Tuesday 3 February, 2009

தொலைக்காட்சியும் தொல்லையும்...

சின்னத் திரை மோகம் பிடிபட
சிந்தனையின் வேகம் தடைபடும்..

காய்கறிச் சந்தையில்
விலையினை தெரிந்துகொள்வதை விடவும்
சீரியல் நடிகைகளின்
நிலையினை தெரிந்து கொள்ளவே முனைவர்..

வீட்டிலிருந்தே திருவண்ணாமலை
தீபம் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வர்..
பக்தியாய் முக்தி நோக்கி சக்தி கேட்பார்..

விளம்பரங்கள் பார்த்தே
விடிந்தது முதல்
விழிகள் தூங்கும் வரை
அதனை பொருட்களும் வாங்கப்படும்
பலவீடுகளில் ...
வேண்டாதவற்றையும் வாங்கி நிறைப்பார்
சிலவீடுகளில் ...

அடுத்த தலைமுறையில்
இதெல்லாம் நடக்கும்..

உயிர்கொல்லும் குளிர்பானங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் குவிப்பார்..
உடல்நலம் குன்றம் போது
இளநீரில் இருந்தோ நொங்கிலிருந்தோ
தயாரிக்கப்பட்டு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும்
மருந்துகள் அதிக பயன் தரும்..

எட்டுமணியானால்
மின்வெட்டானாலும்
கண்ணில் தாரை தாரையாய் நீர் வழியும்..

அறிவியல் அப்போது சொல்லும்
குறிப்பிட்ட நேரத்தில்
தொடர்ச்சியாய் பார்த்த
தொடர்கள் முடிந்த பின்னும்
முடிவிலியாய் தொடரும் கண்ணீர்
பரிணாம வளர்ச்சிஎன்று...

கணவன் மனைவிக்கிடையேயான
பரஸ்பரம் குறைந்து மாதத்தில் ஒருநாள்
பேசுவதற்காகவே
ஒருநாள் தேர்ந்தெடுக்கப் பட்டு
கொண்டாடப்படும் நாளாக
வெளியில் எங்காவது சந்தித்துப் பிரியும்
நிலை வரும்..

ஒரு வீட்டின் அத்தனை
அறைகளையும்
கண்ணாடி, துணிமணிகள் போல
தொலைக்காட்சிப் பெட்டிகள்
அலங்கரிக்கும்...
ஆளுக்கொரு அறையில்
தொலைகாட்சியில்
முகம் புதைத்திருப்பர்கள்...

தனிக்குடும்பம்
கூட்டுக்குடும்பம் மறைந்து
ஒரு நபர் வீடுகளாக
அறைகள் மாறும்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீதிக்கொரு பள்ளி கட்டுவோம் என்பது போல...
ஊருக்கொரு கட்சித் தலைவார்கள்
ஈசல்களாய் சேனல்கள் தொடங்குவார்கள்..

நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்கள் வருவது போய்
விளம்பரங்களுக்கிடையே
நிகழ்ச்சிகள் வந்து போகும்..

மட்டைப்பந்து
அதாவது ஆங்கிலத் தமிழில்
கிரிக்கெட்...
கைப்பந்து
கால்பந்து மறந்து
மட்டைப்பந்தோடு
மந்தையாய் திரிவார்கள்...
குழந்தைகள்..மாணவர்கள்..

சிலம்பாட்டம்-சிம்புவின் படமல்ல...
தமிழரின் கலை
சிலம்பாதாம் ஒரு படத்தின்
பெயராக மட்டுமே அறியப்படும்..

திரையரங்குகள்
மூடப்பட்டு
கடித முகவரிகளிலோ
முகவரி தேடி வரும்
புதியவர்களுக்கோ
திரையங்குகள் பெயர்கள்
அடையாளப்படும்..

திரைத்துறை அடியோடு
சின்னத்திரைக்கும் புலம் பெயரும்..
புரட்டுவாரின்றி
புத்தகங்கள் தெம்பும்..

தொடர்ந்து சீரியல்
பார்பவர்களின் சங்கம்
தொடங்கப்படும்..
அதுவும் கூட்டப்படாமலே
இருக்கும்...
கூட்டப்பட்டாலும்
விட்டுப்போன நாட்களில்
நடந்த நிகழ்ச்சிகளை
அசைபோடவே அது பயன்படும்..

அண்டை வீடு
அண்டார்டிகாவில் இருக்கும்..
அண்டார்டிகா
அடுக்களைக்குள் அலறும்..

சேனல்களில் செய்திகள் மாறுபடும்..
உண்மைகள் வேறுபடும்..
சிலர் NDTV,BBC களில்
உள்ளூர் செய்திகளை அறிவார்கள்..

உறவுமுறைகள் கேள்விக்குறியாகும்..
ஒரு குழந்தை தன் தாயைக்
கண்டறிவதே பெரிய கின்னஸ்
சாதனையாகப் பேசப்படும்...

சந்திராயன் விண்ணிலிருந்து
நிலவோடு பூமியையும்
புகைப்படம் எடுத்து அனுப்புகையில்
ஒயர்களால் மரங்கள்
கட்டப்பட்டிருப்பதாக
காட்சிகள் சொல்லும்...
அங்கே
உறவுகள் அறுபட்டிருக்கும்...


No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?