Tuesday, 3 February, 2009

முத்தம்

பணியினிடுக்குகளில்
சோர்வுற்ற
அந்தி மலரைப் போல
வரும் என்னை
புதுப்பிக்கிறது...
உன் ஸ்பரிசமும்..
எச்சில் முத்தமும்...

உன் பிஞ்சுக்
கைகளில்
எப்போதும்
சிறைபடக்
காத்திருந்த
பொழுதுகள் ஆயிரம்...

நீ
வீடு மாற்றி
சென்றதிலிருந்து
வெறுமையாய்
இருக்கிறது
என் பொழுதுகள்..

அவ்வப்போது
நீ
முன்னர் கொடுத்த
முத்தங்களே
மீட்டெடுக்கின்றன...
அவசர காலங்களில்...

நீ...

காலைப் பனியினை
தரிசித்த
இயற்கையின்
சத்தங்களை
பதிவு செய்த
அனுபவம் சொல்லி
படுக்கையில்
புரண்டு கொண்டிருக்கும்
என்னை விழிக்க செய்கிறாய்...
விலக்குகிறேன்
போர்வையோடு..
சோர்வையும்..

நான் செய்ய
நினைப்பவற்றை
செய்து முடித்து விட்டு
விழி விரிய செய்கிறாய்...
சிந்தித்து
செயல் படாமலிருக்கும் என்
நிலையினை
நகையாடுகிறது உன் செயல்..

கடக்க வேண்டிய எல்லைகளை
கண்டு பிரமித்து நிற்கையில்
எனக்கு முன்னே சென்று
கைதூக்கிவிட காத்திருகிறாய்..
என் இதயம்
சிறகு முளைத்து
பறக்கிறது உனக்கு முன்னால்..

எல்லோருக்குமானவனகா
நீயிருந்த போதும்
உணர்கிறேன்
சில நேரங்களில்...
எனக்கானவனாக ...

நமக்கிடையேயான
வார்த்தை பரிமாற்றங்களின்
மத்தியில்
சம்மணமிட்டு எழுகிறது
மௌனம்...

அது உடை படும் போது
விடை தெரியும்..
எல்லாக் கேள்விகளுக்கும்...

காத்திருப்பு படர்கிறது...
நம் வெளியெங்கும்..

புன்னகை

வழியில்
எங்காவது
சந்தித்தால்
உதிர்த்துப் போக
புன்னைகையாவது வேண்டும்...

இப்போதே
விதைத்துப்
போகலாம்
அதற்கான
துவக்கப் புன்னகையை...

புத்தகங்கள்- சிறுகதை

சிரித்தபடியே சொன்னான்...'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது. ..' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என்றபடி விடைபெற்று வந்துவிட்டேன்..

வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன்...நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? ..இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் என்னிடம் எனக்கு தெரிந்த யாரும் சொல்லவில்லை...சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா?.. அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல் என்னிடம் இல்லாமல் இருந்ததா?..இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது..?ஒரே குழப்பமாக இருக்கிறதே ..சரி அவன் நாளை சந்திப்பதாக சொல்லி இருக்கிறான்.. அவனிடமே கேட்டு விடலாம்..

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது..ஒரு சிறிய ஆனால் கனமான பையொன்றை என்னருகில் வைத்துவிட்டு தன்னுடைய கால்சட்டையை லேசாக தூக்கிக் கொண்டு மணலில் அவன் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்..

நான் கால்களை நீட்டியபடியிருந்தது அவனுக்கு எரிச்சல் தரவில்லையென்று
உணர்ந்தேன்..அவன் தந்த பையைத் திறந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தேன்... இதுவரை நான் கேள்விப்படாத எழுத்தாளர்கள் .. நாவல்களாக, கதைகளாக,கவிதைகளாக கைகளில் கனத்துக் கொண்டிருந்தனர்.. அவனே ஆரம்பித்தான்..

ஒவ்வொரு எழுத்தாளர்களின் செல்வாக்கு பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான்...அதுமட்டுமன்றி அந்த புத்தகங்களின் ஒரு சிறு சாராம்சத்தையும் பகர்ந்தான்..நான் விழிவிரிய
ஆச்சர்யத்துடன் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இவ்வளவு நாள் இவனைப் பற்றி அறியாமலிருந்து விட்டோமே என்ற ஏக்கத்தை தூவியபடி இருந்தது அவன் பேச்சு...

