Wednesday 19 May, 2010

கி.ரா.




தங்களது கரிசல் காட்டு ஞாபகங்கள் எப்படி இருக்கிறது?
முதலில் இருந்த தீவிரம், ஈடுபாடு அதெல்லாம் குறைந்திருக்கிறது. அதற்காக இல்லையென்று என்று அர்த்தம் இல்லை. அந்த நினைவுகள் இருக்கிறது. ஆனால் சற்று குறைந்திருக்கிறது.

‘கதை சொல்லல்’ எனும் கலை உங்களுக்குள் ஒரு விதையாக விழுந்த காரணம்?
அது ஒவ்வொரு மனுஷங்களுக்குள்ளேயும் இருக்கு. எனக்குள்ளயும் இருக்கு. உங்களுக்குள்ளயும் இருக்கு. ஆனால் வடிவங்கள் வித்தியாசமா இருக்கும். இப்ப வந்து நீங்க ஒரு ஊருக்குப் போயிட்டு வர்றீங்க. நீங்க பார்த்தத, கேட்டத, அங்க உள்ள சுவாரசியங்கள யார்கிட்டயாவது சொல்றீங்க இல்லையா. அது கதைதான். ஆனா கதை வடிவம் உண்டா அப்டினு கேக்கக்கூடாது. இப்ப ஒரு கதை விடுறதுனு சொல்வாங்க. அந்த மாதிரி கதை உண்டாகுறதுக்கு, கதையா வடிவமாறதுக்கு முன்னால ஒரு நிலை எதுனா கேட்டா அது சம்பவங்கள் தான். சம்பவங்கள்தான் பின்னால கதையாகுது. ஒரு விஷயம் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு நாக்குக்கு நாக்குக் கடந்து போயிட்டே இருந்தா அது கதையாகிக்கிட்டே போகும். கதையானதுக்கு அப்புறமும் கூட நீங்க வந்து அந்த கதையை திரும்பவும் சொல்லும் போது வித்தியாசப்படும். அது இன்னொரு இடம், இன்னொரு இடம்னு போகும் போது வித்தியாசப்படும். ஆகவே வடிவங்கள் வித்தியாசப்பட்டுக்கிட்டே போகும். எனவே, க்தை அப்டிங்றது நீங்க நினைக்கிற மாதிரி ஏதோ ஒரு வடிவத்துல கதைதான்னு நினைக்கப்படாது. அது எல்லா இடத்துலயும் நீக்க மற இருக்கு. அது வந்து நாட்டுப் புறத்துலதான் இந்த கதை இருக்கு. நகர்ப்புறத்துல இல்லை அப்டினு சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லாரிடத்திலும் இந்த கதை சொல்லலும், கதை கேட்டலும் இருந்துக்கிட்டேதான் இருக்கு.

கி.ரா.வுடைய எழுத்துக்கான அடையாளம் பற்றி..
ஒரு மனிதனிடமிருந்து ஒரு விஷயம் கதையாகவோ, சம்பவமாகவோ, நடப்பை சொல்வதாகவோ கிளம்புகிறது. அது எப்படி உள்ள வருதுனா முதலில் கி.ரா. நினைக்கிறார். அதுவே வெளியே வருதுனா நூத்துக்கு நூறு அப்டியே வெளியே வருதுனு சொல்ல முடியாது. சொல்லும் போதே திசை மாறும். வடிவம் மாறும் ஆகவே எப்படி சொல்கிறார் என்ன, ஏதுங்றது அந்த வினாடிதான் சொல்லும் போது நிர்ணயமாகும். எழுதும் போது நிர்ணயமாகும். இப்ப நான் வந்து ஒரு கதையில எழுதுறேன்னு வச்சுக்கங்க. முதல்ல நான் ஒரு கதை எழுதி முடிப்பேன். அல்லது ஒரு கட்டுரை எழுதி முடிப்பேன். அதன் நகல் பண்ணும் போது மாறிட்டே வரும். அசல் வராது. இது என் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் வேறுபடலாம். ஆகவே அது எப்டி வருது அப்டிங்றது வினாடிய பொறுத்த விஷயம்தான்.

