Monday, 1 December, 2008

ஒற்றை சிறகு..

ஒற்றைச் சிறகாய்...ஒற்றைச் சிறகாய்..
காற்றில் பறந்தேன்..
கைப்பிடித்தாய்...

ஒற்றை வரியாய் ஒற்றை வரியாய்
ஏட்டில் இருந்தேன்..
நீ படித்தாய்..

உன் பெயரை சொன்னாலே
உயிரணுக்கள் சலசலக்கும்...
உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..

வித்தகரே வித்தகியே

வித்தகரே வித்தகரே
விதை கற்றுத் தர தயக்கமென்ன...
உத்தமரே உத்தமரே
என்னை ஏற்றுக் கொள்ள கலக்கமென்ன..

உன்னில் என்னைக்
காணும் நேரமிது..
என்னில் உன்னை
காணும் நேரமெது?..

விபரங்கள் தெரியவில்லை இதில்
விரசங்கள் ஏதுமில்லை

பூவுமொன்று தேடி வர
வண்டுக்கென்ன ரோசமிங்கு?
தீவைப் போல தனித்திருந்தால்
தீர்ந்திடுமா ஊடலிங்கு?

சாயம் போகா வானவில்தான்
காயம் பட்டுத் துடிக்கிறதே ..
நீயுமிங்கு விலகி நின்றால்
தேயுமிந்த பிள்ளை நிலா..

உன்னை நெஞ்சில் எண்ணித்தான்
உண்மை எல்லாம் சொல்லினேன்...
உளறிக் கொட்டி விட்டேன்
போய் வரவா...

என் ஆயுளின் அந்திவரை...

என் ஆயுளின் அந்திவரை
அன்பின் அடைமழையாய்
வருவாயா...?

என் வேரினை நனைத்திடவே..
உன் கடைசி மழைத்துளியைத்
தருவாயா..?

நெடுந்தூரப் பயணம் போய் வரலாம்..
நெடுங்கதை பேசி மனம் ஆறலாம்..
தொடர் வண்டி தடதடக்கும்..
மலைச்சாரல் சிலுசிலுக்கும்..

பேசாத கதைகள் பேசிடலாம்..
ஓயாத அலையாய் பேசிடலாம்..

நிலக்கடலை கொறித்து நடைபோடலாம்..
நிலம் பதிக்கும் பாதத்தை எடைபோடலாம்..
மழை வந்து தொணதொணக்கும்..
மரக்கிளையும் முணுமுணுக்கும்..

ஊடலில் உன்னைக் கிடத்திடுவேன்..
கூடலில் என்னை படுத்திடுவாய்...

====================================


உன்னால் முடியாதா ....

முடியாதா உன்னால் முடியாதா
விடியாதா இரவு விடியாதா
யார் சொன்னது? -உனக்கும்
வேர் உள்ளது
வா வா வா
வாழ்வை வாழ்வாய் வாழ்வோம்...

முட்டி மோது முயற்சிகள் செய்..
நெட்டித் தள்ளு..
விட்டில் அல்ல விளக்கில் சாக
விண்மீன் நீயே..

வெற்றி கிடைக்கும் வரை
உறவுகள் சொல்லும் வீண் முயற்சி..
வெற்றி கிடைத்த போது..
உலகமே சொல்லும் விடாமுயற்சி..

இயங்கு இயங்கு இதயமாய்...
இமயத்தை விடவும் உயரமாய்..

பிறைநிலா தேய்வதில்லை..

வெள்ளை இரவே
பிள்ளை உறவே
கொள்ளை போனது
எந்தன் மனதே

பச்சை நிலவே
இச்சை கிளியே
பிச்சை புகினும்
காதல் சிறப்பே..

எழுதப்படா கவிதை நான்
உழப்படா நிலம் நான்-அன்பே
கலப்படம் ஏதுமில்லை -அதனால்
நிழற்படம் தேவை இல்லை...

சிறகில்லா பறவை நான்
உறவில்லா பாவை நான்-அன்பே
குறைகள் ஏதுமில்லை -ஆயினும்
பிறைநிலா தேய்வதில்லை...

உன் குரல் போதும்..

