Saturday 25 August, 2012

ஓடும் ரயிலிலும் புகார் செய்யலாம்



இவள் பாரதி


பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது ரயில்வே ஹெல்ப்லைன் 99625 00500

ரயில் பயணங்களின்போது... உடன் பயணிப்பவர்களாலோ, ரயில் நிற்கும் இடத்திலோ, ரயில்வே பிளாட்பாரத்தில் நிற்பவர்களாலோ ஏதேனும் பிரச்சினை எனில், பிரச்சினை எங்கே நடந்ததோ அந்த இடத்தில் இறங்கி, ரயில்வே காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டியிருக்கும். பயணத்தையும் பாதியில் கைவிட வேண்டியிருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் புகார்  செய்யவே தயங்குவார்கள். இப்போது அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துள்ளது. ஓடும் ரயிலிலேயே புகாரளிக்கக் கூடிய வசதிதான் அது.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினை குறித்து புகாரளிக்க வேண்டுமெனில், ரயிலில் இருக்கும் பாதுகாப்பு போலீசாரிடம் கூறினால் புகாரைப் பெற்றுக்கொண்டு ரசீது கொடுப்பார்கள். இது குறித்து குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்து புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். புகாரின்போது உங்களின் முழு முகவரியையும் வாங்கிக்கொண்டு தேவைப்பட்டால் முதல் தகவல் அறிக்கையை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள்.

இதுதவிர ரயில்வே ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. 99625 00500 என்ற இந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தரலாம். ஒருவேளை, ரயிலில் இருக்கும் பாதுகாப்பு போலீசாரை உங்களால் சந்திக்க முடியவில்லை என்றால், மேற்கண்ட எண்ணுக்கு தகவல் கூறினால், அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ரயில்வே போலீசாரையோ அல்லது அதே ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரையோ நீங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
ரயில்களில் தொல்லைப்படுத்தும் நபர்கள் முதல் கோச்சில் தண்ணீர் இல்லை என்றாலும், யாருக்காவது உடனடி மருத்துவ உதவி தேவை என்றாலும் இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களுக்கும் இந்த எண்ணில் உதவி கிடைக்கும். அதுமட்டுமின்றி, வேறு மாநிலத்தில் பயணம்  செய்யும்போது உதாரணமாக, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் பயணம் செல்கிறோமெனில் வேற்று மொழிக்காரர்கள் இந்த ஹெல்ப் லைனில் பேசினால் அந்த ரயிலில் பயணம்  செய்யும் பகுதியில் உள்ள ரயில்வே காவல்துறையின் எண் உதவிக்கு தரப்படும். அந்தக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஒருநாளைக்கு 50 அழைப்புகள் வரை ரிசீவ்  செய்யப்படுகிறது. இதில் மூன்று ஷிஃப்ட்டாக வேலை செய்யும் அனைவரும் மென்மையாகப் பேசக் கூடிய பெண்களே. எந்த ஒரு அழைப்புக்கும் தேவையான பதிலை தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்கிறார்கள். இதே எண்ணுக்கு மூன்று இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், லைன் கிடைப்பதில் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பும் குறைவே.

- இவள் பாரதி

கிளறிய குப்பையில் கிளம்பிய பூதம்!



இவள் பாரதி

தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்களில் குப்பைகள் மலையெனக் குவிந்து வருவதால், மக்களின் உடல்நலத்திற்கு உருவாகிவரும் ஆபத்துகள் பற்றி, ‘ஐயோ ஆபத்து!’ என்ற தலைப்பில் (காண்க: ‘புதிய தலைமுறை’ 12 ஜனவரி 2012 இதழ்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.  நாடு முழுக்க குவிந்து பெருகும் இந்தக் குப்பை பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், புதிதாகப் பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

அவை:
1971 முதல் 2011 வரையிலான கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான நகராட்சிகளிலும் (ஒருசில நகராட்சிகள் தவிர)

குப்பைகள் ஏலத்தில் விடப்படவில்லை.

ஒருசில நகராட்சிகளைத் தவிர மற்ற நகராட்சிகளுக்கு குப்பைகளால் எந்த வருவாயும் இல்லை.

விளைநிலங்களுக்கும் உரமாக செல்வது கிடையாது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் குழித்துறை, கரூர், தாராபுரம், இராஜபாளையம், சத்தியமங்கலம், திருச்செங்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய சில நகராட்சிகளில்மொத்தமே 15 லட்சம் ரூபாய் மட்டுமே குப்பைகளின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

வீணாக ஆற்றிலும், கடலிலும் கொட்டப்படுவதில்லை என்பது கூடுதல் தகவல்.

