Wednesday, 22 October 2008

இது பிரிவின் காலம்

கோபத்தில் உன்னால்
உதிர்க்கப்படும்
சிற்சில செயல்கள்தான்
சமருக்கான
அழைப்பாக இருக்க்கிறது...
-------------------------------
போர்க்களத்தில்
நிற்குமென்னை
பூச்சூடி அலங்கரித்து வரச்
சொல்கிறாய்...

எனக்கான அணிகலனே
தைரியம் என்பதை
மறந்து போகாதே...
----------------------
பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்..

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...
-----------
முதுகுக்குப்பின்
வார்த்தைகளால் அடிக்கும்
உன்னை விடவும்
நேருக்கு நேராய்
பார்வையால் அறையும்
என் எதிரி மேலானவன்..
----------------------------
உனது
சின்னக் கிறுக்கல்
பெரிய சறுக்கலை
தருவிக்கிறது...

சில சந்தர்ப்பங்களில்
எதிர்பாராத கிறுக்கல்கள்
சின்ன அதிர்வலையைத்
தோற்றுவித்து அடங்குகிறது..
-----------------------------------
நிகழ்வுகளை
பதிவு செய்வதற்காகவே
பயணப்பட்டதில்
காலம் முன்மொழிய
சூழல் வழிமொழிய
புதிய அனுபவமொன்று
அந்நிகழ்விற்கு தலைமை ஏற்றது...
----------------------------------------

கண் பேசும் கவிதைகள் -3

பார்வையாலே
சொட்டுச் சொட்டாய்
நனைத்து
வெப்பமூட்டுகிறாய்...
-------------------------
நீ முட்டாள்
என்பதற்காகவே
அறிவிலியாய்
அறியத் தருகிறேன் என்னை...
-----------------------------------
உனது நினைவுகள்
பௌர்ணமியாய்
தொடங்கி
பௌர்ணமியாய்
முடிகின்றன..
வளராமலும்...
தேயாமலும்...
----------------
வியர்ப்பதற்கே
காரணமானவனே
விசிறியும் விடுகிறான்...
----------------------------
இப்போதெல்லாம்
கவிதை என்றாலே
நினைவுக்கு
வந்துவிடுகிறது..
உனக்கு என் முகம்...
------------------------
நண்பர்களிடம்
கெஞ்சிக் கூத்தாடிக்
கைபேசி கட்டணத்தைக்
கட்டி விடுகிறாய்...

உனது அழைப்பை
நான் பெறவும்..
எனது அழைப்பை
நீ ஏற்கவும்...
---------------


தேனூறும் எண்ணம்

ஒருமுறை
கன்னத்தில் ஒன்று கேட்டு
நீ அடம்பிடித்த போது
என் உதட்டில்
பட்டம்பூச்சியொன்று
நொடியில் அமர்ந்து போனது...

நான் உனக்கு தராததைவிட
அது என்னிடம் பெற்றுச்
சென்றதாகக்
கோபித்து நாள் முழுவதும்
தோட்டத்தில் அதனைத்
துரத்தினாய்...

பின் எப்பொழுதாகினும்
எங்கேனும் அதன் இனத்தைப்
பார்க்க நேர்ந்தாலே
நமது எண்ணங்களில்
தேனூருகிறது...

கண் பேசும் கவிதைகள் -2

பயணங்கள்
கவிதைகளின்
தாய் வீடு போலும்...

குதூகலத்துடன்
வந்து ஒட்டிக்
கொல்கின்றன...

எத்தனையோ நட்புகளுக்கும்
எத்தனையோ காதலுக்கும்
களம் அமைத்த
இரயிலின் இருக்கைகள்
புனிதப்படும்...

கிளைகளுடன்
மீண்டும் பயணிக்கையில் ...
---------------------------------
காத்திருப்புகளில் கூட
பருவம் தோன்றுகிறது...

காதலின் காத்திருப்பு
கோடையாயிருக்கும்...

நட்பின் காத்திருப்பு
வசந்தமாயிருக்கும்...
-------------------------
ஆடை மாற்றி ஆடை மாற்றி
அழகு பார்த்த போதில்
மனமும் தன் ஆடையைக்
கழற்றிக் கொள்ள ...

