Friday 15 June, 2012


பிளாஸ்டிக்கே ஓடு...  வழிகாட்டும் மாங்காடு


நூறு சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஒரு பேரூராட்சி நிர்வாகம்

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாக எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி தொண்டு நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோது, இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.  அத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் இப்படி எச்சரிக்கும் முன்னரே  பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்த முன்முயற்சி எடுத்திருக்கிறது ஒரு பேரூராட்சி. அந்தப் பேரூராட்சி சென்னைக்கு அருகில் உள்ள மாங்காடு.

பிளாஸ்டிக்கை அழிப்பதற்காக பல்வேறு இடங்களில் பலவாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. என்றாலும் அதற்குச் சொல்லிக்கொள்ளும்படியான பலனில்லை. இந்நிலையில் இப்போது நூறு சதவிகிதம் பிளாஸ்டிக்கை ஒழிப்பது என உறுதி எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது மாங்காடு பேரூராட்சி. ஒரு தொண்டு நிறுவனமும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுத்துச் செல்கின்றன.

மாங்காட்டுக்குள் நுழைந்து எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடைஎன்ற அறிவிப்பு. மாங்காடு பேரூராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக் கைப்பைகள், கப்புகள், கவர்கள் 01.03.2012 முதல் தடை செய்யப்படுவதாகவும், மேற்படி பொருட்களை கையில் வைத்திருந்தால் அபராதம் 500ம், பொது இடங்களில் வீசி எறிந்தால் 1,000மும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

"கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரூராட்சிகளைப் பார்வையிட்டு பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தின் நேரடியாக அறிந்துகொள்ள முடிவுசெய்து, மாங்காடு பேருராட்சித்தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர், பேரூராட்சிப் பணியாளர்கள், மாங்காடு வியாபாரிகள் இவர்களுடன் எங்களது ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனப் பணியாளர்களையும் சேர்த்து 60 பேர் கன்னியாகுமரி சென்றோம். அங்கு பார்வையிட்டபோது, வியாபாரிகளின் சந்தேகங்கள் பலவற்றுக்கு  நேரடியாக செயல் விளக்கம் கிடைத்தது" என்கிறார் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவா.

பேரூராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, "தற்போது கடைகளில் விநியோகிக்கப்படும் ஒருமுறையே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விற்பனையைக் கண்காணிக்க மைக்ரோமீட்டர் என்ற நவீனக் கருவியின் மூலம் 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகளை கைப்பற்ற இருக்கிறோம். அத்துடன் அபராரதமும் வசூலிக்கப்படும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் கொடுக்கப்படும் பைகள்தான் மிக மோசமான விளைவுகள் கொண்டவை. இதனால் சிலர் அதே தரம் மலிவான பைகளை பச்சை, மஞ்சள் என வேறு நிறங்களில் விற்பனை செய்ய துவங்குகின்றனர். எனவேதான் இந்த நவீனக் கருவியை வைத்து அந்த பிளாஸ்டிக் பைகளின் அளவை சோதிக்கிறோம். மற்ற பிளாஸ்டிக் பைகளும் ஓசியில் வழங்கப்படாமல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பெருநகரங்களில், பெரிய மால்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு 2 ரூபாயிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்" என்கின்றனர்.

"இப்போது பிளாஸ்டிக்கைத் தவிர்க்க மாற்றுப் பயன்பாட்டிற்காக நான் ஓவன் ஃபேக்ஸ்என்றழைக்கப்படும் பைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பைகள் அளவுக்குத் தகுந்த மாதிரி 4 ரூபாய் முதல் கிடைக்கின்றன. இதனை ஐந்து முதல் ஐம்பது தடவைகள் வரை பயன்படுத்தலாம். ஆனால், இதை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால், பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை பெருமளவு இது குறைப்பதால் தாராளமாக நான் ஓவன் ஃபேக்ஸைப் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்தையும் விட சிறந்த வழி, துணிப்பைகளைப் பயன்படுத்துவதுதான். இதற்காக துணிப்பைகளைத் தயாரித்து அதன்மேல், ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம், நான் பூமியின் நண்பனாக இருக்கிறேன்போன்ற வாசகங்களை அச்சடித்து விநியோகிக்க ஒரு திட்டம் உள்ளது. கோவையிலிருந்து இந்தப் பைகளை வாங்கி, கடைக்காரர்களை வாங்க வைக்கவும்  திட்டமிட்டுள்ளோம்."

