Friday, 27 February, 2009

மூன்றாவது பக்கம்..

தொடக்கமும் முடிவுமற்ற காதல்..
இணக்கமும் பினக்கமுமற்ற உறவு..
சிரிப்பும் அழுகையுமற்ற உணர்வு..
நகர்ந்தும் நகராத காலம்..
புரிந்தும் புரியாத சூழல்..
யாதொன்றுக்கும்
இரண்டு பக்கமென்று யார் சொன்னது?
மூன்றாவது பக்கமொன்றை
முன்னிறுத்துகிறேன்..
என் வாழ்வினூடே...

Saturday, 21 February, 2009

காதல் கடிதம்

வணக்கம் காதலனே..
சொல்வதை செய்..
செய்வதை சொல்..
சொல்லி விட்டு செய்யாதே..
செய்து விட்டு சொல்லாதே..
சொல்வதை செய்யாமல்
சொல்லி சொல்லி கொல்வாய் உனது கடிதத்தில்......

நல்ல வரிகள்தான் இல்லையா?
காதலனும் காதலியும் சேர்ந்து எழுதிய வரிகள் என்று...
சொல்லாமலே புரியும்...

கடிதம் என்பது அருகில் இருக்கும் ஒரு காகித உறவு....
நம்மை நேசிப்பவர் அருகில் இல்லாத நேரத்திலும்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் போதும்..
பிரிந்த நேரத்திலும்..நம்மை ஆற்றுப்படுத்துகிற அற்புதம்...

Friday, 20 February, 2009

ஒரு கடிதம் எழுதினேன்..

கடிதம் எழுதுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது...

என்று யார் சொன்னது? கடிதம் உணர்வு சொல்வதை மனசின் உயிர் திரவம் படர்த்தும் விந்தை.

கடிதம் குறுஞ்செய்தி போல உடனே அழித்து விடக் கூடியதல்ல..

மனம் சோர்வுறும் போதெல்லாம் நமக்கு அன்பானவர் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கும் தோறும் புத்துணர்வு பிறக்கும்..வார்த்தைகளுக்கு புது விளக்கம் கிடைக்கும்..எந்த வார்த்தை எந்த பொருளில் எப்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எண்ணி எண்ணி பார்க்கையில் இன்னும் இன்னுமாய் காதலும்...காதலைப் பற்றிய புரிதலும் மேலோங்கும்...

Wednesday, 18 February, 2009

வெள்ளை மாளிகை...

அந்த வெள்ளை நிறங்களால்
சூழப்பட்ட
உயரமான
பளிங்கு அறையினை..
அமைதி
தன் ஆளுகைக்கு
உட்படுத்தியிருந்தது...

சூரிய வெளிச்சம் மட்டுமே
புள்ளியாய் ஊடுருவ
அங்கு அனுமதிக்கப் பட்டிருந்தது...

அந்த ஒற்றை சூரியப்புள்ளி
ஆயுதப் புள்ளியாய்
அடையாளப்பட்டது..

பால்வெளியில்
உலவுவது போலான
உணர்வினையும்...

அண்டத்தில் மிதப்பதான
அதிர்வுகளையும்
தோற்றுவித்தது...
அந்த வெள்ளை மாளிகை..

முட்டைக்குள்
தனித்து மிதக்கும்
மஞ்சள் கருவினைபோல்
மனசுக்குள்
மறைந்து கிடக்கும்
மாசுகளை
தனியே மிதக்க வைக்கும்
அந்த வெள்ளை மாளிகை...

தாமரையின்
வடிவத்தையொத்த
தங்க முலாம் பூசப்பட்ட
வெள்ளை அறையினை
நிறைத்திருக்கிறது...
பேரண்டத்தின் அமைதி...

சற்று முன்...

சற்று முன்
எடுத்த இம்முடிவு
குறித்து எனக்குள்
எந்த சலனங்களும் இல்லை..

முடியப் போகும்
ஒரு பயணம் குறித்தோ
துவங்க இருக்கும்
புதிய பயணம் குறித்தோ
எவ்வித ஆற்றாமையுமில்லை...

விழப் போகும்
ஒரு மர வேரின் பெருத்த
ஓலமும்...
விதையொன்றின்
முளைவிடுதலில்
துளிர்த்த நிசப்தமும்...
உச்சி வெயிலில்
காலுக்கடியில்
விழும் நிழலை யொத்தது..
.

நேசத்திற்குரிய காதலனுக்கு...

என் நேசதிற்குரியவனே...
காதல் என்றாலே காத தூரம் ஓடும் எனக்குள்ளும் காதல் இருக்கிறது என்பதை உணர வைத்தவனே...சிரிப்பாய் இருக்கிறது சில சமயம்.. அழுகையாய் இருக்கிறது சில சமயம்...ஏன் என்றுதானே கேட்க நினைக்கிறாய்..சொல்கிறேன்...

காதல் பற்றி நான் படித்த கவிதைகளும், கதைகளும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..ஏனெனில் அந்த சமயங்களில் நான் காதலின் வருகைக்கு வேலியிட்டு இருந்தேன்..இப்போது நான் படிக்கிற கவிதைகளும்,பார்க்கிற உலகப் படங்களும் எனக்குள் உன் நினைவுகளை பாத்தி கட்டி செல்கின்றன..

ஒரு உதாரணம் சொல்கிறேன்..கேளேன்.. " இயற்கை " படத்தில் ஒரு வசனம் உண்டு..ஷேக்ஸ்பியர் சொன்னதாகா..

" காதலுக்கு காரணம் இருக்க முடியாது..
காரணம் இருந்தால் அங்கு காதல் இருக்க முடியாது"

என்ற வசனம் என்னை அடிக்கடி திரும்ப வைக்கும்... அதே போல் அறிவுமதியின் ஒரு கவிதையும்...

"அணு அணுவாய்
சாவதற்கு முடிவெடுத்தபின்
காதல்
சரியான வழிதான்..."

அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொள்ளும் ஆர்வத்தைபோல்
அவ்வப்போது இந்த இலக்கியங்கள் உன்னை எனக்குள் விதைத்த படி இருக்கிறது...

