Tuesday 30 September, 2008

விளையாட்டு

விளையாட்டாய்
அழுதிருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
சிரித்திருக்கிறேன் சில நேரங்களில்..

விளையாட்டாய்
பேசியிருக்கிறேன் சில நேரங்களில்..

ஒருமுறை கூட
விளையாடியதில்லை
விளையாட்டை
விளையாட்டாய்...

காதுகள்

சுவர்களுக்கும்
காதுகள் உண்டு
நீ சொன்ன பின்தான்
புரிந்தேன்...

நம் வார்த்தைகளின்
வேகம் தாளாமல்
விரிசல் விழுந்த
சுவற்றைப் பார்க்கையில்!

ரசம்

என் முகம் பார்த்து
கண்ணாடி ரசம்போய் விட்டதென
சொல்லிப் போனாய்...

எண்ணிப்பார்க்கிறேன்
ரசத்துக்கு உப்பு,மிளகு போதுமாவென
யோசித்தே
என் சிந்தனை மழுங்கிப்
போனதை அறியாயோ?

பிடித்த புத்தகத்தை
படிக்க விரித்த மாத்திரத்திலே
பிடுங்கி வைக்கும் உன்
செயலும் ரசம் போனதுதான்...

படுக்கை விரிப்பை சுருட்டி
வைப்பதில் தொடங்கும் என் காலை
படுக்கை விரிப்பை விரிக்கும்
என் இரவு வரை
உனக்காகவே செய்யப்படும்..
என் செயலும் ரசம் போனதுதான்...

ரசம்போன செயல்களில்
ரசம்போன வார்த்தைகளில்
ரசம்போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...

Monday 29 September, 2008

மாறிவிட்டது

மொட்டைமாடி
மறந்திருக்க வாய்ப்பில்லை
இரவின் மடியில்
நிலவின் பிடியில்
நெடுநேரம் பேசியதை...

ரோஜாச் செடிகளும்
நம் நட்பின்
அடையாளமாய்
மொட்டுக்களை
பூக்களாக்கி இருக்கிறது...

சிறகில்லாமல்
அடைக்கலமாய் வந்த
சின்னக் கிளிக்கும்
சிறகுகள் விரியத்
துவங்கியிருக்கிறது...

பருவகால மாற்றங்களுக்கு
பக்குவப்படுத்தப்பட்ட
கற்றாழைச் செடிகளும்
கிளைகள் விட்டிருக்கிறது...

கஷாயத்துக்காய்
அந்தியில் சேகரித்த
வேப்பம்பூக்களில் மீதம்
வேப்பம்பழங்கள் ஆகிப்போனது ..

கருவேப்பிலையும்
முருங்கையும்
காய்க்கத் தொடக்கி விட்டது...

எல்லாமே மாறிவிட்டது
பருவத்தில்..
நம் நட்பைப் போல ..

போதும்

இதுவரை
பேசி கழித்தது போதும்...
கூடிச் சிரித்தது போதும்...
பாடி மகிழ்ந்தது போதும்...
பழகிக் களித்தது போதும்...
என்று கட்டளையிடுவதில்லை
நட்பிற்கு
உன்னைப்போல் யாரும்
காரணமின்றி....

சுபாவம்

என் பூமிக்கு
மழையாக வந்தாய்..
தாங்கிக் கொன்டது
என் பிழையல்ல சுபாவம்..

என்ன செய்ய
என் சுபாவத்தை
பிழையென கருதுவது
சமூகத்தின் சுபாவம்...

விதிவிலக்கல்ல

கலைத்துப்போட்டாய்
மனதோடு என் நினைவுகளையும்...

விதைத்து சென்றாய்
ஆசையோடு என் ஆர்வத்தையும்...

மிச்சமேதுமில்லை
உன்னிடமிருந்து எனக்குள்
என் நேரங்களை
நொறுக்குத் தீனியென
நொடி நொடியாய்
நீ தின்றதைத் தவிர...

அனுமதியின்றி கலைத்து
அனுமதியின்றி விதைத்து
அனுமதியின்றியே
அமைதியாய் சென்றுவிட்டாய்...

என் ஆயுளின்
அர்த்தங்கள் மொத்தமாய்
கரைந்தது உன் பிரிவில்...

என் பெண்மையினை
அர்த்தப்படுத்திய உன் உறவே
என் ஆண்மையினை
சோதித்து பிரிவதில்
எனக்குள் கோபங்கள் ஏதுமில்லை..

