Saturday, 27 June 2009

என் உயிரின் பார்வைக்கு..

நலமாகத்தானிருந்தேன்..
உன்னை சந்திக்காத வரையில்..
பறந்து திரிந்து தானிருந்தேன்..
உன்னிடம் பழகாத வரையில்..
எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இருந்தேன் ..
உன்னை எதிர்கொள்ளாத வரையில்..

சிறகுகளை சுருக்கியதில்லை..
உன் நிழலை பார்த்திராத வரையில் ..
சிந்தனைகள் செரித்தபடிதானிருந்தன..
உன் அறிவை உண்ணாத வரையில்..
நினைவுகள் சலனமற்று இருந்தேன்....
உன்னை தரிசிக்காத வரையில்..

என் பூமியில் மழையும் வெயிலும்
மாறி மாறித்தான் தழுவியது..
உன் சுற்றுவட்டப் பாதையில் நுழையாத வரையில்..
என் கதிர்கள் ஒளி பாய்ச்சியபடி தானிருந்தன..
உன் எண்ணங்கள் குறுக்கிடாத வரை..
என் இரவுகள் விடியலை நாடித்தான் இருந்தன..
உனது இமைகளுக்குள் உட்புகாத வரையில்..

எனதிரப்பைக்கு பசித்து தானிருந்தது..
உன் இதய நிழலில் இளைப்பாராத வரையில் ..
எனது பார்வைக்கு தடை இருந்ததில்லை..
உன் காட்சி கடந்து போகாத வரையில்..
எனது விரல்களுக்கு வலி தெரிந்ததில்லை..
உனது கைகளுக்குள் சிறைப்படாத வரையில்..

எனது நுரையீரலில் சுவாசம் தடைபட்டதில்லை..
உன்னிலிருந்து கசியும் மதுவின் வாசம்
நாசி துளைக்காத வரையில்..
என் கனவுகள் தேங்கி நின்றதில்லை
உன் வார்த்தைகளில் உறையாத வரையில்..
என் உயிர் சொட்டு சொட்டாய் உதிர்ந்ததில்லை..
உன் நிஜம் கண்டு திடுக்கிடாத வரையில்..

நானெப்போதும் என்னை நொந்ததில்லை..
உன் அன்பின் வெப்பம் சுடாத வரையில்..
நானெப்போதும் சோர்ந்ததில்லை..
உனது பதிலின் பதிவை பெறாத வரையில்..
நானெப்போதும் அழுததில்லை..
உனது ஆளுமையினில் அடிமையாகாத வரையில்..



2 comments:

Vilvapathi said...

I LIKE MOST THIS KAVITHI

'பசி'பரமசிவம் said...

தங்களின் வலைப்பக்க வடிவமைப்பு
மிகமிக அழகாக உள்ளது.
கவிதைகள் மகிழ்விக்கின்றன.

பரமசிவம்,
51,பழனிசாமி தெரு,
நாமக்கல்-637001.


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?