Friday, 28 November, 2008

ராகமும் சுகமும்..

நீ தந்த
சுகமும் ராகமும்
என்னை விட்டுப் போகும்
மோகமும் காமமும்
ஒருநாள் போகும்..
ஒருநாள் நீயும்..

ஒருபோதும்
உன்னாலேற்பட்ட
துயரம் மட்டும்
நீங்கப் போவதில்லை...

அவனும் பசியும்..

எத்தனையோ இரவுகள்
என் கதவுகளைத்
திறந்து விட்டிருக்கிறேன்..
அவன் இளைப்பாறலுக்காய் ...

அவன் பல கதவுகளைத்
தட்டியதையும்
பிற வீட்டு
சன்னல்களைத் திறந்ததையும்..
குடிசையின் பொந்துகளில்
உற்றுப் பார்த்ததையும்
நானுமறிவேன்..

எந்தக் கதவுகளையும்
நான் தட்டியதில்லை
பலமுறை பசியெடுத்த போதும்...

தானே வரும் உணவுகளையும்
ஏற்றுக் கொண்டதில்லை..
வற்புறுத்தியபோதும்..

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாதாம்..
பசு பசித்தாலும்
எலும்பைத் தீண்டாது..!

முதன் முதலில்

முதன் முதலில்
உன் காதலைச் சொல்லிய
இளநீர்க் கடை...

முதன் முதலில்
முத்தம் பெற்றுக் கொண்ட
பேருந்து பயணம்..

முதன் முதலில்
மழைக்கு ஒதுங்கிய
நிழற்குடை..

முதன் முதலில்
மணமாகி கலந்து கொண்ட
தோழியின் திருமண வரவேற்பு...

யாவற்றிற்கும்
தெரிய வாய்ப்பில்லை..
விவாகரத்துக்கு நாம்
அனுமதி கோரியிருக்கும் மனுபற்றி...

காலமும் காதலும்..

நான்
நெருங்கும் போதெல்லாம்
விலகிப் போயிருக்கிறாய்..

நீ
நெருங்கும் போதெல்லாம்
நானும் விலகிப் போயிருக்கிறேன்..

ஒருநாள்
நம்மை விட்டு
வெகுதூரம் விலகிப் போயிருக்கும்..
காதலும்...காலமும்...

வலியுடன்..

சிறகுகளைப்
பிய்த்தெறிவதில்
அந்த ஆர்வமுடையவனே
ஏன் சிந்தனைகள்
சிறகுகள்அல்ல..

கயிறுகளை
இறுக்கி முடிச்சிடுவதில்
விருப்பமுடையவனே
என் சுதந்திரம்
கயிறுகளல்ல ...

சன்னல்களை
சாத்துவதில்
சுகம் காண்பவனே
என் எண்ணங்கள்
சன்னல்களல்ல..

ஊசிகள் கிழிசலைத்
தைத்தால்
வலியிருப்பதில்லை..
உணர்வுகளை
வார்த்தைகளால்
தைத்தால்
வலி பொறுப்பதில்லை...

வலியோடு..

அவனென்னை
அதிகமாய் நேசித்தான்..
சில சமயம்
நானும் கூட...

நிறைய முத்தங்களைப்
பரிசளித்தான்
சில நேரங்களில்
ஒன்றிரண்டு நானும்...

பிரிந்து போவதில்
மும்முரமாய் இருக்கிறான்..
சில போதில்
எனக்கும்...

உறவிற்கும்
பிரிவிற்குமான
ஊடாடலை
எப்படி சொல்ல?

வரிகளால்
வலிகளைச் சொல்ல முடியாது...

மழையே

அந்த மேகம்
விதைத்த
மழையை இந்த பூமி
அறுவடை செய்கிறது...

&&&&&&&&&&&&&&&&&&&&&

விடிய விடிய பெய்த மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்...

&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல் நாள் மழையாலான
வெள்ளம்
வடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன..
பெருகுகிறது ஆறு...

&&&&&&&&&&&&&&&&&&&&&&

தூறல் நின்றதால்
அழுகின்றன..
இலைகள்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சொல்லித் தரும்....

வெளிச்சம்
என்ன சொல்லித் தரும்..
இருளை அறியாத வரையில்...

உறவு
என்ன சொல்லித் தரும்..
பிரிவை உணராத வரை..

