்பு வர வேண்டும். இப்படிச் செய்தாலே 90 சதவிகிதம் குப்பைகளை ஒழித்துவிட முடியும் என்கிறார்கள் அவர்கள்.

மேலும் பிளாஸ்டிக்கை தனியே பிரித்து எடுக்க முடியாத இரண்டறக் கலந்த குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் பகுதிகளில் கொட்டப்படுகின்றன. ஏழு கி.மீ. சுற்றளவில் வீடுகள் இல்லாத இடமாக இருக்கும் பகுதியில்தான் குப்பைகள் கொட்டப்பட வேண்டும். ஆனால், இவ்விரண்டு பகுதிகளிலும் வீடுகள் வந்துவிட்டன. எனவே குப்பைகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பசுமை நண்பர்களின் அக்கறையான வேண்டுகோள்.

பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டுவரும் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மாங்காட்டில் 7 வார்டுகளில் பசுமை நண்பர்கள் உதவியுடன் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது. அந்தந்த  ஊர்களில் நிரந்தர வேலையில்லாமல் இருப்பவர்களை இந்நிறுவனம் கண்டறிந்து அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது. இவர்களுக்கு மதிப்பூதியமாக பஞ்சாயத்திலிருந்து 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. குப்பைகள் வாங்கும் வீடுகளில் மாதத்திற்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சில வீடுகளில் பணம் தரத் தயங்குவார்கள். ஆனாலும் குப்பையை மட்டுமாவது கொடுங்கள் என்று பசுமை நண்பர்கள் வாங்கி, அவற்றை மக்களின் கண்முன்னே  பிரித்துப் போடுகிறார்கள். அப்போதாவது அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும் என்கின்ற அக்கறையில். "சின்ன விஷயம்தான்... சமையலறையில் ஒரு குப்பைத் தொட்டியும், ஹாலில் ஒரு குப்பைத் தொட்டியும் வைத்துக்கொண்டு குப்பைகள் போடும்போதே பிரித்துப் போட்டுவிட்டால் எல்லாருக்கும் வேலை சுலபம். பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கும், சாலைகள் போடுவதற்கும் பயன்படுத்தினால் சாலையும் நன்றாகும். வீடும் சுத்தமாகும். தெருவும் சுத்தமாகும். பின் என்ன நாடும் சுத்தமாகும்" என்கிறார் குமார்.

மாங்காடு, காமாட்சியம்மன் கோயிலுக்கு புகழ் பெற்றது என்ற வார்த்தை மாறி, பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன்மையானது என்ற பெயரைப் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.


- இவள் பாரதி.
நன்றி: புதியதலைமுறை

Sunday, 25 December 2011

ஏன் இந்த கொலைவெறி - கேரளமே...