"எனக்குள்
இருக்கும்
காதலை
அறுவடை செய்ய முடியாது..
ஆயிரமாயிரம்
ஆண்டுகளான பின்னும் " ...


இந்த வார்த்தை என் காதலின் ஆழத்தை சொல்லும்...நமக்குள் ஏற்பட்ட
சந்திப்புகளை அடிக்கடி அழைத்து விசாரித்துப் பார்க்கிறேன்...
அவை உனக்குள் நானும் எனக்குள் நீயும் ஒளிந்து கொண்ட ரகசியங்களை பறைசாற்றி சிரிக்கிறது..புன்னகை புரிந்தவாறே யோசித்து கொண்டிருக்கிறேன்... ரசனையோடு நம் காதலைப் பற்றி....

ஒரு தோழியின் கடிதம்....

அன்புத் தோழனுக்கு,
தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழக்கப்பட்டிருக்கும் நாம் முதன்முறையாக உணர்வுகளை எழுத்துக்களாக பிரதிபலிக்கும் கடிதம் வழியாக பேசுகிறோம்...இல்லை நான் பேசுகிறேன்..நீ கேட்கிறாய்..இரண்டு, மூன்று நாட்களாகவே நீ என்னிடம் சரியாக பேசவில்லை என்பது எனக்குத் தெரியும், நீ ஊருக்கு வந்துவிட்டு போனதிலிருந்து உன்மனது சரியில்லை என்று நீ சொன்னவுடன் எனக்கு லேசாக பொறி தட்டியது.சில நினைவுகள் உன்னை அலைக்கழித்திருக்கும் என்பதை நானே புரிந்திருக்கிறேன்..

உனது மனம் மட்டுமல்ல.. எல்லோருடைய மனமும் முதல் காதலை மறந்துவிடாதுதான்..அதிலும் தான் விரும்பிய ஒருத்தி தன் கண்முன்னே கண்டுகொள்ளாமல் செல்லும்போது அந்த வலி எத்தகையது என்பதை எந்நாளும் உணரமுடியும்..உன் தோழியாக அல்ல.. நானும் ஒருவருக்கு மனம் விரும்பிய ஒருத்தியாக இருந்திருக்கிறேன் என்பதாலே..

பதின் பருவம் எல்லோருக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்..பள்ளியில் படிப்போருக்கு அது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்...நட்பு, காதல் என்று வாழ்க்கையின் மறுபகுதியை ஒரே சமயத்தில் க(பெ)ற்றுக்கொள்ளும் பருவம்..

அதில் எது நட்பு?எது காதல் என்று புரிந்து கொள்ள முடியாத ,அப்படியே உணர்ந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள இயலாத மனம் ..அது பிசைந்த மாவைப் போல் எதற்கும் இசைந்து கொடுக்கும் வகையில் சூழலின் கைப்பிள்ளையாய் சுழலும் பருவம்... நட்பைக் கூட காதலென்று ஒத்துக் கொள்ளும்.. ஆனால் காதலை ஒருபோது நட்பாக ஒத்துக் கொள்ளாது...

தோழா இந்த நேரத்தில் உனக்கொன்று சொல்கிறேன்.. உனது எல்லா இன்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு துன்பம் காலத்தின் முந்தானையை பிடித்துக் கொண்டு தொடரும்...அப்போது மனம் தளராதே..

இப்போது நீ எடுக்க இருக்கும் முடிவுகளே உன்னை எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும்.. நீ தேடிப் போன காதலை விட உன்னை தேடி வரும் காதல் முக்கியமானது என்பார்கள்.. அதை விட நீயும் தேடி உன்னையும் ஏற்றுக் கொண்ட காதலே உன்னை வாழ வைக்கும்.. ஆதலினால் காதல் செய் சிறுது காலத்திற்குப் பின்..

அதாவது உன் கல்வி முடித்து வேலைக்குப் போன பின்...அதற்குள் காதல் உன்னை தேடி வந்தாலும் உதட்டோரம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உன் வேலையில் கவனமாஇரு... இனி வரும் காலம் நலமே அமையட்டும்...

Friday, 13 February, 2009

காதலர் தினம்- ஸ்பரிசம்6

காதல் உணர்வின் உச்சம்
காமம் காதலின் எச்சம்..

காதல் இதயத்தின் நான்கு அறைகளையும் ஆக்கிரமித்து ...அதிர்வையும் ..அசைவையும்.. அலையையும்..
ஏற்படுத்தி விடும் என்றால் அது மிகை இல்லை..

இயங்கச் செய்வதும்...இயக்கம் மறுப்பதும் காதலின் வெளிப்பாடு...
புரிதலில் நிலைத்து நிற்கும் காதல் சந்தேக புயலில் சாய்ந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்..

இந்த காதலர் தினத்தில் மட்டுமல்ல.. ஒவ்வொரு நாளும் காதல் ஆராதிக்கப்படும்
நாளாகவே இருந்து விட்டால் எல்லா நாளும் நல்ல நாளே...
காதலர்களுக்கு எனது அன்பும் ..ஸ்பரிசமும்..

காதலர் தினம் - ஸ்பரிசம்5

காதலுக்கு ஆணை இட முடியாது.. ஆனால் காதல் ஆணையிடும்..
காதலுக்கு அணை போட முடியாது...ஆனால் காதல் அணை போடும்..

எல்லா காதலும் நம்பிக்கையில்தான் கட்டப்படுகிறது..அல்லது நம்பிக்கையில் கட்டப்படுவதுதான் காதல்..எத்தனை காதலர்கள் காதலுக்கு உண்மையாய் இருக்கிறார்கள்.?.இந்த காலத்தில் அரிதுதான் ...உண்மையாய் இருக்கும் காதலர்கள் காதலுக்கு மரியாதை செய்பவர்கள்.. காதலுக்கு மரியாதை செய்பவர்களை காதலும் மரியாதை செய்யும்..

உணர்வுகள் எல்லாமே வெளிப்படுத்தக்கூடியதுதான்..ஆனால் காதல் உணர்வு மட்டும் கவனமாக கையாளப் பட வேண்டும்.. அது ஒரு கண்ணாடி மாதிரி.. எப்போதும் பிரதிபலிக்கும்.. கூடவே அதை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் நம்மை அது புதுப்பிக்கும்.. நம்மை எல்லா விதத்திலும் அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு.. உள்ளத்திலும் உடலிலும் உற்சாகமடைய செய்யும் காதல்...
காதல் எனும் வார்த்தையே வசீகரமானது..காதலும் வசீகரமானது..