இத்தனை ஆண்டுகாலமாகவே குப்பைகள் பிரச்சினையில் அரசு மிக அலட்சியமாகவே இருந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இந்தத் தகவல்களை, தமிழகத்தில் இருக்கும் அனைத்து நகராட்சிகளிலும் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறார்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி.

தொடர்ந்து நல்லசாமி கூறும்போது, "மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பிரிக்க தமிழக அரசு வாங்கிய பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளால் முழுமையான பயன் உண்டா என்று தெரியவில்லை. மக்களும் அப்படி பிரித்துக் கொடுப்பதில் முழு ஆர்வம் காட்டவில்லை. அரசும் அதைப் பிரித்து எடுப்பதில் முனைப்புடன் செயல்படவில்லை. விளைவு- இதற்காக செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான தொகையும் தெருக்கோடியில் குப்பையாய் போய்விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுழற்சிமுறையில் கிராமங்களில் இருந்து தயாராகும் விளைபொருட்கள் நகரத்திற்கு விற்பனைக்கு வரும். நகரத்தில் வீணாகும் கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு கிராமத்திற்குப் போகும். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்தியபோது நாடு முழுக்க விளைச்சலும் நன்றாகவே இருந்திருக்கிறது. பின்னர் சிறிது சிறிதாக குப்பைகளுடன் பிளாஸ்டிக் சேர ஆரம்பித்துவிட்டதால்,அதைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்க முயற்சிக்காமல் செயற்கை உரத்திற்குத் தாவினார்கள் விவசாயிகள். இப்போது இயற்கை உரம் என்பதே அழிந்து போய், செயற்கை உரம் கோலோச்சிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவால், செயற்கை உரத்தால் தயாரான உணவுப் பொருட்களால் மக்களுக்கு உடல்நலக்கேடும், மக்கும் பொருட்களுடன், மக்காத பிளாஸ்டிக்கும் கலந்து நிலத்தையும், நீரையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுமாக இன்றுவரை பாதிப்புகள் தொடர்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் மேற்சொன்ன சுழற்சிமுறை பாதிக்கப்பட்டதே. இந்தச் சுழற்சி முறை மீண்டும் வரவேண்டும். மேலும் குப்பைகளை ஆறுகள், குளங்கள் மற்றும் கடலில் கொட்டவில்லை என்று நகராட்சிகள் சொல்வது நாடறிந்த பச்சைப்பொய் அல்லவா என்றார்" குமுறலுடன்.


குப்பைகளை பஸ்பமாக்கலாம்!
வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தோடு பெங்களூருவில் உருவாக்கப்பட்ட ஓர் இயந்திரம், ஆயிரம் கிலோ குப்பையைக் கொடுத்தால் 2 கிலோ சாம்பலாக வெளித் தள்ளும். இந்த இயந்திரத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என எந்த வகை குப்பையையும் போடலாம். ஆனால், அதில் சொட்டுத் தண்ணீர்கூட இருக்கக்கூடாது. வாட்டர் பாட்டில்களை போடும்போது தண்ணீர் இல்லாமல் போட வேண்டும். கடையில் வாங்கிய சாம்பார், சட்னி பாக்கெட் ஆகியவற்றை வெறும் பையாகப் போடவேண்டும். காந்தத் தொழில்நுட்பத்தோடு இயங்கும் இந்த இயந்திரத்திற்கு மின்சாரம் தேவையில்லை. இதன் விலை 7 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை. இதிலிருந்து கிடைக்கும் சாம்பலைக்கொண்டு பீங்கான் பொருட்கள் செய்ய முடியும். இதைக் கவனித்துக்கொள்ள அதிகமான ஆட்களும் தேவை இல்லை. இன்னும் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த இயந்திரம் நடைமுறைக்கு வரும்போது குப்பைகளை பஸ்பமாக்கி விடலாம்!