இரவு மணி 8.08.
101 டிகிரி காய்ச்சலும், 360 டிகிரி தலைசுற்றலும், தலைவலியும், உடல்வலியும், ஜலதோஷமும், இருமலும் ஒட்டு மொத்தமாய் பின்னியெடுக்க இரண்டு நாட்களாய் மருத்துவரிடம் சென்று வருகிறேன். இதோ இப்போதும் மருத்துவமனை சென்று விட்டு வீட்டினுள் நுழைகிறேன்.
ஒரு தொலைபேசி அழைப்பு.
முல்லைப் பெரியாறு அணை விவாகரத்தை முன்னிட்டு ஜெய்ப்ரகாஷ் என்பவர் தீக்குளித்து தேனி மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது தேனிமாவட்ட செய்தியாளர் ஜெயபால் சொன்ன துயரச் செய்தி.
செய்தி காதில் விழுந்த மறு நொடி முதல் மனம் தேனிக்குள் மீண்டும் நுழைந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி குறித்தும், கேரளாவிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களின் உண்மை நிலவரம் குறித்தும் அறிய தேனி மாவட்டம் முழுதும் பயணம் செய்திருந்தேன்.
புதிய தலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்த பிறகு வெளியூர் சென்று செய்தி சேகரிக்கும் முதல் பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை. தேனி மக்களின் மனநிலை கொதிப்படைந்து இருப்பதை அங்கு கண்ட அத்தனைக் காட்சிகளும் சாட்சியாக தெரிவித்தன.
தேனி மாவட்ட கிராம மக்களிடம் பேசும் போது எல்லாம் எனது பதிவுக் கருவி பதிவு நிலையில் இருந்தது. கம்பத்தில் ஒரு டையில் பேசிக் கொண்டிருக்கும் போது கடைக்குள் நுழைந்த ஒருவர் நிருபர் என கேள்விப்பட்டதும் தனது குமுறல்களைக் கொட்டினார்.
கேரளாவுல இருந்து இங்க வந்து படிக்கிற பசங்கதாங்க ரொம்ப அதிகம். அதுல கேரளாக்காரன்தான் மொத மார்க் எடுக்குறான். அப்டினா நம்ம தமிழ் பசங்க சிலர் விட்டுக் கொடுத்தோ அல்லது அவனுக்க ஏறி மிதிச்சோதான மேல வர்றானுங்க. அதெல்லாம் கேரளாக்காரனுங்களுக்கு தெரியல. இந்தியாவுலயே மெத்த படிச்ச மாநிலம்னு பேரெடுத்துருக்கானுங்க. படிச்சவன் நடந்துக்குற மாதிரி நடந்துக்குறான். கேரள அரசியல் லாபத்துக்காக இத்தனை நாள் அண்னன் தம்பியா, மாமன் மச்சானா பழகிக்கிட்டு இருந்தவங்களுக்கு இடையிலே ஒரு பெரிய பிளவை என்னைக்குமே மீட்க முடியாத விரிசலை உண்டுபண்ணிட்டாங்க. இந்த போராட்டத்துல சில உயிர்கள் போனாதான் தீர்வு கிடைக்கும்னா அதுக்கும் நாங்க தயார். நாங்க செத்தாலும் நாளைக்கு எங்க பிள்ளைங்க நல்லாருப்பாங்க.
இப்படி பேசிவிட்டு சட்டென்று நகர்ந்து போன அவரின் பெயரைக் கூட கேட்கவில்லை. அருகில் விசாரித்த போதும் அடிக்கடி இங்கு வருவார். பேர் நினைவில் இல்லை என்றார்கள். மீண்டும் அவர் பேசியதைக் கேட்க வீட்டிற்கு வந்து பதிவுக் கருவியைக் கேட்டபோதுதான் தெரிந்தது. அவரது வார்த்தைகள் பதியாமல் போனது என்பது. ஆன போதும் அவரது பேச்சு மற்றவர்களை விடவும் ஆணித்தரமாக இருந்ததால் பதிந்து போயிருந்தது மனதின் ஆழத்தில்.
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10ம் தேதி நீருக்கான உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றை என்ற கருத்தை வலியுறுத்தி இருபது பேர் கொண்ட மதுரை மாவட்ட உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் குழு கம்பத்திற்கு வந்தது. அங்கிருந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு எல்லா வகையிலும் சட்ட ரீதியாக உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகுறித்து வழக்கறிஞர்கள் சொல்லும் கருத்துக்களை கவனித்தால் கேரள அரசின் திட்டமிட்ட அராஜகப் போக்கை நன்கு புரிந்து கொள்ளலாம்.
மத்திய நீர்வள ஆணையத்தின் இரண்டு தலைமை பொறியாளர்கள் மத்தியபிரதேச மாநில அரசின் அணைப்பாதுகாப்பு இயக்குனர் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் இரண்டு பிரதிநிதிகள் அடங்கிய குழு முல்லைபெரியாறு அணை குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கையில் கேரள அரசின் பிரதிநிதிகள் தவிர அனைவரும் ஒப்புதல் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
1979ல் 152அடியாக இருந்த போது பேச்சுவார்த்தைக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் டெல்லி சென்றார். அப்போது அணையின் நீர்மட்ட்த்தை 142 அடியாக குறைப்பதற்கு சம்மதம் அளித்திருந்தார். ஆனால் 136அடியாக குறைத்துவிட்டது. (ஆனபோதும் இன்றுவரை 152அடிக்கும் சேர்த்தே தமிழக அரசு குத்தகைப்பணம் கட்டிவருகிறது. முன்னர் ஐந்து ரூபாயாக இருந்த குத்தகைப்பணத்தையும் உயர்த்தி 30ரூபாயாக கொடுத்து வருகிறது.)
இதை எதிர்த்து 2001 ல் முல்லை பெரியாறு சுற்றுசூழல் குழு வழக்குபோட்டது. பல்வேறு விவாதங்களுக்கு பிறகு 2006ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் மக்களின் பாதுகாப்புக்கு கேடு விளையுமா? என்ற கேள்வி உட்பட ஐந்து கேள்விகளுக்கு உச்சநீதி மன்றம் பதிலளிக்கையில்.. “அணையின் சுற்றுசூழலுக்கும் காட்டில் வாழும் புலிகள் யானைகளுக்கும் மிகவும் நல்லது. நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட அதிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியுமா என்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மிகவும் ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்புக்கு எந்தவித சீர்குலைவும் இல்லை கேரள அரசின் எப்போதும் முட்டுக்கட்டை போடும் அணுகுமுறையே மேற்கொள்ளப்பட்டதே அறிக்கையில் தெளிவுபடுத்துகின்றன. மேலும் அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு முட்டுக்கட்டையாக இருக்க்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த 10நாட்களில் கேரள பாசன மற்றும் நீர்பாதுகாப்பு சட்டம் 2003ல் கேரள அரசு சட்ட்த்திருத்தம் கொண்டு வந்தது. அதில் கேரளாவின் 22அணைகள் குறித்த முழுக்கட்டுபாடு அனைத்தும் மாநில அரசுக்கே சொந்தம் அதில் முதல் அணையான முல்லை பெரியாறு அணையின் மொத்த அடியே 136தான் என்றும் கூறப்பட்டது. இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். அதற்கு கேரள அரசு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்ட்து. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் எழுந்த பிரச்சனை காரணமாக இரு மாநிலமக்களும் சுமூகமான உறவை இழந்து, இங்கு கேரளமக்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் அங்கு தமிழக மக்களை அடித்து துன்புறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு ஒரே தீர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கோரி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
பென்னிகுக்கின் இரண்டாம் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் தன்னுடைய தாத்தாவும் பாட்டியும் சொத்துக்களை விற்று கட்டிய முல்லை பெரியாறு அணையை பார்வையிட 31.10.2003 ல் வந்தார். 01.11.2003 ல் அணைக்கட்டில் நிருபர்களிடம் பேசும் போது, “முல்லை பெரியாறு அணை எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறுபட்டு எந்த செயலும் செய்யக்கூடாது. தென் தமிழக மக்களின் நலனுக்காகவே இந்த அணை கட்டப்பட்ட்து. அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால் கர்னல் பென்னிகுக்கின் ஆத்மா சாந்தியடையாது என்று மனம் உருகிப்பேசினார்.
