Wednesday, 19 May, 2010

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்திரைத்துறையில் கால் பதித்து கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருப்பவர். சின்ன்ப் பூவை மெல்லப் பேசச் சொன்னவர். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். வானத்தைப் போல, பூவே உனக்காக இப்படி தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் பாடல்களைக் கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும்.

உங்களுடைய முதல் படமான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ வாய்ப்பு பற்றிச் சொல்லுங்களேன்.
பொதுவா எனக்கு அதிர்ஷடத்து மேல நம்பிக்கைக் கிடையாது. உழைப்புதான் மிகப் பெரிய வெற்றியை தரும். உழைப்புதான் மனித வாழ்வியலுக்கு மூலாதாரம் என்று நினைக்கிறேன். நான் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவன். எங்க அப்பா மேடைப் பாடகர். எனக்கும் அதனால பாரம்பரியமா இசை ஆர்வம் வந்துச்சு. ஆனா நான் சின்ன வயசுல திரைத்துறையில மிகப் பெரிய இயக்குனரா வரனும்னு ஆர்வமா இருந்தது. அதை நினைச்சுதான் ராபர்ட் ராஜசேகரிடம் உதவியாளரா சேர்ந்தேன். அவங்க என்கிட்ட இருக்குற இசைத்திறமையை கண்டறிந்து ‘இவன் இசைக்கு நல்லா வருவான் போலிருக்கே’னு முடிவு பண்ணி இசையமைப்பாளர் ஆக்கினாங்க. பொதுவா இது ஒரு விபத்தான விஷயம் வெற்றிகரமான ஒரு நிலையாக மாறிவிட்டது. இசையில எல்லாமே விபத்துதாங்க. ராகங்களே ஒரு சுரம் இன்னொரு சுரத்தோட சேரும் போது கிடைக்குறதுதானே. சுரமோடு அனுசுரம் ஜாயின்ட் பண்ணும் போது அத மியூசிக்கல் ஆக்ஸிடன்ட்னு சொல்வாங்க. அது போல என்னுடைய வாழ்க்கைல விபத்தா நடந்த விஷயம் நான் இசையமைப்பாளரா ஆனது. ஆனா எனக்கு கம்போஸ் பண்ற திறமை இருந்தாலும் அந்த நேரத்துல ஒரு வெற்றியாளனா வருவேன்னு நினைக்கல. ஏன்னா இளையராஜா நான் வரும் போது ரொம்ப பெரிய லெவல்ல இருந்தாங்க. ஒரு நூறு படம் வருதுனா அதுல 75 படம் இசைஞானி இசைல இருக்கும். அவர் இருக்கும் போது அவரைத் தாண்டி ஒருத்தர் வர்றதுங்றது நடக்கவே முடியாத ஒரு விஷயம்னு நான் அவநம்பிக்கையோட இருந்த நேரத்துல எனக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்து இன்று வரை வெற்றியாளனா வச்சிருக்கிற என் இயக்குனர் ராபர்ட் ராஜசேகர் அவர்களை இந்த நேரத்துல நன்றியோட நினைச்சுப் பாக்குறேன்.