காதலர் தினம்-ஸ்பரிசம்4

காதல் வந்ததும் செயல்பாடுகள் மாறும்..
காதல் ஒரு மனிதனை அணுவேனும் முன்னேற்றனுமே ஒழிய
இருக்கும் நிலையிலிருந்து கீழே தள்ளி விடக்ககூடாது..

ஈர்ப்பில் ஆரம்பிப்பதுதான் காதல்.. ஆனால் காதல் ஈர்ப்பாகவே இருக்க சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..இருவருக்குமிடையே காற்றை தவிர வேறு எதுவும் சுலபமாக நுழைய அனுமதிக்கக் கூடாது..முக்கியமாக மூன்றாம் நபரின் தலையீடு இருக்கவே கூடாது..ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சொல்லும் போதும் நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய துணிவு வேண்டும்...

காதல் போல எளிமையான விஷயம் எதுவும் கிடையாது..
காதல் போல கடினமான விஷயமும் இல்லை..
அதனால் சிந்தித்து செயல் படுங்கள்..செயல்பட்டுவிட்டு சிந்திக்காதீர்கள்...
காதல் எதிர்பார்ப்பில் தொலைகிறது...காதல் சந்தேகத்தில் கலைகிறது..
காதல் புரிதலில் வாழ்கிறது..காதல் புன்னைகையில் பிரசவமாகிறது..

Wednesday, 11 February, 2009

கையகப்படுத்திய...காதல்.

*
சில
ஞாபங்களை
நினைவோடும்
பொருள்களோடும்
கையகப்படுத்திய
வந்துவிட்டேன்.
இதோ
என் முன்
பரப்பி வைக்கப்பட்ட
பொருள்கள்
நிரப்புகிறது
உன் மீதான
நேசத்தை...

*
மூச்சு முட்டுகிறது..
இந்த
ஜன்னலோரக்காற்று
உனதன்பைப்போல்..

*
உன்
விரல்கள்
கரும்பின்
வேராய்
இருந்திருக்குமோ..
முன் ஜென்மத்தில்..
நீ
அனுப்பும் சொற்கள்
இப்படி
தித்திக்கிறதே...

*
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல்
கைதட்டி சிரித்தது..
சிறந்த காதல்
இணையினை
கண்டுவிட்டதாக...

கசியும் காதல்..

*
உச்சிவெயிலில்
காய்ந்து கொண்டிருக்கும்
கூழாங்கற்கள்
பிரதிபலிக்கிறது..
இனிய தருணங்களின் பதிவை...

அதன் கீழே
வலியோடு
முனகுகிறதென் காதல்...

*
இலைகளற்ற
மரங்கள்தான்
அவை
வேர்களற்றவையல்ல..
இணக்கமற்ற
மனத்தான்
எனக்கு
காதலற்றவையல்ல..

*
என்
கண்ணீரின்
கரிப்பு
உனக்கு
சுவைஎனில்
நதியாய்
பெருகட்டும்..

*
உன்
என்னுள்
வந்து சென்ற
நிமிடங்கள்
இயற்கை
எனக்களித்த
பரிசு
அதை
பதியமிடுகிறேன்...
என் பயணமெங்கும்
அவை பூத்து
மணம்பரப்பும்
நம் காதலை சுமந்து...

காதல் துளிகள்..

*
உன்
இதழ்களில்
சிறு புன்னகை
தவழ்வதை
ஒளிந்திருந்து பார்க்க
இவளிடம்
அனுமதி
இவனிடம்
வந்திருக்கும்
என் பெயர்
காதல்...

*
உனதன்பின்
துளிகள்
என்னை
மூழ்கடிக்கிறது
காதல் கடலில்..

*

அலையும் மனசு
அடங்கிட
வழி சொல்லு
அலையே...
கலையும் கனவு
நிலைத்திட
வழி சொல்லு
நிலவே..

*
உதட்டின்
ரேகைகள்
அழியும் வரை..
உயிரின்
தேவைகள்
முடியும் வரை
இந்த காதல்
தீரப்போவதில்லை...

Tuesday, 10 February, 2009

இயற்க்கைக்கு எழுதும் கவிதை..

இருகை கூப்பி
இதயத்தோடு
இறுக அனைத்து
வரவேற்ற
காடுகளுக்குச் சொல்ல
நிறையவே இருக்கிறது..
எனக்கும்
இயற்கைக்குமான
காதலை...

வானளாவ
வஞ்சனையின்றி
வளர்ந்திருக்கும் மரங்கள்..
பெயரில்லா
பூக்களை
சுமந்திருக்கும்
கிளைகள்..
இலைகளும் பூக்களுமாய்
உரமாகக் காத்திருக்கும்
அடி மரத்தின் சலசலப்பு...

காடுகள்
காற்றுக்கு மட்டுமே
கதவைத் திறந்து வைத்திருந்தது
காதலுக்கான
அனுமதியோடும்..
வெகுமதியோடும்..

வெற்றுத்தாளாய்
பறக்கும்
காற்றை..
அதன் போக்கிலேயே
சென்று
இயற்கை
எழுதி எழுதி தீர்த்த
கவிதைகள்
பாதை தோறும்
பளிச்சிடுகின்றன..

ஓரிடத்தில்
காற்றின் மேல்
எழுதப்படும் யாவையும்..
நகர்தலின் போது..
மறைந்து
மற்றோரிடத்தில்
புதுப்பிக்கப் படுகிறது
நொடிதோறும்...

வெற்றுத் தாள்களாக
விரையும்
நாம்
இயற்கையிடம்
எதை பதிவு செய்ய
அனுமதிக்கிறோம்..?

காதல் வானிலை..

ஒரு பாதி வெயிலும்
மறுபாதி நிழலும்
வாய்த்த
மாலைப் பொழுதில்
தாய்ப்பறவையின்
கதகதப்பிற்குள்ளிருக்கும்
சிறுகுஞ்சைப் போலவும்..