பெண்மையும் ஆண்மையும்
ஒவ்வொரு அணுவுக்குள்ளும்
ஆட்சி செய்கிறது ...

நீயோ நானோ
விதிவிலக்கல்ல...


மதன் நேர்காணல்

மதன் அவர்களுடனான சந்திப்பு திடீரென நிகழ்ந்த போதிலும் அதிக நேரம் ஒதுக்க முடியாத அவரது சூழல் காரணமாகவும் நடந்த சந்திப்பில் இருந்து...


எத்தனை வயசில இருந்து கார்ட்டூன் பரிச்சயம் ஆனது?
நான் ஒரு நாலு வயசில இருந்து கார்ட்டன் போடுறேன்? எனக்கு இயற்கையாகவே வந்த ஒரே திறமை கார்ட்டூன் போடுறதுதான்..
மத்த எல்லா திறமைகளும் உங்களைப் போல ஒரு வட்டத்துக்குள்
வந்த பின்னால கத்துக்கிட்டதுதான்...இளஞர்கள் இந்த துறையில் ரொம்ப குறைவா இருக்காங்க..இந்தியாவில் இந்த துறையில நிறைய வாய்ப்பிருக்கு.. ஆனால் எத்தனை இளைஞர்கள் தயார் நிலையில இருக்காங்க?

உங்களுடைய கார்ட்டூன் திறமை வளர உதவியாய் இருந்தது எது?நாமேதான் செய்து கொள்ள வேண்டும்..இயற்கையான திறமைன்னு சொல்வாங்கல்ல எப்டினா ஒரு மொசார்ட் மாதிரி.. பாரதி மாதிரி.. இவங்கல்லாம் பிறவி கலைஞர்கள்...அப்டின்னு சொல்வாங்க.. திறமை அப்டிங்கறது நிறைய பேர்கிட்ட இருக்கும்..மைக்கேல் ஏஞ்சலோ மாதிரி ஆர்ட்டிஸ்ட் பாத்தீங்கன்னா அவங்களுக்கு நிஜமாவே இறைவன் கொடுத்த வரம்னு தோணும்..அவ்ளோ ஆச்சர்யம் .. அதை நாம இறைவனு சொல்லிடுறோம் .. நிறைய இளைஞர்களுக்கு திறமை இருக்கு..ஒருத்தருக்கு ஓவியம் நல்ல வரும்.. உங்களுக்கு குரல்வளம் இருக்கு பாடுறீங்க .. பேசுறீங்க (நிஜமாவா ? ஹி ஹி ).. சில பேர் மாடலிங் பண்ணுவாங்க...அதை வளர்த்துக் கொள்வது எப்படி அப்டிங்கற அடிப்படையில தான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும்?

நான் கார்ட்டூன் பண்ணும் போது எல்லாம் இந்த மாதிரி எல்லாம் கோர்ஸ் கிடையாது..ஒருவேளை இருந்திருந்தால் முறைப்படி படிப்படியா படிச்சு இருக்கலாம் ..அப்டி படிச்சு இருந்தால் சிறந்த மாணவன்னு பேர் வங்கி இருப்பேனோ? இல்ல மக்குன்னு பேர் வங்கி இருப்பேனோ தெரியாது...இப்ப இருக்குற மாதிரியான வாய்ப்புகள் அப்பலாம் கிடையாது..அதனால நான் இயற்பியல் படிச்சேன்...என்னோட நோட் புக்ஸ்ல பாத்திங்கன்னா முதல்ல இருக்குற பக்கங்கள்ல ஃபார்முலா இருக்கும்.. கடைசி இருபது பக்கங்கள் என்னோட கார்ட்டூன் தான் இருக்கும்.. பேராசிரியர்கள் பாத்துட்டு கிழிச்செல்லாம் போட்டது கிடையாது... அவங்க என்ன நினைப்பாங்கன்னா எங்கேயோ தப்பான இடத்துல தப்பான ஆள் வந்து உக்காந்திருக்கனே அப்டின்னு 'யப்பா கொஞ்சம் பாடத்தையும் கவனிப்பா'ன்னு சொல்லுவாங்க...(ரொம்ப நல்ல ஆசிரியர்கள் கிடைச்சு இருக்காங்க..) ஏனா கார்ட்டூன்ஸ் நல்லா இருக்கும்..

