Friday 21 May, 2010

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்


இன்று குழந்தைகள் தினம் என்பதற்காக மட்டுமின்றி இந்தக் கேள்விய கேக்கல. ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது மிக முக்கியமானது. உங்கள் குழந்தைப் பருவம் அனுபவம் எப்படியிருந்தது.?
விருதுநகர் மாவட்டம் சாத்துப்பட்டி பக்கத்துல இருக்குற நென்மேனிங்ற கிராமத்துல தான் கழிஞ்சது. அது என்னுடைய அப்பாவுடைய ஊர். அங்கதான் முதல் வகுப்புல இருந்து 11ம் வகுப்பு வரை படிச்சேன். அம்மா, அப்பா எங்க கூட இல்லை. அவங்க வேலை நிமித்தமா வெவ்வேறு ஊர்கள்ல வாழ்ந்திட்டுருந்தாங்க. அதனால தாத்தா பாட்டி கூட இருந்தேன். அது ஒரு பெரிய குடும்பம். தாத்தா, பாட்டி, அப்பா கூட பொறந்த அத்தைகள் எல்லாரும் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்துல நான் இருந்தேன். அப்புறம் என் தம்பி இளங்கோ. எழுத்தாளர் கோணங்கினு அறியப்பட்டவர். அவனும் என் கூட வந்து சேர்ந்தான். ரெண்டு பேரும் அந்த கிராமத்துலதான் 10,15 வருஷம் இருந்தோம். 2 வயசுல இருந்து நான் அந்த ஊர்ல இருந்தேன். அப்பா, அம்மா கூட இல்லாத ஏக்கத்தோடயேதான் என்னுடைய காலம் முழுவதும் கழிஞ்சது. தாத்தா பாட்டியுடனிருந்த சந்தோஷமும், அப்பா, அம்மா கூட இல்லாத வருத்தமும் கலந்திருந்தது என் குழந்தை பருவம்.

உங்களுடைய எழுத்தாற்றல் குழந்தை பருவத்துலயே ஆரம்பிச்சுடுச்சா?
அம்மாவுடைய அப்பா அந்த காலத்துலயே புகழ்பெற்ற எழுத்தாளர், நாடக ஆசிரியர், சுதந்திர போராட்டத்துல பங்கெடுத்துக்கிட்டவர். தமிழ்சினிமாவின் பேசும்படத்துக்கு முதல் பாடல், வசனம் எழுதியவர். அப்பா வீட்டுல இருந்து அம்மா வீட்டுக்கு விடுமுறை காலங்கள்ல போவோம். அங்க புத்தகங்கள் இருக்கும். அப்பவே ரேடியோ இருக்குற வீடா இருந்துச்சு. எங்க ஊர்ல ரேடியோ இல்லாத சமயம் அது. அம்மா வீட்டுல தாத்தாவுக்குத் தனி ரூம் இருந்துச்சு. அது ரேடியோ ரூம். எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல அவர் இறந்துட்டாரு. அவர் வீடு பூரா புத்தகங்கள் இருக்கும். அப்புறம் எங்க அப்பா எழுதுவாங்க. எழுத்துங்றது எங்க குடும்பத்துல அதுவும் வாழ்க்கைல ஒரு பகுதி என்ற உணர்வு சின்ன வயசுலயே ஏற்பட்டதுக்கு குடும்ப சூழல் ஒரு காரணம். எங்க வீட்டுல அப்பா, சித்தப்பா, தாத்தா இப்படி எல்லாரும் எழுதுவாங்க. அதனால எழுதுவது வாழ்க்கையின் ஒரு பகுதிங்ற எண்ணம், புரிதல் சின்ன வயசுலயே வந்துடுச்சு.

‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ங்ற குழந்தைகளுக்கான படைப்பு குறித்து சொல்லுங்களேன்.
அது ரொம்ப பின்னாடி இப்ப எழுதுனது. குழந்தைகளுக்கான சமூகவியல் சார்ந்த கட்டுரைகள். பொதுவா தமிழில் வந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான கட்டுரைகள், கதைகள் மீது பெரிய அசூயை எனக்கு உண்டு. எதுவும் குழந்தைகளுக்கான உலகத்தோடு குழந்தைகள் மொழியில் இல்லாமல் இருக்கிறது. காக்கா, கீக்கி, கூக்கூ னு இதான் குழந்தைகளுக்கான இலக்கியம்னு உண்டாகி வச்சிருக்காங்க. அது ரைமிங்கா இருக்கு சரிதான். ஆனா குழந்தைப்பருவம்ங்றது 14 வயசு வரை இருக்கு. ஆறாவதுக்கு மேல படிக்கிறவங்க சமூக நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கிறாங்க. அவங்களுக்கு சமூகம் பற்றிய கேள்விகள் இருக்கும். எங்க ஊர்ல 96&97ல சாதிக் கலவரம் நடந்துச்சு. சாதினா என்னங்ற கேள்வி அந்த வயசுக் குழந்தைகள்கிட்ட இருக்கு. ஆனா பாடப்புத்தகத்துல இல்ல, எங்கேயுமே இல்ல, அந்த மாதிரி, சாதி குறித்த, சமூகம் குறித்த குழந்தைகளுக்கான கட்டுரை எழுத வேண்டும்ங்ற உணர்வு ஏற்பட்டது. அதுக்காக சோதனை முயற்சியா எழுதுனதுதான்.


குழந்தைகளுக்கான படைப்புகள் பெருகியிருக்குன்னு நினைக்கிறீங்களா?
குழந்தைகளுக்கானப் புத்தகங்கள்னு பேர் போட்டு வர்ற புத்தகங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கு. அதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடையாது. இந்த புத்தகங்கள்தான் என்னைக்கும் வந்துட்டே இருக்கே. அது சரியில்லைங்றதுதானே. குழந்தைகளுடைய உலகத்தில் குழந்தைகளோடு நின்று பேசுகிற மொழியில் வருகிற புத்தகங்கள் ரொம்ப குறைவு. குழந்தைகளை நோக்கி இப்ப மாமா கதை சொல்லப் போறேன் கேளுங்கனு போதிக்கிற அறிவுரை சொல்கிற தகவல்களை சொல்கிற புத்தகங்கள்தான் அதிகமிருக்கு. இதுதான் குழந்தைகள் புத்தகங்களாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட புத்தகங்கள் வேஸ்ட்.

குழந்தைகளுக்கான படைப்புகள்னு நீங்க எதை சொல்வீங்க?
அது குழந்தைகளும், எழுதுபவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய எழுத்து. இருட்டு எனக்கு பிடிக்கும்ங்ற என்னோட புத்தகமே நான் கட்டுரை எழுதி குழந்தைகள் மத்தியில வாசித்து அவங்களையும் வாசிக்கச் சொல்லி, அதுல அவங்க நிறைய கேள்விகள் கேட்டு, புரியாத வார்த்தைகளை நீக்கி கொண்டு வந்தது. அவங்க இந்த கட்டுரை நல்லா இல்லைனு சொல்லி நிறைய ரிஜெக்ட் பண்ணாங்க. அதயெல்லாம் போடாம அப்புறம் அவங்க சொன்னத எல்லாம் சேத்து திரும்ப எழுதி அப்புறம் கொண்டு வந்தேன். அப்டினாலும் 8 கட்டுரை எழுதினதுல் 4தான் எனக்கு திருப்தியா வந்திருக்கு. இது குழந்தைகளுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப் பட வேண்டியது. இது மாதிரி குழந்தைகளோடு சேர்ந்து உழைத்து உருவாக்கணும்.


‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ற நூல் யாருக்காக எழுதப்பட்டது?
‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ங்ற புத்தகம் வந்து தூத்துக்குடியில இருக்குற துறைமுகத் தொழிலாளிகளுக்காக எழுதுனது. அங்க இருக்கக்கூடிய 5000 தொழிலாளர்கள் அங்க இருக்கக்கூடிய தொழிற்சங்கங்கள்ல இருக்காங்க. ஆனா அவங்களுக்கு அரசியல்னா என்னனு தெரியாது. அவங்களுக்கு ஒரு கல்வி புகட்டுவதற்கான ஒரு வாசிப்பு புத்தகமா எழுதுனேன். எல்லாருக்கும் அது பிடிச்சதா இருந்தது. அதனால ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் புத்தகங்கள் போட்டு இன்னும் மறுபதிப்பு போயிட்டு இருக்கு.

உங்க புத்தகங்களோட தலைப்புகள பாத்தீங்கன்னா ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’, ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’னு இருக்கு. இந்த தலைப்புகள் இயல்பா வந்ததா? இல்ல நீங்க ரொம்ப நாளா யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தீங்களா?
புத்தகத்தை எழுதி முடிச்சுட்டுதான் நாம தலைப்பு வைக்கிறோம். புத்தகத்துல இருக்குற பொருள் சார்ந்துதான் அந்த தலைப்பு இருக்கும். அதே சமயம் புத்தகச் சந்தைல அல்லது புத்தகங்கள் பட்டியல்ல வாசகர்கள் பாக்கும் போது அவங்கள ஈர்க்கணும்ங்றது என்னோட கருத்து. எல்லா புத்தகங்களுக்கும் ஈர்ப்பாதான் தலைப்பு வச்சிருப்பேன்.

