Thursday, 26 August, 2010

இயக்குனர் & நடிகர் மௌலி


உங்களுடைய குழந்தைப் பருவம் பத்தி சொல்லுங்க..
எங்க பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லா. ஆனா நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். சென்னையை அடுத்த அம்பத்தூர். என்னுடைய ஆரம்ப கல்வி அங்க தான் படிச்சேன். என்னுடைய கலை தாகம் வந்தது அங்க தான். என்னுடைய பல நண்பர்கள் இன்னைக்கு நாடகத்துறை, திரைத்துறை பலரும் ஒண்ணா வளர்ந்ததும் அங்கே தான்.

உங்களுக்கு நாடகம், நகைச்சுவை வந்தது சின்ன வயசுலேயே இயல்பா வந்ததா? இல்லை வீட்டுல மத்தவங்களை பார்த்து கத்துக்கிட்டதா?
எனக்கு அக்கா ஒண்ணு தங்க தம்பி ஒண்ணு. ஆண் பிள்ளைய நான் தான் வீட்டுக்கு மூத்த மகன். வீட்டுல மூத்த மகன் சரியா வளரணும்ங்கற கண்டிப்பும், கறாரும் எல்லா குடும்பத்துலயும் இருக்கும் அதே தான் எங்க வீட்டுலயும் இருந்தது. படிக்கிற காலத்துல படிக்கணும்ங்கறதுல வீட்டுல தீவிரமா இருந்தாங்க. அது நியாயமானதும் கூட. அப்படி தான் இருந்தாங்களேயொழிய நான் கலைத்துறையில, சினிமாத்துறையில, நாடகத்துறையில வரணும்னு வீட்டுல எண்ணம் கிடையாது. ஆனாலும், பள்ளிக்கூடங்கள்ல நாடகம் போடுவாங்க. அப்ப வார்த்தைகளை சத்தமா பேசக் கூடிய பசங்கள பிடிச்சு வேஷம் போட வைப்பாங்க. ஏனா பள்ளிகள்ல சரித்திர நாடகங்கள் தான் போடுவாங்க. அது வந்து தவறான முன்னுதாரணமா இருக்காதுங்கறதால ராஜ ராஜ சோழன் போன்ற நாடகங்கள் போடுவாங்க. அதுக்கு கணீர் பேசக் கூடிய, உச்சரிப்பு சரியா இருக்கக் கூடிய பசங்களா வேணும்னு தேடுவாங்க. அப்படிதான் என்னைத் தேர்ந்தெடுத்தாங்க.

உங்களுக்கு சின்ன வயதுலேயே நாடகம் போடணும்ங்ற ஆவல் அதிகமா இருந்ததா?
எனக்கு கிரிக்கெட்லதான் அதிகம் ஆர்வம் இருந்தது. நிச்சயமா நாடகம் போடணுங்கறதுல இல்ல நாங்க நண்பர்கள் எல்லாம் ஒரு டீம் வச்சிக்கிட்டு வீட்டுல இருந்து பணம் வாங்கி ஒரு ரூபா, இரண்டு ரூபாணு போட்டு பேட், பால் வாங்குரதுங்றதுலாம் எங்க குறிக்கோள் இருக்குமே தவிர பள்ளி நாடகங்கள்ல நடிச்சு என்னுடைய எதிர்காலம் இது தான் போகப் போகுதுங்கறது எண்ணமெல்லாம் கிடையாது. கிரிக்கெட்ல போல் ஸ்டேட் லெவலுக்கு ஆடணும்ங்ற ஆசைதான் எங்க எல்லாருக்குமே இருந்தது. டென்னிஸ், பேட் மிண்டன், ஆடியிருக்கேன். வேயிட் லிஃப்டிங் இதெல்லாம் சிறு வயசுல பண்ணியிருக்கேன். அதனால விளையாட்டுல தான் ஆர்வம் இருந்ததேயொழிய கலைத்துறைல இல்லை. ஆனால் சினிமாக்கள் பிடிக்கும். நாடகங்கள் பிடிக்கும்.

