Sunday 12 June, 2011

தமிழ்சினிமாவின் போக்கு


தமிழ் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையை பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை ரசிகனின் மனதில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிக குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்கு பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை பெருகிப் போயிருக்கிறது. 

காதலும் வீரமும் தான் தமிழனின் அடையாளம் என்றாகிவிட்ட நிலையில் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு படம் எடுப்பது சாத்தியக் குறைவு எனும் பிம்பம் படர்ந்திருக்கிறது. இங்கே வீரமும் வன்முறையும் கூட தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். வாள்போர், வில்போர் என்று போரில் தனது வீரத்தை வெளிப்படுத்திய சமூகம் சொந்த பிரச்சினைகளுக்காக ஊரையே பழிவாங்குவதும், தனது தேவைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதும் வன்முறை எனக் கொள்ளப்பட்டால் நாம் இன்னும் காட்சி ஊடகத்தை சரியான கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது அல்லது இன்னும் விசாலமானா பார்வைக்கு நம்மை உட்படுத்த வேண்டும் என உணர்த்துகிறது.  

வன்முறை என்பதையும் கூட சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவது , ஒருவரைத் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல. கருத்தியல் ரீதியான ஒவ்வாத மாற்றங்களை சமூகத்தில் திணிப்பதும் கூட வன்முறையின் களம்தான். 

நிழல் உலக வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன் என்று பெண் கடத்தல், தாதாயிசம், பாலியல் வன்முறை, பழிக்கு பழி வாங்குதல் போன்ற கதைக் களங்கள் மூலம் அதிகம் உணரப்படுவது வன்முறைதான். இரண்டரை மணி நேர படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்றோ, இந்த நாயகனைப் போல நடந்து கொள்ளாதீர்கள் என்றோ அறிவுறுத்துவது எந்த அளவுக்கு மாற்றங்களை முன்னெடுக்கும் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது. 

ஆனால் அதே சமயம் வன்முறையின் சாயல் அல்லாத படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கபடாமல் போயிருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ளவேண்டும்.

பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரின் படங்களில் வன்முறையின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. அது மக்களின் வரவேற்பையும் பெற்று ஊடகங்களின் பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கின்றன. நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய பாலாவின் படங்களும், ராம், பருத்திவீரன் ஆகிய அமீரின் படங்களும், சுப்ரமணியபுரம்,  ஈசன் ஆகிய சசிக்குமாரின் படங்களும் ஆயுதங்களின் பின்னாலேயே பயணித்து வெற்றியின் பாதையில் சென்றன. 

இவர்களைத் தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்த இயக்குநர்களும் கூட வசூலுக்காக அல்லது வேறுசில காரணத்திற்காக அடுத்தடுத்து வன்முறை நிறைந்த கதைக்களங்களை நாடிச் சென்றனர்.  சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக் குழு படம் நகைச்சுவையோடு கூடிய ரொமண்டிக் கதையைக் கொண்டது. அவரது அடுத்த படமான நான் மகான் அல்ல திரைப்படம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் எவ்வாறு வன்முறையின் பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பதைப் பற்றியது. 

அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற ரொமாண்டிக் படத்தை இயக்கிய கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்ற ஒரு படத்தைக் கொடுத்தது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்கு பதில் அதிர்ச்சியையே வெளிக் கொணர்ந்தது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் இவ்வளவு மோசமானதா என்னும் எண்ணத்தை விதைப்பதாகவே இருந்தது. ஒரு பையன் தன் தந்தையின் தவறான செயல்பாடுகளால் மனரீதியாக உடல்ரீதியாக எவ்வாறு தனது செயல்களை அமைத்துக் கொள்கிறான்? என்று காட்ட நினைத்து சமூகத்தில் இவ்வாறான பிரச்சினைகளும் மலிந்து கிடக்கின்றன என்பதற்கு பதில் அந்த நிலையில் இருக்கும் ஒருவரை அது மேலும் தவறுக்கு தூண்டிவிடுவதாகவே அமைகிறது. 