அந்த படத்துல நீங்க ஒரு பாடல் கூட பாடியிருக்கீங்க இல்லையா? அத பத்தி சொல்லுங்களேன்.
ஆமா.. ‘ஏபுள்ள கருப்பாயி’ பாட்டு. அதாவது எல்லா பாட்டும் கம்போஸ் பண்ணோம். அப்ப வித்தியாசமா ஏதாவது பாட்டு இருக்கணும்னு சொல்லிட்டு ராஜசேகர் கேட்டாரு. அப்பதான் என்கிட்ட வித்தியாசமான நாட்டுப்புறப் பாட்டு இருக்குன்னு சொன்னேன். கானா பாடல்களுக்கு ஆரிஜின்னு சொல்லப்படுற சென்னை திருவல்லிக்கேணிதான் நான் பொறந்து வளர்ந்த இடம். அதனால நண்பர்களோட கடற்கரையில உட்கார்ந்திருக்கும் போது நிறைய பாடல்கள் எழுதி அந்த நேரத்துல அப்படியே பாடுறதுண்டு. அந்த மாதிரியான பாட்டுதான் ‘ஏ புள்ள கருப்பாயி’. அது ரொம்ப சோகமான சூழ்நிலைல எழுதின பாட்டு. அந்த பாட்ட நான் இயக்குனருக்குப் பாடிக் காண்பிச்சேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்தப் பாட்டைப் பாட வித்தியாசமான குரல் வேணும்னு சொல்லிட்டாங்க. நானும் அந்த நேரத்துல மலேசியா வாசுதேவன் பாடுனா நல்லா இருக்கும்னு ஏதேதோ சொன்னேன். அப்ப இயக்குனர் ‘நீயே பாடு. உன்னுடைய குரலே வித்தியாசமான இருக்குதுனு’ என்னுடைய பாடலை எனது முதல் படத்துலேயே நானே எழுதி இசையமைச்சுப் பாடுற வாய்ப்பை வழங்குனாரு. இன்னைக்கு வரை கேக்குற அளவுக்கு பாப்புலரான பாட்டா இருக்கு.

இயக்குனர்கள்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்து அந்த உதவி இயக்குனர் பின்னாள்ல பெரிய இயக்குனரா வர்ற மாதிரி இசைத்துறையில, உங்ககிட்ட உதவி இசையமைப்பாளரா இருந்து பெரிய ஆளா ஆகியிருக்காங்களா?
அப்படி சொல்ல முடியாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட என் இசைக்குழுவுல வாசிச்சவர்தான். ஹாரிஸ் ஜெயராஜ் என் மியூசிக்ல கீ&போர்டு வாசிச்சவர்தான். இசைக்குழுவுல சேர்ந்து அஸிஸ்டென்டா இருந்து வர்றவங்க ரொம்ப கம்மி. அதெல்லாம் பாரம்பரியமா ஒரு காலத்துல இருந்தது. ஜி.கே.வெங்கடேஷன்கிட்ட இளையராஜா உதவியாளரா இருந்தாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் சுப்பாராவ்ங்ற இசையமைப்பாளர்கிட்ட இருந்து வந்தவரு. அது நான் அறிமுகமாகுற காலகட்டம் வரை இருந்தது. ஆனா அதுக்கு பிறகு இல்லை. ஆனா பொதுவாக இன்னைக்கு நிறைய கீ&போர்டு ப்ளேயர்ஸ், மிருதங்கம் வாசிக்கிறவங்களா இருக்குறவங்க ஒரு வகைல நிறைய இசையமைப்பாளர்கிட்ட இருந்தவங்கதான். அவங்களும் எல்லா வித அனுபவங்களோடும் சேர்ந்துதான் வர்றாங்க. அதனால அஸிஸ்டென்டா இருந்து வர்ற பாரம்பரிய முறை இப்ப இல்லன்னாலும் சிலரிடம் வாசித்து விட்டுதாம் பிறகு பெரிய ஆளாகிருக்காங்க.