வீட்டுல மாசத்துக்கு ஒரு சினிமா மூணு மாசத்துக்கு ஒரு சினிமானுதான் கூட்டிட்டு போவாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு டெண்ட் கொட்டகை இருக்கும். அங்க வச்சிருக்கிற ஸ்பீக்கர் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும். எங்க வீட்டு மாடில போய் உக்காந்துட்டேம்னா வசனம் சத்தமா கேக்கும். ஒரு முறை படம் பாத்துட்டு அப்புறம் 16 தடவை இல்ல அந்த படம் ஓடுற வரை வசனத்த கேட்டுக்கிட்டே இருப்போம். அது ஒரு ஆர்வத்தையும், எண்ணத்தையும் என்னுள்ள தூவிருக்கு. எனக்கு வெளியே அதன் வெளிப்பாடு கிடையாது. மனசுக்குள்ள எங்கேயோ நல்ல சினிமாங்றது பதிஞ்சிருக்குது.

விளையாட்டுத்துறை ஒரு கிரிக்கெட் வீரர இழந்துடுச்சுணு சொல்லலாமா?
நிச்சயமா! ஏனா கல்லூரி வரைக்கும் கிரிக்கெட் ஆடினேன். என் கூட ஆடின இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன்லாம் என்கூட படிச்சவங்க. எப்படியோ நாம விளையாட்டுத் துறையில வரணும்ங்கறது தான் பெரிய ஆர்வமா இருந்தது.
சின்ன வயசுனாலே விளையாட்டுலதான் ஆர்வமா இருப்பாங்க. நீங்க எப்டி விளையாட்டுலயும், நாடகத்துலயும் ஈடுபட்டீங்க.
கிரிக்கெட்ல மாசம் ஒரு ரூபா, ரெண்டு ரூபா போடுறது பிரச்சினையா இருந்துச்சு. அதனால ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்தி டிக்கெட் வசூல் பண்ணி அது மூலமா ரூ.2,000/& , ரூ. 3,000/& கிடைச்சா கிரிக்கெட் விளையாட சௌகரியமா இருக்குமேன்னு நினைச்சோம். ஆதனால வெளில இருந்து ஒரு ஆர்க்கெஸ்டரா கூப்பிட்டா சினிமா பாட்டெல்லாம் பாடுவாங்க. இது சில பேருக்கு பிடிக்கும். சில பேருக்கு பிடிக்காது. குடும்பத்தோட வந்து பாக்கும் போது என்னவோ பாட்டெல்லாம் பாடுறாங்க அப்டினு நினைப்பாங்க. அப்ப சில பேரு ‘‘நீங்க இத்தனை பசங்க இருக்கீங்கள்ல, நீங்க நடிக்கலமேடா’’னு சொன்னாங்க. எங்களுக்கும் ‘‘நாம ஏதாவது செஞ்சா காசு கொடுப்பாங்க. அப்டினு சரினு தோணுச்சு. அப்ப நாங்களே வெளில இருந்து கொண்டு வந்த டி.கே.எஸ். சண்முகத்தோட ரத்த பாசம் நாடகம் போட்டோம். நாடகம் வெளில இருந்து கொண்டு வர்றதுல சிக்கல் இருந்துச்சு.

யாரும் முழு ஸ்கிரிப்ட் கொடுக்கமாட்டாங்க நீங்க இங்க உக்காந்து எழுதிட்டுப் போங்கடா அப்டினு சொல்வாங்க. எல்லாருக்கும் படிப்பு, வேலைனு இருக்கும்போது உக்காந்து எழுதிட்டுப் போக நேரமிருக்காது. அப்ப தான் நாமலே எழுதலாம்னு டீம்ல சொல்லும்போது ‘‘யாருடா எழுதுவா’’ அப்டினு கேக்கும்போது ‘‘இவன் எழுதுவான்’’னு என்னை கையக் காட்டிட்டாங்க. அதுவரை நாடகத்த எழுதுற கண்ணோட்டத்துல நான் பாத்ததே கிடையாது. நான் பார்த்து பிரமிச்ச நாடகங்கள் எல்லாம் பெரிய பெரிய நாடகங்கள். அதெல்லாம் எழுத வருமானு தெரியாது. நான் நினைச்சது நம்ம குடும்பத்துக்குள்ள நடக்குற விஷயங்கள எழுத நினைச்சேன். வீட்டுல பொய் சொல்லிட்டு காசு வாங்கிட்டுப் போறது, லேட்டானா காலேஜ்ல வச்சுக்கிட்டு ‘‘காதலுக்கு கண்ணுல்ல’’ சின்னதா 40 நிமிடத்துக்கு ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றம் பண்ணோம். அந்த நாடகத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். அந்த நாடகம் பெரிய வெற்றி அடைந்தது.