புத்தகம்
என்ன சொல்லி தரும்..
புரட்டாத வரை..

வாழ்க்கை
என்ன சொல்லித்தரும்
நீயில்லாத ஒன்றை...

ஆண் பெண்..

ஆணுக்கும்
பெண்ணுக்கும் பிறந்து..

ஆணிலோ
பெண்ணிலோ இணைந்து...

ஆணையோ
பெண்ணையோ பெறுவதைத்தவிர....
என்ன இருக்கிறது
இந்த வாழ்க்கையில்...?


உனக்குள் நான்..

உனதசைவுகளில்
தொடக்கி விடுகிறது
எனக்கான இளைப்பாறல்...

*************************************

வரமும் கோபமும்
ஆளுக்கொரு திசையில்
நம்மை இழுத்துப் போடும் போதும்..
எங்கிருந்தோ
வருடி விட்டுப் போகிறது...
கண்களின் குறும்புன்னகை..

*****************************************

எந்தத் திசையிலிருந்தாலும்
நேர்க்கோட்டில்
சந்தித்துக் கொள்ளும்
கண்கள் சொல்லி விடுகின்றன...
ஒருவரை ஒருவர் தேடியதை..

**********************************************

முத்தமிடத் துடிக்கும்
உனது உதடுகளுக்கு
எப்படிச் சொல்லுவேன்...
இமைக்கும் தோறும்
மொத்தமாய் உன்னை
முத்தமிடுவதை...

**************************************

கண்களுக்குள் இதயமும்
இதயத்திற்குள் கண்களும்
சில சமயங்களில்...

உனைப் பார்த்தவுடன்
இதயம் படபடப்பதும்
கண்கள் துடிப்பதும்...

*************************************

நேரங்காலமற்ற
பணி உளைச்சலிலிருந்து
மீட்டெடுக்கும்
முயற்சியில்
புதைந்து போகிறேன்...
நானும் உளைச்சலுக்குள்...

***********************************************

சொல்லி விட்டுப்
போவதை விட
சொல்லிக் கொள்ளாமல்
போகும் தருணங்களில்
சுமையாகின்றன..
உன் நினைவுகள்..

********************************************

இமைகளும் சுமையாகின்றன...
உன்னைக் காணாத போதுகளில்
நீரும் மோராகின்றது
உன்னைக் கண்டதில்...

*********************************************

நமக்குள் நேரும்
சண்டைக்குப் பிறகு
பூக்கின்றன..
என்னிடம் கை நிறைய
கவிதைகளும்..
உன்னிடம் நேசம் வழியும்
கண்களும்...

******************************************

உயிரோடோ
மெய்யோடோ
சேராமல்
துணைக்காலாய்
தனித்திருக்கிறேன்...
பொருத்தமான
உயிர் மெய்யாய்
நீ இருந்தால்..

***********************************

நமக்கான
விஷயங்களில்
ஏற்படும் முரண்களை விட
பிறரால்
தோற்றுவிக்கப்படும் முரண்கள் ...
இமயமாய்...

**************************************************

தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருக்கையில்
புரட்டுகிறேன்
நமது முதல் சந்திப்பின்
பக்கங்களை....

*******************************************************

நீ அணைக்கத் தவறும்
அழைப்பினை
என்னுடையதென
அறிந்ததும்
ஒரு குறுஞ்செய்தி மூலம்
குதூகலப் படுத்துகிறாய்..

****************************************************

எதேச்சையாய்
கன்னம் கிள்ளிப் போனாய்..
ஒவ்வொரு முறை
கடக்கும் போதும்
உனக்குள் கிள்ளிப் போடுகிறேன்
சிறு நெருப்பை..

*****************************************************


மழை மழை

மழையே பொழியாதே
பாவம்
வீடற்ற மனிதர்கள்..

*****************************

யாரைத் திட்டித் தீர்க்கிறாய்
பெரு மழையே..

******************************

வெயிலைத் தாங்க முடிகிறது..
இந்த மழையைத் தான்
தாங்க முடியவில்லை...

உன் கோபத்தைத் தாங்க
முடிந்த என்னால்...
உனதன்பை தாங்க முடியாதது போல...