எந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கலாம்?
நீங்கள் வாங்குகிற எந்த ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பாட்டிலின்  அடியிலும் முக்கோண வடிவமிட்டு ஓர் எண் இருக்கும். ஒன்று முதல் ஏழு வரை இருக்கும் இந்த எண்தான் அந்த பிளாஸ்டிக்கின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமரின் தரத்தைக் குறிக்கும். ஒரேவிதமான பிளாஸ்டிக்கையெல்லாம் ஒன்றாக உருக்கி, மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக இந்த எண்ணைக் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எண்ணை வைத்து எந்தவிதமான பிளாஸ்டிக்கை எதற்காக உபயோகப்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

எண்: 1 PET
பொதுவாக ஒருமுறை உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 2 - HDPE (High density poly ethylene)
ஷாம்பூ டப்பாக்கள், சில கடினமான பிளாஸ்டிக் பைகள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை.

எண்: 3 - PVC ( Poly vinyl chloride)
உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், கிளீனிங் பவுடர்கள் இருக்கும் டப்பாக்கள் இந்த வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. டையாக்ஸின் போன்ற நச்சுவாயுக்களை வெளிப்படுத்துவதால் உடலுக்குப் பலவிதத் தீங்குகளை விளைவிக்கக் கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்கக்கூடாது.

எண்: 4 - LDPE (Low Density poly ethylene)
இந்த எண் உடைய பிளாஸ்டிக்குகள் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்த ஏற்றது. மற்ற பிளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

எண்: 5 - Poly propylene
சூடான பொருட்களை வைக்கவும், பொதுவான உணவுப் பண்டங்களை வைக்கவும் பயன்படுத்தக் கூடியது. இந்த வகை பிளாஸ்டிக் பொருளை மைக்ரோ வேவிலும் உபயோகப்படுத்தலாம்.

எண்: 6 - Polystyrene
உணவுப் பொருட்கள் வைத்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துச்செல்ல ஏற்றதல்ல.

1 முதல் 4 எண் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் உணவு எடுத்துச்செல்லத் தகுதியானவை அல்ல. இவை வெப்பச்சூழல் மாறும்போது கார்சினோஜின் எனப்படும் வாயுவை வெளியிடுவதால், இது புற்றுநோய்க்குக் காரணமாக அமையும்.

5, 6 எண் கொண்டவை உணவு, தண்ணீர் ஆகியவை வைக்கவோ, எடுத்துச்செல்லவோ தகுதியுடையவை.

7 எண் கொண்ட பாலிகார்பனேட் பிளாஸ்டிக் வகைகளை உலக நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.


இவள் பாரதி (நன்றி - புதியதலைமுறை, ஆகஸ்ட் 23, 2012)

Thursday 9 August, 2012

கொடுமணல் அகழாய்வு - மண்ணுக்குள் புதைந்திருக்கும் மகத்துவம்!



இவள் பாரதி

தமிழரின் தொன்மை குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொடுமணல் அகழாய்வு மிக முக்கியமானது. ஏன்?

நொய்யலாற்றின் வடகரையில் ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல்.இந்த ஊரிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடுமணல் தொல்லியல் களம் 50 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதி முதன்முதலில் 1961ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை அங்கு தொடர்ந்து அகழாய்வுகள் நடந்து வருகின்றன. புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் வரலாற்றுத் துறையைச் சார்ந்த மாணவர்களான வி.பி.யதீஸ்குமார், சி.செல்வகுமார், இரா.ரமேஷ், அ.பெருமாள், பா.பாலமுருகன், பி.ரமேஷ் மற்றும் செ.நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை கண்டறியப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டறியப்பட்டவை
கொடுமணலில் வாழ்ந்த மக்கள் அப்போதே சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலும் முன்னேறி இருந்திருக்கிறார்கள். இங்கு தொழிற்கூடங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இருந்திருக்கக் கூடும். அரிய கல்மணிகள் இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு ஆபரணங்களாக வடிவமைக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பிறமாநிலத்தோடும், இலங்கையோடும் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. கொடுமணல் ஒரு தொழிற்பேட்டையாக விளங்கியிருக்க வேண்டும் என்று இந்த ஆய்விலிருந்து அறியப்படுகிறது. இது குறித்து பேராசிரியர் ராஜன், "கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் வெவ்வேறு இனத்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தபோது பிராகிருத மொழியின் கலப்பு ஏற்பட்டு எல்லா மொழிகளிலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் பிராகிருத பேர்கள் தமிழ்மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ் மொழியின் ஒலி வடிவத்தில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட  130க்கும் மேற்பட்ட மண்பாண்டக் குறிப்புகள் இங்கு கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு மண்பாண்டக் குறிப்புகள் இங்குதான் கிடைத்திருக்கின்றன. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கணப் பிழையில்லாமல் எப்படி எழுதியிருப்பார்கள்... மொழியை கற்பித்தது யார் என்ற கேள்வி எழுகின்றது. கிறிஸ்துவுக்கு முந்தைய 300 ஆண்டுகளில் வாழ்ந்த வெவ்வேறு வகையான கையெழுத்துக்களை அடையாளம் காண முடிந்தது.

