Monday, 2 August, 2010

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி

ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியுடன் (அன்னையர் தினத்தை முன்னிட்டு) ஒரு நேர்காணல்..

உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..
கணவர் கான்ட்ராக்டரா இருக்கார். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்தான். பொண்ணக் கட்டிக் கொடுத்து ஒரு பேரப் பிள்ளை இருக்கான். பையன் இன்ஜினியரா இருக்கான். ரொம்ப சந்தோஷமான குடும்பம்.


ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற அடையாளம் தவிர ஒரு அன்னையாய் உங்கள் குழந்தைகளிடம் உங்கள் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
ஒரு கனரக வாகன ஓட்டுநர் நம்ம அம்மா அப்டினு சந்தோஷப் படுறாங்க. அதுமட்டுமில்லாம இவ்ளோ கஷ்டமான வேலை செய்திட்டும் பிள்ளைங்கள ஒழுங்கா பார்க்க முடியுது. ஒரு அம்மாவா இருக்கும் போது அப்பாவ விட கூடுதலா பொறுப்பும், கஷ்டமும் இருக்கும். அம்மாவுக்குத்தான் பிள்ளைங்களை நல்வழிப்படுத்தி வளர்க்குறதுக்கு பெரிய கடமை இருக்கு. காலையில வேலைக்குப் போய்ட்டு குழந்தைகளை கவனிச்சுக்குறது கஷ்டம் தான். விடா முயற்சியோட பிள்ளங்களை தன்னம்பிக்கையோட வளக்கணும்னு நினைச்சேன். அவங்க படிக்கிறதுக்கு உறுதுணையா இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு கன ரக வாகன ஓட்டுநரா மட்டுமில்லாம ஒரு அம்மாவாவும் சிறப்பா இயங்குறேன்.

உங்கள் அம்மாவைப் பற்றிக் கூறுங்களேன்.
என்னுடைய ஒன்றரை வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. அதனால அம்மாவோட அம்மாதான் வளத்தாங்க.

நீங்கள் அம்மா இல்லாமல் வளர்ந்த பெண், சிறந்த அம்மாவாக இருக்கும் பெண். இந்த நிலையை எப்படி உணருகிறீர்கள்?
ஒரு அம்மாவா ரொம்ப சிறப்பா உணருறேன்.

தமிழ்நாட்டுல எத்தனை பேர் இந்த கனரக வாகனம் ஓட்டிட்டு இருக்காங்க?
என்னை அப்பாயின்ட் செஞ்சு 6 வருஷத்துக்குப் பிறகு கன்னியாகுமரியில இன்னொரு பொண்ண அப்பாயின்ட் பண்ணாங்க. அதுக்குப் பிறகு சென்னையில ரெண்டு பேர ஏ18 பஸ்ல அப்பாயின்ட் பண்ணாங்க.

இந்த துறைக்கு வர வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது?
பெண்கள் பெரும்பாலான வேலைகள் பாத்தீங்கன்னா டீச்சர் வேலை, ஆஃபிஸ் வேலை இப்டிதான் செய்திட்டு இருக்காங்க. அவங்கள கஷ்டமான வேலைகளை செய்ய விடுறதும் இல்ல. பெண்களும் முயற்சி செய்றதும் இல்லை. முடியாதுனு ஒண்ணு கிடையாதுனு சொல்வாங்க. அந்த மாதிரி நான் முயற்சி பண்ணேன். எங்க அண்ணன் முயற்சியால முதல்ல லைட் வெகிக்கிள் ஓட்டுனேன். இது எனக்கு ஈஸியா வந்தது. சுலபமா இருக்கேனு ஹெவி வெகிக்கிள் ஓட்டுனா என்னனு ஒரு எண்ணம். ஆனா லேடிஸால முடியாதுனு சொன்னாங்க. ஆனா என்னால முடியும்னு கத்துக்க ஆரம்பிச்சேன்.