நீங்க வரைஞ்ச கார்ட்டூன்ல மறக்க முடியாத கார்ட்டூன் இல்ல வரைய ரொம்ப முயற்சி செஞ்ச கார்ட்டூன் பத்தி சொல்லுங்களேன்?
கார்ட்டூன் அப்டிங்றது விஷுவல் திங்.அத பாத்தாதான் புரிஞ்சுக்க முடியும்..அதை வானொலில விளக்க வேண்டி இருக்கும்..அதுல நாம ஒரு செய்தி சொல்றோம்..கார்ட்டூன்ங்றது சாதரண காமிக்ஸ் படம் கிடையாது.கார்ட்டூனுல தேச,மாநில தலைவர்கள் வராங்க..அதுல வந்து தலையங்கம் மாதிரி..ஒரு நிகழ்வு நடப்பது பற்றி ஒரு கருத்து சொல்றேன்.இது பத்திரிக்கைக்கும் எனக்கும் ஒரு உடன்பாடா செய்துக்கிறதுதான்.. .கார்ட்டூனுக்கு பல திறமைகள் தேவைப்படுது..அது எப்டிங்றது பெரிய விசயம்..அதை இவள்ல மட்டும் சொல்லிட முடியாது..

புஷ்பவனம் தம்பதி நேர்காணல்..


புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்களுடன் ஒரு நேர்காணல்..

கிராமிய பாடல்களை கிராமத்திலிருந்து நகரத்து வீதிகளுக்கு எடுத்து சென்ற நாட்டுப்புற கலைஞர்களில் குறிப்பிடத்தக்க பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமியும் அனிதா குப்புசாமியும்...

அவர்களை எதிர்பாரா ஒரு தருணத்தில் ஹலோ பண்பலையில் இவள் நிகழ்ச்சியில் சந்தித்ததில் இருந்து உங்களுக்காக...


Sunday 28 September, 2008

பயணம்

பயணம்தான்
சொல்லிக்கொடுக்கிறது
புதிய அறிமுகங்களை ...

பயணம்தான்
தூண்டிவிடுகிறது
வளர்ச்சியின் மூலக்கூறுகளை ...

பயணம்தான்
பக்குவப்படுத்துகிறது
பலரையும்...

Tuesday 23 September, 2008

கேள்வி

கேள்விகள் மட்டும்
முளைத்து விடுகின்றன
எல்லா வாய்களிலும் ....

பதில்களைத் தான்
உற்று கேட்பதில்லை
எந்த காதுகளும்...

Tuesday 16 September, 2008

அது ஒரு மழைக்காலம்

அது ஒரு மழைக்காலம்
அவளோடு சைக்கிளில்
வீடு வீடாக கணக்கெடுக்க
பயணப்பட்டு பகிர்ந்து கொண்ட
விஷயங்கள் பலப்பல ...

தூறல் ஆரம்பித்த போதில்
சைக்கிளை வேகமாக
அழுத்திய அந்த கணங்களில்
மழை பிடித்து கொண்டது...

சொட்ட சொட்ட மழையை ரசித்தது
அதுவே முதன்முறை..
கடைசி முறையாகவும் அமையும் என்று
அப்போது நினைக்கவில்லை ...

என் திருமணத்திற்கு பிறகு
இரவொன்றில் பிடித்த மழை
விடாது சிணுங்கி ...
ஓட்டைப் பிரித்து உள்ளே
எட்டி பார்க்க ஆரம்பித்தது..
-----------தொடரும்

நட்பே

நட்பு என்பது உப்பு போன்றது ..

அதிகமானாலும் குறைந்தாலும்

சுவை போய்விடும்..

அதுவே பிரிவிற்கு காரணமாகி விடும் ...

கிட்ட உறவு முட்ட பகை

உன்னால் புரிந்தது ....

பழமொழியை கூட கற்றுக்

கொள்ள ஒரு நண்பனை

இழக்க வேண்டி இருப்பதுதான்

வேதனை..

Monday 15 September, 2008

விடுதலை

விடுதலை வேண்டுமென
வாய் திறந்து கேட்காதே ..
அது காகிதத்தில் மடித்து
தரக்கூடிய பொருளல்ல ....

விடுதலை வேண்டுமென
ஆள் அனுப்பி கோரிக்கை வைக்காதே ...
அது மூன்றாம் நபர் மூலம்
முடிக்க வேண்டிய பிரச்சினை அல்ல..