இடைக்காலப் பாடல்கள்னு சொல்லப்படுற 80க்கும் 90க்கும் இடையிலான பாடல்கள் இன்னைக்கும் கேக்குற அளவுக்கு இருக்கு. இன்னைக்கி திசை மாறிப் போன மாதிரி இருக்கு. ஏன்?
இதுக்கு காரணம் என்னனா நிறைய அவசரமான முடிவுகள்தான். ரொம்ப ஷார்ட் டைம் சிந்தனை. இன்னைக்கு வெற்றி கிடைச்சா போதும் என்கிற துரிதகதில தான் போய்ட்டிருக்கு. பாடல்ங்றது காலத்துக்கும் நிக்கக்கூடியது. படத்த தாண்டி ஒரு பாட்டு நிக்கனும். அந்த காலத்துல நிறைய பாடல்கள் வானொலில கேட்டீங்கன்னா அதுல யார் நடிச்சிருக்காங்கன்னு தெரியாது. நிறைய பாடல்கள எம்.ஜி.ஆர்., சிவாஜினு நினைச்சுட்டு இருப்போம். ஆனா அதெல்லாம், எஸ்.எஸ்.ஆர், அப்புறம் பெயர் தெரியாத பிற மொழி நடிகர்கள், முகம் தெரியாத நடிகர்கள் நடிச்சிருப்பாங்க. படம் பேர் கூட ஞாபகம் வராது. ஆனா அந்த பாட்டு உயிரோட இருக்கும். இதுக்கு காரணம் என்னனா பாடல்களுக்கு தனிகவனம் செலுத்தி கதையோட ஜீவன் இருக்குற மாதிரி அந்த காலத்துல பண்ணிட்டு இருந்தாங்க. எங்களுடைய ஆரம்ப காலமான 80&90கள்ல கூட அப்டிதான் பண்ணிட்டிருந்தேன். இன்னைக்கு வரைக்கும் நான் அப்டிதான் பண்ணிட்டிருக்கேன். ஆனா இப்ப அதை விட்டுட்டு நாம மாடர்னா இருக்கனும் அப்டிங்ற விஷயங்கள் மாத்திரம்தான் இருக்கு. மாடர்னா எந்த விஷயம் இருக்குனு எனக்கு உண்மையிலயே தெரியல. ஏனா மாடர்ன்ங்ரது வெஸ்டர்ன் கல்ச்சர். அந்த மாதிரி மேற்கத்தியமா யாராவது பண்றாங்கன்னா அதுவும் இல்லை. சில குறிப்பிட்ட சத்தங்கள், வாத்தியங்களுடைய காம்பினேஷன்ஸ்தான் இருக்கே தவிர மாடர்னாவும் பண்றாங்களான்னா ரொம்ப குறைவு. குறிப்பிட்ட சொல்ற மாதிரிதான் இருக்கு. ஒரு அவசரகதியில போய்ட்டிருக்கிறதாலதான் இப்டி இருக்குனு நினைக்கிறேன்.

உங்களுடைய பாடல்கள் பெரும்பாலும் மெல்லிசை ரகமானவை. சில பாடல்கள் அதிரடியானவை. இதில் உங்களுக்கு பிடித்தது எது?
நான் எல்லா பாட்டும் செய்துட்டுதான் இருக்கேன். நான் என்ன சொல்றேன்னா எனக்கு மெலடி மட்டும் தெரிஞ்சிருந்தா நான் கர்னாடக வித்துவான்னு நினைச்சுடக் கூடாதுல. நானும் எல்லாவிதமான பாடல்களும் டப்பாங்குத்துப் பாட்டு உள்பட பண்னியிருக்கேன். ஒரு பாட்டோட சூழல்தான் அது வெஸ்டர்ன, ஃபோக்கா, மெலடியானு இயக்குனர தீர்மானிக்க வைக்கும். கரெக்டா கம்போஸ் பண்ணி ஒரு வெரைட்டியா கொடுக்க முடிஞ்சதுனா அந்த பாட்டு காலத்த தாண்டி நிக்கும். அது மாதிரி நிக்கலனா அவங்க சரியா கவனம் செலுத்தலனு அர்த்தம்.

இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க?
தென்னிந்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு 200 படங்கள் பண்ணியிருக்கேன்.