பணப்பயிர்களான தென்னை ரப்பரை பயிர் செய்யக்கூடிய கேரளாவிற்கு அரிசி முதல் அத்தனை பொருட்களும் தமிழகத்தில் இருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது கேரளம். அதிகமான நீர் கடலில் கலக்கிறது அப்படி வீணாகும் தண்ணீரைக்கூட தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசை கண்டிக்கிறேன் என்று சாகித்ய அகடாமி விருது பெற்ற மலையாள இலக்கிய வாதி பால் சக்காரியா 19.01.2003 ல் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் உற்பத்தியாக கேரள மாநிலத்தில் ஓடும் நதிகளுக்கு தமிழகம் 93 டி.எம்.சி தண்ணீரை அளிக்கிறது. கேரளாவில் உற்பத்தியாகி தமிழகத்திற்கு அளிக்கப்படும் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கப்பட்டால் 10.6 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைக்கும். பரமிக்குளம் ஆழியாறு திட்டப்படி நமக்கு 32.5 டி.எம்.சி நீர் கிடைக்கிறது. இதன் மூலம் தமிழகம் கேரளத்திற்கு அதிகப்படியாக 50.2 டி.எம்.சி தண்ணீரை அளித்து வருகிறது. தமிழ் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் வாழ்கிறார்கள். ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு 1,700 கனமீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகல் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு ஓராண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால் பெரியாறு அணையில் கேரளத்திடம் நாம் கேட்பது 126மில்லியன் கனமீட்டர் நீர் மட்டுமே. நம்மிடம் இருந்து இதைவிட பல நூறு மடங்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும் உச்ச நீதிமன்ற ஆணையின் படியும் உரிமையான நீரை விட்டுத்தர மறுக்கிறது என்று பழ நெடுமாறன் ஒர் பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அமெரிக்கர்கள் நடித்து கேரளாவைச் சேர்ந்த சோகன் ராயால் இயக்கப்பட்ட டேம் 999 படத்திற்கு தமிழகம் தடை விதித்திருக்கிறது. இதற்கு சோகன் ராய் அளித்த பேட்டி ஒன்றில் “சீனாவில் 1975ம் ஆண்டு பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதே அபாயம் இப்போது 100ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனை காரணமாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த பட்த்தில் முல்லை பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லை பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்களும் தான். என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமலும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அறியாமலும் கூறியிருக்கிறார். கடந்தமாதம் நவம்பர் 27ம் தேதி வெளியான டேம் 999 படம் கேரளமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதன் விளைவாகவே அங்கிருக்கும் தமிழர்கள் தோட்ட்த் தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். குமுளி காவல் நிலையத்திற்கு முன்னால் ஒரு ஃபிளக்ஸ்போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருபக்கம் அணை உடைந்து மக்கள் அடித்துசெல்லபடுவது போலவும், மறுபக்கம் கேரள மக்கள் தண்ணீர் இன்றி வரட்சிக்கு தள்ளப்படுவது போலவும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வை தூண்டிவிட்ட சோகன் ராய்க்கு அம்மாநில அரசு முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் விருது வழங்கி சிறப்பிக்க இருக்கிறது.
தமிழகத்தின் பலபகுதிகளிலும் கேரளக்காரர்களின் முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் கோல்டு லோன் லிமிடட், ஜோய் ஆலுகாஸ் உட்பட பல வியாபாரத்தளங்கலும் வர்த்தக நிறுவன்ங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. ஒரு வேளை அணை உடைந்தால் அதிலிருக்கும் தண்ணீர் முல்லை பெரியாறு அணையை விட பெரிய அணையான இடுக்கி அணையில் சேகரம் ஆகிவிடும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கேரள அரசு சொல்வது போல அணை உடைந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது.
அணையை சுற்றி பல நிறுவனங்கலும், உணவகங்களும், மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இது சட்டத்திற்கு விரோதமானது. எனவே அணையின் குறிப்பிட்ட சுற்றளவில் மக்களோ நிறுவன்ங்களோ செயல்படுவதற்கு அனுமதி கிடையாது. இதன் படியும் பார்த்தால் கேரளா அரசின் நாடகத்திற்கு மேலும் வலுக்கூடுகிறது.
முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக திரளும் தமிழகத்திற்கு முன்னால் கேரளா மிரண்டு போயிருப்பதால் தான் அங்கிருந்து வெளியேறும் மக்களிடம் நாங்கள் அடித்த்தையோ வன்முறையில் ஈடுபட்டதையோ வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். இதற்கு பலத்த காயங்ளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சொந்த ஊரான பண்ணைபுரம் திரும்பி இருக்கும் கேரளாவில் வேலை செய்யும் சூப்பர்வைசரான ஜி.விஜயகுமார் அவரது மனைவி சிவகுமாரியும் சான்றாக இருக்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் இப்படி சூடுபிடித்தும், தேனி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண் அவர்கள் காணவில்லை என்றும் மக்கள் அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த அவர் தேனி வந்தபோது அவரது அலுவலகத்தில் திரண்டிருந்த போலீஸ் படை மக்களிடம் இருந்து அவரைக்காக்க கைது செய்தது. அது ஒரு கண் துடைப்பு என்று மக்களும் அறிந்திருந்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒருவேளை கேரள அரசு தன் பிடியை தளர்த்திக் கொள்ளாவிட்டால் இந்த பசுமையான இடங்கள் வறண்டு போய்விடுமே என்ற கவலையை பிரதிபலிக்கும் வண்ணம் அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. கேரள அரசின் சூழ்ச்சி வெல்லுமானால் என்ற தலைப்பிட்டு இன்று பசுமையும் நாளை வறட்சியுமே சொந்தம் என்பதை குறிக்கும் போஸ்டர் அது.
மீனவர் பிரச்சினை, கூடங்குளம், கூடலூர் வரை ஒவ்வொரு பிரச்சனைக்கும் மக்கள் தனித்தனியே போராடுவதை விடுத்து தமிழகம் முழுக்க மக்கள் அணிதிரள வேண்டும் என்பது பலரின் கருத்து. இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில்..
மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு மற்றுமொருவர் தீக்குளித்தார் என வேறொரு நண்பரிடமிருந்து.. மனப்பதட்டம் அதிகமாகிறது.
இன்னுமொரு தொலைபேசி அழைப்போ, தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்தியோ முல்லைப் பெரியாறுக்காக தமிழன் உயிர்விட்டான் அல்லது உயிர் பறிக்கப்பட்டது என்ற செய்தி வராமல் இருக்கட்டும் என்பது மட்டுமே இப்போது இந்த இரவு நேரத்தில் என் பிரார்த்தனையாய் இருக்கிறது.
இவள்பாரதி