அந்த முதல் நாடகத்தில் அனுபவங்கள் எப்படி இருந்தது?
திடீர்னு ஓவர் நைட்ல நான் பாப்புலராகுற அளவுக்கு எல்லாரும் ஸ்கிரிப்ட் பத்தி ‘‘பிரமாதம்’னு பேசுவாங்க. நடிப்ப பத்தி பேச ஆரம்பிச்சாங்க. ஓ இது ஏதோ நமக்கு சரியா வரும் போலிருக்கேனு தோணுச்சேயொழிய அன்னைக்கு இந்த லைன்லயே போயிடலாம்னு தோணல. இது எப்ப நடந்ததுனா 1966. அப்ப சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தாங்க. அந்த பாராட்டு விழாவையும் சேர்த்து நடத்தி நாடகத்தையும் அரங்கேற்றினோம்.

அந்த ‘‘காதலுக்கு கண்ணில்லை’’ நாடகத்துல எனக்கு ஹீரோயினா நடிக்க வெளில இருந்து கூட்டிட்டு வர அனுமதிக்கமாட்டாங்க. ஏன்னா பொம்பளங்களோட கூத்தடிக்கிறாங்கன்னு பேசிடுவாங்களோ அப்டினு பயம். ஆதனால எங்கள்ல ஒருத்தரே ஹீரோயினை நடிக்க வச்சோம். அப்ப எனக்கு ஹீரோயினா நடிச்சது இப்ப திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கக்கூடிய விசு அவர்கள் தான். நாங்க சிறந்த நண்பர்கள், அதனால அவர் ஹீரோயின் வேஷம் போட்டாரு. அப்டி ஆரம்பிச்சது தான் என்னுடைய கலைப் பயணம் அப்ப நான் பி.டெக். படிச்சேன். அதனால அரசு கல்லூரி நாடகங்கள்ல பங்கெடுக்குர வாய்ப்பு கிடைச்சுது. அப்படி நான் எழுதி நடிச்ச நாடகங்கள் ரெண்டு, மூன்று தடவை பெஸ்ட்னு கப்பெல்லாம் வாங்குஙக. அத பத்திரிக்கைகள் எல்லாம் கவர் பண்ணி போட ஆரம்பிச்சாங்க. அதப் பாத்துட்டு ஒரு அமெச்சூர் ட்ருப்ல இருந்து ‘‘நீங்க எங்க ட்ருப்ல வந்து நடிக்கணும்’’ அப்டினு கேட்டாங்க.

நாடகக் கம்பெனில இருந்து வந்த இந்த வாய்ப்பை ஒத்துக்கிட்டீங்களா? வீட்டுல என்ன சொன்னாங்க?
அப்ப நான் பி.டெக். இரண்டாவது வருஷம் படிச்சிட்டிருந்தேன். அதனால எங்க வீட்டுல வந்து வாங்கி பரீட்சை லீவுல ஏப்ரல், மேல நாடகங்கள் போடுவாங்க. டிசம்பர் மாசம் விட்டுடனும்னு சொல்லி அதுக்குள்ள எவ்வளவு வேணாலும் நாடகம் போட்டுக்கலாம்னு சொன்னாங்க. இப்படிதான் நான் நாடகத்துறையில நுழைஞ்சு 67, 68ல இருந்து இதுல முழு நேரமா ஈடுபட ஆரம்பிச்சேன். நான் கல்லூரில படிக்கும் போதே முழு நீள நாடகம் ஒண்ணு எழுதினேன். அத மேடையிலேயே கிட்டதட்ட 400, 500 தடவை போட்டிருக்கோம். தொலைக்காட்சியிலயும் போட்டு அது பாப்புலராச்சு, 40 வருஷம் ஆச்சு இன்னமும் அது டிவிடி போட்டு போயிட்டிருக்கு.