உங்களுடைய இசையமைப்பில் பாடிய பாடகர்களில் யாருடைய குரல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? எனக்கு ரொம்ப பிடிச்ச குரல் கே.ஜே.யேசுதாஸ் குரல்தான். என்னோட பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா? பாடலை ரொம்ப ஆசை தீர பாட வைச்சு ஹிட்டாக்குனேன். அதுக்கப்புறம் எஸ்.பி.பி. எனக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்காரு. அதே மாதிரி சித்ராம்மா எனக்கு நிறைய பாடியிருக்காங்க. ஆனா ஹரிஹரனோட வாய்ஸ் ரொம்ப வித்தியாசமானது. என்னுடைய பாடல்கள அவர் பாடும் போது அது ரொம்ப வித்தியாசமான பாடல்களாவே அமைஞ்சிருக்கு. ப்ரியமானவளே, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ இதெல்லாம் அவர் வாய்ஸ்ல நல்லா இருக்கும்னு பாட வச்சது. அதெல்லாம் மிகப் பெரிய வெற்றி.

பாடுறவங்களுக்கு தனி குரல் வளம் வேணுமா? இல்லை இசைஞானம் மட்டும் போதுமா?
குரல் வளம் ரொம்ப முக்கியம். இசை தெரிஞ்சுக்கிட்டுப் பாடுனா நல்லது. இசை தெரியலன்னா கூட குரல் வளம் இருந்தா பாட வச்சுடலாம். ஆனா பாடகர்களுக்கு இசை தெரிஞ்சுருக்க வேண்டியது அவசியம்.

நீங்க ஒரு கவிஞரும் கூட இல்லையா?
நான் அடிப்படைல ஒரு கவிஞன், அதற்கு பிறகுதான் இசையமைப்பாளர். முதல்ல கவிதை எழுததான் வரும். அதுக்கப்புறம் இசை கத்துக்கிட்டேன். என்னுடைய எழுத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

கவிதைத் தொகுதி போட்டிருக்கீங்களா?
இல்ல. ஆனா என்னுடைய பாடல்கள் எல்லாத்துலயும் அது யாரு எழுதியிருந்தாலும் சரி அதுக்குள்ள என்னோட கவிதை வரிகள் இருக்கும். அத என்னுடைய இயக்குனர்கள்கிட்டயும், பாடலாசிரியர்கள்கிட்டயும் கேட்டா தெரியும். பெரும்பாலும் என்னுடைய பாடல்களுக்கு பல்லவியில இருந்து அதோட மியூஸிக் வரைக்கும் என்னோட பங்களிப்பு இருக்கும். முதல்ல 25 படத்துக்கு நானே எழுதிட்டிருந்தேன். அதுக்கப்புறம் நாமளே எழுதிட்டு இருந்தா வேலைப்பளு சாஸ்தியாயிரும்னு விட்டுட்டேன். அப்புறம் டம்மியா ஏதாவது எழுதுறத சில பேர் பயன்படுத்தியிருக்காங்க. வானத்தைப் போல படத்துல காதல் வெண்ணிலா அப்டிங்ற பாட்டுல பல்லவி முழுக்க எழுதின பிறகுதான் சரணம் எழுதுனாங்க. இந்த கவிதை தாகம் இப்படியே போய்ட்டு இருக்கு. கவிதை நான் காதலிக்கிற பொண்ணு. வெளியில இன்னும் தெரியல அவ்ளோதான்.

உங்க குடும்பத்த பத்தி சொல்லுங்க.
எனக்கு ஒரு மனைவி. ஒரு பொண்ணு, ஒரு பையன். இரண்டு பேரும் படிக்கிறாங்க. சங்கீதம்னாலே கொஞ்ச தூரம் ஓடிடுவாங்க. அந்தளவுக்கு படிப்புல ஆர்வம் அதிகம். பாட்டு கேக்குறதோட சரி. என்னுடைய வாரிசுகளா வரனும்னு விருப்பம் இல்லாதவங்க. பண்பாட்டை இழக்காமல் நம்ம வாழ்க்கையில முன்னேறனும் அப்டிங்ற விஷயத்த மட்டும் பண்பலை நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்.

-இவள் தேவதை பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?