Wednesday 25 March, 2009

சாம்பல் துகள்கள்..

சிறிது உலர்ந்த முத்தங்கள்
காய்ந்த கண்ணீர் சுவடுகள்
அப்போதுதான்
முளைவிட்ட காயங்கள்...
இவற்றோடு
உடைத்து போன
சில காதல் துண்டுகளையும்..
சேகரித்து வெளியேறுகிறேன்...

என் சுவடுகளெங்கும்
உன் பிம்பங்களே தெரிய
சேகரித்த யாவற்றையும்
எரிக்கிறேன் அந்நிலவொளியில்..
பேருந்து நிலையத்தின் பலத்த
சத்தங்களுக்கிடையில்..

சாம்பல் துகள்கள் மிஞ்சுமென
பார்த்திருக்க
வெந்தும்
வேகாததுமான
கட்டையாக
கிடக்கின்றன அவைகள்..

அங்கிருப்பவர்களின்
அதட்டலுக்கும்
அன்னியப் பார்வைக்கும்
கரையொதுங்கி
பாதி கரியான
கட்டையோடு தொடர்ந்து
சுழல்கிறது என் காலச்சக்கரம்,...

நிர்வாணம்...

நிர்வாணம்
நிர்பந்தங்களால்
வேறு வேறாய் அறியப்படுகிறது...

குழந்தையின் நிர்வாணம்
குற்றமானதல்ல..
பெண்ணின் நிர்வாணம்
குற்றமற்றதல்ல...


பிற பெண்களின்
நிர்வாணத்தை ரசிப்பவன்
இழிவுபடுத்துகிறான்..
தன் தாயையும்..
மனைவியையும்..


தன் தவறை
ஒத்துக் கொள்பவர்களைவிட
நியாயம் கற்பிப்பவர்கள்
பெருகிவிட்ட
தேயிலை பூமியில்

தேகங்கள்
சிதைக்கப்படுவதற்கும்
கொடூர புணர்வுக்குமே ..


என் சகோதரிகளின்
யோனிகளில்
கொட்டப்படும்
ரத்தங்கள் கறையானவை...

துளிர்க்கும்
கருக்கள்
சிங்கமென்று கொக்கரிப்பவனே...
கேள்...
ஒருபாதி சிங்கமெனில்
மறுபாதி...


காத்திரு
அந்த உறுமல் சத்தத்தினூடே..
அது புலிக்கு சொந்தமானது ....



அனுபவங்கள்..........

புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

குறுகிய கால
அனுபவமெனினும்
அதுபோதும்
வாழ்நாள்முழுமைக்கும்..

கசப்பானவையோ
இனிப்பானவையோ
அவை அனுபவங்கள்தான்..

உணர்வுகளையும்
உரிமைகளையும்
அடகு வைக்க நேருகிறது.
மீட்டெடுக்க முடியாத
நேரத்தில்....

இழப்புகளோடு
புறப்பட்ட இடத்திற்கே
திரும்புகிறேன்...

புதிய வலிகளை
ஏற்றுக்கொள்வதிலும்
பழைய வலிகளோடு
ஒத்துப் போய் விடலாம்.. என
திரும்புகிறேன்
புறப்பட்ட இடத்திற்கே...

Tuesday 24 March, 2009

இசைக்கும் வீணை..

இசைப்பதை நிறுத்திய கலைஞனும்
இசைக்க மறுக்கிற வீணையும்..
இயற்கையின் நிழலில் ...

மீட்டப்படாத வீணையில்
சில நரம்புகளை
ஒழுங்கு படுத்துகிறான் ..

வீணை
அபரிமிதமான இசையை
வெளிப்படுத்தி
கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு
பரிமாணத்தை
அறிமுகப்படுத்த ..

அவ்விசையில் மருகும்
அவன்
மீண்டும் மீண்டும் வாசிக்கிறான்..
ஒரே ராகத்தை..
வீணை ஒவ்வொருமுறையும்
புதிய பாவத்தை..

இருள் விலகிய பின்னும்
இசைத்தபடி அவன்..
இசைந்தபடி வீணை...