சங்ககால சேரர் தலைநகரான கரூரை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் வணிகப்பாதையில் கொடுமணலின் அமைவிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் கொடுமணம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் அணிகலத் தொழிலில் சிறப்புற்றிருந்தமை, ‘கொடுமணம் பட்ட... நன்கலம்’ (பதிற்றுப் பத்து 67) என கபிலரும், ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ (பதிற்று. 74) என்று அரிசில்கிழாரும் குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், இரும்பு, எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும், கண்ணாடி மணிகள் மற்றும் செம்பு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத்தொழில் செழிப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத்தொழில் சிறப்புற்றிருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், மணிகள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகிறது. ஓர் அகழாய்வுக்குழியில் 170க்கும் மேற்பட்ட சங்குகள் குவிக்கப்பட்டிருந்ததன் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன" என்கிறார்.

"இங்கு பெரும்பாலானவை பச்சைக்கல் என்று அழைக்கப்படுகின்ற பெரில் (Beryl), நீலக்கல் என்று அழைக்கப்படுகின்ற சபையர், வைடூரியம் என்று அழைக்கப்படும் லேபிஸ்லோசுலி, பளிங்குக்கல் என்று அழைக்கப்படும் குவாட்ஸ் (Quartz), ஊதா நிறத்திலுள்ள அமதிஸ்ட், சூதுபவளம் என்று அழைக்கப்படுகின்ற கார்னீலியன் (Carnelian) மற்றும் அகேட், பிளாக்கேட் அய், ஜாஸ்பர், ஒனக்ஸ் போன்ற அரிய கற்களால் உருவாக்கப்பட்ட கல்மணிகள் கிடைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த வைடூரியம், மகாராஷ்டிரா, குஜராத்தைச் சார்ந்த அகேட், கார்னீலியன், இலங்கையைச் சார்ந்த பிளக்கேட் அய் போன்ற அரிய கல்மணிகள் இங்கு கிடைப்பது இவ்வூர் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கியமை புலப்படுகிறது. இங்கு கிடைக்கும் தமிழ்மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த மனிதர்களின் பெயர்களும் வணிகர்களின் பெயர்களும் இவ்வூர் வணிகத்தில் செழுமை பெற்றிருந்ததை நமக்கு புலப்படுத்துகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் பெயர்களான சம்பன் ஸுமநன், திஸ்ஸன், ஊரானன், ஸிலிகன், ஸந்துவன், பெரியன் ஸாதன், சம்பன், மாத்தன், சபாமந்தை பம்மாத(ன்) போன்ற பெயர்கள் அக்கால சமூகத்தின் புதிய பரிமாணத்தை விளக்குவதாக உள்ளன" எனப் பலவிஷயங்களை முன்வைத்தார்.

இறந்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகள் கல்வட்டத்தின் நடுவே உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கல்லறையின் முன்பு முற்றம் போன்ற பகுதியும், இம்முற்றத்தின் எதிரே மேலும் இரு கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையிலும் நீள்செவ்வகம், வட்டம் மற்றும் சாவி துவாரம் போன்ற வடிவிலான இடுதுளைகள் காணப்படுகின்றன. இக்கல்லறைகளில் 10 டன்னுக்கும் அதிகமான  எடைகொண்ட பலகைக் கற்களுடன் அரிய கல்மணிகள், இரும்பிலான கத்திகள், கேடயம், அம்பு முனைகள், வாள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இவை பண்டைக் காலத்தில் இறந்தோருக்கு அளிக்கப்பட்ட மரியாதையை புலப்படுத்துகிறது.

1985, 1986, 1989, 1999 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் கொடுமணலின் முக்கியத்துவம் உணரப்பட்டது. தற்போது மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனங்களின் உதவியுடன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப்பகுதியில் அகழாய்வை இன்னும் பரந்த அளவில் மேற்கொண்டால் சங்க கால சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளும், வாழ்க்கை முறைகளும் வெளிப்படும். இப்போது மேற்கொண்டுவரும் ஆய்வில் தமிழுக்குப் பெருமை சேர்ப்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் கவலையும் தொற்றிக் கொண்டுள்ளது.