1958 ல சரஸ்வதியில எழுத ஆரம்பிச்ச நீங்க இன்னைக்கும் வரைக்கும் வெவ்வேறு பரிமாணங்கள்ல வாசகர்களோட நேரடித் தொடர்புல இருக்கீங்க. ஒரு வாசகனுடன் இவ்வளவு வருடங்கள் தொடர்பிலிருக்கும் நீங்கள் அவர்களுடைய எண்ணங்கள், அவதானிப்புகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்கிறீர்கள்?
மாறுபடுவதுங்றது இயல்பு. 57&58ல இருந்த மாதிரி இப்ப 2009ல இருக்க முடியாது. மனிதனுடைய வளர்ச்சியிலயும் மாறுதல், காலம் மாறுதல், உடல் மாறுதல், மனசு மாறுதல், சூழல் மாறுதல் இதெல்லாம் கொண்டுதான் விஷயங்கள் இருக்கும்.

படைப்பின் வடிவம் வேறுபடும் போது அது ஒருவருடைய தனித்துவம் என வைத்துக் கொள்ளலாமா?
ஆமா.. ஆதிமூலத்தைப் போல கோட்டோவியங்கள யாராலும் வரைய முடியாது. எல்லாரும் கோடு போடுறவங்கதான். கோட்டோவியக்காரர்கள்தான் ஆனா அவரை அடிச்சுக்க ஆளே இல்ல. எது செய்தாலும் அப்டி செய்வாரு. எம்.எஸ்க்கு ஒரு குரல், லதா மங்கேஷ்கருக்கு ஒரு குரல்னு இருக்குதானே. அது மாதிரி. இதுக்கு அவர்தான் ஆதி, அவர்தான் மூலம். அவருகிட்ட குழந்தைகள பத்தி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் குழந்தைகளா இருந்திருப்பாங்க இல்லையா? அவங்களோட வாழ்க்கைய கோட்டோவியங்களாக செய்யலாமேன்னு கேட்டேன். ரஷ்யா எழுத்தாளர்கள்லாம் எழுதியிருக்காங்க. தமிழ்ல யாரும் எழுதல. நீங்க சொன்ன பல விஷயங்களை ஆல்பமா பண்ணுங்கன்னேன். நல்ல யோசனைதான். ஆனா ‘நான் அந்த கோட்ட விட்டுட்டேன். அதை நிறுத்திட்டு கலருக்கு வந்துட்டேன். அதனால அத இனிமே செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டார்.

ஒரு படைப்பாளி தனது நிலையில் புதிய பரிணாமத்தை எட்டும் போது பழையதை விட்டுவிடுவார்களா?
நிச்சயமா.. ப்ரெஞ்ச்ல மஞ்சள் இருந்து பச்சைக்கு போனோன். பச்சைல இருந்து நீலத்துக்குப் போயிட்டாங்க அப்டினு சொல்வாங்க. அது மாதிரிதான்.

இது ஓவியங்களுக்கு மட்டும்தானா? எழுத்துக்கும் உண்டா? கவிதை, கதை, சார்ந்த படைப்புகளுக்கும் உண்டா?
இல்லை. கதையின் வடிவம் மாறுமே. அப்ப இருந்த சிறுகதையின் வடிவம் இப்ப கிடையாது. நாவலின் பழைய வடிவமும் கிடையாது. கவிதையின் பழைய வடிவமும் இப்ப கிடையாதுன்னு ஆகிப் போச்சே.