யாதுமானவனே..

யாதுமானவனே
யாதுமானவலாய்
இசைகிறேன்
மீட்டெடு ....
கடந்தகாலத்தின்
துயரச் சுவடுகளிளிருந்தும்
நிகழ் காலத்தின் தத்தளிப்புகளிலிருந்தும்..

எதிர்காலத்தின்
வெற்றிப் பதிவிற்காக...

விடிவதற்கான சாத்தியங்கள்...

இருக்கை தேடியலைந்த
களைப்பில்
சோர்வுறுகிறது..
கனவுகளின் எதிர்பார்ப்பு..

சுமைகளையும்
சுகங்களையும்
ஒருசேர தைத்து
பயணப்படும் மனது..

உறங்குவதற்கு சாத்தியமற்ற
இப்பொழுதுகள்
தூவியபடி இருக்கிறது..
உறக்கத்தின் விதைகளை..

ரயிலின் கடைசிப் பெட்டிடில்
ஜன்னலோர ஒற்றை இருக்கையில்
எதிரெதிர் துருவங்களில்
புன்னகையில் எண்ணங்கள் கோர்த்து
ஒரு பாதையில் நாம்...


விடிவதற்கான சாத்தியங்களோடு
இரவு கரைகிறது...
தண்டவாள ஓசைகளிலும்
பயணிகளின் பேச்சரவங்களிலும்...

எதையும் உள்வாங்காமல்
எதிரிருக்கும் நீ மட்டுமே
நிறைந்திருக்கிறாய்..
என் சுவாசமெங்கும்....

கனவுகள் மெய்ப்பட..

சூரிய ஒலி எட்டிப்பார்க்க
வாய்ப்பில்லா சிற்றறைக்குள்
எனது புதிய வாசம்..

அறையெங்கும் அடுக்கபட்டிருந்தது
உன் ஆளுமை..
தேடல் மட்டுமே இயக்கத்தில்..

உணர்வுகள்
ஓடியாடி விளையாட
செய்வதற்கு ஒன்ற்மற்றவர்களாய்..
உருமாற்றியிருந்தது நிகழ்வுகள்...

இயல்புக்கு மாறான
இமைகளுக்கு நேரான
இதயத்திற்கு கூரான
ஒன்றை கண்டெடுத்தேன்..

நீயறியாது பத்திரப்படுத்தி
வெளியேறுகிறேன்..
நீயுமறிந்த ஒன்றை...

'கனவுகள் மெய்ப்பட'
வாழ்த்துகிற தேவதைகளுக்காக
மட்டுமல்ல...

எந்நொடியும் சிந்தித்தபடியிருக்கிறேன்...
நாமிணைந்து பணியாற்றி..
பரபரப்பாகும் கனவோன்றையும்..
பரவசமாகும் இரவொன்றையும்..

இரவின் கண்ணீர்..

அந்த இரவு
அத்தனை சுலபமானதாய்
இருக்க வில்லை..

அந்த இரவின் கண்ணீர்
அத்தனை கரிப்பாயும்
இருந்ததில்லை...
அதற்கு முன்னதான நாட்களிலும்
இனி வரும் பொழுதுகளிலும் கூட...

எனக்கு முன்
இரண்டே விஷயங்கள்தான்
கையழைத்தது..

ஒன்று வலிகளைச் சுமக்கும்
இதயமும்..
மற்றொன்று வலிகளை
பரப்பும் உறவும்...

இந்த இரண்டு வலிகளும்
இமைகளை தானே திறந்து
வந்தமர்ந்து கொண்டன...


மீள்வதற்கு வழியற்று
மீட்ட ஆரம்பித்தேன்..
வலிகள் சுமைகளாக இல்லை..
சுகங்களாகவும் இல்லை...

வலிகள்
மரத்துப் போயிருந்தன....

Monday 23 March, 2009

சாம்பலாகும் வரை...

இந்த முறை
எனது துயரங்களை
எழுதி விடப் போவதில்லை...

ஏனெனில்
அவை வலிமையிழந்துவிடக்கூடும்
புதைத்து வைக்கவும் விருப்பமில்லை..
என் பார்வையிலேயே உலா வரட்டும்..