இதெல்லாம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சில என்றாலும் அத்யாவசியப் பயன்பாட்டில் இருக்கிற பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது?

"அதற்கும் வழி உண்டு. காலையில் டூத்பேஸ்ட்டில் துவங்கி, இரவு கொசுக்களை விரட்டப் பயன்படுத்தும் கொசுமேட் வரை மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அதாவது மறுசுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை ஒவ்வொரு வீட்டிலும் தனியாக ஒரு பையில் சேமிக்க வைத்து, பசுமை நண்பர்கள் மூலம் அவை பெறப்படுகின்றன. இந்தப் பசுமை நண்பர்களே அந்த பிளாஸ்டிக் குப்பைகளை மக்களின் கண் முன்னே எடைபோட்டு அதற்கான விலையைக் குறிப்பிட்டு ரசீது கொடுக்கும் முறையையும் அறிமுகப்படுத்த உள்ளோம். பழைய பிளாஸ்டிக் கழிவுகளை எடைக்குப் போடுவது என்பது ஏற்கெனவே மக்களிடம் உள்ள பழக்கம்தான். அதனை முறைப்படுத்துவதற்காக இத்தகைய முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்" என்று கூறினார் பசுமை நண்பர்களில் ஒருவரான குமார்.

இவர்களுக்கு ஒரு பிரச்சினை உண்டு. அது 1,000 வீடுகளில் 100 வீடுகளில்தான் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுக்கிறார்கள். மற்றவர்கள்  எல்லா குப்பையையும் ஒன்றாகக் கலந்தே கொடுக்கிறார்களாம். அதனை பசுமை நண்பர்களே பிரித்தெடுக்க வேண்டியுள்ளதாம். மக்களுக்குத் தாங்களே குப்பைகளைப் பிரித்துக் கொடுப்பது என்ற பொறுப்பு வர வேண்டும். இப்படிச் செய்தாலே 90 சதவிகிதம் குப்பைகளை ஒழித்துவிட முடியும் என்கிறார்கள் அவர்கள்.

மேலும் பிளாஸ்டிக்கை தனியே பிரித்து எடுக்க முடியாத இரண்டறக் கலந்த குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூர் பகுதிகளில் கொட்டப்படுகின்றன. ஏழு கி.மீ. சுற்றளவில் வீடுகள் இல்லாத இடமாக இருக்கும் பகுதியில்தான் குப்பைகள் கொட்டப்பட வேண்டும். ஆனால், இவ்விரண்டு பகுதிகளிலும் வீடுகள் வந்துவிட்டன. எனவே குப்பைகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பசுமை நண்பர்களின் அக்கறையான வேண்டுகோள்.

பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டுவரும் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மாங்காட்டில் 7 வார்டுகளில் பசுமை நண்பர்கள் உதவியுடன் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது. அந்தந்த  ஊர்களில் நிரந்தர வேலையில்லாமல் இருப்பவர்களை இந்நிறுவனம் கண்டறிந்து அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது. இவர்களுக்கு மதிப்பூதியமாக பஞ்சாயத்திலிருந்து 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. குப்பைகள் வாங்கும் வீடுகளில் மாதத்திற்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சில வீடுகளில் பணம் தரத் தயங்குவார்கள். ஆனாலும் குப்பையை மட்டுமாவது கொடுங்கள் என்று பசுமை நண்பர்கள் வாங்கி, அவற்றை மக்களின் கண்முன்னே  பிரித்துப் போடுகிறார்கள். அப்போதாவது அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும் என்கின்ற அக்கறையில். "சின்ன விஷயம்தான்... சமையலறையில் ஒரு குப்பைத் தொட்டியும், ஹாலில் ஒரு குப்பைத் தொட்டியும் வைத்துக்கொண்டு குப்பைகள் போடும்போதே பிரித்துப் போட்டுவிட்டால் எல்லாருக்கும் வேலை சுலபம். பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கும், சாலைகள் போடுவதற்கும் பயன்படுத்தினால் சாலையும் நன்றாகும். வீடும் சுத்தமாகும். தெருவும் சுத்தமாகும். பின் என்ன நாடும் சுத்தமாகும்" என்கிறார் குமார்.

மாங்காடு, காமாட்சியம்மன் கோயிலுக்கு புகழ் பெற்றது என்ற வார்த்தை மாறி, பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன்மையானது என்ற பெயரைப் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.


- இவள் பாரதி.
நன்றி: புதியதலைமுறை

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?