பாய்ச்சலுக்குப் பதுங்கும்
புலியாய் நரம்புகள் முறுக்கிக்
கொள்ள வேகம் பீறிட்டது...

சற்று நேர
அடங்குதலுக்குப் பின்...
ஒளியுண்டு நிமிர்ந்தாய்
கவியத் தொடங்கியது
என் மீது இருள்...
-----------------------
*முதன் முதலாய்
நாம் பயணித்த
ரயில் கடந்து போகிறது
இரைச்சலுடன்...

உள்ளுக்குள்
நிசப்தமாய்
நம் நெருக்கம்...
-------------------------

கண் பேசும் கவிதைகள்-1

*உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட எல்லைகள்
வெளியின்றியே திரிகின்றன
இன்னமும்...
------------------------
*இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம்...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...
---------------------
*காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை

நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப் பற்றி
பேசியபடி இருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...
--------------------------------
*ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை
நம்பிக்கை..
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப் படுவதே
நம்பிக்கை...

ஒருமுறை
ஊற்று எடுப்பதல்ல
காதல் ..
ஒவ்வொருமுறையும்
பிரவகிப்பதே காதல்...
------------------------

Tuesday, 21 October 2008

பண்டிகை

பண்டிகை நாட்களின்
முன்பாக
அலைஅலையாய்
திரளும் மக்களில் நானுமோர்
புள்ளியாய் நகர்கிறேன்...

விலையை விசாரித்து
விலகிப் போகும்
கடைகளின் எண்ணிக்கை
ரூபாய் நோட்டுக்களை விட
அதிகம்..

சாலையோரக் கடையில்
மலிவாய் சிலதை
பொறுக்கியபடி
ஆறுதலைடையும்
ஆர்வம்...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலையின்
எந்த திசையிலிருந்து வருமென்று
யூகிக்க முடியாத தருணத்தில்
பட்டென்று சிறகுகளால்
தட்டிப் போகும்
பட்டாம்பூச்சிகள் ...

பரவசப்பட இயலாத
பதட்டத்தில்
பாதுகாப்பாய் வண்டியோட்டுவதில்
கவனம் குவிய
ஆழ்மனதில் சில கேள்விகள்
தேங்குகிறது...

நகரச் சாலைகளில்
கட்டிட இடுக்குகளில்
எங்கே சேகரிக்கும்
தனக்கான உணவை...
உறைவிடத்தை..

கரை ஒதுங்கிய
கேள்விகளுக்கு
வெவ்வேறு பட்டாம்பூச்சிகளின்
உரசல்கள் உணர்த்துகிறது...
இவ்வெளியில் யாவர்க்கும்
வாழ ஒரு இடமுண்டு...

தவறுகள்

தவறுகள்
யாவர்க்கும் தவறுகளாய்த்
தெரிவதில்லை...

தவறுகளை
செய்தவர்களும் தவறுகளை
உணர்வதில்லை ...

தவறுகளை
சரியாக பார்க்கிற தவறும்
குறைந்தபாடில்லை..

தவறுகள்
புரிகிற தவறுகளில்
தப்பிப் பிழைக்கிறது
சில உண்மைகள்...

சந்தேகம்தான்...
அந்த உண்மையிலும் தவறுகள்
உயிரோடிருக்கலாம்..

நேசிப்பின் பரிமாணம்

படித்தபடியிருந்த
புத்தகத்தின் முனையில்...

தானே வந்தமர்ந்த
சின்னஞ்சிறிய பூச்சியொன்று
உற்றுப் பார்க்குமுன்னே
பறந்து சென்றது...
பக்கங்களையும்
பார்வையையும் கடந்து..

என்ன தேடி வந்திருக்கும்?
எனது உற்றுநோக்குதல்
அதற்கு உயிர்பயம்
தந்திருக்குமோ?

இருக்கலாம்...
நேசிப்பு கூட சில நேரங்களில்
யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது..

நேசிப்பு

நேசிப்பதைக் குறைத்துக்
கொள்ளலாம்..

