Thursday, 9 August, 2012

கொடுமணல் அகழாய்வு - மண்ணுக்குள் புதைந்திருக்கும் மகத்துவம்!இவள் பாரதி

தமிழரின் தொன்மை குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொடுமணல் அகழாய்வு மிக முக்கியமானது. ஏன்?

நொய்யலாற்றின் வடகரையில் ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல்.இந்த ஊரிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடுமணல் தொல்லியல் களம் 50 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதி முதன்முதலில் 1961ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை அங்கு தொடர்ந்து அகழாய்வுகள் நடந்து வருகின்றன. புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் வரலாற்றுத் துறையைச் சார்ந்த மாணவர்களான வி.பி.யதீஸ்குமார், சி.செல்வகுமார், இரா.ரமேஷ், அ.பெருமாள், பா.பாலமுருகன், பி.ரமேஷ் மற்றும் செ.நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை கண்டறியப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டறியப்பட்டவை
கொடுமணலில் வாழ்ந்த மக்கள் அப்போதே சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலும் முன்னேறி இருந்திருக்கிறார்கள். இங்கு தொழிற்கூடங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இருந்திருக்கக் கூடும். அரிய கல்மணிகள் இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு ஆபரணங்களாக வடிவமைக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பிறமாநிலத்தோடும், இலங்கையோடும் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. கொடுமணல் ஒரு தொழிற்பேட்டையாக விளங்கியிருக்க வேண்டும் என்று இந்த ஆய்விலிருந்து அறியப்படுகிறது. இது குறித்து பேராசிரியர் ராஜன், "கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் வெவ்வேறு இனத்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தபோது பிராகிருத மொழியின் கலப்பு ஏற்பட்டு எல்லா மொழிகளிலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் பிராகிருத பேர்கள் தமிழ்மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ் மொழியின் ஒலி வடிவத்தில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட  130க்கும் மேற்பட்ட மண்பாண்டக் குறிப்புகள் இங்கு கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு மண்பாண்டக் குறிப்புகள் இங்குதான் கிடைத்திருக்கின்றன. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கணப் பிழையில்லாமல் எப்படி எழுதியிருப்பார்கள்... மொழியை கற்பித்தது யார் என்ற கேள்வி எழுகின்றது. கிறிஸ்துவுக்கு முந்தைய 300 ஆண்டுகளில் வாழ்ந்த வெவ்வேறு வகையான கையெழுத்துக்களை அடையாளம் காண முடிந்தது.

சங்ககால சேரர் தலைநகரான கரூரை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் வணிகப்பாதையில் கொடுமணலின் அமைவிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் கொடுமணம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் அணிகலத் தொழிலில் சிறப்புற்றிருந்தமை, ‘கொடுமணம் பட்ட... நன்கலம்’ (பதிற்றுப் பத்து 67) என கபிலரும், ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ (பதிற்று. 74) என்று அரிசில்கிழாரும் குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், இரும்பு, எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும், கண்ணாடி மணிகள் மற்றும் செம்பு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத்தொழில் செழிப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத்தொழில் சிறப்புற்றிருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், மணிகள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகிறது. ஓர் அகழாய்வுக்குழியில் 170க்கும் மேற்பட்ட சங்குகள் குவிக்கப்பட்டிருந்ததன் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன" என்கிறார்.

