Wednesday 25 March, 2009

சாம்பல் துகள்கள்..

சிறிது உலர்ந்த முத்தங்கள்
காய்ந்த கண்ணீர் சுவடுகள்
அப்போதுதான்
முளைவிட்ட காயங்கள்...
இவற்றோடு
உடைத்து போன
சில காதல் துண்டுகளையும்..
சேகரித்து வெளியேறுகிறேன்...

என் சுவடுகளெங்கும்
உன் பிம்பங்களே தெரிய
சேகரித்த யாவற்றையும்
எரிக்கிறேன் அந்நிலவொளியில்..
பேருந்து நிலையத்தின் பலத்த
சத்தங்களுக்கிடையில்..

சாம்பல் துகள்கள் மிஞ்சுமென
பார்த்திருக்க
வெந்தும்
வேகாததுமான
கட்டையாக
கிடக்கின்றன அவைகள்..

அங்கிருப்பவர்களின்
அதட்டலுக்கும்
அன்னியப் பார்வைக்கும்
கரையொதுங்கி
பாதி கரியான
கட்டையோடு தொடர்ந்து
சுழல்கிறது என் காலச்சக்கரம்,...

நிர்வாணம்...

நிர்வாணம்
நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...

குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...


பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..


தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்

தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..


என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...

துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...


காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....



அனுபவங்கள்..........

புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

குறுகிய கால
அனுபவமெனினும்
அதுபோதும்
வாழ்நாள்முழுமைக்கும்..

கசப்பானவையோ
இனிப்பானவையோ
அவை அனுபவங்கள்தான்..

உணர்வுகளையும்
உரிமைகளையும்
அடகு வைக்க நேருகிறது.
மீட்டெடுக்க முடியாத
நேரத்தில்....

இழப்புகளோடு
புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

புதிய வலிகளை
ஏற்றுக்கொள்வதிலும்
பழைய வலிகளோடு
ஒத்துப் போய் விடலாம்.. என
திரும்புகிறேன்
புறப்பட்ட இடத்திற்கே...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?