***********************************************

மழைக்குப் பிந்திய
சாலையைப் போல்..
உன் சந்திப்பிற்குப் பிறகான
என் மனது..

**********************************************

மழை
வரும்போது அனுமதி
கேட்கவில்லை..
போகும் போதும்
அப்படியே...

****************************************

விடாமல் தூறுகிறது
மழை...
விட்டுத் விட்டுத்
தூறுகிறாய்..
உள்ளுக்குள் நீ..

***********************************

மண்ணுக்குள்
புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது
சிறு மழை..

*********************************

அந்த மேகம் விதைத்த
மழையை
இந்த பூமி அறுவடை
செய்கிறது...

*********************************

விடிய விடிய பெய்த
மழை..
விடவே இல்லை
மறுநாள் விடியலிலும்..

************************************

முதல் நாள் வெள்ளம்
இன்னும் விடியவே இல்லை..
அதற்குள் இன்னுமொரு மழை...

***************************************

மழைத்துளிகள்
ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன...
பெருகுகிறது ஆறு...

********************************************

தூறல் நின்றதால்
அழுகிறது
இலைகள்...

********************************************வலி

வலிக்கிறது...
கொட்டும் மழையை
எப்படித் தாங்குவார்கள்
அவர்கள்?

**********************

அழுது விடாதீர்கள்
அது கண்ணீர்த் துளிகள் அல்ல..
உள்ளத்தைக் கொத்தும் உளிகள்..

**************************************

மாடுகளை விட்டு விட்டு
நாடு கடந்து வந்தோம்...
மூக்கணாங்கயிறுகளின்..
முடிச்சுகள் கைகளை
இறுக்குகிறது...

*************************

விடை பெற்று
கொண்டு வரவில்லை..
வினாவோடு
வந்திருக்கிறோம்..

*************************
முகவுரை
எழுதும் முன்னே
முடிவுரைக்கு வழி சொல்லும்
இந்த வாழ்வு என்ன வாழ்வு?

*********************************

அலையலையாய் வருகிறாய்..
துளித் துளியாய் குதிக்கிறோம்..

*********************************

கரையில் கால் வைக்கிறோம்..
கொட்டு மழையிலும்
ஆதி மண் சுடுகிறது...

********************************

தொலைத்த..

என் பெயரைத் தொலைத்த..
தருணத்தில்
உன்னை சந்திக்கிறேன்...

எனக்கு என்ன பெயர்
சூட்டுவாய்?

உன்னைப் போலத்தான்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...

அடிக்கடி ஈரமாக்கி
ஆடை மாற்ற வைக்கிறது..

உன்னைப்போலத்தான்
இந்த மழையும்

சேறு இறைக்கவும்..
கழுவவும்போல்
அடிக்கவும்..
அணைக்கவும்..

உன்னைப் போலத்தான்
இந்த மழையும்...
முடுக்கி விடவும்..
முடக்கி விடவும்..

மழையே

சொல்லித்தான் ஆக வேண்டும்
உன்னாலேற்பட்ட
தாக்கத்தை..
ஊக்கத்தை..
ஏக்கத்தை..


மழையின் வரவு

ஈரம் காயாத துணிகள்
மரம் குளிக்கும் காலம்
இல்லை பேசும் ரகசியம்
கோலம் காணாத வாசல்
தலை குளிக்காத காலை
மழையின் வரவில்...

**********************

எங்கோ இருக்கிறாய்
மழை விசாரித்துவிட்டுப்
போகிறது...
உன் அருகாமையை...

***********************

கரிகாலன் கலங்கி இருப்பான்
வீணாய் போகும்
மழை நீர் கண்டிருந்தால்..

**************************

இந்த மழைக்கு
கொஞ்சிப் பேசவும் தெரிந்து இருக்கிறது
மிஞ்சிப் போகவும் தெரிந்திருக்கிறது..
மனிதர்களைப் போல...

************************

மழையை
வழியனுப்பி விடாதீர்கள்...
நான் ஊன்றிய விதை
இன்னும் துளிர் விட வில்லை...

*********************************

மண்ணை மட்டுமல்ல
என்னையும் அரித்துப் போன
மழை நீ..

**********

என்னதான் சோகம்
கொஞ்சம் அழுவதை
நிறுத்தி விட்டுச் சொல்லேன்
மழையே....