உங்களுடைய ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் பத்தி சொல்லுங்களேன்.
அது ரெண்டு பதிப்பு வச்சிருக்கு. முதல் பதிப்புல ‘ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்’னு வந்தது. இரண்டாவது பதிப்பு ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ அப்டிங்ற பேர்ல வந்திருக்கு.

இந்த மாதிரி விஷயங்களை எழுதனும்னு எப்டித் தோணுச்சு?
சமைப்பது ஆண்களுடைய வேலைனு நான் நினைக்கிறேன். சமைப்பது பெண்களுடைய வேலைனு யாருக்கும் சந்தேகம் இல்லாததாக நமது சமூகம் இயங்கிக்கிட்டு இருக்கு. இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று.

கொஞ்சம் தெளிவுபடுத்தி சொல்லுங்களேன்.
பெண்கள் வேட்டையாடிய காலத்துல இருந்தே உலகத்த, மனித சமூகத்தை பராமரிக்க வந்தாங்க. ஆண்கள் வேட்டைக் காலத்ஹ்டுல இருந்தே சும்மா காடுகளைச் சுத்துபவனாக, ஊரைச் சுத்துபவனாக இருந்திருக்கான். ஆகவே வெளி என்பது ஆணுக்கானதாவும், எல்லாரையும் கவனிக்கிற, பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு பெண்ணுக்கானதாவும் வேலைப் பிரிவினை வரலாற்றுல ஏற்பட்டுச்சு. இதுல சுமைகளெல்லாம் பெண்ணுக்கும், சுதந்திரமெல்லாம் ஆணுக்கும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நியாயமில்லாத நிலை வந்துடுச்சு. ஆகவே இந்த விஷயம் மனசாட்சியை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன். திட்டமிட்டு எழுதப்பட்டதுதான் இது. கவிதை, கதை மாதிரி தன்னெழுச்சியா வந்தது இல்ல. அது ஒரு அரசியல் நடவடிக்கை.

நீங்க ஒரு ஆணாக இருந்து கொண்டு சொல்லக் கூடிய இந்தக் கருத்துக்கு ஆண்கள் மத்தியில வரவேற்பு இருந்ததா?
இல்ல. நான் வந்து ஆணாக இல்லை. ஆனாக இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். உடல்ரீதியாக நன் ஒரு ஆண். மனரீதியாக ஆணுக்கு என்னன்ன குணங்கள் இருக்கோ அதெல்லாம் அதெல்லாம் தேவையில்லைனு நினைக்கிறேன். இது எனக்கு நானே கண்டுபிடிச்சது இல்ல. ஆணாதிக்கம் என்பதுதான் ஆணினுடைய குணம். அது மட்டுமில்ல. ஆண்மை என்பதற்கான சில அர்த்தங்கள் இருக்கு. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் கட்டமைக்கப் பட்டவை. ஆகவே எனக்கு அந்த உணர்வு அப்பப்ப வரும். அதை உடனே உடனே போராடி நான் ஒரு ஆண் இல்லைன்னு போயிட்டே இருக்கேன். நான் ஒரு மனுஷி அல்லது மனிதன் அல்லது ரெண்டும்னே வச்சுக்கலாம். அதனால எனக்கு அந்த உணர்வு இல்லை. ஒரு மனிதனா இருந்து பாக்கும் போது இதெல்லாம் அநியாயம்னு தோணுது. எதெல்லாம் அநியாயம்னு தோணுதோ அதை பத்திதான் பேசணும், எழுதணும்ங்றது என்னுடைய உயிரியல் நடவடிக்கையா நினைக்கிறேன்.

ஆண்களுக்கான சமையல் பத்தி எழுதியிருக்கிற நீங்க வீட்டுல எப்பவாவது சமைச்சிருக்கீங்களா?
நான் வீட்டுல இருக்குற எல்லா நாட்கள்லயும் சமையலறையில் என்னுடைய மனைவியை அனுமதிப்பதில்லை. திருமணமான ஓராண்டு இருவரும் சேர்ந்து சமைச்சோம். அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 25 வருடமா நான்தான் சமைக்கிறேன். முதல்ல அவங்க கொஞ்சம் தயங்குனாங்க. இப்ப அவங்களுக்கும் பழகிப்போச்சு. அவங்க காலை எந்திரிச்சு பேப்பர் படிப்பாங்க. வேலைக்குப் போற தயாரிப்புல இருப்பாங்க. நான் சமையல் முடிப்பேன். நானும் கிளம்புவேன். அவங்களும் கிளம்புவாங்க.

நல்ல விஷயம்தான். உங்களைப் பாத்து யாராவது மாறியிருக்காங்களா?
மனசாட்சி உள்ளவர்கள் தாங்களே மாறுவார்கள். அத நாம சொல்லணும்னு அவசியமில்ல. நிறைய ஆண்கள் இன்னைக்கு சந்தோஷமா சமைக்கத் துவங்கியிருக்காங்க. வேலைகளைப் பகிர்ந்துக்கிறாங்க. ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் பின்பற்றுவது அவ்வளவு அதிகமா நடக்காது. என்னோட பழகுற சிலருக்கே இந்த மாதிரி இருக்குறது அவங்க மனச உறுத்துது.

ஆண்கள் சமைப்பதை விமர்சன நோக்கோடு பார்க்கிற பார்வை இருக்கே.
அது குறைஞ்சுக்கிட்டே வருது. நகர்ப்புறங்கள்ல ஏன் கிராமப்புறங்கள்லயும் கூட ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீடுகள்ல அந்த மாற்றம் வந்துடுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கிட்டாதான் வேலைக்குப் போக முடியும்ங்ற சூழல் இருக்கு. இந்த மாற்றங்கள் காலத்தின் சந்தர்ப்பத்தால் வந்திருக்கு. நான் என்ன சொல்றேன்னா, அத ஏன் மனப்பூர்வமா செய்யக்கூடாது. பல ஆண்கள் சமையல்ல உதவி செய்றாங்க. அத உதவினு நினைச்சு செய்றாங்க. உதவினு நினைச்சாலே அது பெண்களுடைய வேலைனு வருது. அது ஆண்களுடைய வேலைனு நினைச்சாதான் மாற்றம் வரும்.

ஆண்டாண்டு காலமா கட்டமைக்கப்பட்ட மூளை, மரபணுக்களில் எல்லாம் திடீர்னு இந்த மாற்றங்களை கொண்டு வந்துடுமா என்ன?
மரபணுக்கள்னு சொன்னா அது இயற்கைன்னு அர்த்தம் வந்துடும். மரபணுக்கள்ங்றது உடம்புல இருக்குற ஒண்ணு. இந்த வேலைப் பிரிவினைங்றது உடல் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்தது. சமூகம் திணித்தது. இது கற்பனையானது, பொய்யானது, அராஜகமானது, அறிவியலுக்கு புறம்பானது. இதுக்கு மரபணுக்கள் காரணமில்ல. பழக்கத்துல வந்ததுதான். பழக்கத்த மாத்திக்கலாம்.

பெண்ணியம் குறித்து பேசுகிற எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
எல்லாரும் ஒரே குரல்ல ஒரே புரிதலோட பேசுறதில்ல. பெண்ணியத்துக்கான அர்த்தமும் நிரந்தரத்துவமுடைய ஒன்றல்ல. அதனுடைய அர்த்தமும் காலத்திற்கு காலம் மாறிட்டே வருது. ஒரு காலத்துல அதாவது 1900ல புருஷன் செத்தா அவன் கூட சேத்து வச்சு கொளுத்துனாங்க. ராஜாராம் மோகன்ராய் மாதிரியானவர்கள் போராடி உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினாங்க. வாழும் உரிமை தேவை என்பது அன்றைய பெண்ணியமா இருந்தது. அடுத்த கட்டமா கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று கேட்டது பெண்ணியமா இருந்தது. அதற்கடுத்த கட்டமா பெண்ணுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்டது அமெரிக்கா உட்பட பல நாடுகள்ல இயக்கமாவே நடந்தது. அது அன்றைய பெண்ணியமா இருந்தது. அது காலத்துக்கேற்ப மாறுபடுது. பெண்ணியம்னா என்ன ஆணுக்கு சமம் என்கிற சிந்தனையும், அதற்கான சமூக உத்திரவாதத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற குரல்தான் பெண்ணியம்னு சொல்றோம். அதை உண்மையாகப் பேசுபவர்களை எப்போதும் மதிக்கிறோம்.