Sunday, 12 June 2011

தமிழ்சினிமாவின் போக்கு


தமிழ் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையை பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை ரசிகனின் மனதில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிக குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்கு பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை பெருகிப் போயிருக்கிறது. 

காதலும் வீரமும் தான் தமிழனின் அடையாளம் என்றாகிவிட்ட நிலையில் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு படம் எடுப்பது சாத்தியக் குறைவு எனும் பிம்பம் படர்ந்திருக்கிறது. இங்கே வீரமும் வன்முறையும் கூட தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். வாள்போர், வில்போர் என்று போரில் தனது வீரத்தை வெளிப்படுத்திய சமூகம் சொந்த பிரச்சினைகளுக்காக ஊரையே பழிவாங்குவதும், தனது தேவைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதும் வன்முறை எனக் கொள்ளப்பட்டால் நாம் இன்னும் காட்சி ஊடகத்தை சரியான கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது அல்லது இன்னும் விசாலமானா பார்வைக்கு நம்மை உட்படுத்த வேண்டும் என உணர்த்துகிறது.  

வன்முறை என்பதையும் கூட சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவது , ஒருவரைத் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல. கருத்தியல் ரீதியான ஒவ்வாத மாற்றங்களை சமூகத்தில் திணிப்பதும் கூட வன்முறையின் களம்தான். 

நிழல் உலக வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன் என்று பெண் கடத்தல், தாதாயிசம், பாலியல் வன்முறை, பழிக்கு பழி வாங்குதல் போன்ற கதைக் களங்கள் மூலம் அதிகம் உணரப்படுவது வன்முறைதான். இரண்டரை மணி நேர படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்றோ, இந்த நாயகனைப் போல நடந்து கொள்ளாதீர்கள் என்றோ அறிவுறுத்துவது எந்த அளவுக்கு மாற்றங்களை முன்னெடுக்கும் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது. 

ஆனால் அதே சமயம் வன்முறையின் சாயல் அல்லாத படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கபடாமல் போயிருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரின் படங்களில் வன்முறையின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. அது மக்களின் வரவேற்பையும் பெற்று ஊடகங்களின் பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கின்றன. நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய பாலாவின் படங்களும், ராம், பருத்திவீரன் ஆகிய அமீரின் படங்களும், சுப்ரமணியபுரம்,  ஈசன் ஆகிய சசிக்குமாரின் படங்களும் ஆயுதங்களின் பின்னாலேயே பயணித்து வெற்றியின் பாதையில் சென்றன. 