தொழில்வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, விவசாய நிலங்கள் கட்டிடமாதல், மக்கள்தொகைப் பெருக்கத்தால் இந்த ஆய்வுக் களங்கள் நெருக்கடிக்குள்ளாகலாம் என்பதுதான் தொல்லியல் துறையினரின் கவலை. ஏனெனில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் இந்த நிலங்கள் இன்று ஒரு விவசாய நிலமாக இருக்கும். நில உரிமையாளரிடம் அனுமதியைப் பெற்று நிலத்தைத் தோண்டி அங்கு அகழாய்வு முடித்த பின் மீண்டும் பழையபடியே நிலத்தை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிலத்தின் வேறொரு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு தொடர்பணி. ஒரு கட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படாத விவசாய நிலங்கள் கட்டிடங்களாக மாறிவிடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே அதற்குள்  ஆய்வுகளை விரைந்து செய்ய வேண்டும். ஆனால், ஆட்கள் பற்றாக்குறையை விட பொருளாதார உதவி பெரிய அளவில் கிடைக்காததால், தொல்லியல் ஆய்வுகள் மிக மெதுவாகவே நடந்து வருவதாகக் கவலையுடன் கூறுகின்றனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.


-இவள் பாரதி

கலைகளின் தலைநகரம்



இவள் பாரதி

எத்திசையும் சென்று புகழ் குவித்து வரும் கலைஞர்களை உருவாக்கி வருகின்றன, சென்னையிலுள்ள பல அமைப்புகள்

ஆடல், பாடல், இசை, ஓவியம் மற்றும் சிற்பம் என அத்தனை கலைகளிலும் தலைசிறந்து விளங்கும் கலைஞர்களை தன்னகத்தே கொண்ட தனிப்பெருமைக்குரியது சென்னை. எத்திசையும் சென்று புகழ் குவித்து வரும் கலைஞர்களை வார்த்தெடுப்பதோடு, அவர்கள் வளர்ந்து செழிக்கவும், கலைகள் தழைக்கவும் எத்தனையோ மையங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாமா?

கலாஷேத்ரா
இந்திய பாரம்பரிய நடனத்தில் சிறப்புடன் திகழ்ந்த ருக்மணிதேவி அருண்டேல் அவர்களால் 1936ல் அடையாறில் கலாஷேத்ரா ஆரம்பிக்கப்பட்டது. இவரது கணவர் டாக்டர் ஜார்ஜ் அருண்டேலுடன் இணைந்து கலாஷேத்ராவை 1962ல் நூறு ஏக்கர் பரப்பளவில் பெசன்ட் நகரில் விரிவுபடுத்தினார். 1993லிருந்து கலாஷேத்ரா அகாதெமியை அரசே ஏற்று நடத்தி வருகிறது. 1994ல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நாட்டியத்திற்காக 1956ல் பத்ம பூஷண் விருது பெற்ற ருக்மணி தேவி இந்தியாவை வடிவமைத்த நூறு பேரில் ஒருவராக, ‘இந்தியா டுடே’ வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். ராதா பர்னியர், ஏ. ஜனார்த்தனன், சாரதா ஹாஃப்மேன், கமலா தேவி சாட்டோபத்யா, தனஞ்ஜெயன், ஜெயஸ்ரீ நாராயணன், கமலா ராஜகோபால் ஆகியோர் கலாஷேத்ரா மாணவர்களில் முக்கியமானவர்கள்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி
1949ல் உருவாக்கப்பட்ட இந்த இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், கடம், கஞ்சிரா,மோர்சிங், கிராமியக் கலை, பரத நாட்டியம் ஆகிய கலைகள் கற்றுத்தரப்படுகின்றன். இவை மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்புகளாகும்.

அரசு கவின் கலைக் கல்லூரி
1850ம் ஆண்டு டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் எனும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட கல்லூரி இது. ஆரம்ப காலத்தில் நாற்காலி, மேஜை என ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்களை கலையழகுடன் தயாரித்துக் கொண்டிருந்தது. பின்னர் தனியொரு பாணியை உருவாக்கிக் கொண்டது. இந்தக் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியர் சிற்பி ராய் சௌத்ரி. சென்னையின் அடையாளங்களில் முக்கியமான உழைப்பாளர் சிலையும், காந்தி சிலையும் ராய் சௌத்ரியின் கைவண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்துரு போன்ற தமிழகத்தின் பிரபலக் கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக்கலை வகுப்பு தொடங்கப்பட்டது.