கண்ணே என் கண்ணே
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்..

அன்பே என் அன்பே
நீ அருகிருந்தால்
எனது பூமி சுழலும்..

வானம் அது நம் வீடு..
வாழ்வோம் இரு சிறகோடு...
நிலவில் ஒரு திரை போடு- இந்த
உறவில் இனி பிரிவேது..

புத்தம் புது பூக்கள் மலரும்
நிதம் அது பூமியில் உலரும்..
முத்தமொன்று மேனியில் படரும்..
சத்தமின்றி உயிரணு மலரும்..

ஒருமுறை..

ஒருமுறை ஒருமுறை போதும் - என்
தலைமுறை வரைக்கும் தொடரும்..
மறுமுறை மறுமுறை கேட்டால் - சில
வரைமுறை கடந்திட தொடரும்..

சொல்லிவிட வா..
சொல்லி விட வா..

என் காதும் உனக்கு கருவறை..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கனவும் எனக்கு கருவறை..
உன் வரவைச் சுமக்கும் பலமுறை...

மென் இதயம் தந்தேன் போய்விடு..
கீழ் இமைகளில் கொஞ்சம் ஓய்வெடு..
என் விதையில் மழையாய் தூறிடு..
புது வித்தைகள் கற்றுத் தேறிடு..

நான் உன் வாசகி

நான் உன் வாசகி
என்னில் வா சுகி..
நான் உன் தேவியே
நீ என் தேவையே..

இன்னும் சொல்லுவேன்-
உன் கன்னம் கிள்ளுவேன்
நெஞ்சில் அள்ளுவேன்-உயிர்
நேசித்தே கொல்லுவேன்..

உன் பார்வை என்னில் மேயும்...
தாக வேர்வை ஆறாய் பாயும்..
உன் மோகம் கொஞ்சம் ஓயும்...
என் தேகம் மெல்லத் தேயும்..

என் காதில் காதல் பாடு..
உன் இதழால் இதழை மூடு..
என் உயிரில் உயிரைத் தேடு...
உன் பிரிவில் மரணம் ஈடு..

======================

மௌனம்..

மௌனத்தை உடைப்பது...
எவ்வளவு கடினமொன்று..
அறியாதவன் அவன்

அவனுக்கும்
அவளுக்குமான
மௌனத்திரையைக் கிழிக்கும்
சில செயல்களைச் செய்தேன்...

மௌனம் விலக்கி
புன்னைகையை பிரசவித்து
அவள் போனபின்
அவன் சொல்கிறான்..

எங்களுக்கிடையேயான
மௌனத்தை
கிழித்துவிட்டதால்
நமக்கிடையேயான
சில கோடுகளை
வரைகிறேன்..
விலகி நில் என்கிறாய்...

இன்னும் நீடிக்கிறது..
அவர்களுக்கிடையேயான
நலவிசாரிப்புகளும்..
எங்களுக்கிடையேயான
மௌனப் பொறிகளும்...

புது வாசனை

தீப்பிடிக்கும்
வார்த்தைகளில்...
நீர் தெளித்து கோர்க்கிறேன்....
புதிய வாசனையோடு...
பூக்கிறது சில சொற்கள்..

பரம்பரை கனவுகள்...

எனக்கும்
சில பரம்பரை கனவுகள்
இருக்கின்றது..

அதிலொன்று
அகலமான நீளமான
ஐந்தறை கொண்ட
வீடொன்றில்

வரவேற்பறை
கழிவறை
குளியலறை
புத்தக அறை தவிர
ஐந்தாவதாய்..

அடிமைக்கான
ஆதியாயிருந்த
சமையலறையை
வெற்றாகவே
வைத்திருப்பேன்..

என் பிள்ளைகளுக்கு
அந்த அறையின்
சில கதைகளைச் சொல்வேன்...

அனுமதி

மழை
வரும்போது
அனுமதி கேட்கவில்லை
போகும் போதும் அப்படியே...

வாசனை

மண்ணுக்குள் புதைந்திருக்கும்
வாசனையை
வெளிக் கிளப்புகிறது..
சிறு மழை...

வாசனை
மண்ணுக்கானதா?
மழைக்கானதா?

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?