இடைச்சேவலில் விவசாயியாக இருந்ததுக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்துல பேராசிரியராக இருந்ததுக்குமான மாற்றங்களை எப்படி உணர்கிறீர்கள்?
முதலில் பல்கலைக்கழகத்தில் அழைப்பு வந்ததும் பயம் தான் வந்தது. என்னைப் பல்கலைக்கழகம் எப்படி கூப்பிட்டதுனா நாட்டுப்புறவியல் ஒன்னு தொடங்கனும்னு சொன்னாங்க. நாட்டுப்புறவியல் பத்தி ஓரளவு தெரிஞ்சவர்னு நினைச்சாங்க. எனக்கு தயக்கம் என்னன்னா நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமம். திடீர்னு பல்கலைக்கழகத்துல கூப்பிட்டதும் உடனே பதில் எழுதல. பொதுவா எனக்கு வரமுடியாதுனு காரணம் சொல்றதுக்காக எனக்கு உடல் நிலை சரியில்லைனு துணைவேந்தர்கிட்ட சொன்னேன். வயசாகிட்டுதுனு சொன்னேன். 66 வயசுல கூப்பிட்டாங்க. இப்ப 86 வயசாகுது. உடம்புக்கு என்ன செய்துனு கேட்டாரு. எனக்கு பி.பி. இருக்கு, டயாபிட்டீஸ் இருக்கு, சுகர் இருக்கு, அது, இதுனு சொன்னேன். அவரும் இதெல்லாம் எனக்கும் இருக்கு. ஆகவே நீங்க வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நோய்களை எதிர்ப்போம்னு சொன்னாரு. கல்லூரினாலே மாணவர்கள் பேராசிரியர்கள கிண்டல், கலாட்டா பண்றதுனு கல்லூரி நான் போகலைன்னாலும் நான் கேள்விப்பட்ட விஷயம் அப்டி. பல்கலைக்கழகத்துல சாஸ்தியா இருக்கும். நாம எப்படி குப்பைக் கொட்டுறது? அவர் சொல்றாரு உனக்கு பேராசியர் சம்பளம் கொடுப்போம்னு, ஆனா எனக்கு முன்னால க.நாசு. கெஸ்ட் லெக்சரரா இருந்தாரு. என்னை பேராசிரியராவேக் கூப்பிடுறாங்க. ‘நாட்டுப்புறவியல் தொடங்குறோம் அதுக்கு நீதான் பொறுத்தம்னு எங்களுக்கு தெரியுது. நீங்க அவசியம் வந்து இந்த வேலைல பொறுப்பேத்துக்கணும்‘னு சொல்றாங்க. எனக்கு பயம் வந்துடுச்சு. அப்ப சொந்தக்காரன் ஒருத்தன் ‘நீங்க ஒரு ரிசைன் லட்டர் எழுதி பாக்கெட்டுல வச்சுக்கங்க. பிடிக்கலைனா தேதி போட்டு கொடுத்துட்டு வந்துடுங்க. இதுக்கு ஏன் யோசிக்கிறீங்க’னு சொன்னான். இப்டி ஒரு வருஷம் ஓடிப் போச்சு. அப்புறம்தான் நான் இங்க வந்தேன். வந்து பாத்த பிறகுதான் தெரிஞ்சது. எம்.ஏ., எம்.ஃபில், பி.ஹெச்டி மாணவர்கள் எல்லாரும் இருக்குறதுதான் பல்கலைக்கழகம்னு. அப்பதான் துணை வேந்தர் ‘நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் கிடையாது. கல்லூரிலதான் கல்வி மற்ற விஷயங்கள் எல்லாம். இங்க எல்லாரும் ஆய்வு மாணவர்கள்தான்‘னு சொன்னாங்க. என்னைய வகுப்பெடுக்கச் சொல்லும் போதுதான் ‘அது என்னால முடியாது’னு சொன்னேன். ‘ நீங்க அவங்க பாடத்த வகுப்பெடுக்குறதுல அர்த்தம் இல்லை. வகுப்புங்றது ஒரு முக்கால் மணி நேரம். மாணவர்களோட பேசிட்டிருந்தா போதும்‘னு சொல்லவும் எதைப் பத்தி பேசனு கேட்டேன். உலகத்தப் பத்தி, கிராமத்தப் பத்தி, கதைகளப் பத்தி, சினிமாவப் பத்தி, அரசியல் பத்தி எதைப் பத்தியும் பேசலாம். தோணுனா கதைகள சொல்லுனு சொன்னாரு. அவர் சொல்றார் ‘ஒரு எளிய அனுபவம் உள்ள ஒரு வயசாலிய மாணவர்கள்கிட்ட பேச வைக்கிறது கிடையவே கிடையாது. மாணவர்கள் தன்னோட 25 வருடங்களப் படிப்புல செலவிடுறத வேடிக்கையா கிருபானந்தவாரியர் ‘காலேஜ்னா ‘கால் ஏஜ்’ எந்த விதமான அனுபவமும் மாணவர்களுக்கும் பயனில்லாம, படிப்புக்கும் பயனில்லாம போகுது’னு சொல்வாராம். அப்டி பயன்படாம இருக்குறவங்களுக்கு உன்னுடைய அனுபவங்கள் நீங்க பேசும் போது பயன் தரும்னு சொன்னாரு. இது வந்து ஒரு சுதந்திரமான பல்கலைக்கழகம். அதனால அந்த துணை வேந்தர் என்ன நினைக்கிறாரோ அதை செய்யலாம். அப்ப அவர்கிட்ட சில கேள்விகளை பொதுக் கூட்டத்துல வச்சு ‘இவர் என்ன டாக்டரேட் பண்ணாரா? எப்டி இவரை பேராசிரியரா நியமிச்சீங்க’ அப்டினு கேட்டாங்க. அதுக்கு அவர் ‘கம்பரையும், திருவள்ளுவரையும் நான் பேராசிரியா நியமிச்சிருக்கேன்னு வச்சுக்கங்க. அவங்க எங்க டாக்டரேட் பண்ணினாங்கன்னு கேட்க முடியுமா? அவங்கள வச்சு எத்தனை பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. அது மாதிரிதான் கி.ராவும். அவர் படைப்புகள பத்தி எத்தனையோ பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. இவர் எதுக்கு டாக்டரேட் படிக்கணும்‘னு சொன்னாரு. இரண்டு காரியங்கள் பண்ணினோம். ஒன்று புத்தகம் எழுதுவது. இன்னொன்று ஏதாவது திட்டத்தை ஆய்வு செய்வது. முதலில் ஆய்வுக்கு முன்னால இந்த மண்ணுல இருக்குற நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி ஒரு புத்தகம் கொண்டு வந்தோம். அப்புறம் ரெண்ணு செமினாரு நடத்துனோம். அதனால விவசாயிக்கும் பேராசிரியருக்கும் சம்பந்தமில்ல.

