Wednesday, 26 November, 2008

ஊதா நிற உடை

உனக்குப் பிடித்தமானதென
தெரிந்து
ஊதா நிற உடையணிந்த போதும்
எனக்காகத் தானென
இறுமாப்புக் கொள்கையில்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
மறைக்கும் எனது சொற்களை...

காவிரி

எடுத்துக்காட்டாய்
உன்னைக் கைகாட்டும் நேரங்களில்
காவிரியாய் பொங்கும்
நெஞ்சம்...

ஏதேனும் ஒன்றில்
'க்கு' வைத்துப் பேசுகையில்
அதே காவிரியாய்
வறளும்....

நட்பு

வடக்கிருந்து
உயிர் நீத்த நட்பு
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையாருடையது ...

அருகிருந்து
துயர் நீக்கும் நட்பு
நம்முடையது..

முரண்பாடு

முரண்பாடுகளால்
பின்னப்படும் வலைகளில்
சினம் விடுவிக்கப்பட்டு
சிரிப்பு அடைபடுகிறது...

அப்பொழுதுகளில்
உடன்பாட்டுக்கான
ஆயத்தமாய்..
ஒரு கண் சிமிட்டலை
உணர்கிறேன்....

சாபக்கேடு

அலைபேசியில்
பேசிக் கொண்டிருக்கையில்
எழும் பெரும்மூச்சினை
மொழிபெயர்க்கத் தெரிந்த போதும்..

அருகிருக்கையில்
எழும் எண்ணங்களை
அறிந்து கொள்ள முடியவில்லையென...
பிதற்றுவதை
நீ நம்புவது
சாபக்கேடுதான்..

அரவணை

என் ப்ரிய மழையே
இப்போதே
என்னுள் விழுந்து விடாதே..

ஆறாகி
உன் போக்கிலே சென்று
இறுதியில் வந்து சேர்
கடலாய் உன்னை
அரவணைத்துக் கொள்கிறேன்...

விலகு

கண்கள் வலைபின்னியவுடன்
இரண்டு நிகழ்வுகள்
அரங்கேறுகின்றன...

ஒன்று
அனைத்தையும் மறந்து விடுகிறேன்...
இரண்டு
என்னையே தொலைத்து விடுகிறேன்...

தயவு செய்து
'விலகிப் போ' வென சொல்லவில்லை..
'விலகி நில்' என்பதே என் வேண்டுகோள்...

அல்லி புல்லி

எண்ணங்கள் ஒத்துப் போன
போதிலும்...
இணக்கம் இருந்த போதிலும்
பிணக்கிற்கு பஞ்சமில்லை...
ஒரு பூவின் அல்லிபுல்லி
இதழ்களைப் போல...

நீ

என் உதடுகள் திறந்து
பேசுகிறாய்..

என் விழிகள் திறந்து
பார்க்கிறாய்..

என் உணர்வுகளை அழித்து
வாழ்கிறாய்...

நறுக்குகள்....

பேசக் கற்றுக் கொள்..
அல்லது
பேசாமலிரு...

**************

என்னை
நகர்ந்திருக்கச் சொல்கிறாய்...
விலகிஇருக்கவா?
விலகாதிருக்கவா?

********************

புத்தகமெங்கும்
உன் வாசனை
நிரம்பி இருக்கிறது....
எப்போது புரட்டினாய்..
நானறியாமல்..

****************

இன்னும் தொடங்கவே இல்லை
அதனாலென்ன...
முடித்துக் கொள்ளலாம்
இந்த வாழ்க்கையை...
இன்னுமோர் தொடக்கதிற்காக..

*********************************

இவ்வெற்றுத் தாளில்
கிறுக்க பலருக்கும் ஆசைதான்..
கவிதைக்காகக்
காத்திருக்கிறது இந்த தாள்....

******************************

அறுந்துபோன
உறவுகளை..
முடிச்சிட முனையப்
போவதில்லை...
முடிச்சுகள்
இறுக்குமெனில்...
அறுந்தே இருக்கட்டும்..

இசைக்கருவி..

நான்
இசைக்கருவியாக பிறக்க விரும்புகிறேன்...

நீ மட்டும்
இசைக்கும் கருவியாக...

யாராலும்
கவனிக்கப் படாத இசைக்கருவியை
மீட்டும் நாளொன்றில்
பேரிரைச்சலொன்று...
எரிச்சல் தரலாம்..

தொடந்து மீட்டு
தூய ராகங்கள் உயிர்த்தெழும்...

மீட்டுவதை நிறுத்தும் போது
வேறாரும் மீட்ட இயலாத
வினோத இசைக்கருவி இது...

இசைகிறேன்..
இசை...


இருவாழ்வி

மழைக்கால தவளைகளை
பிடிப்பதில்லை..
சத்தத்தினூடே கூடுவதால்..

வேகத்தடை

வேகத்தடையை
நீக்கினார்கள்..
பள்ளமானது பாதை
இப்போதும்
அது வேகத்தடையாகவே
இருக்கிறது...

கேள்வி கேட்காதே

மடி மீதிடு...
முடி கோதிடு...
முகம் துடைத்திடு..
அகம் பேசிடு..
விரல் தீண்டிடு..
கேள்வி கேட்காதே...

நீர்

உன்னை நினைக்கையில்
ஆறாய்ப் பெருகும் எண்ணங்கள் ...
அருவியாய் கொட்டும் ஆசைகள்...

