Tuesday 17 July, 2012

விவாதம்


இவள் பாரதி

விபத்து ஏற்படுத்தும் டிரைவர்கள் மீது கருணை காட்டக் கூடாது. ஓட்டுநர் உரிமம் வழங்குவது வாகனம் ஓட்டத் தானே தவிர கொலை செய்வதற்கல்ல என்று சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. இது குறித்து இருவர் விவாதிக்கிறார்கள்..

A.P. அன்பழகன், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சம்மேளனம் (CITU)


விபத்துக்கு ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஓட்டுநர்களுக்கு வேலைப்பளு திணிக்கப்பட்டிருக்கிறது. 15, 20 வருடங்களுக்கு முன்பு போக்குவரத்தில் இருந்த பல விஷயங்கள் இப்போது நடைமுறையில் இல்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லக் கூடிய ஒரு பேருந்தை இயக்கும் ஓட்டுநர் 200கிமீ வந்ததும் அதாவது விழுப்புரத்தை அடைந்ததும் இறங்கிவிடுவார். அங்கு ஓய்வறையில் இருக்கும் ஓட்டுநர் ஒருவர் அந்தப் பேருந்தை திருச்சி வரை இயக்குவார். சென்னையிலிருந்து வந்த நடத்துனர் திருச்சியில் இறக்கிவிடுவார். திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரை வேறு ஒரு ஓட்டுநரும், நடத்துனரும் இயக்குவார். அப்போதெல்லாம் 200கிமீ ஓட்ட எட்டு மணி நேரம் ஆகும். அதாவது எட்டுமணி நேர வேலை என்பது உறுதியான இருந்தது. விபத்துக்களும் குறைவாகவே இருந்தது. மோட்டார் வாகனச் சட்டப்படி எட்டுமணி நேர வேலைக்குப் பின் ஆறு மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. தர்மபுரியிலிருந்து திருவண்ணாமலை வந்து, அங்கிருந்து மைசூர் சென்று, பின்னர் மைசூரிலிருந்து திருவண்ணாமலை, தர்மபுரி என ஒரு ஓட்டுநரே 1140 கி.மீ செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. 5ரூ இன்கிரிமெண்ட் கூடுதலா தருகிறோம். இவ்வளவு படி தருகிறோம் என்று கூறி ஓட்டுநர்களை அதிகமாக வேலை வாங்குவதும் விபத்துகளுக்கு காரணம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது அரசுதான். சென்னை முதல் கன்னியாகுமரி வரை நாற்கரச் சாலையாக மாற்றிவிட்டோம் என்கிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கான ஓய்வைக் குறைத்து வேலையை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளில் விபத்துகளிண் எண்ணிக்கை முன்னிருந்ததைவிட குறைந்திருக்கிறது.
28/02/2009 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏ.ஆர்.லட்சுமணன் இருந்தபோது இந்தியாவில் அதிகவிபத்து நடக்கிறதென்று கமிட்டி ஒன்று போட்டார். ’உலகில் அதிகளவில் விபத்து நடக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சீனாவும், இரண்டாமிடத்தை இந்தியாவும் பிடித்திருக்கிறது. ஆனால் சீனா அதனை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தியிருக்கிறது. அதே போல இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என கூறியிருந்தார்.

விபத்துக்கு டிரவர் காரணமில்லை என்று சொல்ல வரவில்லை. டிரைவரும் ஒரு காரணம். ஆனால் டிரைவர் மட்டுமே காரணமில்லை. எப்போதுமே அரசு இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட முடியாது. எம்.ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்த போது 1000 மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நகரப் பேருந்து விட்டார். ஆனால் அரசுக்கு அதனால் எந்த வருவாயும் இல்லை. ஆனால் அது ஒரு சேவையாக கருதப்பட்டது. இப்போதைய வழக்கில் போக்குவரத்துத் துறைக்கு 11 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

பொதுவாக அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால் மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு போக்குவரத்து கழகமே கொடுக்க வேண்டியுள்ளது. காப்பீடு செய்வதிலிருந்து அரசு விலக்கு வாங்கி வைத்திருக்கிறது. அரசுப் பேருந்து ஒன்றுக்கு காப்பீடு செய்ய 18363 ரூபாய் செலவாகும். மொத்தமாக 12,13 கோடி செலவாகும் எனவே அரசு இதை செய்ய முன்வரவில்லை. அரசுப் பேருந்துகளில் விபத்துக்கள் ஏதேனும் நேரும் போது மக்கள் மன்றம் என்கிற சிறிய கமிட்டியில் கூடி பைசல் செய்துவிடுவார்கள். தனியார் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது ஜப்தி செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும்.

மற்றொன்று சரியான சாலைவசதி இல்லை. தமிழகத்தில் ஒரு கோடியே 36 இலட்சம் வாகனங்கள் ஓடுகிறது. ஒரு நாளைக்கு 3000க்கு மேல் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் சரியான சாலைவசதி இல்லை. 8000 தனியார் பேருந்துகள், 4002 மினிபேருந்துகள், 21,169 அரசுப் பேருந்துகள், ஒரு கோடியே 2 இலட்சம் இருசக்கரவாகனங்கள், 4000 ஆட்டோக்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகிறது. வாகன்ங்களைக் கட்டுப்படுத்தி இயக்க வேண்டும். இதற்கு அரசுத்துறையைப் பலப்படுத்துவது முக்கியம். வாகனங்கள் பெருகிய அளவுக்கு சாலைவசதிகள் பெருகவில்லை.