ஒன்றன் பின் ஒன்றாய்
வீசிஎரியப்படும்
வாசனையற்ற சொற்கள்
மிதக்கின்றன..
கருக்கொள்ளவிருக்கும்
மேக தூசுகளாய் ..

உருண்டு திரண்டு
எந்நேரமும் பொழியக்
காத்திருக்கும் அது..

மென்மையுடன்
வன்மையுடன்
மேகம்
சட்டென்று கொட்டிவிடும்
உனது எல்லையற்ற
எதிர்பார்ப்பின் விளிம்பு வெடித்து..



Saturday, 18 October 2008

காதல் நிஜமானதுதான்..

உன் காதல்பொறாமைப் படும்..

எரிச்சல் படும்..கோபப்படும்..

என் காதல்அன்பைத்தரும்..

கனிவைத் தரும்..பொறுமை தரும்..

இரண்டுமே இருப்பதால்நம்

காதல் நிஜமானதுதான்..

Wednesday, 1 October 2008

தனிமை

அந்த ரயில் நிலையத்தில்
என்னைத் தவிர யாருமில்லையென
சொல்ல முடியாது...

நடுநிசியில்
பொது இடத்தில்
தனியே இரவைக் கழிக்கும்
வெறுமை யாருக்கும் வாய்க்கக் கூடாது...

எங்கேயோ இருந்து கேட்கும்
நாய்களின் ஓலமும்...
அனைத்துப் போட்ட
சிகரெட் துண்டுகளாய்
சிதறிக் கிடக்கும் மனித உருவங்களும்...

நன்றாகத் திருகி மூடியும்
சொட்டுச் சொட்டாய் ஒழுகும்
நீர்க்குழாயும்..
மின்னொளிகளும்..

ஆங்காங்கே
நடமாடுகிற அறிமுகமற்ற ஆட்களும்
ஊசிமுனை கொசுக்களும்
துர்நாற்றம் வீசுகிற கழிவறைகளும்
போக்கி விடவில்லை
என் தனிமையை..

பேட்டரியில் சார்ஜ் இல்லாத
அலைபேசியும்...
காகிதம் ஏதுமில்லாத நேரத்தில்
அழகாய் எழுதும் பேனாவும் கூட..

கைப்பையின்
கடைசித் திறப்பில்
கைவிட்டு எடுத்தேன் ...
என் தனிமையை நீக்குகிற
அந்த புத்தகத்தை...

Tuesday, 30 September 2008

விளையாட்டு

விளையாட்டாய்
அழுதிருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
சிரித்திருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
பேசியிருக்கிறேன் சில நேரங்களில்..

ஒருமுறை கூட
விளையாடியதில்லை
விளையாட்டை
விளையாட்டாய்...

காதுகள்

சுவர்களுக்கும்
காதுகள் உண்டு
நீ சொன்ன பின்தான்
புரிந்தேன்...

நம் வார்த்தைகளின்
வேகம் தாளாமல்
விரிசல் விழுந்த
சுவற்றைப் பார்க்கையில்!

ரசம்

என் முகம் பார்த்து
கண்ணாடி ரசம்போய் விட்டதென
சொல்லிப் போனாய்...

எண்ணிப்பார்க்கிறேன்
ரசத்துக்கு உப்பு,மிளகு போதுமாவென
யோசித்தே
என் சிந்தனை மழுங்கிப்
போனதை அறியாயோ?

பிடித்த புத்தகத்தை
படிக்க விரித்த மாத்திரத்திலே
பிடுங்கி வைக்கும் உன்
செயலும் ரசம் போனதுதான்...

படுக்கை விரிப்பை சுருட்டி
வைப்பதில் தொடங்கும் என் காலை
படுக்கை விரிப்பை விரிக்கும்
என் இரவு வரை
உனக்காகவே செய்யப்படும்..
என் செயலும் ரசம் போனதுதான்...

ரசம்போன செயல்களில்
ரசம்போன வார்த்தைகளில்
ரசம்போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...

Monday, 29 September 2008

மாறிவிட்டது

மொட்டைமாடி
மறந்திருக்க வாய்ப்பில்லை
இரவின் மடியில்
நிலவின் பிடியில்
நெடுநேரம் பேசியதை...