விடுதலை வேண்டுமெனில்
உன் நுரையீரலுக்காக
உன் மூக்கே சுவாசிக்கட்டும்..
உன் இதயத்துக்கு
உன் நரம்புகளே இரத்தத்தை
எடுத்து செல்லட்டும்..

காத்திருக்கிறாய்
பல நூற்றாண்டுகளாய்
காத்திருந்து காத்திருந்து
உன் காலில் பூட்டப்பட்ட விலங்குகள்
கழுத்து வரை நீண்டிருக்கிறது..
இன்னும் இறுகுவதற்குள்
உன் கைகளே அதை தகர்க்கட்டும்..

மௌனம்

பேசாத வார்த்தைகள்
பிறரை துன்புறுத்துவதில்லையாம்
யார் சொன்னது?
உன் மௌன அலைகள்
என் கரையை அரித்துள்ளதை
பார்.......

Wednesday 10 September, 2008

திருநங்கை

என் தோழனாயிருந்து
தோழியாய் மாறியவளே..
அல்ல அல்ல மாற்றம் பெற்றவளே..
உன்னை இப்போது எப்படி அழைக்க
வேண்டும் என்பதல்ல என் பிரச்சினை..

நீ சமூகத்தை எப்படி எதிர் கொள்ள போகிறாய் என்பதுமல்ல..
இந்த சமூகம் உன்னை எப்படி நடத்தப்
போகிறது என்பதுதான்..
குரோமோசோம்களின் எண்ணிக்கை
மாறுபாட்டிற்கு நீ என்ன செய்வாய் என் நட்பே..
அதை சமூகம் எப்போது உணரும்?

சிலர் உன்னைப் போல இருக்கும் உயிர்களை
வார்த்தையால் வேட்டையாடவும் தவறுவதில்லை..
அந்த சில வார்த்தைகளை கேட்க நேரும்தோறும்
கண்ணில் அல்ல கர்ப்பப்பையில் இரத்தம் வருகிறது நட்பே..

எப்போதும் உன் உணர்வுகளை நான் உணர முடியாது
என்பது எனக்கு மிக நன்றாய் தெரியும்..
ஆனால் உன் உணர்வுகளை மதிக்க மற்றவருக்குக்
க்ற்றுக் கொடுப்பேன் நட்பே...

சமூகமே இவர்களுக்கு
பாராட்டு தேவை இல்லை
பண்பாடோடு நடந்தால் போதும்..
ஊக்கம் தேவை இல்லை
உதாசீனப் படுத்தாமலிருந்தால் போதும்..
உற்சாகப் படுத்த வேண்டாம்
உறுதியை தகர்க்காமல் இருந்தால் போதும்..
நாளை திருநங்கையின் வாழ்வும் உயரும்...

வாக்குறுதி

வாக்குறுதிகளை நம்பியே
வாழ்க்கை கடந்து போகிறது
வாழ்க்கை துரத்துகிறது
வாக்குறுதிகளை...
வாக்குறுதிகள் தொலைக்கிறது
வாழ்க்கையை...
எதிர்பார்ப்பு ஒன்றே
இட்டு நிரப்புகிறது
வாழ்க்கை பள்ளங்களை..

திருப்பம் வந்த நாள்

என் குழந்தை தன்மை அடக்கப்பட்ட நாள்
சத்தம் போடாமல் பேச அறிவுறுத்தப்பட்ட நாள்
குறும்புகள் தொலைக்கப்பட்ட நாள்
நண்பர்களுடனான நெருக்கம் துண்டிக்கப்பட்ட நாள்
உறவுகளுடனான தொடர்பு குறைந்த நாள்
உறக்கம் உரிய தொடங்கிய நாள்
கட்டுக்குள் பூட்டப்பட்ட நாள்
உடன் பிறந்தவர்களின் பாசம் உணர்ந்த நாள்
பழகிய சுற்றங்களை விட்டு விலகிய நாள்
முருங்கை மரமும் வேப்ப மரமும் என் பார்வையிலிருந்து மறைந்த நாள்
கற்றாழைச் செடியின் முட்கள் குத்தாத நாள்
புது உறவொன்று பூத்த நாள்
அது என் திருமண நாள்

Friday 5 September, 2008

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
நானாகவும் கற்றுக் கொண்டேன் ..
நீயாகவும்
சொல்லிக் கொடுத்தாய்..
(ஒன்றை தவிர)
உன்னைப் பிரிந்தால்
எப்படி தாங்கிக் கொள்ள வேண்டும்
என்பதை தவிர..