சென்னையில் ஒரு நாளைக்கு 55 இலட்சம் பயணிகள் ஏறி இறங்குகிறார்கள். இங்கு 5000 பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி இருந்தும் 3140 பேருந்துகள் தான் இயக்கப்படுகிறது. பேருந்துகளை அதிகப்படுத்தி மற்ற வாகனங்களை மட்டுப்படுத்த வேண்டும்.

ரயில், விமானம், கப்பல் என எல்லாமும் விபத்துக்குள்ளாகிறது. எந்த ஓட்டுநரும் விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்று வாகனத்தை எடுப்பதில்லை. எங்கேயும் விபத்து நடக்கக்கூடாது என்பதுதான் எல்லாருக்குமான விருப்பம். ஆனால் எதிர்பாராமல் நடந்துவிடுகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஓட்டுநர் மட்டுமே காரணம் என்று சொல்வது சரியானதல்ல.

இ.பினேகாஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை. 


டிரைவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்பது சரிதான். லைசன்ஸ் கொடுக்கும் போதே பச்சை, மஞ்சள், சிவப்பு என்று ஐந்து நிறங்கள் வட்டமாக இருக்கும். ஒவ்வொரு விபத்து நிகழ்த்தும் போதும் ஒவ்வொரு வண்ணமும் வரிசையாக பஞ்ச் செய்யப்படும். கடைசியாக சிவப்பு வண்ணம் குறியிடப்படும் போது அவரது உரிமம் ரத்து செய்யப்படும். சிவப்பு குறியிடப்பட்ட பின் விபத்து ஏற்படுத்தினால் இவருக்கு தொடர்ச்சியாக விபத்து ஏற்படுத்துவதே வழக்கம் என்ற முத்திரை விழுந்துவிடும். ஐந்து முறை வாய்ப்பு கொடுத்த பின்னர் தான் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

பள்ளி வேன்களுக்கான ஓட்டுநர்களை தேர்வு செய்யும் போது மூன்று விதமாக தேர்வு செய்வார்கள். ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், அதிக அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது விபத்து நிகழக் கூடாது என்ற எச்சரிக்கையாக செயல்படுவதற்கான உதாரணம். தொடர்ச்சியாக குற்றவியலில் (இங்கு விபத்து என்று பொருள்) ஈடுபடும் போதோ, குடித்து விட்டு வாகனம் ஓட்டினாலோ, போதைப் பொருளுக்கு தொடர்ச்சியாக அடிக்ட் ஆனாலோ, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ, பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் வாகனம் ஓட்டினாலோ மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 19ன் படி லைசன்ஸ் அத்தாரிட்டியே லைசன்ஸை திரும்பப் பெறவோ, தகுதியில்லாமல் செய்யவோ முடியும்.

எத்தனை பேர் டூவீலர் லைசன்ஸ் வைத்துக் கொண்டு ஃபோர் வீலர் ஓட்டுகின்றனர். பல கிராமங்களில் ஆட்டோ ஓட்டுநர்களே அந்த ஊர் தனியார் பேருந்தை இயக்கவும் செய்கின்றனர். அரசுப் பேருந்தில் நடக்கும் விபத்துக்களில் மட்டும்தான் ஓட்டுநர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். தனியார் பேருந்தில் விபத்து ஏற்படுத்திய ஒருவர் வேறு ஒரு இடத்திற்கு சென்று வண்டியோட்டிக் கொண்டிருந்தால் அது யாருக்கும் தெரிவதில்லை. அவர்களை கணகாணிக்க முறையான அமைப்புகள் இல்லை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியது போல சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும் கடந்த ஆண்டில் 3211 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், 275 பேரின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டும் உள்ளது. இதற்கு காரணம் தண்டனை குறைவாக இருப்பதே. கொலைக்குற்றத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ன் படி ஆயுள்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படும். கவனக்குறைவால் ஏற்படுத்திய மரணத்திற்கு பிரிவு 304(ஏ) ன்படி இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால் இரண்டு வருட சிறை தண்டனை பெற்றவரை போலீஸ் ஸ்டேஷனே பெயிலில் விடக்கூடிய வசதி இருக்கிறது. அதனால்தான் திட்டமிட்டு ஒருவரை வாகனமேற்றி கொலை செய்தாலும் அது கவனக்குறைவால் நடந்தது என்று இரண்டு வருட தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆனால் எப்போதும் ஒரே கோணத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை.

மோட்டார் வாகனச் சட்டப்படி விபத்து ஏற்படுத்தியவரின் அப்போதைய நிலை, சம்பவத்தின் பின்னணி போன்றவற்றின் அடிப்படையை பார்க்க வேண்டும் என்று உள்ளது. அதன்படி இந்த வழக்கில் கருத்து கேட்கப்பட்ட போது கடவுள் செயலால் விபத்து ஏற்பட்டது என்று ஓட்டுநர் கூறியிருப்பது ஏற்கக் கூடியதல்ல. இன்றைய நிலையில் வாகன விபத்துகள் தொடர்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 40,000 வழக்குகள் உயிர்பலி ஏற்படுத்தியதால் போடப்பட்டவை. சட்டங்கள் இன்னும் கடுமையாகும் போதுதான் குற்றங்கள் குறையும்.

- இவள் பாரதி

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?