ரோஜாச் செடிகளும்
நம் நட்பின்
அடையாளமாய்
மொட்டுக்களை
பூக்களாக்கி இருக்கிறது...

சிறகில்லாமல்
அடைக்கலமாய் வந்த
சின்னக் கிளிக்கும்
சிறகுகள் விரியத்
துவங்கியிருக்கிறது...

பருவகால மாற்றங்களுக்கு
பக்குவப்படுத்தப்பட்ட
கற்றாழைச் செடிகளும்
கிளைகள் விட்டிருக்கிறது...

கஷாயத்துக்காய்
அந்தியில் சேகரித்த
வேப்பம்பூக்களில் மீதம்
வேப்பம்பழங்கள் ஆகிப்போனது ..

கருவேப்பிலையும்
முருங்கையும்
காய்க்கத் தொடக்கி விட்டது...

எல்லாமே மாறிவிட்டது
பருவத்தில்..
நம் நட்பைப் போல ..

போதும்

இதுவரை
பேசி கழித்தது போதும்...
கூடிச் சிரித்தது போதும்...
பாடி மகிழ்ந்தது போதும்...
பழகிக் களித்தது போதும்...
என்று கட்டளையிடுவதில்லை
நட்பிற்கு
உன்னைப்போல் யாரும்
காரணமின்றி....

சுபாவம்

என் பூமிக்கு
மழையாக வந்தாய்..
தாங்கிக் கொன்டது
என் பிழையல்ல சுபாவம்..

என்ன செய்ய
என் சுபாவத்தை
பிழையென கருதுவது
சமூகத்தின் சுபாவம்...

விதிவிலக்கல்ல

கலைத்துப்போட்டாய்
மனதோடு என் நினைவுகளையும்...

விதைத்து சென்றாய்
ஆசையோடு என் ஆர்வத்தையும்...

மிச்சமேதுமில்லை
உன்னிடமிருந்து எனக்குள்
என் நேரங்களை
நொறுக்குத் தீனியென
நொடி நொடியாய்
நீ தின்றதைத் தவிர...

அனுமதியின்றி கலைத்து
அனுமதியின்றி விதைத்து
அனுமதியின்றியே
அமைதியாய் சென்றுவிட்டாய்...

என் ஆயுளின்
அர்த்தங்கள் மொத்தமாய்
கரைந்தது உன் பிரிவில்...

என் பெண்மையினை
அர்த்தப்படுத்திய உன் உறவே
என் ஆண்மையினை
சோதித்து பிரிவதில்
எனக்குள் கோபங்கள் ஏதுமில்லை..

பெண்மையும் ஆண்மையும்
ஒவ்வொரு அணுவுக்குள்ளும்
ஆட்சி செய்கிறது ...

நீயோ நானோ
விதிவிலக்கல்ல...


மதன் நேர்காணல்

மதன் அவர்களுடனான சந்திப்பு திடீரென நிகழ்ந்த போதிலும் அதிக நேரம் ஒதுக்க முடியாத அவரது சூழல் காரணமாகவும் நடந்த சந்திப்பில் இருந்து...


எத்தனை வயசில இருந்து கார்ட்டூன் பரிச்சயம் ஆனது?
நான் ஒரு நாலு வயசில இருந்து கார்ட்டன் போடுறேன்? எனக்கு இயற்கையாகவே வந்த ஒரே திறமை கார்ட்டூன் போடுறதுதான்..
மத்த எல்லா திறமைகளும் உங்களைப் போல ஒரு வட்டத்துக்குள்
வந்த பின்னால கத்துக்கிட்டதுதான்...இளஞர்கள் இந்த துறையில் ரொம்ப குறைவா இருக்காங்க..இந்தியாவில் இந்த துறையில நிறைய வாய்ப்பிருக்கு.. ஆனால் எத்தனை இளைஞர்கள் தயார் நிலையில இருக்காங்க?