இவர்களைத் தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்த இயக்குநர்களும் கூட வசூலுக்காக அல்லது வேறுசில காரணத்திற்காக அடுத்தடுத்து வன்முறை நிறைந்த கதைக்களங்களை நாடிச் சென்றனர்.  சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக் குழு படம் நகைச்சுவையோடு கூடிய ரொமண்டிக் கதையைக் கொண்டது. அவரது அடுத்த படமான நான் மகான் அல்ல திரைப்படம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் எவ்வாறு வன்முறையின் பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பதைப் பற்றியது. 

அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற ரொமாண்டிக் படத்தை இயக்கிய கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்ற ஒரு படத்தைக் கொடுத்தது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்கு பதில் அதிர்ச்சியையே வெளிக் கொணர்ந்தது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் இவ்வளவு மோசமானதா என்னும் எண்ணத்தை விதைப்பதாகவே இருந்தது. ஒரு பையன் தன் தந்தையின் தவறான செயல்பாடுகளால் மனரீதியாக உடல்ரீதியாக எவ்வாறு தனது செயல்களை அமைத்துக் கொள்கிறான்? என்று காட்ட நினைத்து சமூகத்தில் இவ்வாறான பிரச்சினைகளும் மலிந்து கிடக்கின்றன என்பதற்கு பதில் அந்த நிலையில் இருக்கும் ஒருவரை அது மேலும் தவறுக்கு தூண்டிவிடுவதாகவே அமைகிறது. 

அப்படியானால் நல்லனவற்றையே எடுத்துக்காட்டி பிரசாரம் செய்ய சினிமாவை ஆயுதமாக பயன்படுத்த வேண்டுமா? என்றால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் எல்லாவற்றையும் விட காட்சி ஊடகம் அளப்பரியது. சில பல தந்திரங்களை திரையில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஒரு ரெஃபரென்ஸாக இருக்கிறது. 

மொழி, அங்காடித்தெரு, அபியும் நானும், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், களவாணி போன்ற படங்களும் இதே சமயத்தில் வெற்றி பெற்றன. மக்களின் ரசனைகள் மாறி வருகிறதா? அல்லது இயக்குனர்களின் எண்ணம்மாறி வருகிறதா? எனும் கேள்விக்கு இருவராலும் பதில் சொல்ல இயலாது.  

ஏனெனில் வெற்றியின் சூத்திரம் அடிக்கடி மாறி வரும் வேளையில் சில விஷயங்கள் அபப்டியே மாறாமல்தான் இருக்கின்றன. இன்பம், துன்பம் இரண்டும் கலந்த வாழ்வோட்டத்தில் இளைப்பாறும் சற்று நேரத்திலாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒருபுறமிருக்க, நிஜ வாழ்வில் ஆக்கிரமித்திருக்கும் அல்லது வெளியே தெரியாமல் இருக்கும் நிழல் உலக கதையையே திரையில் பார்த்து சந்தோஷப்படுவது என்பதும் மக்களின் ரசனை. 

நாம் பார்த்தறியாத, கேட்டறியாத மாந்தர்களின் கதைகள், அவர்களின் வாழ்க்கை முறை இதையெல்லாம் ஆதரிக்கிற காலத்தில் நம்ப முடியாத த்ரில்லர் படங்களையும் ரசிக்கிறது மனம். லிங்குசாமியின் சண்டக் கோழி படத்தில் விஷாலின் அடிதடியைப் பார்க்கும் போது பரம்பரையாக வன்முறையின் ஜீன் கடத்தபடுகிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார்கள். 

கதாநாயகன் செத்துப் போவது அல்லது கதாநாயகி செத்துப்போவது அல்லது இருவரும் செத்துப் போவது, கதையின் முக்கியகதாபாத்திரம் செத்துப் போவது இப்படியான முடிவுகளைக் கொண்ட படங்களை திரைக்கதை ஓரளவு நன்றாக இருக்கும் பட்சத்தில் அது வெற்றி பெற்றுவிடுகிறது. பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரின் படங்களில் இத்தகைய முடிவுகள் எழுதப்பட்ட சட்டம். 

சிறுவயதில் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருக்கும் போது உடன் சேர்ந்து நாமும் அழுதால் அழுகையை நிறுத்திவிடுகிறது. திடீரென எதிர்பாரா வேளையில் எதிரே இருப்பவரின் கன்னத்தில் அடித்துவிட்டு அந்த அதிர்ச்சியை பார்த்து ரசிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கக் கூடிய வன்மம் தீர்க்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பே வன்முறையான கட்சியமைப்பைக் கொண்ட படங்களின் தொடர் பயணத்திற்கு காரணம். 

