Wednesday 20 April, 2011

Blood on water - ''தண்ணீரில் இரத்தம்

சம காலத்தில் கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளை ஆவணப்படுத்தி அதை வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அந்த ஒரு காரியத்தை செய்து தன்னையும் வெளி உலகுக்கு சார்பற்ற ஊடகமாக அடையாளப்படுத்திக் கொண்ட என்.டி.டி.வியின் "தண்ணீரில் இரத்தம்" என்ற ஆவணப்படம் செய்திருக்கும் தாக்கம் என்ன என்பதை ஒரு வரியிலேயே சொல்லி விடலாம். என்.டி.டி.வியில் இந்த ஆவணப்படத்தின் ஒளிபரப்பை பார்த்த இலங்கை அரசு தனது மித மிஞ்சிய செல்வாக்கை பயன்படுத்தி அந்த ஆவணப்படத்தை தடை செய்துள்ளனர். 

''தண்ணீரில் இரத்தம்" ஆவணப்படம் சொல்வதென்ன? என்று பார்ப்பதை விட அது மையப்படுத்தும் செய்திகளை நாம் நோக்கலாம். ‘நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.’ என்ற குரல் மட்டும் கேட்க அப்படியே தண்ணீரில்  இரத்தம் கலப்பது போலான காட்சியுடன் தொடங்குகிறது. 

ஜூலை 2009 ல் எடுக்கப்பட்ட கோப்புக் காட்சிகளுடன் விரிவடைந்து பின்னணிக் குரலிலும், பின்னணி எழுத்துக்களிலும் சில விஷயங்களை தெரிவித்தபடி நகர்கிறது தண்ணீரில் இரத்தம். 

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இருபது முறை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து  சென்றுள்ளார்கள் தமிழீழ மக்கள். அப்படி இலங்கையிலிருந்து தப்பித்து ராமேஸ்வரம் வரும் மக்களில் இளைஞர்களை இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுவதாக முதியவர் ஒருவர் தெரிவிக்கிறார். 
‘தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் அங்கு இயல்பாக வாழ்வதற்கான எவ்வித அமைதியான சூழ்நிலையும் உருவாகவில்லை என்பதையும், தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிடவே விரும்புகிறார்கள் என்பதையும் அது வெளிப்படுத்துகின்றது.

இதேபோன்றே, தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக  வருகின்றார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அது வெளிப்படுத்துகின்றது. இனவெறி சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாததாலேயே தாங்கள் இங்கே வந்ததாக ஈழத்  தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தன்னுடன் வந்த இரண்டு பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று விட்டதையும், ஒரு சிறுமியின் கால் மட்டும் தனியே கிடந்த கொடுமையையும் கண்ணெதிரே பார்த்த நடுக்கத்தை ஒரு பெண்மணியின் குரலில் கேட்க முடிகிறது. 

இலங்கையில் கடந்த வருடம் போர் ஓய்வடைந்ததற்குப் பின்னரும் தமிழ் மக்கள் அங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுவதையே இத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

மண்டபம் கேம்பின் காட்சிகள் நகருகையில் பின்னணியில்'' கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை '' என்ற பாடல் மனதை ரணமாக்கும் விதமாக இருக்கிறது. 

''இலங்கையைச் சிங்கள நாடாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதைத் தான் செய்து வருகின்றார். மாறாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தாலும் அதனைத்தான் செய்திருப்பார். எங்களைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஒரே மாதிரிதான். தமிழ் மக்களைப் பொறுத்த வரை அழிவு அழிவு தான்'' என தமிழ் இளைஞர் ஒருவர் கூறுகின்றார். 

ஒரு காட்சியில் "அவன் ஒரு கிரிக்கெட் வீரனாக விரும்புகிறான். போர் வீரனாக அல்ல" என்ற வசனத்துடன் அமைந்த காட்சி எதை சொல்கிறது நமக்கு? 

சீமான் பேசுகையில், ''வவுனியா தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவொரு அனைத்துலக ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய தடுப்பு முகாம்களில் இருந்து மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விலும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்து விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தை வழங்குவேன் என்று குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அம் மக்களுக்கு என்ன சுதந்திரத்தை வழங்கினீர்கள் எனக் கேட்கவும் எவருமில்லை.'' என்று சொல்வது முற்றிலும் உண்மை.  
இத்தகைய பிரச்சினைகளால் அதிகம் பாதிப்படைவது மீனவ மக்களே என்பதை பிற்பாதி ஆவணப்படம் விளக்குகிறது. 

அதில் ஜே.சி.போஸ் (போட் அசோசியேஷேன் தலைவர்) '' இலங்கையில் போர் ஆரம்பிக்கும் 1983 க்கும்  முன்  இலங்கை  இராணுவத்தினர் தமிழ்  மக்களுக்கு உணவு கொடுப்பதும் உதவி செய்வதும் உண்டு. இரு நாட்டு மக்களும் அன்னியோன்யமாக இருந்து வந்தோம். இப்போது நிலைமை மாறி விட்டது.'' என்றார். 