ஒரு படைப்பு அப்டிங்றது காலத்த தாண்டி நிக்குதுங்றதே படைப்பாளிக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம். அந்த வகையில இத்தனை வருஷம் ஒரு படைப்பு பேசப்படுதுங்றப்போ கிடைக்குற சந்தோஷம் தனிதான். இல்லையா?
எந்த தொழிலுமே இதுல நமக்கு என்ன வரப் போகுதன்னு நினைக்காம அதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி இது தான் நம்ம முழு நேர வேலைன்னு செய்யனும். நான் அன்னைக்கு மேடை நாடகங்கள் போடும் போதும் வேலைக்குப் போகணுங்ற ஆர்வமிருந்ததே தவிர இது மூலமாக நாடகத்துறையில பிரகாசிக்கணும்ங்ற ஆர்வம்லாம் கிடையாது. அந்த நாடகத்த நல்லா கொண்டு வரணும்ங்ற எண்ணம் மட்டும்தான். அதையே தொலைக்காட்சில கொண்டு வரும்போது நான் சினிமாவுல டைரக்டராகி நிறைய படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இத வந்து தொலைக்காட்சில கொண்டு வரணுமா? இதுல என்ன பெரிசா காசு வரப்போகுது, பேரு வரப் போகுதுனு நினைக்கல. அன்னைக்கு அதுலமுழு கவனத்த செலுத்த முடிஞ்சது. அப்படி செலுத்தியதால் இன்னிக்கும் அது பேசப்படுது... அது தான் அதனோட வெற்றினு நினைக்கிறேன்.

உங்களோட முதல் திரைப்பட வாய்ப்பு பத்தி சொல்லுங்களேன்.
என்னுடைய நாடகங்கள் தொடர்ந்து வெற்றியடையவே நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. சினிமா வாய்ப்பெல்லாம் வருதேன்னு ரொம்ப சந்தோஷம். ஆனாலும் படிப்ப முடிச்சுட்டு தான் சினிமாவுக்குப் போகணும்ங்றதுல வீட்டுல கண்டிப்போட இருந்தாங்க. அஞ்சு வருசப் படிப்ப முடிச்சிட்டு வேலைக்குப் போகும் போது நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு. வேலைலே கால் வைக்கும் போதே நான் பாப்புலர் மனுஷன். என்னுடைய நாடகங்கள் சினிமானு கூப்பிடுவாங்க. நான் எனக்குண்டான லீவ மட்டும் எடுத்துக்குறேன்.

நான் அதிகமா எதிர்பார்க்கல. ஏனா என்னோட அந்த உத்தியோகம் ரொம்ப பொறுப்பான உத்தியோகம். என்கிட்ட 150 பேர் வேலை செய்றாங்க. நான் அன்னாடம் லீவு போட்டுட்டு சாயந்திரம் வந்தல்லாம் செய்யமுடியாது. லீவுங்கறது முன்னாடியே சொல்லிட்டுதான் எடுக்கணும்ங்ற நிலைமை இருந்துச்சு. அப்படி இருந்தாலுமே நான் வேலை செய்யும் போது நாடகங்களும் போட்டுட்ருந்தேன். என் நாடகங்கள்ல புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாத்திருக்காங்க. அது மாதிரி இயக்குனர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், திருலோகசந்தர் எல்லோரும் பாத்துருக்காங்க. பாராட்டிருக்காங்க. அவங்க எப்படியும் நம்மள எழுதக் கூப்பிடுவாங்க. நடிக்கக் கூப்பிடுவாங்க. அப்படியே போய் சின்ன சின்னதா நடிச்சுட்டு வந்தேன். ஏனா வெளியூர்க்குக் கூப்பிட்டாங்கன்னா வேலைக்கு லீவு போட முடியாது.