இதையும் கடந்து ராதாமோகன் போன்ற இயக்குனர்கள் மொழி, அபியும் நானும் போன்ற படங்களை எடுக்கும் போது மக்கள் ஆதரவு கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆடுகளம் படத்தின் கதைவேறாக இருப்பினும் அதில் ஜெயபாலன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதைப் போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. அங்காடித்தெரு படத்தில் நம்பிக்கையூட்டும் விதமான காட்சியமைப்பு இருந்ததே அந்த படத்தின் வெற்றி. ஆனாலும் அதில் வரும் இரண்டாவது கதாநாயகி இறந்து போவாள். இதில் ஒரு கதாபாத்திரம் புதிதாக பிறப்பது போல் வரும் காட்சிகளை விட இறந்து போவது போல் காட்டும் போது நாமும் பச்சாதாபத்துடன் இறங்கிவருகிறோம். இதையெல்லாம் வன்முறை என்று சொல்ல வேண்டியதில்லைதான். சமீபத்திய வெற்றியெனக் கொண்டாடப்படும் கோ படத்தில் இருக்கக்கூடிய விஷயமும் வன்முறைதான். அதன் மூலம் உருவாகும் பச்சாதாபம்தான்  படத்தின் வெற்றி.

வாழ்க்கையின் மிக அரிதான கணங்களைப் பதிவு செய்வதைவிட அதனூடே இழையோடும் சோக கணங்களை படம்பிடிப்பதையே மக்களின் ரச்னையும், வெளிவரும் படங்களும் உணர்த்துகிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது. 

பசங்க என்ற படத்தை இயக்கி தேசியவிருதுக்கு வித்திட்ட பாண்டிராஜ் அடுத்து தொட்ட கதைக்களம் பழிவாங்குதலின் உச்சமான வம்சம் திரைப்படம். வன்முறை இல்லாமல் படம் எடுக்க இயலாதா என்பதற்கு பதில் வன்முறையின்றி வெளியான படங்களைக் கவனித்தல் என்பதன் சதவீதம் குறைவு. ரேணிகுன்டா, சிந்தனை செய், யுத்தம் செய் போன்ற படங்கள் சொல்ல வருகிற விஷயத்தைக் கூர்ந்து கவனித்தால் நாம் எதை ஆதரிக்கிறோம் என்பது விளங்கும். 

இதைப் போல ஈரம், யாவரும் நலம் போன்ற த்ரில்லர் படங்களும் மன வன்முறையை பிரதிபலிப்பதாக இருந்தது. இதற்கிடையில் யாரடி நீ மோகினி, ராமன் தேடிய சீதை, திண்டுக்கல் சாரதி, பூ போன்ற படங்களும் வெற்றி பெற்றன எனும் போது பலதரப்பட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வரவேற்கும் மனநிலை நம்மிடம் இருக்கிறது. காதல், பாசம், உறவுச்சிக்கல்கள், வாழ்வியல் பிரச்சினைகள், வன்முறை, பழிவாங்குதல் இவற்றில் காலங்காலமாய் ஊறித் திளைத்த வாழ்வியல் முறையில் பழிவாங்குதலுக்கும், வன்முறைக்கும், காதலுக்குமே அதிக மதிப்பெண் வழங்கபப்டுகிறது என்பதை மறுக்க இயலாது. 

ஆனால் சில விஷயங்களை தமிழ் சினிமா இதுதான் நிஜம் என கட்டமைக்க முயற்சி எடுக்கிறதோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. ஏனெனில் திரையில் வரும் கதாபாத்திரத்தில் ஒன்றாக தன்னை நினைத்துக் கொள்ளும் ரசிக மனம் அவனைப் போன்ற செயல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறது. அரிவாள், வேல், கம்பு, கட்டை இல்லாத படங்களை விரல்விட்டு என்ன? கை காட்டி சொல்வதும் அரிது என்றாகிவிட்டது. பாடலும் அதற்கேற்ப ‘‘நான் அடிச்சா தாங்க மாட்ட‘‘ என்று மிரட்டுகிறது. 

புதிய களங்களைத் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களை நாம் ஆதரிக்காத போது ஒரே களத்தில் உருவாகும் படங்களை நாம் கொண்டாடும் போது இந்த வன்முறையின் பயங்கரமும், பழிவாங்குதலின் தீவிரமும் நம்மையும் பீடித்தபடிதான் இருக்கப்போகிறது. தமிழ்சினிமா வன்முறையைக் கட்டமைக்க அதன் ரசிகர்களான நாமும் ஒரு காரணம் எனும் போது இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாமேதான் முடிவு செய்ய வேண்டும். நாம் முன்னெடுக்கும் ரசனை மாற்றம் நிச்சயம் தமிழ்சினிமாவின் ரசனையை மாற்றும். விதிகளைக் கட்டுடைக்கும்.  