ஒரு படைப்பாளிக்கான சமூக அக்கறையாக எதை சொல்வீர்கள்?
எல்லா மனிதர்களுக்கான சமூக அக்கறை எதுவோ அதுதான் படைப்பாளிக்கும். படைப்பாளிக்கு எது சமூக அக்கறையாக இருக்க முடியும்னா அவன் வாழுகிற சமூகம் ஏற்றத்தாழ்வு இல்லாததாக, பால் பேதமற்றதாக, சாதி, மத பேதமில்லாததாக, சமத்துவம் நிறைந்ததாக எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதான அவா, அதை நோக்கிய பயணமும், அதற்கான உழைப்பும் செலுத்துவதுதான் சமூக அக்கறை. ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு சாத்தியமான வழிகள்ல செய்றாங்க. படைப்பாளிங்றவன் அதை எழுதுறான். இவன் மனசாட்சியோட தொடர்புடையவன். ஆகவே இவன் மனங்கள நோக்கிப் பேசுகிறவன். தகவமைக்கிறவன். அதனால இவனுக்குக் கூடுதலான பொறுப்பிருக்கு. மத்தவங்க பேசுற மாதிரி இவனுடைய வார்த்தைகள் இருக்க முடியாது. இன்னும் கூடுதல் பொறுப்புள்ள வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுகிற அவசியம் இவனுக்கு இருக்கிறது.

ஒரு படைப்பாளி சம்பாதிக்க வேண்டிய விஷயமா எதைப் பாக்குறீங்க?
எல்லாவிதமான அனுபவங்கள். படைப்பாளி எழுத்தாளனாக இருந்தால் மொழியின் மீதான ஆளுமை. தமிழ்ல எழுதக்கூடிய படைப்புகள் சங்க இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள்ல இருக்கக்கூடிய எல்லாவிதமான மொழி பண்பாட்டுக் கூறுகளையெல்லாம் உள்வாங்கணும். ஒரு நாட்டியக் காரராக இருந்தால் அவர் எல்லாவிதமான நாட்டிய அடவுகளையும் கற்றவனா இருக்கணும். ஏனா மொழி என்பது ஊடகம். அதனூடாகத்தான் சமூகத்திடம் பேசப் போகிறோம். உறவு கொள்ளப் போகிறோம். அதனால இதெல்லாத்தையும் சம்பாதிக்கணும்.

நவீன படைப்புகள் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் இருக்கிறது. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க.?
மக்கள் என்பவர்கள் ஒரே தரமான கூட்டமல்ல. இப்ப பள்ளியில படிக்கிறாங்க. அதுல ஒண்ணாப்புக்கு, அஞ்சாப்புக்கு, பத்தாப்புக்குனு தனித்தனி பாடங்கள் இருக்கு. அதே மாதிரி எழுத்தாளர்கள்ல ஒண்ணாப்புக்கு எழுதுறவங்களும் இருக்காங்க. 12ம் வகுப்பு எழுதுறவங்களும் இருக்காங்க. நீங்க அஞ்சாப்பு படிச்சிட்டு 12ம் வகுப்பு புத்தகத்த வாங்கிப் படிச்சுட்டு புரியலனா அது எழுத்தாளனோட குற்றமல்ல. தன்னை வளர்த்துக் கொள்வதில் வாசகனுக்கும் பங்கு இருக்கு. அது போல எல்லாருக்கும் புரியும்படியான சென்று சேரும் படியான எழுத்துக்களும் இருக்கு. அதனால இதுல வாசகர்கள் எழுத்தாளர்கள் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு.

‘வெயிலோடு போய்’ங்ற உங்க சிறுகதை திரைப்படமாக்கப்பட்டது பற்றி..
5,6 வருஷத்துக்கு முன்னால சசி திரைப்படமாக்குறேன்னு கேட்டாரு. தயாரிப்பாளர் கிடைக்க தாமதமானதால ‘பூ’ங்ற பேர்ல 2009 வெளியானது.

அந்த சிறுகதை பற்றி சொல்லுங்களேன்.
ஒரு கரிசல் கிராமத்தில் சொந்த அத்தைப் பயன், மாமாப் பொண்ணுக்கும் இடையில ஏற்படக்கூடிய அனுபவங்கள்தான் கதை. சிறு வயசுல இருந்து ஒண்ணா விளையாடி, ஒண்ணா பேசி வரக்கூடிய கட்டத்துல அந்த குறிப்பிட்ட அன்புங்றது காதலா இருக்காது. அந்த வயசுல அது அன்பு, அக்கறையா இருக்கும். எதையும் அவனோடு இல்ல அவளோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய உந்துதல் இருக்கும். அது பருவ வயதில் காதலா மாறுது. அது ஒரு பக்கமா இருக்கு. அவனுக்கு இந்த காதல் இல்லை. ஆனா அவளைக் கல்யாணம் செய்யமுடியாத சூழல்ல இருப்பான். ரெண்டு பேருக்கும் வெவ்வெறு இடத்துல திருமணமாகுது. திருமணமானவுடனே காதல் கட்டாயிடணும். அது இருக்கக்கூடாது. அதான் இங்க இருக்கக்கூடிய விதி. இந்த கதை அதை மீறுது. திருமணத்துக்குப் பின்னாலும் தன்னுடைய மச்சான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறா அவ. அப்டி இருக்குறது சரியா தப்பாணு கேட்டா அவளுக்கு சரி. தப்பெல்லாம் தெரியாது. அதே சமயம் தன்னுடைய கணவனிடமும் அன்னியோன்யமா இருக்கக்கூடியவ. இதுதான் அந்த கதையின் மையம்.

‘வெயிலோடு போய்’ அப்டிங்ற 4 பக்க சிறுகதைய எப்டி ரெண்டரை மணி நேர திரைப்படமா கொடுக்க முடியும்?
அதாவது ரெண்டு கதைய ஒண்ணாக்குனோம். ‘அசோக வனங்கள்‘ங்ற கதை பால்ய காலத்தையும், ‘வெயிலோடு போய்’ங்ற கதை வெவ்வேறு இடங்கள்ல திருமணமான பிறகு சந்திக்கும் போது நடக்குறதையும் சொல்றது. கதையே ஒரு நாள்ல நடக்குறதுதான். ஊருப் பொங்கலுக்கு மச்சானும், மச்சான் சம்சாரமும் வர்றாங்கன்னு கேள்விப்பட்டு பக்கத்து ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போகலாம்னு வந்திருப்பா. வந்து பாத்துட்டு மச்சான் நல்லா இல்லைனு தெரிஞ்சதும் அவ மனசு உடைஞ்சு திரும்புறா. இதுல ஃப்ளாஷ் பேக்ல அவங்க பால்ய காலம் வரும்.

முழுக்க முழுக்க ‘பூ’ படத்த உங்களோட அப்டைப்புனு சொல்ல முடியுமா?
கதை என்னோடது. சினிமா அவருடையது. திரைக்கதைல கொஞ்சம் சேத்துருக்காரு.

திரைக்கதைல உங்க பங்களிப்பு இனி தொடருமா?
அது என்னோட கையில இல்லை. யாராவது நல்ல இயக்குனர் கேட்டா கொடுக்கலாம்.

ஒரு படைப்பாளிக்கான விருதுங்றது அங்கீகாரம்தானே..
எனக்கு ஒவ்வொரு வேலையும் முக்கியம். அது மாதிரி எழுதுறங்றது முக்கியமான வேலை. இத தனிச்சுப் பாக்கல. அதனால இந்த படைப்புக்கு இவ்ளோ அங்கீகாரம் வந்திருக்கணுமேனு நினைக்கல. ஒரு வாளிக்கு அங்கீகாரம் வந்திருக்கணும். ஒரு வாளி இல்லை. அரை வாளிதான் வந்திருக்குனு ஒண்ணுமே கிடையாது. நாம எழுதுறோம். நாம எழுதியிருக்குறது சரியா இருக்கா? அதான் நம்ம கவலையா இருக்கணும். நான் பெரிய எழுத்தாளர். எழுதி முடிசுட்டேன். படிக்கிறதும், படிக்காததும் அவன் வேலைன்னு விட முடியாது. மக்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. உன் கதைய படிக்கிறது அவங்களுக்கு முக்கியமான வேலை கிடையாது. மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்குறது உட்பட அது எழுத்தாளர்களோட வேலைதான்.

ஒரு கட்டுரைல அக்கா கையால அடி வாங்காத ஏக்கத்தை வெளிப்படுத்துயிருப்பீங்க?
அக்கா என் காத திருகி, என் தலைல ஒரு கொட்டு வைக்கிறதுக்கு எனக்குனுவாழ்க்கைல எனக்கு வாய்ப்பு கிடைக்கல. எனக்குனு அக்கானு ஒருத்தி பொறந்தவ சின்ன வயசுலயே இறந்துட்டா. அக்கா கையால கொட்டு வாங்குறவங்க கொடுத்து வச்சவங்கனு எழுதியிருந்தேன். அக்கானு ஒருத்தி இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா உறவுகளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு. எனக்கு ஒரு அக்கா இல்லைங்ற ஏக்கம் இருக்கு. நான் பொறக்குற முன்னாடியே அக்கா பொறந்து இறந்துட்டதா வளரும் போது சொன்னாங்க. எனக்கு அக்கா பற்றிய நினைவுகள் சின்ன வயசுல இருந்து இருக்கு. மனிதனுக்கு எத்தனையோ ஏக்கங்கள் இருக்கு. அது மாதிரி எனக்கு அக்கா இலைங்ற ஏக்கம்.

ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கட்டுரை எழுத்தாளன், ஒரு சிறுகதை எழுத்தாளன் அப்டினு ஒண்ணும் யோசிக்கிறதில்ல. எந்த வடிவத்துல எழுத வருதோ அந்த வடிவத்துல எழுதிட்டுப் போக வேண்டியதுதான். ஒரு விஷயத்த சொல்றதுக்கான வடிவம் சரியாயிருக்குதானு அதன் உள்ளடக்கம்தான் தீர்மானிக்கணும். எந்த ஒரு எழுத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதும் அதன் உள்ளடக்கம் தான். நம்ம முகத்துல எவ்வளவு சதைகள், எவ்வளவு எலும்புகள் எந்தெந்த அளவுல இருக்குங்றத பொறுத்துத்தான் முக வடிவமிருக்கும். எழுத்தும் அதைப் போலானதுதான்.

சில நேரங்கள்ல எழுத்துக்கள் பிரச்சாரமா இருக்குங்ற விமர்சனத்த நீங்க எப்டி பாக்குறீங்க?
இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வதே இல்லை. எழுத்துங்றது பிரச்சரத்துக்காகத்தானே. உலகத்துல எழுதப்பட்ட ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒன்றை இன்னொருவருக்குச் சொல்வதற்காக எழுதப்பட்டதுதான். பிரச்சாரம்னா என்ன? ஒரு கருத்தை இன்னொருவருக்குச் சொல்வது அல்லது இன்னும் பல பேருக்கு சொல்வது. எந்த எழுத்து யாருக்கும் சொல்லப்படாத எழுத்து. இது பிரச்சாரம், அது பிரச்சாரம்னு சொல்றவங்க அரசியல் செய்றாங்கன்னு அர்த்தம். அதெல்லாம் தூர வச்சிட்டு நாம எழுதிட்டு இருக்க வேண்டியதுதான்.

உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்னு யாரைச் சொல்வீங்க?
நிறைய பேர் இருக்காங்க. கு.அழகிரிசாமி, புதுமைப் பித்தன், தஸ்தாவெஸ்கி, மார்க்ஸிம் கார்க்கி. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தர் பாதிச்சிருக்காங்க. பிரபஞ்சன், வண்ண நிலவன், வண்ணதாசன். சில எழுத்துக்கள் எல்லா வயசிலயும் பாதிச்சுட்டு இருக்கும்.

நீங்க அடிக்கடி படிக்கிற புத்தகம் பற்றி..
அது துறைசார்ந்ததா இருக்கு. ஈ.எஸ்.நம்பூதரி எழுதிய ஈன்டிஅ ஜீலன்னிங் இன் அரிசிச் அப்டினு எகனாமிக் புத்தகம். லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ இலக்கியத்துல கு.அழகிரிசாமியின் குறிப்பிட்ட சில கதைகள். இதெல்லாம் வெவ்வேறு காலகட்டத்துல நம்ம அனுபவங்கள விரிவுபடுத்தும். அந்த வாசிப்பனுவம் வேறுபடும். ஒரு சிறந்த படைப்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமா இருக்கும்.

உங்க இலக்கை அடைஞ்சதா நினைக்கிறீர்களா?
இதுவரை என்ன செஞ்சுக்கிட்டேருந்தேனோ அதான் இலட்சியம்னு வச்சுக்க வேண்டியதுதான். வாழ்க்கையில் இறுதி வரை இதை தொடர்ந்து நம்முடைய மக்களுக்காக சமூக நீதிக்காக எந்தெந்த வழியில் முடியுமோ அந்தந்த வழியில் உதவுவதுதான் இலட்சியமா இருக்க முடியும்ணு நினைக்கிறேன். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயமா எதை நினைக்கிறீங்க? சொந்தமா யோசிக்கணும். சொந்த வார்த்தைகளைப் பேசணும், நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே, நமது சொந்த மரபுகளைப் பேண வேண்டும். வெளியே இருந்து எது வந்தாலும் அதை பார்த்து வியக்கக்கூடாது. அது நல்லதா? கெட்டதானு சீர்தூக்கிப் பார்த்துதான் ஏற்கணும். வெளியே இருந்து வருவதாலயே அதை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அது நமக்கு சொந்த மரபை அபகரிக்காமல் இருக்குமாங்றத பாக்கணும். இன்றைக்கு இதுதான் அவசியம்னு நினைக்கிறேன்.

சொந்த மரபு என்பதன் அர்த்தம்?
சொந்த மரபு என்பது நமக்கான பாரம்பரியம். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளுக்கு பாரம்பரியம் இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த நாடுகள்ல இந்திய நாகரீகமும் ஒண்ணு.

Wednesday 19 May, 2010

கி.ரா.




தங்களது கரிசல் காட்டு ஞாபகங்கள் எப்படி இருக்கிறது?
முதலில் இருந்த தீவிரம், ஈடுபாடு அதெல்லாம் குறைந்திருக்கிறது. அதற்காக இல்லையென்று என்று அர்த்தம் இல்லை. அந்த நினைவுகள் இருக்கிறது. ஆனால் சற்று குறைந்திருக்கிறது.

‘கதை சொல்லல்’ எனும் கலை உங்களுக்குள் ஒரு விதையாக விழுந்த காரணம்?
அது ஒவ்வொரு மனுஷங்களுக்குள்ளேயும் இருக்கு. எனக்குள்ளயும் இருக்கு. உங்களுக்குள்ளயும் இருக்கு. ஆனால் வடிவங்கள் வித்தியாசமா இருக்கும். இப்ப வந்து நீங்க ஒரு ஊருக்குப் போயிட்டு வர்றீங்க. நீங்க பார்த்தத, கேட்டத, அங்க உள்ள சுவாரசியங்கள யார்கிட்டயாவது சொல்றீங்க இல்லையா. அது கதைதான். ஆனா கதை வடிவம் உண்டா அப்டினு கேக்கக்கூடாது. இப்ப ஒரு கதை விடுறதுனு சொல்வாங்க. அந்த மாதிரி கதை உண்டாகுறதுக்கு, கதையா வடிவமாறதுக்கு முன்னால ஒரு நிலை எதுனா கேட்டா அது சம்பவங்கள் தான். சம்பவங்கள்தான் பின்னால கதையாகுது. ஒரு விஷயம் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு நாக்குக்கு நாக்குக் கடந்து போயிட்டே இருந்தா அது கதையாகிக்கிட்டே போகும். கதையானதுக்கு அப்புறமும் கூட நீங்க வந்து அந்த கதையை திரும்பவும் சொல்லும் போது வித்தியாசப்படும். அது இன்னொரு இடம், இன்னொரு இடம்னு போகும் போது வித்தியாசப்படும். ஆகவே வடிவங்கள் வித்தியாசப்பட்டுக்கிட்டே போகும். எனவே, க்தை அப்டிங்றது நீங்க நினைக்கிற மாதிரி ஏதோ ஒரு வடிவத்துல கதைதான்னு நினைக்கப்படாது. அது எல்லா இடத்துலயும் நீக்க மற இருக்கு. அது வந்து நாட்டுப் புறத்துலதான் இந்த கதை இருக்கு. நகர்ப்புறத்துல இல்லை அப்டினு சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லாரிடத்திலும் இந்த கதை சொல்லலும், கதை கேட்டலும் இருந்துக்கிட்டேதான் இருக்கு.

கி.ரா.வுடைய எழுத்துக்கான அடையாளம் பற்றி..
ஒரு மனிதனிடமிருந்து ஒரு விஷயம் கதையாகவோ, சம்பவமாகவோ, நடப்பை சொல்வதாகவோ கிளம்புகிறது. அது எப்படி உள்ள வருதுனா முதலில் கி.ரா. நினைக்கிறார். அதுவே வெளியே வருதுனா நூத்துக்கு நூறு அப்டியே வெளியே வருதுனு சொல்ல முடியாது. சொல்லும் போதே திசை மாறும். வடிவம் மாறும் ஆகவே எப்படி சொல்கிறார் என்ன, ஏதுங்றது அந்த வினாடிதான் சொல்லும் போது நிர்ணயமாகும். எழுதும் போது நிர்ணயமாகும். இப்ப நான் வந்து ஒரு கதையில எழுதுறேன்னு வச்சுக்கங்க. முதல்ல நான் ஒரு கதை எழுதி முடிப்பேன். அல்லது ஒரு கட்டுரை எழுதி முடிப்பேன். அதன் நகல் பண்ணும் போது மாறிட்டே வரும். அசல் வராது. இது என் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் வேறுபடலாம். ஆகவே அது எப்டி வருது அப்டிங்றது வினாடிய பொறுத்த விஷயம்தான்.