ஆனாலும் ஒரு கட்டத்துல நான் எழுத ஆரம்பிச்சேன். சினிமாக் கதை மட்டும். இல்ல வசனம் மட்டும்னு எழுத ஆரம்பிச்சேன்.நான் முதல்ல அதாவது 1970&ல வசனம் எழுதினது. ‘‘புதிய வாழ்க்கை’’னு ஒரு படம் அப்புறம் ‘‘கை நிறைய காசு’’னு எழுதினேன். அது இன்னும் தொலைக்காட்சில போட்டிருப்பாங்க. அது நாகேஷ் அவர்கள் ஹீரோவா நடிச்ச படம். அப்புறம் ‘‘பெண்ணொன்று கண்டேன்’’னு ஒரு படம் எழுதினேன். அப்புறம் சிவாஜி அவர்கள் நடிச்ச ‘‘ஹிட்லர் உமாநாத்’’னு ஒரு படம் எழுதினேன். அப்படி என்னுடைய கலைப்பயணம் போய்ட்டுருக்கும் போது என்னுடைய ஒரு மேடை நாடகத்தை சினிமாவாவும் எடுத்திருக்காங்க. அப்ப என்னா மேடை நாடகங்கள்ல இருக்கிற அநத் சுவாரசியமான விஷயம் சினிமாவா மாறும் போது அதுல இருக்குற பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாகும் போது அது வெற்றி பெறாம போயிடும். எல்லாம் என்கிட்ட நல்ல நாடகத்த சினிமாக்கு கொடுத்து கெடுத்துட்டியேனு சொல்வாங்க. உனக்கு தேவையா இதுனு கேட்டாங்க. அதனால சில சமயம் நான் கொடுக்காமலேயே இருந்தேன்.

அப்ப உன்னுடைய ஒரு நாடகத்த என்னுடைய நண்பர் எடுக்க ஆசைப்படுறாங்கன்னு சொல்லும்போது அத ஸ்ரீதர், பாலசந்தர் மாதிரி பெரிய டைரக்டர்ட்ட தான் கொடுப்பேன். யாராவது எடுத்து கொடுத்துடு நாங்க (சினிமா மாதிரி பண்ணியிருக்கே 48 சீன் இருக்கு அப்ப பெரிய டைரக்டர்ள்ல பாலசந்தர் வந்து பாத்துட்டு இதுல நான் பண்றதுக்கு என்ன இருக்கு? நல்ல கேமராமேன், அசோசியேட் வச்சு நீயே டைரக்ட் பண்ணு சொல்லிட்டாங்க. அப்படியாக நான் எங்கேயும் உதவியாளனா வேலை செய்யாம என்னுடைய முதல் படமான ‘‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’’னு 1980&ல ரிலீசான கருப்பு வெள்ளைப் படத்தை எடுத்தேன். நான் ஆரம்பிக்கும் போது அது கருப்பு வெள்ளப் படமா தான் இருந்தது. ஆனா படம் முடிக்கம்போது கலர் வந்துடுச்சு. அப்ப கருப்பு வெள்ளைப் படங்களுக்கு ஒரு தேக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் வெளிவந்த 3,4 படங்கள்ல என் படமும் ஒண்ணு. ஆனாலும் 75 நாட்களுக்கு மேல பெரிய தியேட்டர்கள்ல ஓடி ஒரு பெரிய வெற்றிய ஏற்படுத்தி தந்தது.