லலித்கலா அகாதெமி
ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும்  நிறுவனம். இதுவொரு தன்னாட்சி அமைப்பு. இந்த அமைப்பு காட்சிக் கூடம், கலைப்பட்டறை போன்ற வசதிகளை வளரும் கலைஞர்களுக்கு செய்து தருகிறது. இது ஒரு வளரும் கலை அருங்காட்சியகம். கல், உலோகம், மரம், செப்புச் சிலைகளை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தரும் இடமிது. ஓவியம், வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் இங்குள்ள கருவூலத்தில் உள்ளன.

சோழமண்டல ஓவியக் கிராமம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழமண்டல ஓவியக் கிராமம். தமிழ் ஓவிய சிற்பக் கலையுலகின் தலைசிறந்த கலைஞர்களான பணிக்கர், தனபால், கன்னியப்பன், ஆதிமுலம், ராமானுஜன் போன்றவர்களின் முயற்சியால் உருவானது இந்தக் கலைக் கிராமம். கலைப் படைப்பாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்தக் கிராமத்தில் கலைஞர்கள் தங்கி படைப்புகளை உருவாக்கலாம், காட்சிப்படுத்தலாம்.


சென்னையில் உருவான கலைஞர்கள் இருவரின் குரல்கள்
இசையமைப்பாளர் தேவா
"எந்தவொரு தொழிலையும் செஞ்சு பொழச்சுக்கலாம்னு வர்ற யாரையும் சென்னையோட முகத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு தொழிலைக் கொடுத்துடுது. இசையில இளையராஜா கோலோச்சிக்கிட்டிருந்த காலத்துல நானும் வந்திருக்கேன்னா அது சென்னை தந்த நம்பிக்கைதான்."

கிரேஸி மோகன்
"அவ்வை சண்முகி’ ஹிந்தி ரீமேக்குக்கு வசனம் எழுத ஹிந்தி ரைட்டர் குல்சார்சென்னை வந்தார். அப்போ, ‘மதராஸிகளுக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம்’னு சொன்னார். ‘எல்லாம் மதர் ஆஸிதான்’னு சொன்னேன். உண்மைய சொல்லணும்னா எனக்கு அடுத்த ஜென்மம் இருந்தா, நான் சென்னையிலேயே  பிறக்கணும்னு ஆசைப்படுறேன்."


சென்னைக்கு வந்து சாதித்த இரு கலைஞர்களின் குரல்கள்
ஓவியர் மற்றும் கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருது
"நான் ஏழாவது படிக்கும்போது மதுரையிலிருந்து ஒரு திருமணத்திற்காக என் சித்தியுடன் சென்னை வந்தேன். திருமணம் முடிந்த பிறகு திருவிளையாடலில் இடம்பெற்றிருந்த பழைய செட்டெல்லாம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. சென்னை ஓவியக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படக் காரணம் அதுதான்.

தனபால், சந்தானராஜ், ஆண்டனிதாஸ் என கிட்டதட்ட இந்தியாவின் மிக முக்கிய மூத்த கலைஞர்கள் ஓவிய ஆசிரியர்களாக இருந்தார்கள். கல்லூரியில் ஓவியம் பயில்வது தவிர உலக சினிமாக்களை அதிகம் அறிந்துகொள்ளவும் சென்னை பெரிய வாய்ப்பாக இருந்தது. சென்னை எனக்கு அற்புத வாழ்வையும், நல்ல வாப்பையுமே கொடுத்திருக்கிறது."

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி
"லண்டன் பிபிசி இண்டர்வியூல, ‘உங்களுக்குப் பிடிச்ச இடம் எது?’ன்னு கேட்டாங்க. ‘சென்னைதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது’ன்னு சொன்னேன். ஏழை, பணக்காரன், நடுத்தரமானவன் எல்லாரும் அவனவனுக்குத் தகுந்த மாதிரி இடங்கள்ல சாப்பிட முடியும். கடைசிவரை தன்னம்பிக்கையும், முயற்சியும் இருக்கிறவனை சென்னை கைவிடாதுங்கிறதுதான் நான் பார்த்த அனுபவம். என்னை வளர்த்தது சென்னைதான்."

இவள் பாரதி


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?