அப்போதுதான்
எனக்குள் எரியும் பொறி
பெருநெருப்பாகும்..

அந்த நெருப்பு
அந்த பொய்யான
ஒரு சார் விந்தில் துளிர்க்காத அவனை
சுட்டெரிக்கும்
சாம்பலாகும்வரை....

அதனாலொன்றும்...

உன் நிழல் கூட
என் மீது படிவதில்லை...
அதனாலொன்றும் கவலையில்லை..

உதிர்க்கிற வார்த்தைகளில்
ஒன்றுகூட அன்பாயிருப்பதில்லை..
அதனாலொன்றும் மோசமில்லை..

கடக்கிற நொடிகளில்
பார்வை கூட பரிமாறப்படுவதில்லை..
அதனாலொன்றும் நட்டமில்லை...

ஒரே வீட்டில்
இப்படி இருக்க முடியுமா?
என்பவர்களுக்கு
அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

பறை

இதயத்தின் திரை
கிழித்து
ஊடுருவிய
பறையின் அதிர்வு
இன்னும் நின்ற பாடில்லை...

தலைமுறை கோபங்களை
தப்பில் தாளமாக்கி
உட்செவியினை உசுப்பிவிடுகிறது..

ஐம்புலன்களையும் அதிர வைக்க
ஐம்புலன்களும் ஆடுகிற காட்சி
விடுதலையின் ஓலத்தின் நீட்சி...

காற்றினை கட்டுக்குள் வைத்து
இசைக்கப்படும் அவ்விசை
வீரியத்தின் வெளிப்பாடு..

இன்னும் இன்னும் கிழிக்கட்டும்..
அதிகாரங்களையும்
அக்கிரமங்களையும்
தன்னகத்தே கொண்ட
செவிப்பறைகளை
இந்த பறை...

Friday 6 March, 2009

சுனை நீர்....

ஊற்றுக் கண் தேடியலைந்த

மானின் கால்கள் சோர்வுற்று நிழலில்

ஒதுங்கியது...


இலைகள் மேவிக்கிடந்த

நீரூற்று காற்றின் விலக்குதலில்

கண்ணிற்பட்டது...


தாகம் தீர மான் நீரை

உறிஞ்ச புதிய புதிய

சத்தங்களோடு

வெளிப்படுகிறது...நீரூற்று..


சுனை நீரின் சுவை ஏறுகிறது...

சுவை ஏறிக் கொடிருக்கிறது..

அதிசயம்தான்..பூக்கள் யாவும்...

மல்லாந்துறங்கும்
வண்டின் மீது
பூக்கள் மகரந்தங்களைச்
சொறிவதும்....

நெப்பந்தஸ் போலான
தாவரங்களின் செயல்பாடும்...
அதிசயம்தான்...

வண்டின் ஒற்றைக் கால்
உரசுதலில்
பூத்துக்கொட்டும்
கிளிட்டோரியஸ்
என்றும் ஈரம் காயாத இதழ்களையும்...
வற்றி போகாத நீர்த்துளிகளையும்...

Thursday 5 March, 2009

கடந்து போன காற்றலையின் ஊடே..

அன்புள்ள சகாவுக்கு...

கடலுக்குள் நீந்த கரையோரத்தில் நடந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது...திடீரென வீசிய புயல் காற்று கடலுக்குள் தள்ளி விட்டது போல
இருக்கிறது என் நிலைமை...

வேறென்ன சொல்ல சகா...காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள்.. கல்லடி படலாம் ..ஒன்றும் மோசமில்லை... வெட்டி விடலாம் என்று எப்படி யோசிக்க முடிந்தது.. என்று எனக்கு விளங்கவே இல்லை... கனவு போல இருக்கிறது நடந்த யாவும்...

எனக்கு நல்ல நண்பனாக, குருவாக,இந்த உலகத்தில் யாவுமான ஒரு உறவாக இருந்த உன்னதமான நட்பு ...அப்படிப்பட்ட நட்பின் கதகதப்பில் இருந்த நான் அந்த கூட்டை விட்டு சின்னஞ்சிறிய இறகுகளோடு பறக்க நேர்ந்தது
வருத்தமாய் இருக்கிறது...சகா...