1958 ல சரஸ்வதியில எழுத ஆரம்பிச்ச நீங்க இன்னைக்கும் வரைக்கும் வெவ்வேறு பரிமாணங்கள்ல வாசகர்களோட நேரடித் தொடர்புல இருக்கீங்க. ஒரு வாசகனுடன் இவ்வளவு வருடங்கள் தொடர்பிலிருக்கும் நீங்கள் அவர்களுடைய எண்ணங்கள், அவதானிப்புகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்கிறீர்கள்?
மாறுபடுவதுங்றது இயல்பு. 57&58ல இருந்த மாதிரி இப்ப 2009ல இருக்க முடியாது. மனிதனுடைய வளர்ச்சியிலயும் மாறுதல், காலம் மாறுதல், உடல் மாறுதல், மனசு மாறுதல், சூழல் மாறுதல் இதெல்லாம் கொண்டுதான் விஷயங்கள் இருக்கும்.

படைப்பின் வடிவம் வேறுபடும் போது அது ஒருவருடைய தனித்துவம் என வைத்துக் கொள்ளலாமா?
ஆமா.. ஆதிமூலத்தைப் போல கோட்டோவியங்கள யாராலும் வரைய முடியாது. எல்லாரும் கோடு போடுறவங்கதான். கோட்டோவியக்காரர்கள்தான் ஆனா அவரை அடிச்சுக்க ஆளே இல்ல. எது செய்தாலும் அப்டி செய்வாரு. எம்.எஸ்க்கு ஒரு குரல், லதா மங்கேஷ்கருக்கு ஒரு குரல்னு இருக்குதானே. அது மாதிரி. இதுக்கு அவர்தான் ஆதி, அவர்தான் மூலம். அவருகிட்ட குழந்தைகள பத்தி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் குழந்தைகளா இருந்திருப்பாங்க இல்லையா? அவங்களோட வாழ்க்கைய கோட்டோவியங்களாக செய்யலாமேன்னு கேட்டேன். ரஷ்யா எழுத்தாளர்கள்லாம் எழுதியிருக்காங்க. தமிழ்ல யாரும் எழுதல. நீங்க சொன்ன பல விஷயங்களை ஆல்பமா பண்ணுங்கன்னேன். நல்ல யோசனைதான். ஆனா ‘நான் அந்த கோட்ட விட்டுட்டேன். அதை நிறுத்திட்டு கலருக்கு வந்துட்டேன். அதனால அத இனிமே செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டார்.

ஒரு படைப்பாளி தனது நிலையில் புதிய பரிணாமத்தை எட்டும் போது பழையதை விட்டுவிடுவார்களா?
நிச்சயமா.. ப்ரெஞ்ச்ல மஞ்சள் இருந்து பச்சைக்கு போனோன். பச்சைல இருந்து நீலத்துக்குப் போயிட்டாங்க அப்டினு சொல்வாங்க. அது மாதிரிதான்.

இது ஓவியங்களுக்கு மட்டும்தானா? எழுத்துக்கும் உண்டா? கவிதை, கதை, சார்ந்த படைப்புகளுக்கும் உண்டா?
இல்லை. கதையின் வடிவம் மாறுமே. அப்ப இருந்த சிறுகதையின் வடிவம் இப்ப கிடையாது. நாவலின் பழைய வடிவமும் கிடையாது. கவிதையின் பழைய வடிவமும் இப்ப கிடையாதுன்னு ஆகிப் போச்சே.

இடைச்சேவலில் விவசாயியாக இருந்ததுக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்துல பேராசிரியராக இருந்ததுக்குமான மாற்றங்களை எப்படி உணர்கிறீர்கள்?
முதலில் பல்கலைக்கழகத்தில் அழைப்பு வந்ததும் பயம் தான் வந்தது. என்னைப் பல்கலைக்கழகம் எப்படி கூப்பிட்டதுனா நாட்டுப்புறவியல் ஒன்னு தொடங்கனும்னு சொன்னாங்க. நாட்டுப்புறவியல் பத்தி ஓரளவு தெரிஞ்சவர்னு நினைச்சாங்க. எனக்கு தயக்கம் என்னன்னா நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமம். திடீர்னு பல்கலைக்கழகத்துல கூப்பிட்டதும் உடனே பதில் எழுதல. பொதுவா எனக்கு வரமுடியாதுனு காரணம் சொல்றதுக்காக எனக்கு உடல் நிலை சரியில்லைனு துணைவேந்தர்கிட்ட சொன்னேன். வயசாகிட்டுதுனு சொன்னேன். 66 வயசுல கூப்பிட்டாங்க. இப்ப 86 வயசாகுது. உடம்புக்கு என்ன செய்துனு கேட்டாரு. எனக்கு பி.பி. இருக்கு, டயாபிட்டீஸ் இருக்கு, சுகர் இருக்கு, அது, இதுனு சொன்னேன். அவரும் இதெல்லாம் எனக்கும் இருக்கு. ஆகவே நீங்க வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நோய்களை எதிர்ப்போம்னு சொன்னாரு. கல்லூரினாலே மாணவர்கள் பேராசிரியர்கள கிண்டல், கலாட்டா பண்றதுனு கல்லூரி நான் போகலைன்னாலும் நான் கேள்விப்பட்ட விஷயம் அப்டி. பல்கலைக்கழகத்துல சாஸ்தியா இருக்கும். நாம எப்படி குப்பைக் கொட்டுறது? அவர் சொல்றாரு உனக்கு பேராசியர் சம்பளம் கொடுப்போம்னு, ஆனா எனக்கு முன்னால க.நாசு. கெஸ்ட் லெக்சரரா இருந்தாரு. என்னை பேராசிரியராவேக் கூப்பிடுறாங்க. ‘நாட்டுப்புறவியல் தொடங்குறோம் அதுக்கு நீதான் பொறுத்தம்னு எங்களுக்கு தெரியுது. நீங்க அவசியம் வந்து இந்த வேலைல பொறுப்பேத்துக்கணும்‘னு சொல்றாங்க. எனக்கு பயம் வந்துடுச்சு. அப்ப சொந்தக்காரன் ஒருத்தன் ‘நீங்க ஒரு ரிசைன் லட்டர் எழுதி பாக்கெட்டுல வச்சுக்கங்க. பிடிக்கலைனா தேதி போட்டு கொடுத்துட்டு வந்துடுங்க. இதுக்கு ஏன் யோசிக்கிறீங்க’னு சொன்னான். இப்டி ஒரு வருஷம் ஓடிப் போச்சு. அப்புறம்தான் நான் இங்க வந்தேன். வந்து பாத்த பிறகுதான் தெரிஞ்சது. எம்.ஏ., எம்.ஃபில், பி.ஹெச்டி மாணவர்கள் எல்லாரும் இருக்குறதுதான் பல்கலைக்கழகம்னு. அப்பதான் துணை வேந்தர் ‘நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் கிடையாது. கல்லூரிலதான் கல்வி மற்ற விஷயங்கள் எல்லாம். இங்க எல்லாரும் ஆய்வு மாணவர்கள்தான்‘னு சொன்னாங்க. என்னைய வகுப்பெடுக்கச் சொல்லும் போதுதான் ‘அது என்னால முடியாது’னு சொன்னேன். ‘ நீங்க அவங்க பாடத்த வகுப்பெடுக்குறதுல அர்த்தம் இல்லை. வகுப்புங்றது ஒரு முக்கால் மணி நேரம். மாணவர்களோட பேசிட்டிருந்தா போதும்‘னு சொல்லவும் எதைப் பத்தி பேசனு கேட்டேன். உலகத்தப் பத்தி, கிராமத்தப் பத்தி, கதைகளப் பத்தி, சினிமாவப் பத்தி, அரசியல் பத்தி எதைப் பத்தியும் பேசலாம். தோணுனா கதைகள சொல்லுனு சொன்னாரு. அவர் சொல்றார் ‘ஒரு எளிய அனுபவம் உள்ள ஒரு வயசாலிய மாணவர்கள்கிட்ட பேச வைக்கிறது கிடையவே கிடையாது. மாணவர்கள் தன்னோட 25 வருடங்களப் படிப்புல செலவிடுறத வேடிக்கையா கிருபானந்தவாரியர் ‘காலேஜ்னா ‘கால் ஏஜ்’ எந்த விதமான அனுபவமும் மாணவர்களுக்கும் பயனில்லாம, படிப்புக்கும் பயனில்லாம போகுது’னு சொல்வாராம். அப்டி பயன்படாம இருக்குறவங்களுக்கு உன்னுடைய அனுபவங்கள் நீங்க பேசும் போது பயன் தரும்னு சொன்னாரு. இது வந்து ஒரு சுதந்திரமான பல்கலைக்கழகம். அதனால அந்த துணை வேந்தர் என்ன நினைக்கிறாரோ அதை செய்யலாம். அப்ப அவர்கிட்ட சில கேள்விகளை பொதுக் கூட்டத்துல வச்சு ‘இவர் என்ன டாக்டரேட் பண்ணாரா? எப்டி இவரை பேராசிரியரா நியமிச்சீங்க’ அப்டினு கேட்டாங்க. அதுக்கு அவர் ‘கம்பரையும், திருவள்ளுவரையும் நான் பேராசிரியா நியமிச்சிருக்கேன்னு வச்சுக்கங்க. அவங்க எங்க டாக்டரேட் பண்ணினாங்கன்னு கேட்க முடியுமா? அவங்கள வச்சு எத்தனை பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. அது மாதிரிதான் கி.ராவும். அவர் படைப்புகள பத்தி எத்தனையோ பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. இவர் எதுக்கு டாக்டரேட் படிக்கணும்‘னு சொன்னாரு. இரண்டு காரியங்கள் பண்ணினோம். ஒன்று புத்தகம் எழுதுவது. இன்னொன்று ஏதாவது திட்டத்தை ஆய்வு செய்வது. முதலில் ஆய்வுக்கு முன்னால இந்த மண்ணுல இருக்குற நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி ஒரு புத்தகம் கொண்டு வந்தோம். அப்புறம் ரெண்ணு செமினாரு நடத்துனோம். அதனால விவசாயிக்கும் பேராசிரியருக்கும் சம்பந்தமில்ல.