உன் அருகாமையில்
வற்றித்தான் போகிறது...
சின்ன தீண்டல் போதும்..
உயிரூற்றுப் பெருக்கெடுக்க....

நிழல்

உனது நிழலாய் தொடரும்
வாரம் கொடு..

மறுத்தால்
மரமாக சாபமிடு..

உனக்கு நிழல் தருவேன்
என்னை தேடுகையில்....

ஒரு வார்த்தை

வண்ணத்துப் பூச்சிகள்
பரிசளிக்க வேண்டாம்...

ஓவியங்கள்
வரைந்து தர வேண்டாம்..

பாடல்கள்
பாட வேண்டாம்..

முகம் புதைத்தழ
மடி வேண்டாம்...

கவிதைகள் எழுத
எழுதுகோல் தர வேண்டாம்..

விரும்புகிறேனேன
ஒரு வார்த்தை போதும்...
வாழ்ந்திடுவேன்...
ஏழு ஜென்மங்களையும் ஒன்றாகவே...

காதலும் நட்பும்

காதல்
உரிமை எடுத்துக் கொள்வது..
நட்பு
உரிமையாகவே இருப்பது...

காதல்
அன்பை முன்னிலைப் படுத்துவது..
நட்பு
அன்பாகவே இருப்பது...

காதல்
மீறலுக்கு மன்னிப்புக் கோரும்..
நட்பு
மன்னிப்பையே மீறலெனக் கருதும்..

காதல்
ஆழமாகும் அல்லது அகலமாகும்
நட்பு
ஆழத்தில் அகலமாகும்..

காதலும் நட்பும்
ஒரு பூதமென குப்பிக்குள்
அடைபட்டிருக்கிறது..
திறப்பவரின் தேவையைப் பொறுத்து
இரண்டிலொன்று இதயம் கவ்வும்...

நட்பும் காதலும்

நட்பும் காதலும்
நூலிழை வித்தியாசத்தில் தான்
பிரிக்கப்படுகின்றன..

நூலிழை தான் அளவுகோலா?
எதைக் கொண்டு அளப்பது..?
சொல்லா..? செயலா?

சொல்லெனில்
தவிர்க்கப்பட வேண்டியதென்ன?
செயலெனில்
விலக்கப் பட வேண்டியதென்ன?

உடலா? உள்ளமா?
உடலெனில்
எவ்வளவு தூரம் தள்ளி இருக்கலாம்?
உள்ளமெனில்
எவ்வளவு தூரம் இடம் கொடுக்கலாம்?

யாரும் புரிந்து கொள்ள முடியாத
நூலிழையை
நண்பர்களோ,காதலர்களோ
உணர்ந்திருப்பார்களோ?

காதலர்களை நண்பர்களென
அங்கீகரிப்பதும்
நண்பர்களை காதலர்களென
அடியாயாலப் படுத்துவதும்
ஒரு நூலிழைதான்...

மழை மழையாய்...

யாருமற்ற நெடுஞ்சாலையில்
தனித்து நடக்கிறேன்..
எங்கிருந்தோ பின் தொடர்ந்த மேகம்
அனுப்பி இருக்கிறது...மழையை..

**********

புனைவற்ற புன்னகையாய்
பூத்துக் கொட்டுகிறது
மழை...

**********

மழை இரவு
வீட்டில் உன் இருப்பு
வேறென்ன வேண்டும்?

**********

கை நிறைய கவிதைகளை
மழை தருகிறது
கதவடைப்பு செய்து
காகிதத்தோடு அமர்ந்திருக்கிறேன்..

**********

மண் மீது மழைத்துளி
என்ன எழுதி எழுதி
அழிக்கிறதோ?

**********

நொடிநேரப் பூந்தொட்டிகளை
படைக்கிறது
ஒவ்வொரு மழைத்துளியும்...

**********

குடை தவிர்த்து
நடக்கலாம்
கேள்வி கேட்பவர்களுக்கு
விடை சொல்ல இந்த
மழை இருக்கிறது..

**********

இந்த மழையில்
கொஞ்சம் நனைந்து கொள்ளலாம்
நம்மை நனைக்கும் துளிகளாவது
சங்கமமாகட்டும்..

**********

ஒவ்வொரு துளிகளையும்
முடிச்சிட முயன்று
தோற்றுப் போகும் மழை...

**********

மேகத்தையே
வானமாகக் காட்டும்
சாகச மழை ...

**********

தொணதொணக்கும் மழை
முனுமுனுக்கும் இலை
என்னதான் பேசித் தீர்க்கிறது?

**********

மௌனத்தை உடைக்க
முயற்சிக்கிற இந்த மழையை
என்ன செய்வது?

**********

வீட்டிற்குள் வருமிந்த காற்று
மழைத்துளிகளை பொறுக்கி
எடுத்து வருகிறது...

**********

விடாது தூறும் மழை
எதை விமர்சிக்கிறது?

**********

நில் மழையே
சொல் மழையே
யாரை சந்திக்க வந்தாய்?

**********

சில்லென்ற மழை
சில நேரங்களில் பிழை..

**********

மாலை நேரமும்
மழைக்கால நாட்களும்
அள்ளி தந்த கவிதைகளை
தள்ளி வைத்து விட்டு
காத்திருப்பு தொடர்கிறது
சாரல் காற்றினூடே...

***********

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?