சிப்பிக்குள்
முத்தாக இருக்கிற
நீரின் உந்துதலைப் போலவும் ..

கீழிருந்த மேற்பரப்பின்
எல்லைகளைத்
தொட்டுப் போன
உன் பார்வையில்
கசிந்தது..

நிழலும்
வெயிலுமுள்ள
காதலும்
காமமுள்ள..
வெளிச்சப்புள்ளிகள்...

உமிழ் நீர்

உமிழ் நீர்
ஊற்றி
மூடி வைக்கப்பட்டுள்ள
குப்பிகளை
பத்திரப்படுத்துகிறேன்..

புறச்சூழலில்
அகப்பட்டு
அதன் அகச்சூழல்
கெட்டுவிடாமல்
பாதுகாக்கிறேன்
உனக்கான
அந்த குப்பிகளை...

வெவ்வேறான
மண்ணின் நீரினை
நிரப்பி
குப்பிகளின் அழகையும்
மேன்மையையும்
திறம்படக் கையாளும்
உனக்கு
குப்பிகள் பரிசளிக்கும்
எப்போதும்
உனது வருகைக்கான
வரவேற்பையும்...
புகுவிழாவிற்கான
வாசத்தையும்.. .. ..

Monday, 9 February, 2009

காதல் தாவரம்..

அலையடிக்குமிந்த
பாறை
எந்நேரமும்
நனைந்தபடியே
இருப்பது
உனது
காதல் மழையில்
இதயச் சிறகுகள்
நனைந்த பறவையாய்
என்னை நினைவூட்டுகிறது..

தொடர் ஈரத்தின்
பிரதிபலிப்பில்
பாறை மீது
பூத்திருக்கும்
சிறுதாவரங்கள் ...

உணர்த்துவது
என்னவெனில்
தொடர் காமத்தின்
நிரந்தர எச்சமாய்..
பூத்திருக்கும் காதலை...

அவை
சூரிய ஒளிபட்டும்
அலையடித்தும்
வளரும்
பாசிபடிந்த
சிறுதாவரத்தைப் போல்..

எனக்குள்
எப்போதும்
பூத்திருக்கச் செய்யும்
புரிந்துணர்வின் மீது
கட்டப்பட்டுள்ள
நம் காதல் தாவரத்தை.. .. ..

சுமந்து..

இந்த
காதலைச்
சுமந்து
நடப்பது
எவ்வளவு பெரிய
சுகமான சுமையாய்
இருக்கிறது...
நத்தையின் நகர்வைப் போல்..
நதியின் நகர்வைப் போல்..

அறுவடை

ஆயிரமாயிரம்
ஆண்டுகள்
கடந்த பின்னும்
அறுவடை செய்து தீராது
என்னுள்
விதைக்கப்பட்ட
காதல்...

காதலர் தினம்- ஸ்பரிசம்3

மண்ணில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பது மனதில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பதன் பொருளே..

காதலிக்கும் முன் யாரும் நம்மைக் கண்டுகொள்ளாத போது வரும்
வெறுப்பு...காதலிக்கும் போது எல்லோரும் நம்மையே கண்டு கொள்வதாக வரும் தவிப்பு...இந்த இரண்டு விஷயங்களும் யாருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடும்..

காதல் என்று சொல்லும் போது அங்கு காமத்தைப் பற்றியும் பேசி ஆக வேண்டும்..
ஏனெனில் குறிக்கோளில்லாத வாழ்க்கை மட்டுமல்ல காமமில்லாத காதலும் துடுப்பில்லாத படகைப் போன்றது தான்..

காதலை ஆராதிப்பவர்களை காதலும் ஆராதிக்கும்...காதல் நிலைத்து நிற்பது காமத்தில் அல்ல... புரிதலில்.. புரிதல் சிலந்தி வலை பின்னுவது போலானது..
அறுந்தறுந்து விழும் போதெல்லாம்... சோர்வின்றி சிலந்தி எச்சிலை உதிர்ப்பதை போல ....இடைவெளிகளை புரிதலில் இட்டு நிரப்பிக் கொண்டால்
காதல் வாழ்க்கை களிப்பாக இருக்கும்.

காதலர் தினம்- ஸ்பரிசம்2

காதல் நம்மை சந்தோசப்படுத்தும்..எப்போது தெரியுமா?... புரிதலுடன் இருக்கும் போது..இந்த காதலுக்குத் தான் எத்தனை சக்தி இருக்கிறது தெரியுமா?...
காலமும் காதலும் கைகோர்த்துக் கொண்டு சிறந்த காதலை இந்த உலகத்தில் தேடிக் கொண்டே இருக்கிறது யுகம் யுகமாய்.. இந்த தருணத்தில் ஒரு கவிதை என் நினைவில் வந்து போகிறது...

"உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல் கைதட்டி
சிரித்தது..
சிறந்த காதல்
இணையினைக்
கண்டுவிட்டதாக..."

உண்மைதான்.. உண்மையான காதலை நாம் உணர்ந்து கொள்ளும் போது
எந்த பிரச்சினை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை அந்த காதலே நம் கைகளில் கொடுத்து விட்டுப் போகும்...அதே போல் கண்டுகொள்ளப்படாமல் போகும் காதல் அலைந்து கொண்டு இருக்கும் இந்த மண்ணில்...இன்னொரு விஷயம்.. மண்ணும் காதலும் ஒன்று.. எப்படி என்று கேட்பது புரிகிறது?

மண் காலில் ஒட்டிக் கொண்டிருக்கும்போது கண்டு கொள்ளாத நாம்
கண்ணில் பட்டு விட்டால் கலங்கிப் போகிறமே...அப்படிதான் இந்தக் காதலும் ...
நம்மைத் தாண்டி செல்லும்போதெல்லாம் விமர்சிக்கும் நாம் நமக்குள் வந்து அமரும் போது அந்த வலியோடு கூடிய சுகம் இருக்கிறதே அதை உணரத்தான் முடியும்..வார்த்தைகளால் உரைக்க முடியாது...மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

காதலர் தினம்- ஸ்பரிசம்-1

காற்றைப் போல் இந்த காதல் எப்போதும் நம்மைச் சுற்றித்தான் இருக்கும்..
நாம் அதை தனித்து உணருவது எப்போதோ ஒருமுறைதான்.
காதலைப் பற்றி பலரும் பலவாறு சொல்லி இருக்கிறார்கள்..ஆயினும் புதிதாய் சொல்வதற்கு ஏதோ ஒரு விஷயம் இருப்பதால்தான் இன்னும் இனிக்கிறது இந்த காதல் என்னும் வார்த்தையும்..அதன் ஸ்பரிசமும்..