அப்படியானால் நல்லனவற்றையே எடுத்துக்காட்டி பிரசாரம் செய்ய சினிமாவை ஆயுதமாக பயன்படுத்த வேண்டுமா? என்றால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் எல்லாவற்றையும் விட காட்சி ஊடகம் அளப்பரியது. சில பல தந்திரங்களை திரையில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஒரு ரெஃபரென்ஸாக இருக்கிறது. 

மொழி, அங்காடித்தெரு, அபியும் நானும், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், களவாணி போன்ற படங்களும் இதே சமயத்தில் வெற்றி பெற்றன. மக்களின் ரசனைகள் மாறி வருகிறதா? அல்லது இயக்குனர்களின் எண்ணம்மாறி வருகிறதா? எனும் கேள்விக்கு இருவராலும் பதில் சொல்ல இயலாது.  

ஏனெனில் வெற்றியின் சூத்திரம் அடிக்கடி மாறி வரும் வேளையில் சில விஷயங்கள் அபப்டியே மாறாமல்தான் இருக்கின்றன. இன்பம், துன்பம் இரண்டும் கலந்த வாழ்வோட்டத்தில் இளைப்பாறும் சற்று நேரத்திலாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒருபுறமிருக்க, நிஜ வாழ்வில் ஆக்கிரமித்திருக்கும் அல்லது வெளியே தெரியாமல் இருக்கும் நிழல் உலக கதையையே திரையில் பார்த்து சந்தோஷப்படுவது என்பதும் மக்களின் ரசனை. 

நாம் பார்த்தறியாத, கேட்டறியாத மாந்தர்களின் கதைகள், அவர்களின் வாழ்க்கை முறை இதையெல்லாம் ஆதரிக்கிற காலத்தில் நம்ப முடியாத த்ரில்லர் படங்களையும் ரசிக்கிறது மனம். லிங்குசாமியின் சண்டக் கோழி படத்தில் விஷாலின் அடிதடியைப் பார்க்கும் போது பரம்பரையாக வன்முறையின் ஜீன் கடத்தபடுகிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார்கள். 

கதாநாயகன் செத்துப் போவது அல்லது கதாநாயகி செத்துப்போவது அல்லது இருவரும் செத்துப் போவது, கதையின் முக்கியகதாபாத்திரம் செத்துப் போவது இப்படியான முடிவுகளைக் கொண்ட படங்களை திரைக்கதை ஓரளவு நன்றாக இருக்கும் பட்சத்தில் அது வெற்றி பெற்றுவிடுகிறது. பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரின் படங்களில் இத்தகைய முடிவுகள் எழுதப்பட்ட சட்டம். 

சிறுவயதில் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருக்கும் போது உடன் சேர்ந்து நாமும் அழுதால் அழுகையை நிறுத்திவிடுகிறது. திடீரென எதிர்பாரா வேளையில் எதிரே இருப்பவரின் கன்னத்தில் அடித்துவிட்டு அந்த அதிர்ச்சியை பார்த்து ரசிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கக் கூடிய வன்மம் தீர்க்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பே வன்முறையான கட்சியமைப்பைக் கொண்ட படங்களின் தொடர் பயணத்திற்கு காரணம். 

இதையும் கடந்து ராதாமோகன் போன்ற இயக்குனர்கள் மொழி, அபியும் நானும் போன்ற படங்களை எடுக்கும் போது மக்கள் ஆதரவு கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆடுகளம் படத்தின் கதைவேறாக இருப்பினும் அதில் ஜெயபாலன் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதைப் போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. அங்காடித்தெரு படத்தில் நம்பிக்கையூட்டும் விதமான காட்சியமைப்பு இருந்ததே அந்த படத்தின் வெற்றி. ஆனாலும் அதில் வரும் இரண்டாவது கதாநாயகி இறந்து போவாள். இதில் ஒரு கதாபாத்திரம் புதிதாக பிறப்பது போல் வரும் காட்சிகளை விட இறந்து போவது போல் காட்டும் போது நாமும் பச்சாதாபத்துடன் இறங்கிவருகிறோம். இதையெல்லாம் வன்முறை என்று சொல்ல வேண்டியதில்லைதான். சமீபத்திய வெற்றியெனக் கொண்டாடப்படும் கோ படத்தில் இருக்கக்கூடிய விஷயமும் வன்முறைதான். அதன் மூலம் உருவாகும் பச்சாதாபம்தான்  படத்தின் வெற்றி.