பல்கலைக்கழகத்துல வித்தியாசமான அனுபவம் உண்டா?
பல்கலைக் கழகத்து ஆய்வ எடுத்துப் படிச்சுப் பாத்தேன். அதுல ஒண்ணுமே இல்லை. எதையுமே கண்டுபிடிக்காம வெறும் புள்ளி விவரங்களா சொல்றதுக்கு எதுக்கு டாக்டரேட் கொடுக்கனும்? அதுலயும் கூறியது கூறல் குற்றம்னு சொல்வாங்க. முதல் அத்தியாயத்தில சொன்னதையே இரண்டாவது அத்தியாயத்துல சொல்றதுனு ரொம்ப கேவலமா இருந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சிய இருந்தது. அப்புறம் நான் துறைத்தலைவர்கிட்ட ‘என்னங்க இதுனு‘ கேட்டேன். ‘அதெல்லாம் அப்டித்தான்’னாரு.

உங்களுடைய பார்வையில் கல்வி என்பது என்ன?
கல்வி என்பது ஞானத்தை அடைவது, தேடுவது. இது இல்லைனா அது கல்வி கிடையாது. அது வேலைக்கான தயாரிப்புகளே.

உங்க அறையிலிருக்கும் மிகப் பெரிய மரத்தாலான எழுதுகோல் பற்றி..
அது என்னோட 70வது பிறந்த நாளில் நடிகர் பார்த்திபன் கொடுத்தது. அவர் எதையும் வித்தியாசமா செய்யக்கூடியவர். அதான் இந்த வித்தியாசமான பேனா.

உங்களுடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞர் இளவேனில் பத்தி சொல்லுங்களேன்.
மத்தவங்க படம் எடுத்தா ஒரு முகம் தான் வந்துட்டே இருக்கும். இவர் அப்டி இல்லை. கி.ராவுடைய பல முகங்களைக் கொண்டு வருவாரு. ஒரு படம் செய்தி சொல்லனும்னு விரும்புவாரு. படம்ங்றது இயக்கமா இருக்கனும்னு நினைக்கிறவரு.

ஒரு படைப்பாளிக்கான அங்கீகாரமா எதை நினைக்கிறீங்க.
சில பேர் நினைத்துக் கொள்வது மாதிரி எனக்கு வித்யா கர்வமோ, பெருமிதமோ கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் அப்டினு அதாவது தான் ஒரு ராஜானு நினைச்சுக்குற மாதிரி என்னை நினைச்சுக்கிறது கிடையாது. இயல்பாவே எனக்கு எந்த வித கர்வமும் கிடையாது. அது என்னோட இயல்பு.

-இவள் தேவதை பாரதி

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்



திரைத்துறையில் கால் பதித்து கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருப்பவர். சின்ன்ப் பூவை மெல்லப் பேசச் சொன்னவர். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். வானத்தைப் போல, பூவே உனக்காக இப்படி தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் பாடல்களைக் கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும்.

உங்களுடைய முதல் படமான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ வாய்ப்பு பற்றிச் சொல்லுங்களேன்.
பொதுவா எனக்கு அதிர்ஷடத்து மேல நம்பிக்கைக் கிடையாது. உழைப்புதான் மிகப் பெரிய வெற்றியை தரும். உழைப்புதான் மனித வாழ்வியலுக்கு மூலாதாரம் என்று நினைக்கிறேன். நான் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவன். எங்க அப்பா மேடைப் பாடகர். எனக்கும் அதனால பாரம்பரியமா இசை ஆர்வம் வந்துச்சு. ஆனா நான் சின்ன வயசுல திரைத்துறையில மிகப் பெரிய இயக்குனரா வரனும்னு ஆர்வமா இருந்தது. அதை நினைச்சுதான் ராபர்ட் ராஜசேகரிடம் உதவியாளரா சேர்ந்தேன். அவங்க என்கிட்ட இருக்குற இசைத்திறமையை கண்டறிந்து ‘இவன் இசைக்கு நல்லா வருவான் போலிருக்கே’னு முடிவு பண்ணி இசையமைப்பாளர் ஆக்கினாங்க. பொதுவா இது ஒரு விபத்தான விஷயம் வெற்றிகரமான ஒரு நிலையாக மாறிவிட்டது. இசையில எல்லாமே விபத்துதாங்க. ராகங்களே ஒரு சுரம் இன்னொரு சுரத்தோட சேரும் போது கிடைக்குறதுதானே. சுரமோடு அனுசுரம் ஜாயின்ட் பண்ணும் போது அத மியூசிக்கல் ஆக்ஸிடன்ட்னு சொல்வாங்க. அது போல என்னுடைய வாழ்க்கைல விபத்தா நடந்த விஷயம் நான் இசையமைப்பாளரா ஆனது. ஆனா எனக்கு கம்போஸ் பண்ற திறமை இருந்தாலும் அந்த நேரத்துல ஒரு வெற்றியாளனா வருவேன்னு நினைக்கல. ஏன்னா இளையராஜா நான் வரும் போது ரொம்ப பெரிய லெவல்ல இருந்தாங்க. ஒரு நூறு படம் வருதுனா அதுல 75 படம் இசைஞானி இசைல இருக்கும். அவர் இருக்கும் போது அவரைத் தாண்டி ஒருத்தர் வர்றதுங்றது நடக்கவே முடியாத ஒரு விஷயம்னு நான் அவநம்பிக்கையோட இருந்த நேரத்துல எனக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்து இன்று வரை வெற்றியாளனா வச்சிருக்கிற என் இயக்குனர் ராபர்ட் ராஜசேகர் அவர்களை இந்த நேரத்துல நன்றியோட நினைச்சுப் பாக்குறேன்.

அந்த படத்துல நீங்க ஒரு பாடல் கூட பாடியிருக்கீங்க இல்லையா? அத பத்தி சொல்லுங்களேன்.
ஆமா.. ‘ஏபுள்ள கருப்பாயி’ பாட்டு. அதாவது எல்லா பாட்டும் கம்போஸ் பண்ணோம். அப்ப வித்தியாசமா ஏதாவது பாட்டு இருக்கணும்னு சொல்லிட்டு ராஜசேகர் கேட்டாரு. அப்பதான் என்கிட்ட வித்தியாசமான நாட்டுப்புறப் பாட்டு இருக்குன்னு சொன்னேன். கானா பாடல்களுக்கு ஆரிஜின்னு சொல்லப்படுற சென்னை திருவல்லிக்கேணிதான் நான் பொறந்து வளர்ந்த இடம். அதனால நண்பர்களோட கடற்கரையில உட்கார்ந்திருக்கும் போது நிறைய பாடல்கள் எழுதி அந்த நேரத்துல அப்படியே பாடுறதுண்டு. அந்த மாதிரியான பாட்டுதான் ‘ஏ புள்ள கருப்பாயி’. அது ரொம்ப சோகமான சூழ்நிலைல எழுதின பாட்டு. அந்த பாட்ட நான் இயக்குனருக்குப் பாடிக் காண்பிச்சேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்தப் பாட்டைப் பாட வித்தியாசமான குரல் வேணும்னு சொல்லிட்டாங்க. நானும் அந்த நேரத்துல மலேசியா வாசுதேவன் பாடுனா நல்லா இருக்கும்னு ஏதேதோ சொன்னேன். அப்ப இயக்குனர் ‘நீயே பாடு. உன்னுடைய குரலே வித்தியாசமான இருக்குதுனு’ என்னுடைய பாடலை எனது முதல் படத்துலேயே நானே எழுதி இசையமைச்சுப் பாடுற வாய்ப்பை வழங்குனாரு. இன்னைக்கு வரை கேக்குற அளவுக்கு பாப்புலரான பாட்டா இருக்கு.