காதலைக் காதலிக்காத உள்ளமும் கிடையாது..காதலை மீறிய உணர்வும் கிடையாது..காதல் தித்திக்க காரணம் நாம் காதலிப்பதால் இல்லை..நாம் காதலிக்கப் படுவதால்...இதை எத்தனை உள்ளங்கள் உணர்ந்திருக்கும்?...காதலித்துப் பார்.. என்பதை விட.. காதலிக்கப் பட்டுப்பார்.. என்று சொல்லலாம்.. நம்மை புரிந்து கொள்ள நம்மை மனதார நேசிக்க ஒரு உயிர்
இருக்கிறது என்ற எண்ணமே நம்மை சந்தோசப் படுத்தும்...இந்த சந்தோசம் இன்னும் தொடரும்... காதல் நம்மை தொடர்வதைப் போல்..

பனிரெண்டு மணி அய்ம்பத்தேழு நிமிடம்...

இரண்டு இரவு..
இரண்டு பகல்..
இரண்டு காலை...

இயற்கையின் குடைக்குள்
இயல்பான பகிர்தல்..
மென் தூரிகையில்
நின் ஓவியங்கள்..
சுவாசத்தில் சுகம்..
சிந்தனையின் தெளிவு...

நகம் ...

நீ
முதன் முறை
வெட்டி விட்ட
நகங்களை
வளர வளர வெட்டுகிறேன்...

அது
நம்
காதலைப் போல
வெட்ட வெட்ட வளருகிறது..

Wednesday, 4 February, 2009

நானாக நீ...

எப்படி
எனக்குள்
வந்தாய்..?
சொல்லத் தெரியவில்லை..

நானாகவே
நீயிருந்தாய்..
நான் நினைப்பதெல்லாம்
நிகழ்த்தியிருந்தாய்..

தானாக யாவும்
சொல்வாய்..
சமயத்தில்
என்னை வெல்வாய்...
மௌனத்தில்
பாதி கொல்வாய்..

திசைகளைத் திறந்தவன்..

சிரிக்கிறாய்..
சிதறடிக்கிறாய்...

புன்னகைக்கிறாய்..
புதைக்கிறாய்..

அரவணைக்கிறாய்..
அழ வைக்கிறாய்..

நிற்கிறாய்..
நிறைக்கிறாய்..

கற்பிக்கிறாய்..
கற்கிறாய்..

அறிகிறாய்..
ஆராதிக்கிறாய்..

ஆள்கிறாய்..
வீழ்கிறாய்..

திசைகளைத் திறக்கிறாய்..
தீண்டாமை வெறுக்கிறாய்..
தித்திப்பாய் இருக்கிறாய்..

சோகங்கள் புதைக்கிறாய்..
சுகங்கள் விதைக்கிறாய்..
தாகங்கள் தீர்க்கவே
தருணங்கள் பார்க்கிறாய்...

காலக் கண்ணாடியாய்
கண்முன்னே நடக்கிறாய்..
பிம்பமாய் தொடர்கிறேன்..
உன் திசைஎங்கும்..

காதல் சுமந்து..

வாரி வாரி
இறைக்கிறாய்..
காதலை
வாங்கும் திறனின்றி
திரும்பிச் செல்கிறேன்..
என் முன்னே
அலை வருகிறது
உன் காதலைச் சுமந்து..

அழிக்கிறேன்.

சுவடுகளை
அழிக்கிறேன்..
அழிப்பதும்
சுவடுகளாகிறது...

பூனை..

மௌனப் பூனை
உலகைச் சுற்ற விரும்பி
ஒரு மதிய நேரத்தில்
வெளிக் கிளம்பியது...

இதமான
பயணம்
இறுக்கமாக ஆரம்பித்தது..
அவனைச் சந்தித்ததிற்குப் பின்..

பூனையைத்
தடவிக் கொடுத்தவன்
மெல்ல மடியிலிட்டு
வருடினான்..

பூனை எழ
முயற்சிக்க
வாலையும் காலையும்
ஒரு சேர பிடித்து
சுழற்றும்
பாவனையில் வைத்திருந்தான்..

பூனையின் மிரண்ட கண்கள்
வழி ரத்தம் கசிய
இரக்கமே இல்லாமல்
அதன் வாலைக் கடித்துத் துப்பி
தூக்கிஎறிந்தான்..

திரும்பி வந்த பூனை
பின் ஒருபோதும்
மதியத்தில்
வெளிக்கிளம்பியதில்லை...

காணாத போது..

உன்னைக்
காணாத போது
எழுவதும்..
உன்னைக்
கண்டவிடத்து
அடங்குவதுமான
உன்னால்
மட்டுமே
பதில் தரக் கூடிய
கேள்விகள் சில
காத்திருக்கின்றன..
எப்போது
எதிர் கொள்ள சம்மதம்?

மௌனம்

என்
வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என்
மௌனத்தையும்
மொழி பெயர்க்க
உனக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது தோழா...

கிளிசரின்

உன்
வார்த்தைகளில்
கிளிசரின்
தடவியிருப்பாய் போலும்..

அது
என்
கண்களில்
கண்ணீரைக்
கண்டுவிட்டுத்தான்
ஓய்கின்றது..

நேசம்..

உன்
மீதான
நேசத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன்..
நினைவுக் குப்பிகளுக்குள்..

நீ
தட்டி விட்டுச்
செல்லும் அதனை..
மீண்டும் நிரப்புகிறேன்
பழைய நேசத்துடன்...

கனவுகள்

கனவுகள்
காத்திருக்கின்றன
சலனமற்ற
என் தூக்கதிற்க்காய்...

