Wednesday 4 February, 2009

நானாக நீ...

எப்படி
எனக்குள்
வந்தாய்..?
சொல்லத் தெரியவில்லை..

நானாகவே
நீயிருந்தாய்..
நான் நினைப்பதெல்லாம்
நிகழ்த்தியிருந்தாய்..

தானாக யாவும்
சொல்வாய்..
சமயத்தில்
என்னை வெல்வாய்...
மௌனத்தில்
பாதி கொல்வாய்..

திசைகளைத் திறந்தவன்..

சிரிக்கிறாய்..
சிதறடிக்கிறாய்...

புன்னகைக்கிறாய்..
புதைக்கிறாய்..

அரவணைக்கிறாய்..
அழ வைக்கிறாய்..

நிற்கிறாய்..
நிறைக்கிறாய்..

கற்பிக்கிறாய்..
கற்கிறாய்..

அறிகிறாய்..
ஆராதிக்கிறாய்..

ஆள்கிறாய்..
வீழ்கிறாய்..

திசைகளைத் திறக்கிறாய்..
தீண்டாமை வெறுக்கிறாய்..
தித்திப்பாய் இருக்கிறாய்..

சோகங்கள் புதைக்கிறாய்..
சுகங்கள் விதைக்கிறாய்..
தாகங்கள் தீர்க்கவே
தருணங்கள் பார்க்கிறாய்...

காலக் கண்ணாடியாய்
கண்முன்னே நடக்கிறாய்..
பிம்பமாய் தொடர்கிறேன்..
உன் திசைஎங்கும்..

காதல் சுமந்து..

வாரி வாரி
இறைக்கிறாய்..
காதலை
வாங்கும் திறனின்றி
திரும்பிச் செல்கிறேன்..
என் முன்னே
அலை வருகிறது
உன் காதலைச் சுமந்து..

அழிக்கிறேன்.

சுவடுகளை
அழிக்கிறேன்..
அழிப்பதும்
சுவடுகளாகிறது...

பூனை..

மௌனப் பூனை
உலகைச் சுற்ற விரும்பி
ஒரு மதிய நேரத்தில்
வெளிக் கிளம்பியது...

இதமான
பயணம்
இறுக்கமாக ஆரம்பித்தது..
அவனைச் சந்தித்ததிற்குப் பின்..

பூனையைத்
தடவிக் கொடுத்தவன்
மெல்ல மடியிலிட்டு
வருடினான்..

பூனை எழ
முயற்சிக்க
வாலையும் காலையும்
ஒரு சேர பிடித்து
சுழற்றும்
பாவனையில் வைத்திருந்தான்..

பூனையின் மிரண்ட கண்கள்
வழி ரத்தம் கசிய
இரக்கமே இல்லாமல்
அதன் வாலைக் கடித்துத் துப்பி
தூக்கிஎறிந்தான்..

திரும்பி வந்த பூனை
பின் ஒருபோதும்
மதியத்தில்
வெளிக்கிளம்பியதில்லை...

காணாத போது..

உன்னைக்
காணாத போது
எழுவதும்..
உன்னைக்
கண்டவிடத்து
அடங்குவதுமான
உன்னால்
மட்டுமே
பதில் தரக் கூடிய
கேள்விகள் சில
காத்திருக்கின்றன..
எப்போது
எதிர் கொள்ள சம்மதம்?

மௌனம்

என்
வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என்
மௌனத்தையும்
மொழி பெயர்க்க
உனக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது தோழா...

கிளிசரின்

உன்
வார்த்தைகளில்
கிளிசரின்
தடவியிருப்பாய் போலும்..

அது
என்
கண்களில்
கண்ணீரைக்
கண்டுவிட்டுத்தான்
ஓய்கின்றது..

நேசம்..

உன்
மீதான
நேசத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன்..
நினைவுக் குப்பிகளுக்குள்..

நீ
தட்டி விட்டுச்
செல்லும் அதனை..
மீண்டும் நிரப்புகிறேன்
பழைய நேசத்துடன்...

கனவுகள்

கனவுகள்
காத்திருக்கின்றன
சலனமற்ற
என் தூக்கதிற்க்காய்...

தூக்கம்
காத்திருக்கின்றது ..
வரமறுக்கும்
கனவுகளுக்காக...

இந்த இரவு
எதை பரிசளிக்க
போகிறதோ?

பூமிகள்.

இன்று
உச்சிவெயிலில்
சோப்பு நுரைகளால்
காற்றுத் திரைகளால்
நிறைய பூமிகளை
பிரசவித்தபடி இருந்தேன்..

நிழல் கடந்த
பூமிகள் சில
சூரியன்களாய்
மாறிப் போயின..

அக்கம் பக்கமிருந்த
சின்னஞ்சிறார்கள்
ஓடி வந்து தங்களது
சிறு கைகளால்
பூமிகளை
உடைக்க ஆரம்பித்தனர்..

சளைக்காமல்
பூமிகள்
என் வாயிலிருந்து
பிரசவமாக
அவர்களின் கைகளில்
உடைபட்டு
மறைந்த படி இருந்தன....

வேறு வேறு
உலகமாயிருந்த
அவர்களுக்கும்
எனக்கும்
புது உலகம் உருவானது..

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?