ஒரு உதவி இயக்குனரா இல்லாம நேரடியா இயக்குனரான அந்த அனுபவம் ரொம்பவே வித்யாசமானது. இன்றைக்கு அந்த நிலைமை ரொம்ப குறைவு. நீங்க கொஞ்சம் முன்னாடியே வித்தியாசமான முறையில திரைத்துறைக்குள்ள வந்திருக்கீங்க.
நிறைய பேரு கேக்கும் போது ‘‘நான் வந்த பாதையிலவந்தது தவறுனு’’ சொல்லியிருக்கேன். நான் எங்கேயும் உதவி இயக்குனரா வேலை செய்யாட்டியும் நான் நடிச்ச படங்கள் எல்லாத்துலயும் நான் கூடவே இருந்திருக்கேன். என்னுடைய கதை, வசனங்கள் 18 படங்களுக்கு எழுதியிருக்கேன். அப்ப சினிமா என்னனு ஒரு பாதி தெரிய ஆரம்பிச்சது. அதே மாதிரி நம்ம எழுதுற வசனம் எப்டி எடுக்கப்படுதுனு பார்ப்பேன். சிவாஜி நடிச்ச படங்கள்ல என்னுடைய பங்களிப்பு நிறைய இருந்தது. ‘‘கௌரவம்’’னு சிவாஜி நடிச்ச படம் என்னுடைய மேடை நாடகம் தான். அந்த நாடகத்த சினிமாவா எடுக்கும் போது செய்ய இருந்திருக்கேன். ஆதனால நிறைய டெக்னிக் சமாச்சாரங்கள் எல்லாம் கத்துக்கிட்டேன். நான் எழுத்தாளனா, நடிகனா இருக்கும் போது கத்துக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு கிடைச்சது. அது வந்து எனக்கு ரொம்பவே கைகொடுத்தது. அதனால உதவி இயக்குனரா அனுபவம் இல்லாம சினிமாவுக்கு வரக்கூடாது.

நீங்க நடிச்சதுலேயே குறிப்பிடத்தக்க படங்கள்னா எதைச் சொல்வீங்க?
எனக்கு இயக்குநராகணும்ங்றது தான் குறிக்கோளா இருந்துருக்கு. நான் முதல் படம் ‘‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’’ செய்யும் போது தான் பாய்ராஜ் வர்றாங்க. இவங்கள்லாம் அவங்களே எழுதி, அவங்களே நடிக்கிறவங்க். அதே பாணில நானும் செய்யக்கூடாதுனு சொல்லிட்டு என் படங்களில் நான் நடிப்பதில்லைனு வச்சுக்கிட்டேன். நான் இயக்கும் படங்கள்ல வெளியே இருந்து தான் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் கூப்பிடுவேன். முதல்ல 8, 10 படம் நான் இயக்குனதுல நான் நடிக்கல. அப்புறம் தான் ‘‘புல்லாங்குழல் அடுப்பூதுகிறது’’ படத்துல மெயின் ரோல்ல நடிச்சேன். அப்புறம் ‘‘அண்ணே, அண்ணேன்’’னு ஒரு படத்துல முக்கிய வேடத்துல நடிச்சேன். இப்படி ஒரு நாலு படம் பண்ணின பிறகு தெலுங்கு படங்கள் பண்ண போயிட்டேன். தெலுங்கு படங்கள் ஆந்திராவுல எடுத்ததுல தமிழ தொடர்பே இல்லாம போயிடுச்சு.

அப்ப ‘‘தமிழ மறந்துட்டனு’’ எல்லாரும் கேட்பாங்க. தாய்வீட மறக்கலாமானு கேக்கும் போது ஏதாவது ஒரு தொடர்பு இருக்கணுமேனு இயக்காம போனாலும் நடிக்கிறதுன்னு முடிவு பண்ணி தமிழ்ல நிறைய படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். மாசத்துக்கு ஒரு 4, 5 நாள் படங்கள் தமிழ்ல நடிக்கவும் பத்து நாட்களல தெலுங்குல டைரக்ட் பண்ணவும் ஆரம்பிச்சேன். 84&ல இருந்து 2000 வரை தெலுங்கு படங்கள் மட்டும் தான் பண்ணிட்டிருந்தேன். 32 படங்கள் பண்ணியிருக்கேன். இருந்தாலும் தமிழ் மக்கள் என்னைய மறக்காததுக்கு காரணம் நான் தொடர்ந்து தமிழ் படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். நான் டைரக்ட் பண்ண தெலுங்கு படங்கள் எல்லாம் மொழி மாற்றமாகி தமிழுக்கு வந்திருக்கும். அதனால நான் மறக்கப்படவில்லை.