தூக்கம்
காத்திருக்கின்றது ..
வரமறுக்கும்
கனவுகளுக்காக...

இந்த இரவு
எதை பரிசளிக்க
போகிறதோ?

பூமிகள்.

இன்று
உச்சிவெயிலில்
சோப்பு நுரைகளால்
காற்றுத் திரைகளால்
நிறைய பூமிகளை
பிரசவித்தபடி இருந்தேன்..

நிழல் கடந்த
பூமிகள் சில
சூரியன்களாய்
மாறிப் போயின..

அக்கம் பக்கமிருந்த
சின்னஞ்சிறார்கள்
ஓடி வந்து தங்களது
சிறு கைகளால்
பூமிகளை
உடைக்க ஆரம்பித்தனர்..

சளைக்காமல்
பூமிகள்
என் வாயிலிருந்து
பிரசவமாக
அவர்களின் கைகளில்
உடைபட்டு
மறைந்த படி இருந்தன....

வேறு வேறு
உலகமாயிருந்த
அவர்களுக்கும்
எனக்கும்
புது உலகம் உருவானது..

Tuesday, 3 February, 2009

முத்தம்

பணியினிடுக்குகளில்
சோர்வுற்ற
அந்தி மலரைப் போல
வரும் என்னை
புதுப்பிக்கிறது...
உன் ஸ்பரிசமும்..
எச்சில் முத்தமும்...

உன் பிஞ்சுக்
கைகளில்
எப்போதும்
சிறைபடக்
காத்திருந்த
பொழுதுகள் ஆயிரம்...

நீ
வீடு மாற்றி
சென்றதிலிருந்து
வெறுமையாய்
இருக்கிறது
என் பொழுதுகள்..

அவ்வப்போது
நீ
முன்னர் கொடுத்த
முத்தங்களே
மீட்டெடுக்கின்றன...
அவசர காலங்களில்...

நீ...

காலைப் பனியினை
தரிசித்த
இயற்கையின்
சத்தங்களை
பதிவு செய்த
அனுபவம் சொல்லி
படுக்கையில்
புரண்டு கொண்டிருக்கும்
என்னை விழிக்க செய்கிறாய்...
விலக்குகிறேன்
போர்வையோடு..
சோர்வையும்..

நான் செய்ய
நினைப்பவற்றை
செய்து முடித்து விட்டு
விழி விரிய செய்கிறாய்...
சிந்தித்து
செயல் படாமலிருக்கும் என்
நிலையினை
நகையாடுகிறது உன் செயல்..

கடக்க வேண்டிய எல்லைகளை
கண்டு பிரமித்து நிற்கையில்
எனக்கு முன்னே சென்று
கைதூக்கிவிட காத்திருகிறாய்..
என் இதயம்
சிறகு முளைத்து
பறக்கிறது உனக்கு முன்னால்..

எல்லோருக்குமானவனகா
நீயிருந்த போதும்
உணர்கிறேன்
சில நேரங்களில்...
எனக்கானவனாக ...

நமக்கிடையேயான
வார்த்தை பரிமாற்றங்களின்
மத்தியில்
சம்மணமிட்டு எழுகிறது
மௌனம்...

அது உடை படும் போது
விடை தெரியும்..
எல்லாக் கேள்விகளுக்கும்...

காத்திருப்பு படர்கிறது...
நம் வெளியெங்கும்..

புன்னகை

வழியில்
எங்காவது
சந்தித்தால்
உதிர்த்துப் போக
புன்னைகையாவது வேண்டும்...

இப்போதே
விதைத்துப்
போகலாம்
அதற்கான
துவக்கப் புன்னகையை...

புத்தகங்கள்- சிறுகதை

சிரித்தபடியே சொன்னான்...'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கிறது. ..' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என்றபடி விடைபெற்று வந்துவிட்டேன்..

வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன்...நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? ..இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் என்னிடம் எனக்கு தெரிந்த யாரும் சொல்லவில்லை...சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா?.. அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல் என்னிடம் இல்லாமல் இருந்ததா?..இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது..?ஒரே குழப்பமாக இருக்கிறதே ..சரி அவன் நாளை சந்திப்பதாக சொல்லி இருக்கிறான்.. அவனிடமே கேட்டு விடலாம்..

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது..ஒரு சிறிய ஆனால் கனமான பையொன்றை என்னருகில் வைத்துவிட்டு தன்னுடைய கால்சட்டையை லேசாக தூக்கிக் கொண்டு மணலில் அவன் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்..

நான் கால்களை நீட்டியபடியிருந்தது அவனுக்கு எரிச்சல் தரவில்லையென்று
உணர்ந்தேன்..அவன் தந்த பையைத் திறந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தேன்... இதுவரை நான் கேள்விப்படாத எழுத்தாளர்கள் .. நாவல்களாக, கதைகளாக,கவிதைகளாக கைகளில் கனத்துக் கொண்டிருந்தனர்.. அவனே ஆரம்பித்தான்..

ஒவ்வொரு எழுத்தாளர்களின் செல்வாக்கு பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான்...அதுமட்டுமன்றி அந்த புத்தகங்களின் ஒரு சிறு சாராம்சத்தையும் பகர்ந்தான்..நான் விழிவிரிய
ஆச்சர்யத்துடன் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. இவ்வளவு நாள் இவனைப் பற்றி அறியாமலிருந்து விட்டோமே என்ற ஏக்கத்தை தூவியபடி இருந்தது அவன் பேச்சு...

அவனிடம் கேட்பதற்கென்று சேர்த்து வைத்த கேள்விகளுக்கும் அவனது வார்த்தைகள் பதில் சொல்வதாக இருந்தது...அந்த பையை வீட்டுக்கு கொண்டு வந்து எனது அறையெங்கும் பரப்பி வைத்துக் கொண்டு ஆச்சரியங்களோடு பார்த்திருந்தேன் .. எவ்வளவு மிகப் பெரிய எழுத்தாளர்களெல்லாம் இன்று என்னோடு..

ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்து லேசாக புரட்டி பார்த்து விட்டு பக்கத்திலேயே வைத்தபடி இருந்தேன்..சிறிது நேரத்தில் எனது அறையெங்கும் பரவி இருந்த புத்தகங்கள் ..என்னை சுற்றி அடுக்கப் பட்டிருந்தது போல இருந்தது.. ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் மிக நெருங்கிய நட்பை பெற்று விட்டேன்.. இப்படியே நாட்கள் நகர்ந்து போனது...நான் புத்தகங்களுக்கிடையில் ஊர்ந்து கிடந்தேன்..தீராத தாகத்துடன் வரிகளை வலிகளை விழுங்க கற்றுக் கொண்டு விட்டேன் ..அந்த அறையை விட்டு வெளியே எங்கும் நகர்ந்த பாடில்லை..யாரும் என்னைதொந்தரவும் செய்ய வில்லை.. பூட்டப்பட்ட அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே யாரவது முக்கியமான நபர்கள் எங்கள் வீட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்துக்
கொள்வதோடு சரி...

ஒரு கட்டத்தில் புத்தகங்களின் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தேன்.. சில தாள்களோடும் ..சில எழுதுகோல்களோடும் .. குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அந்த குறிப்புகள் ஒரு பக்கம் தாள்களாக பரவி ஒரு குவியலை உருவாக்கிஇருந்தது..இப்போது புத்தகங்கள் தன் எடையை இழக்க ஆரம்பித்தது.. நான் புரட்டிப் படித்த புத்தகங்கள் காற்றில் மிதந்தன..ஒரு காகிதத்தைப் போல.. இப்படியே அந்தரத்தில் நான் படித்த புத்தகங்கள் காகிதத்தை போல மிதக்க ..நான் எடுத்த குறிப்புகள் தரையோடு தரையாய் கிடந்தது..

புத்தகங்களோடு படுத்துக் கிடந்த இரவுகளில் பசியறியாது..
உடல் இயக்க வெளிப்பாடுகள் ஏதுமின்றி இருந்தது ஆச்சரியமாய் இருக்கிறது..

ஒருவேளை அந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களோடு நானும் உண்டு , கழித்து ,ஊர் சுற்றியது காரணமாய் இருக்கலாம்..
சில நாட்கள் கழித்து எனக்கு புத்தகங்கள் பரிசளித்தவன் வந்தான்..என் அறையை திறந்து மூடினேன்.. உள்ளே வந்து பார்த்தவன் வியந்துபோனான்.. அப்போது அவன் தந்திருந்த புத்தகங்கள் காற்றில் மிதப்பதை விட்டு ஒவ்வொன்றாய் தரையில் விழ.. எனது குறிப்புகள் இப்போது அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது..

அவன் வேறு புத்தகங்கள் எதாவது கொண்டு வந்திருக்கிறானா என்றுக் கேட்க அவன் நூலகத்திலிருந்து வந்ததாக ஒரே ஒரு புத்தகத்தை நீட்ட அதையும் வாங்கி அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. எனது தாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததே யொழிய அடங்கவில்லை..எனது நாட்கள் இப்படியே நகர்வதை அருகிருந்து பார்த்த அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.. இப்படியே விட்டால் நான் பைத்தியமாகி விடுவேனென்று அவனிடம் என் வீட்டில் உள்ளவர்கள் சொல்லவும் அவன் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடும்..

தீராத தேடலுடன் படித்தபடி இருந்த என்னை தான் படிக்கப் போவதாக சொன்னான்.. அதிர்ச்சியுடன் நிமிர்ந்த போது எதையும் கண்டு கொள்ளாதவனாக வேக வேகமாக புரட்டினான்...

அதற்கு பிறகு நான் எதையும் படிப்பதே இல்லை..எங்கேயாவது எழுத்துக்கள் தெரிந்தாலே எரிச்சலைடைகிறேன்..என் பார்வையிலிருந்து எழுத்துகள் ஓடி ஒளிய வேண்டும் என விரும்புகிறேன்.. வீட்டிற்கு வாங்கி வரும் பொருட்களைச் சுற்றி இருக்கும் தாள்கள் கூட கடுங்கோபத்தை உண்டாக்குகின்றன.. அவன் இன்னும் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறான்......

தூத்துக்குடி முத்து

முத்துக்கு பெயர் பெற்றது
தூத்துக்குடி...
தூத்துக்குடியே பெற்றெடுத்த
முத்து நீ...

உன் தீக்குளிப்பை
ஈனர்கள் சிலர்
ஏளனமாய் பேசலாம்..
அது எப்போதும்
நடப்பதுதானே...

உன் தியாகம்
ஏராளமானோரை
உசுப்பி விட்டிருக்கிறது...

இருட்டை கொளுத்திப்
போட்ட வெளிச்சமே...
பல முகத்திரைகளை
கிழித்தெறிந்த தீவி(வீ)ரனே

வரலாற்று நாயகன் நீ...
வரலாற்றை புரட்டும் நாயகன் நீ...

உன் வெளிச்சத்தில்
பலரின் முகங்களும்
வெட்ட வெளிச்சமாயின..

நீ இட்ட தீ
புகைகிறது உலகமெங்கும்...
இனத்தீயாய்..

இது விளையாட்டு

வேடிக்கைதான்
பார்க்க முடிகிறது..
சிலரால்..

விளையாட்டையும்...
வெடிகுண்டு போடுவதையும்...

கர்ணா..

பணத்தின் பின் சென்ற
இனமழிக்க துணிந்த
வரலாற்றுத் துரோகியே...

நீ உயிர் துறந்திருந்தால்
உலகமே உன்னை கொண்டாடிஇருக்கும்..
உயிருக்கு பயந்து
எதிரிக்கு ஏவல் செய்யப் போனா(நா)யே ...

பூமித்தாய் உன்னை சுமந்ததிற்கே
தலைகுனிகிறாள்..
இரட்டையர்களில் ஒன்று
இதயமற்றுப் பிறந்ததை
காலம் அவளுக்கு தாமதமாய்
உணர்த்த நிலைகுலைந்த
அவளைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
என் தாய் மாமன்..

ஒன்று கேள்
ஈனப் பிறவியே...

காலத்தால்
யூதாஸ்
இயேசுவால்
மன்னிக்கபடலாம்..

எட்டப்பன்
கட்டபொம்மனால்
மன்னிக்கப்படலாம்...