வாழ்க்கையின் மிக அரிதான கணங்களைப் பதிவு செய்வதைவிட அதனூடே இழையோடும் சோக கணங்களை படம்பிடிப்பதையே மக்களின் ரச்னையும், வெளிவரும் படங்களும் உணர்த்துகிறதோ என்ற சந்தேகம் அதிகரிக்கிறது. 

பசங்க என்ற படத்தை இயக்கி தேசியவிருதுக்கு வித்திட்ட பாண்டிராஜ் அடுத்து தொட்ட கதைக்களம் பழிவாங்குதலின் உச்சமான வம்சம் திரைப்படம். வன்முறை இல்லாமல் படம் எடுக்க இயலாதா என்பதற்கு பதில் வன்முறையின்றி வெளியான படங்களைக் கவனித்தல் என்பதன் சதவீதம் குறைவு. ரேணிகுன்டா, சிந்தனை செய், யுத்தம் செய் போன்ற படங்கள் சொல்ல வருகிற விஷயத்தைக் கூர்ந்து கவனித்தால் நாம் எதை ஆதரிக்கிறோம் என்பது விளங்கும். 

இதைப் போல ஈரம், யாவரும் நலம் போன்ற த்ரில்லர் படங்களும் மன வன்முறையை பிரதிபலிப்பதாக இருந்தது. இதற்கிடையில் யாரடி நீ மோகினி, ராமன் தேடிய சீதை, திண்டுக்கல் சாரதி, பூ போன்ற படங்களும் வெற்றி பெற்றன எனும் போது பலதரப்பட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வரவேற்கும் மனநிலை நம்மிடம் இருக்கிறது. காதல், பாசம், உறவுச்சிக்கல்கள், வாழ்வியல் பிரச்சினைகள், வன்முறை, பழிவாங்குதல் இவற்றில் காலங்காலமாய் ஊறித் திளைத்த வாழ்வியல் முறையில் பழிவாங்குதலுக்கும், வன்முறைக்கும், காதலுக்குமே அதிக மதிப்பெண் வழங்கபப்டுகிறது என்பதை மறுக்க இயலாது. 

ஆனால் சில விஷயங்களை தமிழ் சினிமா இதுதான் நிஜம் என கட்டமைக்க முயற்சி எடுக்கிறதோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. ஏனெனில் திரையில் வரும் கதாபாத்திரத்தில் ஒன்றாக தன்னை நினைத்துக் கொள்ளும் ரசிக மனம் அவனைப் போன்ற செயல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகிறது. அரிவாள், வேல், கம்பு, கட்டை இல்லாத படங்களை விரல்விட்டு என்ன? கை காட்டி சொல்வதும் அரிது என்றாகிவிட்டது. பாடலும் அதற்கேற்ப ‘‘நான் அடிச்சா தாங்க மாட்ட‘‘ என்று மிரட்டுகிறது. 

புதிய களங்களைத் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களை நாம் ஆதரிக்காத போது ஒரே களத்தில் உருவாகும் படங்களை நாம் கொண்டாடும் போது இந்த வன்முறையின் பயங்கரமும், பழிவாங்குதலின் தீவிரமும் நம்மையும் பீடித்தபடிதான் இருக்கப்போகிறது. தமிழ்சினிமா வன்முறையைக் கட்டமைக்க அதன் ரசிகர்களான நாமும் ஒரு காரணம் எனும் போது இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாமேதான் முடிவு செய்ய வேண்டும். நாம் முன்னெடுக்கும் ரசனை மாற்றம் நிச்சயம் தமிழ்சினிமாவின் ரசனையை மாற்றும். விதிகளைக் கட்டுடைக்கும்.  

இவள் பாரதி

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?