*************

இந்த மழைத் துளிகளை
யாரும் மிதித்து விடாதீர்கள்..
உங்கள் பாதத்தை
கிள்ளி விடப் போகிறது...

****************************

மழை மழையாய்..

இலைகளோடு
இந்த மழைத் துளிகள்
இரவு பகலாய்
அப்படி என்னதான்
பேசித் தீர்க்கிறதோ?

*********************

நட்சத்திரங்கள்
ஊருக்குப் போகட்டும்..
மழைத் திருவிழாவிற்கு
மனிதர்களே போதும்..

**********************

மரங்கள் அழிந்த
சோகத்தில்
ஆறுதலடையா மேகம்
அழுதழுது தீர்க்கிறது
மழையாய்..

************

மேகம் உருகி
மழை பொழிய...
மழை உருகி
மண் தொட...
மண் உருகி
விதை துளிர்க்க...
விதை உருகி
விருட்சமாகிறது...

*****************

Wednesday, 26 November, 2008

ஊதா நிற உடை

உனக்குப் பிடித்தமானதென
தெரிந்து
ஊதா நிற உடையணிந்த போதும்
எனக்காகத் தானென
இறுமாப்புக் கொள்கையில்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
மறைக்கும் எனது சொற்களை...

காவிரி

எடுத்துக்காட்டாய்
உன்னைக் கைகாட்டும் நேரங்களில்
காவிரியாய் பொங்கும்
நெஞ்சம்...

ஏதேனும் ஒன்றில்
'க்கு' வைத்துப் பேசுகையில்
அதே காவிரியாய்
வறளும்....

நட்பு

வடக்கிருந்து
உயிர் நீத்த நட்பு
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையாருடையது ...

அருகிருந்து
துயர் நீக்கும் நட்பு
நம்முடையது..

முரண்பாடு

முரண்பாடுகளால்
பின்னப்படும் வலைகளில்
சினம் விடுவிக்கப்பட்டு
சிரிப்பு அடைபடுகிறது...

அப்பொழுதுகளில்
உடன்பாட்டுக்கான
ஆயத்தமாய்..
ஒரு கண் சிமிட்டலை
உணர்கிறேன்....

சாபக்கேடு

அலைபேசியில்
பேசிக் கொண்டிருக்கையில்
எழும் பெரும்மூச்சினை
மொழிபெயர்க்கத் தெரிந்த போதும்..

அருகிருக்கையில்
எழும் எண்ணங்களை
அறிந்து கொள்ள முடியவில்லையென...
பிதற்றுவதை
நீ நம்புவது
சாபக்கேடுதான்..

அரவணை

என் ப்ரிய மழையே
இப்போதே
என்னுள் விழுந்து விடாதே..

ஆறாகி
உன் போக்கிலே சென்று
இறுதியில் வந்து சேர்
கடலாய் உன்னை
அரவணைத்துக் கொள்கிறேன்...

விலகு

கண்கள் வலைபின்னியவுடன்
இரண்டு நிகழ்வுகள்
அரங்கேறுகின்றன...

ஒன்று
அனைத்தையும் மறந்து விடுகிறேன்...
இரண்டு
என்னையே தொலைத்து விடுகிறேன்...

தயவு செய்து
'விலகிப் போ' வென சொல்லவில்லை..
'விலகி நில்' என்பதே என் வேண்டுகோள்...

அல்லி புல்லி

எண்ணங்கள் ஒத்துப் போன
போதிலும்...
இணக்கம் இருந்த போதிலும்
பிணக்கிற்கு பஞ்சமில்லை...
ஒரு பூவின் அல்லிபுல்லி
இதழ்களைப் போல...

நீ

என் உதடுகள் திறந்து
பேசுகிறாய்..

என் விழிகள் திறந்து
பார்க்கிறாய்..

என் உணர்வுகளை அழித்து
வாழ்கிறாய்...

நறுக்குகள்....

பேசக் கற்றுக் கொள்..
அல்லது
பேசாமலிரு...

**************

என்னை
நகர்ந்திருக்கச் சொல்கிறாய்...
விலகிஇருக்கவா?
விலகாதிருக்கவா?

********************

புத்தகமெங்கும்
உன் வாசனை
நிரம்பி இருக்கிறது....
எப்போது புரட்டினாய்..
நானறியாமல்..

