Tuesday 19 April, 2011

தமிழ் சினிமாவில் ஒப்பனை


தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றான தெருவில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்திலே துவங்கி வீதி நாடகம் முதல் மேடை நாடகம் வரை தன் பயணத்தை மேம்படுத்திக்கொண்டே வந்த ஒப்பனைக் கலை சினிமாவில் தவிர்க்க இயலாத இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ஒப்பனை மிகச் சிறந்த கலை. ஒப்பனை செய்பவர்கள் ரசனைத் தனமை அதிகம் கொண்டவர்கள். ஒப்பனைக் கலைஞர்கள் சினிமாவின் பல்வேறு பிரிவில் பணியாற்றுகிற இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர், ஒலித்தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் இப்படி பலரையும் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கியமான பணியினைச் செய்பவர்கள்.

கலைகள் அறுபத்து நான்கில் கவின் கலைகள் என்பவற்றில் ஓவியம், ஒப்பனை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அதாவது அழகான தோற்றத்தைக் கொண்டு அமைவது என்பதாகும். சொல்லும் செய்திக்கு அழகையும், நேர்த்தியையும் கொடுப்பது மட்டும் ஒப்பனையின் நோக்கம் அல்ல. அது கதாபாத்திரத்தின் தன்மைக்கும், கதாபாத்திரம் நிகழ்த்துகிற காலத்துக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் முக்கியமே.
ஒப்பனைக் கலைஞர்களே கூட ஆடை வடிவமைப்பாளர்களாகவும், சிகையலங்கார கலைஞர்களாகவும் இருக்கலாம் அல்லது இவையனைத்தையும் தனித்தனி பிரிவினரே கூட கவனிக்கலாம்.

ஒப்பனையின் நோக்கம் என்பது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒப்பனையச் செய்வதே. ஒப்பனை என்பதை காட்சிப் புனைவு என்றும் கூட சொல்லலாம். மிகைப்படுத்தல் என்று பார்த்தால் தெரியாது. அப்படிச் சொல்வதும் பொருத்தமானதாக இருக்காது. ஆனால் மிகைப்படுத்தப்பட்டு இயல்பாகக் காட்சிப்படுத்தும் தன்மை ஒப்பனைக் கலைஞர்களையே சாரும்.
அந்தகால தமிழ்சினிமாவில் தொடங்கி ஒப்பனையின் பல்வேறு பரிமாணங்களை இன்று வெளிவந்திருக்கும் சினிமா வரை காண முடிகிறது. பாரதியார், வீர பாண்டிய கட்டபொம்மன், ஒளவையார் என அத்தனை பேரையும் சினிமாவில் பார்த்து அறிந்து கொண்டவர்களே அதிகம்.

இன்றைய தமிழ்சினிமாவில் ஒப்பனை குறித்து எடுத்துக் காட்டிச் சொல்லக் கூடிய பல திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எப்போதும் நகைச்சுவை நடிகராகவே பார்த்துப் பழக்கப்பட்ட வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அரசனாக நடித்திருப்பார். அதை நாம் ஏற்றுக் கொள்ளும் விதமாக அவரது ஒப்பனையும் மிக அருமையாக அமைந்திருக்கும். இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கும் மிகச் சரியான வேறுபாட்ட வடிவேலுவின் நடிப்பு உணர்த்தியிருந்தாலும் ஒப்பனைக்கு மிக பங்கு இருக்கிறது.

ஒப்பனை பற்றி பேசும் போது உலக நாயகன் கமலின் பல்வேறு திரைப்படங்களை உதாரணமாகக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, இந்தியன், தசாவதாரம் போன்றவை. இந்தியனில் வயதான தாத்தாவாக மிக அழகாகக் காட்டப்பட்டது ஒப்பனையால்தான். அதிலும் அவ்வை சண்முகியில் கமல் ஏற்று நடித்த பெண்பாத்திரமானது பெரிய வெற்றியை தேடித் தந்தது. ஒப்பனைக் கலைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தசாவதாரம் படத்தில் பத்து கதாபாத்திரமும் வெவ்வேறுவிதமான ஒப்பனையைக் கொண்டிருக்கும். அதிலும் ஃபிலிட்சர் என்ற வில்லன் காதபாத்திரம் ஏற்றிருந்த ஒப்பனை தத்ரூபமாக ஒரு அமெரிக்கனை கண்முன் நிறுத்தியது. அதே போல் கமல் செய்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒப்பனையின் கடும் உழைப்பில் உருவானவை என்பது ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.

