Friday 21 November, 2008

துளித்துளியாய்...

#சிறைஎடு..
முறையிடு..
மறுத்தால்
முரண்டுபிடி...
உறக்கம் களை
உணர்வளி ..
உயிர்ப்பி..

# புரட்டி எடு..
புத்துயிர் கொடு..
அரற்று..
மிரட்டு..
அடக்கு..
அகழ்ந்தெழு..
அணுவில்
அணுவாய்
ரசி
புசி...

# வியர்க்க வை
விசிறி விடு
பதமாய் கடி
இதமாய் வருடு..
அழுத்தம் கொடு
அனலில் இடு..

# கரைத்திடு..
கரைந்திரு..
நுரைத்துப் பொங்கு..
மடி மீது
முடி கோது
இடைவேளை
இனியேது?

# சிக்க வை
சிறக்க வை
நிற்க வை
நிறைக்க வை
மக்க வை
மலர வை..

#திறந்து படி
கறந்து குடி
விரட்டி பிடி
விழியால் திரி..

# தீவாக்கு
திரியாக்கு
பூவாக்கு
புயலாக்கு...
சுற்றம் மற
சொர்க்கம் திற..

உரமாயிரு..
உறவாயிரு..
உலகாயிரு..
உயிராயிரு..

#மூர்ச்சையாக்கு
முழுமையாக்கு..
மூச்சில் கல
மூர்ச்சை இழ..
நிம்மதி எழ..
நினைவை இழ..
புதைந்திரு
புகைந்திரு...

#மழையால் பொழி..
பிழையால் அழி..
இருட்டாக்கு
ஒளியூட்டு...
திரைகிழி..
நிறையளி ..
குறை தள்ளு..
குறுக்கள்ளு..

#மலை மோது
கிளை தாவு..
கனி பறி..
பூ நுகர்..
உயிர்வெளி..
உயர்வளி..

#என்னை உயிராக்கு
எனக்குள் உயிராகு...

பட்டாம்பூச்சி

நெடுஞ்சாலை பயணத்தில்
உரசிச் செல்லும்
பட்டாம்பூச்சியாய்..
என்னைக் கடக்கிறாய்..

தக்க வைத்து விரும்பி
திரும்பிப் பார்க்கிறேன்
காணவில்லை சுற்றிலும்..

பாதி வழியில்
படபடக்கிறது என்
சட்டைப் பையில்
உன் இறக்கைகள்...

ஈர்ப்பு

எழுதி எழுதி தீர்க்கிறேன்
தீர்ந்துவிடவில்லை
உன் மீதான ஈர்ப்பு..

தூரத்து மழை

தூரத்து மழையை
ரசிக்கிற மனமும்
உச்சிமோந்து
பாராட்டும் குணமும்
சிலருக்கு இருந்தாலும்..
உன்னிடம் கண்டுகொண்டேன்..
உற்சாகப் பெருவெளி நீ..
உறையா ஊற்று நீ..
நீக்கமற நிறைந்திரு..
நினைவுகளின் வெளியில்...

பத்தோடு ஒன்று..

பத்தோடு பதினொன்று எனக்
கேட்கிறாய்
என்ன சொல்ல..
கண்ணோடு மணி என்றா?
மண்ணோடு விதை என்றா?
இல்லை தோழா..

ஒற்றைச் சிறகுள்ள எனக்கு
மற்றொரு சிறகு தந்து
பறக்கக் கற்றுக் கொடுத்தது
நீதான் தோழா...

அவரவர் பாதையில்

வெட்ட வெளியில்
பொட்ட வெயிலோ
கொட்டும் மழையோ
ஒட்டும் மணலோ
தொட்டு விடும் தூரத்தில்
விட்டுவிலகாமல் பயணிக்கிறோம்...

இருவர் செல்லும் அளவுள்ள
இந்த பாதை
ஒத்தையடி பாதையாக மாறி
முடிவடைந்துவிடாது ..
மீண்டும் இருவழிப் பாதையாக
மாறுகிறது..

அவரவர் பயணத்தை தொடர்கிறோம்..
சஞ்சலமற்று!

அடுக்கிய எண்ணங்கள்

என்னுள்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
எண்ணங்களை
கலைத்துப் போட்டது
உன் சொற்கள்...

மீண்டும் அடுக்கும் முயற்சியில்
கலைந்து போனது
நமக்கான இடைவெளி ..

இப்போது அந்த அடுக்குகளில்
ஒன்றில் மேல் ஒன்றாய்
நாம்...

நீ என்னில்

நீ என்னில்
கரைந்து போகலாம்..
உறைந்தும் போகலாம்..

நான் உன்னில்
புதைந்து மறையலாம்..
புணர்ந்தும் பிரியலாம்...

என் அதிர்வுகளை
உள்வாங்கும் பக்குவமும்..
உன் தேடலை
கண்டுணர்ந்த துடிப்பும்...
நமக்குண்டு

இந்த தகுதி போதும்
யாவற்றுக்கும்..

நட்பு காலம்

நட்புக் காலத்திற்குள்
பாலமமைத்து
பாதம் தாங்கி
வரவேற்கும் உன் அன்பை
எப்படி தாங்கிக் கொள்வேன்?
சின்ன மனதுக்குள்...

கவிதை கேளுங்கள்

உன் வார்த்தைகளை
அசைபோடும்
ஒவ்வொரு முறையும்
கண்கள் வழி கசியும்
காமத்தை எப்படி மறைப்பது?

அது சரி
ஏன் மறைக்க வேண்டும்?

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?