வீட்டுல உள்ளவங்களோட ஒத்துழைப்பு கிடைச்சதா?
பொண்ணாச்சேனு வீட்டுல எல்லாரும் பயந்தாங்க. வீட்டுல ஒத்துழைப்பு கிடைக்கல. பயத்தால எதிர்த்தாங்க. ஆம்பிளைகளே இந்த வேலைக்கு கஷ்டப்படும் போது பொம்பளையால முடியாது. பின்னால வேதனைப்படாதனு பாசப்பிணைப்புல தடுத்தாங்க. ஆனா அவ்ளோ கஷ்டமானு பாக்கலாம்னு ஒரு வீராப்போடதான் களமிறங்கினேன். பயந்தா உலகத்துல வாழ முடியுமா? என்னால முடியும்னு நான் நினைச்சதால இதுவரை எந்த விபத்தும் இல்லாம ஓட்டிட்டு இருக்கேன்.


இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லையா?
இதுவரை இல்லங்க.

வாழ்த்துகள். வாகன ஓட்டுனர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
எப்பவுமே கவனமா இருக்கனும். ஒரு கண்ணத் தட்டி முழிக்கிறத விட கொஞ்சம் கூட தட்டி முழிச்சம்னா அந்த நேரத்துல விபத்து நடந்திடும். அதனால போதையில வண்டி ஓட்டாம சிக்னல்ல கவனிச்சு, எதிர்க்க வர்ற வண்டிய கவனிச்சு சைடுல ஓவர் டேக் பண்றாங்களானு சைடு மிரர் கவனிச்சு ஓட்டுனா விபத்து வர்றதுக்கு வாய்ப்பு இல்ல. நம்மள மாதிரி எதிரே வர்றவங்களும் கவனத்தோட ஓட்டுனாங்கன்னா 80சதவீதம் விபத்துக்கள தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் விபத்துக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு வாகனம் ஓட்டுவதை தவிர வேறு என்ன காரணம்?
சாலை வசதி சரியில்லை. 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரிதான் இப்பவும் சாலை வசதி இருக்கு. அன்னைய விட இன்னைக்கு வாகன நெருக்கடி அதிகம். இதுவும் விபத்துக்கு ஒரு காரணமா இருக்கு.

சிறு வயதில் தைரியசாலியாக இருப்பீர்களா?
சின்னப்பிள்ளைல நான் ரொம்ப கோழையாவும், பயந்தவளாவும் இருந்தேன். பிறகு ஒவ்வொரு ஸ்டேஜிலயும் சமூகத்தைப் பாத்து பாத்து தைரியம் வந்துச்சு.

கனரக வாகம் ஓட்டுறதால உங்க உணவு முறைகள்ல மாற்றம் செஞ்சிருக்கீங்களா?
சாப்பாடுல ஒண்ணும் வித்தியாசம் இல்ல. ரெகுலரான சாப்பாடுதாங்க.

மகளிர் மட்டும் படத்துல நிஜமான பெண் ஓட்டுநரா வந்திருப்பீங்க. உங்க ஓட்டுநர் வாழ்க்கையில சக பயணிகள் எப்படிப் பாக்குறாங்க. சக ஆண் ஓட்டுநர்கள் எப்படி பார்வையில வேறுபாடு இருக்குதா?
இப்ப நாகர்கோவில் டூ திருவனந்தபுரம் ஃபாஸ்ட் பஸ் ஓட்டிட்டு இருக்கேன். நம்ம இடத்த விட கேரள மக்கள் வித்தியாசமா இருப்பாங்க. சின்னச் சின்ன ரூட்டுல டிராஃபிக்ல சைடு கொடுக்க முடியாத போது அவங்க வேணும்னு சைடு தர மாட்டேங்றாங்கனு நினைப்பாங்க. அப்ப ஆம்பிளைனு நினைச்சு முன்ன வருவாங்க. லேடி டிரைவர்னு தெரிஞ்சதும் ரொம்ப அன்பாவும், மதிப்பாவும் நடந்துக்குவாங்க. எனக்கு நல்ல கோ&ஆபரேஷன் தர்றாங்க. ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் சொல்றதும் நடக்கும். சின்னக் குழந்தைக்குக் கூட அவங்க அம்மா "அந்தா டிரைவர் ஆன்ட்டி வர்றாங்க டாட்டா சொல்லு"னு சொல்வாங்க. அதனால எனக்கு உற்சாகமா செயல்பட முடியுது.