****************

இன்னும் தொடங்கவே இல்லை
அதனாலென்ன...
முடித்துக் கொள்ளலாம்
இந்த வாழ்க்கையை...
இன்னுமோர் தொடக்கதிற்காக..

*********************************

இவ்வெற்றுத் தாளில்
கிறுக்க பலருக்கும் ஆசைதான்..
கவிதைக்காகக்
காத்திருக்கிறது இந்த தாள்....

******************************

அறுந்துபோன
உறவுகளை..
முடிச்சிட முனையப்
போவதில்லை...
முடிச்சுகள்
இறுக்குமெனில்...
அறுந்தே இருக்கட்டும்..

இசைக்கருவி..

நான்
இசைக்கருவியாக பிறக்க விரும்புகிறேன்...

நீ மட்டும்
இசைக்கும் கருவியாக...

யாராலும்
கவனிக்கப் படாத இசைக்கருவியை
மீட்டும் நாளொன்றில்
பேரிரைச்சலொன்று...
எரிச்சல் தரலாம்..

தொடந்து மீட்டு
தூய ராகங்கள் உயிர்த்தெழும்...

மீட்டுவதை நிறுத்தும் போது
வேறாரும் மீட்ட இயலாத
வினோத இசைக்கருவி இது...

இசைகிறேன்..
இசை...


இருவாழ்வி

மழைக்கால தவளைகளை
பிடிப்பதில்லை..
சத்தத்தினூடே கூடுவதால்..

வேகத்தடை

வேகத்தடையை
நீக்கினார்கள்..
பள்ளமானது பாதை
இப்போதும்
அது வேகத்தடையாகவே
இருக்கிறது...

கேள்வி கேட்காதே

மடி மீதிடு...
முடி கோதிடு...
முகம் துடைத்திடு..
அகம் பேசிடு..
விரல் தீண்டிடு..
கேள்வி கேட்காதே...

நீர்

உன்னை நினைக்கையில்
ஆறாய்ப் பெருகும் எண்ணங்கள் ...
அருவியாய் கொட்டும் ஆசைகள்...

உன் அருகாமையில்
வற்றித்தான் போகிறது...
சின்ன தீண்டல் போதும்..
உயிரூற்றுப் பெருக்கெடுக்க....

நிழல்

உனது நிழலாய் தொடரும்
வாரம் கொடு..

மறுத்தால்
மரமாக சாபமிடு..

உனக்கு நிழல் தருவேன்
என்னை தேடுகையில்....

ஒரு வார்த்தை

வண்ணத்துப் பூச்சிகள்
பரிசளிக்க வேண்டாம்...

ஓவியங்கள்
வரைந்து தர வேண்டாம்..

பாடல்கள்
பாட வேண்டாம்..

முகம் புதைத்தழ
மடி வேண்டாம்...

கவிதைகள் எழுத
எழுதுகோல் தர வேண்டாம்..

விரும்புகிறேனேன
ஒரு வார்த்தை போதும்...
வாழ்ந்திடுவேன்...
ஏழு ஜென்மங்களையும் ஒன்றாகவே...

காதலும் நட்பும்

காதல்
உரிமை எடுத்துக் கொள்வது..
நட்பு
உரிமையாகவே இருப்பது...

காதல்
அன்பை முன்னிலைப் படுத்துவது..
நட்பு
அன்பாகவே இருப்பது...

காதல்
மீறலுக்கு மன்னிப்புக் கோரும்..
நட்பு
மன்னிப்பையே மீறலெனக் கருதும்..

காதல்
ஆழமாகும் அல்லது அகலமாகும்
நட்பு
ஆழத்தில் அகலமாகும்..

காதலும் நட்பும்
ஒரு பூதமென குப்பிக்குள்
அடைபட்டிருக்கிறது..
திறப்பவரின் தேவையைப் பொறுத்து
இரண்டிலொன்று இதயம் கவ்வும்...

நட்பும் காதலும்

நட்பும் காதலும்
நூலிழை வித்தியாசத்தில் தான்
பிரிக்கப்படுகின்றன..

நூலிழை தான் அளவுகோலா?
எதைக் கொண்டு அளப்பது..?
சொல்லா..? செயலா?

சொல்லெனில்
தவிர்க்கப்பட வேண்டியதென்ன?
செயலெனில்
விலக்கப் பட வேண்டியதென்ன?