இவள் பாரதி

Tuesday, 17 May 2011

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட்ட நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் - விலை 150
ஈழத்தில் தன் மகனை போரில் இழந்துவிட்ட தாயின் வேதனை ததும்பிய கவிதை நடையிலான நாவல்
முகங்கள் - தொகுப்பு ஜீவகுமாரன் - விலை 250
ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லாஹ் - விலை 100
பல்துறை பற்றி பேசும் செறிவு மிகுந்த கட்டுரை தொகுதி
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா - விலை 80
ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள் அடங்கிய கட்டுரை தொகுதி
வெள்ளைப் பொய்களும் கருப்பு உண்மைகளும் - இவள் பாரதி - விலை 50
நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி - விலை 100
நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி விலை 100
இவள்பாரதியின் மேற்கண்ட நூல்கள் காதலை பேசக் கூடிய கவிதைகள். காதலாக பேசும் கவிதைகள்
பின்குறிப்பு 
இங்கு வாங்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் இணையான நூல் ஈழத்தில் உள்ள நூலகங்களுக்கோ, பாடசாலைக்கோ இலவசமாக வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு


தொடர்புக்கு:
விஸ்வசேது இலக்கிய பாலம்,
visvasethu@gmail.com
cell: 95661 10745

Saturday, 14 May 2011

அறுவடை செய்

விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும் 
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் 
களைஎடுக்காமல் 
அறுவடை செய்துதான் ஆக வேண்டும் 
புற்களையும் பூண்டுகளையும்..

நீங்களே விதைத்தீர்கள்

என்ன நடந்துவிட்டது 
இப்படி இடி விழுந்தது போல் 
அமர்ந்திருப்பதற்கு? 
உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது
கை வந்து சேரும்.. 
பேசாமல் போய் வேலையை பாருங்கள்.. 
==========
நீங்களே விதைத்தீர்கள்.. 
விளைச்சலில் 
களை வந்துவிட்டதென்று 
கவலை கொண்டால் எப்படி?

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே என்றும் 
மறக்க முடியுமா என்றும் 
என்னதான் கதறியும் 
மறக்கக் வேண்டியதை நினைவூட்டி 
நினைக்க வேண்டியதை மறக்கடித்து 
தலை கீழ்விகிதங்கலாய் 
கிழிந்து தொங்குகிறது 
சில மாற்றங்கள்..

மறக்க முடியுமா?

சொன்னதைச் செய்தோம் என்று அய்யாவும்
சொல்லாததையும் செய்தார்கள் என்று அம்மாவும்
என்னதான் செய்கிறார்கள் என்று மக்களும்
வாழ்க தமிழகம்
*******
எல்லாவித கருத்துக் கணிப்புகளையும்
தகர்த்துவிட்டு
ஆள்கிறது மக்களின் மறதி
எந்தவித நல்ல மாற்றங்களும்
வரப்போவதில்லை
என்பது மக்களின் உறுதி
*******
பந்தயத்தில்
வெற்றி என்பது
வலிமையால் அல்ல
எதிரியின்
பலவீனத்தாலும் வாய்த்துவிடுகிறது.
*******
ஒரு கண்ணில் புரையும்
மறு கண்ணில் திரையும்
விழுந்தாகிவிட்டது
மூன்றாவது கண்ணுக்கு
இடம் தேடியநிலையில்
புரை விழுந்த கண்ணிலே
போய் குடிகொண்டது
மூன்றாவது கண்..
எந்த கண்ணும் வழிகாட்டாது
கையால் தடவியே செல்கின்றன..
கால்கள் தட்டுத் தடுமாறி..
எங்கே செல்லும்
இந்த பாதையென அறியாமல்..
*******

Wednesday, 4 May 2011

வானம் - கொஞ்சம் புதிய கோணம்

எப்போதும் போல் ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக்காட்சிகள், அம்மா செண்டிமென்ட், தீவிரவாதம், குத்துப்பாட்டு என்று எடுத்தாலும் திரைக்கதை பயணிக்கும் திசையில் சற்று புதிய கோணத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் க்ரிஷ். இவர் தெலுங்கில் எடுத்து வெற்றி பெற்ற 'வேதம்'  படத்தின் ரீமேக் தான் தமிழில் வானமாகியிருக்கிறது. 

கதைச்சுருக்கம்
மதவெறி பிடித்த இந்துக்களால் தாக்கப்பட்டு கர்ப்பத்திலிருக்கும் தன் குழந்தையை இழக்கிறது பிரகாஷ்ராஜ் - சோனியா அகர்வால் தம்பதி. தன் அண்ணியின் குழந்தை இறந்து போனதால் வீட்டைவிட்டு ஓடிப்போகும் நசீர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைக்க பிரகாஷ்ராஜும் சோனியாவும் சென்னை வருகின்றனர். 

வட்டிப்பணம் கொடுக்காததிற்காக தன் மகனை உப்பளத்தில் வேலைக்கு இழுத்துச் செல்லும் பண முதலையிடமிருந்து தன் மகனை மீட்க போராடும் சரண்யா தனது கிட்னியை விற்க தன் மாமனாருடன் சென்னை வருகின்றார்.
தன் பரம்பரையில் எல்லோரையும் போல தன் மகனும் ராணுவ வீரனாக வேண்டும் என்று ஆசைப்படும் தாயிடம் தான் பாடகனாக, கிடாரிஸ்டாக வேண்டும் என்று தன் குழுவோடு முயற்சிக்கும் பரத் அண்ட் க்ரூப் சென்னைக்கு ஒரு லைவ் நிகழ்ச்சிக்காக வருகிறது. 