என்னை பிறர் ஏளனம் செய்யும் போதெல்லாம் அது என்னை பக்குவப்படுத்தும் பயிற்சியாகவே இருந்திருக்கிறது..அந்த எதிர்ப்பின் வலி என்னை தீண்டிய போதெல்லாம் வார்த்தைகளில் ஒத்தடம் கொடுத்த தோழன் நீ..

சில சமயங்களில் நீயும் என்னை காயப்படுத்தினாலும்..அது காயமல்ல..என் மீதான நேயம் என்பதை புரிந்து வைத்திருக்கிறது நம் நட்பு...யாருக்கும் உணர முடியாது நம்மை தவிர இதை.. உன் வார்த்தைகளிலே சொல்ல வேண்டும் என்றால்.. நம் நட்பு தாய்ப்பாலை விட சுத்தமானது...

உன்னிடம் பேச நிறையவே விஷயங்கள் இருந்த போதிலும் ஒரு சிறு இடைவெளியில் மீண்டும் உன்னை சந்திப்பேன் என்று உறுதி கூறி இப்போது விடைபெறுகிறேன் ஒன்று மட்டும் சொல்லி.....

உனது நல்ல எண்ணங்களும் ..எனது நம்பிக்கையும்.இடைவிடாத முயற்சியும்..
என்னை உயரும் என்பது திண்ணம்...

இவள் எப்போதும் இயங்கி கொண்டிருப்பாள்....
நட்பிலும்..நம்பிக்கையிலும்...
இன்னும் இவள் பேசுவாள்..
இணைந்திருங்கள்......
தற்காலிகமாக வானொலியில் அல்ல... இணைய தளத்தில்....

தோழமையுடன்......
இவள் பாரதி..

Monday 2 March, 2009

இலை கிள்ளும் விரல்களுக்கு...

ஒப்பனைக்கு
ஒப்புக் கொடுக்க
ஒருபோதுமெனக்கு சம்மதமில்லை...

ஒப்பிட்டு
உயர்வு தாழ்வு பேச
உள்ளத்தில் அனுமதியில்லை...

தேடலில்
தொலைந்து போகுமென்னை
தேடலே மீட்டெடுக்கும்..

ஏதுமற்ற
ஏளனங்களை
ஏறிட்டும் பார்ப்பதில்லை..

ஒன்றுமற்ற
உரையாடல்களை
ஒருகணமும் விரும்புவதில்லை..

செதுக்கி
மேம்படுத்த உதவாதவை..
உண்மையான விமர்சனங்களில்லை..

ஒதுக்கப்படும் ஒன்றே
ஒத்துக் கொள்ளப்படும்
இதற்கு காலம் பதில் சொல்லும்..

முளைவிடும் போதே
இலை கிள்ளும் விரல்கள்
நீருற்ற போவதில்லை...
வேர்களின் வளர்ச்சிக்கு...

களையெடு உள்ளே...
முளைவிடு வெளியே...
தலைஎடுப்பாய் தரணிபோற்ற.....

நண்பனே .... அந்த நாள் நண்பனே..

எனது ஒருநாளில்
சில பல நிமிடங்களை ...
பூக்கச் செய்தவன்...
ஒவ்வொரு நொடியையும்..
முடமாக்கி போய்விட்டான்..

புகையை கூட என்
தூக்கி எறிந்தவன்..
என் புன்னகையையும்
மென்று தின்றுவிட்டான்..

என் கண்கள் கலங்கினாலே
ஆயிரம் காரணங்கள் கேட்கிறவன்...
தாரை தாரையாய் வழியும்
கண்ணீருக்குள் நீச்சலடிக்கிறான்..

நிலவொளியில் என்
நிழலையும் கவனித்தவன்...
இன்றெனது நினைவின்
நிழலுக்குள் கூட ஒதுங்க மறுக்கிறான்...

எது நடந்தாலும்..
நண்பனே..
நீ நண்பன்தான்..எனக்கு..

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?