உடலா? உள்ளமா?
உடலெனில்
எவ்வளவு தூரம் தள்ளி இருக்கலாம்?
உள்ளமெனில்
எவ்வளவு தூரம் இடம் கொடுக்கலாம்?

யாரும் புரிந்து கொள்ள முடியாத
நூலிழையை
நண்பர்களோ,காதலர்களோ
உணர்ந்திருப்பார்களோ?

காதலர்களை நண்பர்களென
அங்கீகரிப்பதும்
நண்பர்களை காதலர்களென
அடியாயாலப் படுத்துவதும்
ஒரு நூலிழைதான்...

மழை மழையாய்...

யாருமற்ற நெடுஞ்சாலையில்
தனித்து நடக்கிறேன்..
எங்கிருந்தோ பின் தொடர்ந்த மேகம்
அனுப்பி இருக்கிறது...மழையை..

**********

புனைவற்ற புன்னகையாய்
பூத்துக் கொட்டுகிறது
மழை...

**********

மழை இரவு
வீட்டில் உன் இருப்பு
வேறென்ன வேண்டும்?

**********

கை நிறைய கவிதைகளை
மழை தருகிறது
கதவடைப்பு செய்து
காகிதத்தோடு அமர்ந்திருக்கிறேன்..

**********

மண் மீது மழைத்துளி
என்ன எழுதி எழுதி
அழிக்கிறதோ?

**********

நொடிநேரப் பூந்தொட்டிகளை
படைக்கிறது
ஒவ்வொரு மழைத்துளியும்...

**********

குடை தவிர்த்து
நடக்கலாம்
கேள்வி கேட்பவர்களுக்கு
விடை சொல்ல இந்த
மழை இருக்கிறது..

**********

இந்த மழையில்
கொஞ்சம் நனைந்து கொள்ளலாம்
நம்மை நனைக்கும் துளிகளாவது
சங்கமமாகட்டும்..

**********

ஒவ்வொரு துளிகளையும்
முடிச்சிட முயன்று
தோற்றுப் போகும் மழை...

**********

மேகத்தையே
வானமாகக் காட்டும்
சாகச மழை ...

**********

தொணதொணக்கும் மழை
முனுமுனுக்கும் இலை
என்னதான் பேசித் தீர்க்கிறது?

**********

மௌனத்தை உடைக்க
முயற்சிக்கிற இந்த மழையை
என்ன செய்வது?

**********

வீட்டிற்குள் வருமிந்த காற்று
மழைத்துளிகளை பொறுக்கி
எடுத்து வருகிறது...

**********

விடாது தூறும் மழை
எதை விமர்சிக்கிறது?

**********

நில் மழையே
சொல் மழையே
யாரை சந்திக்க வந்தாய்?

**********

சில்லென்ற மழை
சில நேரங்களில் பிழை..

**********

மாலை நேரமும்
மழைக்கால நாட்களும்
அள்ளி தந்த கவிதைகளை
தள்ளி வைத்து விட்டு
காத்திருப்பு தொடர்கிறது
சாரல் காற்றினூடே...

***********

Friday, 21 November, 2008

துளித்துளியாய்...

#சிறைஎடு..
முறையிடு..
மறுத்தால்
முரண்டுபிடி...
உறக்கம் களை
உணர்வளி ..
உயிர்ப்பி..

# புரட்டி எடு..
புத்துயிர் கொடு..
அரற்று..
மிரட்டு..
அடக்கு..
அகழ்ந்தெழு..
அணுவில்
அணுவாய்
ரசி
புசி...

# வியர்க்க வை
விசிறி விடு
பதமாய் கடி
இதமாய் வருடு..
அழுத்தம் கொடு
அனலில் இடு..

# கரைத்திடு..
கரைந்திரு..
நுரைத்துப் பொங்கு..
மடி மீது
முடி கோது
இடைவேளை
இனியேது?

# சிக்க வை
சிறக்க வை
நிற்க வை
நிறைக்க வை
மக்க வை
மலர வை..

#திறந்து படி
கறந்து குடி
விரட்டி பிடி
விழியால் திரி..

# தீவாக்கு
திரியாக்கு
பூவாக்கு
புயலாக்கு...
சுற்றம் மற
சொர்க்கம் திற..

உரமாயிரு..
உறவாயிரு..
உலகாயிரு..
உயிராயிரு..