பாலியல் தொழிலை தனியாக தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டு தன் அக்காவுடன் அனுஷ்கா சென்னைக்கு வருகிறார். 

அறநூறு கோடிக்கு சொந்தக்காரியான பெண்ணை பொய் சொல்லி காதலிக்கும் சென்னையிலிருக்கும் குப்பத்து இளைஞன் சிம்புவின் கதை. 
இப்படி ஐந்து திசைகளில் பயணிக்கும் கதையானது மருத்துவமனையில்  ஒரே புள்ளியில் இணைகிறது. பெங்களூர், தூத்துக்குடி என்று வெவ்வேறு ஊர்களில் தொடந்தும் கதை சென்னைக்கு எப்படி வந்து சேர்க்கிறது? அவர்களின் நோக்கம் நிறைவேறியதா? மருத்துவமனையில் வைக்கப்பட்ட தீவிரவாத தாக்குதலில் எல்லோரும் தப்பினார்களா? என்பதே மீதி கதை. 


படத்தின் பலம்
படம் ஆரம்பிக்கும் போதான டைட்டில் கார்டு அனிமேஷனை பாராட்டலாம். 
சிம்புவுடன் சந்தானம் வரும் காமெடிக் காட்சிகள் (செயின் திருடும் காட்சிகள், போலீஸ் ஸ்டேசனில் பேசும் காட்சிகள்)
ஆங்காங்கே நறுக்கு தெறித்த வசனங்கள். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பாத்ரூம் இருக்கு நாங்க எங்கையா போவோம்? - திருநங்கை பேசும் வசனம்
பொய் சொல்றது ஈசி. ஆனா உண்மை பேசுறது கஷ்டம் - சிம்பு பேசும் வசனம்
அப்பாவிகளை கொடுமைப்படுத்துற எல்லாருமே டெரரிஸ்ட்தான் - பிரகாஷ்ராஜ் வசனம்
போலீஷை நம்பக் கூடாது. குழந்தையைக் காணாம்னு கம்ப்ளைன்ட் கொடுத்தா பொண்டாட்டியைக் காணாம போகப் பண்ணிடுவாங்க - கணேஷ் பேசும் வசனம்
இவரு பெரிய பாரதிராஜா. ஸ்க்ரீனுக்கு பின்னால இருந்து ஒளிஞ்சு பாக்குறாரு - சந்தானம் பேசும் வசனம்
பணம் இருக்குறவன் சிரிக்க மாட்டான். விசில் அடிக்க மாட்டான். ஜாலியா அனுபவிக்க மாட்டான். போறப்ப பணத்தை எடுத்துட்டா போகப்போறான் - சந்தானம்
உங்க கனவுகளை ஆசைகளை எங்க மேல திணிக்காதீங்க - பரத் பேசும் வசனம்
நாங்க கழட்டிட்டு செய்ற வேலையை நீ யூனிபார்ம் போட்டு செய்றியே, வெக்கமா இல்லை - அனுஷ்கா பேசும் வசனம். 
இப்படியாக வசனங்களுக்கு க்ளாப்ஸ் பறக்கிறது. 

யுவனின் பாடல்கள். அதிலும் குறிப்பாக 'தெய்வம் இருப்பது எங்கே' என்ற தீம் பாடல் அருமை. அதன் வரிகளும். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள். சரண்யா, சரண்யாவின் மாமனார், பிரகாஷ்ராஜை கைது  செய்யும் காவல்துறை அதிகாரி, பரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சிங் இப்படியான கதாபாத்திரங்கள் பேசப்படும் படி இருக்கின்றன. எப்போதும் காதல் செய்து திருமணத்தில் முடிந்து, அல்லது காதல் நிறைவேறுவது அல்லது தோற்று வேறு ஒரு பெண்ணை மணப்பது   இப்படியான சலிப்பில் இருந்து சற்றே விலகி க்ளைமாக்சில் வித்தியாசம் காட்டி இருப்பது இவையெல்லாம் படத்துக்கு பலம். 

படத்தில் பலவீனம்
படம் ஆரம்பித்து ஒருமணி நேரம் வரை கதை எந்த திசையில் போகிறது என்பது தெளிவாக புரியாதது.

முஸ்லீம்களையே எப்போது தீவிரவாதிகளாகக் காட்டுவது. அதை ஒரு முஸ்லீமே எதிர்ப்பது போலவும் காட்டுவது.  பாடல்களில் கண்ணைக் கூசச் செய்யும் ஒளிப்பதிவுக் காட்சிகள். சில கிளிஷே காட்சிகள். சினிமாவுக்கான சில பார்முலாக்கள். தேவையில்லாத கிளாமர் காட்சிகள்.

ஆனபோதும் ஆண்டனியின் எடிட்டிங் க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பை அதிகப்படுத்துகிறது. படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டைப் பெற்றுத்தரும். 

வானம் - கொஞ்சம் புதிய கோணம்.
-- 
இவள் பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?