Saturday 27 June, 2009

ஸ்பரிசத்தின் மறுபெயர்...

"அணு அணுவாய் சாக
முடிவெடுத்த பின்
காதல் சரியான வழிதான்"..

என்ற கவிதையை காதலிக்காதவர்கள் இருக்க முடியாது...
காதலை பற்றி சொல்வதாகவே சிலர் சலித்துக் கொள்கிறார்கள்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை பற்றி பேசுவதில் தவறென்ன?
இருக்க முடியும் ?

உலகம் மிகப் பெரியது
உலகத்தை விட பெரியது காதல்..
மரணம்தான் மிக வலியானது..
மரணத்தை விட வலியானது காதல்..
அணுதான் மிக சிறியது..
அணுவிலும் சிறியது காதல்..

இப்படி காதல் காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கிறது
ஆயினும் சுவாசத்தை தனித்து உணர்வதில்லை..
காதலும் அப்படித்தான்.. உணர்வதில்லை.. உணர்ந்தவர்கள் சரியாக வெளிப்படுத்துவதில்லை..

மழையில்லாத ஊரில் மட்டுமல்ல..
காதலில்லாத ஊரிலும்
கவிதை வெளிநடப்பு செய்துவிடும்..

காதல் மனக்கதவை தட்டியதும் திறந்துவிடாதீர்கள்..
பலமுறை தட்டுகையில் மூடியே வைத்திருக்காதீர்கள்..

காதலும் ஒரு அனுபவம்..
உணரத்தான் முடியும் அதன் வலியையும்..சந்தோசத்தையும்...

உணர்வோம்..காதலை காதலால்..
ஸ்பரிசத்தின் மறுபெயரும் அதுவே.
.

முகமூடி..

அன்று அவன்
குழப்பத்திலிருந்தான்
கையிலிருந்த
நான்கைந்து முகமூடிகளில்
எதை அணிவதென..?

எதேச்சையாய்
எதிர்கொள்ள நேரிட்டதில்
அவனது மனைவிக்கான
முகமூடியை அளித்து
தூவினான் சில சொற்களை..

முகமூடிகள் ஏதுமற்ற நிலையில்..
அவனிடமே கையளித்து
கடந்தேன் அவ்விடத்தை..

வழியினில் கிழிசலான
முகமூடிகள் சில காலில்
ஒட்டி கொள்ள
உதறியும் உதிராத அவைகளுடன்..
பேருந்தேறினேன்..

இரவு முத்தம்...

அவ்வளவு நிசப்தத்துடன்
நிகழ்த்தப்பட்ட முத்தத்தில்
இரவு மூர்ச்சையிழந்து
இருந்தது...

மீண்டும் நிகழ்ந்த
முத்தத்தின்
சிறு சத்தத்தில்
விழித்துக் கொண்டது இரவு..
.

காலியான இருக்கை...

ஞாயிற்றுக் கிழமையில்
நிரம்பியிருக்கும்
காலியான இருக்கைகளுடனான
பயணம் இதமானது..

எல்லா சன்னலோர
இருக்கையின் வழியேயும்
நானே தெரிகிறேன்..

வழித்தடங்களெங்கும்
விடுமுறையின் பிரதிபலிப்பு..
சிறுவர்களுக்கு விளையாட்டுகளாகவும்
பெரியவர்களுக்கு பேச்சாகவும்
பெண்களுக்கு எவ்வித மாற்றமின்றியும் ..

பண்பலை வரிசை
விரல்நுனியில் மாறிக்கொண்டிருக்க
என் காதுக்குள்
காற்று ஏதோ சொல்ல முயன்று
தோற்று கொண்டிருந்தது..

பேருந்து...

*உப்புப் பெறாத சண்டைக்கு
அதிகாலையில்
கோபித்து
காலியான
பேருந்தில் ஏறினேன்...

கண்கள் ஊறியது
அவன் தேடி வருவானென..?
நேரம் கரைந்தது..
பேருந்தின் சக்கரங்கள்
சுழன்றதில்
என் காதல் நசுங்கி உப்பியது.
.

என் உயிரின் பார்வைக்கு..

நலமாகத்தானிருந்தேன்..
உன்னை சந்திக்காத வரையில்..
பறந்து திரிந்து தானிருந்தேன்..
உன்னிடம் பழகாத வரையில்..
எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இருந்தேன் ..
உன்னை எதிர்கொள்ளாத வரையில்..

சிறகுகளை சுருக்கியதில்லை..
உன் நிழலை பார்த்திராத வரையில் ..
சிந்தனைகள் செரித்தபடிதானிருந்தன..
உன் அறிவை உண்ணாத வரையில்..
நினைவுகள் சலனமற்று இருந்தேன்....
உன்னை தரிசிக்காத வரையில்..