உங்களுடைய கார்ட்டூன் திறமை வளர உதவியாய் இருந்தது எது?நாமேதான் செய்து கொள்ள வேண்டும்..இயற்கையான திறமைன்னு சொல்வாங்கல்ல எப்டினா ஒரு மொசார்ட் மாதிரி.. பாரதி மாதிரி.. இவங்கல்லாம் பிறவி கலைஞர்கள்...அப்டின்னு சொல்வாங்க.. திறமை அப்டிங்கறது நிறைய பேர்கிட்ட இருக்கும்..மைக்கேல் ஏஞ்சலோ மாதிரி ஆர்ட்டிஸ்ட் பாத்தீங்கன்னா அவங்களுக்கு நிஜமாவே இறைவன் கொடுத்த வரம்னு தோணும்..அவ்ளோ ஆச்சர்யம் .. அதை நாம இறைவனு சொல்லிடுறோம் .. நிறைய இளைஞர்களுக்கு திறமை இருக்கு..ஒருத்தருக்கு ஓவியம் நல்ல வரும்.. உங்களுக்கு குரல்வளம் இருக்கு பாடுறீங்க .. பேசுறீங்க (நிஜமாவா ? ஹி ஹி ).. சில பேர் மாடலிங் பண்ணுவாங்க...அதை வளர்த்துக் கொள்வது எப்படி அப்டிங்கற அடிப்படையில தான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும்?

நான் கார்ட்டூன் பண்ணும் போது எல்லாம் இந்த மாதிரி எல்லாம் கோர்ஸ் கிடையாது..ஒருவேளை இருந்திருந்தால் முறைப்படி படிப்படியா படிச்சு இருக்கலாம் ..அப்டி படிச்சு இருந்தால் சிறந்த மாணவன்னு பேர் வங்கி இருப்பேனோ? இல்ல மக்குன்னு பேர் வங்கி இருப்பேனோ தெரியாது...இப்ப இருக்குற மாதிரியான வாய்ப்புகள் அப்பலாம் கிடையாது..அதனால நான் இயற்பியல் படிச்சேன்...என்னோட நோட் புக்ஸ்ல பாத்திங்கன்னா முதல்ல இருக்குற பக்கங்கள்ல ஃபார்முலா இருக்கும்.. கடைசி இருபது பக்கங்கள் என்னோட கார்ட்டூன் தான் இருக்கும்.. பேராசிரியர்கள் பாத்துட்டு கிழிச்செல்லாம் போட்டது கிடையாது... அவங்க என்ன நினைப்பாங்கன்னா எங்கேயோ தப்பான இடத்துல தப்பான ஆள் வந்து உக்காந்திருக்கனே அப்டின்னு 'யப்பா கொஞ்சம் பாடத்தையும் கவனிப்பா'ன்னு சொல்லுவாங்க...(ரொம்ப நல்ல ஆசிரியர்கள் கிடைச்சு இருக்காங்க..) ஏனா கார்ட்டூன்ஸ் நல்லா இருக்கும்..

நீங்க வரைஞ்ச கார்ட்டூன்ல மறக்க முடியாத கார்ட்டூன் இல்ல வரைய ரொம்ப முயற்சி செஞ்ச கார்ட்டூன் பத்தி சொல்லுங்களேன்?
கார்ட்டூன் அப்டிங்றது விஷுவல் திங்.அத பாத்தாதான் புரிஞ்சுக்க முடியும்..அதை வானொலில விளக்க வேண்டி இருக்கும்..அதுல நாம ஒரு செய்தி சொல்றோம்..கார்ட்டூன்ங்றது சாதரண காமிக்ஸ் படம் கிடையாது.கார்ட்டூனுல தேச,மாநில தலைவர்கள் வராங்க..அதுல வந்து தலையங்கம் மாதிரி..ஒரு நிகழ்வு நடப்பது பற்றி ஒரு கருத்து சொல்றேன்.இது பத்திரிக்கைக்கும் எனக்கும் ஒரு உடன்பாடா செய்துக்கிறதுதான்.. .கார்ட்டூனுக்கு பல திறமைகள் தேவைப்படுது..அது எப்டிங்றது பெரிய விசயம்..அதை இவள்ல மட்டும் சொல்லிட முடியாது..


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?