ஒப்பனை என்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒப்பனை என்பது ஆடை வடிவமைப்பு, ஆடை நிறத் தேர்வு, சிகையலங்காரம், முகப்பூச்சு ஆகியவற்றை கொண்டதாக கூறப்பட்டாலும் நிகழ்வு நடைபெறும்  இடம், சூழல், வெளிச்சம், பிண்ணனி, காலகட்டம், பழக்கவழக்கம், கல்வி, நோக்கம், பணி போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது என்பது சினிமாவை உற்றுக் கவனிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும்.

கைலியை தொடைக்குள் மேல் ஏற்றிக் கட்டி பருத்தி வீரனில் பார்த்த கார்த்தி பையா படத்தில் இல்லை. பையா படத்தில் அவரது தோற்றம் பளிச்சென்றிருந்த்து.

பாலாவின் சேது படத்தில் விக்ரமின் கடைசி நேரக் காட்சிகள், நாடோடிகள் பட்த்தில் சசிக்குமாருக்கு கண் புருவத்திற்கருகில் வெட்டுக்காயம் ஒன்று ஏற்பட்டு மெது மெதுவாக படம் முடியும் வ்ரை காயமாறும் காட்சிகள், எந்திரனில் சிட்டியாக வரும் ரஜினியின் காட்சிகள் போன்றவை நினைவில் நிற்பவை.

ஒப்பனைக் கலைஞர்களுக்கான விருதுகளும் சமீபகாலமாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக தன் திரையுலக பயணத்தைத் துவங்கியவர்தான் சில்க் ஸ்மிதா. ஒப்பனைக்கென தனியாக கலைஞர்களை வைத்துக் கொள்ளாமல் தானே ஒப்பனை செய்து கொள்வாராம் நாடகத்திலும், சினிமாவிலும் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்த டி.பி.ராஜலட்சுமி.
முதன் முதலில் அமெரிக்காவில் 1948ஆம் ஆண்டுதான் விருதுகளுக்கான பிரிவில் ஒப்பனைக்கு இடம் கிடைத்தது. இதுவரை தமிழில் கமலின் ஹே ராம்(2000) படத்திற்காக சரிகாவும்,  பாரதி(2001) படத்திற்காக பி.கிருஷ்ணமூர்த்தியும், சமீபத்தில் நம்மகிராமம்(2011) படத்திற்காக இந்திரன் ஜெயன்சும் ஒப்பனைக்காக தேசிய விருது பெற்றவர்களாவர்.

ஒப்பனை என்பது கறுப்பு நிறத்தவரை சிகப்பாக காட்டுவது என்பது போய் சிகப்பாக இருப்பவரை கருப்பாகக் காட்டுவதும், சண்டைக் காட்சிகளில் அடுத்தடுத்த படப்பிடிப்பின் போது முந்தைய காட்சியின்ன் தொடர்பு துண்டிக்கப்படாமல் கவனித்து ஒப்பனை செய்வதும், உயரமானோரைக் குள்ளாமாகக் காட்டுவதும், உயரம் குறைவானோரை உயரமாகக் காட்டுவதும், வயதானோரை இளையோராகக் காட்டுவதும், இளையோரை வயதான ஆளாக்க் காட்டுவதும், அழகாகக் காட்டுவதும், அழகின்றி காட்டுவதும் ஒப்பனையே.

ஒப்பனையை ஒரு ப்ரஃபஷனல் படிப்பாக எடுத்துப் படிக்கும் அளவுக்கு அதன் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இன்னும் அவர்களை இரண்டாம் நிலை ஊழியர்களாகவே கருதுவதை தவிர்க்கலாம். விஜய் டிவி ஆண்டுதோறும் வழங்கும் திரையுலகத்திற்கான விருதுகளை நடிகை கவுதமியும், பானு யோகேஷும் பெற்றுள்ளனர்.

ஒப்பனைக்குள்ளேயே மேக் அப், காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எனப் பலவாறான பிரிவுகள் வந்துவிட்டது. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒப்பனை என்பதையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவும் சிதைக்காமல் அதே நேரம் சற்று மிகைப்படுத்தலுடன் கூடிய ஒப்பனைகள் சமீபகாலத்தில் வரத் துவங்கியுள்ளன. சினிமா என்பதே ஒரு ஒப்பனை சார்ந்த தொழிநுட்பம் என்பதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஒப்பனைக்கலைஞர்களையும் அப்படி மதிக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

இவள் பாரதி

1 comment:

வானவன் யோகி said...

மின் மடல் முற்றம் சக்திகணேஷ் வழியாக கிடைக்கப்பெற்றோம்....

மென்மேலும் சிறப்படைய நெஞ்சம் கனிந்து வாழ்த்துகிறோம்...

வாழ்க......வெல்க....என்னாளும்..!!!


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?