Monday, 9 February, 2009

காதல் தாவரம்..

அலையடிக்குமிந்த
பாறை
எந்நேரமும்
நனைந்தபடியே
இருப்பது
உனது
காதல் மழையில்
இதயச் சிறகுகள்
நனைந்த பறவையாய்
என்னை நினைவூட்டுகிறது..

தொடர் ஈரத்தின்
பிரதிபலிப்பில்
பாறை மீது
பூத்திருக்கும்
சிறுதாவரங்கள் ...

உணர்த்துவது
என்னவெனில்
தொடர் காமத்தின்
நிரந்தர எச்சமாய்..
பூத்திருக்கும் காதலை...

அவை
சூரிய ஒளிபட்டும்
அலையடித்தும்
வளரும்
பாசிபடிந்த
சிறுதாவரத்தைப் போல்..

எனக்குள்
எப்போதும்
பூத்திருக்கச் செய்யும்
புரிந்துணர்வின் மீது
கட்டப்பட்டுள்ள
நம் காதல் தாவரத்தை.. .. ..

சுமந்து..

இந்த
காதலைச்
சுமந்து
நடப்பது
எவ்வளவு பெரிய
சுகமான சுமையாய்
இருக்கிறது...
நத்தையின் நகர்வைப் போல்..
நதியின் நகர்வைப் போல்..

அறுவடை

ஆயிரமாயிரம்
ஆண்டுகள்
கடந்த பின்னும்
அறுவடை செய்து தீராது
என்னுள்
விதைக்கப்பட்ட
காதல்...

காதலர் தினம்- ஸ்பரிசம்3

மண்ணில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பது மனதில் காதல் இன்றி யாரும் கிடையாது என்பதன் பொருளே..

காதலிக்கும் முன் யாரும் நம்மைக் கண்டுகொள்ளாத போது வரும்
வெறுப்பு...காதலிக்கும் போது எல்லோரும் நம்மையே கண்டு கொள்வதாக வரும் தவிப்பு...இந்த இரண்டு விஷயங்களும் யாருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விடும்..

காதல் என்று சொல்லும் போது அங்கு காமத்தைப் பற்றியும் பேசி ஆக வேண்டும்..
ஏனெனில் குறிக்கோளில்லாத வாழ்க்கை மட்டுமல்ல காமமில்லாத காதலும் துடுப்பில்லாத படகைப் போன்றது தான்..

காதலை ஆராதிப்பவர்களை காதலும் ஆராதிக்கும்...காதல் நிலைத்து நிற்பது காமத்தில் அல்ல... புரிதலில்.. புரிதல் சிலந்தி வலை பின்னுவது போலானது..
அறுந்தறுந்து விழும் போதெல்லாம்... சோர்வின்றி சிலந்தி எச்சிலை உதிர்ப்பதை போல ....இடைவெளிகளை புரிதலில் இட்டு நிரப்பிக் கொண்டால்
காதல் வாழ்க்கை களிப்பாக இருக்கும்.

காதலர் தினம்- ஸ்பரிசம்2

காதல் நம்மை சந்தோசப்படுத்தும்..எப்போது தெரியுமா?... புரிதலுடன் இருக்கும் போது..இந்த காதலுக்குத் தான் எத்தனை சக்தி இருக்கிறது தெரியுமா?...
காலமும் காதலும் கைகோர்த்துக் கொண்டு சிறந்த காதலை இந்த உலகத்தில் தேடிக் கொண்டே இருக்கிறது யுகம் யுகமாய்.. இந்த தருணத்தில் ஒரு கவிதை என் நினைவில் வந்து போகிறது...

"உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல் கைதட்டி
சிரித்தது..
சிறந்த காதல்
இணையினைக்
கண்டுவிட்டதாக..."

உண்மைதான்.. உண்மையான காதலை நாம் உணர்ந்து கொள்ளும் போது
எந்த பிரச்சினை வந்தாலும் அதை தாங்கும் சக்தியை அந்த காதலே நம் கைகளில் கொடுத்து விட்டுப் போகும்...அதே போல் கண்டுகொள்ளப்படாமல் போகும் காதல் அலைந்து கொண்டு இருக்கும் இந்த மண்ணில்...இன்னொரு விஷயம்.. மண்ணும் காதலும் ஒன்று.. எப்படி என்று கேட்பது புரிகிறது?

மண் காலில் ஒட்டிக் கொண்டிருக்கும்போது கண்டு கொள்ளாத நாம்
கண்ணில் பட்டு விட்டால் கலங்கிப் போகிறமே...அப்படிதான் இந்தக் காதலும் ...
நம்மைத் தாண்டி செல்லும்போதெல்லாம் விமர்சிக்கும் நாம் நமக்குள் வந்து அமரும் போது அந்த வலியோடு கூடிய சுகம் இருக்கிறதே அதை உணரத்தான் முடியும்..வார்த்தைகளால் உரைக்க முடியாது...மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

காதலர் தினம்- ஸ்பரிசம்-1

காற்றைப் போல் இந்த காதல் எப்போதும் நம்மைச் சுற்றித்தான் இருக்கும்..
நாம் அதை தனித்து உணருவது எப்போதோ ஒருமுறைதான்.
காதலைப் பற்றி பலரும் பலவாறு சொல்லி இருக்கிறார்கள்..ஆயினும் புதிதாய் சொல்வதற்கு ஏதோ ஒரு விஷயம் இருப்பதால்தான் இன்னும் இனிக்கிறது இந்த காதல் என்னும் வார்த்தையும்..அதன் ஸ்பரிசமும்..

காதலைக் காதலிக்காத உள்ளமும் கிடையாது..காதலை மீறிய உணர்வும் கிடையாது..காதல் தித்திக்க காரணம் நாம் காதலிப்பதால் இல்லை..நாம் காதலிக்கப் படுவதால்...இதை எத்தனை உள்ளங்கள் உணர்ந்திருக்கும்?...காதலித்துப் பார்.. என்பதை விட.. காதலிக்கப் பட்டுப்பார்.. என்று சொல்லலாம்.. நம்மை புரிந்து கொள்ள நம்மை மனதார நேசிக்க ஒரு உயிர்
இருக்கிறது என்ற எண்ணமே நம்மை சந்தோசப் படுத்தும்...இந்த சந்தோசம் இன்னும் தொடரும்... காதல் நம்மை தொடர்வதைப் போல்..

பனிரெண்டு மணி அய்ம்பத்தேழு நிமிடம்...

இரண்டு இரவு..
இரண்டு பகல்..
இரண்டு காலை...

இயற்கையின் குடைக்குள்
இயல்பான பகிர்தல்..
மென் தூரிகையில்
நின் ஓவியங்கள்..
சுவாசத்தில் சுகம்..
சிந்தனையின் தெளிவு...

நகம் ...

நீ
முதன் முறை
வெட்டி விட்ட
நகங்களை
வளர வளர வெட்டுகிறேன்...

அது
நம்
காதலைப் போல
வெட்ட வெட்ட வளருகிறது..

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?