#மூர்ச்சையாக்கு
முழுமையாக்கு..
மூச்சில் கல
மூர்ச்சை இழ..
நிம்மதி எழ..
நினைவை இழ..
புதைந்திரு
புகைந்திரு...

#மழையால் பொழி..
பிழையால் அழி..
இருட்டாக்கு
ஒளியூட்டு...
திரைகிழி..
நிறையளி ..
குறை தள்ளு..
குறுக்கள்ளு..

#மலை மோது
கிளை தாவு..
கனி பறி..
பூ நுகர்..
உயிர்வெளி..
உயர்வளி..

#என்னை உயிராக்கு
எனக்குள் உயிராகு...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலை பயணத்தில்
உரசிச் செல்லும்
பட்டாம்பூச்சியாய்..
என்னைக் கடக்கிறாய்..

தக்க வைத்து விரும்பி
திரும்பிப் பார்க்கிறேன்
காணவில்லை சுற்றிலும்..

பாதி வழியில்
படபடக்கிறது என்
சட்டைப் பையில்
உன் இறக்கைகள்...

ஈர்ப்பு

எழுதி எழுதி தீர்க்கிறேன்
தீர்ந்துவிடவில்லை
உன் மீதான ஈர்ப்பு..

தூரத்து மழை

தூரத்து மழையை
ரசிக்கிற மனமும்
உச்சிமோந்து
பாராட்டும் குணமும்
சிலருக்கு இருந்தாலும்..
உன்னிடம் கண்டுகொண்டேன்..
உற்சாகப் பெருவெளி நீ..
உறையா ஊற்று நீ..
நீக்கமற நிறைந்திரு..
நினைவுகளின் வெளியில்...

பத்தோடு ஒன்று..

பத்தோடு பதினொன்று எனக்
கேட்கிறாய்
என்ன சொல்ல..
கண்ணோடு மணி என்றா?
மண்ணோடு விதை என்றா?
இல்லை தோழா..

ஒற்றைச் சிறகுள்ள எனக்கு
மற்றொரு சிறகு தந்து
பறக்கக் கற்றுக் கொடுத்தது
நீதான் தோழா...

அவரவர் பாதையில்

வெட்ட வெளியில்
பொட்ட வெயிலோ
கொட்டும் மழையோ
ஒட்டும் மணலோ
தொட்டு விடும் தூரத்தில்
விட்டுவிலகாமல் பயணிக்கிறோம்...

இருவர் செல்லும் அளவுள்ள
இந்த பாதை
ஒத்தையடி பாதையாக மாறி
முடிவடைந்துவிடாது ..
மீண்டும் இருவழிப் பாதையாக
மாறுகிறது..

அவரவர் பயணத்தை தொடர்கிறோம்..
சஞ்சலமற்று!

அடுக்கிய எண்ணங்கள்

என்னுள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
எண்ணங்களை
கலைத்துப் போட்டது
உன் சொற்கள்...

மீண்டும் அடுக்கும் முயற்சியில்
கலைந்து போனது
நமக்கான இடைவெளி ..

இப்போது அந்த அடுக்குகளில்
ஒன்றில் மேல் ஒன்றாய்
நாம்...

நீ என்னில்

நீ என்னில்
கரைந்து போகலாம்..
உறைந்தும் போகலாம்..

நான் உன்னில்
புதைந்து மறையலாம்..
புணர்ந்தும் பிரியலாம்...

என் அதிர்வுகளை
உள்வாங்கும் பக்குவமும்..
உன் தேடலை
கண்டுணர்ந்த துடிப்பும்...
நமக்குண்டு

இந்த தகுதி போதும்
யாவற்றுக்கும்..

நட்பு காலம்

நட்புக் காலத்திற்குள்
பாலமமைத்து
பாதம் தாங்கி
வரவேற்கும் உன் அன்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
சின்ன மனதுக்குள்...

கவிதை கேளுங்கள்

உன் வார்த்தைகளை
அசைபோடும்
ஒவ்வொரு முறையும்
கண்கள் வழி கசியும்
காமத்தை எப்படி மறைப்பது?

அது சரி
ஏன் மறைக்க வேண்டும்?

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?