ஸ்பரிசம்-7


ஒரு நிகழ்வை உங்களிடம் சொல்ல பிரியப்படுகிறேன்.புதிதாய் திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது.

கணவன் சொல்கிறான்..மூன்றாவது இரவில்.. ஒரு முக்கியமான
அலுவலக வேலை காரணமாக வெளியூர் போக வேண்டும் என்று..
அந்த மூன்று நாட்களில் மனைவியின் மனதில் தோன்றும் அந்த எண்ண்ம் இருக்கிறதே..அந்த உணர்வு இருக்கிறதே..அதை எப்படி ஒரு பெண் சொல்கிறாள் தெரியுமா?..


"தொட்டுவிட்டு நீயும் சொல்ல
மொட்டு விட்ட ஆசைகளை
கட்டுக்குள்ளே வைக்க நானும் கஷ்டப்படுகிறேன்..


வேண்டாம் என்று வாயும் சொல்ல
வேண்டுமென்று உள்ளம் ஏங்க
தீண்டும் இன்பம் வேண்டித்தானே இஷ்டப்படுகிறேன்..


விட்டகுறை தொட்டகுறை வட்டமிட்டு சுத்திவர
விட்டுவிட்டு போனதென்ன ஆசை நிலவே..
இன்னும் என்ன தாமதமோ
உண்மை யாவும் சொல்லிடவே
உச்சிக்குள்ளே பச்சைக்கிளி கூச்சலிடுதே.."
என்று தன் ஸ்பரிச உணர்வுகளைக் கொட்டுகிறாள்

ஸ்பரிசம்-6

கண்ணில் காட்சிகள் பலவும் மோதும்
கற்பனை சிறகுகள் காதில் ஓதும்..
உறவுகள் இறக்கி வைக்கும் மனதின் பாரம்
உணர்வுகள் உலா வரும் உன்னத நேரம்..

அன்பானவர்கள் எல்லோரும் அருகில் இருப்பதில்லை
அருகில் இருப்பவர்கள் எல்லோரும் அன்பானவர் இல்லை
என்று சொல்வார்கள்..

ஆனால் உங்களுடைய இதயத்துக்கு அன்பாகவும்,
இமைகளுக்கு அருகாகவும் அமைந்திருக்கிறது ஸ்பரிசம்...
நம் மனத்திரையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை..
மயக்கும் ஸ்பரிசத்திற்கு மகிழாத நெஞ்சமில்லை..
இன்னும் தேடல் தொடரும்..
தொடர்ந்து இணைந்திருக்க நினைவு சாரல் உதவும்..

ஸ்பரிசம்-5

எங்கும் பேச்சு எதிலும் பேச்சு என்று சொல்லும் அளவுக்கு
பேச்சுதான் உலகத்தில் பல விஷயங்களை மாற்றியிருக்கிறது.
நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல்
இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அதிலும் கணவன் மனைவியிடையே கேட்கவே வேண்டாம்.
அவர்கள் பேச்சு இதமாக,பதமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
அதிலும் காதோடு காதாக பேசுகிற விஷயம் இருக்கிறதே அது சுகமானது..இரகசியமானது..

என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும்
கணவனுக்கு மனைவிதான் முதல் குழந்தை..
மனைவிக்கு கணவன்தான் முதல் குழந்தை..

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்..நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்..
உனக்கேற்ர துணையாக எனை மாற்ற வா-என்று
கேட்கும் மனது இருக்கிறதே அது தாய்மையின் உச்சம்..
காதோடு வருடி மனதோடு பேசும் ஸ்பரிசம் தொடரும்

Wednesday 3 September, 2008

ஸ்பரிசம்-4


காமமில்லாத காதலும்
அலையில்லாத கடலும்
சாத்தியமில்லை ...


ஒவ்வொன்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது
அந்த எல்லையை புரிந்துகொள்வதற்கு விலை இருக்கிறது ..


