Wednesday 22 October, 2008

இது பிரிவின் காலம்

கோபத்தில் உன்னால்
உதிர்க்கப்படும்
சிற்சில செயல்கள்தான்
சமருக்கான
அழைப்பாக இருக்க்கிறது...
-------------------------------
போர்க்களத்தில்
நிற்குமென்னை
பூச்சூடி அலங்கரித்து வரச்
சொல்கிறாய்...

எனக்கான அணிகலனே
தைரியம் என்பதை
மறந்து போகாதே...
----------------------
பிரிவுகள்தான்
எனதிருப்பினை
உனக்கு
எடுத்தியம்புமென
பிரிந்து போனேன்..

உணர்த்திவிட்டது
உன் அருகாமையை
எனக்கு...
-----------
முதுகுக்குப்பின்
வார்த்தைகளால் அடிக்கும்
உன்னை விடவும்
நேருக்கு நேராய்
பார்வையால் அறையும்
என் எதிரி மேலானவன்..
----------------------------
உனது
சின்னக் கிறுக்கல்
பெரிய சறுக்கலை
தருவிக்கிறது...

சில சந்தர்ப்பங்களில்
எதிர்பாராத கிறுக்கல்கள்
சின்ன அதிர்வலையைத்
தோற்றுவித்து அடங்குகிறது..
-----------------------------------
நிகழ்வுகளை
பதிவு செய்வதற்காகவே
பயணப்பட்டதில்
காலம் முன்மொழிய
சூழல் வழிமொழிய
புதிய அனுபவமொன்று
அந்நிகழ்விற்கு தலைமை ஏற்றது...
----------------------------------------

கண் பேசும் கவிதைகள் -3

பார்வையாலே
சொட்டுச் சொட்டாய்
நனைத்து
வெப்பமூட்டுகிறாய்...
-------------------------
நீ முட்டாள்
என்பதற்காகவே
அறிவிலியாய்
அறியத் தருகிறேன் என்னை...
-----------------------------------
உனது நினைவுகள்
பௌர்ணமியாய்
தொடங்கி
பௌர்ணமியாய்
முடிகின்றன..
வளராமலும்...
தேயாமலும்...
----------------
வியர்ப்பதற்கே
காரணமானவனே
விசிறியும் விடுகிறான்...
----------------------------
இப்போதெல்லாம்
கவிதை என்றாலே
நினைவுக்கு
வந்துவிடுகிறது..
உனக்கு என் முகம்...
------------------------
நண்பர்களிடம்
கெஞ்சிக் கூத்தாடிக்
கைபேசி கட்டணத்தைக்
கட்டி விடுகிறாய்...

உனது அழைப்பை
நான் பெறவும்..
எனது அழைப்பை
நீ ஏற்கவும்...
---------------


தேனூறும் எண்ணம்

ஒருமுறை
கன்னத்தில் ஒன்று கேட்டு
நீ அடம்பிடித்த போது
என் உதட்டில்
பட்டம்பூச்சியொன்று
நொடியில் அமர்ந்து போனது...

நான் உனக்கு தராததைவிட
அது என்னிடம் பெற்றுச்
சென்றதாகக்
கோபித்து நாள் முழுவதும்
தோட்டத்தில் அதனைத்
துரத்தினாய்...

பின் எப்பொழுதாகினும்
எங்கேனும் அதன் இனத்தைப்
பார்க்க நேர்ந்தாலே
நமது எண்ணங்களில்
தேனூருகிறது...

கண் பேசும் கவிதைகள் -2

பயணங்கள்
கவிதைகளின்
தாய் வீடு போலும்...

குதூகலத்துடன்
வந்து ஒட்டிக்
கொல்கின்றன...

எத்தனையோ நட்புகளுக்கும்
எத்தனையோ காதலுக்கும்
களம் அமைத்த
இரயிலின் இருக்கைகள்
புனிதப்படும்...

கிளைகளுடன்
மீண்டும் பயணிக்கையில் ...
---------------------------------
காத்திருப்புகளில் கூட
பருவம் தோன்றுகிறது...

காதலின் காத்திருப்பு
கோடையாயிருக்கும்...

நட்பின் காத்திருப்பு
வசந்தமாயிருக்கும்...
-------------------------
ஆடை மாற்றி ஆடை மாற்றி
அழகு பார்த்த போதில்
மனமும் தன் ஆடையைக்
கழற்றிக் கொள்ள ...

பாய்ச்சலுக்குப் பதுங்கும்
புலியாய் நரம்புகள் முறுக்கிக்
கொள்ள வேகம் பீறிட்டது...

சற்று நேர
அடங்குதலுக்குப் பின்...
ஒளியுண்டு நிமிர்ந்தாய்
கவியத் தொடங்கியது
என் மீது இருள்...
-----------------------
*முதன் முதலாய்
நாம் பயணித்த
ரயில் கடந்து போகிறது
இரைச்சலுடன்...

உள்ளுக்குள்
நிசப்தமாய்
நம் நெருக்கம்...
-------------------------

கண் பேசும் கவிதைகள்-1

*உனது விரலின்
வெளிச்சத்தில்
என் வெட்கங்கள்
எல்லாம்
கண்ணாமூச்சி ஆடின..

வெட்கம் வடியத்
தொடங்கியதில்
மீறப்பட்ட எல்லைகள்
வெளியின்றியே திரிகின்றன
இன்னமும்...
------------------------
*இரவுக்கும்
விடியலுக்குமான
இடைவெளியில்
தொலைகிறது
நம்பிக்கையின் கணம்...

நிறைவிற்கும்
நிறைவின்மைக்கும்
இடையிலான ஊசலில்
அலைகிறது மனம்...
---------------------
*காற்றில்
விதைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை

நீயோ நானோ
இல்லாத போதுகளில் கூட
நம்மைப் பற்றி
பேசியபடி இருக்கும்
எந்த ஜன்னலோர
பயணியிடமாவது...
--------------------------------
*ஒருமுறை
விதைக்கப்படுவதில்லை
நம்பிக்கை..
ஒவ்வொரு முறையும்
வளர்க்கப் படுவதே
நம்பிக்கை...

ஒருமுறை
ஊற்று எடுப்பதல்ல
காதல் ..
ஒவ்வொருமுறையும்
பிரவகிப்பதே காதல்...
------------------------


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?