Wednesday 18 February, 2009

ஒரு தோழியின் கடிதம்....

அன்புத் தோழனுக்கு,
தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழக்கப்பட்டிருக்கும் நாம் முதன்முறையாக உணர்வுகளை எழுத்துக்களாக பிரதிபலிக்கும் கடிதம் வழியாக பேசுகிறோம்...இல்லை நான் பேசுகிறேன்..நீ கேட்கிறாய்..இரண்டு, மூன்று நாட்களாகவே நீ என்னிடம் சரியாக பேசவில்லை என்பது எனக்குத் தெரியும், நீ ஊருக்கு வந்துவிட்டு போனதிலிருந்து உன்மனது சரியில்லை என்று நீ சொன்னவுடன் எனக்கு லேசாக பொறி தட்டியது.சில நினைவுகள் உன்னை அலைக்கழித்திருக்கும் என்பதை நானே புரிந்திருக்கிறேன்..

உனது மனம் மட்டுமல்ல.. எல்லோருடைய மனமும் முதல் காதலை மறந்துவிடாதுதான்..அதிலும் தான் விரும்பிய ஒருத்தி தன் கண்முன்னே கண்டுகொள்ளாமல் செல்லும்போது அந்த வலி எத்தகையது என்பதை எந்நாளும் உணரமுடியும்..உன் தோழியாக அல்ல.. நானும் ஒருவருக்கு மனம் விரும்பிய ஒருத்தியாக இருந்திருக்கிறேன் என்பதாலே..

பதின் பருவம் எல்லோருக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்..பள்ளியில் படிப்போருக்கு அது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்...நட்பு, காதல் என்று வாழ்க்கையின் மறுபகுதியை ஒரே சமயத்தில் க(பெ)ற்றுக்கொள்ளும் பருவம்..

அதில் எது நட்பு?எது காதல் என்று புரிந்து கொள்ள முடியாத ,அப்படியே உணர்ந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள இயலாத மனம் ..அது பிசைந்த மாவைப் போல் எதற்கும் இசைந்து கொடுக்கும் வகையில் சூழலின் கைப்பிள்ளையாய் சுழலும் பருவம்... நட்பைக் கூட காதலென்று ஒத்துக் கொள்ளும்.. ஆனால் காதலை ஒருபோது நட்பாக ஒத்துக் கொள்ளாது...

தோழா இந்த நேரத்தில் உனக்கொன்று சொல்கிறேன்.. உனது எல்லா இன்பங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு துன்பம் காலத்தின் முந்தானையை பிடித்துக் கொண்டு தொடரும்...அப்போது மனம் தளராதே..

இப்போது நீ எடுக்க இருக்கும் முடிவுகளே உன்னை எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும்.. நீ தேடிப் போன காதலை விட உன்னை தேடி வரும் காதல் முக்கியமானது என்பார்கள்.. அதை விட நீயும் தேடி உன்னையும் ஏற்றுக் கொண்ட காதலே உன்னை வாழ வைக்கும்.. ஆதலினால் காதல் செய் சிறுது காலத்திற்குப் பின்..

அதாவது உன் கல்வி முடித்து வேலைக்குப் போன பின்...அதற்குள் காதல் உன்னை தேடி வந்தாலும் உதட்டோரம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உன் வேலையில் கவனமாஇரு... இனி வரும் காலம் நலமே அமையட்டும்...

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?