Tuesday 30 September, 2008

விளையாட்டு

விளையாட்டாய்
அழுதிருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
சிரித்திருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
பேசியிருக்கிறேன் சில நேரங்களில்..

ஒருமுறை கூட
விளையாடியதில்லை
விளையாட்டை
விளையாட்டாய்...

காதுகள்

சுவர்களுக்கும்
காதுகள் உண்டு
நீ சொன்ன பின்தான்
புரிந்தேன்...

நம் வார்த்தைகளின்
வேகம் தாளாமல்
விரிசல் விழுந்த
சுவற்றைப் பார்க்கையில்!

ரசம்

என் முகம் பார்த்து
கண்ணாடி ரசம்போய் விட்டதென
சொல்லிப் போனாய்...

எண்ணிப்பார்க்கிறேன்
ரசத்துக்கு உப்பு,மிளகு போதுமாவென
யோசித்தே
என் சிந்தனை மழுங்கிப்
போனதை அறியாயோ?

பிடித்த புத்தகத்தை
படிக்க விரித்த மாத்திரத்திலே
பிடுங்கி வைக்கும் உன்
செயலும் ரசம் போனதுதான்...

படுக்கை விரிப்பை சுருட்டி
வைப்பதில் தொடங்கும் என் காலை
படுக்கை விரிப்பை விரிக்கும்
என் இரவு வரை
உனக்காகவே செய்யப்படும்..
என் செயலும் ரசம் போனதுதான்...

ரசம்போன செயல்களில்
ரசம்போன வார்த்தைகளில்
ரசம்போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?