Thursday 25 February, 2010

வாசகங்கள் & வாகனங்கள்


நாம் யாரென்பதை வெளிப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் சமயங்களில், இடங்களில் அதை வெளிப்படுத்தியபடிதான் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் விரும்பியோ, விரும்பாமலோ நம்மை பிரதிபலித்தபடிதான் இருக்கிறோம்.

நமக்கு முன்னே செல்லும் வாகனங்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களையும், அந்த மனிதர்களின் எண்ணங்களையும் சாலைகளில் தினமும் பார்க்கலாம். பேருந்திற்குள்ளும் பயணச்சீட்டைக் கேட்டு வாங்கவும் என்ற அறிவிப்பையும், இல்லையென்றால் என்ன விளைவு ஏற்படும், எந்த சட்டம் பாயும் என்ற எச்சரிக்கையையும் பார்க்கிறோம். இன்னும் எந்த வசதியும் இல்லாத குக்கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பல வருடங்களாய் எழுதப்பட்டுக் கிடக்கும் திருக்குறளும் நாம் கண்டறிந்ததே. அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களில், வார்த்தைகளில் வெளிப்படுவது அவரவர்களின் உணர்வுகளும், எண்ணங்களுமே.

வாசகங்கள் வாழ்க்கையினைச் சொல்வதாகவும், தொழிலைக் குறிப்பதாகவும், மனநிலையைப் பிரதிபலிப்பதாகவும், தான் சார்ந்த மதத்தினை சொல்வதாகவும், அவரவர்க்குள்ள ஈடுபாட்டை பறைசாற்றுவதாகவும் மாறிப் போயிருக்கிறது என்பது நிதர்சனமே.

சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னலில் நமக்கு அருகிலோ, முன்னோ செல்லக் கூடிய அல்லது நிற்கக் கூடிய பல நூறு வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை நிச்சயம் கவனித்திருப்போம். அதில் இருக்கக்கூடிய வாசகங்கள் நம்மிடம் சிறு கவனிப்பை எப்படியோ பெற்று விடுகின்றன. இருசக்கர வாகனங்களின் பின்னால் ‘இது எனது தந்தையின் பரிசு’, ‘என்னைப் பின் தொடராதீர்கள்’, ‘நான் கெட்ட பையன்’ போன்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதை கண்ணுற்றிருப்போம். சிலவற்றில் அவர்கள் எந்த துறையைச் சார்ந்தவர்கள் என்பதும் புலப்படும்.

அரசு வாகனங்களில் தமிழில் ‘அ’ என்றும் ஆங்கில எழுத்தில் ‘ஜி’ என்றும் எழுதப்பட்டிருக்கும். ஊடகத்துறையைச் சார்ந்தவர்களின் வாகனங்களில் ‘ப்ரெஸ்’ என்ற வார்த்தையையும், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் இப்படி அவரவர் துறை சார்ந்த அடையாளங்களையும், குறியீடுகளையும் இட்டு வைத்திருகின்றனர்.

இவை நமக்கு முன்னே செல்லும் வாகன ஓட்டியை யாரெனச் சொல்வதாக அமைகிறது. ஆனால் இவைதான் நமக்கான அடையாளங்களா? என்ற கேள்வியினூடே இவை எதற்காக என்றும் யோசிக்க வைக்கிறது. ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் தான் யாரென்பதை வெளிப்படுத்த வேண்டும், பிறர் மதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலே இதற்கு காரணமாக இருக்கும்.

மூன்று சக்கர வாகனமான ஆட்டோவில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் பிரசவத்திற்கு இலவசம், பெண்ணின் திருமண வயது 21 என்பதையும் கடந்து காதல் பற்றிய சில வரிகளையும், சில பொன்மொழிகளையும் தாங்கி உலவுகிறது.
‘இழப்பதற்கு ஒன்றுமில்லை
பெறுவதற்கு இவ்வுலகமே இருக்கிறது’
என்று எழுதப்பட்டு முன்னே செல்லும் வாகனத்தின் வாசகத்தைப் பின்னால் செல்லும் வாகன ஓட்டி படிக்கையில் அவனது மனநிலையும் சிறு அசைவைக் காண்கிறது. விரக்தியிலோ, தோல்வியிலோ, சோர்வுற்ற மனநிலையிலோ செல்லும் ஒருவனை சில நொடிகளேனும் சிந்திக்க வைக்கிறது. இது போன்ற உந்துதல் வாசகங்களை எழுதி வைப்பது பிறரை முன்னேற்றுவதாகவும் பொது நல நோக்காகவும் அமையும். அல்லது அந்த வாசகம் எழுதப்படிருக்கும் வாகன ஓட்டியின் மனநிலையாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்மையும் வெளிப்படுத்தி, பிறரையும் சிந்திக்க வைக்கும் வாசகங்கள் குறைவாகவே உலா வருகின்றன.

சில தான் சார்ந்திருக்கிற கட்சிக் கொடியின் சின்னம், கட்சியின் தலைவர் என்று பந்தாவோடு செல்வதும், வீட்டிலிருக்கும் குழந்தைகளின் பெயர்களைத் தாங்கியும் இருக்கின்றன. குழந்தைகளுக்கு தனது பெயர் எழுதப்பட்டிருக்கும் வார்த்தையைத் தொட்டுப் பார்க்க ஆசையாய் இருக்கும். பெரியவர்களுக்கே சாலையின் இருமருங்கிலும் எழுதப்பட்டிருக்கும் பெயர்ப்பலகையில் தனது பெயரையோ, தனக்கு பிடித்தமானவர்களின் பெயரையோ காண நேரும் போது ஒரு கணம் சிந்தனை மேல் எழும்பி அடங்குவதை உணர முடியும்.

‘இது பள்ளி வாகனம், எச்சரிக்கை தேவை’ என்பது போன்ற அறிவிப்போடு செல்லும் பள்ளி வாகனங்கள், எரிபொருளை நிரப்பிச் செல்லும் வாகனங்கள், பால் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இவையெல்லாம் தனது வாகனத்தில் பயணப்படுகிற பொருளை அல்லது மனிதர்களை அறிய வைக்கிறது. சாலைகளில் சைரன் எழுப்பி வரும் அவசர ஊர்திகள், ஆம்புலன்ஸ்கள், காவல் துறை வாகனங்களும் நமது கவனத்தை திசை திருப்புகின்றன. அந்த வாகனங்களுக்கு வழி விட்டுச் செல்லும் பழக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தற்போது அப்படி வழிவிடாமல் இடையூறாக இருப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

வாகனங்கள் வாசகங்களை எந்த ஒரு எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இன்றி சுமந்தே செல்கின்றன. வாசகங்கள் வெறும் எழுத்துக்கள் அல்ல. தனது அடையாளம். மனதின் பிரதிபலிப்பு. அவற்றை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். மற்றவரை சந்தோஷப்படுத்தி தானும் மகிழ்வுறும் போது வாசகங்கள் வாழ்க்கையாகும்.


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?