அவனிடம் கேட்பதற்கென்று சேர்த்து வைத்த கேள்விகளுக்கும் அவனது வார்த்தைகள் பதில் சொல்வதாக இருந்தது...அந்த பையை வீட்டுக்கு கொண்டு வந்து எனது அறையெங்கும் பரப்பி வைத்துக் கொண்டு ஆச்சரியங்களோடு பார்த்திருந்தேன் .. எவ்வளவு மிகப் பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்று என்னோடு..

ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்து லேசாக புரட்டி பார்த்து விட்டு பக்கத்திலேயே வைத்தபடி இருந்தேன்..சிறிது நேரத்தில் எனது அறையெங்கும் பரவி இருந்த புத்தகங்கள் ..என்னை சுற்றி அடுக்கப் பட்டிருந்தது போல இருந்தது.. ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் மிக நெருங்கிய நட்பை பெற்று விட்டேன்.. இப்படியே நாட்கள் நகர்ந்து போனது...நான் புத்தகங்களுக்கிடையில் ஊர்ந்து கிடந்தேன்..தீராத தாகத்துடன் வரிகளை வலிகளை விழுங்க கற்றுக் கொண்டு விட்டேன் ..அந்த அறையை விட்டு வெளியே எங்கும் நகர்ந்த பாடில்லை..யாரும் என்னைதொந்தரவும் செய்ய வில்லை.. பூட்டப்பட்ட அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே யாரவது முக்கியமான நபர்கள் எங்கள் வீட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்துக்
கொள்வதோடு சரி...

ஒரு கட்டத்தில் புத்தகங்களின் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தேன்.. சில தாள்களோடும் ..சில எழுதுகோல்களோடும் .. குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அந்த குறிப்புகள் ஒரு பக்கம் தாள்களாக பரவி ஒரு குவியலை உருவாக்கிஇருந்தது..இப்போது புத்தகங்கள் தன் எடையை இழக்க ஆரம்பித்தது.. நான் புரட்டிப் படித்த புத்தகங்கள் காற்றில் மிதந்தன..ஒரு காகிதத்தைப் போல.. இப்படியே அந்தரத்தில் நான் படித்த புத்தகங்கள் காகிதத்தை போல மிதக்க ..நான் எடுத்த குறிப்புகள் தரையோடு தரையாய் கிடந்தது..

புத்தகங்களோடு படுத்துக் கிடந்த இரவுகளில் பசியறியாது..
உடல் இயக்க வெளிப்பாடுகள் ஏதுமின்றி இருந்தது ஆச்சரியமாய் இருக்கிறது..

ஒருவேளை அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களோடு நானும் உண்டு , கழித்து ,ஊர் சுற்றியது காரணமாய் இருக்கலாம்..
சில நாட்கள் கழித்து எனக்கு புத்தகங்கள் பரிசளித்தவன் வந்தான்..என் அறையை திறந்து மூடினேன்.. உள்ளே வந்து பார்த்தவன் வியந்துபோனான்.. அப்போது அவன் தந்திருந்த புத்தகங்கள் காற்றில் மிதப்பதை விட்டு ஒவ்வொன்றாய் தரையில் விழ.. எனது குறிப்புகள் இப்போது அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது..

அவன் வேறு புத்தகங்கள் எதாவது கொண்டு வந்திருக்கிறானா என்றுக் கேட்க அவன் நூலகத்திலிருந்து வந்ததாக ஒரே ஒரு புத்தகத்தை நீட்ட அதையும் வாங்கி அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. எனது தாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததே யொழிய அடங்கவில்லை..எனது நாட்கள் இப்படியே நகர்வதை அருகிருந்து பார்த்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.. இப்படியே விட்டால் நான் பைத்தியமாகி விடுவேனென்று அவனிடம் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்லவும் அவன் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்..

தீராத தேடலுடன் படித்தபடி இருந்த என்னை தான் படிக்கப் போவதாக சொன்னான்.. அதிர்ச்சியுடன் நிமிர்ந்த போது எதையும் கண்டு கொள்ளாதவனாக வேக வேகமாக புரட்டினான்...