பார்வையின் உச்சம் காதல்
காதலின் உச்சம் மோகம்


மோகம் தலை தூக்கும் போது பார்வைகள் பேசும்
வார்த்தைகள் மூர்ச்சையாயிடும்..
நேற்றுவரை சேர்த்துவைத்த ஆசையெல்லாம்
வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விடும்.
ஈருடல் ஓருயிர் என்று சொல்வார்களே
அதற்கான அஸ்திவாரம்தான் இது..

ஸ்பரிசம்-3

உடலுக்கு வாசல் கண்கள்
காதலுக்கு வாசலும் கண்கள்தான்..

வார்த்தை வெளிப்படுத்த முடியாத விஷயங்களை
கண்கள் உணர்த்திவிடும்.அதே போல
வார்த்தைகள் கூட புரியவைக்க முடியாத
பல விஷயங்களை மெளனம் சொல்லிடும்.

மெளனம் வலிமையானது.. அதே சமயம் எளிமையானது
சில நேரம் கொடுமையானது.. சில நேரம் இனிமையானது..

மெளனத்தோட பேச ஒரு சிலருக்குத்தான் தெரியும்
மெளனத்தின் அசைவுகளை வைத்தே
வலிகளையும் சந்தோஷத்தையும் உணரமுடியும்...

நீங்க எப்போதாவது மெளனமா இருந்திருக்கீங்களா?
அப்போது அந்த மெளனத்தை யாராவது புரிந்து கொண்டார்களா?

இல்லையென்றால் நீங்க யாரோட
மெளனத்தையாவது புரிந்துகொள்ள முயன்றதுண்டா?
என்ன மெளனமாக யோசனை செய்கிறீர்களா?
பார்வையால் மட்டுமல்ல மெளனத்தாலும் பேசிக்கலாம்...

சோகமும் சுகமும்

சோகத்தை சொல்லிவிட்டால்
மன வேகமது மட்டுப்படும்...
அந்த சோகத்தை சொல்லுதற்கும்
சொந்தமாய் ஒரு நட்பு வேண்டும்...

நட்பே..
சோகங்கள் எல்லாம் சுமைகளல்ல
சுகங்கள் சிலவும் தாங்கக்கூடியதல்ல
சோகத்திற்கும் சுகத்திற்கும் உள்ள உறவு
கடலுக்கும் கரைக்குமான உறவு
இரண்டும் சந்திக்கும் புள்ளியில்தான்
அலைபாய்கிறது
மனமும்..அலையும்..

கேள்வியும் பதிலும்

கேள்விகள் கேட்கத்தான்
காத்திருக்கிறது
எல்லா நாவுகளும்...

பதில்களை கேட்பதற்கு
எந்த காதுகளும்
தயாராயிருப்பதில்லை...

பதிலுக்கு காத்திருக்காத
கேள்விகளால்
யாதொரு பயனுமில்லை...

கேள்விகளை உள்வாங்காத
பதில்களாலும் கூட...

நட்புக்கு

சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே....

ஸ்பரிசம்-1

சாதாரணமா வீசுற காத்து கொஞ்சம்
இதமா வருடிப் போனா அதுக்கு பேரு தென்றல்...
அது எப்ப வரும்னு யாருக்குத் தெரியும்?
அது மாதிரிதான் காதலும்...

சாதாரணமா பழகிகிட்டு இருக்குற
யாருகிட்டயோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல
லேசா தலைதூக்க ஆரம்பிச்சுடும்
இந்த காதல்(தென்றல் மாதிரி)..

இதோட அறிகுறிகள் என்னனு நினைக்குறீங்க?
எப்படா பாக்கலாம்?
எப்படா பேச சந்தர்ப்பம் கிடைக்கும்?
எப்ப நாம பேசுறத கேக்க வைக்கிறது?
இப்படி ஏராளமான விஷயங்களை
நம்ம மனசு கேக்க ஆரம்பிச்சுடும்..இல்லனா
தேட ஆரம்பிச்சுடும்...

ஏதோ ஒரு தருணத்துல சும்மா
விடைபெறும் போது கூட..
கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி பாத்தா
மனசு சிறகடிச்சு பறக்கும்..

உங்க மனசு சிறகடிச்ச சந்தர்ப்பத்த நீங்க
உணர்ந்திருக்கீங்களா?..
அந்த உணர்வு எல்லாரையும் தொட்டுட்டு
போயிருக்கும் அப்டிங்றதுல எந்த சந்தேகமுமில்லை...
அப்படித்தானே?

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?