இயக்குனர்கள்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்து அந்த உதவி இயக்குனர் பின்னாள்ல பெரிய இயக்குனரா வர்ற மாதிரி இசைத்துறையில, உங்ககிட்ட உதவி இசையமைப்பாளரா இருந்து பெரிய ஆளா ஆகியிருக்காங்களா?
அப்படி சொல்ல முடியாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட என் இசைக்குழுவுல வாசிச்சவர்தான். ஹாரிஸ் ஜெயராஜ் என் மியூசிக்ல கீ&போர்டு வாசிச்சவர்தான். இசைக்குழுவுல சேர்ந்து அஸிஸ்டென்டா இருந்து வர்றவங்க ரொம்ப கம்மி. அதெல்லாம் பாரம்பரியமா ஒரு காலத்துல இருந்தது. ஜி.கே.வெங்கடேஷன்கிட்ட இளையராஜா உதவியாளரா இருந்தாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் சுப்பாராவ்ங்ற இசையமைப்பாளர்கிட்ட இருந்து வந்தவரு. அது நான் அறிமுகமாகுற காலகட்டம் வரை இருந்தது. ஆனா அதுக்கு பிறகு இல்லை. ஆனா பொதுவாக இன்னைக்கு நிறைய கீ&போர்டு ப்ளேயர்ஸ், மிருதங்கம் வாசிக்கிறவங்களா இருக்குறவங்க ஒரு வகைல நிறைய இசையமைப்பாளர்கிட்ட இருந்தவங்கதான். அவங்களும் எல்லா வித அனுபவங்களோடும் சேர்ந்துதான் வர்றாங்க. அதனால அஸிஸ்டென்டா இருந்து வர்ற பாரம்பரிய முறை இப்ப இல்லன்னாலும் சிலரிடம் வாசித்து விட்டுதாம் பிறகு பெரிய ஆளாகிருக்காங்க.


இடைக்காலப் பாடல்கள்னு சொல்லப்படுற 80க்கும் 90க்கும் இடையிலான பாடல்கள் இன்னைக்கும் கேக்குற அளவுக்கு இருக்கு. இன்னைக்கி திசை மாறிப் போன மாதிரி இருக்கு. ஏன்?
இதுக்கு காரணம் என்னனா நிறைய அவசரமான முடிவுகள்தான். ரொம்ப ஷார்ட் டைம் சிந்தனை. இன்னைக்கு வெற்றி கிடைச்சா போதும் என்கிற துரிதகதில தான் போய்ட்டிருக்கு. பாடல்ங்றது காலத்துக்கும் நிக்கக்கூடியது. படத்த தாண்டி ஒரு பாட்டு நிக்கனும். அந்த காலத்துல நிறைய பாடல்கள் வானொலில கேட்டீங்கன்னா அதுல யார் நடிச்சிருக்காங்கன்னு தெரியாது. நிறைய பாடல்கள எம்.ஜி.ஆர்., சிவாஜினு நினைச்சுட்டு இருப்போம். ஆனா அதெல்லாம், எஸ்.எஸ்.ஆர், அப்புறம் பெயர் தெரியாத பிற மொழி நடிகர்கள், முகம் தெரியாத நடிகர்கள் நடிச்சிருப்பாங்க. படம் பேர் கூட ஞாபகம் வராது. ஆனா அந்த பாட்டு உயிரோட இருக்கும். இதுக்கு காரணம் என்னனா பாடல்களுக்கு தனிகவனம் செலுத்தி கதையோட ஜீவன் இருக்குற மாதிரி அந்த காலத்துல பண்ணிட்டு இருந்தாங்க. எங்களுடைய ஆரம்ப காலமான 80&90கள்ல கூட அப்டிதான் பண்ணிட்டிருந்தேன். இன்னைக்கு வரைக்கும் நான் அப்டிதான் பண்ணிட்டிருக்கேன். ஆனா இப்ப அதை விட்டுட்டு நாம மாடர்னா இருக்கனும் அப்டிங்ற விஷயங்கள் மாத்திரம்தான் இருக்கு. மாடர்னா எந்த விஷயம் இருக்குனு எனக்கு உண்மையிலயே தெரியல. ஏனா மாடர்ன்ங்ரது வெஸ்டர்ன் கல்ச்சர். அந்த மாதிரி மேற்கத்தியமா யாராவது பண்றாங்கன்னா அதுவும் இல்லை. சில குறிப்பிட்ட சத்தங்கள், வாத்தியங்களுடைய காம்பினேஷன்ஸ்தான் இருக்கே தவிர மாடர்னாவும் பண்றாங்களான்னா ரொம்ப குறைவு. குறிப்பிட்ட சொல்ற மாதிரிதான் இருக்கு. ஒரு அவசரகதியில போய்ட்டிருக்கிறதாலதான் இப்டி இருக்குனு நினைக்கிறேன்.

உங்களுடைய பாடல்கள் பெரும்பாலும் மெல்லிசை ரகமானவை. சில பாடல்கள் அதிரடியானவை. இதில் உங்களுக்கு பிடித்தது எது?
நான் எல்லா பாட்டும் செய்துட்டுதான் இருக்கேன். நான் என்ன சொல்றேன்னா எனக்கு மெலடி மட்டும் தெரிஞ்சிருந்தா நான் கர்னாடக வித்துவான்னு நினைச்சுடக் கூடாதுல. நானும் எல்லாவிதமான பாடல்களும் டப்பாங்குத்துப் பாட்டு உள்பட பண்னியிருக்கேன். ஒரு பாட்டோட சூழல்தான் அது வெஸ்டர்ன, ஃபோக்கா, மெலடியானு இயக்குனர தீர்மானிக்க வைக்கும். கரெக்டா கம்போஸ் பண்ணி ஒரு வெரைட்டியா கொடுக்க முடிஞ்சதுனா அந்த பாட்டு காலத்த தாண்டி நிக்கும். அது மாதிரி நிக்கலனா அவங்க சரியா கவனம் செலுத்தலனு அர்த்தம்.

இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க?
தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு 200 படங்கள் பண்ணியிருக்கேன்.

உங்களுடைய இசையமைப்பில் பாடிய பாடகர்களில் யாருடைய குரல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் கே.ஜே.யேசுதாஸ் குரல்தான். என்னோட பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா? பாடலை ரொம்ப ஆசை தீர பாட வைச்சு ஹிட்டாக்குனேன். அதுக்கப்புறம் எஸ்.பி.பி. எனக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்காரு. அதே மாதிரி சித்ராம்மா எனக்கு நிறைய பாடியிருக்காங்க. ஆனா ஹரிஹரனோட வாய்ஸ் ரொம்ப வித்தியாசமானது. என்னுடைய பாடல்கள அவர் பாடும் போது அது ரொம்ப வித்தியாசமான பாடல்களாவே அமைஞ்சிருக்கு. ப்ரியமானவளே, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ இதெல்லாம் அவர் வாய்ஸ்ல நல்லா இருக்கும்னு பாட வச்சது. அதெல்லாம் மிகப் பெரிய வெற்றி.

பாடுறவங்களுக்கு தனி குரல் வளம் வேணுமா? இல்லை இசைஞானம் மட்டும் போதுமா?
குரல் வளம் ரொம்ப முக்கியம். இசை தெரிஞ்சுக்கிட்டுப் பாடுனா நல்லது. இசை தெரியலன்னா கூட குரல் வளம் இருந்தா பாட வச்சுடலாம். ஆனா பாடகர்களுக்கு இசை தெரிஞ்சுருக்க வேண்டியது அவசியம்.

நீங்க ஒரு கவிஞரும் கூட இல்லையா?
நான் அடிப்படைல ஒரு கவிஞன், அதற்கு பிறகுதான் இசையமைப்பாளர். முதல்ல கவிதை எழுததான் வரும். அதுக்கப்புறம் இசை கத்துக்கிட்டேன். என்னுடைய எழுத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

கவிதைத் தொகுதி போட்டிருக்கீங்களா?
இல்ல. ஆனா என்னுடைய பாடல்கள் எல்லாத்துலயும் அது யாரு எழுதியிருந்தாலும் சரி அதுக்குள்ள என்னோட கவிதை வரிகள் இருக்கும். அத என்னுடைய இயக்குனர்கள்கிட்டயும், பாடலாசிரியர்கள்கிட்டயும் கேட்டா தெரியும். பெரும்பாலும் என்னுடைய பாடல்களுக்கு பல்லவியில இருந்து அதோட மியூஸிக் வரைக்கும் என்னோட பங்களிப்பு இருக்கும். முதல்ல 25 படத்துக்கு நானே எழுதிட்டிருந்தேன். அதுக்கப்புறம் நாமளே எழுதிட்டு இருந்தா வேலைப்பளு சாஸ்தியாயிரும்னு விட்டுட்டேன். அப்புறம் டம்மியா ஏதாவது எழுதுறத சில பேர் பயன்படுத்தியிருக்காங்க. வானத்தைப் போல படத்துல காதல் வெண்ணிலா அப்டிங்ற பாட்டுல பல்லவி முழுக்க எழுதின பிறகுதான் சரணம் எழுதுனாங்க. இந்த கவிதை தாகம் இப்படியே போய்ட்டு இருக்கு. கவிதை நான் காதலிக்கிற பொண்ணு. வெளியில இன்னும் தெரியல அவ்ளோதான்.

உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க.
எனக்கு ஒரு மனைவி. ஒரு பொண்ணு, ஒரு பையன். இரண்டு பேரும் படிக்கிறாங்க. சங்கீதம்னாலே கொஞ்ச தூரம் ஓடிடுவாங்க. அந்தளவுக்கு படிப்புல ஆர்வம் அதிகம். பாட்டு கேக்குறதோட சரி. என்னுடைய வாரிசுகளா வரனும்னு விருப்பம் இல்லாதவங்க. பண்பாட்டை இழக்காமல் நம்ம வாழ்க்கையில முன்னேறனும் அப்டிங்ற விஷயத்த மட்டும் பண்பலை நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்.

-இவள் தேவதை பாரதி

எழுத்தாளர் அனுராதா ரமணன்


எழுத்தாளர் அனுராதா ரமணனை சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சந்தித்திருக்கிறேன் என்றாலும் அவருடன் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருக்கிறேன். முதன் முதலில் அவரிடம் பேசியது இன்னும் நினைவிருக்கிறது. நான் திருச்சி ஹலோ பண்பலையில் அவரை தொலைபேசியிலேயே தொலைகாணல் செய்திருந்தேன். (நேரில் கண்டால்தானே நேர்காணல்). அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும் அவரது படைப்புகளுக்கும் எனக்கும் அவ்வளவு பரிச்சயமில்லை. ஆதலால் எழுத்தாளர் ஆங்கரை பைரவியிடம் அவரைப் பற்றிய விஷயங்களை சேகரித்துக் கொண்டேன். அனுராதா ரமணன் பத்து நிமிடமே பேசுவதாக ஒத்துக் கொண்டவர் அரைமணி நேரம் பேசினார். அதில் பல கேள்விகளுக்கு நல்ல பதிலைத் தந்திருந்தார். ஆனால் இப்போது அவர் பேசியதில் ஒரு பகுதி மட்டுமே இருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒரு பகுதி அழிந்துவிட்டது. நேர்காணலைத் தொகுப்பதற்கான வேலையில் ஈடுபட்ட போது முதலில் அவருடைய பேச்சைத்தான் ஒலி வடிவிலிருந்து எழுத்து வடிவிற்கு மாற்றினேன். நேர்காணலைப் புத்தகமாகக் கொண்டு வரும் திட்டமிருந்ததால் அவரிடம் இன்னும் சில கேள்விகளைக் கேட்டு பதில் பெற வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நேர்காணலை எழுதி முடித்த இரண்டாம் நாள் அந்த துயரச் செய்தி என் தோழியின் மூலம் வந்தடைந்தது. இதோ அவரது பேச்சின் எழுத்துப்பதிவு..

உங்களுடைய ‘மன ஊஞ்சல்’ கதை நன்றாக இருக்கும். உங்களுக்கு ஊஞ்சலென்றால் மிகவும் பிடிக்குமா?
ஊஞ்சல் என்னுடைய தாத்தா பாட்டி வீட்டுல நான் வளர்ந்த காலத்துல இருந்தது. எனக்கு ஊஞ்சல்ங்றது படகு மாதிரி. கல்கியோட பொன்னியின் செல்வன் படிக்கிறச்ச படகுல போற மாதிரி போவேன். அதுலயே படுத்துட்டு தூங்குவேன். அதுலயே உக்காந்து சாப்பிடுவேன். அந்த மாதிரி எனக்கு எல்லாத்துக்குமே ஊஞ்சல்தான். குதிரைல போற மாதிரி நினைச்சுக்குவேன். யானை மேல அம்பாரி போறேன்னு நினைச்சுட்டு ஊஞ்சல்ல ஏறுவேன். அந்த மாதிரி ஊஞ்சல் என் வாழ்க்கைல எல்லாமுமாகவும் இருந்தது. ஆனா இதெல்லாம் கடந்து மனசுக்குள்ள ஒரு ஊஞ்சல் ஆடிட்டே இருக்கும். அதைத்தான் ‘மன ஊஞ்சல்’னு சொல்லிட்டு கதையா எழுதினேன். அது பின்னாடி காலத்தை நினைக்கும். எனக்குள்ள மட்டும் இல்ல. எல்லாருக்குள்ளயும் ஊஞ்சல் இருந்துட்டேதான் இருக்கு. உத்துப் பாத்தோம்னா ஊஞ்சல் ஆடுறது தெரியும். பின்னால போற சமயத்துல நம்ம வாழ்க்கைல நடந்ததெல்லாம் வரும். முன்னாடி போற சமயத்துல நம்ம எதிர்காலத்துல நடக்குற விஷயங்களெல்லாம் வரும். நடுவுல நிக்கும் போது ஏதாவது ஒரு சம்பவத்தோட அது வந்து அப்படியே ஒரு தியானம் பண்ற மாதிரி நிக்கும். இதுஓரு அழகான கற்பனை.

எல்லாருக்கும் பள்ளிப்பருவங்றது மறக்க முடியாத அனுபவமா இருக்கும். உங்க பள்ளிப்பருவ அனுபவம் எப்படி இருந்தது?

படிக்கிறத தவிர மத்ததெல்லாம் நல்லா பண்ணுவேன். நல்லா வரைவேன். அதனால ஸ்கூல்ல சாட்டெல்லாம் என்னைய தான் வரைய சொல்வாங்க. அதே மாதிரி பாட்டும் எழுத சொல்வாங்க. பள்ளி ஆண்டு விழாவுல என்னோட பங்களிப்பு இருக்கும். ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல ஏதாவது மெசேஜ் சொல்லணுமே. அதுக்கு ஏதாவது படம் வரைஞ்சு அன்னைக்கு வந்த சினிமா படங்கள் இருக்கே. அதுல இருக்குற பாடல்கள எடுத்து எழுதுவேன். அதாவது உதாரணத்துக்கு குச்சி மிட்டாய்க்காரன வரைஞ்சிட்டு அவனை சுத்தி நிறைய குழந்தைகள் இருக்குற மாதிரி போட்டுடுவேன். கமலஹாசனுடைய ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ பாட்டுல இருந்து ‘ஈயெறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ங்ற வரிகளை எடுத்து எழுதியிருப்பேன். நிறைய மெசேஜ் சொல்வேன். அப்புறம் ‘பாலிருக்கும், பழமிருக்கும்’ பாட்டுல இருந்து ‘பஞ்சணையில் கொசுக்கள் வரும், தூக்கம் வராது’னு எழுதி இருப்பேன். அதுகேத்த மாதிரி ஒரு படம் வரைஞ்சிருப்பேன். அதனால ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாருக்கும் என்னைய ஏதாவது செய்ய சொல்றதுனா ரொம்ப பிடிக்கும். எனக்கு ‘டிஸ்லெக்ஷியா’னால எழுத்துதான் சரியா வராதேயொழிய இந்த மாதிரியெல்லாம் நிறைய பண்ணிட்டு இருப்பேன். நான் சென்னைல தாத்தா வீட்டுல வளர்ந்ததால எனக்கு கிராமங்கள் அதிகம் தெரியாது. ஆனா அப்ப கிராமப்புறத்த பத்தி, ஜீசஸ பத்தி பாட்டெல்லாம் எழுதச் சொல்வாங்க. ட்யூன் கொடுத்துடுவாங்க. ட்யூனுக்கு ஏத்த மாதிரி எழுதிக் கொடுப்பேன்.

‘வலையோசை’ங்ற பத்திரிக்கை 92ல நடத்தியிருக்கீங்க. அதைப் பத்தி சொல்லுங்க.
வலையோசைங்றது எனக்கு லட்சியப் பத்திரிக்கையா இருந்தது. அது வந்து ஒரு பெண்களுக்கான நாவலா கொண்டு வரணும்னுதான் கொண்டு வந்தேன். ஆனா ஒரு எழுத்தாளரா இருந்து கணக்கு வழக்கெல்லாம் பாத்து நடத்தவேண்டியதா இருந்தது. அதனால அது நின்னுப் போச்சு.

உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
சிறையில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது. அதுல பால்காரி கதை என்னோடது. சின்ன சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்த படத்துல அந்த பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன். என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்ப்டிப் பண்ணிட்டாரு.

பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்க கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க. ‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன். நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்த கார்ட எடுத்துக்கிட்டு அந்த பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம். அந்த்ஃஅ பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது. அப்புறம் அவங்களுக்கு என்ன் கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்த பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன். இனி எந்த பெண்ணிஅயும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.

-இவள் தேவதை பாரதி
படங்கள் - நன்றி 'தேவதை' மாதமிருமுறை பெண்கள் இதழ்


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?