அதற்கு பிறகு நான் எதையும் படிப்பதே இல்லை..எங்கேயாவது எழுத்துக்கள் தெரிந்தாலே எரிச்சலைடைகிறேன்..என் பார்வையிலிருந்து எழுத்துகள் ஓடி ஒளிய வேண்டும் என விரும்புகிறேன்.. வீட்டிற்கு வாங்கி வரும் பொருட்களைச் சுற்றி இருக்கும் தாள்கள் கூட கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன.. அவன் இன்னும் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறான்......

தூத்துக்குடி முத்து

முத்துக்கு பெயர் பெற்றது
தூத்துக்குடி...
தூத்துக்குடியே பெற்றெடுத்த
முத்து நீ...

உன் தீக்குளிப்பை
ஈனர்கள் சிலர்
ஏளனமாய் பேசலாம்..
அது எப்போதும்
நடப்பதுதானே...

உன் தியாகம்
ஏராளமானோரை
உசுப்பி விட்டிருக்கிறது...

இருட்டை கொளுத்திப்
போட்ட வெளிச்சமே...
பல முகத்திரைகளை
கிழித்தெறிந்த தீவி(வீ)ரனே

வரலாற்று நாயகன் நீ...
வரலாற்றை புரட்டும் நாயகன் நீ...

உன் வெளிச்சத்தில்
பலரின் முகங்களும்
வெட்ட வெளிச்சமாயின..

நீ இட்ட தீ
புகைகிறது உலகமெங்கும்...
இனத்தீயாய்..

இது விளையாட்டு

வேடிக்கைதான்
பார்க்க முடிகிறது..
சிலரால்..

விளையாட்டையும்...
வெடிகுண்டு போடுவதையும்...

கர்ணா..

பணத்தின் பின் சென்ற
இனமழிக்க துணிந்த
வரலாற்றுத் துரோகியே...

நீ உயிர் துறந்திருந்தால்
உலகமே உன்னை கொண்டாடிஇருக்கும்..
உயிருக்கு பயந்து
எதிரிக்கு ஏவல் செய்யப் போனா(நா)யே ...

பூமித்தாய் உன்னை சுமந்ததிற்கே
தலைகுனிகிறாள்..
இரட்டையர்களில் ஒன்று
இதயமற்றுப் பிறந்ததை
காலம் அவளுக்கு தாமதமாய்
உணர்த்த நிலைகுலைந்த
அவளைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
என் தாய் மாமன்..

ஒன்று கேள்
ஈனப் பிறவியே...

காலத்தால்
யூதாஸ்
இயேசுவால்
மன்னிக்கபடலாம்..

எட்டப்பன்
கட்டபொம்மனால்
மன்னிக்கப்படலாம்...

காட்டிகொடுத்த கர்ணாவே..
ஆயிரம ஆண்டுகள்
கடந்த பின்னும்
காலமும் மன்னிக்காது..
தமிழினமும் மன்னிக்காது...

அழிந்து போ
அடியோடு அழிந்து போ..

என்ன செய்ய?

நான்கு விக்கெட்
எடுத்ததற்கே
கல்லெறிகிறாய்...

நாற்பது ஆண்டுகளாக
ஆயிரமாயிரம் உயிர்களை
கொல்லும்
உன்னை
என்ன செய்ய வேண்டும்?...

அணி

காதணி
கையணி
காலணி
கழுத்தணி
யாவற்றையும்
கழற்றி வைத்து விட்டு
விளக்கணைக்கிறேன்..
உருவக அணி
உவமை அணி
சொல்பொருட்பின்வருநிலையணி
தற்குறி பெற்றணி
வரிசையாக அணிவகுத்து
நிற்கிறது..

தொலைக்காட்சியும் தொல்லையும்...

சின்னத் திரை மோகம் பிடிபட
சிந்தனையின் வேகம் தடைபடும்..

காய்கறிச் சந்தையில்
விலையினை தெரிந்துகொள்வதை விடவும்
சீரியல் நடிகைகளின்
நிலையினை தெரிந்து கொள்ளவே முனைவர்..

வீட்டிலிருந்தே திருவண்ணாமலை
தீபம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வர்..
பக்தியாய் முக்தி நோக்கி சக்தி கேட்பார்..

விளம்பரங்கள் பார்த்தே
விடிந்தது முதல்
விழிகள் தூங்கும் வரை
அதனை பொருட்களும் வாங்கப்படும்
பலவீடுகளில் ...
வேண்டாதவற்றையும் வாங்கி நிறைப்பார்
சிலவீடுகளில் ...