என் பூமியில் மழையும் வெயிலும்
மாறி மாறித்தான் தழுவியது..
உன் சுற்றுவட்டப் பாதையில் நுழையாத வரையில்..
என் கதிர்கள் ஒளி பாய்ச்சியபடி தானிருந்தன..
உன் எண்ணங்கள் குறுக்கிடாத வரை..
என் இரவுகள் விடியலை நாடித்தான் இருந்தன..
உனது இமைகளுக்குள் உட்புகாத வரையில்..

எனதிரப்பைக்கு பசித்து தானிருந்தது..
உன் இதய நிழலில் இளைப்பாராத வரையில் ..
எனது பார்வைக்கு தடை இருந்ததில்லை..
உன் காட்சி கடந்து போகாத வரையில்..
எனது விரல்களுக்கு வலி தெரிந்ததில்லை..
உனது கைகளுக்குள் சிறைப்படாத வரையில்..

எனது நுரையீரலில் சுவாசம் தடைபட்டதில்லை..
உன்னிலிருந்து கசியும் மதுவின் வாசம்
நாசி துளைக்காத வரையில்..
என் கனவுகள் தேங்கி நின்றதில்லை
உன் வார்த்தைகளில் உறையாத வரையில்..
என் உயிர் சொட்டு சொட்டாய் உதிர்ந்ததில்லை..
உன் நிஜம் கண்டு திடுக்கிடாத வரையில்..

நானெப்போதும் என்னை நொந்ததில்லை..
உன் அன்பின் வெப்பம் சுடாத வரையில்..
நானெப்போதும் சோர்ந்ததில்லை..
உனது பதிலின் பதிவை பெறாத வரையில்..
நானெப்போதும் அழுததில்லை..
உனது ஆளுமையினில் அடிமையாகாத வரையில்..



ஆலமரம்..

இப்படியெல்லாம்
நடக்குமென்று தெரியாது..

அந்த
ஆலமரம் சரிந்த பின்னே
அதனின் நிழலில் இளைப்பாறிய
அந்த நான்கு பறவைகளும்
திசைமாறி போகுமென்று..

அவை முன்னர்
உணர்ந்ததுமில்லை..
ஆலமரத்தினால்
தான்
வேர்கொண்டுள்ளோமென..

இப்போது வருந்துகின்றன..
வேரினை இழந்த பின் ..
விதை தேடி..

என்னால் முடியாது..

எப்போதும் என்னால் முடியாது..
ஒரு துரோகத்திலிருந்து
நம்பிக்கையை பெற..
ஒரு ஏமாற்றத்திலிருந்து
எதிர்பார்ப்பை பெற..
எப்போதும் என்னால் முடியாது..

ஆனபோதிலும்
நம்பிக்கையின் பின்னே
ஒளிந்திருக்கும் துரோகத்தையும் ..
எதிர்பார்ப்பின் பின்னே
ஒளிந்திருக்கும் ஏமாற்றத்தையும்
என்னாலறிய முடிகிறது ..
அதை சூடி வரும்
நிஜங்களின் நிழல் பார்த்தே..

சொந்தமாக முடியாத உறவுதான் அது..

அந்த பறவைக்கும்
எனக்குமிருக்கும் புரிதலை
யாரால் புரிய முடியும்?

தன்னுணவினை
பகிரவும்
தன்னுணர்வினை
வெளிப்படுத்தவும்
யாரிடமிருந்து கற்றுக் கொண்டது?
மனிதனைப் போன்றவனிடம்
நிச்சயமாய் இருக்காது..

வெளிசெல்லுகையில்
நிழலாகவும்
உறங்கச் செல்கையில்
கட்டிலின் கீழாகவும்
எப்போதும் என்னை
வட்டமிடும் அந்த பறவை
சொந்தமாக முடியாத
உறவுதான்...

வைகை நதி..

கடல் போய்
சேர்வதற்குள்ளே
வற்றிவிடுகிற அல்லது
பயன்பட்டு விடுகிற
வைகையின்
கரையிலிருந்து
வந்தவள் நான்..

கனவுகளை
செயல்படுத்துகையில்
எதிர்ப்படுகிற
தடைகளால்
எண்ணங்களை வற்றிப்போகவோ
திரும்பப் பெறவோ
ஒருபோதும் சம்மதமில்லை..
அது சாத்தியமுமில்லை...

தான் உருவான இடத்திலேயே
கலக்கும் நதியாயின்றி
இந்த நதி
புது கடலையே உருவாக்கும்..
இன்னும் பிற நதிகளோடு..

காதலின் அடியில்..

யாவற்றிலிருந்தும்
மீட்டெடுக்க
வல்லமையுள்ள
உன்னால்தான்
இப்போது வீழ்ந்து கிடக்கிறேன்
யாதொன்றாலும்
மீட்டெடுக்க இயலாத
காதலின் அடியில்...


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?