பல்கலைக்கழகத்துல வித்தியாசமான அனுபவம் உண்டா?
பல்கலைக் கழகத்து ஆய்வ எடுத்துப் படிச்சுப் பாத்தேன். அதுல ஒண்ணுமே இல்லை. எதையுமே கண்டுபிடிக்காம வெறும் புள்ளி விவரங்களா சொல்றதுக்கு எதுக்கு டாக்டரேட் கொடுக்கனும்? அதுலயும் கூறியது கூறல் குற்றம்னு சொல்வாங்க. முதல் அத்தியாயத்தில சொன்னதையே இரண்டாவது அத்தியாயத்துல சொல்றதுனு ரொம்ப கேவலமா இருந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சிய இருந்தது. அப்புறம் நான் துறைத்தலைவர்கிட்ட ‘என்னங்க இதுனு‘ கேட்டேன். ‘அதெல்லாம் அப்டித்தான்’னாரு.

உங்களுடைய பார்வையில் கல்வி என்பது என்ன?
கல்வி என்பது ஞானத்தை அடைவது, தேடுவது. இது இல்லைனா அது கல்வி கிடையாது. அது வேலைக்கான தயாரிப்புகளே.

உங்க அறையிலிருக்கும் மிகப் பெரிய மரத்தாலான எழுதுகோல் பற்றி..
அது என்னோட 70வது பிறந்த நாளில் நடிகர் பார்த்திபன் கொடுத்தது. அவர் எதையும் வித்தியாசமா செய்யக்கூடியவர். அதான் இந்த வித்தியாசமான பேனா.

உங்களுடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞர் இளவேனில் பத்தி சொல்லுங்களேன்.
மத்தவங்க படம் எடுத்தா ஒரு முகம் தான் வந்துட்டே இருக்கும். இவர் அப்டி இல்லை. கி.ராவுடைய பல முகங்களைக் கொண்டு வருவாரு. ஒரு படம் செய்தி சொல்லனும்னு விரும்புவாரு. படம்ங்றது இயக்கமா இருக்கனும்னு நினைக்கிறவரு.

ஒரு படைப்பாளிக்கான அங்கீகாரமா எதை நினைக்கிறீங்க.
சில பேர் நினைத்துக் கொள்வது மாதிரி எனக்கு வித்யா கர்வமோ, பெருமிதமோ கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் அப்டினு அதாவது தான் ஒரு ராஜானு நினைச்சுக்குற மாதிரி என்னை நினைச்சுக்கிறது கிடையாது. இயல்பாவே எனக்கு எந்த வித கர்வமும் கிடையாது. அது என்னோட இயல்பு.

-இவள் தேவதை பாரதி

1 comment:

virutcham said...

சுவாரஸ்யமா படிக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து படிக்க முடியலை. ரொம்பச் சின்ன எழுத்துக்கள், சிவப்பு நிறத்தில அதிக இடைவெளி இல்லாம
ஏன் இப்படி?


http://www.virutcham.com


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?