அடுத்த தலைமுறையில்
இதெல்லாம் நடக்கும்..

உயிர்கொல்லும் குளிர்பானங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் குவிப்பார்..
உடல்நலம் குன்றம் போது
இளநீரில் இருந்தோ நொங்கிலிருந்தோ
தயாரிக்கப்பட்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
மருந்துகள் அதிக பயன் தரும்..

எட்டுமணியானால்
மின்வெட்டானாலும்
கண்ணில் தாரை தாரையாய் நீர் வழியும்..

அறிவியல் அப்போது சொல்லும்
குறிப்பிட்ட நேரத்தில்
தொடர்ச்சியாய் பார்த்த
தொடர்கள் முடிந்த பின்னும்
முடிவிலியாய் தொடரும் கண்ணீர்
பரிணாம வளர்ச்சிஎன்று...

கணவன் மனைவிக்கிடையேயான
பரஸ்பரம் குறைந்து மாதத்தில் ஒருநாள்
பேசுவதற்காகவே
ஒருநாள் தேர்ந்தெடுக்கப் பட்டு
கொண்டாடப்படும் நாளாக
வெளியில் எங்காவது சந்தித்துப் பிரியும்
நிலை வரும்..

ஒரு வீட்டின் அத்தனை
அறைகளையும்
கண்ணாடி, துணிமணிகள் போல
தொலைக்காட்சிப் பெட்டிகள்
அலங்கரிக்கும்...
ஆளுக்கொரு அறையில்
தொலைகாட்சியில்
முகம் புதைத்திருப்பர்கள்...

தனிக்குடும்பம்
கூட்டுக்குடும்பம் மறைந்து
ஒரு நபர் வீடுகளாக
அறைகள் மாறும்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீதிக்கொரு பள்ளி கட்டுவோம் என்பது போல...
ஊருக்கொரு கட்சித் தலைவார்கள்
ஈசல்களாய் சேனல்கள் தொடங்குவார்கள்..

நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்கள் வருவது போய்
விளம்பரங்களுக்கிடையே
நிகழ்ச்சிகள் வந்து போகும்..

மட்டைப்பந்து
அதாவது ஆங்கிலத் தமிழில்
கிரிக்கெட்...
கைப்பந்து
கால்பந்து மறந்து
மட்டைப்பந்தோடு
மந்தையாய் திரிவார்கள்...
குழந்தைகள்..மாணவர்கள்..

சிலம்பாட்டம்-சிம்புவின் படமல்ல...
தமிழரின் கலை
சிலம்பாதாம் ஒரு படத்தின்
பெயராக மட்டுமே அறியப்படும்..

திரையரங்குகள்
மூடப்பட்டு
கடித முகவரிகளிலோ
முகவரி தேடி வரும்
புதியவர்களுக்கோ
திரையங்குகள் பெயர்கள்
அடையாளப்படும்..

திரைத்துறை அடியோடு
சின்னத்திரைக்கும் புலம் பெயரும்..
புரட்டுவாரின்றி
புத்தகங்கள் தெம்பும்..

தொடர்ந்து சீரியல்
பார்பவர்களின் சங்கம்
தொடங்கப்படும்..
அதுவும் கூட்டப்படாமலே
இருக்கும்...
கூட்டப்பட்டாலும்
விட்டுப்போன நாட்களில்
நடந்த நிகழ்ச்சிகளை
அசைபோடவே அது பயன்படும்..

அண்டை வீடு
அண்டார்டிகாவில் இருக்கும்..
அண்டார்டிகா
அடுக்களைக்குள் அலறும்..

சேனல்களில் செய்திகள் மாறுபடும்..
உண்மைகள் வேறுபடும்..
சிலர் NDTV,BBC களில்
உள்ளூர் செய்திகளை அறிவார்கள்..

உறவுமுறைகள் கேள்விக்குறியாகும்..
ஒரு குழந்தை தன் தாயைக்
கண்டறிவதே பெரிய கின்னஸ்
சாதனையாகப் பேசப்படும்...

சந்திராயன் விண்ணிலிருந்து
நிலவோடு பூமியையும்
புகைப்படம் எடுத்து அனுப்புகையில்
ஒயர்களால் மரங்கள்
கட்டப்பட்டிருப்பதாக
காட்சிகள் சொல்லும்...
அங்கே
உறவுகள் அறுபட்டிருக்கும்...இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?