இதுவரை 4000 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 1000  மீனவர்கள் காயமடைந்து உள்ளனர்.  மூன்று வருடத்தில் 500 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட்டுள்ளனர். என்ற செய்தி எழுத்து வடிவில் வந்து மறைகிறது. 

பின்னணியில் தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க விட்டான் என்ற வாலியின் பாடல் மெதுவாக எழுந்து ஒடுங்கியது. 
கடல் இருக்குற வரை மீன் இருக்கும். மீன் இருக்குறவரை மீனவன் இருப்பான். கடலுக்கு எல்லை கிடையாதுங்க.  இராணுவத்துக்குத்தான் எல்லை உண்டு. என்று ஒரு மீனவர் கூற,  புலிகளின் பிரசினை முடிவுக்கு வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது 300 க்கும் மேற்பட்டகப்பல்களை இலங்கை கடற்படை சுவர் போல் நிறுத்தி எங்களை மீன் பிடிக்க விடாது தடுக்கிறது. தனுஷ் கொடியைத் தாண்டினாலே இலங்கை ராணுவம் வந்து விடுகிறது. அது இந்திய பார்டரா? இலங்கை பார்டரா? என்று கூட தெரியவில்லை.என்றும் கவலை தெரிவித்துள்ளனர். 
"இதனால இருட்டுக்குள்ள போய் மீன் பிடிக்கிறோம். அப்ப கூட வந்து மறிச்சு மீன எல்லாம் நாசம் பண்ணி படக உடைச்சு தள்ளிடுறாங்க. போன தடவ போட்டுள வந்து இடுச்சதுல போட்டுக்குள்ள தண்ணி இறங்கி நாங்கல்லாம் தண்ணிக்குள்ள குதிச்சு உயிர்க்கு போராடுனோம். இன்னொரு போட் வந்து எங்களை காப்பாத்தி கூட்டி போச்சு. "blood on water
"இங்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இருக்கோம். எல்லாரும் தினமும் கடலுக்கு போனாதான் மீன் பிடிச்சு வயித்த கழுவ முடியும். ஒரு நாளைக்கு கடலுக்குப் போகாட்டாலும் எங்கள் நிலைமை மோசமாயிடும். இந்த நிலைமையில நாங்க உயிரோட இருக்கணும்னா இந்த இந்திய அரசு இலங்கை அரசோட பேச்சு  வார்த்தை நடத்தி கச்சத் தீவுல மீன் பிடிக்க அனுமதிக்கோனும். இரண்டு நாட்டு மக்களும் கடலுக்குள்ள சந்திச்சு பேசிக்கிட்டு சாப்பாடு  சாப்பிட்டுக்கிட்டு இருக்கணும்ணு விரும்புறோம்."
இப்படி ஒவ்வொருவரும் தனது எண்ணங்களை தெரிவித்துக் கொண்டிருக்க, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி மதிப்புள்ள ஆயிரம் படகுகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது..என்பதும் இதனால் ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டம் எனவும் பின்னணி எழுத்துக்கள் தோன்றி மறைகிறது. 

போர் முடிவடைந்து விட்டது என்பது சமாதானம் உருவாகி விட்டது என்று அர்த்தப்படாது என ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் அனுருத்த செனோய் தெரிவிக்கின்றார். 
என்.டி.டி.வியின் இந்த ஆவணப்படத்தில் தமிழ் மக்கள் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் அதை பின்னணி எழுத்துக்களில் காட்டும் போது ராஜா பக்ஷே பேசும் போதும், மற்ற பத்திரிக்கையாளர்கள், வல்லுனர்கள் பேசும் போது அதை தமிழில் எழுத்துக்களாக காட்டாதது.. யாருக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.? 

ஆன போதும் தண்ணீரில் இரத்தம் என்ற ஆவணப்படத்தின் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும். படம் முடிந்த நிலையில் ஒரு பெண் , எனது கணவனை இலங்கை ராணுவம் கொன்று விட்டது. அவரது உடல் கூட கிடைக்கவில்லை. 
அதற்கு பின் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளத்தேன். என் பையன் ஐந்து வருடங்களுக்கு முன்னால் குண்டடி பட்டு வீட்டில் இருக்கிறான். இனி என் இரண்டு பிள்ளைகளும் கடல் பக்கம் போக வேண்டாம். எங்களுக்கு கடல் வேண்டாம்." என்று கண்ணீருடன் சொல்லும் போது தண்ணீரில் இரத்தம்  இல்லை. இரத்தமே இங்கு தண்ணீராய் ஓடுகிறது என்பதை வலியுடன் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. 

இவள் பாரதி 
(ஒரு வருடத்திற்கு முன் ஒரு இணையதளத்திற்காக எழுதப்பட்டது)

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?