Monday 12 November, 2012

சொன்னதைக் கேட்கும் சமத்து!



இவள் பாரதி

அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் சிரமத்துக்குரியவர்கள் மாற்றுத்திறனாளிகள். ஆனால், சமீப காலமாக தொழில்நுட்ப வளர்ச்சி இந்தச் சிரமத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை அளித்து வருவது ஆறுதலுக்குரியது. அந்த வகையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது  நடை திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சோலார் சக்தியில் இயங்கும் தானியங்கி வீல்சேர்.

சொகுசு நாற்காலியின் மேல் சோலார் பேனல் பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய இந்த வீல்சேரை கையால் இயக்க வேண்டிய அவசியமில்லை. இது தானாகவே இயங்கக் கூடியது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் பதிவுக்கருவியில் யார் இதை இயக்க வேண்டுமோ அவர்கள் குரலில் முன்னே, பின்னே, இடப்பக்கம், வலப்பக்கம், நில், செல் போன்ற கட்டளைகளைப் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பதிந்துள்ள குரலுக்குச் சொந்தக்காரர் கட்டளைகளைப் பிறப்பித்தால் மட்டுமே வீல்சேர் நகரும். ஒருவேளை அதே வார்த்தைகளை வேறு யாராவது பேசிக் கொண்டிருந்தால் வண்டி அந்தக் கட்டளைகளைப் பின்பற்றிவிடுமோ என்ற பயம் தேவையில்லை. யாருடைய குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர்கள் சொல்வதை மட்டுமே இந்த வீல்சேர் கேட்கும். வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாதவர்கள் கூட ஒலிக்குறிப்புகளைப் பதிந்து கொண்டு  கட்டளைகளைக் கூறலாம். ஆங்கிலமோ, தமிழோ, வெறும் ஒலியோ எதையும் பதிந்துகொள்ளலாம். எந்த வகை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது  இந்த சோலார் வீல்சேர்.

சிறு நகரச் சாலைகளில் இதனை ஓட்டிச் செல்லலாம். இதில் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளி கிடைக்காத மழைக்கால நாட்களில் பேட்டரி உதவியுடன் பயன்படுத்தலாம். மணிக்கு 15 கி.மீ. வரை செல்லக் கூடியது. 30 கிலோ மீட்டர் வேகத்துக்குக் குறைவாக இயங்கக் கூடிய வாகனங்களுக்கு லைசென்ஸ் தேவை இல்லை என்பதால் இதற்கும் லைசென்ஸ் தேவையில்லை. சாவு மேடை அமைத்திருக்கும் அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற இடங்களுக்குப் பிறரின் உதவியின்றி சென்று வர முடியும். இப்போது இதன் தயாரிப்புச் செலவு 40,000 ரூபாய் வரை ஆகியிருந்தாலும் உற்பத்தி அதிகமாகும்போது இதன் விலை பெருமளவு குறையும் என்கிறார்கள்.

நில் என்றால் நிற்கும், செல் என்றால் செல்லும் இந்த வீல்சேரை சென்னை ஜெருசலேம்
கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஷாலோம், ரஞ்சனி தங்கள் நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

நன்றி : புதிய தலைமுறை

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?