Monday, 12 November 2012

பொருள் தரமற்றதாக இருந்தால் விளம்பரத்தில் நடித்தவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா?



இவள் பாரதி

‘‘பிரபலங்களுக்கும் பொறுப்புண்டு...’’

பார்த்திபன் பத்மநாபன்
வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை

நீதிபதி ரகுபதி கூறியிருக்கும் இந்த யோசனை நூறு சதம் சரியானது. ஏனெனில் மக்கள் நம்பிக்கையின் பேரில்தான் பொருட்களை வாங்குகிறார்கள். அது ரியல் எஸ்டேட்டாக இருக்கட்டும், தங்கமாக இருக்கட்டும், ஒரு முதலீடாக இருக்கட்டும். நுகர்வோருக்கு அதுகுறித்த ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையை விதைப்பவர்களாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் இருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.

விளம்பரங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் விளம்பரத்தின் நம்பகத்தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே நீதிபதி ரகுபதியின் கருத்து உணர்த்துகிறது.

உதாரணத்திற்கு ஒரே பொருளே வெவ்வேறு பிராண்டுகளில் 10, 12, 15 ரூபாக்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். விலை அதிகம் இருந்தாலும் அதற்கான விளம்பரத்தில் தோன்றியிருக்கும் பிரபலம் 15 ரூபாய் என்று சொல்லுகிற விளம்பரத்தில் நடித்திருந்தால் விலை அதிகம் இருந்தாலும் நம்பிக்கையின்பேரில் மக்கள் வாங்குகிறார்கள். இதனால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதில் நடிக்கும் பிரபலம் நுகர்வோரை வாங்கத் தூண்டுகிறார். ஒரு பொருளை வாங்குவதற்கு நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையை விளம்பரங்களின் மூலம் பிரபலங்களையும், பிராண்டுகளையும் வைத்து சாதித்துக் கொள்கின்றன தயாரிப்பு நிறுவனங்கள். எனவே நம்பிக்கையின் பேரில் வாங்கத் தூண்டி ஏமாற்றுவது ஒரு குற்றமே. அந்தக் குற்றத்திற்கு அந்த விளம்பரத்தில் நடித்த பிரபலமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்பாகிறார். நம்பிக்கையின் பேரில் ஏமாற்றுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கிரிமினல் சட்டத்தின் ஒருபிரிவில் கிரிமினல் ப்ரீச் ஆஃப் ட்ரஸ்ட் (Criminal Breach of Trust) சொல்லப்படுகிறது. நீதிபதியின் இந்தக் கருத்துக்கு நுகர்வோர் சட்டத்தில் இடமில்லாவிடினும் இனிவரும் காலத்தில் அவரது பேச்சு, சட்டத்தில் நிச்சயமாக மாற்றத்தைக் கொண்டுவரும்.

விளம்பரத்தில் நடிக்கும் பிரபலம் நாம் நடிக்கும் பொருள் தரமானதுதானா? இந்த நிறுவனம் நம்பகத்தன்மை வாய்ந்ததுதானா என்று தெளிவுப்படுத்திக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

சட்டத்திருத்தம் கொண்டுவருவது ஒரு பக்கம் இருக்க... பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கும்போது நுகர்வோருக்கு நஷ்டஈடு அந்தப் பிரபலத்திடமிருந்து பெற்றுத் தரப்படும். ஆயிரக்கணக்கில் நுகர்வோர் புகாரளிக்கும்போது எல்லோருக்கும் நஷ்டஈடு கொடுப்பது சாத்தியமா என்று நினைக்கலாம். ஆனால், நுகர்வோர் மிக முக்கியமானவர் என்ற எண்ணத்தை விளம்பர நிறுவனங்களும், அதில் நடிக்கும் பிரபலங்களும் உணர வேண்டும். சரியான, தரமான பொருளை மட்டுமே மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நிலை வரவேண்டும். இதற்கெல்லாம் நீதிபதி ரகுபதியின் கருத்து சட்டமாக வேண்டும்."



‘‘மக்களுக்குத்தான் பொறுப்பு வேண்டும்’’

எல். ராமச்சந்திரன்
விளம்பர நிறுவன உரிமையாளர், சென்னை

ஒரே பொருளுக்கு ஆயிரம் விளம்பரம் வருகிறது. அதில் ஒரு விளம்பரத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பொருளை வாங்குவது மக்களின் விருப்பம். யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்காக விளம்பரம் இல்லாமல் ஒரு பொருளைச் சந்தைப்படுத்த முடியாது.

இது விளம்பர யுகம், இன்றைக்கு விளம்பரம் இன்றி ஓர் ஊறுகாய் கூட விற்க முடியாது. நிறைய போட்டிகள் இருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு பிரபலத்தை நடிக்க வைத்து, தங்களது பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். விற்பனையைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

ஒரு பொருளின் தரம் சரியில்லை என்றாலோ, சேவைக் குறைபாடு என்றாலோ சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமும், விற்பனை நிறுவனமும்தான் பொறுப்பே தவிர, அந்த விளம்பரத்தில் நடித்த பிரபலத்திற்கு அதில் பங்கில்லை. அவருக்கு ஒரு காட்சி விளக்கப்படுகிறது. அதை அவர் சிறப்பாக நடித்துக் கொடுக்கிறார். அவ்வளவே. மக்கள்தான் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர்கள். எது சரியானது? நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

முப்பது வருடங்களாக தொடர்ந்து நிதி நிறுவன மோசடி நடந்துவருகிறது. மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஏன்? அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதையும் ஆராயாமல் இறங்கிவிடுகிறார்கள்.

நுகர்வோர் சட்டத்தில் விளம்பரத்தில் நடிக்கும் பிரபலத்தின் மீதும் வழக்கு தொடுக்க இப்போதைக்கு இடமில்லை. 10, 12 வருடங்களுக்கு முன்னதாக அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள் தவறாக இருந்தாலோ, வேறு ஏதேனும் குறைபாடு என்றாலோ விளம்பரத்தில் நடிக்கும் பிரபலத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சந்தையில் ஒரு புதுப் பொருளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. எங்களை அணுகுகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் இந்தப் பிரபலத்தை அணுகலாம் என்று கூறி கொட்டேஷன் கொடுக்கிறோம். அவர்கள் சரியென்றதும் குறிப்பிட்ட பிரபலத்தை அணுகி நடித்துத் தரக் கேட்கிறோம். அவர்களும் என்ன விளம்பரம் என்று கேட்டுவிட்டு நடித்துக் கொடுக்கிறார்கள். நாங்கள் விளம்பரம் எடுத்துக் கொடுத்துவிடுகிறோம். எந்தெந்த ஊடகத்தில் அது ஒளிபரப்பாகிறது? எத்தனை மணிக்கொரு முறை ஒளிபரப்பாக வேண்டும்? என்ன ஸ்லாட் இவற்றையெல்லாம் தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்துகொள்ளும். அதுமட்டுமின்றி இது விஷயத்தில் எல்லா விளம்பரங்களையும் குறை சொல்ல முடியாது.

விளம்பரத்தில் நடித்த பிரபலத்தின் மீதும் குற்றம் சுமத்தி அவர்களிடமும் நஷ்டஈடு கேட்பது சாத்தியமற்ற ஒன்று.

சில ஊடகங்களில் இந்த விளம்பரத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என்ற குறிப்புடன்தான் விளம்பரம் வெளியாகிறது. எனவே மக்கள் பொறுப்போடும், விழிப்புணர்வோடும் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்."

நன்றி - புதிய தலைமுறை

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?