காட்டிகொடுத்த கர்ணாவே..
ஆயிரம ஆண்டுகள்
கடந்த பின்னும்
காலமும் மன்னிக்காது..
தமிழினமும் மன்னிக்காது...

அழிந்து போ
அடியோடு அழிந்து போ..

என்ன செய்ய?

நான்கு விக்கெட்
எடுத்ததற்கே
கல்லெறிகிறாய்...

நாற்பது ஆண்டுகளாக
ஆயிரமாயிரம் உயிர்களை
கொல்லும்
உன்னை
என்ன செய்ய வேண்டும்?...

அணி

காதணி
கையணி
காலணி
கழுத்தணி
யாவற்றையும்
கழற்றி வைத்து விட்டு
விளக்கணைக்கிறேன்..
உருவக அணி
உவமை அணி
சொல்பொருட்பின்வருநிலையணி
தற்குறி பெற்றணி
வரிசையாக அணிவகுத்து
நிற்கிறது..

தொலைக்காட்சியும் தொல்லையும்...

சின்னத் திரை மோகம் பிடிபட
சிந்தனையின் வேகம் தடைபடும்..

காய்கறிச் சந்தையில்
விலையினை தெரிந்துகொள்வதை விடவும்
சீரியல் நடிகைகளின்
நிலையினை தெரிந்து கொள்ளவே முனைவர்..

வீட்டிலிருந்தே திருவண்ணாமலை
தீபம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வர்..
பக்தியாய் முக்தி நோக்கி சக்தி கேட்பார்..

விளம்பரங்கள் பார்த்தே
விடிந்தது முதல்
விழிகள் தூங்கும் வரை
அதனை பொருட்களும் வாங்கப்படும்
பலவீடுகளில் ...
வேண்டாதவற்றையும் வாங்கி நிறைப்பார்
சிலவீடுகளில் ...

அடுத்த தலைமுறையில்
இதெல்லாம் நடக்கும்..

உயிர்கொல்லும் குளிர்பானங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் குவிப்பார்..
உடல்நலம் குன்றம் போது
இளநீரில் இருந்தோ நொங்கிலிருந்தோ
தயாரிக்கப்பட்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
மருந்துகள் அதிக பயன் தரும்..

எட்டுமணியானால்
மின்வெட்டானாலும்
கண்ணில் தாரை தாரையாய் நீர் வழியும்..

அறிவியல் அப்போது சொல்லும்
குறிப்பிட்ட நேரத்தில்
தொடர்ச்சியாய் பார்த்த
தொடர்கள் முடிந்த பின்னும்
முடிவிலியாய் தொடரும் கண்ணீர்
பரிணாம வளர்ச்சிஎன்று...

கணவன் மனைவிக்கிடையேயான
பரஸ்பரம் குறைந்து மாதத்தில் ஒருநாள்
பேசுவதற்காகவே
ஒருநாள் தேர்ந்தெடுக்கப் பட்டு
கொண்டாடப்படும் நாளாக
வெளியில் எங்காவது சந்தித்துப் பிரியும்
நிலை வரும்..

ஒரு வீட்டின் அத்தனை
அறைகளையும்
கண்ணாடி, துணிமணிகள் போல
தொலைக்காட்சிப் பெட்டிகள்
அலங்கரிக்கும்...
ஆளுக்கொரு அறையில்
தொலைகாட்சியில்
முகம் புதைத்திருப்பர்கள்...

தனிக்குடும்பம்
கூட்டுக்குடும்பம் மறைந்து
ஒரு நபர் வீடுகளாக
அறைகள் மாறும்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீதிக்கொரு பள்ளி கட்டுவோம் என்பது போல...
ஊருக்கொரு கட்சித் தலைவார்கள்
ஈசல்களாய் சேனல்கள் தொடங்குவார்கள்..

நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்கள் வருவது போய்
விளம்பரங்களுக்கிடையே
நிகழ்ச்சிகள் வந்து போகும்..

மட்டைப்பந்து
அதாவது ஆங்கிலத் தமிழில்
கிரிக்கெட்...
கைப்பந்து
கால்பந்து மறந்து
மட்டைப்பந்தோடு
மந்தையாய் திரிவார்கள்...
குழந்தைகள்..மாணவர்கள்..

சிலம்பாட்டம்-சிம்புவின் படமல்ல...
தமிழரின் கலை
சிலம்பாதாம் ஒரு படத்தின்
பெயராக மட்டுமே அறியப்படும்..

திரையரங்குகள்
மூடப்பட்டு
கடித முகவரிகளிலோ
முகவரி தேடி வரும்
புதியவர்களுக்கோ
திரையங்குகள் பெயர்கள்
அடையாளப்படும்..

திரைத்துறை அடியோடு
சின்னத்திரைக்கும் புலம் பெயரும்..
புரட்டுவாரின்றி
புத்தகங்கள் தெம்பும்..

தொடர்ந்து சீரியல்
பார்பவர்களின் சங்கம்
தொடங்கப்படும்..
அதுவும் கூட்டப்படாமலே
இருக்கும்...
கூட்டப்பட்டாலும்
விட்டுப்போன நாட்களில்
நடந்த நிகழ்ச்சிகளை
அசைபோடவே அது பயன்படும்..

அண்டை வீடு
அண்டார்டிகாவில் இருக்கும்..
அண்டார்டிகா
அடுக்களைக்குள் அலறும்..

சேனல்களில் செய்திகள் மாறுபடும்..
உண்மைகள் வேறுபடும்..
சிலர் NDTV,BBC களில்
உள்ளூர் செய்திகளை அறிவார்கள்..

உறவுமுறைகள் கேள்விக்குறியாகும்..
ஒரு குழந்தை தன் தாயைக்
கண்டறிவதே பெரிய கின்னஸ்
சாதனையாகப் பேசப்படும்...

சந்திராயன் விண்ணிலிருந்து
நிலவோடு பூமியையும்
புகைப்படம் எடுத்து அனுப்புகையில்
ஒயர்களால் மரங்கள்
கட்டப்பட்டிருப்பதாக
காட்சிகள் சொல்லும்...
அங்கே
உறவுகள் அறுபட்டிருக்கும்...இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?