"இங்கு பெரும்பாலானவை பச்சைக்கல் என்று அழைக்கப்படுகின்ற பெரில் (Beryl), நீலக்கல் என்று அழைக்கப்படுகின்ற சபையர், வைடூரியம் என்று அழைக்கப்படும் லேபிஸ்லோசுலி, பளிங்குக்கல் என்று அழைக்கப்படும் குவாட்ஸ் (Quartz), ஊதா நிறத்திலுள்ள அமதிஸ்ட், சூதுபவளம் என்று அழைக்கப்படுகின்ற கார்னீலியன் (Carnelian) மற்றும் அகேட், பிளாக்கேட் அய், ஜாஸ்பர், ஒனக்ஸ் போன்ற அரிய கற்களால் உருவாக்கப்பட்ட கல்மணிகள் கிடைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த வைடூரியம், மகாராஷ்டிரா, குஜராத்தைச் சார்ந்த அகேட், கார்னீலியன், இலங்கையைச் சார்ந்த பிளக்கேட் அய் போன்ற அரிய கல்மணிகள் இங்கு கிடைப்பது இவ்வூர் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கியமை புலப்படுகிறது. இங்கு கிடைக்கும் தமிழ்மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த மனிதர்களின் பெயர்களும் வணிகர்களின் பெயர்களும் இவ்வூர் வணிகத்தில் செழுமை பெற்றிருந்ததை நமக்கு புலப்படுத்துகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் பெயர்களான சம்பன் ஸுமநன், திஸ்ஸன், ஊரானன், ஸிலிகன், ஸந்துவன், பெரியன் ஸாதன், சம்பன், மாத்தன், சபாமந்தை பம்மாத(ன்) போன்ற பெயர்கள் அக்கால சமூகத்தின் புதிய பரிமாணத்தை விளக்குவதாக உள்ளன" எனப் பலவிஷயங்களை முன்வைத்தார்.

இறந்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகள் கல்வட்டத்தின் நடுவே உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கல்லறையின் முன்பு முற்றம் போன்ற பகுதியும், இம்முற்றத்தின் எதிரே மேலும் இரு கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையிலும் நீள்செவ்வகம், வட்டம் மற்றும் சாவி துவாரம் போன்ற வடிவிலான இடுதுளைகள் காணப்படுகின்றன. இக்கல்லறைகளில் 10 டன்னுக்கும் அதிகமான  எடைகொண்ட பலகைக் கற்களுடன் அரிய கல்மணிகள், இரும்பிலான கத்திகள், கேடயம், அம்பு முனைகள், வாள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இவை பண்டைக் காலத்தில் இறந்தோருக்கு அளிக்கப்பட்ட மரியாதையை புலப்படுத்துகிறது.

1985, 1986, 1989, 1999 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் கொடுமணலின் முக்கியத்துவம் உணரப்பட்டது. தற்போது மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனங்களின் உதவியுடன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப்பகுதியில் அகழாய்வை இன்னும் பரந்த அளவில் மேற்கொண்டால் சங்க கால சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளும், வாழ்க்கை முறைகளும் வெளிப்படும். இப்போது மேற்கொண்டுவரும் ஆய்வில் தமிழுக்குப் பெருமை சேர்ப்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் கவலையும் தொற்றிக் கொண்டுள்ளது.

தொழில்வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, விவசாய நிலங்கள் கட்டிடமாதல், மக்கள்தொகைப் பெருக்கத்தால் இந்த ஆய்வுக் களங்கள் நெருக்கடிக்குள்ளாகலாம் என்பதுதான் தொல்லியல் துறையினரின் கவலை. ஏனெனில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் இந்த நிலங்கள் இன்று ஒரு விவசாய நிலமாக இருக்கும். நில உரிமையாளரிடம் அனுமதியைப் பெற்று நிலத்தைத் தோண்டி அங்கு அகழாய்வு முடித்த பின் மீண்டும் பழையபடியே நிலத்தை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிலத்தின் வேறொரு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு தொடர்பணி. ஒரு கட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படாத விவசாய நிலங்கள் கட்டிடங்களாக மாறிவிடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே அதற்குள்  ஆய்வுகளை விரைந்து செய்ய வேண்டும். ஆனால், ஆட்கள் பற்றாக்குறையை விட பொருளாதார உதவி பெரிய அளவில் கிடைக்காததால், தொல்லியல் ஆய்வுகள் மிக மெதுவாகவே நடந்து வருவதாகக் கவலையுடன் கூறுகின்றனர் அகழ்வாராய்ச்சியாளர்கள்.


-இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?