இல்லனா ஒரு 5 வருஷம் ஃபீல்டுல இல்லைனா மறந்துடுவாங்க. 3000, 4000 நாடகங்கள் ஓடிச்சதால என்னைய ஞாபகம் வச்சிருந்தாங்க. அப்புறம் 2000 க்கு பிறகு நிறைய தெலுங்கு படங்கள் பண்ணியாச்சு. குடும்பத்த விட்டு பிரிஞ்சி இருக்கோம். அவங்க அதாவது என் குடும்பம் சென்னல இருந்தது. அப்ப பிள்ளைகள் வளர்றதையே கண்கூடா பார்க்க முடியாம இருந்துச்சு. அந்த காரணத்துக்காகவும் நண்பர்கள் தெலுங்கு போதும் தமிழ்ல வந்து பண்ணுனு சொன்னதாலயும் இங்க வந்துட்டேன். நண்பர்கள் கமலஹாசன், பாக்யராஜ்லாம் ‘‘என்னங்க தமிழ விட்டுட்டு அங்க போய்ட்டீங்கன்னு சொல்வாங்க. அதனால 97&ல பிஸ்தா பண்ணேன். அப்புறம் நிறைய பண்ணியிருக்கேன்.

சில குறிப்பிட்ட படங்கள்னா சொல்லியிருக்கலாம். ஏகப்பட்ட படங்கள் அதனால சொல்லமுடியல இல்லையா?
ஆமாங்க. எல்லா நடிகர்கள் கூடவும் நடிச்சிருக்கேன். கிட்டத்தட்ட எல்லாருக்கும் அப்பாவா நடிச்சிருக்கேன்.

உங்களுக்கு கதாநாயகனா நடிக்கனும்னு ஆசையே இல்லையா?
இல்லைம்மா. எனக்கு கதாநாயகனா நடிக்கிற ஆசைய முதல்ல இருந்ததே வளத்துக்கல. ஹீரோனா முழு நேரமா லவ் பண்ணுவாரு. வில்லன் வந்தா துரத்தி துரத்தி ஃபைட் பண்ணுவாரு. ஹீரோக்கான பர்பாமன்ஸ் ரொம்ப கம்மியா இருக்கும். கேரக்டர்னு பண்ணும்போது ஒரு கேரக்டர்னு பண்ணும்போது ஒரு கேரக்டர் ஒரு மாதிரி, இன்னொரு கேரக்டரு வேற மாதிரி செஞ்சுட்டு போக முடியும். நம் நடிப்புக்கு சவாலா இருக்கிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களே தவிர கதாநாயக பாத்திரம் இல்லை.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாவே இருக்குமா?
ஐயோ, நான் ரொம்ப சீரியஸான ஆளுங்க. வீட்டுல கேட்டுப் பாருங்க. அவங்க சொல்வாங்க. எனக்கு இயல்பா கேட்டுப் பாருங்க. அவங்க சொல்வாங்க. எனக்கு இயல்பா வர்றது நகைச்சுவை. ஆனாலும் அதுலயும். நான் கண்டிப்பு, கறாராத்தான் இருப்பேன். நகைச்சுவையை சரியான அளவுல கொண்டு போய் சேர்க்கணும். நகைச்சுவைங்கறது. சினிமா கண்டுபிடிச்சவுடனேயே திரையில் வளர ஆரம்பிச்சுடுச்சு. நகைச்சுவை மூளைக்கு வேலை கொடுக்குறதா இருக்கணும்னு நிகைக்கிறேன்.

நீங்க நடிச்ச படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது?
இப்போதைக்கு ‘‘பொய் சொல்லப் போறோம்’’ அதத்தான் சொல்றேன். முக்கியமா நான் என் கேரக்டராயும், கதையாயும் கேட்பேன். அது முக்கியமா இருந்தா நடிப்பேன். இல்லனா வேற யாராவது கூப்பிடுங்கன்னு சொல்லிடுவேன். பொதுவா வருஷத்துல 3, 4 படத்துக்கு மேல நடிக்கக் கூடாதுனு ஆரம்பித்துலயே நினைச்சத இப்ப வரைக்கும் கடைபிடிக்கிறேன். இப்ப நான் நடிக்கிற படத்தோட கதை ரொம்ப நல்ல கதை. அதாவது காதலிக்கிறதுக்கும் ரெண்டு பேருடைய மனசு ஒத்துப் போனா போதும். ஆனா கல்யாணம்னு வரும் போது ரெண்டு குடும்பமும் ஒத்துப் போகணும். குடும்பத்துக்குக் குடும்பம் படிக்கணும்.

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?