அந்தக் காலத்துலேயே டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி படிக்கக் கூடாதுனு சொல்லி அவங்க அம்மா தடை பண்ணினாங்க. அவங்க அப்பாதான் அவங்கள வெளிய கொண்டு வந்தாங்க. அந்த மாதிரி இப்பவும் சில அம்மாக்கள் இருக்கத்தான் செய்றாங்க. அவங்களுக்கு சிறந்த அன்னையான நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
அப்படி பெண் பிள்ளைகள அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாதுனு தடுக்குற அம்மாக்களுக்கு என்ன சொல்ல விரும்புறேன்னா மகள் தவறான வழியில போனா தவறான செயல் செஞ்சா அத தடுக்கணுமே தவிர ஒரு நல்ல காரியம் செய்யும் போது நல்லா படிக்கனும்னு சொல்லும் போது அத தடுக்கக் கூடாது. பெண்கள் தைரியமா இறங்கி வெளி வேலை செய்யும் போது அத இந்த சமுதாயம் கொச்சைப்படுத்துது. ஆனா அவங்க இனிவரும் காலங்கள்ல மாறிடுவாங்க. எல்லா வேலையிலயும் சம உரிமை இருக்கு. அதனால பெண்கள தட்டிக் கொடுத்து முன்னுக்குக் கொண்டு வரணும்னு இப்ப உள்ள தாய்மார்களுக்கு சொல்லிக்கிறேன். தன்னோட குழந்தைகள் மேல் நம்பிக்கை வச்சு எந்த செயலையும் செய்ய அனுமதிக்கணும்.

பெண்கள பலவீனமானவங்கன்னு சொல்றாங்களே..
அவங்கள வளர்க்குற முறையிலதாங்க இருக்கு. வெளியே போகாத, வெயிட்ட தூக்காதேனு வச்சிருக்குறதால பெண்களுக்கு முயற்சி பண்றதுக்குள்ள சந்தர்ப்பமே கிடைக்கல. அதனாலதான் பெண்கள வீக்னஸ் ஆனவங்கன்னு சொல்றாங்க. நம்ம முயற்சி பண்ணி பாக்குற போதுதான் அது முடியும்னு தெரியும். தன்னம்பிக்கையும், முயற்சியும் பெண்கள்கிட்ட இருந்தா அவங்களால முடியாதது எதுவுமே இல்ல. சின்னப் பிள்ளைல கனவு கண்டாக்கா ஒரு பஸ்தான் என்னைத் துரத்தும். பஸ்னா எனக்கு பயம். நான் ஓடி ஒளிஞ்சிக்கிட்டே இருப்பேன். அது கனவில. இப்ப ஆப்போஸிட்டா நான் பஸ்ஸ அடக்கிக் கொண்டு போறேன். நம்ம பயத்த பலமா மாத்திடனும்.

மக்களுக்கு சொல்ல விரும்புறது..
நம்மால முடியாதுனு ஒதுங்கி இருக்காம தன்னம்பிக்கையோட முயற்சி செய்யனும். கோழையா இருக்கக் கூடாது. நிறைய பெண்கள் எனக்கு அது செய்ய முடியாது, இது எனக்கு தெரியாதுனு சொல்றத ஸ்டைலா நினைக்கிறாங்க. அது நமக்கு லைஃப்ல பெரிய அடியா இருக்கும். இப்ப தகப்பனாரோட, சகோதரர்களோட அரவணைப்புல இருக்கலாம். ஆனா நாம சமூகத்துல சாதிச்சுக் காட்டணும்னா நிறைய அனுபவப்படனும். எல்லாம் தெரிஞ்சுக்கனும். தெரியாததோ, முடியாததோ முயற்சி பண்ணிக் கத்துக்கிட்டா முடியும். அப்டி பெண்கள் வாழ்ந்து காட்டணும்.

--இவள் பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?